Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Covid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Covid-19 உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 மே 05

கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக, உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு கிடக்கிறது. ஒவ்வொரு நாடுமே, இந்த நோய்த் தாக்கத்தின் விளைவான, உயிரிழப்புகளுடன் தங்களது பொருளாதார இழப்புகளையும் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் வரையில், நாம் நமது பொருளாதார இழப்புகள் தொடர்பிலோ, அடுத்தடுத்த மாதங்களில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் தொடர்பிலோ சிந்தித்திருக்கிறோமா? அல்லது, அதற்கான ஆயத்தங்களை செய்திருக்கிறோமா?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிப்பிழைப்பதே இப்போது பெரும்பாடாக உள்ளநிலையில், நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே பெரும்பாடாக உள்ளநிலையில், இந்த உலக பொருளாதாரம், எதிர்கால வாழ்க்கைநிலை, அதற்கான  ஏற்பாடுகள் எவற்றையும் பார்க்க நேரமில்லை என்கிற உங்கள் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

ஆனால், கடலுக்குள் ஒழிந்திருக்கும் பனிமலையாக, இந்தக் கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கம் எதிர்வரும் மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளித்தெரிய ஆரம்பிக்கின்ற சமயங்களில், அதற்கும் தயாராக இருக்கவேண்டியது அவசியமில்லையா? இல்லாவிட்டால் அந்தப் பெரும் பனிமலையில் மோதுகின்றபோது, வேலையிழப்பு, சேமிப்புகளை இழக்கும் நிலை என்பவற்றுடன் எதிர்காலமே கேள்விக்குறியாவதை தடுக்க வேண்டியதும் அவசியமில்லையா?

காலையில் செய்தியைப் பார்க்கும்போது, உலகளாவிய ரீதியில் பல்வேறு விமான சேவைகளும் தங்கள் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது தொடர்பிலும் தங்கள் விமான சேவைகளை மட்டுப்படுத்துவது தொடர்பிலும்  அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்போம். ஒருவேளை, எங்கள் குடும்பத்தில் ஒருவர் வெளிநாட்டின் விமானசேவைகளில் பணியாளராக இல்லாத சந்தர்ப்பத்தில், இதனை வெறும் ஒரு செய்தியாகவே கடந்து சென்றுகொண்டிருப்போம்.

ஆனால், இந்த ஒரு நிகழ்வே நாளை உங்கள் குடும்பத்தில் வாகனங்களை, நாள் வாடகை அடிப்படையில் வழங்கி தொழில் செய்யுமொருவருக்கு அல்லது உங்கள் வீடுகளுக்கு அருகில் வாகனங்களை முன்பதிவு அடிப்படையில் பயன்படுத்தி வருமானம் உழைக்கும் ஒருவரின் வருமானத்தில் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தப்போகின்றது என்பதை உணர்ந்து இருக்கிறீர்களா?

கொரோனா வைரஸ் பரவல் எப்படி ஒரு தொற்றாக, ஒருவரிலிருந்து இன்னுமொருவருக்குப் பரவுகின்ற நோயாக இருக்கின்றதோ, அதுபோல பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு தொடர் எதிர்வினையாற்றலை (Chain of reaction) கொண்டவையாக இருக்கும்; அல்லது, இருக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியதும் அதற்கான தற்பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

உதாரணத்துக்கு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தங்களது விமான சேவைகளைக் குறைத்துக்கொண்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலமாகவும் எதிர்காலத்தில் மிகக்குறைந்த விமானப் பறப்புகளைச் செய்ய முடிவெடுத்து விட்டதைக் காட்டுகின்றது.

இதன்போது, அவசியத்தேவைகள் இன்றி, ஏனைய காரணிகளான பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற செயற்பாடுகளுக்காக இன்னும் சில மாதங்களுக்கு அல்லது குறைந்தது ஒரு வருடத்துக்கு யாரும் விமானசேவைகளை பயன்படுத்தப் போவதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு நாட்டினதும் சுற்றுலாத் துறையும் கணிசமான இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு இலங்கையும் விதிவிலக்காக அமையப்போவதில்லை.

இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு உறவுகளின் வெளிநாட்டுப் பணத்திலான மிகப்பெரும் வருமானப் பங்கை நம்பி, தொழில் நடத்தும் உங்கள் உறவுக்கார அல்லது பக்கத்துவீட்டுக்கார வான்காரரோ நிச்சயமாக வருமான இழப்பைச் சந்திக்கப்போகிறார்கள். இது மிக நீண்டகாலத்துக்குத் தொடர்கின்றபோது, அவர்கள் தங்கள் வாகனத்தை லீசிங் அடிப்படையில் பெற்றிருப்பார்களாயின் அவர்களது நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இவர்களில் ஒருவருக்கு, இன்னுமொரு 2-3 மாதங்களில் உங்கள் தொழிலுக்கு தேவைப்படுகின்ற அல்லது உங்களது பிள்ளைகளின் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தவென வைத்திருந்த பணத்தை நீங்கள் வழங்கியிருந்தால், வருமானத்தையே கொண்டிராத இவர்களிடமிருந்து உங்களுக்கு எப்படி அந்தப் பணமானது குறித்த நேரத்தில் வந்துசேரும்? நீங்கள் எப்படி இந்தநிலையை எதிர்கொள்ளுவீர்கள்? உங்கள் தொழிலும் பிள்ளைகளின் எதிர்காலமும் வீணாகிப் போகின்ற நிலையை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்குமா? இறுதியில் கொரோனாவின் பொருளாதார தாக்கத்தால் விமானசேவைகள் வருமான இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்க, தெரியாமலே அதன் தொடர் விளைவுகளால் நீங்களும் பாதிக்கப்படும் ஒரு நபராக மாறியிருப்பீர்கள்.

இதனால்தான், கொரோனா வைரஸ் தாக்கமானது தொடர்விளைவுகளை ஏற்படுத்துகின்ற ஒன்றாக இருக்கின்றது என்பதையும் அதில் ஏதேனுமோர் இடத்தில்  நாமும் தெரிந்தோ, தெரியாமலோ தொடர்புபட வேண்டியதாகவிருக்கும் என்பதையும் அதற்கான தயார்படுத்தல்கள் அவசியமென்பதையும் முதற்பத்தியிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அப்படியாயின், இந்தக் கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கங்களிலிருந்து, எங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நாம் என்ன செய்ய வேண்டும்?

உண்மையில், ஓர் இயற்கை அனர்த்தம் நிகழ்கின்றது என வைத்துக்கொள்ளுங்கள். அதனை எங்களால் தவிர்ப்பதென்பது இயலாத காரியம். ஆனால், அதனைக் கணிக்கின்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்ற நிலையில், அதனை அறிந்துகொண்டு அதன் பாதிப்புகளிலிருந்து எங்களைத் தற்காத்துக்கொள்ளுவது அல்லது இழப்புகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுவது என்பது சாத்தியமானதாக இருக்கின்றது.

இந்தக் கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கமும் அப்படியான ஒன்றாகவே இருக்கிறது. இன்றைய நிலையில், எதிர்வரும் ஆண்டுவரை பொருளாதார ரீதியாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான அடித்தளம், இப்போதே இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்தால் போடப்பட்டுவிட்டது. எனவே, இன்னும் சில மாதங்களில், இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளை நாம் உணரத்தொடங்கப்போவது அல்லது எதிர்கொள்ளப்போவதும் உறுதியாகிவிட்டது. இந்தநிலையில், நமக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறை, நமது இழப்புகளை அல்லது பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதே ஆகும்.

தற்போது இருக்கின்ற இந்த ஊடரங்கு முடக்கநிலையானது, உங்களுடைய செலவீனங்களை அதிகமாகக் குறைத்திருப்பதுடன், அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளை மாத்திரம் முன்னிலைப்படுத்தி வைத்திருக்கிறது. அத்தோடு, கடன் கொடுப்பனவு, கடனட்டைக் கொடுப்பனவு பிற்போடப்பட்டு இருப்பதன் காரணமாகவும் ஆடம்பர செலவீனங்கள் என்பன இல்லாதநிலையில், உங்கள் கைகளிலுள்ள பணத்தின் புழக்கமானது அதிகமாக இருப்பதான மாயைநிலையொன்று உருவாகி இருப்பதையும் இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருப்பதாகவும் இருக்கும். ஆனால், இந்தநிலை ஊடரங்கு நடைமுறையில் இருக்கின்றவரை மட்டுமே இருக்கும்.

எப்படியும், இந்த நிலை இந்த மாதத்தில் மாற்றமடைகின்றபோது, நமது நாளாந்த வாழ்க்கை நிலைக்கு நாம் திரும்பவேண்டியதாக இருக்கும். இதனால், நமது செலவீனங்கள் படிப்படியாக அதிகரிக்கின்ற நிலை ஏற்படுவதுடன், நமது மாயநிலையிலிருந்து உண்மையான நிலைவரத்தை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எனவே இதன்போது, ஏற்படக்கூடிய செலவுகளைச் சமாளிக்கப் போதுமான பணமில்லாத மற்றுமொரு மாயநிலை உருவாகும். இதனுடன் சேர்ந்துகொண்டு, கொரோனாவின் பொருளாதார தொடர்விளைவுகள் உங்கள் தொழிலைப் பாதிக்கின்றபோது அல்லது உங்களது வீட்டின் வருமான வழிகளில் ஒன்றை முடக்குகின்றபோது இன்னமும் நெருக்கடியானதாக இருக்கும். எனவே, இதிலிருந்து மீண்டுகொள்ள சின்ன சின்ன வாழ்வியல் மாற்றங்களைச் செய்வதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும்.

உண்மையில், எதிர்வரும் சில மாதங்களுக்கு எல்லோருக்குமே பணத்தின் திரவத்தன்மை தொடர்பில் மிகப்பெரும் பிரச்சினை  இருக்கப்போகின்றது. உதாரணமாக, ஆடம்பர செலவீனங்கள் அல்லது ஆடம்பர இறக்குமதிகள் என இனம்காணப்பட்ட பல்வேறு இறக்குமதிச் செயல்பாடுகளுக்கு இலங்கை அரசு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தடையை விதித்திருக்கிறது. இதனால், இந்த இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்கள் பாதிக்கப்படும்.

அத்துடன், இந்தத் தொழில்களுக்குக் கடன் வழங்கியிருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அரசாங்கத்தின் உத்தரவுப் பிரகாரம், கடன்களை வசூலிப்பதைப் பிற்போட வேண்டியதாக இருக்கும். இதனால், வங்கிகளுக்கு வருமானமொன்று இல்லாது போகின்ற நிலை உருவாகும். ஆனால், வங்கிகளில் சாமானியர்களான உங்களைப்போல பலர் வைத்திருக்கக்கூடிய பணத்துக்கு வட்டியை வழங்க வேண்டிய கடப்பாடு வங்கிகளுக்கு இருக்கிறது.

 இது வங்கிகளைப் பொறுத்தவரை செலவீனமாக இருக்கும். இப்போது, வங்கிகளுக்கு வருமானமற்ற நிலையில், செலவுகளைச் செய்ய வேண்டியதாக இருக்கும். இதுபோன்று, ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட செலவுகள் வருகின்றபோது, இவர்களை மீட்க அரசு செயற்பட வேண்டியதாக இருக்கும். அரசாங்கமே கடனில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பணத்தேவைகளை நிறைவேற்ற பணத்தை அச்சிடுவது உட்பட சில செயற்பாடுகளில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். இதனால்தான், இலங்கை அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் முதல் சுமார் 213 பில்லியன் ரூபாயை அச்சிட்டு பணப்புழக்கத்துக்கு விட்டமை, தலைப்புச் செய்தியாக இடம்பிடித்திருந்தது.

எனவேதான், மாற்றங்களானவை தனிநபரின் நிதியியல் மாற்றங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். முதலில், உங்கள் தொழில்சார் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

நீங்கள், வணிகத்தின் உரிமையாளராக இருப்பின், அதைக் கொண்டு நடத்தத் தேவையான வழிவகைகளுடன் இணைந்ததாக, உங்கள் வருமானத்தைப் பெறுவது தொடர்பில் தயார்படுத்தல்களைச் செய்ய வேண்டும். நீங்கள் தொழிலாளியாக இருந்தால், உங்கள் தொழிலைக் குறிப்பிட்ட காலத்துக்கு உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன்மூலமாக, குறுகிய காலத்துக்கேனும் உங்கள் வருமான மூலங்களை, உங்களால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன், அதன் மூலமாக ஏற்படக்கூடிய நிச்சயமற்ற நிலை தொடர்பான அழுத்தங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியும்.

அதாவது, வருமான மூலத்தின் அடிப்படையில்  உங்கள் செலவீனங்களை வரையறுத்துக் கொள்ளுவது அல்லது, அதை மீளமைத்துக் கொள்ளுவது அவசியமாகிறது. இதன்மூலமாக, விரலுக்கேற்ற வீக்கமென நம் முன்னோர்கள் சொல்வது போலான குறுகிய கால ஏற்பாட்டுடனான வாழ்வியல் முறைக்குள் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இது கொரோனா வைரஸின்  விளைவால் பொருளாதார ரீதியாக ஏற்படப்போகின்ற விளைவுகளிலிருந்து மிகக்குறைந்த சேதாரத்துடன் தப்பித்துக்கொள்ள வழிவகை செய்வதாக அமையும். கொரோனா வைரஸ், எப்படி ஒருவருடன் மற்றுமொருவருக்குத் தொற்றுகின்ற செயல்முறை, பின்னிப்பிணைந்ததாக இருக்கின்றதோ அதுபோல, இந்தப் பொருளாதார விளைவுகளிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளுகின்ற செயல்பாடுகளும் ஒருவருடன் ஒருவர் இணைந்த விளைவாகவே இருக்கும். அதனை உணர்ந்துகொண்டு, அதற்கமைவாக நமது  பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியதென்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
 

http://www.tamilmirror.lk/வணிகம்/Covid-19-உங்கள்-பொருளாதாரத்தில்-ஏற்படுத்தப்போகும்-மாற்றங்கள்/47-249779

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.