Jump to content

மீள் வருகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மீள் வருகை

risan-kenya-story.jpg

வெகுகாலம் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமாவு மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு…

கண்ணுக்கெட்டாத் தொலைவில் பிரதான வீதியின் எல்லை. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்குப் பின்னால் கோபத்தோடு எழுந்து வரும் புழுதி மேகம். அவன் தொலைவில் செல்லச் செல்ல புழுதி மண்டலமும் படிப்படியாக அடங்கிப் போனது என்றாலும்,  புகை போன்ற மென்மேகங்களால் வெற்று ஆகாயம் மூடப்பட்டிருந்தது. புழுதியைக் குறித்தோ, தான் பயணித்துக் கொண்டிருக்கும் பூமியைக் குறித்தோ எவ்வித உணர்வுமற்று அவன் முன்னே நடந்தான். பெருந்தெரு அவனுக்கெதிராக எழுந்து வருமொரு எதிரியைப் போன்றிருந்தது. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட எதையேனும் காணுவதைக் கொண்டோ அல்லது தான் அறிந்த யாரையேனும் சந்திப்பதை வைத்தோ தனது வீட்டுக்கருகில் வந்துவிட்டிருப்பதை அறிந்துகொள்ள இயலும் என்ற எதிர்பார்ப்போடு அவன் நேராகப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தான். எனினும் பிரதான தெருவின் எல்லையைக் காண முடியாதிருந்தது. 

அவன் அவசரமாக நடை போட்டான். சில காலத்துக்கு முன்பு வரை அழகான நிறங்களுடன் இருந்திருக்கக் கூடுமான, தற்போது நிறம் மங்கிப் போய் கிழிந்து போயிருந்த ஆடையின் நுனி அவனது இடது கையைத் தன்னிச்சையாக தொட்டுக் கொண்டிருந்தது. அவனது வலது கையின் மணிக்கட்டினருகே மடித்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொதி. சிவப்புப் பூக்கள் அச்சிடப்பட்டிருந்த – அவை இப்பொழுது மங்கிப் போய்விட்டிருந்தன – பருத்தித் துணியால் சுற்றப்பட்டிருந்த பொதியானது கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. அவனது நடையின் தாளத்திற்கேற்ப பொதியானது அங்குமிங்கும் அசைந்தது. விளக்க மறியலில் அவன் கழித்த கடினமான, கொடுமையான வருடங்களைப் பற்றிய கதையை அப்பொதி எடுத்துரைத்தது. 

தனது வீட்டை நோக்கிச் செல்லும் அப்பயணத்தின் போது, அவன் அடிக்கடி சூரியனைக் கூர்ந்து நோக்கினான். பாதையின் இரு மருங்கிலுமிருந்த தோட்டங்களில் நடப்பட்டிருந்த சோளம், பயற்றங்காய், அவரைச் செடிகள் வாடிப் போயிருந்தன. முழு தேசமுமே இன்னலுக்காளாகியிருப்பதைப் போலக் காட்சியளித்தது. கமாவுக்கு இது புதிதான ஒன்றல்ல. மாஉ மாஉ  புரட்சியை ஆரம்பிக்கும் முன்பிருந்தே இந்நிலைமை இப்படியேதான் இருந்தது. 

இடதுபுறத்துக்குத் திரும்பிய பாதையொன்றால் பிரதான வீதி  பிரிந்தது. அவன் சிறிது தயங்கினான். மனதை சரிப்படுத்திக் கொண்டான். இந்த நீண்ட பயணத்தின் போது, முதல் முறையாக அவனது விழிகள் பிரகாசமாக மின்னின. அப்பாதை பள்ளத்தாக்கினை நோக்கியும், அடுத்ததாக அவனது கிராமம் வரைக்கும் நீண்டிருந்தது. வீட்டின் அருகாமைக்கு வந்து சேர்ந்துவிட்டதாகத் தெரிந்து கொண்டதும், அவனது களைப்பு ஒரு கணம் தூரப் போய் விட்டது. நீலத்தால் மூடப்பட்டிருந்த பள்ளத்தாக்கு, சுற்றியிருந்த பிரதேசங்களை விடவும் செழிப்பானதாகவும் வளம் மிக்கதாகவும் காட்சியளித்தது. பசுமை மிகு விருட்சங்கள் ஹோனியா நதி இன்னும் பெருக்கெடுத்துப் பாய்வதை வெளிப்படுத்தி நின்றன. தனது இரு கண்களினாலும் நதியைப் பார்த்து உண்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவன் வேகமாக அடி வைத்து நடந்தான். 

ஹோனியா நதி இப்போதும் அமைதியாக பாய்ந்து கொண்டிருந்தது. ஹோனியா, அவன் அடிக்கடி குளிக்கச் சென்ற நதி. குளிர்நீரில் மூழ்கி, ஆடையற்றுக் குளித்த ஆறு. அவனது இதயம் உருகியது. சர்ப்பமொன்றைப் போல நகர்ந்து செல்லும் நதி அவனது விழிகளை நிறைத்திற்று. சூழவிருந்த வனம் மெலிதாக முணுமுணுக்கும் ஓசை  அவனது காதுகளின் அடியாழம் வரை சென்று ஆழப் பதிந்தது. வேதனை மிகுந்த பரவசமொன்று அவனது உடல் முழுவதும் பயணித்தது. அவன் ஒரு கணம் இறந்த காலத்தை நினைத்துக் கொண்டான். அத்தோடு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். நதியைச் சூழவிருந்த உலகம், அவனுக்கு அனைத்தையும் நினைவுபடுத்திக் கொடுத்ததை நதி அறியவில்லை என்றபோதிலும், ஹோனியா நதிக்கும் தனக்கும் இருக்கும் பந்தத்தை அவன் நன்கு உணர்ந்தான். 

பெண்கள் கூட்டமொன்று தண்ணீர் எடுத்துப் போக வந்திருந்தது. அவன் சடுதியாக திடுக்கிட்டுப் போனான். ஏனெனில் தனது குடியிருப்பு அமைந்திருந்த மலையில் வசிக்கும் பெண்கள் இருவரையோ அல்லது ஒருத்தியையோ அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நடுத்தர வயதைத் தாண்டும் அவள் வஞ்ஜிகு என்பவளாவாள். தான் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு பாதுகாப்புப் படையால் அவளது செவிட்டு மகன் கொல்லப்பட்ட விதம் அவனுக்கு நினைவிலெழுந்தது.

அவள் ஊருக்கே அதிர்ஷ்டமான பெண்ணாக அறியப்பட்டவள். அவளது சிரிப்பு கிராமத்துக்கே விருந்தளித்தது போல இருக்கும். அப்பெண்கள் அவனை ஒரு வீரனாக ஏற்றுக் கொள்வார்களா? மலைப் பிரதேசத்தில் அவனொரு புகழ்பெற்ற நபராக இருக்கவில்லையா? தனது தாய்நிலத்துக்காக போரிடாத ஒரு மனிதனா அவன்? ‘இதோ நான் திரும்பி வந்து விட்டேன்’, என ஓடிச் சென்று அவர்கள் முன்பு கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு. எனினும் அவ்வாறு கத்துவது தனது ஆண்மைக்கு அழகல்ல என்பதையும் உணர்ந்தான். 

‘நீங்கள் நலமா?’

பல குரல்களிலிருந்தும் பதில் கிடைத்தது. களைத்தும் மெலிந்தும்  போயிருந்த பெண்கள் அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனைச் சந்தித்தது, தமக்கு முக்கியமான ஒரு விடயமல்ல என்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். ஏன்? அவன் விளக்கமறியலில் அதிகமான காலத்தைக் கழித்திருந்ததாலா?

‘உங்களுக்கு என்னை நினைவில்லையா?’

அவ்வாறு கேட்ட போது அவனது ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனதைப் போன்று உணர்ந்தான். அவர்கள் மீண்டும் அவனைப் பார்த்தனர். ஏனைய அனைவரும் பார்ப்பதைப் போன்றே விழியோரத்தால் கொஞ்சமாகப் பார்த்தனர். 

அவனை அடையாளம் கண்டுகொள்வதை வேண்டுமென்றே அவர்கள் நிராகரிப்பதை அவன் அறிந்து கொண்டான். இறுதியில் வஞ்ஜிகு அவனை அடையாளம் கண்டுகொண்டாள். ஆனாலும் அவளது குரலில் உணர்ச்சியோ உற்சாகமோ அற்றுப் போயிருந்தது. 

‘ஓ கமாவு… நாங்கள் நினைத்தோம்… நீ….’

அவள் வாக்கியத்தை முழுவதுமாக முடிக்கவில்லை. இப்பொழுது அவனுக்கு ஏதோ புரிந்தது. அவர்கள் அனைவருமே தான் அறியாத ஏதோவொரு ரகசியத்தால் கட்டுப்பட்டிருப்பதை அவன் உணர்ந்தான். அவர்களது சந்தேகப் பார்வையின் அர்த்தம் அதுதான். 

‘ஒருவேளை நான் இப்பொழுது அவர்களில் ஒருவனாக இல்லாதிருக்கக் கூடும்’, என சலிப்போடு சிந்தித்தான். எனினும் அவர்கள் அவனிடம் புதிய கிராமம் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர். மலையுச்சியில் பரந்திருந்த குடிசைகளாலான பழைய கிராமத்தை இனி காணக் கிடைக்காது. 

கவலை தரும் உணர்வுகளோடு அவன் அவர்களை விட்டு நீங்கிச் சென்றான். பழைய கிராமம் அவன் திரும்பி வரும்வரை காத்திருக்கவில்லை. தனது பழைய வீடு, நண்பர்கள் மற்றும் சுற்று வட்டாரம் குறித்த கவலையொன்று திடீரென அவனுக்குள் உருவானது. அவன் தனது தாயையும், தந்தையையும் நினைத்துக் கொண்டான் என்ற போதிலும், அவளை நினைத்துக் கொள்ளவில்லை. எனினும் எல்லாவற்றையும் கீழே தள்ளி விட்டு மீண்டும் முத்தோனி அவனது நினைவிலெழுந்தாள். 

அவனது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவனுக்குள் உணர்வுகளும் விருப்பங்களும் அதிகரித்தன. அவன் தனது நடையை துரிதப்படுத்தினான். தனது மனைவியைப் பற்றி சிந்திக்கும்போது அவன் தனது ஊர்ப் பெண்களை மறந்துபோனான். இரண்டு கிழமைகள் மாத்திரம்தான் அவன், அவளுடன் கழித்திருந்தான். அதன் பிறகு குடியேற்றவாசிகளைக் கைது செய்ய நியமிக்கப்பட்டிருந்த படை அவனைக் கொண்டு சென்றது. ஏனைய அநேகமானவர்களைப் போல, அவனும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீதி விசாரணையேதுமற்று விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்த காலம் முழுவதும் அவன் தனது கிராமம் மற்றும் தனது அழகிய மனைவி குறித்தே சிந்தித்தபடியிருந்தான். அங்கிருந்த ஏனையவர்களும் அவனைப் போலத்தான் இருந்தனர். அவர்கள் தத்தமது வீடுவாசல் குறித்தல்லாது வேறெதைப் பற்றியும் கதைக்கவில்லை. 

ஒரு தினம் அவன் முருங்காவிலிருந்து அழைத்து வந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவனோடு கல்லுடைத்துக் கொண்டிருந்தான். நிஜோர்ஜி எனப்படும் அவன் திடீரென கல்லுடைப்பதை நிறுத்தினான். நீண்ட பெருமூச்சு விட்டான். அவனது கீழிறங்கிப் போன விழிகளால் தொலைவை நோக்குவது தெரிந்தது.

‘என்னாயிற்று உனக்கு?’ என கமாவு கேட்டான்.

‘என்னுடைய மனைவி… அவளுக்குக் குழந்தை கிடைக்க இருந்தது. அவளுக்கு என்ன நடந்தது என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை’

இன்னுமொரு கைதி அவர்களோடு இணைந்து கொண்டான்.

‘எனக்கும் என்னுடைய மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுத்தான் இங்கு வர வேண்டி வந்தது. என்னுடைய மனைவி பிரசவித்த அதே நாளில்தான் என்னைக் கைது செய்தார்கள்’

அவ்வாறான நினைவுகளோடுதான் அவர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் அனைவருக்குமே ஒரேயொரு எதிர்பார்ப்பே இருந்தது. அது திரும்பவும் வீடு செல்லும் நாள் பற்றியது. அப்போதுதான் மீண்டுமொரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்.

கமாவு குழந்தை பெற முன்பே தனது மனைவியை விட்டுச் செல்ல வேண்டி வந்தது. அவன், மணப்பெண்ணுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கூட இன்னும் கொடுத்து முடிக்கவில்லை. எனவே அவன் இப்பொழுது மீளச் சென்று, நைரோபிக்கு வந்து தொழிலொன்றைத் தேடிக் கொண்டு, மீதிப் பணத்தை முத்தோனியின் பெற்றோருக்குச் செலுத்த வேண்டும். உண்மையிலேயே வாழ்க்கையானது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. அவர்களுக்கொரு மகன் பிறக்கக் கூடும். அப்போது அவனை வீட்டிலேயே வைத்து வளர்த்தெடுக்க வேண்டும். 

அவனுக்கு ஓடிச் செல்ல… இல்லை… பறந்து செல்ல அவசியமாக இருந்தது. அவன் இப்போது மலையுச்சியை நெருங்கிக் கொண்டிருந்தான். தனது சகோதர சகோதரிகளை உடனே காணக் கிடைக்க வேண்டுமென அவன் பிரார்த்தித்தான். அவர்கள் அவனிடம் கேள்விகளைக் கேட்பார்களா? எவ்வாறாயினும் அவன் அவர்களிடம் எல்லாவற்றையும் கூற வேண்டுமென்பதில்லை. சித்திரவதைகள், கற்குழிகளில் வேலை செய்த விதம், வீதிகளில் வேலை செய்த விதம், சிறிது ஓய்வெடுப்பதைக் கண்டாலும் அடித்துத் துன்புறுத்தும் விதம்… ஆமாம், அவன் மிகவும் மோசமாக துயரம் அனுபவித்திருக்கிறான். ஆனாலும் அவன் எதிர்க்கவில்லை. எதிர்க்கத் தேவைப்படவில்லையா? அது அவனது ஆத்மாவுக்கும் ஆண்மைக்கும் இழிவாக இருக்கவில்லையா?

‘எப்போதாவது ஓர் நாள் அவர்கள் போய் விடுவார்கள்’, ‘எப்போதாவது ஓர் நாள் எமது மக்கள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்றெண்ணிய அவன் அப்போது தான் என்ன செய்வது என்பதை அறிந்திருக்கவில்லை. எவ்வாறாயினும் தனது ஆளுமையை எவராலும் தடை செய்ய முடியாதென அவன் சலிப்போடு சிந்தித்திருந்தான். 

அவன் மலையுச்சியிலேறி நின்றான். கீழே விசாலமான சமவெளி தென்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கிராமம் அவன் முன்னாலிருந்தது. களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகள் வரிசையாக இருந்தன. மறைந்து செல்லும் சூரியனின் முன்பு குந்தியிருக்கும் மனிதர்களைப் போன்று வீடுகள் பரந்திருந்தன. அநேகமான வீடுகளிலிருந்து ஆகாயம் நோக்கிச் செல்லும் கரும் புகையானது கறுப்பு வளையங்களாக கிராமத்தை மூடி விரிந்து சென்றது.

கிராமத்தின் ஒவ்வொரு தெருவாக அவன் நடந்து சென்றான். எல்லா இடங்களிலும் புதிய முகங்களையே காணக் கூடியதாக இருந்தது. அவன் விசாரித்துப் பார்த்தான். இறுதியில் அவன் தனது வீட்டைக் கண்டுபிடித்தான். வாசலருகே முற்றத்தில் நின்று அவன் நெடிய பெருமூச்சு விட்டான். இது அவன் மீளவும் வீட்டுக்கு வந்த கணம். அவனது தந்தை முக்காலியொன்றில் சுருண்டு போய் அமர்ந்திருந்தார். அவர் இப்போது ஒரு முதியவர். கமாவுக்கு அவரைக் கண்டதும் கவலையாக இருந்தது. எனினும் அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆமாம்… தனது மகனின் மீள்வருகையைக் காண அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

‘அப்பா..’

முதியவர் பதிலளிக்கவில்லை. அவர் கமாவை நோக்கி புதுமையானதொரு வெற்றுப் பார்வை பார்த்தார். கமாவுக்குப் பொறுமையிருக்கவில்லை. அவன் கோபத்துக்கும் துயரத்துக்கும் ஆளானான். அவர் என்னைக் காணவில்லையா? நதியினருகே சந்தித்த பெண்களைப் போல தனது தந்தையும் புதியவரொருவரைப் போல நடந்து கொள்வாரா?

நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் குழந்தைகள் புழுதியோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து போய் நிலவு உதித்து வருவதைக் காண முடிந்தது.

‘அப்பாவுக்கு என்னை நினைவில்லையா?’

அவனிடமிருந்த எதிர்பார்ப்பு, அவனுக்குள் மூழ்கிப் போய்க் கொண்டிருந்தது. அவன் களைப்பாக உணர்ந்தான். அவனது தந்தை மரமொன்றின் இலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கியிருப்பதை அப்போது அவன் காண நேர்ந்தது. தனது கண்களையே நம்பாது, அவனது தந்தை அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான். அவரது விழிகளில் தெளிவாகத் தெரிந்தது பயம். 

அவனது தாயும் சகோதரர்களும் வந்தனர். அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவனது வயது முதிர்ந்த தாய் அவனது அணைத்து விம்மத் தொடங்கினாள்.

‘என்னுடைய மகன் திரும்ப வருவான் என்று எனக்குத் தெரியும். என்னுடைய மகன் செத்துப் போகவில்லை என்று எனக்குத் தெரியும்’

‘ஏன் நான் செத்துப் போய்விட்டேன் என்று யார் சொன்னது?’

‘அந்த கரஞ்ஜா. நிரோஜ்ஜியுடைய மகன்’’

அப்போதுதான் கமாவுக்கு எல்லாம் புரிந்தது. தனது தந்தையின் நடுக்கத்தின் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. நதியினருகேயிருந்த பெண்களின் விந்தையான நடவடிக்கைகள் குறித்து அவனுக்கு விளங்கியது. அதுவும் அவனை அசௌகரியத்துக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக இருந்தது. 

அவன் ஒருபோதும் கரஞ்ஜாவுடன் ஒரே விளக்கமறியலில் இருந்திருக்கவில்லை. எவ்வாறாயினும் அவனும் மீண்டு வந்திருக்கிறான். இப்பொழுது கமாவுக்கு முத்தோனியைப் பார்ப்பது அவசியமாக இருந்தது. ‘அவள் ஏன் இன்னும் வரவில்லை? நான் வந்துவிட்டேன் முத்தோனி. நான் இங்குதான் இருக்கிறேன்’ எனக் கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது. அவன் சுற்றி வரப் பார்த்தான். அவனது தாய் புரிந்து கொண்டாள். தமது மக்களை சடுதியாகப் பார்த்த அவள் அமைதியாகக் கூறினாள்.

‘முத்தோனி போய் விட்டாள்.’

தனது வயிற்றுக்குள் புதிதாக குளிர்ச்சியான ஏதோவொன்று  சூழ்ந்துகொண்டதைப் போல கமாவு உணர்ந்தான். கிராமத்தின் குடிசைகள் மற்றும் சமவெளி நோக்கி அவனது பார்வை விரிந்தது. நிறையக் கேள்விகளைக் கேட்க அவனுக்கு அவசியமாக இருந்தபோதிலும்  அவன் எதுவும் கேட்கவில்லை. முத்தோனி போய்விட்டதை இன்னும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆற்றினருகேயிருந்த பெண்களின் பார்வையிலும், தனது பெற்றோரின் பார்வையிலும் அவள் போய்விட்டது பற்றிய குறிப்பு இருந்தமை அவனுக்குப் புரிந்தது.

‘அவள் எமக்கொரு மகளைப் போலவே இருந்தாள். அவள் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு, அனுபவித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் நீ செத்துப் போய் விட்டதாக கரஞ்ஜா வந்து சொன்னான்.. உன் அப்பா கரஞ்ஜாவை நம்பினார். அவளும் கரஞ்ஜாவை நம்பினாள். ஒரு மாதம் கடந்திருக்கும். கரஞ்ஜா இங்கே அடிக்கடி வந்து போனான். அவனும் உன்னைப் போல கஷ்டப்பட்டவனொருவன் என்பது உனக்குத்தான் தெரியுமே.. பிறகு அவளுக்கொரு குழந்தை பிறந்தது. எங்களுக்கு அவளையும் இங்கே எம்முடன் வைத்திருந்திருக்கலாம்தான். ஆனால் இட வசதியெங்கே? சாப்பாடு எங்கே? இடத்தைக் கைப்பற்றத் தொடங்கிய நாளிலிருந்தே எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனைய பெண்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் மோசமான செயல்களையே செய்து கொண்டிருந்தார்கள். அதனால் கரஞ்ஜா அவளைக் கூட்டிப் போக நாங்கள் அனுமதித்தோம். அவர்கள் நகரத்துக்குப் போனார்கள். பலவீனமானவர்களும், வயதான பெண்களும் மட்டுமே இங்கே மிஞ்சிப் போனோம்’ என கமாவின் தாய் விளக்கினாள்.

அவன் அதற்கு செவிமடுக்கவில்லை. அவனது வயிற்றுக்குள்ளிருந்த குளிர்ச்சி கசப்பாக மாறியது. அவனுக்கு எல்லோர் மீதும், தனது தாய் தந்தை மீதும் வெறுப்பு தோன்றியது. எல்லோருமே அவனுக்கு துரோகம் இழைத்திருக்கின்றனர். கரஞ்ஜா எப்போதுமே அவனுக்கு எதிரியாக நடந்து கொண்டவன். ஐந்து வருடங்களென்பது சொற்பமான காலமல்ல. ஆனாலும் அவள் ஏன் போனாள்? இவர்கள் அவளைப் போக அனுமதித்தது ஏன்?

அவனுக்கு பேச வேண்டிய தேவையிருந்தது. அவனுக்கு அனைவர் மீதும் குற்றம் சாட்ட வேண்டியிருந்தது. நதியினருகேயிருந்த பெண்கள் மீது, கிராமத்தின் மீது, கிராமத்து மக்கள் மீது. எனினும் அவனால் பேச முடியவில்லை. வெறுப்புணர்வு அவனது தொண்டையை அடைத்துக் கொண்டது.

‘நீங்கள்…நீங்கள் அவளைப் போக விட்டுவிட்டீர்கள்..’, அவன் ஓலமிட்டான்.

‘இங்கே பார்! மகனே…மகனே’

மஞ்சள் ஒளி கொண்ட நிலா உதித்து வந்தது. அவன் குருடனொருவனைப் போல விலகி ஓடிப் போனான். திரும்பவும் அவன்  போய் நின்றது ஹோனியா ஆற்றின் அருகில்.

ஆற்றங்கரையில் நின்றிருந்த அவன் கண்டது பாய்ந்தோடும் நதியையல்ல. உடைந்து சிதறி தூள்தூளாகிப் போன அவனது எதிர்பார்ப்புக்கள் பாய்ந்து செல்லும் விதத்தைத்தான் அவன் கண்டான். மெல்லிய முனகலை எழுப்பியபடி அமைதியாக நதி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. வண்டுகளினதும் ஏனைய விலங்குகளினதும் தொடர்ச்சியான ஓசை வனத்தினுள்ளிருந்து கேட்டது. மேல் வானில் சந்திரன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் ஆடையை அகற்ற முயற்சித்தான். அவன் இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்த பொதி சடுதியாக நிலத்தில் வீழ்ந்தது. கமாவு எதையும் செய்வதற்கு முன்பே அப் பொதியானது உருண்டு சென்று ஆற்றில் விழுந்து நீரில் மிதந்து செல்லத் தொடங்கியது. 

ஒரு கணம் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு  பொதியை மீட்டெடுக்கத் தோன்றியது. அவனுக்கு எல்லாமும் உடனடியாக மறந்து போய்விட்டதா? அவனது மனைவி போய்விட்டிருந்தாள். அவள் மீது அவன் வைத்திருந்த எல்லா எதிர்பார்ப்புகளும் நொறுங்கிப் போய்விட்டன. அவனுக்குள் நிம்மதியாக உணர்ந்தான். 

ஆனால் அவ்வாறான நிம்மதி தோன்றியது எதனால் என அவனுக்குப் புரியவில்லை. நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளவிருந்த அவனது எண்ணம் மறைந்து போயிருந்தது. 

‘அவள் நான் வரும்வரை ஏன் காத்திருந்திருக்க வேண்டும்? நான் மீண்டும் வரும் வரைக்கும் எல்லாமும் ஏன் மாற்றமடையாது இருந்திருக்க வேண்டும்?’ தனது ஆடையை சீர் செய்தபடி அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.


-கூகி வா தியாங்கோ

தமிழில்: – எம்.ரிஷான் ஷெரீப்

ஆசிரியர் குறிப்புகள்:

கூகி வா தியாங்கோ:

கென்யாவில் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி 1938 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ஜேம்ஸ் கூகி என்பதாகும். அது காலனித்துவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதால் பிறகு 1967 ஆம் ஆண்டு A Grain of Wheat வெளியானதோடு தனது பெயரை கூகி வா தியாங்கோ என மாற்றிக் கொண்டார்.

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து உதித்த முதல் தர எழுத்தாளராக கூகி வா தியாங்கோ அறியப்பட்டிருக்கிறார். பல பல்கலைக்கழகங்களில் இலக்கியம் குறித்த பேராசிரியரான இவரது அரசியல் படைப்புக்களின் காரணமாக கென்யாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் இவர். 

இவரால் ஆப்பிரிக்க இலக்கியம், அரசியல் மற்றும் அடிமை வாழ்க்கை முறை குறித்து எழுதப்பட்டவை ஏராளம். அவற்றுக்கிடையில் ‘Homecoming : Essays on African and Caribbean Literature’, ‘Decolonising the Mind : The Politics of Language in African Literature’, ‘Writers in Politics’, ‘Detained : A Writer’s Prison Diary’, ‘Moving the Centre : The Struggle for Cultural Freedoms’ ஆகியவை முக்கியமானவை.

‘Weep not Child’, ‘The River Between’, ‘A Grain of Wheat’, ‘Petals of Blood’, ‘Devil on the Cross’, ‘Matigari’ ஆகியவை இவரது நாவல்களாகும். ‘Secret Lives’ இவரது சிறுகதைத் தொகுப்பு. ‘This Time Tomorrow and Other Plays’, ‘The Black Hermit’, ‘The Trial of Dedan Kimathi’, ‘I Will Marry When I Want’, ‘Mother Sing for Me’ ஆகியவை இவரது முக்கியமான நாடகத் தொகுப்புகளாகும்.

எம். ரிஷான் ஷெரீப்:

எம். ரிஷான் ஷெரீப் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும், கவிஞரும், ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம் ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறார். 

இவர் இதுவரையில் ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பு,  இரண்டு  ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரைத் தொகுப்பு, இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நாவல்கள் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.  

இந் நூல்களுக்காக இவர் இதுவரையில் இலங்கை அரச சாகித்திய விருதுகள், இந்தியா வம்சி விருது, கனடா இயல் விருது போன்ற முக்கியமான விருதுகளை வென்றுள்ளார். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன.
 

http://kanali.in/meel-varugai/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரணமற்ற சிறை வாழ்க்கை, கடந்து செல்லும் காலங்கள் எல்லாம் ஒரு மனிதனின் கனவுகளை சிதைத்து வாழ்வின் போக்கையே மாற்றி விடுகின்றன.......நல்ல கதை ....நன்றி கிருபன்.......!   😁   

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.