Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 ஒக்டோபர் 01

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் நடத்தி முடித்திருக்கின்றன.   

தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது.  

தமிழ் மக்களின் அரசியல் எழுச்சி என்பது, ஒற்றுமையாக ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டின் போக்கிலேயே நிகழ்ந்து வந்திருக்கின்றது. ஏனெனில், தமிழ் அரசியல், குறிப்பாகத் தமிழ்த் தேசிய அரசியல், பௌத்த சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிராக எழுந்த ஒன்று.   

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், அதன் ஓரணித் திரட்சிக்கும் சுதந்திர இலங்கையைத் தாண்டிய வரலாறு உண்டு. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம், அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்றிருந்தால், அரை நூற்றாண்டுக்கு முன்னரேயே, தமிழ் மக்கள் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.   

தேர்தல் மேடைகளில் உதிர்க்கப்படும் ஒற்றுமை, ஓரணிக் கோரிக்கை என்பன தர்க்க ரீதியானவை இல்லை. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும், சனக்கூட்டங்களின் ஜனநாயக அடிப்படைகளோடு பலம் பெறும் நடைமுறைகள்தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம், எல்லாவற்றையும் பெற்றுத் தந்துவிடாது என்பதுதான் கள யதார்த்தம்.   

ஒற்றுமையையும் ஓரணித் திரட்சியையும் தாண்டி, நடைமுறைக் களத்தைப் புரிந்து கொண்ட அரசியலுக்குத் தலைமைகளும் கட்சிகளும் அதன் பின்னால் திரளும் தரப்புகளும் தயாராக வேண்டும்.  

ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேர்தல்களைக் குறிவைத்த அரசியல். அது, தூரநோக்கோ, அரசியல் உரிமைகளுக்கான இலக்குகளையோ கொண்டிருக்கவில்லை. தேர்தல் வெற்றி என்கிற ஒற்றைச் சிந்தனையையே அதிகம் கொண்டிருக்கின்றது. 

தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் கட்சிகள், மக்களின் நம்பிக்கையை இழந்து, தோற்றுப்போன சந்தர்ப்பங்களில், தங்களைப் பலப்படுத்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தோற்றமும் கூட, அவ்வாறான பின்னணிகளைக் கொண்டவைதான். இன்றைக்கும் அப்படியான நிலையொன்று தோன்றியிருக்கின்றது. 

அதன்போக்கில், தோற்றுப்போன தரப்புகளும் அதன் தலைவர்களும் ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், ஏக தலைமைத்துவக் கோசத்தோடு இயங்கிய கூட்டமைப்பு, குறிப்பாகத் தமிழரசுக் கட்சி, இன்றைக்கு ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளோடு இணக்கமான நிலையெடுத்திருப்பது, அதன் போக்கிலானது என்பதுதான் பொதுவான உணர்நிலை. 

திலீபனுக்கான நினைவேந்தல் என்பது, தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினை என்கிற காரணத்தால், மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகள், தவிர்க்க முடியாத சூழலில், மாவை சேனாதிராஜாவின் அழைப்பை ஏற்றிருக்கின்றன. ஓரணியில் சேர்ந்திருக்கின்றன என்கிற நிலையைத்தாண்டி, அதில் புரிந்து கொள்ளக் கூடிய அம்சங்கள் ஏதும் இல்லை. அப்படியான நிலையில், வாய்ப்பேச்சில் மாத்திரம் ஒற்றுமை, ஓரணித் திரட்சி என்கிற விடயங்களுக்கு, என்ன வகையிலான முக்கியத்துவம் இருக்கின்றது?  

எந்தவோர் அரசியலும் அதுசார் போராட்டங்களும், சொந்த மக்களிடம் அங்கிகாரத்தைப் பெறாமல், பிறதரப்பிடம் அங்கிகாரத்தைப் பெற முடியாது. தமிழ்த் தேசிய அரசியலின் ஓரணித் திரட்சி என்பது, சொந்த மக்களிடம் சந்தேகங்களுக்கு அப்பாலான அங்கிகாரத்தைப் பெற வேண்டும். அது, சுயநல அரசியல் நோக்கங்களுக்கு அப்பாலான தலைமைத்துவங்களாலேயே சாத்தியப்படும். 

மாறாக, வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்த நகர்வு என்றால், அது அயோக்கியத்தனமான நடவடிக்கை. அது, மக்களை இன்னும் இன்னும் சோர்ந்துபோக வைக்கும்.   

தமிழ் மக்கள், போராட்டங்களுக்கு உள்ளாலேயே வந்தவர்கள். அவர்களுக்கு, எந்தவகையான போராட்ட வடிவங்களும் புதியவை அல்ல! அதன் கடந்த கால அடைவுகள் குறித்தும் தெளிவான அனுபவங்கள் உண்டு. 

அப்படியான நிலையில், அடையாளப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதால், என்ன பலன் என்கிற கேள்வியை, மக்கள் கேட்கும் கட்டத்தை நோக்கி நகர்த்திவிடக் கூடாது என்பதை, அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். 

போராட்டங்கள் எல்லாமும் வெற்றியைப் பெறுவதில்லைத்தான். ஆனால், ஏற்கெனவே தோற்றுப்போன போராட்ட வடிவங்களை, மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னால், அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதுதான், புதிய வடிவிலான போராட்டத்தையும் அதற்கான உத்திகளையும் உருவாக்க உதவும். அவை, சர்வதேசத்தையும் அரசாங்கத்தையும் அந்தரமான நிலைக்குத் தள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும்.  

தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்றது முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் ஹர்த்தாலும்  புறக்கணிப்புப் போராட்டமும் இருக்கும் ஒன்று! இவற்றைத் தாண்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கின்றது. 

அப்படியான நிலையில், இந்தப் போராட்ட வழிமுறைகளின் இன்றைய வடிவம், என்ன கட்டங்களில் நோக்கப்படுகின்றது, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது பற்றியெல்லாம், தெளிவாக ஆராய வேண்டும். அதைவிடுத்து, ‘போர் வெடிக்கும்’ என்கிற கோஷங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. மாறாக, அவ்வாறான நிலைகள், சொந்த மக்களிடத்திலேயே தீண்டத்தகாத ஒன்றாகவே மாறும்.  

ஆயிரம் நாள்களைத் தாண்டி நீண்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், தமிழ் மக்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை, ஓர் உதாரணமாகக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வலியுறுத்தி, ஆரம்பித்த போராட்டமொன்று, காலம் செல்லச் செல்ல, போராட்டக்காரர்களுக்குள்ளேயே பல உடைவுகளைச் சந்தித்து நின்றது. 

ஒரு போராட்டத்தை, அதன் உன்னதங்களின் போக்கில் நோக்காமல், சுயநல அரசியலுக்காகக் கட்சிகளும் அதன் தலைமைகளும் கையாள முற்பட்டமையே, அந்தப் போராட்ட வடிவத்தை அதிகமாகப் பாதித்தது. ஒரு கட்டத்தில், தமக்கிடையிலேயே போராட்டக்காரர்கள் முட்டி மோதிக்கொள்ளும் நிலை உருவானது. யாரை நோக்கி, போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்கிற கட்டம் மாறியது. தென் இலங்கை அதைக் கண்டு மகிழ்ந்து, கொண்டாடியது.  

அதுபோல, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களுக்கு, ஆரம்பக் கட்டங்களில் ஆதரவளித்த மக்கள், காலம் செல்லச் செல்ல, அதிலிருந்து எட்டவிலகத் தொடங்கினார்கள். ஏனெனில், நீண்டு செல்லும் போராட்டமொன்றில், முழுமையாக அர்ப்பணிக்கும் அளவுக்கான காலமும் நேரமும் மக்களுக்கு இல்லை. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு, வாழ்வாதாரம் என்கிற நெருக்கடி, சொல்லிக் கொள்ளாத அளவுக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில், போராட்டத்துக்கு மனப்பூர்வமாக ஆதரவளித்தாலும், தொடர்ச்சியாக அதில் பங்கெடுத்தல் என்பது, சிக்கலான ஒன்றாக மாறுகின்றது. அது, அவர்களின் நாளாந்த நெருக்கடி. இவற்றையெல்லாம், தமிழ்த் தேசிய அரசியல் அனுபவமாகவும் படிப்பினையாகவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.   

திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்தான கேள்விக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பதிலளித்திருக்கின்றார். 

ஒற்றுமையானதும் ஓரணித் திரட்சியுடனான போராட்டம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பதற்கு முன்னால், ‘எதிரி’ எவ்வாறான சிந்தனைகளோடு இருக்கிறான் என்பதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால்தான், அதற்கு ஏற்ற மாதிரி அரசியலையும் அதற்கான போராட்ட வடிவங்களையும் வடிவமைக்க முடியும். 

“நீங்கள் ஹர்த்தால் நடத்தினால், ஒன்றும் ஆகப்போவதில்லை. கடந்த காலப் பதிலையே வழங்குவேன்” என்கிற இறுமாப்புள்ள ஆட்சியாளர்களிடம், அவர்கள் மறுதலிக்க முடியாத அரசியலுக்குள் சிக்க வைக்கும் போராட்டத்தை வடிவமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அது, மீண்டும் முதலாவது படியில் கால் வைப்பதாக இருந்தாலும் பரவாயில்லை. 

ஏனெனில், வாய்ஜாலங்களால் ஒன்றும் ஆகப்போதில்லை. அதனால், அரசியலை உளப்பூர்வமாகவும் அர்த்தபூர்வமாகவும் முன்னெடுக்கும் தரப்புகளாக, தமிழ்த் தலைமைகள் எழ வேண்டும். இல்லையென்றால், வரப்போகும் பேரழிவுகளுக்கு அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகள்-ஒற்றுமைப்பட்டால்-மட்டும்-போதுமா/91-256185

வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை தமிழ்க் கட்சிகள் இணைந்து அமைக்க வேண்டும்; சுரேஸ் பிறேமச்சந்திரன்

மிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சார்பில் வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து தற்போது இடம்பெறும் சர்ச்சை மற்றும், தமிழ்க் கட்சிகளிடையேயான இணக்கப்பாடு – எதிர்கால வேலைத் திட்டம் என்பன தொடர்பில் ‘தினக்குரல்‘ இணையத் தளத்துக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“இலங்கை அரசாங்கம் என்னத்தைச் சொன்னாலும், இலங்கை தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரியவில்லை. 13 ஆவது திருத்தம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறியிருக்கின்றது. 13 ‘பிளஸ்’ என மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால்தான் இலங்கை என்னத்தைச் சொன்னாலும், அதன் மீது இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பலப்படுத்தும் செயற்பாடுகள்தான் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் இந்தியா அவதானமாகவே இருக்கும். ஏனெனில் இது சீனாவுக்கு சாதகமான ஒரு செயற்பாடாக இந்தியா கருதுவதற்கு இடமுள்ளது.

இந்தப் பின்புலத்தில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என மோடி சொல்லியிருப்பது, இலங்கை மீதான தமது பிடியை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான இந்தியாவின் ஒரு உபாயமாக இருக்கலாம். அதாவது, இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 ஐ நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறிக்கொண்டிருப்பதன் மூலம், இலங்கையை ஏதோ ஒரு வகையில் தமது கிடுங்குப் பிடிக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா கருதிச் செயற்படலாம்.

அதேவேளையில், 13 ஐ முழுமையான ஒரு தீர்வாக எந்தவொரு தமிழ்க் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை ஒரு ஆரம்பமாக ஏற்றுக்கொண்டாலும், 13 ற்கும் மேலாகச் சென்று தீர்வைத் தர வேண்டும் என்பதுதான் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு. அதனைத்தான் அவை வலியுறுத்தி வந்திருக்கின்றன.

ஆனால், இப்போது 13 ஐ இல்லாமலாக்க வேண்டும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஒரு புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 13 ஐ பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. அதாவது, சமஷ்டி போன்றவற்றை மறந்து 13 என்பதற்குள்ளேயே எல்லோரும் வந்திருக்கின்றார்கள். உண்மையில், இது சாண் ஏற முழம் சறுக்கும் நிலைதான். இவ்வாறான ஒரு நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்க் கட்சிகளின் வகிபாகம் முக்கியமானது. அவை அனைத்தும் ஒன்றிணைந்து வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த நாடுகளைக் கையாள்வது தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.

அவ்வாறு அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவை அமைக்கும் போது இந்தியாவும் அதற்கு மதிப்பளிக்கும். ஏனைய நாடுகளும் – ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றனவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறான குழுவுடன் மறுதலிக்க முடியாமல் பேசவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் ஏனைய சர்வதேச தரப்பினருக்கும் ஏற்படும்.

அவ்வாறான குழு முன்வைக்கும் விடயங்களை ஆராய வேண்டிய நிர்ப்பந்தம் அந்த நாடுகளுக்கு ஏற்படும். தனிநபர்கள் இந்த விடயங்களைக் கையாளாமல், அதற்கென அனைத்துத் தமிழ்க் கட்சிகளாலும் உருவாக்கப்படும் குழு இந்த விடயங்களைக் கையாள்வது மிகவும் பயனுள்ளதாகவும் – பெறுமதியானதாகவும் இருக்கும்.

தமிழ் மக்களுடைய விடயங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதையிட்டு கூட்டாக சில விடயங்களை இதன் மூலம் நாம் முன்வைக்க முடியும். அவ்வான குழு ஒன்றினால் முன்வைக்கக்கூடிய கருத்துக்கள் நிச்சயமாக இராஜதந்திர வட்டாரங்களால் கவனத்திற்கொள்ளப்படும். அதாவது, அதற்கு ஒரு “வெயிட்” இருக்கும். அதனால், அதனையிட்டு உடனடியாக ஆராயவேண்டிய தேவை ஒன்றுள்ளது” என்றும் குறிப்பிடுகின்றார் சுரேஷ் பிறேமச்சந்தினர்.

 

https://thinakkural.lk/article/75797

ஒற்றுமை நீடித்தால் வெற்றிகள் தொடரும் – தாயகன்

  • தாயகன்

யிரிழந்தவர்களை நினைவு கூருவது ,அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வது , அஞ்சலி செலுத்துவது மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமானக் கடப்பாடு . உலகம் முழுவதும் இவ்வாறான மனிதாபிமானக் கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் மட்டுமே சிறுபான்மையினமான தமிழினத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான கடப்பாடுகள்,உரிமைகள் இலங்கையை மாறி,மாறி ஆட்சி செய்து வரும் சிங்கள அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலையில் சிங்களத்தரப்பில் அதற்கான முழு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ள இனவாதப்போக்கு அரசியலே இன்று வரை தொடர்கின்றது.

1-2-35.jpgதிலீபன், ஈழ விடுதலையில் மாபெரும் அஹிம்சை போராட்டம் நடத்தி உயிர் நீர்த்தவர்.உண்ணா விரதம் என்றாலே நகைப்புக்குரிய ஒன்றாக மாறிவிட்ட இக்காலச் சூழலில், கொண்ட கொள்கைக்காக சொட்டு நீர் அருந்தாமல் உயிர் துறந்து, உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா விரதத்தின் மகத்துவத்தை ஓங்கி ஒலித்தவர். அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோக மீண்டும் ஓர் ஒப்பந்தம் கையொப்பமானதுதுடன் அதை ஏற்றுக்கொள்ளவும் நிர்ப் பந்திக்கப்பட்டனர். அதை மறுத்த காரணத்தால், அமைதியை நிலைநாட்ட வந்தவர்கள் தந்த ஆயுதங்களும் தமிழ் மக்களை கொன்றொழிக்க, அவர்களுக்கு, அவர்களின் வழியிலேயே பதில் சொல்லத் துணிந்தே திலீபன், உண்ணா விரதம் , அஹிம்சை வழி என மகாத்மா காந்தி இவ்வுலக்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையை கையிலெடுத்தார்

நல்லூர் முருகன் ஆலயத்துக்கு முன்பாக 1987ஆம் ஆண்டு செம்படம்பர் 15ஆம்திகதி சாகும்வரையிலான உண்ணா விரதத்தை தொடங்கினார் திலீபன்.தன் தலைவர் பிரபாகரன் இந்த உண்ணாவிரதம் வேண்டாம் என்று சொல்ல,”நமது கொள்கையின் தீவிரத்தை நிரூபிக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. நாம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதை ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் சொல்லவேண்டிய தருணம் இது. இன்னொரு ராணுவம் எங்கள் மண்ணில் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம். அதையும் இந்தியாவின் வழியிலேயே சொல்ல உண்ணாவிரதம்தான் ஒரே வழி ” என்று பதில் சொன்னார் ,

ஆனால் திலீபனின் சாகும்வரையிலான உண்ணா விரதம் அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்களின் காதில் விழாததால், திலீபனின் 5 கோரிக்கைகளும் ஏற்கப்படாததால், காந்திய தேசம்தானே, காந்திய வழிப் போராட்டத்தை ஏற்பார்கள் என திலீபனும் தமிழ் மக்களும் கொண்டிருந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டதால், பன்னிரண்டாம் நாளான 26 ஆம் திகதி திலீபனின் சாகும்வரையிலான உண்ணாவிரதம் அவர் சாவிலேயே முடிவடைந்தது. அவ்வாறான ஒரு அஹிம்சைப் போராளியைத்தான் ,இன்னொரு நாட்டு இராணுவம் எமது நிலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக ஒரு சொட்டுத்தண்ணீர்கூட அருந்தாது பட்டினி கிடந்து தன் உயிரை துறந்த திலீபனைத்தான் ”பயங்கரவாதி” என்ற பட்டத்தை சூட்டி அவரை நினைவு கூர தற்போதைய ஆட்சியாளரான கோத்தபாய ராஜபக்ச அரசு மறுத்து தமிழர்களுக்கிருந்த ஒரேயொரு உரிமையான நினைவு கூரும் உரிமையையும் இப்போது ஒழித்து விட்டது.

தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கடந்த 30 வருட உரிமைப்போராட்டத்தில் தமது உறவுகளை இழந்தவர்கள் அந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை பொலிஸார் மூலம் வழங் கியும் . வடக்கு கிழக்கு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள்,வழக்கறிஞர்கள் எனப்பலருக்கு நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்பியும் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிராகவே கோத்தபாய அரசு செயற்படத்தொடங்கியுள்ளது. இந்த அரசில் இவ்வாறான நடவடிக்கைகள் தான் இனிமேல் தொடரப்போகின்றன.

எனினும் ”நாரதர் கலகம் நன்மையில் முடியும்” என்பதுபோல் இந்த அரசின் இவ்வாறான அடாவடிகளும் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய அரசியல்கட்சிகளுக்கும்ஒருவகையில் நன்மையையே ஏற்படுத்தியுள்ளன.திலீபனை நினைவுகூரும் விடயத்தில் அரசின் இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை எதிர்கொண்டதால் தான் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்துள்ளன. இவர்கள் கடந்த 18-09-2020 அன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பினர். ஆனால் அதற்கு அரசு பதில் வழங்காததும் ஒரு நன்மையை ஏற்படுத்தியதுஅரசின் பதில் கிடைக்காததால் 28-09-2020அன்று அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் ஹர்த்தால் ஒன்றை பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அறிவித்தன.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அரச சார்பு உறுப்பினர்களின் தேர்தல் வெற்றியும், தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியத்தின் மீதிருந்த பற்றுறுதி குறைந்து வருகின்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் அந்த வெற்றியை வைத்துக்கொண்டு அரச தரப்புக்களும் தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து விட்டார்கள்,அவர்கள் உரிமை அரசியலைக் கைவிட்டு அபிவிருத்தி அரசியலுக்குள் வந்து விட்டனர் என்ற வகையில் சர்வதேச மட்டத்தில் தவறான பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில் இந்தக் ஹர்த்தால் அழைப்பும் தோல்வியடைந்துவிடும்,அதனை வைத்துக்கொண்டும் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை, தமிழ் தேசியக்கட்சிகளை புறக்கணித்து விட்டார்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுக்கலாம் எனக்காத்திருந்தவர்களுக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் செருப்படி கொடுத்தனர்.

அகிம்சைவழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த திலீபனை நினைவு கூருவதற்கு கோத்தபாய அரசினால் தடைகள் விதிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த அரசின் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் ,பொது அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்த ஹர்த்தால் போராட்டத்துக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பும் அதனால் முழு வெற்றியடைந்த ஹர்த்தாலும் தமிழினத்தின் தேசியத்தின் மீதான பற்றுறுதியை மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது.அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்த ஹர்த்தால் போராட்டம் முழு வெற்றி யடைந்துள்ளமையும் அதற்கு வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய முழுமையான ஆதரவும் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. உணர்வு அரசியலுக்கும், தமிழ்த் தேசியத்திற்கு இனி வடக்கு, கிழக்கில் இடமில்லை என்று கூறியவர்களின் முகத்தில் தமிழ் மக்கள் கரி பூசியுள்ளனர்.தமிழ் மக்களின் மனங்களில் தமிழ் தேசிய உணர்வு தற்போதும் அதியுச்ச அளவில் இருக்கின்றது என்பதனை இந்த ஹர்த்தால் வெளிப்படுத்தியது.

கோத்தபாய ராஜபக்ச அரசில் இந்தக் ஹர்த்தால் எப்படியும் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதர்க்கான முழு முயற்சிகளில் நீதித்துறையும் பொலிஸ் துறையும் பல இடங்களில் படைத்தரப்பும் களமிறக்கப்பட்டபோதும் அனைத்து முயற்சிகளையும் தமது தமிழின உணர்வால் தோற்கடித்த வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் தமது தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தி, அபிவிருத்தி மாயைகளுக்கு அடிபணியோம்,குற்றுயிராகக் கிடந்தாலும் எம் இன மானம் காப்போம் என்ற செய்தியை கூறினர்.அது மட்டுமன்றி தமிழ் தேசியக்கட்சிகளுக்கும், உங்கள் ஒற்றுமையின்மைக்கு நாம் வழங்கிய தண்டனையே பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள்.தமிழ் தேசியத்துக்காக நீங்கள் ஒன்றுபடுவீர்களேயானால் நாங்கள் உங்கள் பின்னால் நிற்போம் என்ற செய்தியையும் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

நல்லூர் முருகன் ஆலயத்துக்கு முன்பாக 1987ஆம் ஆண்டு செம்படம்பர் 15ஆம்திகதி திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்து எப்படி வடக்கு,கிழக்கு தமிழ் மக்களை ஓரணியில் திரள வைத்தாரோ அதே திலீபனுக்காகவே வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 28 ஆம் திகதி ஓரணியில் திரண்டு தமது தமிழ் தேசிய உணர்வை,ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே தமிழ் தேசிய உணர்வு தமிழ் மக்களிடம் மங்கிப்போகவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளிடம் அது எந்தளவுக்குள்ளது என்பதே இன்றுள்ள கேள்வியாகும். நீங்கள் ஒன்று சேர்ந்தால் நாங்கள் உங்கள் பின்னால் நிற்போம் என்பதனை தமிழ் மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் திலீபனுக்காக ஒன்று சேர்ந்த இந்த 10 தமிழ் தேசியக்கட்சிகளினதும் பொது அமைப்புக்களினதும் ஒற்றுமை ,ஒன்றுபட்டு செயற்படும் பக்குவம் தொடருமா அல்லது திருமண வீட்டுக்கு ,மரண வீட்டுக்கு ஒன்று சேர்ந்து விட்டு பின்னர் கலைந்து செல்வது போல் நடந்து கொள்வார்களா என்ற கேள்வியும் சந்தேகமுமே மேலெழுந்துள்ளது.

10 தமிழ் தேசியக்கட்சிகளினதும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. தற்போது அமைந்துள்ள கோத்தபாய ராஜபக்ச அரசு பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுடைய சுதந்திரமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த அடக்குமுறைகளின் ஊடாக தமிழ் மக்களை ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்துக்கொள்ளும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் ஜனநாயக முறையிலான போராட்டங்களையும் நினைவுகூருதல்களையும் வழிபாட்டு உரிமைகளையும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் இல்லாதொழித்து ,அடிப்படை உரிமைகளைப் பறித்து தமிழ் மக்களை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது.அத்துடன் சர்வாதிகாரத்துக்கான 20 ஆவது அரசியலமைப்புத்திருத்தம், 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் ஒழிப்பு,புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என நீண்டதொரு குடும்ப ஆட்சிக்கான முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை என்ற முனைப்பு ஏற்படாவிட்டால் தமிழினமே சர்வ நாசமாகிவிடும்.

முக்கியமான பிரச்சினைகளில்கூட தமிழ் தேசியக் கட்சிகளிடையே உள்ள ஒற்றுமையின்மையே தமிழர் தரப்பின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணமாகவுள்ளது. ஒரே கருத்து கொண்டுள்ள கட்சிகள், தேர்தல்களிலும் போராட்டங்களிலும் கூட நவக்கிரகங்களைப் போல ஆளுக்கொரு திசையில் நிற்கின்றன.இதனாலேயே அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களைக் கூட அரசுக்கு கொடுக்க முடியாத நிலைமையு ள்ளது. தற்போது தமிழ் தேசியக்கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள பிளவுகள் அண்மைய பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் வீழ்ச்சியையும் பலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை பாராளுமன்றத்தேர்தலில் வடக்கு,கிழக்கில் அரச தரப்பு பெற்றுக்கொண்ட வெற்றி அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்

எனவே திலீபனின் விடயத்தில் தமிழ் தேசியக் கட்சிகளிடையில் ஏற்பட்ட ஒற்றுமை, இணக்கப்பாடு,எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலிலும் தொடருமாக இருந்தால் வடக்கு மாகாண சபையுடன் கிழக்கு மாகாண சபையும் இலகுவாகக் கைப்பற்ற முடியும். இந்த வெற்றிக்காக இக்கட்சிகள் பெரிதாக ஒன்றையும் இழக்கத்தேவையில்லை . சில விட்டுக்கொடுப்புக்களும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டும் போதும். ஆயுதப்போராட்டத்தின் மூலம் கிடைக்காத வடக்கு,கிழக்கின் ஆட்சியை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

https://thinakkural.lk/article/76401

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.