Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’

salangai-oli-37-years  

உலகின் ஆகச் சிறந்த ஆச்சரியமும் சோகமும் என்ன தெரியுமா? காதலில் யாரெல்லாம் தோற்றுப்போனார்களோ அவர்களையெல்ல்லாம் பட்டியலிட்டு, பட்டயமாய் வைத்து சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது. தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்து, நம்மைப் பதறடித்த, சிதறடித்த, கலங்கடித்த.. சலங்கையின் ஒலி... அவ்வளவு சீக்கிரத்தில் மனக்காதுகளில் இருந்து தள்ளிப்போய்விடாது!

ஹிட் கொடுத்த நடிகர்களையே சினிமா சுற்றிவரும். வெற்றி அடைந்த கலைஞனுக்கே பரிசுகள் வழங்குவார்கள். சாதனை படைத்தவனையேக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத், அந்த சலங்கை ஒலி பாலுவை எங்கே பார்த்தார், பார்த்தாரா, கற்பனையா, அந்தக் கற்பனைக்குப் பின்னே இருக்கிற நிஜம்... என்பதையெல்லாம் திரையில் கொட்டிவிட, கமல் எனும் மகா கலைஞனைத் தேர்ந்தெடுத்து, அவர் வழியே ஒலியை, சலங்கை ஒலியை, ஒலிக்கச் செய்து, ஒளிரச் செய்து, முழு பெளர்ணமியென தகதகக்க வைத்திருந்தார்.

1983ம் ஆண்டு ஜுன் 3ம் தேதி ’சலங்கை ஒலி’ வெளியானது. முதலில் ’சாகர சங்கமம்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி, தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. இன்னும் பலர், ‘அட... டப்பிங் படமா? பொய்யெல்லாம் சொல்லாதீங்க’ என்று உண்மையை நம்ப மறுக்கிறவர்களும் உண்டு. காரணமும் இருக்கிறது. அத்தனை நேர்த்தியாக டப்பிங் செய்யப்பட்டிருக்கும், மிக முக்கியமான படம் ’சலங்கை ஒலி’.

பரதம் மீது ஆர்வமும் வெறியும் கொண்டு கற்றுக்கொள்ளும் ஏழை சமையற்கார அம்மாவின் மகன் பாலு. கடைசிவரை, அவனின் திறமைக்கு மேடை கிடைக்காமலே போகிறது. குடிக்கத் தொடங்குகிறான். அம்மி கொத்துவதற்கு சிற்பி எதற்கு கணக்காக, பரதநாட்டியங்களின் சகல கலைகளிலும் தேர்ந்த பாலு, அதனை விமர்சனம் செய்யும் பத்திரிகைப் பணியில் இருக்கிறான். அதுவும் எல்லாமாகவும் இருக்கிற நண்பனின் உதவியுடன்!

 

15912430882948.jpg

 

கலை வளரவளர, அந்தக் கலையின் மூலமாகவே காதலும் வளருகிறது. அவனை மட்டுமின்றி அவன் கலையையும் சேர்த்து விரும்புகிற அந்தப் பெண்... அவனின் எதிர்கால வளர்ச்சிக்காக, அவனின் திறமைக்கான மகுடத்திற்காக அல்லாடுகிறாள். ஒருகட்டத்தில், கலையும் கைகொடுக்கவில்லை; காதலும் கைசேரவில்லை. இன்னும் குடிக்கிறான் பாலு. மறக்கவேண்டும் என்பதற்காக, மறக்காமல் குடிக்கிறான்.

காலங்கள் நர்த்தனமாடுகின்றன.

அதுவொரு பரத நிகழ்ச்சி. அங்கே தப்பாக அபிநயம் பிடிக்கும் பெண்ணைப் பற்றி பாலு எழுத, அந்தப் பெண்ணும் அவளின் காதலனும் பத்திரிகை ஆபீஸுக்கே வந்து கொந்தளிக்கிறார்கள். அப்போதுதான் அவனின் நடனத்திறமையே ஆடியன்ஸான நமக்குத் தெரிகிறது.

அந்தப் பெண் யாருமல்ல... பாலு காதலித்தவளின் மகள். இந்த விவரமெல்லாம் தெரிந்ததும் அந்த ஊருக்கு வருகிறாள். முன்னாள் காதலனின் நண்பனைப் பார்க்கிறாள். குடித்துக்குடித்து அவன் அழிந்துகொண்டே வருவதை விவரிக்க, பதறிப் போகிறாள். நண்பனின் மனைவிக்குச் சிகிச்சை, அந்த ஆடத்தெரியாத பெண்ணுக்கு நடனப்பயிற்சி என்றெல்லாம் சொல்லி, அவனை... பாலுவை... ஊருக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

15912431132948.jpg

அங்குதான், தன் முன்னாள் காதலியைப் பார்க்கிறான். அப்படி அவன் பார்க்கிற வேளையில், விதவையாக இருந்தபோதிலும் அவனுக்காக, அவனின் இருதயக்கூடு வெடித்துவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு அவனெதிரே வருகிறாள். அவ்வளவுதான்... அவள் மீது வைத்திருந்த மொத்தக் காதலையும் மதிப்பையும் அவளின் பெண்ணின் மீது அன்பாகவும் கனிவாகவும் கரிசனமாகவும் நேசமாகவும் கொட்டித்தீர்க்கிறான். தன்னிடம் உள்ள மொத்த வித்தையையும் அவளுக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கும் வேளையில், தன்னுடைய முன்னாள் காதலியானவள், கணவனைப் பறிகொடுத்து விதவையாக நிற்கிறாள் எனப் புரிந்து உடைகிறான். இதயம் பலஹீனமாகிறது.

உடல்நிலை மோசமாகிவிட, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. அதேசமயம், படுத்தபடுக்கையாக இருந்துகொண்டே, அவளுக்கு நடனப்பயிற்சி கொடுக்கிறான். அவளின் அரங்கேற்றம் நிகழ்கிறது.

அங்கே... அந்தப் பெண் ஆடுகிறாள். ஆனால் பாலு எனும் கலைஞனும் அவனையும் அவனின் கலையையும் முழுமையாக நேசித்து பூஜித்த அந்தப் பெண்ணின் அம்மாவும் அங்கே. பாலுவையேப் பார்க்கிறார்கள். பாலு ஆடுகிறான் என்பதாகவே தோன்றுகிறது அவர்களுக்கு!

நடன குருவை, பாலுவை அறிமுகம் செய்துவைக்க, மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்புகிறது. அது அவனுக்கு, தோற்றுப்போன பரதக் கலைஞனுக்கு புதியதொரு அனுபவம். இது கிடைக்கத்தான் பால்யத்தில் இருந்து ஆசை கொண்டான் பாலு. ஆகவே, இன்னும் இன்னும் இன்னும் இன்னும் என்று கைத்தட்டச் சொல்கிறான். கைத்தட்டக் கேட்கிறான். காதாரக் கேட்கிறான். இவையெல்லாம் மரணத்தருணத்தில் கிடைக்க... நிம்மதியாகக் கண்மூடி இறக்கிறான். படமும் முடிகிறது.

15912431352948.jpg

கனத்த இதயத்துடன், பாக்கெட்டில் இருந்து ஆண்கள் கைக்குட்டையையும் பெண்கள் சேலைத்தலைப்பையும் கொண்டு, கண்களைத் துடைத்தபடி, இறுகிய முகத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்.

இப்போது ’சலங்கை ஒலி’ பார்த்தாலும், பாலு எனும் கலைஞன் எதிரே வந்து நிற்பான். கனத்த இதயத்துடன், நீர் நனையும் கண்களுடனும் இறுகிய முகத்துடனும் நாம் இருப்போம்.

மிக உன்னதமான படைப்பு ’சலங்கை ஒலி’. படம் வெளியாகி, 37 வருடங்களாகி விட்டன. இன்றைக்கும் நம் மனங்களில், புத்தம்புதுகாப்பியாக ஒளிர்கிறான் பாலு. அபிநயம் பிடித்து ஆடுகிறது ‘சலங்கை ஒலி’.

’சங்கராபரணம்’ தந்த கே.விஸ்வநாத்தின் இன்னுமொரு பிரமாண்டப் படைப்பு. கமல் எனும் கலைஞனின் மகுடத்தில், இன்னுமொரு மயிற்பீலி. இளையராஜா எனும் இசையரசனின் ராஜாபாட்டைகளில் தனியிடம் பிடித்த படம். கவிப்பேரரசு எனும் ரசனைக் கவிஞனின் ஒவ்வொரு வரிகளிலும் பரதமும் காதலும் நட்பும் தோல்வியும் தெறித்து விழச் செய்யும் விதமான படைப்பு. ஜெயப்ரதா எனும் பேரழகும் பெரு நடிப்பும் கொண்ட உன்னத நடிகையின் முக்கியப் படங்களில் உயிர்ப்பானதொரு படம்... ’சலங்கை ஒலி’!

சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கு உதவியாக இறங்கிக்கொண்டு, தள்ளிக்கொண்டே வரும் போது, டைட்டில் முடியும். கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் கே.விஸ்வநாத் என்று கார்டு போடுவார்கள்.

அங்கிருந்து தொடங்கும் கமல், கே.விஸ்வநாத் கூட்டணியின் அதகள ஆட்டம்.

 

15912432532948.jpg

சரத்பாபு, கமலின் நண்பன். சரத்பாபுவின் மனைவியோ கமலுக்கு அம்மா மாதிரி. பரதத்தில் சகலமும் கற்றுத் தேர்ந்து பெரிய ஆளாக வரவேண்டும் எனும் ஆசை கமலுக்கு. ஆனால் நேரமும் காலமும் காசும்பணமும் வாய்க்கவேண்டுமே! அவரின் அம்மா சமையல் வேலை. ரயில்வே ஸ்டேஷனில், அம்மாவைப் பார்க்க கமலும் சரத்பாபுவும் வருவார்கள். ரயில் கிளம்பும்போது அம்மா செலவுக்குக் காசு தருவார். ரயில் கிளம்பிவிடும். ‘வயசான அம்மாகிட்ட காசு வாங்குறியே. வெக்கமா இல்ல. நாம சம்பாதிச்சு அவங்களுக்குக் கொடுக்கணும்டா’ என்பார் சரத்பாபு. உடனே ஓஓஓஓஒடிப்போய், அம்மாவிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘அடுத்த மாசம் பணம் அனுப்பறேம்மா. உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு நிற்பார். தான் சொன்னதைக் கேட்ட நண்பனை நெகிழ்வுடன் அணைத்துக்கொண்டு நடப்பார் சரத்பாபு. ‘அம்மாகிட்ட பணம் அனுப்பறேன்னு சொல்லிட்டேன். எதாவது வேலை வாங்கிக் கொடுடா’ என்பார் கமல். அங்கே நாம் மெர்ஜாகிவிடுவோம்.

போட்டோ ஸ்டூடியோக்கார பையனின் அலும்பு செம. கமலை விதம்விதமாக போட்டோ எடுக்கிறேன் என்று, முதுகு, ஒற்றைக் கால், கன்னம் சொரியும் போது என்றெல்லாம் எடுத்து அசிங்கப்படுத்த, அதே காட்சிகளை கமலுக்குத் தெரியாமல் ஜெயப்பிரதா எடுத்திருப்பார். அந்தக் காட்சி, காமெடிக்கு காமெடி. ரசனைக்கு ரசனை. அந்தப் பையன் தான், ‘தசாவதாரம்’ படத்தில் கமலின் நண்பனாக நடித்தார். ‘உன்னைப் போல் ஒருவன்’ என்று கமலை வைத்தும் அஜித்தை வைத்து ‘பில்லா 2’வும் எடுத்து சக்ரி டோலட்டி என்பது கொசுறுத் தகவல்.

கல்யாண மண்டபத்தின் சமையற்கட்டில் அம்மா முதன்முதலாகப் பார்க்கிற வகையில் ஆடுகிற ஆட்டம், நம்மைக் கலங்கடித்துவிடும். கமலுக்கும் ஜெயப்ரதாவுக்குமான பழக்கம், நட்பாகி, அங்கே சொல்லாத காதலாய் ஒளிந்துகொண்டிருக்க, சலங்கையின் ஒலியுடன் காதலும் ஜதி சொல்லிக்கொண்டே இருக்கும்.

 

15912432732948.jpg

சினிமாக்காரரிடம் அழைத்துச் செல்ல, அங்கே கீதாவுடன் கெட்ட ஆட்டம் போடும்போது, கமலின் ரியாக்‌ஷன்... அப்ளாஸ் அள்ளும். அதன் பிறகு அந்த ஆவேசத்தை நடனமாடித் தீர்த்துக்கொள்வார். அந்த இடம் கமல் தன் நடிப்பாலும் நடனத்தாலும் மிரட்டிவிடுவார்.

கதக் கற்றுக்கொள்ள குருவிடம் சொல்லச் சொல்லி ஒரு பெண்ணிடம், பணமில்லை, காசில்லை, வேலையில்லை, வேலை செய்து, பணிவிடை செய்து கழித்துக்கொள்கிறேன். கற்றுக்கொடுங்கள் என்பதை அபிநயத்திலேயே சொல்வார் கமல். அவரின் நடனமும் நடிப்பும் அங்கே கொடிகட்டிப் பறக்கும்.

ஜெயப்பிரதாவின் மகளாக பின்னணிப் பாடகி எஸ்.பி.ஷைலஜா. தப்பாக எழுதிவிட்டார் என்று கமல் மீது கோபப்பட, அங்கே, கமல் ‘பஞ்சபூதங்களும்’ என்பதற்கு ஒவ்வொருவிதமாக ஆடிக்காட்டுவார். அப்படி கால்தூக்கி ஆடும்போது, காபி டவராக்கள் பறந்துசென்று, ஷைலஜாவின் காலடியில் விழுந்து ஒரு ஆட்டம் ஆடி ஓயுமே... அது நம்மூர் கே.பாலசந்தர் டச் போல, கே.விஸ்வநாத் டச்.

டெல்லியில் மிகப்பெரிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய விழா. அந்த அழைப்பிதழைப் பார்த்தே மிரண்டுபோவார் கமல். ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவார். அவர்களைப் பற்றி விவரிப்பார். பிரமிப்பார். சிலாகிப்பார். கொண்டாடுவார். அப்படியே ஒருபக்கம் திருப்ப... அங்கே, கமலின் புகைப்படம். அவரைப் பற்றிய குறிப்புகள். ‘இவரும் பெரிய ஆளுதான் பாலுசார். ஒருநாள் பெரிய ஆளா வருவாரு’ என்று ஜெயப்ரதா சொல்ல, அழுது, உருகி, நெகிழ்ந்து, நெக்குருகி நன்றி சொல்லத் தவித்து மருகுவாரே... கலைஞன் கமல் கோட்டையை எழுப்பி, கொடி நாட்டி, கம்பீரமாய் உயர்ந்து நிற்பார். அவ்வளவு நேர்த்தியான, யதார்த்த நடிப்பு!

டெல்லி விழா. முன்னதாக கமலின் ஆட்ட ரிகர்சலும் ஆட்டம் முடிந்து ஆட்டோகிராப் கேட்டு சுற்றிக்கொள்ளும் கூட்டமும் என கற்பனைக் காட்சி. சிரிக்கவும் வைக்கும்; வலிக்கவும் செய்யும்.

அம்மாவின் மரணம். அம்மாவுக்கு முன் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் காட்சியில் கமலின் முக எக்ஸ்பிரஷன்கள், காலத்துக்கும் மறக்காது.

ஒருவழியாக, சரத்பாபுவை அவர் காதலியுடன் சேர்த்துவைத்து, முதலிரவுக்கு அனுப்பிவிட்டு, கமலும் ஜெயப்ரதாவும் இருக்க, பாட்டு ஒலிக்கும். மெளனமான நேரம். காதலும் ஏக்கமுமாக கமல் பார்க்க, ஜெயப்ரதா வேறு எங்கோ பார்த்துவிட்டு பார்ப்பார். உடனே கமல், வேறு எங்கோ பார்ப்பார். அதேபோல், கமலையே பார்த்துக்கொண்டிருப்பார் ஜெயப்ரதா. கமல் பார்க்கும்போது சட்டென்று வேறு எங்கோ பார்ப்பார். அந்தப் பாட்டு மொத்தத்திலும் கவிதை ராஜாங்கம் பண்ணும். ராஜாவும் ராஜாங்கம் பண்ணியிருப்பார். கூடவே, ஜெயப்ரதாவின் புடவைகள் அழகு காட்டும், படம் மொத்தத்தையும் நிவாஸின் கேமிரா , நமக்கு ஒற்றிக்கொள்வது போல், அள்ளியள்ளி வழங்கியிருக்கும்!

’ஓம் நமசிவாய’, ’வான் போலே வண்ணம் கொண்டு’, ’நாத விநோதங்கள்’, ’மெளனமான நேரம்’, ’தகிட ததுமி தகிட ததுமி’, ’வேதம் அணுவிலும் ஒரு நாதம்’ என்று எல்லாப் பாடல்களுமே மனதை வருடும். வாட்டும். அள்ளும். அசைத்துப்போடும். அதேபோல், படத்தின் பின்னணி முழுக்கவே இளையராஜா, முழுக்கவனம் செலுத்தி, பிஜிஎம்மில் எப்பவும் நான் ராஜா என்று நிரூபித்திருப்பார்.

அதேபோல், கதாபாத்திரத்தின் தன்மையையும் கதையையும் உணர்ந்ததுடன் லிப் மூவ்மெண்ட்ஸ்க்கு தகுந்தது போலவும் வசனம் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம்.

ஜெயப்பிரதாவுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருப்பதையும் பிரிந்திருப்பதையும் சொல்லும் இடம் கவிதை. ரணப்படுத்திவிடும். பிறகு மனம் திருந்தி திரும்பி வரும்போது கமலே சேர்த்துவைப்பார். ஒருபக்கம், கலையும் இல்லை; இன்னொரு பக்கம் காதலும் இல்லை. நொறுங்கிப் போகிற காட்சிகளில் பாலுவாகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன்.

கடைசிக் காட்சியில் ஷைலஜாவின் ஆட்டத்துக்கு கைத்தட்டல் கிடைக்கும். முன்னதாக, குருவாக கமல் அறிமுகப்படுத்தப்படுவார். கற்றுத்தரும்போது, கமலின் கையை காலால் மிதித்துவிடுவார். அது நினைவுக்கு வந்து பதறும் காட்சியில் நம்மை வசமாக்கிக் கொள்வார் இயக்குநர் கே.விஸ்வநாத். பூர்ணோதயாவின் ஏடித.நாகேஸ்வர ராவ் தயாரித்திருப்பார்.

சலங்கை ஒலி, கே.விஸ்வாத்துக்காக பார்க்கலாம். இளையராஜாவுக்காக பார்க்கலாம். வைரமுத்துவின் வரிகளுக்காகப் பார்க்கலாம். ஜெயப்ரதாவுக்காகப் பார்க்கலாம். கமலுக்காக பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

படத்தின் முடிவில், பாலு என்கிற கமல், இறந்துவிடுவார். சக்கரநாற்காலியில் இறந்துவிட்ட கமலை, மேடையில் இருந்து, அரங்கில் இருந்து, வெளியே தள்ளிக்கொண்டு சரத்பாபு நடக்க, கொட்டியெடுக்கும் மழை. அப்போது ஓடிவந்து கமலுக்கு, பாலு எனும் கலைஞனுக்கு குடை பிடிப்பார் ஜெயப்ரதா. பின்னணியில் நடன சங்கதிகள், தாளக்கட்டுகள், ஜதிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

END என்று ஸ்கிரீனில் வரும். அடுத்து END எழுத்துக்கு மேலே, NO என்று வரும். பிறகு, NO END எழுத்துக்களுக்குக் கீழே FOR ANY ART என்று டைட்டில் வரும். அதாவது

NO

END

FOR ANY

ART

என்கிற டைட்டிலுடன் முடியும்.

இது ரீமேக் சீசன். அந்தப் படம் இந்தப் படம் என்று ரீமேக்குகிறார்கள். அப்படி யார் முயன்றாலும் ரீமேக் பண்ணவே முடியாத படம்... சலங்கை ஒலி! இந்தக் கூட்டணியின் சலங்கை ஒலிக்கு நிகரே இல்லை. இருக்கப்போவதும் இல்லை!


கலைஞன் சாகாவரம் பெற்றவன். ’சலங்கை ஒலி’யும் அப்படித்தான்!

https://www.hindutamil.in/news/blogs/557803-salangai-oli-37-years-10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.