Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

01. முன்னுரை

உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.

மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.

நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.

உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

02. தேசியக்கொடியின் தன்மை

ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.

03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்

ஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன.

04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்

நாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.

*நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.

*வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

*தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.

*கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.

*சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.

*வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.

*தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.

*தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.

*தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.

*தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.

*தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும்.

*தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.

05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை

தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.

தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றத

16. தேசியக்கொடியும் ஏனைய கொடிகளும்

எமது தேசியக் கொடியுடன் எமது முப்படைகள், காவற்றுறை, படையணிகள், உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். விளையாட்டுக் கழகங்கள், குமுகாய அமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளைப் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள கம்பங்களில் ஏற்றும்போது தேசியக்கொடியின் அளவைவிடச் சிறிய அளவிலான கொடிகளைத் தேசியக்கொடிக் கம்பத்தைவிட 4? உயரம் குறைவான கம்பங்களில் ஏற்றவேண்டும். அதாவது தமிழீழத் தேசியக்கொடி மற்றக் கொடிகளைவிட 4? கூடுதலான உயரத்தில் இருக்கவேண்டும்.

16.1. தேசியக்கொடிக்கு இடப்புறமாகச் சமனான இடைவெளியில் ஏனையகொடிகள் ஏற்றப்படலாம்.

0066cr.jpg

16.2. தேசியக்கொடிக் கம்பத்திலிருந்து ஏழு அடிக்குப்பின்னால் தேசியக்கொடிக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தமிழீழத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் கொடிகளும் காவற்றுறையின் கொடியும் சமனான இடைவெளியிற் பறக்கவிடப்படலாம்.

0077bd.jpg

16.3. தேசியக் கொடிக்குப்பின்னால் 16. (2) இற்கமைவாக முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகளும் அவற்றுக்குப் பின்னாற் போதிய இடைவெளிவிட்டுப் படையணிகளின் கொடிகளும் பறக்கவிடப்படலாம்.

0081vk.jpg

16.4. உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குமுகாயவமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளும் தேவைக்கேற்ப பறக்கவிடப்படலாம். தேசியக் கொடியுடன் முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகள் பறக்கவிடப்படும் நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னாலேயே மேற்படிக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட கொடிகளும் படையணிக் கொடிகளும் ஒரே நிரையிற் பறக்கவிடப்படலாம். உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள் முதலியவற்றின் கொடிகள் நிகழ்ச்சி நடைபெறும் திடலின் பின்புறமாக உட்பக்கத்திலும் பறக்கவிடப்படலாம்.

0098zd.jpg

16.5. தேசியக்கொடியுடன் இங்குக் குறிக்கப்பட்ட ஏனைய கொடிகளைக் கூட்டமாகப் பறக்கவிடும்போது ஏனைய கொடிக்கம்பங்களைவிட உயரமான கொடிக்கம்பத்தில் எல்லாக்கொடிகளுக்கும் நடுவில் தேசியக்கொடியைப் பறக்கவிடவேண்டும்.

தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பே ஏனையவை ஏற்றப் படவேண்டும் ஏனையவற்றை இறக்கியபின்பே தேசியக் கொடியை இறக்கவேண்டும். அரைக்கம்பத்திற் கொடிகளைப் பறக்கவிடும்போது ஏனைய கொடிகளை அரைக் கம்பத்திற்குக் கொண்டுவந்தபின்பே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்குக் கொண்டுவரவேண்டும்

0104vt.jpg

17. ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச்செல்லுதல்

0129ob.jpg

ஊர்வலங்களில் தேசியக்கொடியை வேறு கொடிகளுடன் எடுத்துச் செல்கையில் ஊர்வலத்தின் முன்னால் வலப்புறத்தில் எடுத்துச் செல்லவேண்டும். அல்லது நடுவரிசையில் மற்றைய கொடிகளுக்கு முன்னால் எடுத்துச்செல்லவேண்டும். வேறு எந்தக் கொடியை ஏந்திச் செல்பவரும் எமது தேசியக்கொடியை முந்திச் செல்லக்கூடாது. தேசியக்கொடியை நெஞ்சுக்கு நேராகவோ வலத்தோளிலோ ஏந்திச் செல்லவேண்டும்.

18. ஊர்திகளில் தேசியக்கொடியைப் பறக்கவிடுதல்

0137kj.jpg

ஊர்தியின் முன்புறத்தில் உறுதியாகப் பொருத்தப்பெற்ற கம்பத்திற் பறக்கவிடவேண்டும். ஊர்தியின் தொளைமூடியின் (Bonet) மேல் இரண்டடி உயரத்திற் கம்பம் இருத்தல்வேண்டும்.

0147mb.jpg

உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

19. மிசையத்தில் தேசியக்கொடியை வைத்தல்

0159ru.jpg

அரசுத் தலைவர் மற்றும் முதன்மை மாந்தரின் மிசையங்களில் தேசியக்கொடியை வைக்கும்போது மிசையத்தின் வலப்புறத்தில் வைத்தல்வேண்டும். வேறு கொடிகளும் வைக்கப்படுமாயின் அவை இடப்புறத்தில் வைக்கப்படவேண்டும். தேசியக்கொடிக்கு முதன்மை வழங்கவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20. ஈமப்பேழையின்மீது தேசியக்கொடியைப் போர்த்துதல்

0161qf.jpg

மாவீரர், காவற்றுறை மாவீரர், தேசியத்துணைப்படை மாவீரர் மற்றும் தேசக் காப்புப்பணியில் ஈடுபடும் வீரர், நாட்டுப்பற்றாளர் ஆகியோரின் உடல் வைக்கப்பட்ட ஈமப்பேழையின்மீது தேசியக் கொடியைப் போர்த்தும் போது புலியின் தலைக்குமேலுள்ள பகுதி பேழையின் தலைப்பகுதியில் இருக்குமாறு போர்த்த வேண்டும். அவ்வாறு போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் போர்த்தப் பெற்றவரின் அரத்த உறவினரிடம் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு வழங்கலாம். இறந்தவரின் தாயகப்பற்றை மதிப்பதற்காக அவரின் ஈமப்பேழைமீது போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் பறக்க விடலாம்

21. துயர நிகழ்வின போது கொடியேற்றுதல்

தேசியத் துயர நிகழ்வுகளின்போது கொடியேற்றுகையிற் கொடியைக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் அரைக் கம்பத்துக்கு இறக்கிக் கட்டவேண்டும். அரைக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கும்போது முதலிற் கொடிக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் இறக்கவேண்டும். தேசத் தலைவரின்முறைப்படியான அறிவுறுத்தலுக்கு இணங்கவே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடலாம். வேறெந்தவேளையிலும் அரைக்கம்பத்திற் பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை எத்தனை நாட்களுக்கு அரைக்கம்பத்திற் பறக்கவிடவேண்டுமென்பது தேசத்தலைவரின் அறிவுறுத்தலிற் குறிப்பிடப்படவேண்டும்.

கம்பத்தோடு நிலையாகப் பொருத்தப்பட்ட தேசியக் கொடியைத் தேசியத்துயர நிகழ்வுகளின்போது அரைக் கம்பத்திற்குக் கொண்டுவரமுடியாது. அவ்வேளையில் தேசியக் கொடிக் கம்பத்தில் 3?ஒ2? அளவுள்ள கறுப்புக்கொடியை அரைக்கம்பத்திற் பொருத்திவிடலாம்.

0175zl.jpg

22. கொடிகளைத் தொங்கவிடுதல்

0187rh.jpg

0194ao.jpg

உயரத்திற் கொடிகளைத் தொங்கவிடலாம். போக்குவரத்திலுள்ள எந்த ஊர்தியிலும் கொடி படாதவகையில் உயரமான கம்பங்களை இருமருங்கும் நிறுத்தி உறுதியான கயிற்றினை இணைத்துத் தொங்கவிடலாம். கொடி கட்டப்படும் கயிறு மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும். கொடிக்கயிறு அறுந்து கொடி கீழே விழுவது தேசத்துக்கு இழுக்காகும். கொடியைக் கயிற்றில் இணைக்கும்போது புலியின் தலைக்கு மேலேயுள்ள பகுதி கயிற்றுடன் இணைக்கப்படவேண்டும். புலியின் பார்வை வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது கொடிக்கு எதிரே நிற்பவரின் இடப்புறத்தைப் பார்த்தவாறு புலியின் பார்வை அமையவேண்டும். புலியின்பார்வை நிலத்தைப் பார்த்தவாறோ வானைப் பார்த்தவாறோ அமையக்கூடாது.

23. குறுக்குக் கம்பங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்

0201ob.jpg

தமிழீழத் தேசியக் கொடியையும் வேறொரு தேசத்தின் தேசியக் கொடியையும் குறுக்குக் கம்பங்களிற் பறக்கவிடும்போது தமிழீழத் தேசியக்கொடி வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது பார்வையாளருக்கு இடப்புறமாக இருக்கவேண்டும். மேலும் தமிழீழத் தேசியக் கொடியின் கம்பம் முன்னாலும் மற்றக்கொடியின் கம்பம் பின்னாலும் இருக்கவேண்டும்.

24. கட்டடங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்

0211jj.jpg

0225yx.jpg

சாளர அடிக்கட்டை, முகப்புமாடம் ஆகியவற்றிற் கிடையாகவோ கோணவடிவிலோ கொடியைப் பறக்கவிடும்போது கொடி, கம்பத்தின் உச்சியில் இருக்கவேண்டும். கிடையாகப் பறக்கவிடும்போது புலியின்பார்வை வலப்புறமாக இருக்கக்கூடிய வகையிற் புலியின் தலைக்கு மேலுள்ள பகுதியே கம்பத்துடன் இணைக்கப்படவேண்டும். கோணவடிவிற் பறக்கவிடும்போது அணிவகுப்புக் கொடியை இணைப்பதுபோன்று அதாவது எழுச்சிக் கொடியைக் கம்பத்தில் இணைப்பது போன்று இணைகக வேணடும்.

25. மேடைகளில் தேசியக்கொடி[/b

0230ja.jpg

0242qt.jpg

கூட்ட மேடைகளிற் பேச்சாளரின் தலைக்கு மேலாகப் பின்புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம். 9 அடி உயர நிறுத்தியிற் பொருத்தப்பெற்ற தேசியக்கொடியை மேடையின் வலப்புறத்திற் பேச்சாளருக்கு முன்னால் வைக்கலாம். ஏனைய கொடிகள் இடப்புறத்தில் வைக்கப்படலாம்.

26. தேசியக்கொடியை இறக்குதல்

தேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்iயானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும்.

தேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.

27. கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு

தேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும்.

தேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா?

தேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா?

கொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா?

நிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா?

கொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா?

தேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா?

கொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா?

என்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் எவ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவிர்க்கலாம்.

தேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார்.

28. தேசியக்கொடியை அகற்றுதல்

நீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும்.

பயன்படுத்தமுடியாத கொடிகளைச் சேர்த்தல்

பழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினு}டாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.

பழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல்

தலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும்.

இறுதிச் சடங்கு

அகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் (சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக எழுவருக்குக் குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும்.

பகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார்.

இறுதிமதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள் வதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதிமதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட்டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:-

இந்தக்கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்"

உரையின்பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (Attention) அழைப்பார்; வணக்கஞ் (Salute) செய்யும்படி பணிப்பார்; உறுதிமொழியை முன்மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும்.

எரியூட்டும் சடங்கு

ஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியுூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்குமுன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு (Attention) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கஞ் (Salute)செலுத்துவர். வணக்கஞ் செலுத்தியபின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார்.

கொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப் புதைக்கப்படுவதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.