Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரும் நிரந்தரமாகத் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை – கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாரும் நிரந்தரமாகத் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை – கருணாகரன்

May 17, 2020
karuna-696x347.jpg

நேர்கண்டவர்: அகர முதல்வன்

ஈழத்து கவிஞர்களுள் கருணாகரனுக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. போர்நிலத்துள் தன்னுடைய வாழ்வையும் எழுத்தையும் தகவமைத்துக்கொண்டவர்களுள் ஒருவர்.ஆயுதப் போராட்ட காலத்தில் வெளியான “வெளிச்சம்” கலை இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். “ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்”, “பலி ஆடு”, “ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்” போன்ற கவிதைத் தொகுப்புக்கள் மூலம் அறியப்பட்டவர். இவரின் “வேட்டைத் தோப்பு” சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.கவிஞர் எஸ்.போஸ் படைப்புக்களை தொகுத்தவர்களுள் இவரும் ஒருவர். சமீபத்தில் புலம் பதிப்பகம்,புது எழுத்து பதிப்பகம் வாயிலாக “உலகின் முதல் ரகசியம்” ,”நினைவின் இறுதி நாள்” ஆகிய கவிதைத்தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

***

‘பிணவாடை எழுந்து மலவாடையை மூடிற்று
மலவாடை எழுந்து பிணவாடையை மூடிற்று
அந்தக் கடலோரத்தில் கடல் வாசம் வீசவில்லை
மீன் வாசமும் வீசவில்லை
புதைகுழிகள்  எழுந்த சனங்களையும்
இருந்த சனங்களையும் மூடின.
எழுந்து வந்த சூரியனின் உடலெங்கும் இரத்தம்
துக்கந்தாழாச் சூரியன் வீழ்ந்த இடமும் இரத்தம்
கண்ணீர் பெருகி வீழ்ந்த கடலும் இரத்தம் ‘

முள்ளிவாய்க்கால் பேரழிவுகாலத்தின் பின்பான ஈழக்கவிதையில் உங்களுடைய இந்த வரிகள் மிக முக்கியமானவை. சேரனின் ‘இரண்டாவது  சூரிய உதயம்’ என்கிற கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. எண்பதுகளில் எழுதப்பட்ட அந்தக் கவிதையில் ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்றொரு வரியிருக்கும். அந்தச் சூரியனுக்கும் இந்தச் சூரியனுக்குமிடையில் எத்தனை தலை நிமிர்வுகள்? எத்தனை பிரளயங்கள்? ஈழத்தமிழருக்கு இனியெப்போது சூரிய உதயம்?

இலக்கியப்பிரதிகளின்வழியாகச்சொல்வதென்றால், 1980 களின்முற்பகுதிநம்பிக்கையின்காலம். இதுகழிவிரக்கக்காலம்எனலாம். நீத்தார்பாடல், சரமகவி, ஊழிக்காலம், Box, ஆதிரை, போருழல்காதை, காணாமல்போனவனின்மனைவி, நடுகல், காடாற்று, நீந்திக்கடந்தநெருப்பாறு, உயிர்வாசம், புள்ளிகள்கரைந்தபொழுது, சேகுவேராஇருந்தவீடு, தேவதைகளின்தீட்டுத்துணி, கண்டிவீரன், 1958  (இன்னும்பலவுண்டு) என்றுதொடரும்பிரதிகளேயுத்தமுடிவுக்குப்பின்வந்துகொண்டிருப்பவை. இதில்என்னுடையபலபிரதிகளும்சேர்த்தியே. 

இதுதுக்கம் தாளாமல் புலம்பும்நாட்கள் அல்லது திகைப்பிலுறைந்த காலம் அல்லது தடுமாற்றங்களின் நாட்கள் என்றே சொல்ல வேண்டும் என்பதால் தான் நம்பிக்கை தரும் சொற்களை எங்கு நான் காண்பேன்?” என்று எழுத வேண்டியுள்ளது. இன்றைய ஈழத்தமிழரின் அரசியல் நிலவரம் இதற்கு மேலும் சான்று.

ஆனால், இதைக் கடந்து சென்றிருக்க வேண்டும் நாம். அத்தகைய முனைப்பெதையும் காணவில்லை என்பது துயரம். போர் எதிர்ப்புப் பிரதிகள் எழுதப்பட வேண்டும். புதிய உணர்தளத்தை நோக்கிய பயணம் நிகழ்வது அவசியம். அப்போதுதான் மனநிலை மாற்றம் நிகழும். 

யாரும் நிரந்தரமாகத் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை. எந்தச் சூழலிலும் ஏதோ சில வழிகள் திறந்தேயிருக்கும் – வாய்ப்புகளிருக்கும். வரலாற்று அசைவியக்க விதியிது.

இந்தப் புரிதலோடும் நம்பிக்கையோடும் அந்த வாய்ப்புகள் என்ன, அந்த வழிகள் என்ன என்று இனங்காண்பதே ஆற்றலுள்ள சமூகத்திற்கு அழகும் பெறுமானமும். அதுவே வல்லமை. பிறகு அவற்றை எப்படிக் கையாள்வது, எப்படி வெற்றியை நோக்கி நகர்த்துவது என்று (நுட்பமாக) சிந்தித்துச் செயற்பட வேணும். இதற்குப் படிப்பினைகளும் புதிய வழிச் சிந்தனைகளும் பெருந்துணை செய்யும்.

இது ஒரு வழி.

இன்னொரு வழி, வாய்ப்புகளை நாமாக உருவாக்கிக் கொள்வதாகும். நிலவுகின்ற அக  புறச் சூழ்நிலைகளைக் கூர்மையாக அவதானித்து அரசியற் செயற்பாட்டை, புத்தாக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பது. அதன் வழியே சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி வெற்றியடைவது. 

இலக்கியமும் அப்படித்தான். புதிய புனைவுச் சாத்தியங்களின் வாசல்களைத் திறக்க வேணும்.

karu2.jpg

இந்த இரண்டு வழிகளிலும் முயற்சிக்க வேண்டும். செயற்பட வேண்டும். இதுவே இப்போதுள்ள தமிழ்த் தலைமைகளுக்கான பொறுப்பும் விதியுமாகும். ஆனால், இதைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலோ, திராணியோ, கரிசனையோ இந்தக் கட்சிகளுக்கில்லை. ஏனென்றால், இவை மக்களுடன் இணைந்து நிற்கவோ, மக்களிடம் இறங்கி வேலை செய்யவோ தயாரற்றவை. பெரும்பாலும் பிரமுகர் மற்றும் முகவர் அரசியலையே இவை கொண்டிருக்கின்றன. இந்தத் தலைமைகளைக் கடந்து சிந்திக்கும் ஆற்றலும் நோக்கமும் சமூகத்துக்குமில்லை என்பதால் இப்போதைக்கு மீட்சியில்லை.

போராட்டம் தோற்றதும், தோற்கடிக்கப்பட்டதும் பெரிதல்ல. அது எங்கும் நிகழக் கூடியது. ஆனால், தமிழ்ச்சமூகம் தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் அவமானமும் முட்டாள்தனமும்.

தமிழ்ச்சமூகத்திடம் மூன்றாவது கண் இல்லை. அகவிழி திறக்கப்படவில்லை. பதிலாக அது அகச் சிக்கல்களுக்குள்ளாகியிருக்கிறது. அதனால்தான் அது கடந்த காலத்தின் புதைசேற்றுக்குள் கிடந்துழல்கிறது. இந்த நோயிலிருந்து விடுபட முடியாமல் அது தத்தளிக்கிறது என்பதால் யாரை நொந்தும் பயனில்லை. நம்மை நாமே நொந்துக் கொள்வதைத் தவிர. அப்படியே இலக்கியச் செயற்பாட்டினருக்கும் ஏனைய அறிவுத்துறையினருக்கும் இது விதி.

போராட்டக் களத்திற்குள் இருந்து எழுதப்பட்ட நிறைய படைப்புக்களோடு உங்களுக்கு நிறையவே பரிச்சயம் உண்டு. குறிப்பாக விடுதலைப் போராளிகளாக இருந்து எழுதியவர்களின் படைப்புக்கள் மிகமிக முக்கியமானவை. அன்றைய நாட்களில் போர்க்கள இலக்கியத்தின் பண்புகள் எவ்வாறாக இருந்தன?

ஒன்று, மக்களுடைய பாடுகளை, அவலங்களை எழுதுவது. அதற்குக் காரணமான எதிர்த்தரப்புகள் (அரசு மற்றும் அதன் கட்டமைப்புகள், நடைமுறைகள்)  மீதான சீற்றத்தையும் அவற்றின் அறமீறல்களையும் எதிர்ப்பதும் வெளிப்படுத்துவதும்.  இதில் பலருண்டு. உதாரணத்துக்குச் சிலரைச் சொல்லலாம். இயல்வாணன், சித்தாந்தன், தானா விஷ்ணு, பா. அகிலன், நிலாந்தன், முல்லைக்கோணேஸ், தாமரைச்செல்வி, முல்லை யேசுதாசன், ஆதிலட்சுமி சிவகுமார், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், பிரதீப குமரன், சு. மகேந்திரன், திசேரா, மலர்ச்செல்வன்,  எஸ்போஸ், அமர தாஸ், உமா ஜிப்ரான், சு.வில்வரத்தினம், கருணை ரவி, சு.மகேந்திரன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் இன்னும் பலருண்டு. ஆனால், இவர்களெல்லாம் போராளிகளல்ல.

அடுத்தது போரில், போராட்டத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கிலானது. போராட்டக்கள அனுபவங்கள், அதைப் பிரதிபலிக்கும் உணர்வுகள், சக போராளிகளின் தியாகங்கள், தலைமை மீதான (இயக்க) விசுவாசமும் வியப்பும், சனங்கள் மீது கொண்டுள்ள பற்று, இனப் பிடிப்பு, அதன் சிறப்புக் குறித்த, இருப்புக் குறித்த எண்ணங்களைப் பகிர்வது, எதிரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவேசம், கிடைக்கும் வெற்றித் தருணங்களின் கொண்டாட்டம், அது உண்டாக்கும் எழுச்சி என அமைந்தவை. இதில் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, அம்புலி இருவரும் முக்கியமானவர்கள். கூடவே மலைமகள், தமிழ்க்கவி, குணா கவியழகன், வசந்தன், கஸ்தூரி, மலரவன், தேவரண்ணா, கோளாவிலூர் கிங்ஸ்லி, சேந்தன், தூயவன் எனப் பலரைச் சொல்லலாம். இவர்கள் எல்லோரும் போராளிகள். 

இந்த இரண்டு அம்சங்களினதும் மைய நோக்கம் தமிழ்ச் சமூகத்தின் (அவர்களுடைய நோக்கில் தமிழினத்தின்) விடுதலையும்  மேன்மையுமாகும்.  

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு ஈழர் இலக்கியம் தமிழ்மொழியுலகில் ஒரு முக்கிய பேசுபொருள். தன்னை அது பலமுகங்களில் வெளிப்படுத்துகிறது. பல தரப்புக்குரல்களோடு பேச முனைகிறது. போர் இலக்கியம்”  பற்றிய உங்கள் கருதுகோள் என்ன?

கலையினதும் இலக்கியத்தினதும் பண்பே அதுதான், பல கோணங்களில், பலவிதங்களில், பலபரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. நீங்கள் சொல்வதைப்போல ஈழர் இலக்கியம் இப்பொழுது ஒரு முக்கியமான பேசுபொருளாகவும் பலருடைய கவனிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது என்றால், இதற்கு மூன்று காரணங்கள் இருக்க வேணும். ஒன்று, முன்னரையும் விட அது இப்பொழுது செழுமை கூடியிருக்கிறது என்ற அடிப்படையிலாக இருக்க வேணும். இதற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் என்ன என்பதையும் சேர்த்தே இதை நாம் பார்க்க வேண்டும். மற்றக் காரணம், ஈழத்தமிழர்களும் ஈழப்போராட்டமும் தோற்கடிக்கப்பட்டதனால் உண்டான பரிவு, நேசம், அதன் வழியான இரக்கம், அது உண்டாக்கும் ஆதரவு மனநிலை போன்றவை.

அடுத்தது, போராட்டத்தையும் அது நடந்த, நடத்தப்பட்ட விதத்தையும் விமர்சன பூர்வமாகப் பார்ப்பதனால் உண்டான கவனிப்பு. அதாவது என்ன நடந்திருக்கிறது என்று அறிகின்ற ஆர்வம் போன்றவை. இதைப் போர் இலக்கியம் என்பதற்குப் பதிலாக போர் எதிர்ப்பு இலக்கியம் என்றே கூறவேண்டும்.

karu3.jpg

ஆக இந்தக் காரணங்களையெல்லாம் நாம் பரிசீலித்துக் கொள்ள வேண்டும். விமர்சன ரீதியாக ஆய்வுக்குள்ளாக்க வேணும். அதன் பிறகே ஈழ இலக்கியத்துக்குக் கிடைத்து வரும் கவனிப்பைப் பற்றி, பெறுமானங்களைப் பற்றி நாம் திருப்திப்படலாம்.

இதற்கப்பால் போர் இலக்கியம் பற்றி என்னுடைய பார்வை.அதை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோம்? போர் இலக்கியம் என்பது என்ன? போரை ஆதரிக்கும் பிரதிகளா? அதை எதிர்க்கும் இலக்கியமா? இதுவரையான நம் போர் இலக்கியத்தில் பெரும்பாலான பிரதிகள் மறைமுகமாகப் போர் ஆதரவுப் பிரதிகளாகவே உள்ளன. போருக்கான நியாயத்தை வலியுறுத்துவனவாக.போரை எதிர்ப்பதாகப் பிரகடனப்படுத்தப்படும் பிரதிகளிலும் போரையும் போரின் சாகஸங்களையும் அதில் உண்டான இழப்புகளையும் தியாகத்தையும் உட்தொனிப்பில்  ஆதரிக்கின்றதையே உணரக்கூடியதாக உள்ளது. அதாவது எதிர்த்தரப்பான அரசினாலும் அரச படைகளினால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைச் சித்திரிப்பதாக, அநீதியைப் பேசுவதாக, அதனால் சனங்களுக்குண்டான அவலங்களை மீள் நினைவு படுத்துவனவாக. அப்படியென்றால் இத்தகைய வெளிப்பாட்டிலும் நுகர்விலும் (அதற்கான ஆதரவிலும்) நிகழ்ந்து கொண்டிருக்கும் உளநிலை என்னவாக உள்ளது? ஏதோ வகையில் பகையை வளர்த்தல்தானே. சினமூட்டல்தானே! இப்படிச் செய்யும்போது வன்மம்தானே பிறக்கும்?

உண்மையில் போர் எதிர்ப்பு இலக்கியம் என்பது போரில் ஈடுபட்ட தரப்புகள் உண்டாக்கிய  விளைவுகளைச் சொல்வதாக இருக்க வேண்டும். அவற்றின் உளநிலையை, அதனால்  மகத்தான மானுட வாழ்க்கையையும் இயற்கையையும் சீரழிக்கப்பட்டதைப் பேச வேண்டும். போரின் மூர்க்கத்தில் ஒளிந்திருக்கும் மூடத்தனத்தை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக, அந்தச் சிந்தனை உண்டாக்கிய விளைவுகளின் நிமித்தமாக அவற்றை நிராகரிப்பதாக அவற்றின் மீறல்களை எதிர்ப்பதுமாகவே இருக்க வேண்டும்.

ஆனால், நம்மை அறியாமலே நாம் இந்தப் பிரதிகளால் ஈர்க்கப்படுகிறோம். ஏனெனில் இவை பேசவிழையும் முரண்பாடு அல்லது போர் என்பதற்கு எப்போதும் பெருங்கவர்ச்சி உண்டு. ஈழப்போர் சாகஸங்கள் நிறைந்தது. அசாரணங்களையும் கற்பிதங்களையும் நிறையக் கொண்டது. இதெல்லாம் சேர்ந்து ஈழப் போரிலக்கியம் மீதான ஈடுபாட்டை தமிழ்மொழிச் சூழலில் உண்டாக்கியுள்ளது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய ஒரு உண்மையைக் குறிப்பிட வேண்டும். மேற்குறித்த இந்தப் போரிலக்கியப் பிரதிகள் குறித்து தமிழகத்திலே உண்டான கவனம் அளவுக்கு முஸ்லிம் சமூகத்திடமிருந்து எந்த விதமான அபிப்பிராயங்களும் பெரிய அளவில்  வந்ததில்லை. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது கண்டறியப்பட வேண்டும்.

உங்களுடைய முந்தைய காலக் கவிதைகளில் அதாவது புலிகளின் காலத்தில் நீங்கள் எழுதிய கவிதைகளில் இருந்த தேசியத்துவ குரல் இன்றைய கவிதைகளில் மறுதலிக்கப்பட்டு வருவதன் காரணம் என்ன? போர் தருவித்த படிப்பினை என்று கருதலாமா?

இது தவறு. அப்படி நான் உணரவேயில்லை. அப்படித் திட்டமிடவும் இல்லை. 1980 களின் தொடக்கத்திலிருந்து ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கும் சனங்களுக்கான நீதியைக் குறித்தே (சமூக நீதி உட்பட) சிந்தித்திருக்கிறேன். இப்போதும் அதையே – அந்த நோக்கிலேயே சிந்திக்கிறேன். என்னுடைய தொடக்ககாலக் கவிதைகளிலிருந்தே இந்தத் தொடர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். விரைவில் முழுமையான தொகுப்பொன்று வரச் சாத்தியமுள்ளது. அப்போது இதைத் துல்லியமாக உணரலாம். ஆனால், 2009 இல் யுத்தம் முடிவுற்றதற்குப் பின்பு தமிழ்ச் சமூகத்திடம் உருவாகிய   அரசியற்சூழலும், தன்மைகளும் மாறியதால் இதை நோக்கும் (நோக்குவோரின்) முறைமை (கண்ணாடி) மாறியிருக்கலாம்.

பின்வந்த பொதுநிலை அரசியல் போக்கும், அதன் தன்மையும் (புலிப்புராணம் பாடுதல் மட்டும்)  எதையும் எவரையும் மதிப்பிடுவதிலும், அடையாளம் காண்பதிலும் குழப்பங்களை உண்டாக்கியதென்பதை பலரிடத்திலும் பார்க்க முடிகிறது. இதனால்தான் அவர்கள் தவறான முடிவுகளுக்கும் பிழையான கற்பிதங்களுக்கும் உள்ளாகிறார்கள். இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால், இயக்கத்தில் இருந்தவர்களுக்கும் இயக்கத்தோடிருந்தவர்களுக்கும் உள்ள நெருக்கடிகளை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து உயிர்ப் பாதுகாப்பு, சமூகம் நடத்த முற்படும் விதம்  போன்றவற்றினால் உண்டாகும் உள நெருக்கடிகளையும் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் கணிக்க முற்பட மாட்டார்கள். உங்களுடைய இந்தக் கேள்வியும் அத்தகையை பொது அவதானிப்பின் வழியாகவே உருவாகியிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. இல்லையென்றால், என்னுடைய மாறுபடுதலை – முரணை – நீங்கள் அடையாளப்படுத்த வேணும்.

மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். விடுதலைக்காகப் போராடும் மக்களிடமிருந்து எந்த நிலையிலிருந்தும் என்னுடைய உறவும் சிந்தனையும் மாறியதுமில்லை. விலகியதுமில்லை. தாமே தலைமை என்று சொல்லிக்கொண்டு பல தரப்புகள் வரலாம் போகலாம். அது பற்றிய கரிசனைகள் எனக்கில்லை. சனங்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்களுடனே நானும் ஒருவனாக இருப்பேன்.

தவிர, படிப்பினைகளை மையப்படுத்திய சிந்தனை, போரின்போதான, போருக்குப் பிந்திய  என்னுடைய கவிதைகளில் ஆழமாக வெளிப்பட்டுள்ளது என்பது உண்மையே. வரலாற்றனுபவங்களையும், சனங்களின் எதிர்காலத்தையும் (மனித நேயத்தையும்) குறித்துச் சிந்திக்கும் எவருக்கும் இது தவிர்க்க முடியாதது. குறிப்பாக உலகளாவிய போரனுபவங்கள் போர் மறுதலிப்புக்கே கொண்டு சென்றிருக்கின்றன.

இங்கே இன்னொன்றையும் இதற்கு ஆதரமாகச் சொல்ல வேண்டும். 1980 களின் நடுப்பகுதியில் “மரணத்துள் வாழ்வோம்” வந்ததைப்போல இப்போது ஒரு பிரதி தமிழ்மொழிச் சமூகங்களிடமிருந்து ஒருமித்து வரக்கூடிய சாத்தியமுண்டா? 1990 களுக்குப் பிறகே இன ஒடுக்குமுறை உச்சமடைந்து பேரவலங்கள் நிகழ்ந்தன. ஆனாலும் அதைப்போல இன்னொரு தொகுதி வரவேயில்லையே. பதிலாக மீசான்கட்டைப் பாடல்கள், யுத்தத்தைத் தின்போம் போன்றனவே வந்திருக்கின்றன. அப்படி வந்தாலும் அதில் மரணத்தில் வாழ்வோமில் பங்கேற்றதைப்போல தமிழ், முஸ்லிம், மலையகப்படைப்பாளிகளும் ஒருமித்திருப்பர் என்பதற்கில்லை. அந்தளவுக்கு நோக்கு நிலைகளும் மையங்களும் மாறி விட்டன. 

போர் அனுபவங்கள் போரை மறுதலிக்கும் பண்புக்கு இட்டுச்சென்று இருக்கிறது. அது உண்மைதான். ஆனால் நான் கேட்பது உங்கள் போர் மறுதலிப்பு பற்றியல்ல, தேசியத்துவ மறுதலிப்பு தொடர்பானது. இன்றைக்கும் நீங்கள்  தமிழ்த்தேசியக் கருத்தியலை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இதற்குரிய பதிலை முதற்கேள்விக்கான பதிலில் சொல்லி விட்டேன். மீண்டும் சொல்லத்தான் வேணும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ்த்தேசியம் என்பது என்ன? இன்று பொது வழக்கிலும் பொது உணர் தளத்திலும் உள்ள தமிழ்த்தேசியம் என்ற கருதுகோள் மீது எனக்குக் கடுமையான விமர்சனம் உண்டு. “கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் பிரயோக நிலையில் அல்லது கருத்து நிலையில் இப்போதுள்ளது தமிழ்த்தேசியம் அல்ல. இது தமிழ் இனவாதமாகும்”. எனவேதான் அது மற்றமைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குறுந்தேசியமாகவே உள்ளது. இதற்குள் ஜனநாயகத்திற்கும் பன்மைத்துவத்திற்கும் இடமில்லை. ஜனநாயக நெறிமுறைச் செயற்பாடுகளின் வழியேதான் தனக்குரிய தேசியத் தன்மையைக் கட்டமைக்க முடியும் என்ற புரிதல் இல்லை. இந்தத் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவோரும் முன்னெடுப்போரும் பல இடங்களிலும் திறந்த மனதோடில்லை. ஜனநாயகவாதிகளாக இல்லை என்று கூறி வருகிறேன். “இதை மாற்றித் தமிழ்த்தேசியத்தை வளப்படுத்த வேண்டுமானால் அதைப் பன்முகத் தன்மையோடும் ஜனநாயக அடிப்படைகளோடும் நெகிழ வைக்க வேண்டும். அதற்கான உறுதிப்பாட்டோடு முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம்களையும், மலையக மக்களையும் சமநிலையில் பேணுவதற்குக் கரிசனை கொள்ள வேணும். சிங்கள மக்களைப் பகை நிலையில் பார்க்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். சாதிய, பிரதேச, பால் வேறுபாடுகளை நீக்க வேண்டும்” என்கிறேன்.

ஒரு சமூகம் எந்த அடையாளத்தின் பொருட்டும் (அது இனமாகவோ, சாதியமாகவோ, பால், வயது அல்லது பிராய ரீதியாகவோ) ஒடுக்கப்பட்டால் அவர்களோடு நானிருப்பேன். அவர்களுடைய நியாயமான அரசியல் போராட்டங்களோடு இணைந்திருப்பேன். அதுதான் என் திசையும், வழியுமாகும். இதில் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் உள்ளடங்கும். இனம், மதம், மொழி, பால், சாதி, வயது, பிரதேசம் என அனைத்தும். இதற்குரிய ஜனநாயகத் தன்மையும் பன்மைத்துவமும் இல்லை என்றால் அதை நான் எதிர்ப்பேன். விமர்சிப்பேன். திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து உத்தரிக்க முடியாது.

முஸ்லிம்களையும், மலையக மக்களையும் சமநிலையில் பேணுவதற்குக் கரிசனை கொள்வதில் தமிழ்தேசியக் கருத்தியலுக்கும், செயற்பாட்டிற்கும் தயக்கமிருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால் இன்றைக்கும் முஸ்லீம் தரப்பும், தமிழ் தரப்பும் இணைந்து கொள்ள எவ்வளவு விருப்புடன் இருக்கின்றன  எனவும் ஆராய வேண்டும். மேலும் சிங்கள மக்களைப் பகை நிலையில் பார்க்கும் நிலையிலிருந்து தமிழ் மனநிலை விடுபட வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இது இருதரப்பிடமும் இருக்கக்கூடிய வரலாற்றுச் சிக்கல். சிங்கள மக்கள் அனைவரையும் பகைநிலையில் வைத்து தமிழர்கள் பார்க்கிறார்கள் எனக் கூறிவிட முடியாது. மாறாக தமிழ்ப் பொதுசனங்களை பகைநிலையில் பார்க்கிற சிங்கள மஹாவம்ச மனநிலை குறித்து நாம் இப்போதும் யாரிடமும் நொந்து கொள்ள முடியாதல்லவா?

தனக்குள்ளேயே சமூக நீதியை வழங்க முடியாத யோக்கியத்தில்(யோக்கியதையில்) உள்ளது, நீங்கள் குறிப்பிடுகின்ற தமி்ழ்த்தேசியம். இல்லையென்றால் சாதியம் இன்று மீளெழுச்சி கொள்ளுமா? பெண்களுக்கான நீதியின்மை இன்னும் நீடிக்குமா? பிரதேச ரீதியான பிளவுகள் வலுத்துக் கொண்டிருக்குமா? மலையக மக்களை அங்கீகரிக்காதிருக்குமா?

karu4.jpg

சட்டம் பிளவுபடுத்தியதை விடவும், சமூக நிலவரங்களே வடக்குக் கிழக்குப் பிளவை அதிகரிக்கச் செய்கின்றன. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழர்களிலும் கணிசமான தொகையினர் வடக்குக் கிழக்கு இணைவை இப்பொழுது விரும்பவில்லை. அரசாங்கம் இன்று வடக்குக் கிழக்கை இணைத்தாலும் இவர்கள் எதிர்க்கும் நிலை உண்டு. தமிழ்ச் சமூகத்திற்குள்ளேயே இப்படி நிலவரமிருக்கும்போது நீங்கள் சொல்கிறீர்கள், முஸ்லிம்களையும், மலையக மக்களையும் தமிழ்த்தேசியம் கட்டியணைத்து முத்தம் கொடுப்பதற்குச் சித்தமாக இருக்கிறது என்று.  இதையிட்டுச் சிரிக்கத்தான் முடியும்.

வடக்கு நோக்கி வந்த மலையக மக்களைப் பற்றி, வடக்கி்ல் அவர்களுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலமை பற்றி ஒரு கருத்தரங்கோ, ஆய்வரங்கோ தமிழ்த் தரப்பினால் இதுவரையில் செய்ய முடிந்ததில்லை. பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுகளில்கூட இது உள்ளடக்கப்படவில்லை. ஏனிது நடக்கவில்லை? காரணம், இந்த மக்களைப் பற்றி, இந்தச் சமூகத்தைப்பற்றி அக்கறைப்பட வேண்டியதில்லை என்ற மேலாதிக்க எண்ணம்தானே! இந்த மக்களுடைய மரபுரிமைகளைப் பற்றி யார் பேசியிருக்கிறார்கள்? எப்படிப் பேசியிருக்கிறார்கள்? மட்டுமல்ல, ஆயுதப் போராட்டத்தில் பெரும்பங்களிப்பைச் செய்த இந்த மக்களிடமிருந்து இன்றைய  அரசியலுக்கு எத்தனை பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது? இந்த மக்கள் வாழுமிடங்களின் முன்னேற்றம் எப்படியுள்ளது? அங்கெல்லாம் வேறுபாடு காட்டப்படாமல், புறக்கணிக்கப்படாமல் சமனிலை பேணப்படுகிறதா? அல்லது இந்தக் கட்சிகளின் ஒரு பணிமனையாவது இந்த மக்களுடைய பகுதிகளில் உண்டா?

மலையகத்திலே உள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தயாராக இருக்கும் இந்தத் தலைவர்கள், மலையகத் தலைவர்களோடு கூடிக்குலவும் தமிழ்த் தலைமைகள், தங்கள் காலடியிலிருக்கு்ம் இந்த மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசவோ, தீர்வு காணவோ ஆர்வம் கொள்வதில்லை. தமிழகத்திலிருந்து திருமாவளவனோ, பாரதிராஜாவோ, சீமானோ வந்தால் அவர்களை வரவேற்றுக் கொண்டாடத் தயாராக இருக்கும் தமிழ்த்தேசியர்கள்(?) தங்களுக்குப் பக்கத்திலிருக்கும் இந்த மக்களைப் பாராட்டவும், பாதுகாக்கவும் தயாரில்லை. இதுதான் இவர்களுடைய லட்சணம்.

இந்த நிலையில் காயங்கள், வடுக்கள் அதனால் உண்டான பகைமை உணர்வு போன்றவற்றோடிருக்கும் முஸ்லிம் தரப்பு எப்படித் தமிழ்த்தரப்போடு இணங்கும் என எதிர்பார்க்க முடியும்? தவிர, தமிழ்த் தரப்போடு முஸ்லிம்கள் இணைய வேண்டும் என்று கேட்பதே ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே. இதேபோலத் தானே சிங்களத் தரப்பிலிருந்தும் தமிழ்த் தரப்பை நோக்கி அழைப்பு விடுக்கப்படுகிறது.

இது மேலாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு. மாறாக இங்கே வேண்டுவது நீங்கள் குறிப்பிடுவதைப்போல பரஸ்பரம் இணைந்து கொள்ளும் உறவு நிலை. யாரோடு யார் என்று யோசிப்பதல்ல. இரு தரப்பும் பரஸ்பரமாகுதல் என்று சிந்திக்கும் உறவு நிலை. இதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். பல வழிகளிலும் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும். குற்றச்சாட்டுகளின் மூலம் வரலாற்றுக் காயங்களையும், கறைகளையும் புதுப்பிக்க முடியுமே தவிர, அழிக்கவோ  கடக்கவோ முடியாது. நான் தமிழ்ச் சமூகத்தில் உள்ளவன் என்பதால் என் பொறுப்பைப் பற்றியே அதிகமாகச் சொல்ல முடியும். அதைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.

இது அறிவின் யுகம். முஸ்லிம் சமூகத்திடமும் பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்கின்றன. அதன் வழியே மீள் பரிசீலனைகள், சுய விசாரணைகளை அவர்களும் செய்கிறார்கள். இப்படி இருதரப்பினரும் கூடி எதிர்காலத்தை நெகிழ்த்த வேண்டும். அதைச் செய்தால் நம்புவதற்குக் கடினமான நற்காரியங்கள் பலவும் நடந்தே தீரும். யுத்தம் எல்லோருக்கும் அழிவைத் தந்தது. அது நல்ல படிப்பினையையும் தந்திருக்கிறது. முக்கியமாக 2009 க்கு முன்னிருந்த நிலை இப்போதில்லை. இப்பொழுது தமிழ்ச் சமூகமும், முஸ்லிம் சமூகமும் நெருங்கி வரவேண்டிய சூழலை சிங்கள அதிகாரத் தரப்பு உருவாக்கியிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது இரண்டு சமூகங்களுக்கும் உரிய வரலாற்றுத் தருணம். இந்தச் சமூகங்களின் அரசியல்வாதிகள் இதைச் செய்யப் போவதில்லை. இடைவெளியைக் குறைத்து, எரியும் பகையை அணைத்துத் தங்களுடைய பிழைப்பில் தாங்களே மண்ணள்ளிப் போடப் போவதில்லை அவர்கள். ஆகவேதான் நாம் இந்த  அரசியல்வாதிகளின் சிந்தனைக்கு மாறாகச் சிந்திக்க வேண்டும் என்கிறேன். அவர்களுடைய வழியில் நாமும் சிந்தித்தால் அழிவைத் தவிர வேறொன்றில்லை.

இதற்கு மேல் சிங்களத் தரப்புக்கும் தமிழ்த் தரப்புக்குமுள்ள உறவையும் புரிதலையும் பற்றிச் சொல்லத்தான் வேணுமா? வரலாறு முழுவதும் ஏட்டிக்குப் போட்டியாக எதிர்ப்புணர்வும் பகைமையும் ஆளும் சக்திகளால் உருவாக்கிப் பேணப்பட்டு வருகிறது. சிங்களத் தரப்பு துட்ட கெமுனு, சிங்கவாகு என்றால், தமிழ்த்தரப்பு எல்லாளன், பண்டார வன்னியன் என்று தொடங்கும். அவர்கள் மஹாவசம்சத்தை தமது அரசியல் மேலாதிக்க நலன்களுக்குப் பயன்படுத்தினால் தமிழ்த்தரப்பு தனது சமூக மேலாதிக்கத்துக்கு ஆண்ட பரம்பரைக் கதைகளைப் பயன்படுத்துகிறது. சனங்கள் இதையெல்லாம் விழுங்கிவிட்டு ஆளையாள் பகைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தேகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வதைப் போல ஏகப்பட்ட சிக்கல்களால் பின்னப்பட்டது இலங்கைச் சமூகங்களின் பிரச்சினை. இவற்றை அறிவின் துணைகொண்டு, சகிப்புணர்வின் வழியில் மட்டுமே கடந்து செல்ல முடியும். வேறு வழியே இல்லை. இதை விடுத்துச் சவால் விட்டால் எதிர்ச்சவாலை எதிர்த்தரப்பும் செய்யும். அப்போது அவர்கள் நமக்கானவற்றையும் தமக்கென்றே ஆக்க முனைவர். இதுதான் உலக வழமை. இன்று அடித்துப் பெறுகின்ற வழிகள் சாத்தியமற்றது என்பது நம் படிப்பினையும் நமக்கு முன்னுள்ள யதார்த்தமுமாகும். அப்படியென்றால் வேறு என்னதான் வழி? சரணடைவதா? கீழ்ப்படிவதா? கெஞ்சிப்பெறுவதா என்றெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள். இல்லை. நிச்சயமாக இல்லை. குறைந்தபட்சமும், கூடிய பட்சமுமாக ஆதிக்கத்தைச் செலுத்துவோரிடத்தில் குற்றவுணர்வை ஏற்படுத்துவதும் அவர்களுடைய அகவிழியைத் திறப்பதும்தான் நமது வேலை. அவர்களுடைய ஆன்மாவோடு உரையாட வேண்டும். அதற்கான அத்தனை வேலைகளையும் நாம் மிக நிதானத்தோடும், பொறுமையோடும் செய்ய வேண்டும். அதுவே நாம் செய்யக் கூடியது. செய்ய வேண்டுவதும் இதுவே. இதன் வழியாக அவர்களின் மனச்சாட்சியின் முன்னே அவர்களைத் தலைகுனிய வைப்பது. நாம் தவறானவர்களாகச் செயற்பட்டால் அதற்காக நாமும் தலைகுனிந்தே தீரவேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டாலே பாதித்தூரத்தைக் கடந்தததற்குச் சமம்.

ஒரு விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்து, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்லாமல் அவர்களின் கலை இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர் நீங்கள். புலிகள் இயக்கத்தின் மீது முன்வைக்கப்படும் ஊடக அடக்குமுறைக் குற்றச்சாட்டுக்களுக்கான உங்கள் கருத்து என்ன?

karu.jpg

தங்களுக்கு எதிரான அல்லது தமக்கிசைவற்ற கருத்துகளை விரும்பாத, எதிர்க்கின்ற போக்கு தமிழ்ச் சமூகத்தின் பொதுக்குணமாகும். மிக அருந்தலான? விலக்குகளிருக்கலாம். மற்றபடி “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொன்ன பரம்பரை நமதென்று சொல்வதெல்லாம் தமிழ் மனதின் பசப்பு வார்த்தைகளே தவிர, மனமேற்ற சத்தியமல்ல.

எனவேதான் அரசியலில் மட்டுமல்ல, நிர்வாகம், கலை இலக்கியம் என எதிலும் சிறு  விமர்சனத்தை முன்வைத்தால் கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அதன் அடிப்படையில் தம்மைப் பரிசீலிக்கவோ தயாரற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் குடும்பம், பாடசாலை என தமிழ்ச் சமூகமே விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத, அதை விரும்பாத ஜனநாயக மறுப்புச் சமூகமாக உள்ளது. இந்த லட்சணத்தில்தான் நாம் பிறர் மீது விரலை நீட்டுகிறோம்.

எனவே விமர்சனங்களையும் மறு கருத்துகளையும் அவரவர் தாம் கொண்டிருந்த பலத்தின் வழியே எதிர் கொண்டனர், எதிர் கொள்கின்றனர். புலிகளும் அவ்வாறே. அவர்கள் வேறு யாருமல்லரே. தமிழ்ச்சமூகத்தின் அதே குணவியல்பைப் பிரதிபலித்தோரே.

மற்றபடி எதிர்த்தரப்புக்கும் ஒரு நியாயமுண்டு. ஒரு அடிப்படை உண்டு. ஒரு தர்க்கம் உண்டு. அவர்களுடைய கருத்துக்கும் அபிப்பிராயத்துக்கும் செயற்பாட்டுக்கும் இடமளிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பெரும்பாலான தமிழர்களிடமும் இல்லை. தமக்கு உடன்பாடில்லாதவற்றை உடனடியாகவே மறுதலிப்பது அல்லது நிராகரிப்பது அல்லது சந்தேகிப்பது, துரோகிகள் என அடையாளப்படுத்துவது என்றவாறான மனநிலையே பலரிடத்திலும் உண்டு.  புலம்பெயர்ந்து ஜனநாயகம் மேம்பட்ட நாடுகளில் வாழ்கின்றவர்களிடத்திலும் கூட இந்தப் பிழைச்சிந்தனையே வாழ்கிறது. மாறாக யாரிடத்திலும்  வளர்நிலையைக் காண முடியவில்லை. இதெல்லாம் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் தடையானவை.

சாதிய நோய்மை மீண்டும் ஈழத்தமிழர் வாழ்விற்குள் கூர்மை கொண்டு வருவதனை நினைத்து அருவருக்கும் காலமிது. தீண்டாமையைப் பேணும் அளவிற்கு சாதியின் கோரம் தனது கரங்களை நீட்டியிருக்கிறது. இது தொடர்பாக இன்றைக்கிருக்கும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க முன்வருகின்றனரா? அல்லது அதனையும் தமது அரசியல் லாப நட்டங்களுக்காக வேடிக்கை பார்க்கின்றனரா?

“சாதிய நோய்மை மீண்டும் ஈழத்தமிழர் வாழ்விற்குள் கூர்மை கொண்டு வருவதனை நினைத்து அருவருக்கும் காலமிது”

“தீண்டாமையை பேணும் அளவிற்கு சாதியின் கோரம் தனது கரங்களை நீட்டியிருக்கிறது”

மேலே நீங்கள் குறிப்பிட்ட விடயங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்றுபடுகிறது. ஒன்று, சாதிய நோயைக் கண்டு அருவருப்பது என்றால், சாதியத்துக்கு எதிரான உணர்வும் நிலைப்பாடுகளுமே சமூகத்தில் கூர்மையடைந்திருக்க வேணும் அல்லவா! ஆனால், அப்படி நிகழவே இல்லை. பதிலாக சாதிய மனநிலையே துரித வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போக்குக்கு எதிரான சில விலக்குகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது மிகச்சிறிய தரப்பு அல்லது சிறு வட்டங்கள்.

எனவேதான் நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு இரண்டாவது விசயமான “தீண்டாமையை பேணும் அளவிற்கு சாதியின் கோரம் தனது கரங்களை நீட்டியிருக்கிறது” என்பது நடைமுறையாகியுள்ளது. இந்தப்போக்கு முன்னரை விடவும் உக்கிரமாக, வேகமாக வளர்ச்சியடைந்தும் வருகிறது. கோயில்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலேயே தீண்டாமையும், விலக்கும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. அரச நிர்வாகங்களில் தலையெடுக்கிறது. இந்தத் தீய போக்கினை எதிர்ப்பதற்கு எந்த வலுவான தரப்பும், கட்டமைப்பும் இன்றில்லை என்பதால் அது தீண்டாமை என்ற நிலைக்குத் தாவி மேலேறிக் கொண்டிருக்கிறது.

இதையும் சேர்த்துத்தானா தமிழ்த்தேசியம்(?) பயணிக்கிறது என்பதே என்னுடைய விமர்சனமும் கேள்வியுமாகும்.

தமிழ் அடையாள (தமிழ்த்தேசிய) அரசியலை முன்னெடுப்போர் இதைக் குறித்தெல்லாம் பேசுவதோ, கண்டு கொள்வதோ இல்லை. அவர்களே இந்தப்போக்குடன் இணங்கியும் முயங்கியும்தானே செயற்படுகின்றனர். மிகக்கேவலமான விசயம், தேர்தல் அரசியலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சூதான முறையில் சாதீய ரீதியாக வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இதற்குப் பலியாகின்றவர்களும் உண்டு என்பதால்தான் சாதிப் பிரிவினைகளும் சாதிய மனநிலையும் மீண்டும் மோசமாக – துணிச்சலோடு வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்த காலத்தில் புலிகள் இயக்கம் வேறு மாதிரி நடந்து கொண்டிருக்கலாம் என்று நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. நீங்கள் முப்பதாண்டு கால யுத்த வாழ்விற்குள் இருந்தவர். பேரூழியை எதிர் கொண்டவர். இந்த விமர்சனம் தொடர்பாக நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

இறுதிக்கட்ட யுத்த காலத்தில் அல்லது யுத்த முடிவுக்குப் பிறகு, புலிகளுடைய தோல்விக்குப் பிறகுதான் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றில்லை. புலிகள் போராடிக் கொண்டிருந்த போதே அவர்களுடைய போராட்ட முறைமை, அரசியல் சிந்தனை மீது தமிழ்த் தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புகளும் காட்டப்பட்டன. அவர்கள் தோல்வியைக் கண்ட பிறகு இது இன்னும் கூடியிருக்கிறது. ஆகவே இதொன்றும் புதியதல்ல.

இதில் இன்னொரு பார்வையும் உண்டு.

புலிகள் வெற்றியடைந்திருந்தால் இந்த விமர்சனங்கள் எல்லாம் எப்படியிருந்திருக்கும் என்பது அது.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால், நாம் விஞ்ஞானபூர்வமாகப் பார்க்க வேண்டிய பல விசயங்கள் உண்டு. எல்லாப் போராட்டங்களும் வெற்றியடைவதில்லை. தோற்றுப் போனவைகளே அதிகம். ஆனால், மக்கள் தோற்கடிக்கப்படாமல் தொடர்ந்தும் தமக்குரிய விடுதலை அரசியலை முன்னெடுக்கக்கூடிய திறன்களும், அடிப்படைகளும் பேணப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட வேணும். குறைந்த பட்சம் கடந்த காலத்தைப் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய திராணியும், விளக்கமும் இருந்திருக்க வேண்டும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கே அது நிகழவில்லை. இதுதான் பிரச்சினை. புலிகளால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அல்லது புலிகளின் தொடர்ச்சியாக அல்லது அவர்களுடைய நிழலாக இன்றுள்ள தமிழ்த் தலைமைகள் மேலும் மேலும் வீழ்ச்சியடையும் அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றன என்பதால்தான் புலிகள் மீதான விமர்சனம் இன்னும் கூர்மையாகிறது. வரலாற்றில் இது மேலும் கூராகவே போகிறது.

இதேவேளை புலிகள் கொஞ்சம் வேறுபட்டுச் சிந்தித்திருந்தால் இன்று நிலைமையே வேறு. ஆனால், அவர்களால் அப்படிச் சிந்திக்க முடியாது. அதுதான் புலிகள். அவர்களுடைய வழிமுறை மாறிச் சிந்திக்க முடியாதது.

இன்றைக்கு களத்தில் உள்ள எந்த தமிழ் தலைமையை நீங்கள் புலிகளின் தொடர்ச்சியாக – நிழலாக அடையாளப்படுத்த எண்ணுகிறீர்கள்? வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் என்பது தற்செயலானதோ, அல்லது அறிவின்மை என்றோ நீங்கள் நம்புகிறீர்களா? மிதவாத அரசியலாளர்களின் தொழில்முறை அரசியல் நடவடிக்கைகளை முன்வைத்து எப்படி ஒரு விடுதலை இயக்கத்தின் மீதான விமர்சனத்தை நீட்டிக்க இயலுமென்று கூறுங்களேன்?

புலிகளின் தொடர்ச்சியாக நான் யாரையும் அடையாளம் காணவுமில்லை. அந்த அடிப்படையில் அடையாளப்படுத்தவும் மாட்டேன். அப்படிச் செய்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஏனென்றால் புலிகள் வேறு. இவர்கள் வேறு. சரி, பிழைகளுக்கப்பால் புலிகள் ஒரு நடைமுறை அமைப்பு. வலுவான செயற்பாட்டியக்கம். தங்களை முழுமையாகவே இழக்கத் தயாரான தரப்பு. அதில் இருந்தவர்கள் செயலூக்கமுடையோர். இவையோ வெற்று டப்பாக்கள். உக்கிய தாள்கள்.  செயலின்மையில் சரணாகதியடைந்தவர்கள். வெறும் வாய்ச்சொல்லாளர்கள். போலிகள்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால், இப்போதுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்றவையெல்லாம் தம்மைத்தாமே புலிகளின் தொடர்ச்சி என்று அடையாளப்படுத்த முயற்சிக்கின்றன. இந்தக் கட்சிகளை ஆதரிப்போரும் இதையே ஏற்றுக் கொண்டுள்ளனர். இதிலே ஆகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் புலிகளையும் ஆதரிக்கின்றனர். இந்த டப்பாக்களையும் ஆதரிக்கின்றனர் என்பது. இதைவிடக் கொடுமை வேறென்னவுண்டு? கேட்டால், வேறு யாரை நாம் ஆதரிக்க முடியும்? என்று மறுகேள்வி எழுப்புகிறார்கள். புதிதொன்றைக் காணத் திராணியற்றவர்கள் இப்படித்தான் சிந்திப்பர். எனவேதான் “புலிகளின் தொடர்ச்சியாக அல்லது அவர்களுடைய நிழலாக இன்றுள்ள தமிழ் அடையாளத் தலைமைகள்” என்று குறிப்பிட்டேனே தவிர, புலிகளின் மறு அடையாளமாக அல்ல.

வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் அரசியலை புலிகளுக்கு முன் அல்லது ஒட்டு மொத்த விடுதலை இயக்கங்களுக்கு முன்பே அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றின் தமிழ் மிதவாதத் தலைமைகள் செய்து வந்தன. இயக்கங்களின் காலத்திலேயே செயற்பாட்டரசியல் உருவாகியது. பலமாகியது. இன்றிருக்கும்  மாகாணசபை கூட அந்தச் செயற்பாட்டரசியலின் விளைவான ஒன்றே.

இயக்கங்கள் வலுவிழந்த பிறகு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் மிதவாதத் தலைமைகள் மேலெழுந்து, இந்த வீழ்ச்சி அரசியலைச் செய்யத் தொடங்கியுள்ளன. இது மேற்தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரமுகர் அரசியல் வழிமுறையின் பாற்பட்டது. சனங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. ஒருவகையில் இது சனங்களின் மீது  திணிக்கப்படும் அதிகாரத்துவ அரசியல். இதில் தமிழ் ஊடகங்களும் மிக மோசமான குற்றமிழைக்கின்றன. அவையே மக்களை மயக்கி ஏமாற்றுவதற்கான ஒத்துழைப்பைச் செய்கின்றன. பத்தியாளர்களும் இதில் சேர்த்தி.

தவிர, மிதவாத அரசியலாளர்களின் (லாபமீட்டும்) தொழில்முறை அரசியல் நடவடிக்கைகளை முன்வைத்து விடுதலை இயக்கத்தின் மீதான விமர்சனத்தை ஏன் நீட்டிக்க வேண்டியிருக்கிறது என்றால், இதை எதிர்த்த புலிகளும் ஒரு கட்டத்தில் இதே மிதவாதத் தலைமைகளிடம் சரணடைந்தனர் என்பதாகும். அவர்களுடைய தெரிவாக இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, உதயசூரியன் சின்னம், பிறகு தமிழரசுக் கட்சி, வீட்டுச் சின்னம்) இருந்தது என்பதும் அபத்தமே. அதாவது அவர்கள் நிராகரித்த தரப்பையே இறுதியில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டமை என்பது ஒரு வகையில் வீழ்ச்சியே. அந்த வீழ்ச்சியே இன்றைய சீரழிவின் அடையாளம்.

புலிகள் இயக்கம் மிதவாத தலைமைகளிடம் சரணடைந்தது என்ற  இந்தக் கூற்றுக்கு என்ன அரசியல் அடிப்படை இருக்கிறது? தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது அபத்தம் என நீங்கள் கூறுகிறீர்களா?

இதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சனங்கள் கூட்டமைப்பை எத்தனை விதமாகக் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? 2010 தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனங்களையும், தவறுகளையும் அதனுடைய பொய்த் தோற்றத்தையும் சொல்லி வருகிறேன். அப்போது என்னுடைய கருத்தை ஏற்க மறுத்த பலர் இப்போது முன்னணியில் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கின்றனர். கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை விளங்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. சிலருக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது என்பது தமிழரசுக் கட்சியிடம் சரணடைந்ததேயாகும். இது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கடந்த காலத்திற்குப் பின்னிழுத்துச் சென்றதேயாகும். இது சரியென்றால் இடையில் நடந்த போராட்டத்திற்கு என்ன அர்த்தம்? எதற்காக இத்தனை கால இழுபறி? ஏனிந்தப் பேரிழப்புகள்? ஏனித்தனை தியாகங்கள்?

எல்லாவற்றுக்கும் அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதை வெற்றியடைய வைத்தது புலிகள் என்பது பகிரங்கமான உண்மை. அப்படியான அடையாளத்தைக் கொண்ட கூட்டமைப்பானது புலிகள் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தபோது அவர்களைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்தது? குறைந்தபட்சம் அதிலிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது எதிர்ப்பு நடவடிக்கையாக ஏதாவது செய்தனரா? குறைந்த பட்சம்  உண்ணாவிரதமாவது இருந்து தங்களுடைய அடையாள எதிர்ப்பை வெளிப்படுத்தினார்களா? அல்லது அத்தனை பேரும் கூட்டாகப் பதவிகளைத் துறந்து எதிர்ப்பைக் காட்டி அரசுக்கு நெருக்கடியை உருவாக்கினார்களா? அல்லது பெருந்திரளாக நின்று ஆதரவளி்த்து வெற்றியீட்டிக் கொடுத்த மக்களை மீட்பதிலாவது பங்காற்றினார்களா? வெறுமனே அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு வாழாதிருந்தனர் எல்லோரும். நெருக்கடிகளில் ஒரு அரசியல் இயக்கம் இப்படியா செயற்படுவது? இப்படித்தானா நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பது? இப்போது அரசியற்(ல்) கைதிகளாக இருப்பவர்களில் யாராவது ஒருவராவது இந்த மிதவாதத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களா? அல்லது இந்தக் கைதிகளின் விடுதலைக்கு ஆக்கபூர்வமாக எதையாவது செய்கிறார்களா? இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

தமிழர்களுக்கும் – முஸ்லிம்களுக்கும் இடையே ஏராளமான கசப்பான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. நடந்தபடியுமுள்ளன. “யாழ் வெளியேற்றம்”, காத்தான்குடி படுகொலை” போன்ற வரலாற்றுத் துயர் மிக்க தருணங்களுக்காக தமிழ் தரப்பினர் தமது கண்டனங்களையும் மன்னிப்பையும் இன்றுவரை முன்வைத்தபடியுள்ளனர். ஆனாலும் முஸ்லிம் அறிவுலகத் தரப்பில் இதுபோன்ற ஒரு பண்பு இன்னும் கூட்டாக எழவில்லை, மாறாக தமிழ்த்தரப்பின் மன்னிப்புக் கேட்டலே கண்துடைப்பு என்று முஸ்லிம் அறிவுலகத்திலிருந்து எழும் குரல்களை எவ்வாறு அணுகுகிறீர்கள்?

தமிழ்த் தரப்பின் மன்னிப்பைக் குறித்த கேள்விகள் எனக்குண்டு. 

karu-6.jpg

எளிதில் கடந்து செல்வதற்கு நடந்தவை எவையும் எளிய நிகழ்வுகளல்ல. மன்னிப்பை முன்வைப்பது என்றால் வெறும் வார்த்தைகளை முன்வைப்பது, ஊடகங்களில் அறிக்கையிடுவது என்பதோடு முடிவதல்ல. அது அதற்கும் அப்பால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் தேடுவது தொடக்கம், பாதிக்கப்பட்ட சமூத்தின் – தரப்பின் ஆன்மாவைச் சென்று தொடுவது வரையில் இருக்க வேண்டும். அந்த விசுவாசமும் நேர்மையும் அதற்கான அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் அவசியம். 

உதாரணமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீளவும் அவர்களின் இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் விசுவாசமாகவும், அர்ப்பணிப்போடும் தமிழ்த்தரப்பிலிருந்து யார் வேலை செய்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்ட ஈட்டை வழங்குவதைப் பற்றி யார் சிந்தித்தனர்? அல்லது அதற்கான பொறுப்பளித்தலை எவர் செய்துள்ளனர்? குறைந்த பட்சம் அவர்களிருக்கும் இடங்களைத் தேடிச்சென்று யாராவது உரையாடியிருக்கிறார்களா? யுத்த முடிவுக்குப் பிறகு எத்தனை தமிழ் ஊடகவியலாளர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைச் சென்று அவர்கள் இருக்குமிடங்களில் சந்தித்து அறிக்கையிட்டிருக்கிறார்கள்? பல்கலைக்கழக மாணவர்களோ, அந்தச் சமூகத்தினரோ அங்கே எப்போதாவது சென்றிருக்கிறார்களா? அந்த மக்களின் நிலையைக் குறித்து ஏதாவது ஆய்வுகள், மதிப்பீடுகள் நடந்துள்ளனவா?

எனவே முதலில் இதைச் சரியாகச் செய்து கொண்டு பிறகு மற்றவர்களைப் பார்க்கலாம். அப்பொழுது முஸ்லிம் தரப்பிலிருந்தும் இதற்கான சம்மதக்குரல்கள் எழும். நடந்த துயரச் சம்பவங்களைக் குறித்து வருத்தப்படுகின்ற பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை நானறிவேன். அவர்கள் துக்கத்தாலும் வெட்கத்தாலும் நாணுகின்றனர். எனவே இது ஒன்றும் ஏட்டிக்குப் போட்டியாக கையாளும் விடயமல்ல. மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் முன்னெடுக்க வேண்டிய செயல். ஒரு குடும்பத்தில் உள்ளதைப்போல பேச வேண்டியதைப் பேசுவதும் பேசாமல் விட வேண்டியவற்றைப் புரிந்துணர்வோடு கடந்து செல்வதும் இரு சமூகங்களுக்குமுரியது.

“ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்”, “எரிகாலம்” போன்ற கவிதைகளின் சில வரிகள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. ஞாபகத்தில் இருந்து சொல்லுகிறேன்:

கடல் தீப்பற்றி எரிவதைக் கண்டேன் 
என் விழிகள் உருகியொழுக
நான் பார்க்கையில்
அதன் கரை விளிம்புகளில் தீ எரிந்தது
யாரும் நம்பமாட்டீர்கள் ஆனால்
கடல் தீப்பற்றி எரிந்தது நிச்சயமாய் நிகழ்ந்தது
அலைகள் பொசுங்கிப் போயின.

இந்தக் கவிதை வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எரிந்த கடலும், பொசுங்கிய அலைகளும் என்கிற இந்த உருவகத்தை நான் முள்ளிவாய்க்கால் பேரூழிக்காலத்தோடு நினைத்துப் பார்க்கையில் துயரம் கெந்துகிறது. இந்தக் கவிதையை எழுதிய காலத்தை நினைவுபடுத்த இயலுமா?

மன்னிக்கவும். நினைவுகளை மறப்பதற்கு முயற்சிக்கும் வாழ்க்கை எனது. துக்கத்திலிருந்து விடுபடுவதற்கு வேறு கதியில்லை. இந்தப் பதில்களே ஒருவகையில் மறதியைக் கிளறும் வேலையே. துயரத்தின் பாதைதான்.

உங்களுடைய எழுத்துக்களுக்கு தொடக்க காலத்தில் இருந்தே தமிழக இலக்கியச் சூழலில் அறிமுகமுண்டு. அன்றைய காலத்தில் உங்கள் படைப்புக்களுக்கு இருந்த வரவேற்பு எப்படி?

நன்றாக இருந்தது. ஈழப்போராட்டத்துக்கு மட்டுமல்ல, அதைப் பிரதிபலிக்கும் எழுத்துகளுக்கும் எப்போதும் தமிழகச் சூழலில் வரவேற்பிருந்தது. மதிப்பளிக்கப்பட்டது. இதற்குப் பல காரணங்களிருக்கலாம். என்னுடைய எழுத்துகள் தனியே போராட்டம் பற்றியவையாக எப்போதுமிருந்ததில்லை. எனவே பல்பரிமாணத்தோடு அவை இருக்கின்றன என்றவர்கள் கருதியிருக்கக் கூடும். அந்த நாட்களில் அவை பற்றி எழுதப்பட்டிருந்த விமர்சனங்களிலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது.

கவிதைகளை மட்டுமல்லாது, கட்டுரைகள், கதைகள் என எழுதி வருகிறீர்கள். “வேட்டைத் தோப்பு” சிறுகதை நூல் வெளியாகி இருக்கிறது. நாவல் எழுதும் விருப்பங்கள்/ கொந்தளிப்போ, ஈடுபாடோ எழவில்லையா?

எழுதிப் பாதியில் நின்றவை உண்டு. மீண்டும் அவை தொடரப்படுமா அல்லது புதியவை வரலாமா என்ற கேள்வியின் மையத்தில் இருக்கிறேன். என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பிரமிள், வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம், புதுவை இரத்தினதுரை, சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பா.அகிலன் செல்வி, சிவரமணி, எஸ்.போஸ் என தொடரும் இந்த மரபில் நீங்களும் ஒருவர். இன்று ஒரு புதிய தலைமுறை வெளிக்கிளம்பி இருக்கிறது. அதில் தீபச்செல்வன் மிக  முக்கியமானவர். அவருடைய கவிதைகளின் மீதான உங்களுடைய இலக்கிய மதிப்பீடு பற்றி சொல்லுங்கள்?

இதைப்பற்றி தீபச்செல்வனிடமே சொல்லியிருக்கிறேன். இன்னும் சற்று அழுத்தமாகச் சொல்வதென்றால், பிரகடனங்களிலிருந்து அவர் விடுபடுவது அவசியம். அனுபவங்களின் திரட்சியோடு புதிய அறிதல்களை நோக்கித் தன்னை விரிப்பது நல்லது. இது ஒருவகையில் கால நிபந்தனையே. இல்லையில்லை, தன்னுடைய வழி வேறு என்று அவர் பிடிவாதம் பிடித்தால், அல்லது எதிர்வாதம் புரிந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அது அவருடைய வழியும், உரிமையுமாகும்.

போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட க.வே.பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியவர்களோடு உங்களுக்கு நெருக்கம் இருந்தது. அவர்கள் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த அந்த இறுதி நாட்களில் என்ன மனநிலையில் இருந்தார்கள்?

சனங்களைக் குறித்துப் பெருந்துக்கத்தோடிருந்தனர். “அறிவு பெருத்தவர் நோவு பெருத்தவர்” என்ற வேதாமக உண்மையின்படி, இறுதி முடிவைப் பற்றிய முன்னுணர்வினால் கொந்தளிப்போடிருந்தனர். ஆனாலும் எதையும் செய்ய முடியாத (யாரோடு நோக, யார்க்கெடுத்துரைக்க என்ற) நிலையில். கையை மீறிச் சென்றன அனைத்தும்.

போர் பற்றி உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும். உங்களுக்கு?

இவ்வளவுபேசியபிறகும்இப்படியொருகேள்விஎன்றால்…!

போர்என்பதென்ன? திரைமறைக்கப்பட்டவெறி. நியாயங்கள் மறுதலிக்கப்பட்ட பலிபீடம். வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு மோதும் களம். அதில் சனங்கள் வெறும் தூசி. அவர்கள் வெறுமனே ஆட்டக்காய்கள் மட்டுமே அதிகம். ஏன், போரிலே முதலில் கொல்லப்படுவது உண்மை என்றால், அதனுடைய பொருள் என்ன? உண்மையை இழப்பதென்பது நீதியை, நியாயத்தை, அறத்தை, வாழ்வின் அடிப்படைகளை இழப்பதாகும். இதையெல்லாம் இழந்த பிறகு பெறும் வெற்றி என்னவாக இருக்கும்?

எந்தப் பெரிய போர் வெற்றியும் சாதாரண ஒரு மனிதரி்ன் வாழ்க்கைக்கு ஈடாகாது. எந்தப் பெரிய வெற்றியும் இழக்கப்பட்ட உயிர்களையும் உடலின் உறுப்புகளையும் மீளத்தந்து விடாது. இதைத் தரமுடியாத போர் எதற்கு?

***

http://www.yaavarum.com/archives/5786

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2020 at 16:49, கிருபன் said:

போராட்டம் தோற்றதும், தோற்கடிக்கப்பட்டதும் பெரிதல்ல. அது எங்கும் நிகழக் கூடியது.

 

On 19/5/2020 at 16:49, கிருபன் said:

ஒரு விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்து, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்லாமல் அவர்களின் கலை இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர் நீங்கள். புலி

ஐயா சிவப்பு சிந்தனை கவிஞர் போல இருக்கு வாழ்க வளர்க...

போரை யாரும் விரும்பவில்லை ...சிங்களவர்களுடன் போராட முடியாது என்ற நிலையில் வடக்கு கிழக்கு மலையகம் சாதி என்று இனி சிவப்பு சிந்தனையுடன் திரிய வேண்டியான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

 

ஐயா சிவப்பு சிந்தனை கவிஞர் போல இருக்கு வாழ்க வளர்க...

போரை யாரும் விரும்பவில்லை ...சிங்களவர்களுடன் போராட முடியாது என்ற நிலையில் வடக்கு கிழக்கு மலையகம் சாதி என்று இனி சிவப்பு சிந்தனையுடன் திரிய வேண்டியான்

புத்தன் ஐயா,

எப்போதும் முற்போக்குச் சிந்தனையுள்ளவர் முற்போக்குவாதி.

இடையிடையே மட்டும் முற்போக்குச் சிந்தனையைக் காட்டுபவர் சந்தர்ப்பவாதி.

முற்போக்கானவராகக் காட்டிக்கொண்டு பிற்போக்காகச் செயற்படுபவர் பிழைப்புவாதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.