Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் மெய்யியல் -செல்வி-

Featured Replies

தமிழர் மெய்யியல் -செல்வி-

July 17, 2020 Admins ஆய்வுகள், கட்டுரைகள் 0

Meiyiyal-Front.jpg

காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த அறிவுப்பேறு தமிழர்களின் மெய்யியலானது. மண்ணுரிமை என்பது மீமிசை அரசியல் என்று குறிப்பிடும் அறிவர் குணா அவர்கள், தமிழன் தன் உரிமையையும் கொற்றத்தையும் ஒற்றுமையையும் இழந்த வரலாறென்பது மண்ணை இழந்த வரலாறாகவே கருதப்படவேண்டும் என்கிறார். காலங்காலமாக படிப்படியாக நிகழ்ந்த மண்ணிழப்பின் தொடர்ச்சியே முள்ளிவாய்க்காலில் தமிழினவழிப்பின் உச்சமாகி இன்னமும் நேரில் வடிவில் ஆனால் மிகவும் கட்டமைக்கப்பட்டதாகத் தொடர்கின்றது. தமிழரினம் மீதான இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தின் வரலாற்றுப் பகையும் சிங்கள் பௌத்த பேரினவாதத்தின் கோரமும் உலக வல்லாண்மையாளர்களின் கூட்டிணைவுமென எல்லா வெறியாட்டங்களும் ஒன்றாகி தமிழ் இனத்தை ஈழதேசத்தில் வைத்து கொன்று குவித்தது. உழைக்கும் மக்களை இழிந்தவர்களாய் இழிவு செய்யும் வகையில் பிறப்பினடிப்படையில் மக்களைப் வகைப்படுத்தி வர்ணாசிரமம் எனும் இழிவை தமது கருத்தியலாக்கி தமது குமுதாய ஆதிக்கத்தை மேன்மைப்படுத்தும் இழிந்த சூழ்ச்சியை வேதங்களாக்கி ஆரியப் பிராமணியம் செய்த இழி கருத்தியலை ஆரியப் பண்பாடாக தமிழ்நாட்டுக்குள் காவி வந்தவர்கள் வடுக அநாகரிகர்களேவெனும் உண்மையை தமிழ்நாட்டில் இற்றைவரை சாகாதிருக்கும் திராவிட அரசியல் மூடிமறைப்பதால், வரலாற்றின் போக்கில் திராவிட பொய்மைக்குள் கட்டுண்டிருந்த தமிழர்களுக்கு தமிழின அறிவுமரபின் தொன்மையும் செழுமையும் உயிர்ப்பும் தெரியாதே போய்விட்டது. ஆரியப் பிராமணியம் தமிழர்களிடம் திருடியவையெல்லாவற்றையும் மீட்டெடுக்க வேண்டிய தமிழர்கள், திராவிடத்தின் பொய்மைக்குள் கட்டுண்டு அதெல்லாம் தமதல்ல என்று நம்பவைக்கப்பட்டு தமது வரலாற்றுப்பெருமையறியாது வெகுளியாகி தம்முன்னோர்களின் குருதியையும் உழைப்பையும் மாற்றார் திருடிச்செல்ல வாய்பேசாது பல்லிளித்து நின்றது.

பண்பாட்டையும் வாழ்வியலையும் ஒழுங்குபடுத்திய தமிழர்களின் தொன்மையான அறிவுமரபினால் மட்டுமே மாற்றாரின் பண்பாட்டு ஊடுருவல்களையும் அதனால் விளைந்த அறிவுக்கொவ்வாத உள்நுழைவுகளையும் களைந்து தமிழர்களின் வரலாற்றை மீள எழுத முடியும். அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் என்ற மும்மைகளை உள்ளடக்கிய தமிழர்களின் தொன்மையானது மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது காலந்தாழ்த்தாமல் செய்யப்பட வேண்டியதொன்றாகவிருக்கிறது. மெய்யியல் என்பதை மதத்தின்வழி கட்டமைத்து தமிழர் மெய்யியல் என்பது எதுவென்றே அறியாத தமிழர்களாய், அறிவுமரபென்பது யாதென அறிந்திராத பிற்போக்குக் கருத்துமுதல்வாத அணுகுமுறையில் உலகம் தோன்றியது முதலான வரலாற்றை நோக்கும் வைதீக, சைன, பௌத்த, ஏபிரகாமிய மதங்களை நம்பும் மூடர்கூடத்தை அறிவாளிகளாக நோக்கும் நிலைக்கு வந்துநிற்கின்றோம். ஆகவே, தமிழர்களின் மெய்யியலை அவர்களின் வாழ்விலிருந்தும் அந்த வாழ்க்கையின் காலக் கண்ணாடிகளாக காலவோட்டத்தில் இன்று எம்மிடம் எஞ்சியிருக்கும் இலக்கியங்களிலிருந்தும் உய்த்தறிய வேண்டும். அந்தவகையில் இப்பத்தியானது, தமிழர் மெய்யியல் பற்றிய ஒரு அறிமுகத்தை தரமுயல்கிறது.

(“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

என்ற வள்ளுவத்தினை விடவா அறிவு என்பதற்கு வரைவிலக்கணம் கூறிவிடப்போகிறார்கள். குறிப்பிட்ட சொல் தொடர்பான அறிமுகத்திற்கு மேலைத்தேயர்களை அடிக்கோடிடும் வழக்கத்தை தவிர்க்க வேண்டும்.)

உலகைப் புரிந்துகொள்ள முயற்சித்த ஒரு முயற்சியின் பேறாகக் கிடைத்த முறையியலே மெய்யியல் என்று பொருள் கொள்ளலாம். தமிழர்கள் இவ்வுலகை எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்றதன் அடிப்படையில் எழுந்த முறைமையாக தமிழர் மெய்யியல் அமைகிறது. மெய்யியல் என்பதற்கு மேலைத்தேயர்கள் முன்வைக்கும் வரைவிலக்கணங்களே மெய்யியலை அவர்கள் புரிந்துகொள்வதில் எவ்வளவு இடர்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டும். அந்த வகையில் மெய்யியல் என்றால் என்னவென்ற புரிதலைப் பெற தமிழர் மெய்யியல் குறித்தான ஆழ்ந்த தேடலும் புரிதலும் இன்றியமையாதது. இந்த உலகை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புரிந்துகொள்ள மாந்தர்கள் காலந்தோறும் முற்பட்டே வந்துள்ளார்கள். அதேபோல தமிழர்களும் முற்பட்டதன் விளைவாகவே சில முடிந்த முடிபுகளுக்குத் தமிழர்கள் வந்தனர். அவற்றையே தமிழர் மெய்யியல் என்கிறோம்.

தமிழர் மெய்யியல் வாழ்வு என்றால் என்ன என்பதற்கு, உழைப்பின் விளைவைப் பகிர்ந்துகொண்டு ஒருவர் மீது மற்றவர் வல்லாண்மை செலுத்தாத, இயற்கையோடியைந்த யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த சிந்தையையும் வாழ்வியலுக்குள் உள்வாங்கி வாழும் வாழ்வெனலாம்.

தமிழ்க்குமுகம் இன்று தன் அரசியலையும் பொருண்மியத்தையும் வாழ்வியல் முறைமையையும் தீர்மானிக்கும் நிலையிலில்லாமல், அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தமிழனது நுகர்வுப்பண்பாட்டினை உலக வல்லாண்மையாளர்கள் வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகை ஆண்ட இனம் என்ற வெற்றுப்பெருமைக்குள் குளிர்காய்ந்துகொண்டு வாழ்வியலை, வாழ்வியல் தொடர்ச்சியை இழந்துகொண்டிருக்கும் இந்நிலை தொடரின், மரபுவழித்தேசிய இனத்துக்குரிய கூறுகளை இழந்து, மொழியையும் மரபையும் இழந்துநிற்போம். ஆயின், எமது இற்றை வாழ்வியல் முறைமையை கேள்விக்குட்படுத்துவதன் மூலமே இந்த அழிவை நோக்கிய நிலையிலிருந்து மீள முடியும்.

தமிழர்களுடைய மெய்யியல் கோட்பாடுகளை திணைசார்ந்த வாழ்வியலிலிருந்தும் மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையிலும் அயன்மைத் தோற்றம் பெற்றவை என்பதுமாக மூவகை முன்வைப்பிலும் நோக்கலாம் என்பார் ஆதிசங்கரன் அவர்கள். திணைசார்ந்த வாழ்வியலிலிருந்த மக்கள் தமது திணைகளுக்கேற்ற வகையினாலான இயற்கோடியைந்த வாழ்வுமுறைகளையும் வழிபாடுளையும் நிகழ்த்தியிருந்தார்கள். இன்றைய தமிழர்களின் கைகளில் அவர்களது அரசியலும் பொருண்மியமும் இல்லாது ஆக்கப்பட்டமைக்கு பல ஏதுக்கள் இருப்பினும் வாழ்வியலுக்குள் ஊடுருவிய தீங்கான வைதீக கூறுக்களே முதன்மை ஏதுக்களாக இருந்தன. மக்களின் வாழ்வியலினுள் சமயங்கள் எவ்வாறு நுழைகின்றன என்பது பலருக்கும் எழும் கேள்வியாக இருக்கலாம். மாந்தன் தன் வலுவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு ஆற்றலை நம்பும் கணத்திலேயே வாழ்க்கையினுள் வழிபாடு என்பது வந்துவிடுகின்றது. தன்னால் எதிர்க்க இயலாதவற்றையும் தன்னால் இயலாதவற்றை நிகழ்த்தியவைகளையும் புள்ளிகளாகக் கொண்டு வழிபாடுகள் தோற்றம் பெறுகின்றன. இயற்கையை போற்றியும், மக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றத் தம்மை ஒறுத்தோரை நடுகல்லாகவும் கொண்டு திணைகளுக்கு மரம், செடி, மலர் என்ற இயற்கைகளால் மருதம், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை எனப் பெயர் சூட்டி அவற்றிற்கு இந்திரன், முருகன், திருமால், வருணன், கொற்றவை என திணைத் தெய்வங்களும் அமைத்து வழிபட்ட வழிபாட்டு மரபே தமிழர்களின் சங்ககாலத்தில் இருந்தது. அன்றி அந்த வழிபாடுகள் மதங்களாகவும், சமயங்களாகவும் நிறுவனமயப்படவில்லை. ஆயினும் நிறுவனமாகக்கூடிய நிலைக்குள் சமூகம் வந்தது.

புறநானூற்றின்படி,

ஓன்றாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,

ஒளிறேந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லேபரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ (புறம் 335)

என்று நடுகல் கடவுளரை நெல் தூவி வழிபடும் வழிபாடு இருந்ததைச் சுட்டுகின்றது. புறநானூற்றின் 306வது பாடலில் வரும் ‘நடுகல் கைதொழுது’ என்ற அடிகளின் மூலமும் வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றமைக்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஐந்து திணை மக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்குரிய பல சான்றுகள் இருப்பினும் இவை சமயங்களாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தன என்று சொல்வதற்கில்லை. குறிஞ்சியில் முருகனாகவும் முல்லையில் திருமாலாகவும் மருதத்தில் இந்திரனாகவும் நெய்தலில் வருணனாகவும் பாலையில் கொற்றவையாகவும் வழிபாட்டு முதன்மைகளாக இருந்ததே தவிர, இன்று எம் வழிபாட்டு முறைமைகளை வல்வளைப்புச் செய்த இந்துவும் சைவமும் (சைவம் என்ற சொல்லே பாளி மொழியிலிருந்து வந்தது தான்) சங்க இலக்கியங்களில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

தமிழர்களது அரசியல் வரலாறு என்பது வரலாற்று ஆவணங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படும் அதேவேளை சமூகப் பண்பாட்டு ஆவணங்கள் அந்த அரசியல் வரலாறுகளினுள் உள்வாங்கப்படாமையே எமது பண்பாட்டு வரலாற்றினை நாம் இன்னமும் சரியாக வாசிக்கமுடியாதிருப்பதற்கான காரணமாகும் என்பார் பக்தவக்சல பாரதி. தமிழர்களது வரலாறானது சங்ககாலத்துடன் முடிந்துவிடவில்லை. பிற்பட்ட காலங்களுக்கான வரலாறுகள் மதங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்கள் வாழ்வியலுக்குள் மதங்கள் எப்போது உள்நுழைந்தன? எப்போது கோலோச்சின?

தொல்தமிழ் அறிவியலின் உள்ளீடுகளான எண்ணியம், சிறப்பியம், உலகாய்தம், ஏரணம் என இவ்வுலகின் அசைவியக்கத்தையும் அதன் உயிர்ப்பையும் புரிந்துகொள்ள முற்பட்ட நம்முன்னோர்கள் இவ்வாறான கோட்பாட்டுத்தெளிவுகளை உள்வாங்கித் தமது அறிவுமரபின் தேடலில் மெய்யியல்களைப் படைக்கலானார்கள். வழிபாடுகள் சமயமாக கட்டமைக்கப்படும் நிலைக்கு வந்த புள்ளியில் தமிழர்களின் வாழ்வியல் முறைமைகளின் கோட்பாடாக ஆசீவகம் எழுந்தது.

Meiyiyal-1-490x315.jpg

அக்காலத்தில் வைதீகம், சைனம் (சமணம்), பௌத்தம் ஆகிய மதங்கள் புறத்தேயிருந்து தெற்குநோக்கி வந்து தமிழர்களிடத்தில் கடைவிரித்தன. கி.மு 3 ஆம் நூற்றாண்டுகாலத்தில் இவ்வாறான முனைப்பில் இங்கு வந்த அந்தந்த மதப் பரப்புரையாளர்கள், தமிழர் வாழ்ந்த பகுதிகளுக்கு வந்த பின்னர் அவர்கள் கண்டுகொண்ட தமிழர்களின் கோட்பாட்டுத் தெளிவுகளையும் அறிவு மரபுகளையும் கண்டு அதிர்ந்து வியந்து போனதுடன் தமது கடைவிரிப்பு தமிழர்களிடத்தில் எடுபட வேண்டுமெனின் அந்தக் கோட்பாட்டில் சிலவற்றை தம்மாலியன்ற அளவில் உள்வாங்க வேண்டுமெனப் புரிந்து அதனைச் செய்யவும் செய்தனர்.

உண்மையில் இன்று இந்து, சைவம் என்ற பெயரில் எமக்குள் உள்நுழைந்து இருக்கும் வைதீகம் என்றால் என்ன புரிதல் இது பற்றி மேலும் பேசும் எதையும் புரிந்துகொள்ளத் தேவையானது. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால்வேதங்களையும் ஏற்றுக்கொண்டோர் வைதீகர் எனப்படுவர். இந்த நால் வேதங்களின் உட்கிடையென்னவென்றால் பிறப்பினடிப்படையில் உழைக்கும் மாந்தர்களை இழிவுபடுத்தி பிராமணன் என்ற ஆரிய அநாகரிகன் குமுக மேலாதிக்கத்தை அடைவதே. பிராமணன், வைசிகன், சத்திரியன், சூத்திரன் என்ற இந்த வர்ணாசிரமக் கோட்பாட்டின் மூலம் அநாகரிக ஆரியப் பிராமணன் குமுக மேலாதிக்கம் பெற்று உழைக்கும் மண்ணின் மக்களை இழிந்தோராக்கி அவர்களை அடிமைப்படுத்துவதே. உண்மையில் இந்த நால்வேதங்களை உள்ளாய்ந்து பார்த்தால் நாகரீகமடையாத நாடோடி வாழ்நிலையில் ஒழுக்கமென்றால் என்னவென்றறியாத ஒரு கூட்டத்திற்கான வேதங்களாய் அவை அமைவதைக் காணலாம். இந்த ஆரியப் பிராமணியத்திற்கான நால்வேதங்களில் அந்த அநாகரிகக் கூட்டம் சோம பானம் அருந்தி, பசுக்கன்றுகளையும், புரவிகளையும் வேள்வித் தீயில் இட்டுக் கொலைசெய்து வழிபடும் செய்திகள் விரவிக்கிடப்பதைக் காணலாம். இப்படியான வைதீக மதத்தின் வருகையை செம்மார்ந்த வாழ்வியல் ஒழுக்கங்களோடு அறமும் மறமும் அறிவுமரபும் என இயற்கோடியைந்து வாழ்ந்த தமிழர்கள் முதலில் ஏற்றுக்கொள்ளவேயில்லை. அதே காலப்பகுதியில் அதாவது கி.மு.3 ஆம் நூற்றாண்டளாவிலே, சைன (சமணம்), பௌத்த மதத்துறவிகளும் தமிழர்களிடத்திற்கு வந்து தமது மதக் கருத்துகளை இங்கு பரப்பினார்கள். இவர்கள் வைதீக மதத்தை இங்கு பரப்ப வந்த ஆரியப் பிராமணர்கள் போலல்லாது, தமது சைன, பௌத்த மதக் கருத்துகளைப் பரப்பத் தமிழ்மொழியை நன்கு பயன்படுத்தினர். இவர்களின் மதக் கருத்துகளை உள்வாங்கிய தமிழறிஞர்களைக் கொண்டு தமிழில் பல நூல்கள் செய்து தமிழோடியைந்து தமது மெய்யியல் கருத்துகளைத் தமிழர்களிடத்தில் பரப்பினர். ஆனாலும், மெய்யியல் கோட்பாடுகளால் இந்த உலகை பொருள்முதல்வாத முற்போக்குச் சிந்தனை மரபில் உலகைப் புரிந்துகொண்டு முன்னோரையும் அறிவர்களையும் (சித்தர்கள்) இயற்கையையும் போற்றி இவ்வுலக வாழ்வை அறிவார்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்த தமிழர்களிடத்தில் இந்த சைன, பௌத்த மதங்களாலும் செல்வாக்குச் செலுத்தி வளர முடியவில்லை.

பின்பு, கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்த வடுக அநாகரிகரான களப்பிரர்கள் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை வன்வளைத்து ஆட்சி செய்தனர் (கி.பி.250-கி.பி.575). இந்தக் களப்பிரர்கள் அநாகரிகர்களாக இருந்ததோடு தமிழர்களின் செம்மார்ந்த வாழ்க்கையையும் அறிவுமரபையுங் கண்டு பொறாமையும் எரிச்சலுமுற்றதோடு தமிழர்கள் மரபிற்கு எதிரான அத்தனை செயல்களுக்கும் ஊக்கமளித்து வந்தனர். தமிழிசையை கர்நாடக இசையென வழங்கும் நிலையும் இதனாலே ஏற்பட்டது. இந்தக் களப்பிரர்களே சைன (சமணம்), பௌத்த மதங்களை தமிழ் மண்ணில் ஊக்குவித்து நல்லாதரவு வழங்கி வளர்த்து வந்தனர். களப்பிரர்கள் ஆட்சியிலேதான் இவ்வாறு சைன, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வளர்ந்தன. தமிழர்களின் மெய்யியற் கோட்பாடான ஆசீவகமும் அதன் வழிவந்த வழிபாட்டு செல்நெறியும் மோசமாக ஒடுக்கப்பட்டு அவை சைன, பௌத்தர்களால் வன்வளைக்கப்பட்டது.

சைனர்கள் கொல்லாமை, புலாலுண்ணாமை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்கள் என்பதும் புலாலுண்ணாமல் வாழும் பழக்கத்தை மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்தார்கள் என்பதும் பௌத்தர்கள் கொல்லாமையை வலியுறுத்தினார்கள் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. அதுவரை, சோமபானம் அருந்தி, பசுவதையும், புரவி பலியெடுப்பும் செய்ததோடு தமிழர்களின் வழிபாட்டு முறைகளைக் கேவலப்படுத்தி வந்த ஆரிய அநாகரிக வைதீகர்கள் களப்பிரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவதுடன் நலிவுபெறத் தொடங்கிய பௌத்த, சைன (சமண) மதத்திலிருந்து பல விடயங்களை உள்வாங்கித் தாம் முன்னர் கீழ்மைப்படுத்திய தமிழர்களின் திணைவழிபாட்டையும் உள்வாங்கியதோடு தாம் முன்னர் வெறுத்தொதுக்கிய தமிழையும் பயன்படுத்திப் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீகத்தைப் பரப்பும் அமைப்பைத் தொடங்கியது. அவ்வாறே புலாலுண்ணாமை, கொல்லாமை போன்ற விடயங்களை வைதீகம் கைக்கொள்ளத் தொடங்கியது. ஏனெனில், சைன, பௌத்தம் கோலோச்சியிருந்த காலத்தில் தமிழ்மக்கள் அந்த வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுப்போனதால், அதை உள்ளீர்த்தே வைதீகம் வளர்ந்தது.

வைதீகர்களைப் பொறுத்த வரையில் தமது ஆரியப் பிராமணர்கள் குமுக ஆதிக்கம் பெற வழிசெய்யும் நால்வேதங்களை உள்நுழைத்து ஏற்றுக்கொள்ளச் செய்தாலே போதுமென்ற சிந்தையிலே தான் பௌத்த, சமண, தமிழர் பண்பாடு என்பனவற்றை உள்ளீர்த்து சைவம், வைணவம் என்ற பெயரில் மதத்தைப் பரப்பினர். சங்க காலத்திலேயே தமிழர்கள் மருதநிலத் திணைத்தெய்வமாக வழிபட்ட இந்திரனை காமுகனாகக் கதை பரப்பியதோடு, நாம் சங்ககாலத்தில் ஈசன் எனவும் கோச்சடையன் எனவும் போற்றியவரை சிவன் என மாற்றி, எங்கள் கொற்றவை என்ற தாய்த்தெய்வத்தை அம்மன், பார்வதி என்றாக்கி சிவனுக்கு மனைவியெனக் கதைகட்டி, குறிஞ்சித் திணைத்தெய்வமாகித் தமிழர் தெய்வமான முருகனை அவனின் வள்ளி என்ற தமிழ்வேட்டுவிச்சி மனைவியை விட வட இந்திய தெய்வானையை இரண்டாம்தாரமென கதைகட்டி, திருமாலை விஸ்ணுவாக்கி மோகினியாக்கி சிவனுடன் புணர்ந்து பெற்றவனாக எம் ஆசிவக ஐயனார் (அறிவர்) இருப்பதாகக் கதைகட்டி, இவ்வாறு அத்தனை கூத்துமாடி கதைகட்டித் தாம் முன்னர் இழிந்துரைத்த தமிழர் திணைத்தெய்வங்களை வைதீகம் உள்வாங்கி, தமிழோடிசை பாடி தமது வைதீகத்தை பரப்பி வந்தனர். அதுவரை இருந்த சமண, பௌத்த கோட்பாடுகள் உண்மையில் தமிழர் சங்கவாழ்க்கை மரபிற்குப் பொருந்தாமையால் (துறவையும் வாழாதிருத்தலையும் முன்னைப்படுத்துவன) தமிழர்கள் மனதார அதை ஏற்று நடந்தாரெனச் சொல்ல முடியாது. அத்துடன், இவ்வுலக வாழ்வில் தமிழர்கள் கூடிய நாட்டம் கொண்டிருப்பதைக் கண்ட வைதீகம் அப்படி இவ்வுலக வாழ்வினூடு இலகுவாக கடவுளை அடையலாம் என சொல்ல, இறுக்கங்கள் அதிகமான சைன, பௌத்த மதங்களிலிருந்து விடுபட்டு வைதிகம் புதிதாகக் கட்டிய சைவம் (இதுவும் பாளிமொழிச் சொல்), வைணவம் (விண்ணவம் என்ற தமிழர் அறிவியலின் திரிபு) நோக்கி நகர்ந்தனர். இவ்வாறு தனக்கு கண்ணிலேயே காட்டக் கூடாதளவு வெறுப்பாயிருந்த தமிழர் வழிபாடுகளை உள்ளீர்த்தாவது வைதீகத்தை தமிழர்களிடத்தில் புகுத்தும் ஆரிய அநாகரிகச் சூழ்ச்சிக்குள் தம்மையறியது தமிழர்கள் வீழ்ந்து போயினர்.

தமிழர்களின் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்த உலகாயதம், எண்ணியம், சிறப்பியம் போன்ற ஆசீவகம் உள்ளடங்கலான பொருள்முதல்வாத கோட்பாடுகள் சங்கம் மருவிய காலத்தில் பௌத்த, சைன எழுச்சியால் நலிவடையத் தொடங்குகிய பின்பாக, வைதீகத்தின் வன்வளைப்பில் ஆசீவகப் பெரும் கோட்பாடு மடைமாற்றப்பட்டது. அதை அரசும் அரச வல்லாண்மையும் எவ்வாறு நிகழ்த்தின என்பதனை நோக்குதலினூடாக, இழந்துபோன எமது பண்பாட்டு வரலாற்றை அறியமுடியும். இன்றைய அசைவியக்கத்தின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்கு அன்றைய வாழ்வியல் அசைவியக்கங்கள் பற்றி அறிந்திருக்கவேண்டும் என்று பக்தவக்சல பாரதி கூறுவது போன்று பல்துறை இணைவுப்போக்கில் இனவரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை அணுகவேண்டும்.

பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லையாயினும் வரலாற்றின் பெரும் சான்றாகக் கொள்ளப்படும் இலக்கியங்களில் உலகாயுதக் கோட்பாடுகள் இருக்கின்றதா என்பதனை நோக்குவதன் மூலம் கோட்பாடுகள் சார்ந்த அறிவியல் நோக்கே மாற்றாரால் வன்வளைக்கப்படுமுன் தமிழர்களிடத்தில் இருந்ததது என்பதனைக் கூறமுடியும். பௌத்த நூலான மணிமேகலையும் சமண நூலான நீலகேசியும் உலகாய்தத்தை பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. சமணர்களும் பௌத்தர்களும் தங்களுடைய சமயக் கோட்பாட்டுகளிலிருந்து உலகாய்தக்கோட்பாடுகளை எதிர்க்கின்றனர். குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டினை எதிர்க்கவேண்டுமெனில் அந்தக்கோட்பாடு ஏதோவொரு வகையில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்திருப்பதாக உய்த்துணரலாம். ஆகவே, சமணம் பௌத்தத்திற்கு முந்திய ஆசீவகம் என்ற மெய்யியல் கோட்பாடு பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டதா என்ற கேள்வியை எழுப்பி விடைகாண்பதன் மூலம் தமிழர்களின் அறிவுமரபு எத்துணை முற்போக்கானதென விளங்கிக்கொள்ளலாம்.

உலகாய்தம் என்ற பொருள்முதல்வாத நோக்கானது உலகமானது பொருட்களின் சேர்க்கையாலும் மாறுபாடுகளாலும் நிலைத்தும் இயங்கியும் இருக்கின்றன என்று சொல்கிறது. ஆனால், மாறாக உலகம் நிலைபெறுவதற்குரிய ஏதுவாக ஏதோ ஒரு அறிணைக் கருத்தொன்றின் மீது ஏற்றி அவற்றை ஆன்மா, கடவுள் என்ற பல நிழலுருக்களாக அடையாளப்படுத்துவதே அறிவுக்கொவ்வாத கருத்துமுதல்வாதம் என்ற பெருங்கதையாடல் ஆகின்றது.

சங்கப்பாடல்களும் தமிழர் வழிபாடுகளும்

Meiyiyal-2-490x315.jpg

சங்கப்பாடல்களில் தமிழர்களின் வாழ்வியலும் வாழ்வியலினூடே அவர்கள் கைக்கொண்ட கோட்பாடுகளும் விரவிக்காணப்படுகின்றன. அகம் என்னும் மக்களின் வாழ்வியல்பற்றி மட்டுமல்லாது மறத்திற்கும் சான்றுகளாக அமைவன சங்கப்பாடல்களே. பாடல்கள் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முதல் மன்னனுடைய போர், போரின் வெற்றி, இழப்பு என்று பல அடுக்குகளிலும் சங்ககாலத்தை நகலெடுத்து காட்டுகின்றன. மக்களுக்கும் மன்னனுக்கும் அறக்கருத்துகளை போதிப்பவர்களாக புலவர்கள் முதன்மைபெற்றிருக்கிறார்கள். சங்கப்பாடல்களிலே, குறிப்பாகப் புறப்பாடல்களிலே வாழ்க்கையைப் பற்றி புலவர்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என நோக்கின் அவர்கள் இவ்வுலக வாழ்ககையைப் பற்றியே அதிகம் பேசியிருக்கிறார்கள். வாழ்க்கையை மறுத்த துறவறத்தையோ, தான் கொடுத்த தூண்டல்களுக்கு கிடைத்த துலங்கல்களுக்கு காரணம் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கடவுள் என்று தன் தவறுகளை மறைக்கவில்லை.

சங்ககாலத்தில் தொன்மை சமுதாயம் உடைந்து நிலவுடைமைச் சமுதாயமாக மாறும் போது ஏற்பட்ட பொருண்மிய வேறுபாடுகளால் ஏற்பட்ட கருத்து முரண்களால் நிலவுடைமைச் சமுதாயத்திற்கும் தொன்மைச் சமூகத்திற்குமான முரண் உருவாக்கப்படுகின்றது. தொன்மைச்சமுதாயத்தில் சமயம் என்ற நிறுவனப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறைமை இருக்கவில்லை. மாறாக, சடங்குகளும் வழிபாடுகளும் இணைந்த ஒரு தொகுப்பே இருந்திருக்கிறது. இந்த இரண்டு வேறு பிரிவுகளுக்குமிடையிலான நோக்குநிலைகளின் முரண்களும் சங்கப்பாடல்களாக படைக்கப்பட்டிருக்கின்றன. நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சிக்கு நேர்விகித சமனாக பண்பாடு மற்றும் சிந்தனை வளர்ச்சிகளும் வளர்ந்தன. அந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் வல்லாண்மையில் இனக்குழு முறைமை மறைந்துபோகத் தொடங்கியது. பேராசிரியர் வானமாமலை அவர்கள் பேராசிரியர் தேவிப்பிரசாத் சட்டோ அவர்களை மேற்கோள் காட்டி, இனக்குழு அழிவு முழுமையாக இராமல் அரைகுறையாக இருப்பின், இனக்குழு மக்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு எச்சங்கள் தொடர்ந்துவரும் சமுதாயத்திலும் எஞ்சி நிற்கும் என்று கூறுகின்றார். அவ்வாறாயின், இன்றுவரை எச்சங்களைத் தாங்கிய எம் வாழ்வியலின்வழி நோக்கின், பண்டைத் தமிழர்களின் கருத்துலகு உலகாயதம் என்ற பொருள்முதல்வாத கோட்பாட்டினடிப்படையில் இருப்பதைக் கண்டுகொள்ளலாம். புறப்பாடல்கள் நிலம், நீர், தீ, வளி, வான் என்ற ஐம்பூதங்களினையும் நடுவப்படுத்தியே பாடப்பட்டிருக்கின்றன.

‘மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்

வலியும், தெறலும், அளியும் உடையோய்”

என்ற புறப்பாடலை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். அதேபோல தமிழர்களின் வள்ளுவமானது அறம், பொருள், இன்பம் என்ற இவ்வுலக வாழ்க்கையைத் தான் வாழ்வியலாகக் கூறுகின்றதே தவிர, வாழ்க்கையைத் துறத்தலே இன்பம் என்று அவர் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.

இவ்வாறு கண்ணுக்குப்புலனாகாத ஏதோவொன்றின் மீது பழியைப்போட்டு, வாழ்க்கையை யாரோ நடத்துவது போல தமிழர்கள் அன்று வாழவில்லை என்பதை நோக்கவேண்டும்.

2500 ஆண்டுகளில் பன்மடங்கு விரிவாக்கத்துக்கு உட்பட்டிருந்த தமிழ்ச்சமூகம் வெவ்வேறு பண்பாட்டு உள்ளீடுகளை உள்ளீர்த்து, அதன்வழி தனது இயங்கியலைக் கட்டமைத்துக்கொண்டது. ஆயினும் முன்னரே குறிப்பிட்டது போல, தொன்மை இனங்கள் தமது தொன்மை எச்சங்களை மீள மீள உயிர்ப்பித்துக்கொண்டேயிருக்கும் என்ற கூற்றுக்கமைவாக, இப்போது வழக்கிலிருக்கும் அந்தத் தொன்மைகளை கண்டறிந்து இனமீட்பொன்றினைச் செய்வது இன்றியமையாதது. கூட்டுழைப்பு, கூட்டுணவு போன்ற இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட அந்த மரபுவழிவந்த இனக்குழுக் கூட்டுவாழ்க்கையானது இன்று நினைவெச்சங்களாகவே எஞ்சியிருக்கிறது. அந்த இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்த வழிபாட்டு முறைமைகள் சமூக நடைமுறைகளுக்குள்ளால் நிறுவனப்படுத்தப்பட்டமையை நோக்குவோமாயின், தமிழர் மெய்யியல் எங்கே காணாமலாக்கப்பட்டது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இனக்குழு முறைமையிலிருந்து நிலவுடைமைச் சமுதாயமாக மாந்தர்கள் மாறிய போது, அவர்களுடைய பண்பாட்டு மடைமாற்றங்களால், உலகாயதக் கண்ணோட்டம் மாறத் தொடங்கியது. உலகாயதத்தின்வழி வந்த ஆசீவகம் என்னும் மெய்யியலின் வழி ஒழுகிய தமிழர்களிடத்தில் வைதீகம் நுழைக்கப்பட்டது. உலகின் தோற்றத்தையும் பொருட்களின் உற்பத்தி, தோற்றம், மறைவு என்பனவற்றை அணுவியற்கொள்கை மூலமும், உலக இயங்கியலைப் புரிந்தவாறு இயற்கையின் விளைவுகளை அறிவுக்கண்கொண்டு பார்க்கும் அறிவியலையும் கொண்டதே ஆசீவக மெய்யியல் கோட்பாடாகும். ஆசிவகக் கோட்பாட்டினை ஈண்டு ஆய்ந்து அதில் அறுவுபெற்றோர் அறிவர்களாகவும் அண்ணல்கள் என்றும் போற்றப்பட்டனர். எதனையும் பகுத்துப்பார்த்து விளங்கிக்கொள்வதினை அறிவாய்வு முறைமையாகக் கொண்டதே ஆசீவக மெய்யியல். ஆசீவகத்தினுள் இருக்கும் ஈவு என்பது வகுத்ததைக் குறிக்கும். இவ்வாறே தமிழர்கள் நிலத்தினை ஆய்ந்துகொள்ள அதனை ஐந்திணையாகப் பிரித்தது தொடக்கம் அத்தனையையும் பகுத்துப் பார்த்து ஆய்ந்துகொள்ளும் பகுத்தறிவு மரபே ஆசீவகம் எனப்படும். இவ்வாறாக நிலம், நீர், தீ, வளி என்பனவற்றின் சேர்க்கையே, உலகம் முதல் அதிலிருக்கும் பொருட்களிலிருந்து அத்தனை உயிரினங்களிலும் இருப்பதென்று ஆய்ந்த உலகாய்தத்தினுள் இன்னும் மேற்சென்று பகுத்து அது அணுக்களினால் ஆனது என்றவரைக்கும் பகுத்தாய்ந்த மரபு ஆசீவகக் கோட்பாடாய் தமிழர்களிடத்தில் கி.மு.3 ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கம் பெற்றுவிட்டது. ஆசீவக அறிவர்கள் தலைமுறை தலைமுறையாக தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை கற்பித்தவர்களாவார். ஆசீவகம் என்ற சிந்தனைப் பள்ளியினை மையமாகக் கொண்டு கட்டப்பட்ட தமிழர்களின் மெய்யியலை, காலப்போக்கில் வைதீகம் என்ற மாயை காவுகொள்ளத்தொடங்கிற்று. பண்பாட்டு வரலாற்றில் குறிஞ்சி முதல் பாலை வரையிலான வாழ்வு முறைகளிலிருந்து இன்றைய தமிழர்களின் வாழ்வியல் வரையிலான இயங்கியலை நாம் நோக்குவோமாக இருப்பின், அந்தப் பண்பாட்டு மாற்றம் எங்கே எவ்வாறு நிகழ்ந்தது என்பதனைக் கூற முடியும்.

நடுகல் வழிபாட்டுடன் தொடங்கிய தமிழர்களின் வழிபாட்டு மரபுத் தொடர்ச்சியானது மெய்யியல் கோட்பாடுகளாக உருவாகின. வடஇந்தியாவிலிருந்து பௌத்த, சமண, வைதீக கோட்பாடுகள் தமிழர்களிடத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. ஏற்கனவே பண்பாட்டு ஊடுருவல்களால் ஆன்மீகம் சார்ந்த கருத்துமுதல்வாதத்தை ஏற்றுக்கொண்ட அரச வல்லாண்மை பௌத்த, சமண வல்வளைப்பிற்கு துணைபோயிற்று. மதம் என்னும் பெயரால், அதுவரை தமிழர் மரபில் கட்டமைக்கப்பட்டிருந்த உலகாயத வழிவந்த ஆசீவகக்கோட்பாடுகள் பௌத்த சமண கோட்பாடுகளால் மிகைநிரப்பப்பட்டது. சமண, பௌத்த துறவிகள் தமிழில் துறைபோந்து பல நூல்களை இயற்றி, தமிழனை அவனது மொழி மீதுள்ள பற்றால் மெள்ள மெள்ள அறிவார்ந்து ஆராயாது முடிவெடுக்கும் கருத்துமுதல்வாதத்தினுள் தமிழர்களின் சிந்தனை மரபு மழுங்கடிக்கப்பட்டது.

உலகாய்தம் என்னும் பொருள்முதல்வாதத்தினைக் கற்பதற்காக வட இந்திய தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்திருக்கிறார்கள் என்பர் வரலாற்றாய்வாளர்கள். அதுமட்டுமல்லாது சமசுக்கிருதச் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு உலகாய்தம் மிகவும் தொன்மையானது எனவும் பேராசிரியர் வானமாமலை அவர்கள் குறிப்பிடுகின்றார். ஆயின் களப்பிரர்களின் ஆட்சிக்காலத்தில் பொருள்முதல்வாத சிந்தனைகள் அழிக்கப்பட்டன. ஆயினும் சமணம், பௌத்தம் இரண்டுமே பொருள்முதல்வாத கோட்பாடுகளில் சிலவற்றை உள்வாங்கியிருந்தன. அதனாலேயே வைதீக மெய்யியலானது சமண பௌத்த மதங்களின் வீழ்ச்சியின் பின்னரே தமிழர்களிடத்தில் மேலாதிக்கம்பெறத் தொடங்கியது.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் தொன்மம், தேசியம், இலக்கியம் என்ற பன்முகப்பார்வையிலே நோக்கப்படவேண்டியதாக இருக்கின்றபோதிலும், அதன் உள்ளடக்கம் பேசுகின்ற அரசியலையும் நோக்கவேண்டும். கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்ற விவாதங்களுக்கான தலைப்புகளுக்காக மட்டும் உரியதல்ல சிலப்பதிகாரம். மண்ணையும்  மொழியையும் காக்க எழுந்த காப்பியம், தமிழனது மெய்யியலை காக்கத் தவறிவிட்டது. இதில் தத்துவக்கோட்பாடுகள் அதிகம் பேசப்படவில்லையாயினும் தமிழனது தேசிய இருப்புக்கான எல்லாவற்றையும் பேசிய சிலப்பதிகாரம் சமயஞ்சார்ந்து நின்று தமிழனின் மெய்யியலைப் பேசத்தவறியிருக்கிறது. சிலப்பதிகாரத்தினுடைய இரட்டைக்காப்பியமான மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில் மணிமேகலைக்கு அளவைவாதம், சைவம், பிரம்மவாதம், வைணவம், வேதவாதம், ஆசீவகம், நிர்க்கந்தம், உலகாயதம் போன்ற கோட்பாடுகளைக் கற்பிப்பதாகவும் உலகாயதத்தைப் பற்றி பேசுகையில் அதற்கு கண்ணகி மறுத்துரைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு கண்ணகி இறந்ததன் பின்னர் அவளுடைய தந்தை ஆசீவகத்தைப் பின்பற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.

‘கண்ணகி தாதை கடவுளர் கோலத்

தண்ணலம் பெருந்தவத்தவத் தாசீவகர்முன் ’ என்ற அடிகளினூடாக இதனை நோக்கலாம்.  இவ்வாறு எம்மொழி கொண்டே எம் மெய்யியல் சிதைக்கப்பட்டுக்கொண்டே போயிற்று.

Meiyiyal-3-490x315.jpg

ஆசீவகம் என்னும் தமிழர் மெய்யியல் பல மொழிக்குழப்பங்களுக்குள்ளும் உட்படுத்தப்படுகின்றது. திவாகர நிகண்டு என்னும் தமிழ்மொழி நிகண்டு, சாவகர் (சமண சமயத்தைப் பின்பற்றும் இல்லறத்தார்), அருகர் சமணர் ஆகும்;: ஆசீவகரும் அத்தவத்தோரோ’ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது சமணர் என்னும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைப் பொதுமைப்படுத்தும் ஒரு சொல்லாகக் குறிப்பிட்டது. அந்தக் குழப்பத்தின் விளைவாக இன்றுவரையில் தொன்ம ஆய்வுகளில் சைனரும் ஆசீவகரும் ஒருவராகவே நோக்கப்பட்டனர். ஆசீவகத்தை அறிவுசார்ந்து எதிர்நோக்க முடியாதோர் இவ்வாறான பல கருத்துப்போலிகளை உருவாக்கினார்கள். எடுத்துக்காட்டாக ஆசீவகத்தின் ஊழ் குறித்த கோட்பாடானது மெய்யியலின்வழி இயற்கை நிகழ்வைப் பற்றிப் பேச, எதிரானவர்கள் பிறவிகள் தொடரும் பாவம் என்னும் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ வைதீகக் கோட்பாடுகள் சார்ந்தவை என பொருட்திரிபு காட்டுகிறார்கள். ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த சொல்லான அமணர் எனும் சொல், அம்மணர் என்று ஆடையற்றதன்மையைக் குறிப்பதாக தவறாகச் சுட்டப்பட்டதனையும் குறிப்பிடலாம். இவ்வாறான ஆய்வுக்குழப்பங்கள் ஒருபுறமிருக்க, மக்களினூடே எவ்வாறு மெய்யியல் நீக்கம் நிகழ்ந்தது என்பதை நோக்குதல் வேண்டும்.

இயற்கையோடிணைந்த வாழ்வியலினுள் இருந்த மக்களது வழிபாடுகள் முன்னரே குறிப்பிட்டது போல அரச நிறுவனங்களாக மாற்றம் பெறத்தொடங்கின. இந்த நிறுவனமாக்கல் எனும் வடிவ மாற்றத்துக்குட்படாத சில வழிபாட்டு மரபுகள் கிராமிய வழிபாடுகள் என்ற வகையறாவினுள் உட்படுத்தப்பட, அரச விரிவாக்கலுக்கும் அதன் கருத்துருவாக்கங்களுக்குமான நிறுவனமாக உருவாக்கப்பட்ட பெருஞ்சமய மரபு, தமிழர்களது மெய்யியலை கேள்விக்குள்ளாக்கியது. இந்து என்னும் வன்வளைப்பு  அரசியற் கருத்துருவாக்கத்திற்கு வைதீகம் என்னும் பொறிமுறை பயன்படுத்தப்பட்டது. திணைவழிபாட்டில் இருந்த தெய்வங்கள் பாலியல் குற்றவாளிகளாக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்படன. திருமாலும் முருகனும் இரண்டு மனைவியர் உள்ளவர்களாகவும் இந்திரன் பாலுறுப்புக்களைக் கொண்ட கடவுளாகவும் கொற்றவை அடங்காப்பிடாரியாகவும் திரிபுபடுத்தப்பட்டதோடு ஆரம்பித்த வைதீகத்தின் கொட்டம், இன்றுவரை தமிழர் மண்ணில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது. கண்ணுக்குப் புலனாகாதவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கிய  மெய்யியலின் அறிவியல் வழி வந்த தமிழர்களை, ஏதோவொரு பெரும் கடவுள் இருப்பதாக நம்பவைத்து, இல்லாத ஒன்றின்மேல் கேள்விகேட்பதை நினைக்கக் கூட முன்வராத முட்டாள்களாக்கிசமயத்தின் மீது கேள்விகேட்கும் நிலையை அற்றுப்போகச்செய்தது வைதீகம். ‘இந்துக்கள்’ என்ற ஒற்றைச் சிறை தமிழர்களுக்குள் புகுத்தப்பட்டு, இனத்தின் அறிவியலைக் கடத்த வேண்டிய எங்களை கடவுளின் பேரால் கருத்துமுதல்வாதத்தின் காவிகளாக மாற்றச்செய்திருக்கிறது. பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் தமிழ்ச்சமூகத்தின் மெய்யியலாக இருக்கும்வரையிலும் தமிழ்ச்சமூகம் நல்ல கல்வியறிவையும் பெற்றிருந்தது என்று கூறப்படுகின்றது. ஆயின், சங்கமருவிய காலத்தில் அத்தனை கட்டமைப்புகளும் சரிந்துவிழத்தொடங்கின.

தமிழர்களின் தொன்மங்களை தமிழர்களைக் கொண்டே சிதைத்து, சிதைவின்மேல் நின்றுகொண்டு மிகப்பெரிய அறிவியல் மரபில் வந்தோர் நாம் என்பதை மறந்து, வைதீகப் புனைவுகளுக்குள் ஆட்பட்டிருக்கிறோம். வாழ்வியலின் வழி கட்டமைக்கப்பட்டிருந்த மெய்யியல் கூறுகளை வைதீகசமய உருவாக்கத்தினுள் தொலைத்திருக்கிறோம். மரபுவழிப் பண்பாட்டுக்கூறொன்று வாழ்வியலின் வழி கட்டமைக்கப்பட்டதெனின் பிற கூறுகளின் ஊடுருவல் அவ்வளவு இலகுவானதல்ல என்பதையும் அத்தகைய மரபுவழி இனங்களின் இருப்பு பெரும் அரசுருவாக்கல் கொள்கைகளுக்கு குறுக்கீடெனவும் கருதிய அரசுகள் பெருஞ்சமயமரபுகளைக் கட்டமைத்து, அதனுள் மரபுவழிக்கூறுகளையும் உள்வாங்கின. வெளியிலிருந்து நோக்குகையில் எங்களுடைய முறைமை போலவே தோன்றிய அந்தப்பெருஞ்சமய மாயத்தினுள் இலகுவாக உள்நுழைய வைத்தன. ஆயினும் காலப்போக்கில் மரபுவழக்காறுகள் அந்தப் பெருஞ்சமயத்தினுள் கரைந்துபோயின. வாழ்வியலின் வழி வழிபாடுகளையும் கொண்டிருந்தபோது, இன அடையாளமும் மத அடையாளமும் ஒன்றாக இருந்ததனால், காலப்போக்கில் வைதீகத்தின் அடையாளங்கள் தமிழின அடையாளங்களாக்கபடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்தக் கருத்துருவாக்கத்தின் அடிப்படையிலேயே இந்து அடையாளங்கள் தமிழடையாளங்களாக மாற்றப்பட்டன. இனம் சார்ந்த அடையாளத்தை மாற்றுவதில் அரச வல்லாண்மையின் மத அடையாளங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. இந்துத்துவா என்னும் பெருங்கதையாடல் வழி திணிக்கப்பட்ட அடையாளங்கள் மறுத்துரைக்க இயலாத வகையில் வந்துநிற்கின்றன.

வைதீகத்தின் தேவைக்காக நம் ஈசனின் பெயரை ஒத்தவாறு சிவனென்று உருவாக்கி அதை நடுவமாக வைத்துப் பலகதையாடி தமிழ்க் கடவுளரை கொச்சைப்படுத்தி நம்முன்னோர்களின் வழிபாட்டு மரபை வைதீகம் மடைமாற்றியது. சங்கம்மருவிய காலத்தில் மத அடையாளங்கள் வல்லாண்மை அரசியலின் அடையாளங்களாக மாற்றப்படும் படிமுறையின் விளைவாகவே இந்த அழித்தொழிப்பு நிகழ்த்தப்பட்டது. மதம் சார் படைப்புகளை அழிப்போம் என்ற போர்வையில் தன் தாய்க்கு தானே கொள்ளிவைத்ததை உணராதவர்களாக எம்மை ஆக்கி, மதத்தின் வன்மத்திற்கு தமிழ் தற்கொலைசெய்துகொண்டது. ஆயினும், சைவமும் தமிழும் இரு கண்கள் என்று சொல்லுமளவுக்கு தமிழர்களைக் குருடர்களாக்கி, தங்களுடைய மெய்யியல் புதையுண்டுபோனதைக் கூட உணரமுடியாத அளவுக்கு மதம் மக்களைக் கட்டிவைத்தது. தமிழ்மக்களை வர்ணங்களாக்கி சாதிகளாக பிரித்து, இனமாக ஒன்றுபடும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோவொரு வகையில் சாதிய அரசியலை நிகழ்த்தும் பெரும் அவலத்தை நிகழ்த்தியது வைதீகம். ஆசீவகத்திலிருந்த வர்ணக்கோட்பாடு, ஆசீவகமென்னும் சிந்தனைப்பள்ளியில் கற்பவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பவர்களுக்கானது. ஆனால் அதனைத் திரிபுபடுத்தி பெரும் அரச உருவாக்கத்தின் பொறியான இந்துத்துவாவின் முதன்மை கருவியாக சாதி என்னும் வர்ணாசிரமக் கோட்பாடே துருத்தி நிற்கின்றது. மொழியாலும் நிலத்தாலும் ஒன்றான தமிழர்களை தொழிலால் விலக்கி வைக்கும் கீழ்மையைச் செய்தது வைதீகம். இன்றுவரையிலும் தீண்டத்தகாதோர் என்று தமிழர்களிடத்தில் மிகப்பெரும் சாதிய அரசியலொன்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியத்தின் கூறுகளைச் சிதைப்பதில் இச்சாதிய அரசியலுக்கு பெரும்பங்குண்டு. தமிழர்களை, மக்களின் திணைவாழ்வின் தொடர்ச்சியை வழக்காறுகளை அவர்களிடமிருந்து பிரித்து, தனித்தனி மாந்தர்களாக்கியது இந்துத்துவா.

கொற்றவை, கண்ணகி வழிபாடு

Meiyiyal-4-329x315.jpg

கொற்றவையை தாய்த்தொன்மமாகக் கொண்டு வாழ்ந்த சங்ககாலத்தின் தொடர்ச்சியானது திட்டமிட்டு வைதீகர்களால் அழிக்கப்பட்டது. கண்ணகி என்னும் தொன்ம வழிபாட்டு மரபானது, நாகரிகமடையாதவர்களின் வழிபாடென்று கூறி, கண்ணகி சிலைகள் கடலில் எறியப்பட்டும், சில கண்ணகிகள் அம்மனாக உருமாற்றம் செய்யப்பட்டும் தமிழர்களின் பெரும் மரபொன்று அழிக்கப்பட்டுள்ளது. வைதீக மரபின்வழி தமிழர்களின் வழிபாட்டில் புகுந்துகொண்ட சமசுக்கிருதம் தாய்த்தொன்மையை வீதியில் எறிந்துவிட்டு வந்தேறியைக் காலில் விழுந்து கும்பிடும் அபத்தமொன்றை நிகழ்த்தியது. ஆரியர்களால் நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கண்ணகி என்னும் தொன்மத்தின் அழிப்பின் பின்னாலிருக்கும் வன்மம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் மெய்யியலின்பால் கொண்டிருக்கும் வெறுப்பின் ஒரு கூறேயாகும். குறிப்பாக ஈழத்தில் எம் வழக்காறொன்றை அழித்த ஆறுமுகநாவலர் சைவத்தையும் தமிழையும் வளர்த்த சான்றோராக போற்றப்படுவதுதான் நகைமுரண். மதம் செய்யும் இந்த நுண்ணரசியலானது இனம்சார்ந்த விடயங்களனைத்தையும் புறந்தள்ளி, மக்களை மதத்தின்பால் சிந்திக்கச்செய்யும். மெய்யியல் சார்ந்த சிந்தனைப்பள்ளியை வாழ்வியல் முறைமையாகக் கொண்ட தமிழினை சைவத்தமிழ் என்ற குறுகிய வட்டத்தினுள் அடக்கியது சமயம்.

வைதீகத்தின் புனைவுகளான புனிதங்கள் தமிழர்களின் தலைமீது ஏற்றப்பட்டதன் விளைவாக தமிழின் புனிதங்கள் உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையானோரையும் கோவிலுக்கு வெளியே நிறுத்தியதோடு, ஆதித்தமிழனின் பறையும் வீதியிலேயே நின்றுகொண்டது. தமிழகத்தில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்கம் சார்ந்த விழிப்புணர்வுகள் நிகழ்ந்திராவிடின் நாமும் இன்று மலையாளம் போன்றதொரு மொழியைப் பேசிக்கொண்டிருந்தாலும் வியப்பில்லை. இன்று தமிழ்மொழியில் தமிழ்மொழி போலவே கலந்திருக்கும் சமசுக்கிருதம் அதன் அடிப்படையான மதச்சார்பின் நிலைநின்று ஊடுருவியிருக்கின்றது. இனக்கலப்பிற்கு ஒப்பானதாகக் கருதப்படும் இந்த மொழிக்கலப்பினை விளங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கும் மக்களுக்கு மதம் பீடித்திருக்கின்றது.

வைதீகத்தின் கண்ணில் சிக்குப்படாது எஞ்சியிருந்த ஒருசில வழக்காறுகளில் கோவில் சடங்குகள் முதன்மையானவை. கூடிப் புலாலுண்ணும் முறைமை சங்ககாலந்தொட்டு நிலவிவரும் வழிபாடு. அதன் எச்சமாக இன்றுவரை இருக்கும் மிருகபலிக்கு எதிராக அரச இயந்திரம் சட்டமியற்றுகிறது. மிருக பலியிடல் தடையின் பின்னாலிருக்கும் அரசியலைக் கட்டியமைத்த இந்துத்துவாவிற்கு இந்துத்துவத்தை கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றும் மூடர்கூடமாக மக்கள் இருக்கவேண்டும். கோமியம் என்று மாட்டு மூத்திரத்தை குடிக்குமளவிற்கு மதத்தின் அடிமையாகிவிட்ட மக்களின் மீதுதான் அடிமை அரசியலை நடாத்தமுடியும் என்பது அரச அதிகாரத்திற்கு தெரிந்த விடயம். எப்போதுமே அரச வல்வளைப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கைப் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர்தான். அந்த நடுத்தர வர்க்கம்தான் பண்பாட்டு ஊடுருவலுக்கு இடங்கொடுப்பதும். குறிப்பிட்ட அந்த நடுத்தர வர்க்கத்தினரை பேசாமக்கள் ஆக்குவதற்குரிய ஒரே வழி சமயஞ்சார்ந்து அவர்களைப் பிரிப்பதே என்று அறிந்த வல்லாண்மையாளர்கள், பலியிடலும் சடங்குமுறைகளும் காட்டுமிராண்டித்தனமானவை என்ற கருத்தியலை விதைத்துவிட, தங்களை மேட்டுக்குடியாக காட்ட எண்ணும் நடுத்தரவர்க்கமும் அந்த தடைகளை ஆதரிக்க, தமிழரின் மெய்யியலின் எச்சங்களைத் தாங்கிநிற்கும் உழைக்கும் வர்க்கம் தன் வழக்காறுகளை இழந்துகொண்டிருக்கின்றது.

தமிழர்களுடைய உணவுப்பழக்கத்தையும் உணவுப்பழக்கத்தின்வழி வந்த தொடர்ச்சியையும் இடையறுத்து சமயஞ்சார்ந்த ‘கோவிற்புக்கை’ வழிவந்த நுகர்வுப்பழக்கமொன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கே புலாலுண்ணலின் பின்னாலுள்ள தூய்மைவாதத்தின் கருத்துருவாக்கம் மிருகங்களைக் காத்தல் என்ற ஒற்றைப்பொருளின்பாற்பட்டு வந்ததல்ல. மாறாக, தமிழ்த்தொன்மத்தினை உருமறைத்தலின் ஒரு பகுதியேயாகும். ‘அசைவ உணவு’ என்ற தூய்மைமறுப்பினை வைதீகத்தின்வழி பரப்பிய இந்துத்துவா, வடஇந்தியாவில் சமுத்திர புட்பம் என்று கூறி மீன்களை உண்ணுதலை, வெள்ளிக்கிழமைதோறும் வீடு கழுவி, பாத்திரங்கள் மாற்றி, அடுப்பு மெழுகி தூய்மையாளர்களாகக் காட்டிக்கொள்ளும் அப்பாவி மக்கள் அறியமாட்டார்கள். திணையோடிணைந்தவாழ்வில் கடலருகில் இருப்பவன் மீனைத்தான் சாப்பிடமுடியும். ஆனால் அவன் அசைவத்தை உண்ணுகையில் புனிதத்தை இழக்கிறான் என்று கட்டமைக்கப்பட்டதன் உள்ளிருக்கும் திணிப்பு உளவியலிலும் புரையோடிப்போய்க்கிடக்கிறது.

தமிழர்களின் வழக்காறுகள் மீது திணிக்கப்படும் இந்த சமூக வன்முறையின் தொடர்ச்சியாகவே இறைச்சியும், மீனும், கள்ளும் உண்ட கிராமியக் கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரியப் பிராமணனின் கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கின்றன. அண்மையில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு என்ற செய்தி பரவலாக எங்கும் அடிபட்டது. தமிழனின் மண்ணில், தமிழனின் வழிபாட்டுத்தளத்திலே தமிழிலே குடமுழுக்கு என்பது செய்தியாக வருமளவிற்கு சமசுக்கிருத வன்வளைப்பு நிகழ்ந்திருக்கின்றது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குச் சென்றுவந்தவர்கள் அது கோயில் அல்ல, தமிழர்களின் கோட்டையாக இருந்த இடம் என்பதை இலகுவாக உணர்வார்கள். அந்தக் கோட்டையிலிருந்து மாற்றாரின் வன்வளைப்பிற்கெதிரான போரை எம் மூதாதையர் தொடுத்திருக்கக்கூடும். ஆனால் இன்று?

புத்தர் சிலைகளும் இசுலாமியமும் கிறித்தவமும் எம் மக்களின் இயலாமைகளினூடே இருக்கும் இடைவெளிகளில் நுழைகின்றது எனச் சொல்லத் தெரிந்த எமக்கு, மேல்தட்டு வர்க்கத்தினருள் ஊடுருவியிருக்கும் சாயிபாபாக்களும் சீரடிபாபாக்களும் அனுமானும் கண்ணுக்குத் தெரிவதில்லை. மரபுவழி வழக்காறுகளை ஒதுக்கி, நாகரிகமடைந்தோர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சமூகம் சீரடி பாபாவுக்கு மதுவைப் படைத்து மகிழும் அளவில் கொண்டுவந்து விட்டிருக்கிறது இந்துத்துவா. அன்ன நடை நடக்கப்போய் தன் நடையும் கெட்ட கதையாக, தன் வழக்காறுகளையும் இழந்து வடஇந்திய வழக்காறுகளையும் ஏற்கமுடியாத நிலையிலிருக்கிறது மதத்தால் பிடியுண்ட எமது சமூகம்.

வைதீகப்பண்பாட்டு மடைமாற்றத்தின் அதிஉச்ச கேலிக்குரிய விடயம் திருமணத்தின்போது, பெண்கள் அணியும் பாணியிலான ஆடையை மணமகன் அணிவதுதான். அது மட்டுமல்லாது அன்றாட வாழ்வியலில் கூட பிறப்பு முதல் இறப்புவரைக்கும் ஊடுருவியுள்ள இந்த வைதீகத்தாக்கத்தினால் சமசக்கிருதமும் ஆரியப் பிராமணப் பண்பாடும் வாழ்வியல் முறைமையைத் தீர்மானிப்பனவாக மாறியிருக்கின்றன. வுழிபாட்டுமுறைகளும் மடைமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது.

முருக வழிபாடு

Meiyiyal-5-490x315.png

முருகவழிபாடு என்பது திணைவழிபாடு என்பதற்கப்பால் அவன் தமிழர்களின் கடவுளாக இருந்ததனால் வைதீகம் அவனை கந்தபுராணத்தினூடாக (ஸ்)கந்தனாக்கி அவனையும் வைதீகத்தினுள் மடைமாற்றி உள்ளெடுத்துவிட்டது. தமிழர்களிடையே முருக வழிபாடு பண்டுதொட்டு வருகின்றது என்பதற்கு சங்கத்தமிழ் நூல்களில் சான்றுகள் இருப்பினும் முருகனது தோற்றம் தொடர்பாக திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற நூல்களுக்கும் அகம், புறம் நூல்களுக்குமிடையே வேறுபாடுகள் இருக்கின்றன. ஆயினும் ஆதிச்சநல்லூர் தாழி அடக்க காலத்திலேயே முருக வணக்கமுறை இருந்தது என்பதற்கு அகழ்வாராய்வு சான்றுகள் உள்ளன என்று பேராசிரியர் வானமாமலை அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் முருகன் வேலன் வெறியாட்டிலும் ஊர் முன்றலிலும் வழிபடப்பட்டிருப்பினும் முருகனுக்கு கோவில்களும் இருந்திருக்கின்றது என்பதனை முருகன் கோட்டம் என்ற சொல்லாடல் புறநானூற்றுச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதிலிருந்து கூறலாம் என்கிறார்.

முருகு புணர்ந்தியன்ற வள்ளிபோலஎன்ற நற்றிணைப் பாடலின்வழி சங்க இலக்கியப்பரப்பில் முருகனுக்கு ஒரு மனைவியே கற்பனை செய்யப்பட்டிருக்கிறாள். வைதீகத்தின்வழி கட்டமைத்த கந்தனும் தமிழ்க்கடவுள் முருகனும் தமிழ்வழி வந்தோர்களாயினும் கந்தன் வைதீகப் புனிதத்தை தன்மீது ஏற்றி நிற்கின்றமையால் முருக வழிபாட்டை நாம் வரலாற்றுத் தொடர்ச்சியாக நோக்கி, மீட்டெடுத்தலும் காலத்தின் தேவையாகும்.

இந்து என்ற ஒற்றைச்சொல்லின் பின்னாலுள்ள அரசுருவாக்க பெரும் கோட்பாடும் அகண்ட பாரதக் கனவும் புரியாதவர்களாக இந்துக்களாக மாறிக்கொண்டிருக்கும் தமிழர்கள் இப்போதாவது விழிக்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். மொழியால், அரசியலால், ஆட்சியால் தமிழரை ஆண்டுகொண்டிருக்கும் இந்துத்துவா எமது மெய்யியலின் வழிவந்த வாழ்வியல் முறைகளையும் பறித்துக்கொண்டிருக்கின்றது. பட்டுவேட்டிக்கு விருப்பப்பட்டு கட்டியிழுந்த கோவணத்துண்டையும் பறிகொடுத்துவிட்டு, தனிநிலம் மட்டுமல்ல தனிமொழியைக் கூட இழந்துநிற்கப்போகிறோம். ஆரியத்தின் அரசியல்மொழியான இந்துத்துவா இந்தியா என்பதற்கான பொதுமொழியாக, பொது அரசியலாக இந்தியா என்ற பொது அடையாளத்தை உருவாக்குவதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தேசிய இனங்களின் இறையாண்மையில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இந்துத்துவா தன் அரசியல் முன்னகர்வை தமிழகம், ஈழம் என தமிழர் வாழும் இடமெங்கும் நிகழ்த்தியுள்ளது. அரச பயங்கரவாதங்களின் கூட்டிணைவினூடு திணிக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியலான மதத்தினால், எம்மையே கருவிகளாக்கி எம் இனத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது. சித்தர்களும் புலவர்களும் பாடிய பாடல்களும் வாழ்வியல் கருத்துகளும் இருக்க, புரியாத மொழிகளிலே வழிபாடியற்றிக்கொண்டிருக்கும் மூடர்கூடத்தினுள் புதையுண்டு கிடக்கிறோம்.

உலகாய்தம், எண்ணியம், ஆசீவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகள் வைதீகக் கருத்துகளாலும் களப்பிரர்களின் அரச வல்வளைப்புக்களாலும் சிதைக்கப்பட்டு, தமிழர் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. எமது மரபைப் பொறுத்தவரையில், எமது வழக்காறுகள் அதன் இயங்கியல் சார்ந்து நெகிழ்வுத்தன்மை அற்றவை. வெளியிலிருந்து நோக்குகையில் அந்த நெகிழ்வற்ற தன்மை கட்டுப்பாடற்ற தன்மையாக தெரியக்கூடும். ஆனால் அந்த மரபானது கட்டிறுக்கமான மெய்யியலாலும் பண்பாட்டினாலும் பிணைக்கப்பட்டிருத்தலே பல பண்பாட்டு வன்வளைப்புகள் நிகழ்த்தப்பட்டபோதும் இன்றுவரைக்கும் ஆங்காங்கே எச்சங்களாகி நிற்கின்றது. அதனை மீட்டெடுத்தல் என்பது தமிழர்களின் இருப்பினை மீள வலியுறுத்தலுக்கான ஆரம்பப்புள்ளியாக அமையும். சங்ககாலத்திலே பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துகளே ஆதிக்கம் பெற்ற கருத்தியலாக இருந்து வந்திருக்கின்றது. எனவே நாம் தேடும் எச்சங்கள் அந்தப் பொருள்முதல்வாத மெய்யியலின் கூறுகளாகவும் இருக்கக்கூடும்.

தமிழம்எனும் தமிழர்களின் மெய்யியல் இறையியலாக அமைப்பாக்கம் பெற வேண்டியது ஏன்?

Meiyiyal-6.jpg

தமிழர் வழிபாடுகள் நிறுவனப்படுத்தப்படாமல் இருக்கின்றமையால் தான் நிறுவனப்பட்டிருக்கும் அயன் மதங்களும் அவைசொல்லும் கோட்பாடுகளும் ஊடுருவியிருக்கின்றன. வாழ்வியல்கள் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த நிறுவனமாக்கலுக்குள் எமக்கான மெய்யியலை இழந்துவிடாமல், தமிழர் மரபிற்கியைந்த தமிழர் வழிபாட்டு முறைகளை ஒருசேர அமைப்பியலுக்குள்ளாக்கி அவை தமிழர்களுக்குரிய வழிபாட்டு முறையாகிய தமிழம் என்போம். பண்பாட்டுக் கலப்பினுள் வழக்காறுகள் மாறியிருப்பினும் தமிழர் மெய்யியலின் கூறுகள் தற்போது பயில்நிலையிலிருக்கும் வழக்காறுகளுக்குள் மறைந்திருக்கும். அந்த எச்சங்களை மீட்டெழுத்து ஒருங்கிணைத்து தமிழம் என்றும் தமிழர் சமயமொன்றைக் கட்டியெழுப்பப வேண்டியது தமிழ்த்தேசியம் எனும் தமிழர் வாழ்வியல் மற்றும் மக்கள்திரள் அரசியலுக்குத் தேவையாக இருக்கின்றதை யாரும் மறுக்க முடியாது.

நாம் தமிழர். நமது இனம் தமிழினம். நமது மொழி தமிழ்மொழி. நமது பண்பாடு தமிழ்ப்பண்பாடு. நமது உணவுப்பழக்க வழக்கம் தமிழ் உணவுப்பழக்கம், நமது மருத்துவம் தமிழ் மருத்துவம். நமது மெய்யியல் தமிழ். நமது இறையியல் தமிழம். நமது சிந்தனைப்பள்ளி தமிழ்த்தேசிய சிந்தனைப் பள்ளி. நமது வாழ்வியல் தமிழ்த்தேசியம்.

-செல்வி

http://www.kaakam.com/?p=1792

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை வேதங்கள் தமிழில் இருந்து ஆரியர்களால் திருடப்பட்டது என்றோ, சமஸ்கிருதம் என்ற வடமொழி தமிழில் இருந்து உருவானதோ என்று பொய்மைகளைச் கட்டவில்லை. 

தமிழரின் வேர் என்ன என்ற தேடலுக்கு பல திறப்புக்களைக் கொண்டுள்ளது. இக்கட்டுரையில் சொல்லப்பட்ட ஆசீவகம் பற்றிய புரிதல் மிகவும் குறைவு. சமண மதத்தின் முன்னோடி வடிவமானஆசீவகம் தமிழகத்தில் அழுத்தமாக வேரூன்றியிருந்தது என்று வலுவான ஆய்வுத்தரப்பு உண்டு.

இந்தத் திரியில் ஆசீவகம் பற்றி பல தகவல்கள் உள்ளன.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.