Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் -1
 

சந்திப்பு: தமயந்தி

(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது. இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)

உங்கள் குழந்தைப் பருவம், வீடு, சூழல் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும்போது…

தேடல்களையும் கேள்விகளையும் இயல்பாகக் கொண்டது எனது குழந்தைப் பருவம். ஏறாவூரில், கயறுநிஸா – ஸெய்யித் அகமது தம்பதியரின் மூத்த மகள். ஒரு சகோதரன், மூன்று சகோதரிகளுடன் இயல்பான குடும்பம். எனது சில கவிதைகளில் சொல்லி இருப்பதுபோலவே பூவரச மரங்களிலிருந்து சிலுசிலுத்துக் கிளம்பிவரும் வரும் காற்றும், பாங்கொலியும் ஊதுபத்தி வாசனையுமாக ஏறாவூர் இயற்கையின் ஆசீர்வாதம்! மட்டக்களப்பு மீன்பாடும் தேனாடு எனச் சொல்லப்படுகின்ற நகரம். மீன்பிடியும் விவசாயமும் பிரதான தொழில்கள். வாப்பா கிழக்கிலங்கைக்கும் தலைநகருக்கும் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தினூடாக ஊரில் அறியப்பட்ட, செல்வமும் செல்வாக்குமுடையவர். பிரதான ஏற்றுமதிப் பொருள் மீன். உம்மா, வாப்பா இருவரினதும் படிப்பு வாசிக்கவும் எழுதவும் அறிந்தவரைத்தான். எனினும் வெகு நூதனமாகச் சுதந்திரமாக, பாலியல் சமத்துவத்துடன், குழந்தைப் பருவத்தில் கிடைத்திருக்கக்கூடிய எல்லா வளங்களுடனும் வளர்க்கப்பட்டோம்.

ஏறாவூர் முற்றிலும் இஸ்லாமியச் சூழல் கொண்ட ஊர். ஆறு வயதிலிருந்து சைக்கிள் ஓட்டினேன். அந்தக் காலத்தில் இஸ்லாமியச் சூழலில் ஒரு பெண் பிள்ளை சைக்கிள் ஓட்டுவதென்பது அவ்வளவு விரும்பத்தகுந்த காரியமில்லை. பன்னிரண்டு வயதிலும் முட்டிக்கால் வரை சட்டையும் இரட்டை ஜடையுமாக சைக்கிளோட்டித் திரிந்த என்னால் உம்மா, வாப்பாவுக்குக் கிடைத்ததெல்லாம் அவமானங்கள்தான். ஒரு பெண் பிள்ளையை எப்படி வளர்ப்பதென்று என் பெற்றோருக்குப் பலரும் வகுப்பெடுத்தார்கள். பெண் குழந்தையின் சிறு பிராயங்களை அனுபவிக்கத் தராத, சிறுமியை அவளது ஏழு வயது முதலே பெண்ணாகப் பார்க்கிற ஊரில் இப்படியாக வளர்ந்தேன் என்று நினைத்துப் பார்க்கையில் நெகிழ்வாக இருக்கிறது. பத்து பன்னிரண்டு வயதில் சைக்கிள் ஓட்டுவதற்கு ஏங்குகின்ற சூழல்தான் இன்றைக்கும் எங்கள் ஊரில் இருப்பது.

1513641627a.jpg

எனது சுதந்திரத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறேன். இருட்டறையில் பூட்டப்பட்டிருக்கிறேன். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறேன். என்னை மாற்றவும் எனது சுதந்திரக் குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட இந்த முயற்சிகளையும் உக்கிப்போன நம்பிக்கைகளையும் பொய்யாக்கிச் சுதந்திரமானவளாகவே வளர்ந்திருக்கிறேன்.

உங்களின் கல்லூரிக் காலம்... என்ன படித்தீர்கள்?

பள்ளிப் படிப்பு முடிந்ததுமே வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். முழுக்க முழுக்க சுய தீர்மானங்களுடன் சுய உழைப்புடனும் எனது 19ஆவது வயது வாழ்வைத் தொடங்கினேன். பத்திரிகைத் துறையிலிருந்த ஈடுபாடு காரணமாக ஊடகக் கல்வியைக் கற்கும் பொருட்டே கொழும்புக்கு வந்தேன். கொழும்பு வந்ததும் கல்வி ஒரு தாகமாகவே மாறிவிட்டது. பரிச்சயமற்ற மொழியும், அறிமுகமில்லாத மனிதர்களுடனான சகவாசமும் அனுபவங்களும் என்னில் நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தின. கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உளவியல் ஆகியனவும் கற்றேன். இவை தவிர தொழில்முறை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், பயணங்கள், கள அனுபவங்கள், மனித உரிமைகள் தொடர்பான கற்கைகள் நிறையக் கற்றுத்தந்தன.

முழுமையான கல்லூரி அனுபவம் என்று சென்னை ஸ்டெல்லா மேரிஸில் படித்த காலத்தைச் சொல்லலாம். சமூகப் பணித்துறையை (Social Work) அங்குதான் மூன்றாண்டுகள் கற்றேன்.

உங்கள் இளம் வயதில் என்னவாக ஆக வேண்டும் என விரும்பினீர்கள்?

இளமைக் காலத்தில் சட்டம் படிக்க வேண்டும், சட்டத்தரணியாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நிறைவேறவில்லை. பிற்காலத்தில் அது நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் வந்தபோது சூழல்கள் பொருந்தவில்லை.

கவிதை பக்கம் மனம் சாய்ந்தது எப்போது? அந்தக் கவிதை நினைவிருக்கிறதா?

பதின்மப் பருவத்திலிருந்து… ‘வாழ விரும்புகிறேன்’ என்ற கவிதைதான் எனக்குத் தெரிந்து நானெழுதிய முதலாவது கவிதை. சிறகு முளைத்த பெண் கவிதைத் தொகுப்பில் இருக்கும்.

நிலைகுலைக்கும் இந்த வலியிலிருந்து

வெளியேற விரும்புவதேயில்லை நான் – ஏன்?

வலிகளை மெய்யாகவே விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் வலி, எந்த வடிவத்தில் வந்தென்னைத் தாக்கும்போதும் அதைக் கடந்துவிடுவதற்கான பிரயத்தனங்களில் என்னை செதுக்கிக்கொள்கிறேன். வலிகளுக்குப் பிறகு, சுடுபட்ட தங்கத்தைப் போல தெளிவான என்னைக் காணுகின்றேன். எனக்கு நிகழ்ந்த எல்லாவித அநீதிகளும் என்னைப் பிடித்துத் தள்ளிய தோல்விகளும் ஏமாற்றங்களும் மீண்டும் எழுந்து நிற்பதற்கான மனத்திடத்தையே தந்திருக்கின்றன. தனிமை, ஏமாற்றம், பிரிவு, இழப்பு, அவமானம் என்று வலி எந்த வடிவத்தில் வந்தாலும் விரும்பி ஏற்கவே விரும்புகிறேன்.

பர்தாவிலிருந்து எப்போது வெளிவரும் மனம் தோன்றியது?

பர்தாவிலிருந்து வெளிவரவில்லை. பர்தாவைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொதுவான புரிதல்களிலிருந்தே வெளியே வந்தேன். ஒரு சிறுமி தலையை மறைக்க வேண்டியது ஏனென்ற கேள்வி ஆறு, ஏழு வயதுகளிலேயே வந்துவிட்டிருந்தது. பச்சிளம் பருவத்தில் குர்ஆன் மதரஸாவுக்குக் கால்களை மறைக்கும்படியான நீண்ட உடைகளை அணிய மறுத்ததிலிருந்து கேள்விகள் தொடங்கின. எனது பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் பர்தாவில்தான் பள்ளிக்குப் போக வேண்டியதிருந்தது. அது கட்டாயம். அங்கே மீறல்களுக்கு இடமில்லை. படிப்பு வேண்டுமென்றால் பர்தாவுடன்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இஸ்லாமியப் பாரம்பர்யமான ஊரொன்றில் வேறு தெரிவுகள் இருக்க முடியாது.

 

1513641627a.peg

பர்தாவைக் களைந்த போதான உணர்வு எவ்வாறிருந்தது?

முன்பே சொன்னதுதான்! பர்தாவிலிருந்து வெளிவரவில்லை. பர்தாவைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொதுவான புரிதல்களிலிருந்தே வெளியே வந்தேன். பர்தாவைக் களைவதென்பது தலையை மூடியிருக்கும் ஒரு துண்டுத் துணியைக் களைந்தெறிவதில்லை. என்னைப் பொறுத்தவரை பர்தா என்பது தலையை மூடிக்கொண்டு இருக்கக் கூடிய ஒரு துண்டுத் துணியில்லை.

என்னென்ன எதிர்வினைகள் இருந்தன?

சமூகம் எதிர்பார்க்கின்ற அல்லது அடையாளப்படுத்துகின்ற பர்தாவிலிருந்து வெளியேறியதற்கான எதிர்வினைகளைப் பற்றிக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். பர்தா அணியாத இவளை ஓர் இஸ்லாமியப் பெண்ணாக மட்டுமல்ல, ஒரு பெண்ணாக ஏற்றுக்கொள்வதற்கே சமூகம் தயங்குகிறது என்பேன். சமூக மதிப்பீடுகளிலிருந்து புறக்கணிப்பட்டேன், புறக்கணிக்கப்படுகின்றேன். ஒரு முழம் துணித் துண்டுக்கு அளிக்கின்ற மரியாதை ஒரு மனுஷிக்கு இல்லை என்பதில் உள்ள மதச் சாயமிடப்பட்ட அரசியல் மிக ஆபத்தானது. நமது பாதையில் எப்போதும் கற்களையும் முட்களையும் பரப்பிக்கொண்டே இருப்பது. என்னை இஸ்லாத்திற்கு எதிரானவள் என்றும், மேலைத்தேய சக்திகளினால் இயக்கப்படுகின்றவள் என்றும் வெறுப்புப் பிரசாரம் செய்வது தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. பொதுவெளிக்கு வருவதற்குத் துடிக்கும் இளைய சமுதாயப் பெண்களைக்கூட “ஸர்மிளா ஸெய்யித்திற்கு நேர்ந்ததுபோலப் புறக்கணிக்கப்படுவாய்” என்று எச்சரிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

கத்னா – இதற்கு எதிரான உங்கள் குரல் வலியது. நீங்கள் இந்தப் போராட்டத்தில் எப்படி ஈடுபட்டீர்கள்?

கத்னா என்பது பெண் உடல் மீதான அத்துமீறல். இது மதரீதியான செயற்பாடு அல்ல, கலாசார ரீதியான செயற்பாடே என்று சொல்லப்படுகின்றது. ஆனால் சில மதவாதிகள் கத்னாவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்கள். கத்னா மத ரீதியான செயற்பாடு என்றாலும் சரி, கலாசார ரீதியான செயற்பாடு என்றாலும் சரி, நிறுத்தப்பட வேண்டியது. கத்னா புழக்கத்தில் இல்லை என்பதாகத்தான் நான்கூட நம்பிக் கொண்டிருந்தேன். இந்தத் தலைமுறைப் பெண் குழந்தைகள் இந்தக் கொடுமைக்கு ஆளாகவில்லை என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு பொழுதில்தான் 2014இல் எங்கள் குடும்பத்திற்குள்ளேயே கத்னா செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்தேன். அப்போது தொடங்கிய தேடல்தான்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இல்லாமலாகிப் போய்விட்டதாக நம்பிக்கொண்டிருந்த ஒரு பண்பாடு யாருக்கும் தெரியாதபடியாக ரகசியமாக இன்னும் உயிர்ப்போடு இருப்பதைக் கண்டறிந்ததில் இருந்து ஈடுபாடு தொடங்கியது. பெண் கத்னாவை எதிர்த்துக் குரல் எழுப்பும் பல பெண்களும் ஆண்களும் இப்போது அடையாளப்படுத்தப்பட்டுப் பொதுநோக்குடன் ஒன்றாகச் செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை முடிவுறுத்துவது அப்படியொன்றும் எளிதான காரியமில்லை. முன்பே ஓரிடத்தில் சொல்லியதுபோல பெண்களையும் உள்வாங்கிக்கொண்ட வகையில் பெண்களுக்கு அநீதி இழைக்கும் முறைமையுடன் கூடிய செயல்பாடாக இருக்கும் பெண் கத்னா குறித்து பாரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையாக உள்ளன.

கத்னாவை மறுக்கும் பெண் எப்படி நடத்தப்பட்டாள்?

கத்னா தனக்கு வேண்டாம் என்று பெண்கள் மறுக்க முடியாது. ஏனென்றால் கத்னா செய்யப்படுவது பெண் குழந்தை பிறந்த நாற்பதாவது நாள்களில். பிறந்து நாற்பதே நாள்கள் ஆன ஒரு பிஞ்சுக் குழந்தையால் எதனையுமே மறுக்க முடியாது. கத்னாவை மட்டும் எப்படி மறுக்க முடியும்?

தலாக் – உங்கள் பார்வை?

தலாக் எனும் சொல்லுக்கு விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பதாகப் பொருள் கொள்ளலாம். பொதுவான பயன்பாட்டில் இச்சொல் விவாகரத்து எனும் மணமுறிவை குறிக்கும்.

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக ஒப்பந்தம் செய்துகொண்டு மனம் ஒன்றி இல்லற வாழ்வைத் தொடங்கியிருக்கும்போது மனக் கசப்பு, உறவில் விரிசல், இருவரும் இனிமேல் இணைந்து வாழவே முடியாது போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடிகள் தோன்றலாம். இத்தகைய சூழலில் திருமண உடன்படிக்கையை ரத்து செய்யும் பொருட்டே மணவிலக்குச் சட்டத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது. மணவிலக்கு விடயத்தில் இஸ்லாம் ஆண்களுக்கு ‘தலாக்’ எனும் உரிமையை வழங்கியிருப்பது போன்று பெண்களுக்கு ‘குல்கூ’ எனும் உரிமையை வழங்கியிருக்கிறது. இந்த இருவகையான மணவிலக்குச் சட்டங்களும் பல்வேறு நிபந்தனைகள் கட்டுப்பாடுகளைக் கொண்டது.

1513641627b.jpg

இலங்கை போன்ற அரபு தேசம் அல்லாத முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் "இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டம்” காதி நீதிமன்றின் தன்னிச்சையான போக்குகளுக்குள் மட்டுப்பட்டிருப்பதைக் காண முடியும். முறையான கண்காணிப்புப் பொறிமுறைகள் இல்லை. காதி நீதிபதிகள் சட்டத்திற்குக் கட்டுப்படுவதைவிடவும் தனிமனிதர்களின் யதேச்சாதிகாரத்திற்கே கட்டுப்பட்டவர்களாக உள்ளார்கள். உதாரணமாக, ‘முத்தலாக்’ விடயத்தில் தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று தடவைகள் மொழிய வேண்டும். ஒவ்வொன்றுக்குமிடையில் ஒரு மாதவிடாய் காலம் காத்திருத்தல் வேண்டும். கோபத்தில் தலாக் கூறுதல் கூடாது போன்ற இறுக்கமான நிபந்தனைகள் உள்ளன. ஒருவன் மனைவியை ஒரே நேரத்தில் ‘தலாக் – தலாக் – தலாக்’ என்றோ, ‘முத்தலாக்’ என்றோ, ‘மூன்று தலாக் கூறிவிட்டேன்’ என்றோ கூறி விவாகரத்துச் செய்தால் அத்துடன் எல்லாமே முடிந்துவிடும் என்பது இஸ்லாத்திற்கு எதிரான, தவறான நடைமுறை. ஆனால், நடைமுறையில் கணவன் வெளிநாட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப்பில் முத்தலாக் சொல்வதைக்கூட காதி நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இம்மாதிரியான ஒருதலைபட்சமான விவாகரத்து, பெண்களுக்கு உரிய பராமரிப்பு, நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் பாரபட்சம் போன்ற குளறுபடிகள் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கான தீர்வு இன்னுமொரு பிரச்னையைத் தோற்றுவிக்கும்படியாக நடைமுறைப்படுத்தப்படுவது மோசமான முன்னுதாரணம்.

சட்டக் கல்லூரி சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியான பெண்களும்கூட ஹாதி நீதிபதியாக முடியாதா? சட்டம் மதத்தை ஆதரிக்கிறதா?

சட்டத்தையும் மதத்தையும் இங்கே சம்பந்தப்படுத்த வேண்டிய புள்ளி வேறு. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாமிய விவாக விவாகரத்துச் சட்டத்தில் (Muslim Marriage and Divorce Act) முன்வைக்கப்படும் பல்வேறு திருத்தங்களில் (Reform) ஒன்றாக, காதி நீதிமன்றங்களில் பெண்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கும் நடைமுறைப்படுத்தப்படும் காதி முறைமைக்கும் சீர்திருத்தம் அவசியம். இந்தச் சீர்திருத்தத்தில் இஸ்லாத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன முன்னேற்றங்களையும், மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும், பால்நிலைச் சமத்துவத்தையும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் (Muslim Personal Law) தற்போதுள்ள நீதிமன்ற அமைப்பில் பெண்கள் நீதிபதியாக இருக்க முடியாது. இங்கே காதி நீதிமன்றங்களை மேற்பார்வை செய்யும் பொறிமுறை இல்லை. அரச மேற்பார்வை, ஒழுங்குக் கோட்பாடுகள், கட்டமைப்புக்கள் எதுவுமில்லாது செயற்படுகின்ற காதி நீதிமன்றங்களில் காதியார் மற்றும் பள்ளி பரிபாலன சபை என இவர்கள் செலுத்தும் ஆதிக்கம் பெண்களின் வாழ்வு சம்பந்தமான முக்கிய நிலைகளைப் பெரிதும் பாதிக்கின்றது.

இதனைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்குப் பங்களிப்புச் செய்யும் காரணியாகப் பார்க்க வேண்டியுள்ளது. பெண்களைக்கொண்டு நீதி செலுத்த முடியாது என தனியான காதி நீதிமன்ற முறைமைக்கு ஆதரவானவர்கள் தெரிவித்துவருகிறார்கள். காதி நீதிபதிகளாக இருக்கின்ற ஆண்கள் சட்டம் பயின்றவர்கள் இல்லை. சட்டம் பற்றிய அடிப்படைத் தகுதியற்ற ஆண்கள் காதி நீதிபதிகளாக இருக்க முடியும் என்றால் ஏன், சட்டம் பயின்ற பெண்கள் காதி நீதிபதிகளாக இருக்க முடியாது?

பலதார மணத்துக்கு எதிராக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதன் சிக்கல்களாக நீங்கள் பார்ப்பது எவற்றை?

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் - 2

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் - 2
 

சந்திப்பு: தமயந்தி

(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது. இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)

பலதார மணத்துக்கு எதிராக உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதன் சிக்கல்களாக நீங்கள் பார்ப்பது எவற்றை?

பலதார மணம் குறித்த தவறான அபிப்பிராயங்கள் சமூகத்தில் நிரம்பிக் கிடப்பதே முதல் சிக்கல். ஒரு ஆண் இடுப்பு வலுவோடும் பாக்கெற்றில் பணத்தோடும் இருந்தால் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வரையான மனைவிகளை வைத்திருக்கலாம் என்கின்ற பொதுவான புரிதல் அபத்தமானது. சுயகௌரவமிழந்து அந்தஸ்து இழந்து தங்களது பிள்ளைகளுக்கு உரிய சுயமரியாதையும் பராமரிப்பையும் இழந்து என்று பலதார மணத்தினால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் பிள்ளைகளின் குடும்பங்களின் பட்டியல் நீளம். இவர்களின் உளவியல் சிக்கல் ஒருபுறம், பொருளாதார நெருடிக்கடிகள் மறுபுறமென்று காலப்போக்கில் புறந்தள்ளப்பட்ட வாழ்வு நிலைக்கே ஒரு ஆணின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் தள்ளப்படுகின்றனர்.

பலதார மணம் என்பது இஸ்லாத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுவதால் இஸ்லாத்தின் பார்வையிலேயே இதனை அணுக வேண்டியும் உள்ளது.

இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ வலியுறுத்தவில்லை. ஆணொருவன் தான் முறையற்ற உறவை நாடிச் சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறான முறைகேடான காரியத்தைச் செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்கே இஸ்லாம் அனுமதித்திருக்கிறது.

குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனத்தில் ”மனைவியர் (அந்நிஸா)” இதற்குத் தெளிவான விளக்கம் உள்ளது.

“உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ, மூன்றோ, நான்கோ - மணந்துகொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).”

அதே அத்தியாயத்தின் 129ஆம் வசனத்தில், “(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது” என்று மனித இயல்பை அழுத்தம் திருத்தமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது அல்குர்ஆன்.

அல்குர்ஆனின் இந்தக் கட்டளையை மீறியவர்களாகவே பல ஆண்கள் பலதார மணம் செய்கிறார்கள். அவர்கள் தங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை நீதமாக நடத்துவதில்லை. குழந்தைகளை நீதியாகப் பராமரிப்பதில்லை.

“சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)” என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

“சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது” என்று அல்குர்ஆனே கூறிய பின்னரும் பலதார மணத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதை இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்றுபோலக் கூவிக்கொண்டு பெண்களைப் பலியாக்குவது மதத்தின் பெயரிலான வன்கொடுமை.

1513687140a.jpg

ஹாதியா – உங்கள் கருத்து?

ஹாதியா விடயத்தைப் பல்வேறு தளங்களில் விவாதிக்க முடியும். ஒன்று மதசுதந்திரம் அல்லது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமை தொடர்பானது. இரண்டு, ஜனநாயக அரசியலமைப்பைக் கொண்ட அரசின் இறையாண்மை அல்லது அரசியல் பற்றியது. மூன்று நீதித் துறையின் சுயாதீனத்தன்மையில் செல்வாக்குச் செலுத்தும் அதிகாரங்கள் தொடர்பானது. நான்கு இஸ்லாமிய அமைப்புக்களின் அல்லது இஸ்லாமியவாதிகளின் இரட்டைத் தன்மை.

சுயநினைவோடு ஒரு பெண், தான் விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், இதில் கட்டாயங்கள் எதுவும் இருக்கவில்லை என்று நீதிமன்றிலே தோன்றிக் கூறிய பின்பும், மகளை மனமாற்றி மூளைச்சலவை செய்கிறார்கள் என்கிற பெற்றோரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பது அபத்தமான நிலை.

இங்கே நீதிமன்றம் கரிசனை எடுத்துக்கொண்டிருக்கும் ‘மூளைச்சலவை’ என்பதற்கு கடந்த கால வழக்குகளில் ஒன்றான ‘கீதா – லதா’ வழக்கை நோக்க வேண்டும்.

2016ஆம் ஆண்டு, துறவு பூண்டு அங்கேயே தங்கிவிட்ட கீதா - லதா சகோதரிகள் வழக்கும் இதே போன்றதுதான். அந்தப் புகாரும் தங்கள் மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாகவே பெற்றோர்களால் முன்வைக்கப்பட்டது.

அந்த இரு பெண்களும் மேஜர். தங்கள் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதையும், ஈஷா மையம் எங்களை எந்த வித மூளைச்சலவையும் செய்யவில்லையெனவும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.

இரண்டுமே ஒரே வழக்குகள். கீதாவும் லதாவும் மேஜர் என்கிற அடிப்படையில் அணுகிய இந்தியச் சட்டம் ஹாதியா மதம் மாறியதிற்கு ‘லவ் ஜிஹாத்’ என்று லேபல் அடிப்பதும் ஹாதியாவின் கணவனுக்குத் தீவிரவாதி முத்திரை குத்த முயற்சிப்பதும் இந்தியாவின் இந்துத்துவ மனநிலையை உறுதியாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களாகின்றன.

இஸ்லாமியர்களை அந்நியப்படுத்துவதற்காக இந்துத்துவா சக்திகள் தோண்டும் ஆழமான அரசியல் குழியில் இந்திய நீதித் துறையும் வீழ்ந்துவிட்டதா என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

மதங்கள் ஒட்டுமொத்தமாகவே பெண்களுக்கு எதிரானவையா?

சமகால மத ரீதியான இயக்கங்களின் அரசியல் ஆதிக்கம் மிக வலியது. இது எப்படியானதென்றால் பெண்களையும் உள்வாங்கிக்கொண்ட வகையில் பெண்களுக்கு அநீதி இழைக்கின்ற முறைமையுடன் கூடியது. இது மிக ஆபத்தானது. மதங்களில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படிச் சிரிக்க வேண்டும் என்ற அனைத்தையும் ஆண்களே தீர்மானம் செய்கின்றனர். அந்தத் தீர்மானங்களுக்கு மதச் சாயத்தைப் பூசுகின்றனர். பெண்களை அடக்கி ஆள்வது மத அடிப்படைவாதத்தின் மிகப் பெரிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக மேலும் மேலும் வலுவடைந்துவருகிறது.

1513687140b.jpg

 

இஸ்லாத்தில் உங்களைக் கவர்ந்தது?

இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைத் திட்டத்தின் ‘மூலம்’ கவரக்கூடியதுதான். காலப்போக்கில் தங்களுக்கு வசதியானபடியாக இஸ்லாத்தை இஸ்லாமிய அரசுகளும் மத நிறுவனங்களும் வளைத்து ‘மெய்’மையைக் குழப்பிவிட்டன. அரசியல் அதிகாரமும் வணிகமும் இஸ்லாத்தைக் கூறுபோடத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. இஸ்லாத்தில் கவர்ந்தவற்றை மீட்டெடுக்க காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டு செல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்கள் அடிப்படைவாதிகளுக்கு எரிச்சலூட்டும், எதிர்ப்பு வருமெனத் தெரிந்தும் நீங்கள் வெளிப்படுத்துவதன் மனபின்புலம்?

அடிப்படைவாதிகளை எரிச்சலூட்டுவது எனது வேலையில்லை. எரிச்சல் அடையும்படி அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். கேள்விகளுக்கு அவர்களிடம் பதில்கள் இல்லை. அல்லது நாகரீகமான அறிவார்ந்தமான உரையாடல்களுக்குரிய பொறுமையும் தகைமையும் அவர்களுக்கு இல்லை. சமகாலத்தில் பெண்களை ஒடுக்குவதற்கு ஒரு உதாரணமாக என்னைக் காண்பிக்க அடிப்படைவாதிகள் முற்படுகின்றார்கள். இந்த மோசமான அரசியலுக்கு அடிபணிய விரும்பவில்லை. எனது குரல் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதில்லை. மதத்தின் பெயரால் பெண்களைக் கையாள எண்ணும் அரசியலுக்கு எதிரானது. பெண்களின் சுதந்திரக் குரல்கள் பேய்களின் கூச்சலைப் போல் அடிப்படைவாதிகளைத் தொந்தரவு செய்துகொண்டேயிருக்க வேண்டும். நீண்டகால உலக வரலாற்றில் பல பெண்கள் இந்தப் போராட்டத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றைய காலத்திலும் பல பெண்கள் உள்ளார்கள். எனக்குப் பிறகும் இந்தப் பணியை வேறு பெண்கள் செய்வார்கள். அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்தும் வெளிப்படுத்துவதனுடாக உடனடியான மாற்றங்கள் நிகழாமல் போகலாம், ஆனால் நேர்மறைச் சக்தியை (Positive Energy) கடத்தும் பணியைச் செய்கின்றவர்களாகிறோம்.

என்றாவது வேறு மதத்தில் பிறந்திருக்கலாம் என நினைத்திருக்கிறீர்களா?

சட்டியிலிருந்து அடுப்பில் விழுவதென்று எங்கள் ஊரில் சொல்லப்படுகின்ற ஒரு சொலவடைதான் நினைவு வருகிறது.

இந்த உலகில் மதம் என்று இல்லாவிட்டால்

மதங்கள் இல்லாதுவிட்டிருந்தால் இன்றுள்ளதைவிடவும் மோசமானதாக இந்த உலகம் இருந்திருக்கலாம். மனித மேம்பாட்டுக்காக, வாழ்வை நெறிப்படுத்துவதற்காகவே மதங்கள் தோன்றின என்றே நம்புகிறேன். மனித நாகரீக வளர்ச்சியில் மதங்களின் பங்கு தவிர்க்க முடியாதது.

ஈழம் – இன்றைய தமிமீழப் பெண்களின் நிலை… போராளிப் பெண்கள் … போருக்குப் பிறகு தனித்திருக்கும் பெண்கள்…

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லத் தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. மக்கள் இன்னும் முள்ளிவாய்யக்காலின் தாக்கங்களிலிருந்து வெளிவரவில்லை. உலக வரலாற்றிலிருந்து துடைத்தெறிய முடியாத அந்தத் துயரத்தைக் கடப்பதற்கான மாற்றங்கள் களத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வில் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. காணாமலாக்கப்பட்டவர் குடும்பங்களின் ஒப்பாரிகள் ஓயவில்லை. அரசியல் கைதிகளின் நிலைகளை அரசு இன்னும் மக்களுக்குச் சொல்வதற்குத் தயாரில்லை. அகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களின் வாழ் நிலங்களிலிருந்து இராணுவத்தை அப்புறப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் ‘நல்லாட்சி’ அரசிலும் நீடிக்கின்றது. இப்படியொரு நிலத்தில் பெண்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்ப் பெண்களுக்கு எதிராக என்னென்ன வன்முறைகள் நிகழ்ந்தன?

இலங்கை அரசும் அரச படைகளும் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இழைத்த வன்முறைகள் உலகறிந்தவை. இலங்கை அரச படைகளாலும், இலங்கைக்கு அமைதி காக்கவென 1987 - 1990களில் வந்த இந்திய அமைதிப் படையினராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாகிக் கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல் நீளமானது.

1971இல், தங்களது சொந்த இனப் பெண்ணான மனம்பேரியைப் பாலியல் சித்திரவதை செய்து வன்கொலையில் அனுபவ முதிர்ச்சி பெற்ற படைதான் இலங்கை இராணுவம்!. இந்தக் கொலை அனுபவத்துடன் கிருஷாந்தி, கோணேஸ்வரி, இசைப்பிரியா என வன்முறையின் கரங்கள் நீள்கின்றன. இவை சில மட்டும்தான். தெரிந்தும் தெரியாமலும் பல ஆயிரம் பெண்களை இலங்கை இராணுவம் ஏப்பமிட்டுள்ளது. பல புதைகுழிகள் இதற்குச் சான்றாக உள்ளன.

போர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் தனிப் பெற்றோராக்கிவிட்டுள்ளது. குழந்தைகளை வளர்க்கவும் குடும்பத்தை நிர்வாகம் செய்யவும் துணையிழந்து ஒழுங்கான வருமானமில்லாமல், அதேநேரம் அரசியல் கைதியாக இருக்கும் கணவனை விடுவிப்பதற்கு அல்லது காணாமலாக்கப்பட்ட கணவனைக் கண்டுபிடிப்பதற்கு போராட்டங்களையும் செய்துகொண்டு உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடிவற்ற துயரங்களைச் சுமந்தவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்கின்றனர்.

1513687140c.jpg

இலங்கைப் போர்சூழலில் இஸ்லாமியச் சமூகம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது?

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை என்பது, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை. சிங்களப் பேரினவாதத்தின் கோரத்தனமான கவனம் இப்பொழுது முஸ்லிம் சமூகத்தில் விழுந்துள்ளது. முஸ்லிம்களைத் திட்டமிட்டு ஒடுக்கும் செயல்பாடுகள் தெற்கில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. போர்ச் சூழலில் வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடிக்கு ஆட்பட்டிருந்தது. முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைப் போர்ச் சூழலில் இயங்கிய பல உதிரி இயக்கங்களில் ஒன்றாகவே புலிகள் நோக்கினர். இது வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களைப் பலவந்தமாக வெளியேற்றியும், கிழக்கில் காத்தான்குடி, ஏறாவூர் நகரங்களிலும் பள்ளித்திடல், பங்குறானை போன்ற விவசாய - எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்களைக் கொன்றும் மாபெரும் வரலாற்றுத் தவறுகளைப் புலிகள் அமைப்பு இழைப்பதற்குக் காரணமாகியது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்று அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தையும் போர்ச்சூழல் வலிந்து உருவாக்கியது.

ஒரு பக்கம் நிலம் சார்ந்த அரசியல். மறுபுறம் மதம் சார்ந்த அரசியல். எது வலியது, எது கொடியது?

இரண்டுமே கொடியது. என்னுடைய அனுபவத்தில் மதம் சார்ந்த அரசியலே வலிய தாக்கங்களைச் செய்வதாக நம்ப விரும்புகிறேன். மத த் தீவிரவாதத்தின் உச்சநிலையே சிலபோது நிலம் சார்ந்த அரசியலையும் தீர்மானிக்கிறது. உலகில் பெரும்பாலான அரசியல் - மத அடிப்படைவாதத்தினால், ஏகாதிபத்திய அடிப்படைவாதம் உறுதியடைந்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் அரசியல் நோக்கத்திற்கு உதவும் வகையில் மத வெறி ஊடடப்படுகிறது. மத இயக்கங்கள் அரசுகளைத் தோற்றுவிக்கின்றன. அரசியலும் மத அடிப்படைவாதமும் ஒரு புள்ளியிலிருந்து துவங்கிய இரு கோடுகள்.

பால் பிரச்னைகள், பால்நிலைப் பிரச்னைகள் குறித்து?

பால் எனப்படும் உயிரியல் ரீதியான வேறுபாடு மனிதரிடையே இருப்பதுபோலவே ஏனைய உயிரினங்களான விலங்குகள், பறவைகள், தாவரங்களிலும் உள்ளது. பால்நிலை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களுமே. பால்நிலைக் கோட்பாடுகள் சமூகம் ஆணையும் பெண்ணையும் எவ்வாறு வகைபிரிக்க விரும்புகிறது என்பதிலிருந்து தொடங்குகிறது. இயல்பிலேயே இனப்பெருக்கத்தின் மூலமாகப் பெண் படைக்கப்பட்டிருப்பதனால், பால்நிலைக் கோட்பாடானது பெண்ணின் பாத்திரத்தினை ஆணில் தங்கியிருக்க வேண்டியதாக மட்டுப்படுத்துகிறது.

இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலைக் கல்வி பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளான இலங்கை இந்தியா போன்றவற்றில் பால் – பால்நிலை சமத்துவம் வேறுபாடு என்பவற்றைப் பேசுவது இன்னமும் சர்ச்சைக்குரிய விவாதங்களாகவே உள்ளன. இந்த நிலைக்கான முக்கிய காரணமே பால் – பால்நிலை பற்றிய தெளிவின்மையே. பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய விடயங்கள் உள்வாங்கப்படுவது இந்த இடைவெளிக்குத் தீர்வாக அமையலாம்.

தனிப் பெற்றோராக இருக்கும் பெண்களின் சிக்கல்கள் என்னென்ன?

https://minnambalam.com/k/2017/12/19/1513641627

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் - 3

முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: கவிஞர் ஸர்மிளா ஸெய்யித் - 3
 

 

சந்திப்பு: தமயந்தி

 

(ஷர்மிளா ஸெய்யித்.. ஈழத்திலிருந்து ஒலிக்கும் முக்கியமான சமகாலப் படைப்பாளர்களில் முக்கியமானவர். அவரது கலகக் குரல் பெண் புனைவு மையத்தைக் கலைத்துப் போட்டு பின் அதில் நீந்தும் வண்ணங்களோடு வேறொரு சாயம் கலங்காத வானத்தைப் பரிந்துரை செய்கிறது. இதனாலே எண்ணிலடங்கா எதிர்ப்புகளைச் சந்திக்கும் ஷர்மிளாவுடான இந்த உரையாடல் நிலப் போர் சூழலையும் மனப் போர் இறுக்கத்தையும் மதப் போர் அடக்குமுறைகளையும் முழுதாக வரைய முற்படுகிறது.)

தனிப் பெற்றோராக இருக்கும் பெண்களின் சிக்கல்கள் என்னென்ன?

சாதாரணமாகப் பெண்களுக்குச் சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளோடு இன்னொரு மடங்கு பாரமானது தனிப்பெற்றோராக இருக்கும் பெண்களின் பிரச்சினைகள். ஒரு பெண் தன்னையொரு சிங்கிள் மதர் என்று அடையாளப்படுத்துவதைக்கூட மோசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற சமூக அமைப்பில், தனிப் பெற்றோராக ஒரு பெண் வேலைக்குச் செல்வது குழந்தைகளைப் பார்ப்பதென்று எல்லா நிலைகளிலுமே போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். ஆண் துணையில்லாத பெண்ணை சமூகத்திற்கு ஆகாதவள் என முடிவுறுத்துவது, அவளது அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிப்புக்குட்படுத்துவது, சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனங்களோடு அவளது ஒழுக்கத்தை மதிப்படுவது என்று எவ்வளவோ.

இதிலும் வேலைக்குச் செல்லும் பெண்கள், செல்லாத பெண்கள், படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று அவரவர் தகுதிக்கேற்ப பிரச்சினைகளின் தன்மைகள் மாறுபடும். திடீரென்று ஒரு பெண் தனிப் பெற்றோராக ஆகிவிடும்போது அவள் தொழிலுக்குச் செல்லாதவள் என்றால் தொழில் தேடுவதில் உண்டாகும் சிக்கல்கள் சிலபோது வாழ்வைச் சீரற்ற திசைக்கு இழுத்துச் செல்லவும்கூடும். படிக்காத பெண்களின் நிலை இன்னும் மோசம்.

1513708243d.jpg

முகநூல் உள்டப்பிகளில் உங்களுக்கு வந்த கேவலமான செய்திகளை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

முகநூல் உள்பெட்டிகளில் மட்டுமல்ல வெளிப்படையாகவே என்னைக் குறித்த மோசமான கருத்துக்கள், விமர்சனம் என்ற பெயரிலான அவதூறுகள் வந்துள்ளன. வந்துகொண்டிருக்கின்றன. எனது பெயரில் முகநூல் பக்கங்கள் இயக்கப்படுகின்றன. 2012இலிருந்து இந்த நிலை தொடர்கிறது. ஆரம்பத்தில் இது மன நெருக்கடியைத் தோற்றுவித்த ஒன்றாக, எனது அன்றாடக் காரியங்களை இடைஞ்சல் செய்வதாக இருந்ததை மறுப்பதற்கில்லை. இத்தகைய சூழலில் பல பெண்களும் ஆண்களும் எனக்குத் துணை இருந்துள்ளார்கள். எனது பெயரில் நிர்வாணப் படங்களுடன் இயங்கிய முகநூல் பக்கங்களை முடக்குவதற்குப் பலர் உழைத்திருக்கிறார்கள். முக்கியமாகத் தமிழ்நாட்டிலுள்ள பெண் செயற்பாட்டாளர்களும், எழுத்தாளர்களும் துணைநின்றார்கள். இப்போதெல்லாம் கையலாகாதவர்களின் இத்தகைய அருவருப்பான கோழைத்தனமான செயற்பாடுகளைப் பொருட்படுத்துவதில்லை. காலம் இந்தப் பக்குவத்தைத் தந்திருக்கிறது. அனுபவம் கடப்பதற்கான வழிகளைக் காட்டித்தந்துள்ளது.

வெளிவரவுள்ள உங்கள் நாவலின் முக்கிய கதாபாத்திரமான உம்மம்மா உங்கள் வாழ்வின் வழிகாட்டியா?

உம்மம்மா என்னில் தாக்கம் செலுத்திய ஒரு பெரும் ஆளுமை. பள்ளிக்கூடமே போய் அறியாத உம்மம்மாவுக்குள் இருந்த ஆளுமைக் குணங்கள், நிர்வாகத் திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். வாழ்வின் திசையைத் திருப்பக்கூடிய முச்சந்திகளில் அவர் எடுத்த முடிவுகள் குடும்பத்தையும் மக்களையும் நோக்கி நகர்த்திய திசைகளைப் பார்த்து வளர்ந்தவளாக உம்மம்மாவின் மீது எப்போதும் பேரன்பும் நேசமும் எனக்குண்டு. உம்மம்மா எங்களை விட்டு நீங்கிச் சென்று பத்தாண்டுகள் கடந்தும் அவரது இல்லாமையை நாங்கள் உணர்கின்றோம். உம்மம்மா இருந்திருந்தால் இப்படியாக நடந்திருக்காது என்று இன்றும் ஆதங்கப்படுகின்றோம்.

தமிழ் இலக்கியச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? குறிப்பாகப் பெண்கள் பங்களிப்பு பற்றி?

தமிழ் இலக்கியச் சூழல் குறித்துப் பேசுவதற்குப் போதுமான அனுபவம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களின் பங்களிப்பு பெருந் தாக்கத்தைச் செலுத்துவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. 80களில் பெண்கள் பேசத் தயங்கிய உடலரசியலையும் காமத்தையும், காதலையும் சமகாலத்தில் களத்திற்கு வரும் புதிய பெண்கள் துணிகரமாகப் பேசுகிறார்கள். கடந்த காலங்களில் இடம்பெற்ற பெண்களின் தொடர் பங்களிப்புகளும், நீண்டகால இடைவெளியற்ற போராட்டமும் இந்தச் சாதக சூழ்நிலைகள் உருவாகக் காரணம்.

ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாத தாக்கம் செலுத்தியுள்ளது. போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் போராட்ட அனுபவங்கள் பால்நிலை சமத்துவமிக்க இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தின. 2009க்குப் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் துணிகரமான எழுத்துக்கள் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியதைக் கண்டோம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவரான தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவல், பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் மகளிர் அணியில் பொறுப்பில் இருந்த போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூலான ‘கூர்வாளின் நிழலில்’, ‘போர்க்காலம்’ கவிதைத் தொகுப்பு, சிறுகதைகள் தொகுப்பு ஆகிய நூல்கள் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை அழுத்தமான குரலில் பதிவு செய்கின்றன.

1513708243b.jpg

படைப்பாளர்களில் பெண்கள் ஒற்றுமை இருக்கிறதா?

ஒற்றுமை இருந்தபடியால்தான் படைப்புலகில் பெண் படைப்பாளிகள் இத்தனை துணிகரமாகக் கால் ஊன்ற முடிந்திருக்கிறது. எல்லாத் துறைகளிலும்போலவே படைப்புலகிலும் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. பெண் மொழியின் தனித்துவத்தை அங்கீகரிப்பதில் ஆண்களுக்கு மனத்தடைகள் இருந்துவருகின்றன. படைப்பு வழியாக ஒரு பெண் படைப்பாளி அவமானத்திற்குள்ளாகும்போது துணையாகக் குரல் எழுப்புவதும் போராடுவதும் ஏனைய பெண் படைப்பாளிகள்தான். பெண்ணியப் பார்வையுடன் சமத்துவ நோக்குடைய ஆண்கள் இல்லை என்பதல்ல இதன் அர்த்தம்.

 

சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் என்னை வன்புணர்ந்தும், கொன்றும் நிகழ்த்திய தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் படைப்பாளிகளே. தனிநபர்களாக இருக்கக்கூடிய விருப்பு வெறுப்பு ஏமாற்றங்களைக் கடந்து பொதுநோக்கத்துடன் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய ஒற்றுமை பெண் படைப்பாளிகளிடம் நிச்சயமாக இருக்க வேண்டியது.

உங்கள் வாழ்வின் மகத்தான பெண்மணிகள் யார் யார்?

எனது உம்மம்மா! அடுத்ததாக உம்மா! உம்மாதான் என்னைத் தூக்கி நிறுத்திய மனுஷி. இந்த சமூகம் பிய்ந்த செருப்பை விடவும் மோசமாக என்னை நடத்திய காலங்களில் என்னுடனேயே நின்றவர் உம்மாதான். என்னை விபச்சாரியென்று தூற்றியவர்கள் எங்கள் வீட்டின் அடுத்த தெருவைக் கூடத் தெரியாத பெண்ணான உம்மாவையும் விபச்சாரி என்றார்கள். 2012இல் எங்கள் வீட்டின் மேல் கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டபோது கிட்டத்தட்ட குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோருமே என்னில் சலிப்படைந்தவர்களாக மாறியிருந்தார்கள். ஆனால் உம்மா மட்டும் உறுதியாக என்னுடன் நின்றார். ஒரு பெண்ணாகவும் தாயாகவும் தோழியாகவும் என்னுடனேயே வாழும் மகத்தான பெண்மணி எனது உம்மாதான்.

எதிர்ப்புகளையும் எதிர்ப்பின் வன்மத்தையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள். உங்களுடனிருப்பவர்கள் உங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

எதிர்ப்பையும் எதிர்ப்பின் வன்மத்தையும் எதிர்கொள்கிறேனா, கடக்கிறேனா என்று யோசித்தால் கடக்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். எல்லா நிலைகளிலும் எதிர்ப்புகளை எதிர்த்து நிற்பது சாத்தியமில்லையும்கூட. சில சந்தர்ப்பங்களில் கண்டுகொள்ளாதிருப்பதும் ஒருவகை எதிர்த்தலாகின்றது. கண்ணுக்குப் புலப்படும் அதிகாரத்தை எதிர்ப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. மறைமுகமாக எதிர்ப்பவர்களை எதிர்கொள்வதில் ஆர்வமில்லை. அதில் எந்த வித சுவாரசியமுமில்லை.

உங்களுடனிருப்பவர்கள் உங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி! தவிர்க்க முடியாத மனுஷிக்குரிய ஓர் இடம் என்னுடன் இருப்பவர்களான குடும்பம், நண்பர்கள், தோழர்கள், செயற்பாட்டாளர்ளுக்கு என்னில் உண்டு என்பதை உணரவைத்த ஒரு கேள்வியாக இதைப் பார்க்கிறேன். ஒரு கலகக் குரலைச் சகித்துக் கொண்டிருப்பதென்பது அத்தனை எளிதில்லை. என்னுடைய சுதந்திரம், வாழ்வு என்னுடைய சில தீர்மானங்கள் - இவற்றில் அதிருப்திகள் இருந்தும் எனது குடும்பத்திலுள்ளவர்கள் என்னை நேசிக்கும்படியாகத்தான் வாழ்கிறேன். என்னை அவர்களால் தவிர்க்க முடியாதிருக்கிறது. கொள்கை ரீதியான முரண்பாடு உறவைத் தவிர்க்க ஒரு காரணமில்லை என்ற புரிதலுக்கு அவர்களுக்கு வந்துவிட்டார்களா என்று யோசிக்க வேண்டியதிருக்கிறது. இப்படித்தான் எனது நண்பர்கள், சக செயற்பாட்டாளர்கள், தோழர்கள் எல்லோருக்குமே என்னைத் தவிர்க்க முடியாத ஒரு காரணம் இருக்க வேண்டும்.

சொந்த ஊருக்குச் சென்று ஆறு ஆண்டுகளாகிறது. ஸர்மிளா ஸெய்யித் கொல்லப்பட வேண்டியவள் என்று உரத்துக் கத்திய குரல்கள் மெல்ல அடங்கிக்கொண்டுவருகின்றன. அங்கே என்னை நேசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதை எனக்கு வரும் தகவல்கள் உணர்த்துகின்றன. அவர்களுக்காக நான் ஒன்றுமே செய்தவளில்லை. அவர்கள், முக்கியமாகப் பெண்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள், ஸர்மிளாவின் கலகக் குரல் என்பது அவர்களுக்கும் சேர்த்துத்தான் என்று. அவர்களால் செய்ய முடியாத ஒன்றை இவள் செய்துகொண்டிருக்கிறாள் என்று.

1513708243f.jpg

இன்றைய கார்ப்பரேட் உலகில் மனித மனம் உலகெங்கும் எவ்வாறு உள்ளது?

துரதிருஷ்டவசமாக விரும்பியோ இல்லாமலோ பொருள்முதல்வாத உலகில் (Materialistic) வாழ்கிறோம். இரு மனிதர்களுக்கிடையில் சுய நல அக்கறையைத் தவிர வேறெந்த உறவும் இல்லை என்பதாக வாழ்வை மாற்றிவிட்டதில் வணிகம் பெரு வெற்றி கண்டுவருகின்றது. ஆதாயத்தை மட்டுமே உறுதியாகக் கொண்ட வணிகத்திற்கு அரசியலும், அரசியலுக்கு வணிகமும் மாறி மாறி உதவுவதை நேரடியாகவே காணுகின்றோம். ஏகபோக வணிக நிறுவனங்கள் அரசுகளையும் ஊடகங்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முழு சமூக, அரசியல் அமைப்பு முறையையும் தங்களது வேலையாளாக மாற்றிவிட்டிருப்பதன் பின்னணியில் வணிக உலகின் மிகப் பெரிய சந்தைப் பொருளாக எல்லாவித சமூகப் பிரக்ஞைளும் மாறிக் கொண்டிருப்பதில் தவிர்க்க முடியாதவர்களாகத் தனிமனிதர்களும் ஆட்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சமூகத்தின் இரட்டை மனநிலை என்னவென்று நினைக்கிறீர்கள்?

அரசியல், மதம், கலாசாரம் போன்ற அடையாளங்களுடன் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற மனிதர்களால் வணிக அரசியல் நிறுவனங்களின் தாக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. விடுதலைப் போராட்டங்கள், பால்நிலை சமத்துவம், மரண தண்டனை போன்ற விடயங்களில் சமூகம் இரட்டைத்தன்மையுடன் இருக்கின்றது. ஒவ்வொரு தனிமனிதனும் நீதி செலுத்துகிறவனாகவே இருக்க விரும்பும் மனத்தின் விளைவு இது. கறுப்பு - வெள்ளைப் பார்வையின் தாக்கம். பிரச்சினைகளின் அல்லது விளைவுகளின் இன்னொரு பக்கத்தை நோக்குவதற்கு கறுப்புக்கும் வெள்ளைக்குமிடையிலான சாம்பல் நிறத்தை ஏற்பதற்குள்ள தனிமனிதர்களின் மனத்தடைகளினாலேயே சமூகத்தின் இரட்டை மனநிலை கட்டமைக்கப்படுகின்றது.

தமிழ் சினிமா பார்ப்பதுண்டா.. ஈர்த்ததுண்டா?

பொதுவாகவே சினிமாவில் ஈடுபாடு குறைவு. என்னைப் பாதித்த சில தமிழ் சினிமாக்கள் உண்டு. பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை போன்ற சினிமாக்கள் நீண்ட காலம் முன்பு பார்த்தும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. மொழி, மைனா, பருத்தி வீரன், கும்கி, காக்கா முட்டை வரிசையில் அண்மையில் பாதித்த தமிழ் சினிமா என்றால், அறம். நயன்தாராவின் நடிப்புக்காக நானும் ரவுடிதான் சினிமாவையும் ரசித்தேன். அருவி வெளிவருவதற்கு முன்பே ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னமும் இந்தச் சமூகம் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. இந்த உலகும் நமது வாழ்வு இன்றைக்குள்ள நிலையை அடைந்திருப்பதற்குப் பின்னால் இருக்கக்கூடிய மாற்றம் தரக்கூடிய நம்பிக்கை வலியது.

https://minnambalam.com/k/2017/12/19/1513641627

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.