Jump to content

கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்துறைகளின் மூடுவிழாவும்


Recommended Posts

கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்துறைகளின் மூடுவிழாவும்

 

அனுதினன் சுதந்திரநாதன்  

 

கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாகவுள்ள நிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் 15இல் முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, இன்று (ஜூன் 15) முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பிக்க இருக்கிறது.  

ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளில் பயணிக்கின்றபோது, வீதிக்கொரு கடை மூடப்பட்டு இருப்பதையும் அவை மீளத் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் வாங்குகின்ற பொருள்களில், சில வர்த்தகக் குறியீடு கொண்ட பொருள்கள் காணாமல் போயிருப்பதை அவதானித்து இருப்பீர்கள். இப்படியாக, நமது அன்றாட வாழ்வில் கண்ணுக்குத் தெரிந்த தொழிற்றுறைப் பாதிப்புகளைப் பார்க்கின்ற நாம், நமக்குத் தெரியாமல் நடக்கின்ற தொழிற்றுறைப் பாதிப்புகள் தொடர்பிலும் அதன் தாக்கம் நம்மை நோக்கி வருவது தொடர்பிலும் கவனஞ்செலுத்துவது மிக அவசியமானதாகும். 

 கொரோனா வைரஸ் காரணமாகத் தொழிற்றுறை முடக்கப்பட்டிருந்த போது, அதன் பாதிப்புகள் குறித்து இலங்கையின் தொழில் திணைக்களம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள், தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இந்த முடிவுகள், அதிர்ச்சி தருபவையாகவும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குத் தொழில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி இருப்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. 

சர்வதேசத் தொழிலாளர் அமைப்புத் தரவுகளின் பிரகாரம், உலகளாவிய ரீதியில், 436 மில்லியன் நிறுவனங்கள் மூடப்படுகின்ற மிக பாரதுரமான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டி இருந்தது. அது தவிரவும், பூகோள ரீதியில் 68 சதவீதமான தொழிற்றுறைசார் ஊழியர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாக உள்ளதெனவும் எச்சரித்திருந்தது. இதற்கு, இலங்கையும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில்தான், இலங்கையின் தொழில் திணைக்களத்தின் ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 

இலங்கையின் தொழில் திணைக்களத்தின் கீழ், 86,000 நிறுவனங்கள், 2.6 மில்லியன் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்தத் தொழிற்படையின் அளவு, 8.6 மில்லியனாகக் கணக்கிடப்படுகிறது. இதில், தனியார்த் துறையில் 3.5 மில்லியன் பேரும் சுயமாகத் தொழில் புரிவோர் 2.7 மில்லியன் பேராகவும் உள்ளனர்.  

இந்த 8.6 மில்லியன் தொழிற்படையில், சுமார் 30 சதவீதமான தொழிலாளர்கள், இலங்கைத் தொழில் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த 30 சதவீதமானவர்களை உள்ளடக்கிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்ட ஆய்வுக்கான வினாக்கோவைக்கு, சுமார் 2,764 நிறுவனங்கள் மாத்திரமே, முழுமையான பங்குபற்றலை வெளிப்படுத்தி இருந்தன. இது, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் நான்கு சதவீதத்துக்கும் குறைவானதாகும். ஆனால், இந்த நான்கு சதவீத நிறுவனங்களின் முடிவுகளே, இலங்கையின் தொழிற்றுறை மிகவும் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.  

மார்ச் மாதத்துக்குப் பிறகு, இலங்கையின் தொழிற்றுறையில் இருக்கக்கூடிய 90 சதவீதமான தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மீண்டுவந்த சுற்றுலாத்துறை, மீண்டும் முழுமையாக முடங்கியதுடன், போதுமான மூலப்பொருள் இறக்குமதி இல்லாமல், ஏனைய உற்பத்தி, சேவைத் துறைகளும் ஏன், பெரும்பாலான ஏற்றுமதித் துறைகளும் முடங்கியிருந்தன. 

இவற்றைத் தவிர்த்து, இலங்கையின் வருமானத்தில் 8% - 10% பங்களிப்பை வழங்குகின்ற வெளிநாட்டுத் தொழிலார்களின் வருமானமும், இந்தக் காலப்பகுதியில் 100 சதவீதமாக முடங்கியது. இந்த முடக்கங்கள், குறுகியகாலம், நீண்டகால அடிப்படையில் நேரடியாகவும் மறைமுகமாகவும், தனிநபர் வருமானத்தில் சரி பொருளாதாரத்திலும் தாக்கத்தைத் தர ஆரம்பித்திருக்கின்றன. 

இந்த ஆய்வுகளில் பங்குகொண்ட நிறுவனங்களில் சுமார் 58 சதவீதமான நிறுவனங்கள், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனங்களாக இருக்கின்றன. இலங்கையின் ஒட்டுமொத்தத் தேசிய உற்பத்தியில், சுமார் 37 சதவீதப் பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணத்தில் இருக்கக் கூடிய இந்த நிறுவனங்களின் பங்குபற்றல் முடிவுகள், மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. 

ஆய்வுகளின் பிரகாரம், பங்குபற்றிய நிறுவனங்களின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 596,022ஆக இருக்கிறது. இவர்களில் 213,011 பேர் மட்டுமே மே மாதம் முதல் மீண்டும் தொழிலில் பங்குபெற்ற வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அர்த்தம், மிகுதியாகவுள்ள 383,011 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதல்ல. ஆனால், இந்த ஊழியர்களின் எதிர்காலமானது, நிச்சயமற்றதாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என்பதே ஆகும். இது, ஆய்வுகளுக்கு உள்வாங்கப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 64 சதவீதமாகும். அப்படியாயின், இலங்கை முழுவதும் பரந்துள்ள நிறுவனங்களின் நிலையையும் அதில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் நிலையையும் நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 

அதுபோன்று, இந்த ஆய்வில் பங்குகொண்ட 2,764 நிறுவனங்களில் 1,084 நிறுவனங்கள், அதாவது 39 சதவீதமான நிறுவனங்கள், மே மாதம் முதல் தங்களால் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்க முடியாது என்ற உண்மையையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த 1,084 நிறுவனங்களில் 58 சதவீதமானவை, உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்களாக இருக்கின்றன. அதாவது, ஆடைக் கைத்தொழிற்றுறை போன்றவற்றை உள்ளடக்கியவையாகும். இது, நாளாந்த மாதாந்தச் சம்பளங்களை நம்பியிருக்கும் அடிமட்ட வாழ்வியலைக் கொண்ட ஊழியர்களை, மிக அதிகளவில் பாதிக்கப் போகின்ற அபாயத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.  

இது ஆய்வில் பங்குபற்றிய நிறுவனங்களில் தொழில்புரியும் சுமார் 153,702 ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையைக் காட்டுகிறது. அப்படியாயின், இலங்கையின் ஒட்டுமொத்த ஊழியப்படையில் சுயதொழில் செய்வோர், ஊழியர்களாக இருப்பவர்கள், வகைப்படுத்தப்படாத ஊழியர்கள் போன்றோரின் நிலை என்ன என்கிற கேள்வி, மிக மோசமான எதிர்காலத்தையே காட்டி நிற்கிறது. 

அதுமட்டுமல்லாது, இந்த ஆய்வில் பங்குபற்றிய ஐந்து சதவீதமான நிறுவனங்கள், தங்கள் வணிகச் செயற்பாடுகளை மூடிவிடுவதற்கான ஆலோசனையில் இருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அப்படியாயின், மிகவிரைவில் 138 நிறுவனங்கள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதுடன், அதில் தொழில்புரிகின்ற தொழிலாளர்களின் எதிர்காலம், கேள்விக் குறியாகவும் மாறப்போகிறது. அதுமட்டுமல்லாது, இந்தக் காலப்பகுதியில் ஏனைய தொழிற்றுறைகளில் புதிய ஆட்சேர்ப்புகளையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இதனால், வேலை இழக்கின்றவர்களுக்குப் புதிய தொழில்வாய்ப்புகளும் இல்லாதநிலை உருவாகின்றது. இவையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனிநபர் வாழ்வியலிலும் பொருளாதாரத்திலும் மிகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றன. 

அப்படியாயின், இதற்கான தீர்வு என்ன, இதில் அரசாங்கத்தினதும் நிதி நிறுவனங்களினதும் பங்களிப்பு என்ன? எவ்வாறு இந்த நிறுவனங்களினதும் தொழிலாளர்களினதும் வாழ்க்கையில் இவர்களால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்? 

இந்த ஆய்வறிக்கையிலேயே, குறுகிய, நடுத்தர, நீண்ட காலங்களின் அடிப்படையில் இதற்கான விடைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல், இலங்கை அரசாங்கம் நாளாந்த வருமானத்தை இழந்தோரைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், சுமார் 1.7 மில்லியன் பேர் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யதார்த்த நிலைமையோ தலைகீழானதாக இருக்கிறது. இந்தத் திட்டமானது, பொருத்தமான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்கிற குற்றசாட்டையே காண முடிகிறது. அதிலும், அரச வேலையில் இருப்போரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக, இந்த உதவித்தொகை முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 

இதற்கு அடுத்து, இந்த ஆய்வறிக்கையில் நிதி நிறுவனங்கள் குறுகியகால அடிப்படையில், நிதி ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமானது எனவும் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நிஜத்தில் நிலைமை தலைகீழாக இருக்கின்றது. இந்த ஆய்வில் பங்குபற்றிய நிறுவனங்களில் வெறும் மூன்று சதவீதமான நிறுவனங்களுக்கே, மே மாதம் வரை நிதி நிறுவனங்களின் நிதியுதவிகள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன. சுமார் 48 சதவீதமான நிறுவனங்களின் கோரிக்கைகள் இன்னமும் பரிசீலனையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால், மிக விரைவாக உதவிகளைப் பெற்றுத் தங்கள் வணிகத்தைப் பிழைக்கச் செய்யும் முயற்சியில் இருக்கும் தொழில் தருநர்களுக்கு, இது மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிறது.  

அரசாங்கம், வெறுமனே தங்கள் பரிந்துரைகளை அறிவிப்புச் செய்வதோடும் வெளியிடுவதுடனும் நிறுத்திக்கொள்கிறது. அந்தப் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா, இல்லையா என்பதைக் கண்காணிப்பதில் பின்தங்கி நிற்கிறது. இதனால் ஏற்படுகின்ற விளைவுகள், ஆட்சி செய்யும் தமக்கே பாதமாக வரப்போகிறது என்பதை உணராமல், வெறுமனே தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதென்பது, வேடிக்கையாக இருக்கிறது.  

இதற்கு அடுத்ததாக, தொழில் திணைக்களம் தமது தொழிலாளர் தொடர்பிலான சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்திருக்கிறது. இதன் அர்த்தம் என்னவெனில், இந்தக் கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தின் எதிர்பாராத நிதியியல் தாக்கமானது, இறுதியில் அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்களையே பாதிப்பதுடன், அவர்கள் வேலையிழக்கவும் காரணமாக அமைகிறது என்பதைச் சுட்டி காட்டுகிறது. இந்தச் சந்தர்ப்பங்களில், ஊழியர் சார்பாகச் செயற்பட வேண்டிய சட்டங்களிலுள்ள வினைதிறனற்ற தன்மை, அவர்களை முழுமையாகப் பாதுகாப்பதாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதாவது, இந்தக் கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் ஊழியராக இருக்கக் கூடியவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதே என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். 

ஒட்டுமொத்தமாக ஆய்வின் பிரகாரம், கொரோனா வைரஸ் பரவுகைக்குப் பின்னரான தொழிற்றுறை நிலைமையானது, ஒரு நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இன்றிலிருந்து 100 சதவீத அடிப்படையில் வணிகங்களும் தொழிற்றுறையும் இயங்கத் தொடங்கினாலும், அவை மீளவும் சாதாரண நிலையில் வருமானத்தை ஈட்டிக்கொள்ள, குறைந்தது 3-6 மாதங்களையாவது கடக்க வேண்டியதாக இருக்கும்.  

இந்தக் காலப்பகுதி வரை, இந்தச் சிறிய, நடுத்தர நிறுவங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா என்கிற கேள்விக்கான பதில், தொக்கியே நிற்கிறது. இதற்கு அடுத்து, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் நிலை என்ன ஆகப்போகிறது என்கிற கேள்விக்கும் விடையில்லாத சூழ்நிலையே இருக்கிறது.  

எனவே, இந்த மாதிரியான சூழ்நிலையில் அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் இந்த நிறுவனங்களின் தொடர்ச்சிக்கு, வினைதிறன் வாய்ந்த வகையிலான உதவிகளையும் மானியங்களையும் வழங்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.  

அத்துடன், நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் தமது ஊழியர் நிலையைக் கவனத்தில் கொண்டு, அவர்களைப் பணிநீக்கம் செய்யாமல், எந்த வகையான வழிமுறைகளின் மூலமாக வணிகத்திலேயே வைத்திருக்க முடியும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில், வணிகங்கள் என்ன செய்யலாம் என்பதை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

http://www.tamilmirror.lk/வணிகம்/கொரோனா-வைரஸ்-தாக்கமும்-தொழிற்றுறைகளின்-மூடுவிழாவும்/47-251881

 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.