Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெட்ரோலியம்: நிலமகளின் குருதி

Featured Replies

நரேந்திரன்

"எப்புகழ்ச்சி செய்வார்க்கும் ஓய்வுண்டாம் ஓய்வில்லை

தற்புகழ்ச்சி செய்வார் தமக்கு"

- அசோகமித்திரன், அ.மி. கட்டுரைகள், பாகம் 1, பக்கம் 297

முதலில், உலக எண்ணெய் வயல்கள் திடீரென வற்றிப் போய்விடுவதாக ஒரு கற்பனை செய்து கொள்வோம். விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனை இல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரம் நசிந்து போய்விடக்கூடும். ஆகாய விமானங்களுக்கும், கப்பல்களுக்கும், கார்களுக்குமான தேவை எதுவுமில்லாமல், ஜனங்கள் மீண்டும் சைக்கிள்களையும், மாட்டு வண்டிகளையும், ஜட்கா வண்டிகளையும் உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டியதிருக்கலாம். வழமை போல அரசியல்வாதிகள் இளிச்சவாயர்களின் தோள்களின் மீதமர்ந்து (வேறு யார்? நீங்களும் நானும்தான்!) சவாரி செய்ய......முடிவே இல்லாமல், கற்பனைக்கு எட்டும் வரை எழுதிக் கொண்டே போகலாம்.

"உலகின் எண்ணெய் வயல்களில் இருக்கும் பெட்ரோலிய வளம் இன்னும் இருபது வருடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது; அதற்குப் பின் பெட்ரோலிய உற்பத்தி மிகவும் குறைந்து போகும்" என்பது பொதுவாக "பெட்ரோலிய" வல்லுனர்களின் கருத்து. இதில் வேடிக்கை என்னவென்றால், இதே செய்தி கடந்து நூறு ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது என்பதுதான். இதில் மிக முக்கியமானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜியாலஜிஸ்ட் கிங் ஹப்பர்ட் (Kind Hubbert) என்பவர் எழுதிய ஒரு கட்டுரை.

அமெரிக்காவின் இராக்கிய ஆக்கிரமிப்பிற்கு அடிப்படையானது என்று கூறப்படும் மேற்படிக் கட்டுரை எழுதப்பட்டது 1956 ஆம் வருடம். அதில் 2006-ஆம் வருடம் உலக பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் வறண்டு போகும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் ஹப்பர்ட். அவரது கட்டுரையின்படி சென்ற வருடமே நாமெல்லோரும் மாட்டு வண்டிகளை உபயோகிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே ஏன்? அதற்கு ஹப்பர்ட் குறித்தும், அந்த கட்டுரை எழுதப்பட்டதற்கான பின்னனி குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹப்பர் தியரி ஒரு ஹம்பக் தியரி என்று சொல்பவர்களும் உண்டு. அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.

ஹப்பர்ட், உலகில் மொத்தம் 1250 பில்லியன் பேரல் பெட்ரோலிய வளம் மட்டுமே இருக்கிறது என்று கணக்கிட்டுச் சொன்னார். 1956 இல். அதற்கு மாறாக, இன்றைக்கு வளைகுடா நாடுகளில் மட்டுமே 734 பில்லியன் பேரல் எண்ணெய் இருக்கிறது. அவை, அறியப்பட்ட மற்றும் அளவிடப்பட்ட (Proven reserves) எண்ணெய் வயல்கள் மட்டுமே. இதில், இராக்கிய எண்ணெய் வளம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய ரிசர்வ் இருப்பது இராக்கில் அதனையும் சேர்த்தால் வளைகுடாவில் இருக்கும் எண்ணெய் வளத்தின் அளவு பலமடங்கு அதிகம் இருக்கும். வளைகுடாவைத் தவிர்த்து, உலகின் மற்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு, எடுக்கத் தயாராக இருக்கும் எண்ணெயின் அளவு 1.189 டிரில்லியன் பேரல்கள். இன்னும் கண்டுபிடிக்கப்படாத எண்ணெய் வயல்கள் ஏராளம்.

இராக்கிலிருக்கும் 74 எண்ணெய் வயல்களில் வெறும் 15 மட்டுமே இயங்குகின்றன. கண்டுபிடிக்கப்பட்டு தயாராக இருக்கும் இராக்கிய எண்ணெய் வயல்களின் எண்ணிக்கை 526. எனவே, இன்னும் இருபது வருடங்களில் எண்ணெய் வயல்கள் வரண்டு போகும் என்பது ஒரு பொய்யான தகவலே. அ·ப்கோர்ஸ் என்றைக்காவது ஒருநாள் எண்ணெய் வயல்கள் வறண்டு போகத்தான் போகின்றன. அது என்ன அட்சய பாத்திரமா அள்ள அள்ளக் குறையாமலிருக்க?

எனவே, இன்றைய எண்ணெய் விலையேற்றம் செயற்கையான ஒன்று. முழு அளவுடன் உலக பெட்ரோலிய உற்பத்தி துவங்கப்படுமாயின், ஒரு பேரல் பெட்ரோலின் விலை ஒரு பேரல் $12 மேல் விற்கக் காரணமே இல்லை. அங்குதான் இராக்கிய ஆக்கிரமிப்பின் சூட்சுமம் இருக்கிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் முக்கியக் குறிக்கோள், இராக்கிய எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவது என்பது போல வெளித் தெரிந்தாலும், அதன் முக்கிய நோக்கம் இராக்கிய எண்ணைய் உற்பத்தியை முடக்கிப் போடுவது என்பதுவே. அமெரிக்க அரசு இயந்திரத்தின் அடி முதல் முடி வரை பரவலாக வியாபித்து, மிக வலிமையுடன் செயல்படும் நியோ-கான்கள் (neo-cons) என்றைழைக்கப்படும் கன்சர்வேடிவ்களும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து அமெரிக்க ராணுவ உதவியுடன் மிகச் சிறப்பாக அதனைச் செய்து முடித்திருகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இராக்கிய ஆக்கிரமிப்பின் முதலாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் போது பேசிய 'குறிக்கோள் நிறைவேறியது (Mission Accomplished)" பேச்சு குறிப்பிடுவது இதனைத்தான். இராக்கிய எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பது என்பது அவர்களைப் பொருத்தவரை இரண்டாம் பட்சமே.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது வேறுவகை விளையாட்டு. இருபத்தி ஓராம் நூற்றாண்டின் புதுவகை விளையாட்டு. இதில், யார் எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம்; யார் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

சதாம் ஹ¤செய்ன் சீன, இந்திய கம்பெனிகளுக்கு எண்ணெய் எடுக்கும் உரிமை வழங்கத் தயாரானதும், அதன் மூலம் உற்பத்தி பெருகி விலை குறைய வாய்ப்புகள் இருப்பதும் இராக்கிய ஆக்கிரமிப்பின் மறைமுக காரணிகளே.

இதனைப் பற்றி விரிவாக பின்னால் பார்க்கலாம். முதலில் கொஞ்சம் பின்னனிச் செய்திகள்.

*

இராக் யுத்தம் துவங்கி சரியாக ஒருவருடம் கழித்து (மே 1, 2003), அமெரிக்க போர்க் கப்பலான USS ஆபிரகாம் லிங்கனின் மீது போர் விமானத்தில் வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் W. புஷ், உடலில் சுற்றி இறுகிய பாராசூட் பட்டைகளுடன், பீ...கள் பிதுங்க நடந்து சென்று அறிவித்த "குறிக்கோள் நிறைவேறியது" பேச்சினை உலக நடப்பில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள்.

வெகு விமரிசையாக, கப்பலின் மேல்தளத்தில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தொலைக்காட்சி மற்றும் செய்திப் பத்திரிகையாளர்களால் கண்டுகொள்ளப் படாமல் விடப்பட்ட இன்னொரு சேதியும் அதி முக்கியமானது. மேற்படி நிகழ்வுக்கு ஒருநாள் முன்பாக, அப்போதைய அமெரிக்க பாதுகாப்புத்துறை செகரட்டரியான டொனால்ட் ரம்ஸ்·பீல்ட், சவூதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குதாகச் சத்தமில்லாமல் அறிவித்தார். சவூதியின் முக்கிய கேந்திரங்களில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவத்தளங்களும் மூடப்பட்டு விட்டன என்கிற செய்தி சராசரி அமெரிக்கர்களைச் சென்றடையவில்லை. அல்லது சென்றடையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இங்கே நிறைவேறிய குறிக்கோள் யாருடையது? ஜார்ஜ் புஷ்ஷினுடையதா அல்லது அமெரிக்காவின் முக்கிய எதிரியான ஒசாமா-பின்-லேடனுடையதா? அமெரிக்க ஜனாதிபதியின் 'குறிக்கோள் நிறைவேறியது" பேச்சைக் கேட்டு ஒசாமா புன்னகைத்திருக்கக் கூடும். அதற்கான காரணங்கள் இல்லாமலில்லை.

பின்-லேடனின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக இஸ்லாமியர்களின் இரு புனித மசூதிகள் அமைந்திருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து கா·பிர்களின் ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடிப்பது. அல்-காய்தாவின் இணையதளத்திற்கு விசிட் அடிப்பவர்கள், அங்கே ஒசாமாவினால், ஆங்கிலத்தில் கொட்டை எழுத்தில் முகத்திலடித்தாற் போல, அமெரிக்காவிற்கு எதிராக எழுதப்பட்டிருக்கும் அறிக்கையினை படிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.

அந்த அறிக்கையை பின்-லாடன் வெளியிட்டது ஆகஸ்ட் 23, 1996-இல். ஏழே வருடங்களுக்குள், அதாவது 2003 ஏப்ரல் 29-ஆம் தேதியன்று அமெரிக்கா, சவூதியிலிருந்து தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. ஆக, இங்கு நிறைவேறியது யாருடைய குறிக்கோள் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இன்னும் ஒன்று உண்டு. அமெரிக்காவின் இருநூறு ப்ளஸ் வருடச் சரித்திரத்தில் ஒருமுறை கூட, கவனிக்க, ஒரே ஒரு முறை கூட, அமெரிக்கா தனது ராணுவத் தளங்களை உலகில் எங்கும் மூடியதில்லை. ஏதேனும் ஒரு நாட்டில் அமெரிக்க ராணுவத்தளம் ஒருமுறை அமைக்கப்பட்டால், அது அமைக்கப் பட்டதுதான். எவ்வளவு உள்நாட்டு எதிர்ப்புகள், சச்சரவுகள், தொல்லைகள் இருந்தாலும் தனது ராணுவத்தளங்களை அமெரிக்கா ஒருபோதும் மூடச் சம்மதித்ததில்லை. அளவிட முடியாத எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்றளவும் ஜப்பானின் ஓகினாவாவில் (Okinawa) செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவதளத்தினை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கூறலாம். இரண்டாம் உலகப் போர் முடிந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் முடிந்த பின்பும், இன்று வரை அமெரிக்கா தனது ஒகினாவா ராணுவதளத்தினை மூடவில்லை.

தன்னை ஒரு "போர்க்கால ஜனாதிபதி" என அறிவித்துள்ள, தேசாபிமானிகளான குடியரசுக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் காலத்தில் இது நடந்ததுள்ளது, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை ஒரு வரலாற்றுப் பின்னடைவே.

ஒருவகையில் பின்-லேடன் மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் குறிக்கோள்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. இருவருக்கும் OIL ஒன்றுதான் குறி.

ஒசாமாவினுடையது, 'ஆபரேஷன் இஸ்லாமிக் லிபரேசன்' (O.I.L). ஜார்ஜ் W. வினுடையது, 'ஆபரேஷன் இராக்கி லிபரேஷன்' (O.I.L). அவ்வளவுதான் வித்தியாசம். இராக் யுத்தம் ஆரம்பித்த காலங்களில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர்கள் ஆபரேஷன் இராக்கி லிபரேஷன் என்றே மீண்டும், மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசல்புரசலாக எதிர்ப்பு கிளம்பியதும் 'ஆபரேஷன் இராக்கி ·ப்ரீடம்' என்று மாற்றியழைக்க ஆரம்பித்தார்கள்.

மார்ச் 2003-ஆம் வருடம், இராக்கிய யுத்தம் துவங்குவதற்கு முஸ்தீபுகள் நடந்து கொண்டிருக்கையில், சதாம் ஹ¤செய்ன் மற்றும் அவரது இரு மகன்களும் அவர்களின் சொந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல 48 மணி நேர அவகாசம் கொடுத்து, அமெரிக்கத் தொலைகாட்சியில் ஜார்ஜ் புஷ் உரையாற்றினார். அந்த உரையின் மிக முக்கிய சாராம்சமாக அவர் இராக்கிய மக்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள், 'எண்ணெய் கிணறுகளை எரிக்காதீர்கள்' என்பதுதான்.

"அமெரிக்கப்படைகள், உங்களைத் துன்புறுத்திய ஒரு சர்வாதிகாரியிடமிருந்து மீட்பதற்காக இராக்கிற்கு வருகிறார்கள்; எனவே, அவர்களுடன் போர் புரிய வேண்டாம்" என்றெல்லாம் அவர் சொல்லவுமில்லை. கேட்டுக் கொள்ளவுமில்லை. அவர் சொன்னதெல்லாம், 'எண்ணெய்க் கிணறுகள் பத்திரம்' என்பதுதான். அவரவர் கவலை அவரவர்களுக்கு!

ஒசாமா பின்-லேடனும் இதற்குச் சிறிதும் சளைத்தவரில்லை. அவரது 1996-ஆம் வருட அறிக்கையில், சகோதர முஸ்லிம்களிடம் எண்ணெய்க் கிணறுகளையும், அது சார்பான தொழிற்சாலைகளையும் புனிதப்போரின் போது அழித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார். கொஞ்ச காலம் சூடானில் எண்ணெய் கிணறுகள் தோண்ட முயற்சிகள் செய்து தோல்வியடைந்த வரலாறு ஒசாமாவினுடையது. எண்ணெயின் வலிமை அவருக்குத் தெரியும்.

இஸ்லாமிய உலகில் நிலவும் ஏழ்மையையோ, அதன் பின்தங்கிய நிலைமையையோ அல்லது அவர்களை அடக்கி, ஒடுக்கும் சர்வாதிகாரிகளிடம் சிக்கி அவர்கள் படும் துன்பத்தை நீக்குவதற்கான வழிவகைகள் பற்றியோ அந்த அறிக்கையில் ஒருவரிச் செய்தி கூட இல்லை. குறைந்த பட்சம் பாலஸ்தீன விடுதலை குறித்துக் கூட ஒசாமாவின் மிக நீண்ட அறிக்கை பேசவில்லை. மாறாக, பல வருடங்களாக அவரது கட்டிட கம்பெனிக்குச் சேரவேண்டிய பணத்தை அவருக்குத் தராமல் இழுத்தடிக்கும் சவூதி அரசாங்கம் குறித்துக் குமுறுகிறார். ஒசாமின் குடும்பம், மெக்கா மற்றும் மதீனாவில் பல கட்டுமானப் பணிகளைச் செய்தவர்கள். மிகப்பெரிய கான்ட்ராக்டர்கள். சவூதி அரச குடும்பத்தினருக்கு மிக நெருங்கியவர்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டும். ஒசாமா பின்-லேடனைப் பிடித்தே தீருவேன் என்று அமெரிக்கா போட்ட சபதம் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்கலாம். காலம் மாறிப் போனது; எனவே காட்சிகளும் மாறிப்போயின என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கக் கூடும். பின்-லேடனைப் பற்றி இனி ஜார்ஜ் புஷ்ஷிற்கு அதிக கவலை இருக்கக் காரணம் அதிகமில்லை. ஒசாமாவின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றை நிறைவேற்றியாயிற்று. எனவே அவரால் அமெரிக்காவிற்கு தொல்லை எதுவும் இனி இருக்காது என்று புஷ் நினைக்கக் கூடும்.

சவூதி அரச குடும்பத்தை மிரட்டுவதன் மூலம், பெட்ரோல் விலை ஏறாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டிற்கும் இனி வலு எதுவும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை ஒசாமா முன்வைத்த போது பெட்ரோல் ஒரு பேரல் $10 டாலர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தது. இன்றைய தேதிக்கு ஒரு பேரல் $70-களுக்கும் மேலாக விற்றுக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் புனிதப் போரில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதுவும், உலக நாடுகளின் கடுமையான கட்டுப்பாடுகளும் ஒசாமா பின்-லேடன் போன்றவர்களின் செல்வாக்கைக் குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிதர்சனம்.

இராக்கை ஆக்கிரமிக்கும் திட்டம் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பதவியேற்ற சிறிது நாட்களிலேயே (பிப்ரவர், 2001) தீட்டப்பட்டது. அதாவது செப்டம்பர் 11 (911) நடப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் அவரின் ஒப்புதலைப் பெற்றுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 11 அத்திட்டத்தை துரிதப்படுத்தியது எனலாம்.

அதுபற்றிய விபரங்களை பின்னர் பார்க்கலாம்.

*

இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது என்றாலும், சில எச்சரிக்கைகள் தருவதில் பாதகம் ஒன்றுமில்லை.

சிற்றரசர்களுக்குள் வாரிசுரிமைப் போர் துவங்கி இருக்கிறது. அப்பாவிகள் மூன்று பேர் அநியாயமாக பலியாகி இருக்கிறார்கள். வழக்கம் போல தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அது குறித்தான செய்திகளை இருட்டடிப்பு செய்திருக்கின்றன. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அரச குடும்பத்துப் பத்திரிகைக்கே இந்த கதி என்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. துவம்சம் செய்து விடுவார்கள்!

அச்சம் தவிர்; ஆண்மை தவறேல் என்பதெல்லாம் ஜனநாயக நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமானது; முடியாட்சியில் அது சாத்தியமில்லை.

நடந்து முடிந்தது முதலாம் வாரிசுரிமைப் போர் என்றாலும் அதுவே முடிவானதும் அல்ல; எதிர்வரும் காலத்திற்கான வெள்ளோட்டமே என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இவற்றையெல்லாம் விட நினைக்கவே மிகவும் அச்சமூட்டும் ஒரு விஷயம், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் மரணமும், அதனைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பாங்கும். எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி போன்றவர்களின் மரணத்திற்குப்பின் தமிழ்நாட்டில் அரங்கேறிய வன்முறைகளை மறந்தவர் மக்கட் பண்பில்லாதவர்!

தமிழ்நாட்டு ஜனங்களுக்காக பிரார்த்தனை செய்வவோமாக!

"We learn from history that we learn nothing from history"

- George Bernard Shaw

உலகச் சர்வாதிகாரிகளுடன் அமெரிக்க அரசாங்கத்திற்குப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை. அதாவது, அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்கிறவரைக்கும். அந்தச் சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இருக்கின்றனவா? No Problemo! We can do business with you! என்பதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் பொதுவான கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. ஒருபக்கம் அவர்களை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மறுபுறம் அவர்களை அரவணைக்கவே செய்து வந்திருக்கிறார்கள். இரானின் ஷா துவங்கி, சிலியின் பினோசே (Pinochet), பனாமாவின் நோரியேகா, பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ், சவூதி அரசர்கள், பாகிஸ்தானின் முஷார·ப்....ஏன் சதாம் ஹ¤செய்ன் கூட அமெரிக்கர்களால் வளர்க்கப்பட்ட ஒரு சர்வாதிகாரிதான்.

எப்போதும் போல அமெரிக்கர்கள் சதாம் ஹ¤செய்னுடன் எளிதாக ஒரு மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான எண்ணெயைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். தொடர்ந்த பொருளாதாரத் தடைகளினால் தடுமாறிக் கொண்டிருந்த சதாம் ஹ¤செய்னும் அதனைத் தயங்காமல் செய்திருப்பார். பின் எதற்காக இந்தத் தேவையற்ற இராக்கிய ஆக்கிரமிப்பு? சதாம் ஹ¤செய்னையே தொடர்ந்து இராக்கை ஆள அனுமதித்திருக்கலாமே? அதற்கான காரணம் மிக வேடிக்கையானது.

சதாம் ஒரு ஊசலாடும் மனோபாவம் (swinger) உடையவர் என்பதால் அவரை விரட்டத் தீர்மானம் செய்தார்கள் அமெரிக்கர்கள். யு. என்.னின் Oil for Food திட்டத்தின் மூலம், உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இராக்கிய எண்ணெய் அளவு மிகக் குறைவானது (தினசரி இரண்டு மில்லியன் பேரல்கள்) என்றாலும், மிக முக்கியமான ஒன்று. எண்ணெய்ச் சந்தையில் விலையை நிர்ணயம் செய்யும் அளவிற்கு வலிமையானது. ஒரு வாரம் சதாம் பாலஸ்தீனிய விடுதலைப் போருக்கு ஆதரவளித்து எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைப்பார். உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஆகாயத்திற்கு உயரும். மறுவாரம் ஒன்றுமே நடக்காதது போல மீண்டும் ஏற்றுமதியைத் தொடர்வார். எண்ணெய் விலை சரியும். அதற்கடுத்த வாரம் வேறொரு காரணம். வேறொரு விலை உயர்வு.

இராக்கிய ஆக்கிரமிப்பிற்கான திட்ட வரைவு, ஹ¥ஸ்டனில் இருக்கும் ஜேம்ஸ் பெக்கரின் நிறுவனமான "ஜாய்ண்ட் கமிட்டி ஆன் பெட்ரோலியம் செக்யூரிட்டி"-இல் தீட்டப்பட்டது. ஜேம்ஸ் பேக்கர், ஜார்ஜ் புஷ் சீனியரின் ஆட்சிக்காலத்தில் செகரட்டரி ஆ·ப் ஸ்டேட் ஆக இருந்தவர் (வெளியுறவுத்துறை அமைச்சர் எனலாம்). சதாம் ஹ¥செய்ன் குவைத்தை ஆக்கிரமிப்பு செய்ய தயாரான நேரத்தில் ஏறக்குறைய அவருக்குப் பச்சைக் கொடி காட்டியவர் இந்த ஜேம்ஸ் பேக்கர். "குவைத்துடன் உங்களுக்கு இருக்கும் எல்லைப் பிரச்சினை குறித்து எங்களுக்கு (அமெரிக்க அரசாங்கத்திற்கு) கருத்து ஒன்றுமில்லை...இந்தப் பிரச்சினை எந்த விதத்திலும் அமெரிக்காவை பாதிக்காது" என்று அவர் சொன்னது ஊடகங்களில் பதிவாகி இருக்கின்றது.

ஹ¥ஸ்டன் உலக எண்ணெய்ச் சந்தையின் தலைமையகம். அமெரிக்காவின் "ஏழு சகோதரிகள்" (Seven Sisters) எனப்படும் மிகப் பெரும் எண்ணெய்க் கம்பெனிகளினின் முக்கிய அலுவலகங்கள் ஹ¥ஸ்டனில்தான் இருக்கின்றன. எனவே, ஜேம்ஸ் பேக்கரின் இன்ஸ்ட்டிடியூட்டும் அங்கு இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளினால் இறுதி செய்யப்பட்ட இராக்கிய ஆக்கிரமிப்புத் திட்டம், ஜார்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதி ஆன ஓரிரு மாதங்களில் அவரால் ஒப்புதல் செய்யப்பட்டது. ஜார்ஜ் புஷ் குடும்பத்தினரின் எண்ணெய் உலகத் தொடர்பு உலகம் அறிந்தது. அவரின் அமைச்சரவையில் இருக்கும் உப ஜனாதிபதி டிக் செனி, காண்டலிசா ரைஸ் போன்றவர்கள் எண்ணெய் கம்பெனிகளில் உயர் பதவி வகித்தவர்கள்.

மேற்படித் திட்டத்தின் (இராக்கிய ஆக்கிரமிப்பு) செயல் திட்டம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. முதலாவது, அமெரிக்க ஆதரவு இராக்கிய ஜெனரல்கள் மூலம் ஒரு உள்நாட்டுப் புரட்சியை உருவாக்கி, அவர்களுக்கு உதவுவது போல இராக்கினுள் நுழைவது. சதாமுக்கு பதிலாக வேறொருவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மூன்றே நாட்களில் இராக்கை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறுவது என்பது. இதன் பிதாமகர் ஜெனரல் காலின் பவல். இரண்டாவது இன்றிருப்பதைப் போல முழுமையான ஆக்கிரமிப்பு. இது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செயல் திட்டம். ஜெனரல் காலின் பவலின் திட்டம் நிராகரிக்கப்பட்டு பென்டகனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் இன்றைய இராக்கிய ஆக்கிரமிப்பிற்கு பல்வேறு காரணங்கள் உலா வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை நீங்கள் அறிந்தவைகளே என்றாலும், சில முக்கியமான காரணங்களின் பட்டியல் இங்கே,

ஒன்று, முன்பே தெரிவித்த ஹப்பர்ட் தியரி மற்றும் உலகச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையும், இராக்கிய எண்ணெய் வளமும்.

இரண்டு, சதாம் தனது எண்ணெய் வருமானத்தின் வரவு செலவுகளை அமெரிக்க டாலரில் இருந்து, யூரோ (Euro) விற்கு மாற்ற முடிவு செய்தமை.

மூன்று, தனது கட்டுப்பாட்டுக்குள் அகப்படாத, சர்வ வல்லமை படைத்த OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை, இராக்கை ஆக்கிரமிப்பதின் மூலம் அமெரிக்கா கைப்பற்றுவது.

நான்கு, தனது தகப்பனாரான ஜார்ஜ் புஷ் சீனியர் குவைத்திற்கு வரும்போது அவரைக் கொல்லச் சதி செய்த சதாம் ஹ¥செய்னைப் பழி வாங்கவே, அவரின் மகனான ஜார்ஜ் புஷ் ஜூனியர் இராக் மீது போர் தொடுப்பது(!).

மேற்கண்டவற்றில் நான்காவது காரணம் எந்த அளவிற்கு உண்மை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். தமிழ் சினிமாக் குப்பைகளைப் பார்த்துப் பார்த்தே மூளை சூம்பிப் போன தமிழ்நாட்டுக் கற்பனை போல இருக்கிறது அது. எனவே அதனைப் பற்றி அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை.

1950களில் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் தோண்டுமிடமெல்லாம் எண்ணெய் கிடைத்துக் கொண்டிருந்தது. இதனுடன் வளைகுடா நாட்டு எண்ணெயும் சேர்ந்து கொள்ள, கச்சா எண்ணெய் பேரல் $2.80 டாலருக்கும் குறைவாக விற்க ஆரம்பிக்க, இதனால் பதற்றமடைந்த அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள், தங்களுக்குள் உற்பத்திக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டன. மேலும் ஜியாலஜிஸ்ட் கிங் ஹப்பர்ட் மூலமாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டு, அதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் வாயை அடைத்தனர் என்பது பொதுவாக உலா வரும் ஒரு செய்தி. அதன் அடிப்படையில்தான் அமெரிக்காவின் இராக்கிய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது என்று கூறப்பட்டு வரும் முதலாவது கருத்து.

இரண்டாவது காரணத்தையும் புறந் தள்ளிவிடலாம். சதாம் தனது வரவு செலவுகளை வேறொரு கரன்சிக்கு மாற்றியிருந்தாலும் அதனால் அமெரிக்க டாலருக்கு அதிக பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மேலும், இன்றைய நிலையில் அமெரிக்க டாலர் வலிமை குறைந்து இருப்பதே ஜார்ஜ் புஷ் போன்றவர்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயம். இதனால் அவருக்கோ அல்லது அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கோ நஷ்டம் ஒன்றுமில்லை. மாறாக கொழுத்த லாபம் மட்டுமே. இதுபற்றி விளக்க வேண்டுமானால் தனியாக வேறொரு கட்டுரை எழுதினால்தான் உண்டு என்பதால் இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

மூன்றாவது காரணம் மிக முக்கியமானது. உலக அரங்கில் எவ்வாறு அமெரிக்கா ஒரு பொருளாதார வல்லரசு எனில் பெட்ரோலிய உலகில் சவூதி அரேபியா அசைக்க முடியாத ஒரு எண்ணெய் வல்லரசு. OPEC-இல் அங்கம் வகிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் சவூதி அரேபியா நினைத்தால் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலைய வைக்க முடியும். ஒசாமா பின்-லாடன் போன்றவர்கள் சவூதியைக் கைப்பற்றத் துடிப்பது இதனால்தான்.

உலக கச்சா எண்ணெய் வளத்தில் பெரும்பகுதி சவூதி அரேபியாவில் இருக்கிறது. OPEC-இல் அங்கத்தினராக இருக்கும் மற்ற நாடுகளும் சவூதி அரசுக்கு அடிபணிய வேண்டிய நிலைமையில் இருக்கின்றன. சவூதி அரசாங்கத்தை எதிர்த்து மற்ற ஓபெக் உறுப்பினர்கள் ஒரே ஒரு பேரல் எண்ணெயைக் கூட, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிலிருந்து அதிகமாக, ஏற்றுமதி செய்ய முடியாது. அவ்வாறு ஏற்றுமதி செய்யும் நாடுகள் இரக்கமில்லாமல் சவூதி அரசாங்கத்தினால் தண்டிக்கப்படும்.

இன்று சவூதி அரேபிய அரசிடம் ரிசர்வில் இருக்கும் ஏராளமான பணத்தை வைத்துக் கொண்டு, எண்ணெய் ஏற்றுமதி எதுவும் செய்யாமல் ஒரு வருடம் வரை அதனால் தாக்குப் பிடிக்க முடியும். அதனை எதிர்த்து, வழங்கப்பட்ட கோட்டாவிற்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளை பழிவாங்க சவூதி அரேபியா கடைப்பிடிக்கும் வழிமுறை தனியானது. தன்னை எதிர்க்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வர, சவூதி அரேபியா கணக்கு வழக்கில்லாமல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து உலக மார்க்கெட்டை கச்சா எண்ணெயால் மூழ்கடிக்கும். பின்னர் எண்ணெய் விலை அதல பாதாளத்திற்குப் போக, சவூதி அரசினை எதிர்த்த நாட்டின் பொருளாதாரம் என்ன கதியாகும் என்பதினை விளக்கத் தேவையில்லை.

எழுபதுகளில், சவூதி அரசின் எதிர்ப்பிற்கும் இடையே அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளின் தூண்டுதல்களுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவை விட அதிமாக பம்ப் செய்த தென்னமெரிக்க வெனிசூலா அரசாங்கம் திவாலானது. பாடம் கற்ற வெனிசூலா அதன் பின் சவூதி அரேபியாவை எதிர்க்கத் துணியவில்லை. இன்றைய வெனிசூலா அதிபரான "சோசலிஸ்ட்" ஹ்யூகோ ச்சாவேஸ் கோட்டா சிஸ்டத்திற்கு கொடிபிடிப்பவர்களில் மிக முக்கியமானவர் என்பது கவனிக்கத் தக்க ஒன்று.

வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் சிதறுண்டு போனதன் பின்னனியிலும் சவூதி எண்ணெய் முக்கிய பங்கு வகித்தது எனலாம். அமெரிக்க ஜனாதிபதியான ரொனால்ட் ரீகனின் பாலிசிகள் சோயித் யூனியனின் சிதறலுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், சவூதி அரேபியாவின் பங்கு அதில் சிறிதளவும் குறையாத ஒன்றே. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக இருந்த சோவியத் யூனியன், தனது சகோதர இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்ததை பொறுக்காத சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை உச்சமாக்கியது. அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைய, சோவியத் ரஷ்யாவின் மிக முக்கியமான வருமானம் அதல பாதாளத்திற்குப் போக, செலவினங்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தானை விட்டு சோவியத் ரஷ்யா வெளியேறியதும், பின்னர் சிதறுண்டதும் வரலாறு.

OPEC-இன் நடவடிக்கைகளில் சவூதி அரசாங்கத்தின் வலிமை தொடர்ந்து அமெரிக்க அரசின் கண்களை உறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. இராக்கைக் கைப்பற்றுவதன் மூலம், தானும் ஒரு ஓபெக் அங்கத்தினராகி விடலாம், அதன் மூலம் பெட்ரோலிய உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம் என்ற நப்பாசை அமெரிக்கர்களுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. இராக்கிய ஆக்கிரமிப்பிற்குப் பின் அதற்கான நடவடிக்கைகளை பால் பிரம்மர் (Paul Bremer) போன்றவர்களின் மூலமாக வெளிப்படையாக அமெரிக்கா செய்து வந்திருக்கிறது.

உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் வளம் இருந்தாலும், இராக் ஒரு சபிக்கப்பட்ட நாடு. அதன் பிரச்சினைகள் டி.இ. லாரன்ஸ் (Lawrence of Arabia) காலத்திலேயே ஆரம்பமாகி விட்டன.

முதலில் இராக்கிய வரலாற்றினைச் சிறிது பின்னோக்கிப் பார்க்கலாம்.

இராக்கிய எண்ணெய் வளத்தின் தலைவிதியை நிர்ணயித்தவர்களில் Calouste Gulbenkian என்பவர் மிக முக்கியமான ஒரு நபர். 1920-களில், வளைகுடாப் பகுதியில் சவூதி அரேபியா என்ற நாடு உருவான ஆரம்ப நாட்களில், இன்றைய இராக்கின் பெரும்பகுதி சவூதி அரேபியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1925-ஆம் வருடம், அப்போதைய சவூதி அரசரைச் சந்தித்ததின் மூலம், இராக்கில் கண்டறியப்பட்ட அத்தனை எண்ணெய் வயல்களிலும் எண்ணெய் எடுக்கும் உரிமையை தனது "இராக்கிய பெட்ரோலியம்' கம்பெனிக்கு வாங்கிய குல்பென்கியான், அதில் 95% சதவீதத்தை மேற்கத்திய எண்ணைய் நிறுவனங்களான, Anglo-Persian, Royal Duch Shell, ·ப்ரான்சின் C.F.P மற்றும் அமெரிக்க ஸ்டாண்டர்ட் ஆயில் டிரஸ்ட் (இன்றைய Exxon Mobile மற்றும் அதன் சகோதர) போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் விற்றார்.

அதனைத் தொடர்ந்து, பெல்ஜியம் நாட்டின் ஒரு ஹோட்டலில் கூடிய மேற்படி எண்ணெய் கம்பெனிகளின் பிரதிநிதிகள், இராக்கிய எண்ணெய்க்குப் புதிய உபயோகம் கண்டுபிடித்தார்கள். அதாவது, முடிந்தவரை இராக்கிய எண்ணையைத் தொடாமல் இருப்பது மற்றும் இராக்கிய எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்தி அதனை மார்கெட்டிலிருந்து தனிமைப்படுத்துவது. மேலும் அக்கட்டுப்பாட்டினை உபயோகித்து உலக மார்க்கெட்டில் எண்ணெய் விலையை ஒரே சீராக வைப்பது போன்ற முடிவுகளை எடுத்தார்கள். அதன்படி, இராக்கிய எண்ணெய் வயல்களின் விவரங்கள் அடங்கிய வரைபடத்தின் மீது, அங்கு கூடியிருந்த எண்ணெய்க் கம்பெனிகளின் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளின் மீது சிவப்பு வட்டமிட்டுக் கையெப்பம் இட்டனர். அத்துடன் தாங்கள் ஒருபோதும் தனியாக, மற்றவர்களின் ஒப்புதலின்றி அந்த எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதில்லை என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இப்படியாக இராக்கிய எண்ணெயின் ஏகபோக உரிமை மேற்கத்திய நாடுகளின் கைகளுக்குச் சென்றடைந்தது.

அந்தத் திட்டம் 1960 வரை மிக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டு வர, இராக்கிய எண்ணெய் வயல்களைக் குத்தகைக்கு எடுத்த மேற்கத்திய நிறுவனங்கள் வெளிப்பார்வைக்கு அந்த எண்ணெய் வயல்களைத் தோண்டுவது போல நாடகமாடினார்கள். எண்ணெய் கிடைக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தோண்டுவது, எடுக்கும் எண்ணெயை மிக நிதானமாக சந்தைக்கு அனுப்புவது போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டன. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பிய இராக்கியர்கள், 1960களின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷெல் நிறுவனங்களுக்கு அளித்த ஒப்பந்தங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி தாங்களே எண்ணெய் எடுக்க ஆரம்பித்தார்கள்.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஒப்பந்தத்தை தூக்கி எறிந்ததைப் பொறுக்காத இங்கிலாந்து அரசாங்கம், பாக்தாதின் குரல்வளையை நெருக்கத் துடித்தது. படையெடுப்பிற்குத் தயாரான பிரிட்டிஷ் அரசாங்கம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் F. கென்னடியின் தலையீட்டினால் பின் வாங்க நேரிட்டது. ஏற்கனவே Cuban Missile Crisis போன்ற பிரச்சினைகளினால் தடுமாறிக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றுமொரு இடத்தில் பிரச்சினையை ஆரம்பிக்க விரும்பவில்லை. எனவே, JKF அளித்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி இராக்கிய அரசாங்கம் தனது வயல்களில் இருந்து எண்ணெய் எடுத்து வெளிச்சந்தையில் விற்க ஆரம்பித்தது.

ஆனால் அவர்களுக்குத் துன்பம் வேறொரு வழியில் தொடர்ந்தது. சவூதி அரேபியா போன்ற அவர்களின் சகோதர அரேபிய நாடுகளே அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் துவங்கின. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட OPEC எனப்படும் Oil Producing and Exporting Countries என்ற கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கிய சவூதி அரேபியா, இராக்கிய எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியது. உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமுடைய நாடாக இருந்தாலும், சவூதி அரேபியாவி விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டிய நிலைமையில் இருந்தது இராக். அந்நாட்டினை விடவும் குறைந்த அளவு எண்ணெய் வளமுடைய இரானுக்கு இணையாகவே அதன் உற்பத்திக் கோட்டா இன்றுவரை இருந்து வருகிறது.

*

சவூதி அரேபிய அரச குடும்பம் குறித்துக் குறைத்து மதிப்பிடும் கண்ணோட்டம் அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகளிடம் இன்றைக்கும் உண்டு. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒட்டகங்களை விரட்டிக் கொண்டிருந்த சவூதிகள் இன்று அப்படியே இருப்பார்கள் என்று நினைப்பது தவறு என்பதை உணர மறுப்பவர்கள் பலர் அமெரிக்க அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியல்ல. இன்றைக்கு சவூதி அரேபிய அரச குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் ஹார்வேர்டிலும், ஆக்ஸ்·போர்டிலும் மற்றும் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள். உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர்கள். இனிவரும் காலங்களில் அமெரிக்கா சொல்வதற்கெல்லாம், முந்தைய தலைமுறையினரைப் போல, தலையை ஆட்டுவார்கள் என்று சொல்வதற்கில்லை.

இராக்கிய யுத்தத்தின் முழுப்பயனையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்றால் அது சவூதி அரேபியர்கள் மட்டுமே. இராக்கிய யுத்தம் துவங்கிய ஒரே வருடத்தில் சவூதி அரேபியாவின் வருட வருமானம் $30 பில்லியனில் இருந்து $120 பில்லியனாக உயர்ந்தது. அதாவது, மூன்று மடங்கு. கடந்த நான்கைந்து வருடங்களில் பெற்ற வருமானத்தைக் கொண்டு சவூதி அரேபியா, OPEC-இல் தன்னை எதிர்க்கும் எந்தவொரு நாட்டையும் அதனால் அடிபணியச் செய்ய முடியும். அதற்காக அமெரிக்கர்களுக்குத்தான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேறு விதமாக.

இராக்கில் சகஜ நிலைமை திரும்பாமலிருக்க தன்னால் ஆன 'பணி'களைச் செய்வதில் சவூதி அரேபியா தயங்கியதில்லை. இராக்கில் பிடிபடும் தீவிரவாதிகளில் பலர் சவூதி அரேபியாவினால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அல்லது அதானால் உதவி செய்யப்படுபவர்கள். தங்கள் மத்தியில் ஷியா பிரிவினர் பலம் பெறுவதை சவூதி அரேபியா ஒருபோதும் விரும்பாது என்பது மட்டுமல்ல, இராக்கில் சகஜ நிலைமை திரும்பி பெட்ரோலிய உற்பத்தி துவங்கப்படுவதால் ஏற்படக் கூடிய எண்ணெய் விலை வீழ்ச்சியும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்க முடியாது.

அமெரிக்கா இந்த விஷயத்தில் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கின்றது. சவூதி அரேபியா ஒருபுறம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு அளிப்பது போலக் காட்டிக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் அவர்களுக்குத் தொல்லைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பதற்கு முன், சவூதி அரேபியா நாளொன்றுக்கு 12 மில்லியன் பேரல் எண்ணெயை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கர்கள் வசமாக சிக்கிக் கொண்டார்கள் என்று தெரிந்ததும், அதனைச் சத்தமில்லாமல் 11 மில்லியன் பேரல்களாகக் குறைத்துக் கொண்டது சவூதி அரேபியா. விளைவு, கச்சா எண்ணெய் ஒரு பேரல் $30 டாலரில் இருந்து $60 டாலருக்கு எகிறியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. இராக்கிய யுத்தம் ஒருபுறம் இருக்கட்டும். அது மட்டுமே இந்த விலை உயர்விற்குக் காரணமில்லை. அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் சேமிப்பில் இருக்கிறது. அதனை உபயோகத்தில் விட்டாலே ஒரு காலன் (சுமார் ஐந்து லிட்டர்) பெட்ரோலின் விலை இராண்டு டாலருக்கும் குறைவாக கிடைக்கத் துவங்கும். ஆனால் அதனைச் செய்ய அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் தயாராக இல்லை. கடந்த இரண்டு வருடங்களில் எரிந்து போன, காத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட, பெரும் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை சரி செய்யாமல் தேவையற்ற முறையில் மெத்தனம் காட்டுவதும், புதிதாக ரீ·பைனரிகள் எதனையும் துவக்காமல் இருப்பதுவும் எண்ணெய் விலை உயர்விற்கு மற்றுமொரு காரணிகள்.

இதனைவிட மிக முக்கியமான காரணம் ஒன்றும் உண்டு. கடற்கரையோர பெரு நகரங்களான ஹ¤ஸ்டன், நியூ ஆர்லியன்ஸ் மற்றும் கலி·போர்னிய நகரங்களில் அமெரிக்காவின் ஏழு பெரிய எண்ணெய் கம்பெனிகளுக்கும் மிகப்பெரும் சேமிப்புக் கிடங்குகள் உண்டு. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நேரத்தில் வாங்கிச் சேமிக்கப்பட்ட அந்த எண்ணெயின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. உதாரணமாக, அமெரிக்காவின் பெரும் எண்ணெய் கம்பெனிகளில் ஒன்றான Exxon Mobile-இடம் இன்றைக்கு இருக்கும் சேமிப்பின் மதிப்பு சுமார் $660 பில்லியன் டாலர்கள் (விலை உயர்விற்குப் பிறகு). மற்ற எண்ணெய் கம்பெனிகளிடமுள்ள சேமிப்பின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்திருக்கின்றது என்பதை விளக்கத் தேவையில்லை. எதிர்பாராமல் தங்கள் மேல் சொரியும் பணமழையை இழக்க அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் தயாராக இல்லை. சென்ற இரண்டு வருடங்களில் மேற்படி எண்ணெய் கம்பெனிகள் ஈட்டிய இலாபம் நம்மைத் தலை சுற்ற வைக்கும். எனவே, அமெரிக்காவில் உடனடி விலை குறைப்பு என்பது எட்டாக் கனவே.

அலாஸ்காவில் எடுக்கப்படும் எண்ணெயில் பெரும்பகுதி ஜப்பானுக்கு விற்கப்படுகிறது என்று உலவும் செய்திகளும் உண்மையாக இருக்கக்கூடும்.

*

இராக்கிய ஆக்கிரமிப்பில் அமெரிக்கா இரண்டு பெரும் தவறுகளைச் (statergic mistakes) செய்தது எனலாம். முதலாவது, இராக்கிய ராணுவத்தைக் கலைத்தது. இரண்டாவது, அரசாங்கம் நடத்துவதில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத பால் பிரம்மரை (Paul Bremer) ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. ஆயுதப்பயிற்சி பெற்ற, அடுத்த வேளைச் சோற்றிற்கு அல்லல்படும் இளைஞன் என்ன செய்வான் என்பதற்கு விளக்கம் எதுவும் தேவையில்லை. பால் பிரம்மர் இராக்கிய ராணுவத்தைக் கலைக்க உத்தரவிடுவதற்கு முன், இராக்கிய ராணுவத்தில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பயிற்சி பெற்ற ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் தீவிரவாதத்திற்க்கு துணை போகக்கூடும்.

இராக்கிய யுத்தம் முடிந்தவுடன் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்த ஜெனரல் ஜோ கார்ட்னர் (Joe Gartner), குர்து மற்றும் ஷியா பிரிவு மக்களிடையே பிரபலமாக இருந்தவர். அவர் தொடர்ந்து பொறுப்பேற்று இருந்தால் இராக்கின் போக்கு மாறி இருக்கலாம். உண்மையான ஜனநாயகம் அங்கு மலர்ந்திருக்க அது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கவும் கூடும். துரதிருஷ்டம் இராக்கியர்களை இன்னும் துரத்திக் கொண்டிருக்கிறது. என்பது மட்டும் நிச்சயம். இனி வரும் காலங்கள் அவர்களுக்கு வளமாக மாறலாம். அல்லது இராக் பல துண்டுகளாகச் சிதறிப்போகவும் கூடும்.

நம்மால் செய்ய இயல்வது ஒன்றுமில்லை. பெட்ரோலிய எண்ணெய்க்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்படும் நாளை எண்ணிக் காத்திருப்பதைத் தவிர.

*

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.