Jump to content

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா

பதாகைOctober 6, 2020

(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)

எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு

கே: உங்களைப் பற்றி

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.  

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.  

பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.   

நான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ஒருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்

கே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது? 

 உண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது.  பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.   

ஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.  

என் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.

கே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது? முதல் கதை எப்போது வெளி வந்தது? 

உன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.  

எழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.  

இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.   

இரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.

கே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக) 

நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.

எஞ்சியிருப்பதின் துயரம்

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.

சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.

 ‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட  ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை?  ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).  

ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால்  கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர்  இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.

இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. 

சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார்.  விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.

‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை.  ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது. 

அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.

கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில்  தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.

உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.  நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம்  டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.

மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக  கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.

கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?

இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.

இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை  ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.

‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது.  ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.

தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.

தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?

‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.  

சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.

https://padhaakai.com/2020/10/06/புதிய-குரல்கள்-சாதனாவின/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.