Jump to content

அர்த்தநாரீஸ்வரி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

1 நிமிட வாசிப்பு.

1, முதலில் உங்களிடம் ஒரு மன்னிப்பினைக் கோரிவிடுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் என்பவர் ஒரு நடிகையோ, எழுத்தாளரோ, அல்லது ஒரு படைப்பாளியோ கிடையாது. உலகத்தில் வாழும் சராசரி மனுஷிகளைப் போன்றுதான் அவளும். பெண்களைப் போன்றுதான் ஆடை அணிகிறாள். பெண்களைப் போன்றுதான் நளினப்படுகிறாள். பெண்களைப் போன்றுதான் பேசுகிறாள். பின் எதற்காக இவளை நான் நேர்காணல் செய்யப் பிரியப்படுகின்றேன். ஏனெனில், தனுஜா சிங்கம் ஒரு பெண்ணின் தோற்றத்தை உடையவளாகயிருந்தாலும் உண்மையில் அவளொரு மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவள். ( THIRD GENDER ) வளர்ந்து, படித்து, டிகிரி முடித்து ஒரு மூன்றாம் பாலினத்தவராக தன் முன்னால் விரிந்திருக்கும் அத்தனை சவால்களையும் உடைத்தெறிந்து, என்னதான் மற்றவர்களைப் போலவே தன்னுடைய வாழ்வினைக் கொண்டு சென்றாலும் அவளுக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கவே செய்யும். அப்படிப்பட்ட ஏக்கத்துடன் வாழும் ஒரு பெண்ணிடம் சென்று இலக்கிய பத்திரிக்கையென்ற அடையாளத்துடனும், மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவருகின்றோம் என்கின்ற பெயரிலும் எந்தவிதமான குற்றவுணர்வுமில்லாமல் நேர்காணல் செய்வதென்பது உண்மையில் ஹிட்லரின் ஃபாசிஸத்துக்கு ஒப்பானவொரு செயலே. ஆகவே மீண்டுமொருமுறை என்னை மன்னியுங்கள் தனுஜா. என்னை மன்னித்தீர்களென்றால் என்னுடைய முதலாவது கேள்வியை இப்படி ஆரம்பிக்கின்றேன். முதலில் உங்களைப்பற்றி விரிவாகக் கூற முடியுமா?

நான் உங்கள் மீது கோபமாகயிருக்கின்றேன் சாதனா. ஏனெனில் என்னை மூன்றாம் பாலினத்தவரென அழைக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? உண்மையில் மேற்குலக நாடுகளில் ஏன் இலங்கையில் கூட எம்மை யாருமே மூன்றாம் பாலினத்தவரென அடையாளப்படுத்துவதில்லை. அவர்கள் எங்களை பெண்ணென்ற வட்டத்துக்குள்ளேயே வரையறை செய்கின்றார்கள். அதையும் தாண்டி நீங்கள் எங்களை அடையாளப்படுத்த விரும்பினால் திருநங்கைகளென அழையுங்கள். நாங்களும் அதையே விரும்புகின்றோம்.

திருநங்கைகளையோ, அல்லது திருநம்பிகளையோ மூன்றாம் பாலினத்தவரென அடையாளப்படுத்தும்/ அழைக்கும் பிற்போக்குத்தனக் கலாச்சாரம் இந்தியாவில் மாத்திரமே உண்டு. இதை திருநங்கைகளான நாங்களோ அல்லது திருநம்பிகளோ விரும்புவதில்லை. அப்படி அழைக்கப்படும்போது/ பொதுவெளியில் பிரகனப்படுத்தப்படும்போது நாங்கள் கடுமையான மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளாகின்றோம். இதை நீங்களோ அல்லது உங்களைப் போன்றவர்களோ அறிந்துகொள்வதற்கு/ புரிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை. இந்தப் புரிதல் மாறுபடவேண்டும்/ மாற்றப்பட வேண்டும். அதற்காகவே நானும் சரி திருநங்கைகளும் சரி தமிழ்நாட்டில் மாத்திரமன்றல்ல; முழு இந்தியாவிலும் இது சார்ந்த விழிப்புணர்வினையும், போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றோம்.

இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன். நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தந்தை ஜெர்மனியிலிருந்தார். எனது தாயுடன் வசித்து வந்த நான் என்னுடைய பத்தாவது வயதில், இலங்கையில் நிலவி வந்த சுமூகமற்ற அரசியற் காரணங்களினால் மூன்று மாதக் குழந்தையாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வந்தேன். சுமார் எட்டு வருடங்கள் வரை இந்தியாவிலிருந்த நான் அதன் பின்பு மறுபடியும் இலங்கை சென்று, பின்னர், என்னுடைய பத்தாவது வயதில் அதாவது இரண்டாயிரமாம் ஆண்டில் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தேன். ஆங்கிலத்தில் முடித்திருக்கும் நான் திருநங்கைகள் ஆய்வாளராகவும் இருக்கின்றேன். அவ்வப்பொழுது மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றுகிறேன். அத்தோடு சமூக வலைத்தளங்களில் திருநங்கைகளுக்கான பக்கமொன்றினை உருவாக்கி அதன் மூலம் பெருமளவிலான திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு/ உதவிகளையும் செய்து வருகின்றேன். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஆண்டின் சிறந்த திருநங்கைக்கான விருதும் எனக்கு வழக்கப்பட்டுள்ளது.

2, நீங்கள் ஒரு திருநங்கையென எத்தனையாவது வயதில் உங்களுக்குத் தெரிய வந்தது?

நான் பிறந்து சில ஆண்டுகளிலேயே நான் மற்றவர்களைப் போலல்ல என்கின்ற உண்மை எனக்குத் தெரிந்துவிட்டது. ஏனெனில் என்னுடைய சிந்தனை மற்றைய ஆண்களின் சிந்தனைகளோடு ஒத்துப்போகவில்லை. என்னுடைய பேச்சும் சரி, செயற்பாடுகளும் சரி ஒருவித பெண் தன்மையோடுயிருப்பதை/ அவர்களோடு ஒத்துப்போவதை நான் மெல்ல மெல்ல உணரத்தொடங்கினேன். ஆண்களோடு இருப்பதை விடவும் பெண்களோடு இருப்பதையே நான் அதிகமும் விரும்பினேன். ஆனால் இந்தத் தன்மை/ செயற்பாடு அனைத்துமே ஒரு திருநங்கைக்குரியவையென நான் அப்போது அறிந்திருக்கவில்லை. ஏனென்றால் ஒரு திருநங்கை/ திருநம்பி என்பவள்(ன்) பிறப்பின்போதே ஒரு திருநங்கையாகத்தான் பிறப்பாளென்பதே அப்போதுவரையிலான என்னுடைய புரிதலாகயிருந்தது. இவ்வாறான என்னுடைய இந்தப் புரிதலுக்கு சமுதாயமும் ஒரு காரணமென்பதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இலங்கையைப் பொறுத்தவரை அதுவும் தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரை அதுவும் யாழ்ப்பாணீய சமுதாயத்தைப் பொறுத்தவரை திருநங்கையென்பது இந்தியாவில் எங்கேயோ ஒரு மூலையில் வாழ்ந்துவரும் “விசித்திர” மனிதர்கள். திருநங்கையென்பதின் முறையான விளக்கப்பாடு அவர்களுட்குள் இருக்கவில்லை. இப்படியானவொரு சூழலில் திருநங்கையான நான் தீண்டப்படாதவளாகவும்/ அவமானத்துக்குரியவளாகவுமே வாழ்ந்து வந்தேன். அதன் பிறகு ஜேர்மனிய வாழ்க்கை. இங்குகூட பாலியல் பற்றிய விழிப்புணர்வு இருந்ததே தவிர திருநங்கை/ திருநம்பி பற்றிய விழிப்புணர்வோ அது பற்றிய கல்விப் புகட்டலோ அப்போது இருக்கவில்லை. அதன் பிறகு எனக்குள் எழுந்த உளச்சிக்கல் காரணமாக நானாகவே இணையத்தளங்களைப் பார்வையிட்டு, எனக்கான கேள்விகளையெழுப்பி அதற்கான பதில்களைத் தேடி இப்படியாக நானொரு திருநங்கையென்பதை அறிந்துகொண்டேன். அதாவது நானென்னுடைய பதின்மூன்றாவது வயதிலேயே என்னைப்பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன்.

3, லெனின். எம். சிவத்தின் “ரூபா” திரைப்படத்தினை ஒரு திருநங்கை என்கிற முறையில் நீங்கள் அத்திரைப்படத்தினை வரவேற்பதாகத் தெரிகிறது. இப்போது என்னுடைய கேள்வியென்னவெனில், எதற்காக இத்திரைப்படத்தினை நீங்கள் வரவேற்கின்றீர்கள்? உண்மையில் இது திருநங்கைகளை/ திருநம்பிகளை அவமானப்படுத்தும் செயலல்லவா? என் கேள்வி புரிகிறதா தனுஜா? திருநங்கைகள் மாத்திரமல்ல ; தாற்பால்விரும்பிகள் கூட இச்சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் நாம் அவர்களை ஏதோ மாற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்களைப் போல் நினைத்து திரைப்படமெடுப்பதும், இலக்கியமெழுதுவதும் நாம் அவர்களுக்குச் செய்தும் துரோகமாகாதா?

இல்லை. நிச்சியமாக துரோகமாகாது. ஏனெனில் சிறுபான்மை இனத்தவரான எங்களைப் பற்றியோ அல்லது எங்களின் வாழ்க்கை முறைமை பற்றியோ அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களின் அகச்சிக்கல் பற்றியும் புறவய சிக்கல் பற்றியும் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. திருநங்கைகள்/ திருநம்பிகள் பற்றி மாத்திரமல்ல குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் பற்றிக்கூட இங்கு யாரும் பேசுவதில்லை. இவர்கள் குப்பைகளை மேசைக்கடியில் ஒதுக்கிவிட்டு வெளிப்புறத்தை அலங்கரித்துக் காட்டுகிறார்கள். இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். திருநங்கைகள்/ திருநம்பிகள் பற்றிய தெளிவான புரிதல் அனைவரையும் சென்றடைய வேண்டும். இந்தப்புரிதல்/ அறிவு அனைவரையும் சென்றடைவதற்கான வழியாக நாங்கள் திரைப்படங்களையும், இலக்கியங்களையும், ஊடகங்களையும் கருதுகிறோம்.

ஆனால், இங்கு முக்கியமான பிரச்சனை என்னவெனில், நாங்கள் திருநங்கைகளைப் பற்றி படமெடுக்கின்றோம், விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி படமெடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களைக் கேலிக்குள்ளாக்கும் விதத்திலும், சம்பந்தப்பட்டவர்களின் நிஜமான பிரச்சனைகளைப் பற்றி துளியளவு கூட தெரிந்துகொள்ளாமல்/ அறிந்துகொள்ளாமல் இவர்கள் இப்படித்தான் இவர்களின் வாழ்க்கைமுறை இப்படியானதுதான் என வெளிவரும் படங்களே அதிகம். உதாரணம் காஞ்சனா. அத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் என்னைக்கூட பலர் காஞ்சனா என்று அழைத்தார்கள். உண்மையில் நாங்கள் அதை விரும்புவதில்லை. ஏனெனில் எங்களின் பிரச்சனைகள் வேறு. எங்களின் உளவியற் சிக்கல்கள் என்பது என்றுமே உங்களால் புரிந்துகொள்ளப்படாதவொன்று.

இன்னொரு விஷயம் எங்களை அரவாணிகளென அழைப்பது. உண்மையில் திருநங்கைகளை/ திருநம்பிகளை அரவாணிகளென அழைக்கும் பழக்கம் அதன் நாகரிகமற்ற தன்மையினால் என்றோ வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால் பெரும்பாலான திரைப்படங்களிலும்/ இலக்கியங்களிலும் எம்மை அரவாணிகளென அழைக்கும் நீட்சி இன்றும் தொடர்கிறது. இதையும் நாங்கள் விரும்புவதில்லை. அப்படியாயின் எங்களை எப்படி அழைப்பது? திருநங்கைகளென அழையுங்கள். ஏனெனில் திரு என்றால் புனிதமென்றும் நங்கை என்றால் பெண்ணென்றும் பொருள். புனிதமான பெண் என்பதே திருநங்கையென்பதிலுள்ள அர்த்தம். நானும் சரி என் இனமும் சரி எல்லோருமே புனிதத் தன்மை கொண்டவர்கள். ஆகவே எங்களை திருநங்கையெனவே அழையுங்கள்/ பிரகனப்படுத்துங்கள்.

இப்போது விசயத்திற்கு வருகிறேன். லெனின். எம். சிவத்தின் ரூபா திரைப்படத்தினை நான் முழுமையாகப் பார்த்தேன். ஒரு திருநங்கையென்ற முறையில் இத்திரைப்படத்தை அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் திரையிட்டுக் காட்டியிருந்தார். இத்திரைப்படத்தில் லெனின். எம். சிவம் திருநங்கையை சித்தரித்த விதமும், அவர்களின் உளச்சிக்கல்கள் பற்றி எடுத்துக்காட்டிய விதமும் நேர்மையாகயிருந்தது. உண்மையில் ரூபா திரைப்படம் என்னைப்பற்றிய திரைப்படம். அதற்காகவே அத்திரைப்படத்தை நான் வரவேற்கின்றேன். ரூபாவை மாத்திரமென்றல்ல; திருநங்கைகள்/ திருநம்பிகள் பற்றி யாரொருவர் அவர்களின் உளச்சிக்கல்கள் பற்றியும் , வாழ்க்கைச்சிக்கல்கள் பற்றியும் மிக நேர்மையாக பதிவு செய்து சினிமா/ இலக்கியம் படைக்கின்றார்களோ அவர்களின் படைப்புகளுக்கு இவ்வுலகத்தில் வாழும் ஒட்டுமொத்த திருநங்கைகள் சார்பாகவும் என்னுடைய வரவேற்பினை நான் வழங்கியே தீருவேன்.

4, உங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது. அப்போது நான் பதின்மவயதிலிருந்தேன். எங்கள் தெருவில் என் வயதினையொத்த திருநங்கையொருவர் இருந்தார். அவருடைய பேச்சு, பாவனை எல்லாமுமே ஒரு பெண்ணை ஒத்ததாகவேயிருக்கும். நாதன் என்பது அவருடைய இயற்பெயராகயிருந்தாலும் அவரை யாருமே அப்படி அழைப்பதில்லை. மாறாக “ஒன்பது” என்றும் “பொன்னையன்” என்றுமே அழைப்பார்கள். நான் கூட ஒருதடவை அவரிடம், உன்னிடமிருப்பது ஆண்குறியா? பெண்குறியா? என வினவியிருக்கிறேன். அப்போது இவற்றையெல்லாம் ஒரு ஒற்றைச் சிரிப்பில் அவர் கடந்துபோயிருந்தாலும், உண்மையில் அவர் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பாரென்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். என்னை நினைக்க எனக்கே அருவறுப்பாகயிருக்கிறது. என் வாழ்நாளில் ஒருதடவையாவது அவரைச் சந்தித்து ஓவென்று கதறியழுது என்னுடைய அந்த நாகரிகமற்ற செயலுக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருக்கிறது.

இது ஒரு பக்கமிருக்கட்டும் தனுஜா. ஒரு திருநங்கையாக உங்களிடம் உங்கள் நண்பிகள்/ நண்பர்கள் எவ்வாறு பழகுகிறார்கள்? இந்தச் சமுதாயம் உங்களை எப்படிப் பார்க்கிறது? குறிப்பாக உங்கள் தாய், தந்தை, சகோதரர்கள் உங்களுடன் எவ்வாறு பழகுகின்றார்கள். என்னுடைய மகள் ஒரு திருநங்கையென உங்கள் பெற்றோருக்கு எப்போது / எப்படித் தெரிய வந்தது? ஆரம்பத்தில் அவர்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதை கூற முடியுமா?

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகின்றேன். அய்ரோப்பா போன்ற மேற்குலக நாடுகளில் திருநங்கைகளுக்கென்று/ திருநம்பிகளுக்கென்று தனியான சட்டமோ அல்லது சங்கங்களோ கிடையாது. திருநங்கை/ திருநம்பி என்பது இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் எல்லோரையும் போல் தான் ‘எங்களையும்’ பார்க்கின்றார்கள்/ மதிக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் கற்றுக் கொண்ட விதம் அப்படி. கற்றுக் கொடுக்கும் விதம் அப்படி.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகளில் நிலைமை வேறு. அவர்களைப் பொறுத்தவரை திருநங்கைகள்/ திருநம்பிகள் என்பவர்கள் உலகத்தின் இன்னொரு விளிம்பிலிருந்து வந்தவர்கள். கேலிக்கும், வேதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவிலுள்ள பல திருநங்கைகள்/ திருநம்பிகள் அவர்கள் திருநங்கைகள்/ திருநம்பிகள் என்கின்ற காரணத்திற்காகவே பள்ளிகளில் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இவ்வளவு ஏன்? தெருவில் நடந்து சென்றாலே ஏதோ வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பது போல் பார்க்கின்றார்கள். போதாததற்கு ஒன்போது, அலி, பேடி, பொன்னையன், போன்ற கூச்சல்கள் வேறு.

தனுஜா சிங்கம்.

தனுஜா சிங்கம்.

இப்படியானவொரு ஒரு சமூகத்தில் ஒரு திருநங்கை/ திருநம்பி எப்படி உயிர்வாழ முடியும் சொல்லுங்கள்? ஒரு உதாரணம் சொல்லுகிறேன். இது நடந்தது இந்தியாவிலுள்ள ஒரு குக்கிராமத்திலல்ல; கல்வியறிவு கொண்ட மக்களென வர்ணிக்கப்படுகிற எங்கள் யாழ்ப்பாணீய சமூகத்தில் தான். பிறக்கும்போது ஆணாகப் பிறந்த ஷாலினி பிற்பாடு திருநங்கையாக மாறுகிறார். பேச்சும், நளினமும் அச்சு அசலாகப் பெண் போலவேயிருக்கிறது. பெற்றோருக்கு பேரதிர்ச்சி. எவ்வளவுதான் சொன்னாலும் கேட்கிறார்களில்லை. தாய் தன் பிள்ளையை நினைத்து தானே அருவறுப்படைகிறாள். வீட்டிலுள்ள யாருமே ஷாலினியுடன் முகம் கொடுத்து பேசுகிறார்களில்லை. மனமுடைந்து போகும் ஷாலினி யாருக்கும் தெரியாமல் இந்தியாவிற்குச் சென்று விடுகிறாள். அங்கே தனக்குத் தெரிந்த நபரொருவரின் மூலம் சத்திரசிகிச்சை செய்துகொண்டு முழுமையான பெண்ணாக மாறுகிறாள். ஆனாலும் மறுபடியும் ஊருக்குச் செல்ல அவளுக்கு அச்சம்; தன் தாய், தந்தையை நினைத்து அச்சம்; தன் நண்பர்களை நினைத்து அச்சம்; தான் வாழும் தன் சமூகத்தினை நினைத்து அச்சம். அச்சம் அச்சம் அச்சம்.

சொல்லவே முடியாத வேதனை அவளுள் பீறிடுகிறது. வார்த்தைகளற்று மௌனமாக அழுகிறாள். முடிவில், விதி அவளை ஒரு பிச்சைக்காரியைப் போல் தெருக்களில் அலைய விடுகிறது. நான் இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட ஷாலினி இந்தியாவிலுள்ள ஏதாவவொரு தெருவில் உறங்கிக் கொண்டிருக்கலாம்.

இப்படி எண்ணற்ற கதைகள். திருநங்கைகள்/ திருநம்பிகள் தங்களை பொதுவெளியில் அடையாளப்படுத்தவே தயங்கும் ஒரு சூழல்தான் இங்கு இருக்கிறது. அந்தளவிற்கு இவர்கள் அயோக்கியவாதிகளாக இருக்கின்றார்கள். சமீபத்தில் அருவி என்றொரு திரைப்படம். அதிலொரு திருநங்கை இப்படிச் சொல்கிறாள்.

‘தெருவுல ஐஸ்வர்யாராய் நடந்து போனாக் கூட விட்டுறானுவ; ஆனா, அரவாணிங்கன்னா வைச்ச கண்ணு வாங்காமப் பாக்குறானுங்க.’

இது உங்களுக்கு வேண்டுமென்றால் பகிடியாகத் தெரியலாம். ஆனால் எங்களை பொறுத்தவரை எங்களின் ஒட்டுமொத்த வலியே அந்த வாக்கியம்தான். இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி பெண்களுக்கு எதிரான வன்முறையேதேனும் நடந்துவிடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு பெண்களுக்கான பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே குறியாக இருக்கிறது. இது தவறு. பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்வதால் நடக்கப்போவது எதுவுமேயில்லை. ஏனெனில் இது அயோக்கியர்கள் சூழ் உலகு. அயோக்கியர்கள் என்றுமே திருந்தப்போவது கிடையாது. வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம். அந்த அயோக்கியர்களைப் பிடித்து வந்து அவர்களுக்கு சீரான கல்வியைக் கற்றுக்கொடுங்கள். நல்ல பழக்கவழங்கங்களை சொல்லிக் கொடுங்கள். அதுவொன்றே மாற்றத்துக்கான வழி.

5, திருநங்கை ஆர்வலரான உமா கைலாசநாதன் ஒரு நேர்காணலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“எனக்கு அய்ந்து வயதாகயிருக்கும்போது என்னுடைய நண்பியொருவர் என் குறியினைக் கண்டு வியப்படைந்து ஏன் உன்னுடைய குறி எங்களுடையதைப் போலில்லாமல் ஆண்களுடையதைப் போலிருக்கின்றதெனக் கேட்டார். அந்தக் கேள்வி எனக்குள் பல மாற்றங்களையும், கேள்விகளையும் உருவாக்கின. ஆணென்றால் லிங்கமிருப்பதும், பெண்ணென்றால் யோனியிருப்பதும்தான் இயற்கை. ஆனால் எனக்கு அவ்வாறு இல்லையே? இது குறித்து பலரின் கேலிகளுக்கும், அவமானத்திற்கும் உள்ளானேன். சிலரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்பட்டேன். அதன் பின்பே லிங்கமாகயிருந்த என்னுடைய குறியினை சத்திரசிகிச்சையின் மூலம் யோனியாக மாற்றிக்கொண்டேன்.”

28277301_999691156866672_826981529820670318_n

தனுஜா சிங்கம்.

 

உமா கைலாசநாதனின் மேற்கண்ட குறிப்பினை வாசித்தபோது மிகுந்த ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் ஒரு தனிமனிதனுக்குப் பயந்து ஒரு சமுதாயத்திற்குப் பயந்து இயற்கையாகவே அமைந்த ஒரு விடையத்தை மாற்றிக்கொள்ளல் என்பது எப்பேர்ப்பட்ட அபத்தம். ஏற்றுக்கொள்ளவே முடியாத கலாச்சார சீர்கேடல்லவா இது. நீங்கள் இந்த விடையத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள் தனுஜா? ஒரு திருநங்கையாகப்/ திருநம்பியாகப் பிறந்து சந்திரசிகிச்சையின் மூலம் முழுமையான பெண்ணாக/ ஆணாக மாறுவது எல்லோருக்குமே சாத்தியம்தானா?

சர்வதேச ரீதியாக எடுத்துக்கொண்டால் திருநங்கைகளுக்கு/ திருநம்பிகளுக்கென்று ஒரு அமைப்போ அல்லது குடும்பமோ கிடையாது. தங்களுடைய வாழ்க்கை முறைமையினை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஏனெனில் இன்னொருவருக்குப் பயந்து தன்னுடைய வாழ்க்கை முறைமையையோ, உறுப்புகளையோ மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் இங்கு எவருக்குமே கிடையாது. இன்னொன்று, தன்னுடைய உறுப்புகளை மாற்றிக்கொண்டுதான் தன்னை இன்னாரென அடையாளப்படுத்தவேண்டுமென திருநங்கைகளோ/ திருநம்பிகளோ விரும்புவதில்லை. மனதளவில் தான் பெண்ணெனவும், ஆணெனவும் நினைத்துக்கொண்டாலே/ நிருபித்துக்கொண்டாலே போதுமென நினைப்பவர்களே அதிகம்.

ஆனால், தமிழ் திருநங்கைகளை/ திருநம்பிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கென்று ஒரு அமைப்பிருக்கின்றது; குடும்பமிருக்கின்றது. கூடவே சமுதாயத்தின் கேலி, கிண்டல்களுமிருக்கின்றன. சிலர் இதை, “நீ இன்னும் உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொள்ளவில்லையா? ; இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ‘மணியடித்துக்’ கொண்டிருக்கப்போகிறாய்?” என்று வேடிக்கையாகக் கேட்பார்கள். ஆகவே இதிலிருந்து தப்புவதற்கு நாங்கள் உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொள்வது அவசியமாகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையின் பின்பு ஒரு சடங்கிருக்கிறது.

6, லஷ்மி நாராயண் திரிபாதி தான் ஹிஜ்ரா ( HIJRA ) என்னும் வம்சத்தைச் சேர்ந்தவள் என்கிறார். ஹிஜ்ரா என்றால் என்ன?

ஹிஜ்ரா என்றால் EUNUCHS. அதாவது ஆண்குறி அறுக்கப்பட்டவர்கள். முகலாய அரச குடும்பங்களில் இந்தப் பழக்கம் இருந்தது. அதாவது ஆண்குறி அறுக்கப்பட்ட பணியாளர்களையே தங்களின் அரண்மனையில் பணிசெய்ய அனுமதிப்பார்கள். தங்களின் மனைவிமார் தங்களைத் தவிர வேறு யாருடனும் கலவியில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்தத் திட்டம். முகலாயர்கள் என்று மாத்திரமல்ல ; துருக்கியர்கள், ஈரானியர்கள், சீனர்கள் என்று அந்தக் காலத்தில் வெகுவாக ஆண்குறி அறுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.

ஆண்குறி அறுக்கப்பட்டவர்களை இந்தியில் ஹிஜ்ரா என்பார்கள்.

தொடரும்…!

https://www.sathana.org/அர்த்தநாரீஸ்வரி/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.