Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறுமை ஒழிப்பதில் ஓரவஞ்சனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வறுமை ஒழிப்பதில் ஓரவஞ்சனை

image_f2b9bce369.jpg

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நமது நாட்டுக்கு முன்னுதாரமான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. சகல இனத்தவரும் ஒன்றுகூடி, முரண்பாடுகளின்றி வாழ்வதற்குத் தகுந்த சூழலாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான இயற்கை வளங்களை நிரம்பக் கொண்டதுமாகவே இந்த மாவட்டம் அமைந்துள்ளது.

குளிரை விரும்புகளின் சொர்க்கபுரியாகவுள்ள நுவரெலியாவுக்கு, சிறிய நியூசிலாந்து என்ற புகழும் உள்ளது. இவ்வாறு, இலங்கையின் அழகியல் அத்தியாயத்தின் மய்யப்பகுதியாகக் காணப்படும் நுவரெலியா, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் காணப்படுகிறது. 

இந்த மாவட்டத்தின் அழகுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், அந்த மாவட்டத்தின் அழகும் வளமும் குன்றாமல் அவ்வாறே பாதுகாத்து வைத்திருக்கும் மக்களின் வாழ்க்கையில், அந்த அழகு இல்லை என்பது கவலைக்குரியதுதான்.
1,741 சதுரமீற்றர் பரப்பளவையும் 496 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டம், அபிவிருத்தியின் உச்சத்துக்குச் செல்லாமல் இன்றும் வறுமைக் கோட்டில் இருப்பதற்கான காரணம் என்னவென்ற கேள்விகள் பலருக்கும் இருக்கக்கூடும்.  அவ்வாறான கேள்விகளுக்கு 2019ஆம் ஆண்டில், கணக்காய்வுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை பதிலளித்துள்ளது. அந்த அறிக்கையை  மய்யப்படுத்தியே இந்தக் கட்டுரை  எழுதப்படுகிறது. 

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு கனவாகிப் போயுள்ளன என்பதையும் இந்தக் கணக்காய்வு அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், தனியொரு குழுவுக்காகச் செய்யப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 4,670,773 ரூபாயைச் செலவிட்டுள்ளமையும் அம்பலமாக்கியுள்ளது.  

மாவட்ட அபிவிருத்தி 

மாவட்டத்தின் அபிவிருத்திகாக, 2013 -2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சுமார் 4.7 (4,768,574,578)பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில், 3.6 (3,613,421,660) பில்லியன் ரூபாய்களைக் கொண்டு, நுவரெலியா மாவட்டத்தில் 7,573 செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, அவற்றில் 5,812 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போதாமை

மேற்கூறிய திட்டங்களில் சிலவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பாக, பிரதேசத்தின் வானிலை தொடர்பில் அவதானம் செலுத்தாமை, போதியளவு ஊழியர்களை இணைத்துக்கொள்ளத் தவறிமை, உரிய வகையில் ஒப்பந்தங்களுக்கான விலைமனுக்கள் கோரப்படாமை, சங்கங்கள் வாயிலாகச் சில செயற்றிட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளே, இத்திட்டங்கள் வெற்றியளிக்காமைக்குக் காரணமாகியுள்ளன.  

அத்தோடு, மேற்படி செயற்றிட்டங்களுக்காக, கிராமிய மட்டத்திலான மதிப்பாய்வுகள் செய்யப்படாமையாலும் செயற்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல், முறையான கொள்முதல் செயற்பாடுகள், நிதிப் பங்கீடு முறைமையைப் பின்பற்றாமை போன்றன,  எதிர்பார்த்த வெற்றி இலக்குகளை அடைய முடியாது செய்துள்ளன.  
அதேபோல், இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளமையால், மாவட்டத்துக்குள் பொருளாதார, சமூக ரீதியான பிரச்சினைகளும் மேலெழுந்திருந்ததாக, கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

குறிப்பாக, 2013 ஆண்டில் 44 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில், செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், 138 வெற்றிடங்கள் காணப்பட்டு உள்ளதாகவும் அப்போதைய கணக்காய்வு அறிக்கையில், இந்தக் குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வறுமைக் கோடு

திட்டமிடப்பட்ட செயற்றிட்டங்களை உரிய வகையில் நடத்துவதற்கான நிதியைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள காரணத்தால், மக்கள் பயன்பாட்டுக்குரிய வகையில் நிறைவு செய்யப்படாத பல திட்டங்கள் உருவெடுத்திருந்ததோடு, அதன் பயனாக 2012/ 2013 ஆண்டுகளில், புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் குறிகாட்டிகளின்படி, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் வசிக்கும் 336 பிரதேச செயலகங்களில், நுவரெலியா மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்கள் 3, 5, 11, 16, 18 ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டன. அத்தோடு, 2013 - 2016 வரையில், நுவரெலிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள எந்தவொரு செயற்றிட்டம் வாயிலாகவும், எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்கள் அடையப்பட்டிருக்காமை கவலைக்குரியதாகும். புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் அறிக்கைகள், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வெளியிடப்பட்டு வரும் நிலையில் இவ்வருடத்துக்கான அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை. இறுதியாக, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், வறுமையான மாவட்டங்கள் வரிசையில்  மொனராகலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிகரான வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் 0.8 சதவீதமாக வறுமை நிலைமை காணப்பட்டதாக, மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நிதி கிடைக்காமை

நுவரெலியா மாவட்டத்தில், 18,616,484 ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட 40 செயற்றிட்டங்களும் 46,998,935 ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட மேலும் 54 நாள் செயற்றிட்டங்களும், உரிய வகையில் நிதி கிடைக்காததால் மக்கள் பாவனைக்கு உதவும் வகையில் நிறுவப்படவில்லை.  

அதேபோல், 23,389,627 ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட 23 வேலைத்திட்டங்கள், பயனற்ற திட்டங்களாக அமைந்து இருப்பதுடன், 10,457,823 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், 2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையிலும் குறைபாடுகளுடன் காணப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளுக்கு மதத்தியிலும், 12,716,918 ரூபாய் செலவில் நிறுவப்பட்ட 11 செயற்றிட்டங்கள், உரிய வகையில் பராமரிக்கப்படாமல் உள்ளன. 

இழுபறி நிலை

நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட 1,000க்கும் அதிகமான வேலைத்திட்டங்களில் 20 சதவீதமான வேலைத்திட்டங்கள் மாத்திரமே நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன், பூர்த்தியாகாத செயற்றிட்டங்களில் 12 சதவீதமானவை தொடர்பான வேலைத்திட்டங்கள் என்ற பேரில் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருகின்றன. 

2014ஆம் ஆண்டில், 363 வேலைத்திட்டங்கள் தொடர் வேலைத்திட்டங்கள் என்ற பேரில் ஆரம்பிக்கபட்டுள்ளதோடு, அதற்காக 223,513,233 ரூபாய் கோரப்பட்டிருந்த போதும், 2015ஆம் ஆண்டில் 59 தொடர் வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக, 56.06 மில்லியன் ரூபாயை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. அவற்றில்,  37.99 பில்லியன் ரூபாய், அமைச்சிடமே மீளக் கையளிக்கப்பட்டிருப்பதுடன், 2015ஆம் ஆண்டில் இந்த வேலைத்திட்டங்களைப் பூர்த்திசெய்ய முடியாது போனதால், அவற்றை நிறைவுசெய்ய 100 மில்லியன் ரூபாய்கள் கோரப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் அவ்வருடத்தின் டிசெம்பர் மாதமளவில் செய்யப்பட்டுள்ள போதும்,  2017ஆம் ஆண்டு வரையில் 313 தொடர் வேலைத்திட்டங்கள் முடிவுராத நிலையிலேயே இருந்துள்ளன.

காப்புறுதிச் சான்றிதழ்கள் இருக்கவில்லை

வலப்பனை, கொத்மலை பிரதேச செயலகங்களினால், அனைத்து வகையான ஆபத்தான செயற்பாடுகளுக்காகவும் பெறப்பட வேண்டிய காப்புறுதிச் சான்றிதழைப் பெறாத ஐந்து ஒப்பந்தகாரர்களுக்கு, 4,563,063 ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் கையளிக்கப்பட்டிருந்ததுடன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் நிர்மாண வேலைகள் தொடர்பாகப் பௌதிகப் பரிசோதனைகள் எவையும் மேற்கொள்ளாத நிலையிலும், 26 தடவைகளில் 24,074,544 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  
அதேபோல், நிறைவு செய்யப்படாத வேலைத்திட்டங்களுக்கும், 57 தடவைகளில் 8,739,885 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 90 சதவீதமான கொங்கிரீட் வீதிகளை அமைக்கும் முன்பாக, கொங்கிரீட்டின் தரம் கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 

தரமின்மை

அதேபோல், SLS தரச்சான்றிதல் பெற்ற அச்சுக் கற்கள் பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், தரமற்ற கல் வகைகளையே வீதிப் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளமையும் அரசாங்க நிர்மாண வேலைகளுக்காக அங்கிகரிக்கப்படாத 6 வகையான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, 4,793,662 ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு, 2014ஆம் ஆண்டில் பயன்படுத்தபட்டிருக்கும் கொங்கிரீட் வகைகளின் தரமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதற்காக 127,569,532 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 
வடிகாலமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கொங்கிரீட், தரமற்றவையாகக் காணப்படுகின்ற போது, அவற்றுக்காக 470,969 ரூபாய் செலவிடப்பட்டிருப்பதுடன், விளையாட்டுத் திடலைச் சுற்றிமறைப்புச் செய்யும் பணிகளுக்காக 7,469,580 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

மேலும், 7,895,250 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அநேகமான கட்டங்களுக்காக இடப்பட்ட கொங்கிரீட் தூண்களில் வெடிப்புகள் தோன்றியதால், அவற்றை மீண்டும் 7 தடவைகள் சீரமைக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 
பணம் மீளப்பெறப்பட்டது மேற்குறிப்பிட்ட மோசடிகளாலும்   வேலைத்திட்டங்களை முழுமையாகச் செய்யாததாலும், அரசாங்கத்தால் மீளப்பெறப்படட பணம் அரச வருமானமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதனைச் செய்த அதிகாரிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல், ஒழுக்காற்று விசாரணைகளின் போது எச்சரிக்கை மாத்திரம் விடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மேற்படி அதிகாரிகளிடத்திலிருந்து அபராதமும்  அறவிடப்படவில்லை என, கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது. 

குறைபாடுகள்

நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களில், பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதுடன்,  2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 213ஆக அதிகரித்துக் காணப்பட்ட பதவி அணியினரின் வெற்றிடங்கள், உரிய வகையில் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதுடன், குறித்த பதவிகளுக்கு, சரியான தகைமைகளைக் கொண்டவர்களை நியமிக்காக காரணத்தால், அச்செயற்றிட்டங்களின் வெற்றி கனவாகியுள்ளது. 
பணிகளைப் பகிர்ந்தளித்தல், அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படாமை உள்ளிட்ட செயற்பாடுகளால், அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தனவெனவும்  உத்தியோகத்தர்களின் குறைபாடுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டி அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்த காரணத்தால், செயற்றிட்டங்களின் வெற்றி சாத்தியமற்றுப் போயுள்ளது. 

இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அவற்றை உரிய வகையில் மேற்பார்வை செய்யாதிருந்ததுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுவனங்களிடையே பரிமாற்றப்பட்டு, அவை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாலும் மேற்படி திட்டங்களின் வெற்றி, பகல் கனவாகி போயுள்ளது. 

அத்தோடு, நுவரெலியா மாவட்டத்தின் வருட இறுதிப் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் என்பதைக் கருத்திற்கொள்ளாமல் மேற்படி திட்டங்கள் வரையப்பட்டிருப்பதுடன், இந்தத் திட்டங்களில் ஏற்பட்ட நட்டங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என எவரும் அடையாளப்படுத்தப்படாமையும், பெரும் குறைப்பாடாகவே காணப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட, “பொதுமக்களின் பயன்பாட்டுக்காகச் செலவிடப்படட்ட பணம், வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டத்தினரின் நலனுக்காகச் செலவிடப்படுவதால், வறுமையை ஒழிக்கும் தகவுத் திறனை நிறைவேற்றிக்கொள்வதற்கு முடியாதிருந்தது” என்ற விடயத்தையும், இந்தக் கணக்காய்வு அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

அதன்படி, லக்‌ஷபான மாவத்தையின் குறுக்கு வீதியை மேம்படுத்த 297,000 ரூபாயும்  காமினி மாவத்தையின் குறுக்கு வீதியை மேம்படுத்த 292,000 ரூபாயும், மெண்டிஸ் பங்களா தொடக்கமான விவசாயப் பகுதியை அண்மித்த வீதியின் அபிவிருத்திக்காக 490,00 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதுடன்,  மக்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின்  மேம்பாட்டுப் பணிகளுக்காக, அதன் முதல் கட்டத்துக்கு 460,750 ரூபாயும் இரண்டாம் கட்டத்துக்காக 1,169,900 ரூபாயும், 1,961,123 ரூபாயும் செலவிடப்பட்டிருப்பதுடன், மேற்படி திட்டங்களுக்கான மொத்த் செலவு, 4,670,773 ரூபாயெனவும், அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

தீர்வுகள்

எதிர்காலத்திலாவது மேற்படி திட்டங்களை முன்னெடுக்கும் போது, அதற்குரிய நிதிச் சங்கங்களின் பொறுப்பில் விடப்படுமாயின், அந்தச் சங்கங்களினது நிதியத்தின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு வழங்கினால், நல்ல திட்டங்களைச் சாத்தியமாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, திட்டங்களை வரையும் போது, அவை சாத்தியப்படாமல் போகும் பட்சத்தில், அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய தரப்புகளைப் பெயரிடுவதும் அவசியமானதென்ற தீர்வை, கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

மேலும், இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வரும் ஒப்பந்தகாரர்கள், வேண்டுமென்றே அவற்றைத் தோல்வியடையச் செய்தல் தொடர்பாகவும் நிதிப் பகிர்வின் போது வறுமையில் வாடும் கிராமங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமென்பதையும், கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.  

image_a2b8f0b93d.jpg


Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.