Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐங்குறுநூற்றில் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்குறுநூற்றில் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் ..

ancientfamilyart.jpg

முன்னுரை

ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார், தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இந்நூலில் மொத்தம் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் காணப்படுகின்றன. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ஐங்குறுநூற்றுத் திணைகளில் ஐந்தாவது திணையாகவும் மற்றும் இறுதித் திணையாகவும் இடம்பெறுவது முல்லைத் திணையாகும். இம்முல்லை நிலமே ஆய்வுக்களமாக அமைகின்றது. இம்முல்லைத் திணையின் ஆசிரியர் பேயனார் ஆவார். இத்திணையில் செவிலி கூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து… என்னும் பத்துப் பத்துக்களைக் கொண்டமைந்துள்ளது. ஒவ்வொரு பத்திலும் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் காணப்படுகின்றன. முதலாவதாக அமைந்துள்ள செவிலி கூற்றுப்பத்தில் பத்துப்பாடல்களிலும் தலைவனும் தலைவியும் குடும்பத்தை மகிழ்வுடன் நடத்துகின்ற வாழ்வியல் கூறுகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

உவமைக் காட்சிகளில் வாழ்வியல் கூறுகள் (மான்காட்சியும் குடும்பக்காட்சியும்)

முல்லை நிலக் குடும்பக்காட்சிகளின் வாயிலாக வாழ்வியல் கூறுகளை எடுத்துரைக்க நினைத்த முல்லைத்தினையின் ஆசிரியர் பேயனார் உவமை உத்தியினைக் கையாண்டு காட்சிப்படுத்துகின்றார். இந்த வாழ்வியல் கூறுகளை,

“மறியிடைப் படுத்த மான்பிணை போலப்,

புதல்வன் நடுவண னாக, நன்றும்

இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்றி

நீனிற வியலகம் கவைஇய

ஈனும், உம்பரும், பெறலருங் குரைத்தே” (1)

என்னும் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன.

இங்குத் தலைவன் - தலைவி - மகன் என்னும் மூவரையும் காட்சிப்படுத்தி வாழ்வியல் செய்திகளை எடுத்துரைக்க நினைத்த ஆசிரியர், அனைவரும் பார்த்த அல்லது கண்டிருந்த இனிய விலங்கினக் காட்சியைக் காட்சிப்படுத்தி, தலைவனோடு தலைவி குடும்பம் நடத்துகின்ற வாழ்வியலை எடுத்துரைக்கின்றார். இங்குக் கலைமான் தலைவனுக்கு உவமையாகவும், பிணைமான் தலைவிக்கு உவமையாகவும், மானின் கன்றானது புதல்வனுக்கு உவமையாகச் சுட்டப்பட்டிருக்கின்ற கருத்தியலைக் காணமுடிகின்றது.

யாழின் இசையும் இல்லற வாழ்வியலின் மேன்மையும்

யாழின் இனிமையிலும் குடும்பக்காட்சி இனிமையானது. இன்பமயம் சூழ்ந்திருக்கின்ற குடும்பச்சூழலில் தாய் மகனைத் தழுவிக்கொண்டு கிடப்பதும், குடும்பத்தலைவன் தன் மனையாளைத் தழுவிக்கொண்டு கிடப்பதும் பண்டைய காலந்தொட்டு இக்காலம் வரையிலும் நிலவுகின்ற நடப்பியல் வாழ்வியலாகும். இம்மனையற வாழ்வியலின் மேன்மையை யாழின் இனிய துள்ளாழோசையின் இனிமைக்கு உவமைப்படுத்துகின்றார் ஆசிரியர்.

“புதல்வற் கமைஇய தாய்புறம் முயங்கி

நசையினன் வதிந்த கடக்கை, பாணர்

நரம்புளர் முரற்கை போல,

இனிதால், அம்ம! பண்புமார் உடைத்தே.” (2)

என்னும் பாடலடிகள் சான்று பகர்கின்றன. பாணர்கள் யாழின் நரம்புகளை மீட்டுகின்ற போது எழுகின்ற துள்ளலோசையானது யாழை மீட்டும் பாணர்களையும், யாழோசையைக் கேட்கும் மற்றவர்களையும் இன்பம் அடையச் செய்யும். ஆனால், தாய் மகனையும், தலைவன் தலைவியையும் தழுவிக்கிடக்கின்ற காட்சியில் தலைவியைத் தழுவுவதால் தலைவனுக்கும் தலைவனால் தழுவப் பெற்றதால் தலைவிக்கும் இன்பம் கிடைக்கிறது. இது மட்டுமல்லாது, இக்காட்சியைக் கண்ட செவிலித்தாய்க்கும், இக்காட்சியைக் கண்டு சென்ற செவிலித்தாய் கூற்றின் வாயிலாகக் கேட்ட நற்றாயும், தமயன்மார்களும் இன்பம் அடைகின்றனர். ஆகையால், யாழின் இனிமையைவிட இக்குடும்பக்காட்சியின் இன்பம் மேன்மையானது என்பதனை உவமையின் வாயிலாகப் பேயனார் விவரித்துள்ளார்.

தந்தை பெயர் சூட்டுதலும் சிறுதேர் உருட்டுதலும்

சங்க காலம் முதல் இக்காலம் வரையிலும் ஆண் வர்க்கத்தினுடைய தந்தையின் பெயரைத் தன் மகனுக்குப் பெயராக வைப்பது நடைமுறை வாழ்க்கையில் வழக்கமாகக் காணப்படுகின்றது. அதேபோல் இக்காலத்திலும் சிறுவர்களுக்கு நடைபயிற்சி அளிப்பதற்காக மூன்று சக்கரமுடைய சிறிய தேரினைப் பயன்படுத்துகின்ற வாழ்வியல் நிகழ்வுகளையும் அறியமுடிகின்றன. இதனை,

“புணர்ந்தகா தலியிற் புதல்வன் தலையும்

அமர்ந்த உள்ளம் பெரிதா கின்றோ-

அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரான்

முறுவலின் இன்னகை பயிற்றிச்

சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே!” (3)

என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. தலைவன் தன் மகனின் தளர்நடைப் பருவத்தைக் கண்டு இன்பம் அடைகின்ற நிகழ்வும் காணப்படுகின்றது.

குடும்ப வாழ்வியலில் தாய்மை உணர்வு

ஒரு பெண் தாய்மை அடைந்து மகவைப் பெற்றெடுத்த பின்பு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது என்பது இன்றியமையாதது. இஃது தாயின் உணர்வுப்பூர்வமான செயல்பாடு. தாய்ப்பால் குழந்தைக்கு அமிர்தம் போன்றது. தாய்ப்பாலைவிட உலகில் சிறந்த உணவு எதுவும் இருக்காது என்றே கூறலாம். அதனால்தான் மருத்துவர்கள் குழந்தை பிறந்த ஆறுமாத காலம் கட்டாயமாகத் தாய்ப்பால் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள். சங்ககாலத்திலும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டப்பட்ட இன்ப நிகழ்வினை,

“வாணுதல் அரிவை மகன்முலை யூட்டத்

தானவள் சிறுபுறம் கவைியனன் - நன்றும்

நறும்பூந் தண்புற வணிந்த

குறும்பல் பொறைய நாடுகிழ வோனே!” (4)

என்னும் பாடலடிகள் சான்று பகர்கின்றன.

தலைவி மகனுக்குத் தாய்ப்பால் ஊட்டுகின்ற போது, தலைவன் தன் அன்பை மனைவியிடம் வெளிப்படுத்துகின்ற முறையினையும் காணமுடிகின்றது. மேற்காணும் நிகழ்வுகள் இயந்திர உலகமான தற்காலத்தில் குறைந்து வருகின்றன. பெண்கள் தாய்ப்பால் கொடுத்தல் இயந்திர உலகமான தற்காலத்தில் குறைந்து வருகின்றன. பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால் தங்களின் அழகு கெட்டுவிடும் என்று கருதுவதால், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைச் சிலர் தவிர்த்து வருகின்றனர். இது முறையான செயல்பாடு அல்ல. இதன் விளைவு குழந்தைகள் திடகாத்திரமாகவும் அறிவார்ந்தும் வளராமல் நோய்களுக்கு ஆட்படும். தங்கள் குழந்தைகளின் ஆயுள் குறைவிற்குத் தாயே காரணமாக அமையக்கூடும். ஆதலால், தாய்ப்பால் கொடுத்தலின் அவசியத்தையும் நன்மையையும் பெண்கள் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியமாகும்.

இல்லத்திற்கு விளக்கொளியாகத் திகழ்பவள் தாய்

மனிதர்கள் தங்கள் பெறுவதற்குரிய பேறுகளும் மிக முக்கியமான பேறு பிள்ளைப்பேறாகும். குழந்தை இல்லையென்றால் மனிதர்களை இந்த உலகம் மதிக்காது என்பது பலர் அறிந்த உண்மையே. குழந்தை பெறுகின்ற தகுதியை ஆணும் பெண்ணும் பெற்றிருக்காவிடில் இச்சமூகம் ஆணிற்கு - மலடன், பெண்ணிற்கு - மலடி என்னும் பட்டங்களைக் கொடுத்து சமூகம் மதிப்பளிப்பதிலிருந்து விலக்கி வைக்கும். அதனால்தான் தான் பிள்ளைப்பேறு பெற்றவள் என்பதை உணர்த்தும் விதமாகப் புதல்வன் தாய் என்ற அடையுடன் தலைவி வருணிக்கப் பெற்றுள்ளாள். மேலும், ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்பார்கள். விளக்கு எவ்வாறு இருளை அகற்றி ஒளி தந்து சிறப்பிக்குமோ அதனைப் போன்று இல்லச் செயல்பாடுகள் ஒளிபெற்றுச் சிறந்து விளங்குவதற்குப் பெண்கள் அவசியம் என்பது நாடறிந்த உண்மையாகும். இதனை,

“ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல,

மனைக்குவிளக் காயினள் மன்ற - கனைப்பெயர்

பூப்பல அணிந்த வைப்பின்

புறவணி நாடன் புதல்வன் தாயே!” (5)

என்னும் பாடலடிகள் விளக்கி நிற்கின்றன.

தலைவன் தலைவியோடு மகிழ்வோடு இருத்தல்

குடும்ப வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் தன் குழந்தைகள் விளையாடுகின்ற காட்சியைக் கண்டு இன்புற்றிருத்தல் என்பது இயல்பாக நிகழக்கூடிய நடப்பியலாகும். அதிலும் தலைவன் தலைவியை அன்புடன் தழுவிக் கொண்டு, தன் மகன் விளையாடுவதைப் பார்த்து மகிழ்வு கொள்ளுதல் சிறந்த குடும்ப வாழ்வியலாகும். இதனை,

“மாதர் உண்கண் மகன்விளை யாடக்,

காதலித் தழீஇ இனிதிருந் தனனே-

தாதர் பிரசம் ஊதும்

போதார் புறவின் நாடுகிழவோனே” (6)

எனும் பாடலடிகள் விளக்கிச் செல்கின்றன. இப்பாடலில் சங்ககாலப் பெண்கள் சிறுவயது (3-வயது வரை) ஆண்களும் கண்களில் மைபூசும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பது பெறப்படுகின்றது. இக்காலத்திலும் பெண்கள் கண்களை அழகுபடுத்திக் கொள்வதற்குக் கண் மை பூசும் வழக்கத்தைக் கைக்கொண்டுள்ளனர் என்கின்ற உண்மை நடப்பியலைக் காணலாம். ஆண்களில் திருநங்கையர்கள் கண்களில் மை பூசுகின்ற வழக்கத்தினைக் கொண்டிருக்கின்ற நடப்பியலைக் காணமுடிகிறது.

யாழிசையும் தலைவன் தலைவன் தலைவியைதத் தழுவி இன்புறுதலும்.

E_1468743930.jpeg

பாணன் யாழிலிருந்து கலிப்பாவின் ஓசையான துள்ளலோசையை மீட்டுகின்றாள். இந்தத் துள்ளலோசையானது இசைப்பவருக்கும், பயன்பெறுபவருக்கும் கலியின்பதை மிகுவிக்கக் கூடியதாகும். அதனால்தான், யாழின் இசையைக் கேட்கின்ற தலைவனும் துள்ளலோசைக்கு ஏற்றவாறு இன்பமளிக்கின்ற பலவகையான செயல்களில் தலைவியோடு தலைவன் ஈடுபடுகின்ற குடும்ப வாழ்வியலை,

“நயந்த காதலித் தழீஇப், பாணர்

நயம்பட முரற்கையின் யாத்த பயன்தெரிந்து,

இன்புறு புணர்ச்சி நுகரும் -

மெய்புல வைப்பின் நாடு கிழவோனே!” (7)

என்னும் பாடலடிகள் விளக்கிச் செல்கின்றன. இப்பாடலின் வாயிலாக, இசைக்குக் காமயின்பத்தை விளைவிக்கக்கூடிய தன்மை உண்டு என்பதை அறிய முடிகின்றது. சங்ககாலத்தைத் தொடர்ந்து காப்பியக் காலத்திலும் இசை காமத்தை மிகுவித்த கதையினை நாம் அறிவோம்.

முல்லைப்பண் கேட்டு மகிழ்ந்திருக்கும் குடும்பம்

முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது மாலைக் காலமாகும். இக்காலத்தில் பாணர்கள் முல்லைப்பண்ணை யாழ் கொண்டு இசைத்தனர். இந்த இசையினைத் தலைவியானவள் தன்னுடைய தலையில் முல்லை மலரைச் சூடிக்கொண்டு, தலைவன் அருகிலிருந்து கேட்டாள், தலைவனும் தன் மகனுடன் அமர்ந்திருந்து கேட்டு இன்புற்றான். இக்காட்சியினை,

“பாணர் முல்லை பாடச், சுடரிழை

வாணுதல் அரிவை முல்லை மலைய,

இனிதிருந் தனனே, நெடுந்தகை -

துனிதீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே” (8)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இம்மாலை நேரத்தில் வீட்டின் முற்றத்தில் தலைவனும் தலைவியும் மகனும் அமர்ந்து பாணர்கள் இசைக்கின்ற முல்லைப் பண்ணைக் கேட்டு மகிழ்வடைந்தனர். இவர்களைப் போன்று காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களும், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் செய்து கொண்டவர்களும், சண்டை சச்சரவுகள், ‘தான்’ என்ற அகங்காரம், ஆண், பெண் என்ற வர்க்கபேதம், கருத்து முரண்பாடுகள் ஆகியவற்றைக் களைந்து ஒவ்வொரு குடும்பமும் மகிழ்வுடன் இருத்தல் வேண்டும் என்று ஆசிரியர் கூற விளையும் ஆழ்ந்த நோக்கம் இப்பாடலின் வாயிலாகத் தென்படுகின்றது.

மூவர் கிடக்கையும் உலகத்தைப் பெற்ற மகிழ்வும்

தனது மகள் குடும்பம் நடத்துகின்ற பாங்கினைச் செவிலித்தாய் காண்பதற்குச் செல்கின்றாள். அப்போது மாலை நேரத்தில் வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த தலைவனைப் புதல்வன் கட்டியனைத்திருந்தான். தலைவியோ புதல்வனையும் தலைவனையும் கட்டியனைத்துப் படுத்துக்கிடந்தாள். இக்காட்சியைக் கண்ட செவிலித்தாயிக்கு இந்த உலகம் முழுவதையும் தனதாகப் பெற்றுவிட்டால், எந்த அளவிற்கு இன்பம் கிட்டுமோ அவ்வின்பம் கிட்டுகின்றது. இந்த அரியதொரு நடப்பியல் காட்சியினை,

“புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்

புதல்வன் தாயோ இருவருங் கவையினள்

இனித மன்ற அவர்கிடக்கை

நனியிரம் பரப்பின்இவ் வுலகுடன் உறுமே” (9)

என்னும் பாடலடிகளில் காணமுடிகின்றது. இப்பாடலில், தலைவனும் தலைவியும் இனிதாகவும் மகிழ்வாகவும் குடும்பம் நடத்துகின்ற பண்டைய எதார்த்த வாழ்வியலை இன்றைய திரைப்படக்காட்சி போன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது.

புதல்வனின் நகை யாழின் இனிமைக்கு ஒப்புமை

இசைக்கு மயங்காத மனிதர்கள் இவ்வுலகினில் உண்டோ என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் வரும். விலங்கினங்கள் கூட இசைக்குக் கட்டுப்படுகின்றது. அந்த அளவிற்கு இசையின் பங்கு அளப்பரிது. இங்கு, தங்களின் புதல்வனின் சிரிப்பானது யாழின் இனிமையை ஒத்திருப்பதாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர். இதனை,

“மாலை முன்றிற் குறுங்காற் கட்டில்

மனையோள் துணைவி யாகப், புதல்வன்

மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்

பொழுதிற்கு ஒத்தன்று மன்னே,

மென்பிணித் தம்ம பாணன தியாழே” (10)

என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், மாலை நேரத்தில் வீட்டின் முற்றத்தில் சிறிய கால்களையுடைய கட்டிலில் தலைவி தலைவன் அருகில் இருக்கின்றாள். அக்கட்டிலில் தலைவனின் மார்பில் புதல்வன் தவழ்ந்து விளையாடுகின்ற காட்சியில் மூவரும் எழுப்புகின்ற சிரிப்பொலியானது யாழிசையை ஒத்திருக்கின்றது என்று சிறப்பிக்கப்படுகிறது. இதுமாமதிரியான குடும்பக்காட்சிகளை இன்னும் பல கிராமங்களில் நடைமுறை வாழ்க்கையில் உயிரோட்டமாகக் காணலாம்.

குழல், யாழைவிட இனிது மழலைச்சொல்

வாயால் ஊதி இசையெழுப்பும் ‘புல்லாங்குழல்’ என்ற இசைக்கருவியையும் நரம்பினை விரலால் மீட்டியெழுப்பும் ‘யாழ்’ என்ற இசைக்கருவியையும் விடச் சிறுகுழந்தையின் குரல் இனிமையானது என்பதினைத் திருவள்ளுவர் உலகிற்குப் பறைசாற்றுகின்றார். இதனை,

“குழனிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்” (11)

என்னும் குறட்பா சான்றுபகர்கின்றது. குழந்தைகளின் மழலைச் சொற்களைக்கேட்டு இன்பநுகர்ச்சி பெறாதவர்களே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று பிதற்றுவார்கள் என்பதனைத் திருவள்ளுவர் நயம்பட உரைக்கின்றார்.

முடிவுரை

உவமைக் காட்சிகளில் மான்காட்சியும் குடும்பக்காட்சியும் இயைபு படுத்தப்பட்டுள்ளது. யாழ் இசையின் இனிமையைவிட முல்லைதிணைச் செவிலி கூற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள குடும்பக்காட்சி இனிமையானதாகக் காட்சியளிக்கிறது. தந்தை பெயர் சூட்டுதலும் சிறுதேர் உருட்டுதலுமாகிய அக்கால நடைறை வாழ்வியல் எதார்த்தம் இக்காலத்திலும் நீட்சிபெறுகின்றதைக் காணமுடிகின்றது. குடும்ப வாழ்வியலில் தாய்மை உணர்வு மேலாங்கிக் காணப்படுகின்றது. இல்லத்திற்கு விளக்கொளியாகத் திகழ்பவள் தாயாகக் காணப்படுகின்றாள். தலைவன் தலைவியைதத் தழுவி இன்புறுதல், தலைவன் தலைவியோடு மகிழ்வோடு இருக்கின்ற குடும்ப வாழ்வியல் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. முல்லைப்பண் கேட்டு மகிழ்ந்திருக்கக்கூடிய குடும்பக்காட்சியில், மூவர் கிடக்கையானது உலகத்தைப் பெற்ற மகிழ்விற்கு ஒப்புமைப்படுத்தப்படுள்ளதைக் காணமுடிகின்றது. புதல்வனின் நகை யாழின் இனிமைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. குழல் மற்றும் யாழின் இசையை விட மழலைச்சொல் இனிமையானது என்ற நடப்பியல் எதார்த்த வாழ்வியல் கூறுகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

http://www.muthukamalam.com/essay/literature/p262.html

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 02:23, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குழல் மற்றும் யாழின் இசையை விட மழலைச்சொல் இனிமையானது என்ற நடப்பியல் எதார்த்த வாழ்வியல் கூறுகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

படிக்கப் படிக்கத் தேன்சுவை. ஐங்குறுநூறு எங்கள் வாழ்வியல் தத்துவம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.