Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (1)

September 29, 2020
C2088A03-07A1-4B12-AFFE-6F40CC493899-114

சுவிசிலிருந்து சண் தவராஜா

கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தொடர்பாக அண்மைக் காலமாகப் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னான சூழ்நிலைகள் இத்தகைய பேச்சுக்களைத் தீவிரப் படுத்தியிருக்கின்றன. அரசியல்வாதிகளையும் தாண்டி, சமூகத்தில் அபிப்பிராயங்களை உருவாக்கக் கூடிய நிலையில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இத்தகைய கருத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றமையைக் காண முடிகின்றது.

அரசியலிலும் பொதுத் தளத்திலும் கருத்துக்களை வெளிப்படுத்தவும், தாம் சரியென நினைக்கும் கருத்தை ஆதரிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று, பொதுத் தளத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு மாற்றான சிந்தனை கொண்டவர்கள் அல்லது முன்வைக்கப்படும் கருத்துக்களில் பொய்மை மறைந்திருப்பதை அவதானிப்பவர்கள் அதனைச் சுட்டிக் காட்டவும் உரிமை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் எனது கருத்து அமைகின்றது.
ஈழத் தமிழர்களின் வரலாற்றை உற்று நோக்குபவர்கள் அல்லது வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்பவர்கள் ஒரு விடயத்தை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். இன்று தமிழர் தாயகம் என அழைக்கப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்றுமே இணைந்ததான ஒற்றை ஆட்சியின் கீழ் கடந்த காலங்களில் இருந்ததில்லை. இந்த இரண்டு மாகாணங்களும் வரலாற்றில் முதன்முதலாக இணைந்த ஒரு ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது என்றால் அது 1988 இல் பதவியேற்ற முதலாவது இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் கீழேயே. மிகவும் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த இந்த மாகாண சபை யனவரி 1, 2007 இல் நீதிமன்ற வழக்கு மூலம் பிரிக்கப்படும் வரை பெயரளவில் இயங்கி வந்தது.

 

அதேவேளை, கிழக்கிற்கான தனித்த அரசியலை முன்மொழிபவர்கள் கிழக்கு மாகாணம் என்ற – வரலாற்றில் ஒருபோதும் இடம் பிடித்திராத – அலகு கூட முதன் முதலில் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் போதே சட்டபூர்வமாகத் தோற்றம் பெற்றது என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். குடியேற்ற நாடாக இலங்கைத் தீவு இருந்தவேளை ஆங்கிலேயர்களே தமது நிர்வாகத் தேவைகளுக்காக இலங்கையை 9 மாகாணங்களாகப் பிரித்திருந்தார்கள். இந்தப் பிரிவினை வெறும் நிர்வாக அடிப்படையிலானதே அன்றி வேறு கருதுகோள்களின் அடிப்படையில் ஆனது அல்ல என்பதை நினைவில் நிறுத்துவது நல்லது.

கிழக்கிற்கான தனித்த தலைமை தொடர்பாகக் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் கூட 2004 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்ற போதிலே முதன்முதலாகக் கிழக்கிற்கான தனித்துவம் என்ற கோரிக்கை நிறுவனமயப் பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பினுள் கிழக்கு மாகாணப் போராளிகளுக்குப் பாரபட்சம் காட்டப் படுகின்றது. அதனாலேயே நாம் வெளியேறுகின்றோம் என அப்போது சொல்லப்பட்டது. இந்தக் காரணம் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் தெளிவாகவே உணர்த்தின.

 

ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசிய இனம் சமயம், சாதி, பிரதேசம் என பல விதமான உட்பாகுபாடுகளைக் கொண்டதே. வரலாற்று அடிப்படையில் அவர்கள் ஒரு தனியான பிரதேசத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்களைத் தனித்துவமான ஒரு பரிபாலனத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் என வகைப்படுத்திவிட முடியாது. ஆனால், அவர்கள் உணர்வு அடிப்படையில் ஒரு தேசிய இனமாக விளங்குகின்றனர். இதிலிருந்தே ஈழப் போராட்டத்திற்கான அவர்களின் ஆதரவு வெளியாகியது.
ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற உணர்வைப் பெறுவதிலும், ஒரு திரட்சியாக மாறி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராடியதிலும் சிங்கள இனவாதிகளின் பங்கே அதிகம். கட்சி அரசியலோ, கருத்தியல் பரப்புரைகளோ வழங்காத தமிழின உணர்வை அவர்களுக்கு எதிரான நெருக்கடிகளும், அடக்குமுறைகளுமே வழங்கியது எனக் கூறினால் அது மிகையாகாது. அத்தகைய சூழ்நிலைகளால் தோற்றுவிக்கப்ட்ட இன உணர்வை விட்டுவிட்டு, பிராந்திய உணர்வுடன் மக்கள் வாழலாம் என்ற கருத்தை விதைப்பவர்கள் இந்த இடத்தில் இருந்தே விடயங்களை அணுக வேண்டியது அவசியம்.

கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் சந்தித்த அவலங்கள் யாவும் அவர்கள் இன அடிப்படையில் தமிழர்கள் என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தன. முஸ்லிம் மக்களைத் தவிர்த்து வேறு சாதி, சமய, பிரதேச அடிப்படையில் தமிழ் மக்களை சிங்கள இனவாதம் அணுகியிருக்கவில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் கூட சிங்கள இனவாதச் சிந்தனை முடிவிற்கு வந்துவிட்டது என்றோ, இனவாதிகள் யாவரும் சிந்தனைத் தெளிவு அடைந்து விட்டார்கள் என்றோ கூறிவிட முடியாது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அண்மைய எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருட்களை ஆய்வு செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள செயலணி. முழுக்க முழுக்க சிங்கள இனத்தவர்களையும், பௌத்த பிக்குகளையும் கொண்டதாகவே இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. ஒப்புக்கேனும் – கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக விளங்கும் – தமிழர்கள் மத்தியிலிருந்தோ முஸ்லிம்கள் மத்தயிலிருந்தோ ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இந்தத் தவறு அரசாங்கத்தின் தலைமைப் பீடத்திற்குப் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட நிலைமையில் மாற்றமின்றித் தொடர்கின்றது.
கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பன்குடாவெளி கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டு. தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான மூன்று உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடாத்திய பௌத்த பிக்கு ஒருவர் அவர்களை சில மணிநேரம் சிறைப்படுத்தி வைத்திருந்தார். மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமைக் குருவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இந்தச் செயற்பாட்டில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிந்தும், அரசாங்கப் பணியாளர்களின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கப் பட்டிருப்பது தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாத கையறு நிலையிலேயே காவல்துறையினர் இருந்தமையைக் காண முடிந்தது. ஆளும் தரப்பைச் சேர்ந்த ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் உள்ளிட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவர்களுக்கும் மேலாக ஒரு மாவட்ட நிர்வாகம், முப்படைகள் என சக்தியுள்ள பலர் உள்ள போதிலும் ஒரு சாதாரண பௌத்த பிக்கு மீது அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது.

 

கிழக்கிற்குக் தனித்தலைமை தேவை என்பவர்களும், அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்பவர்களும் இந்தக் கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு இயங்க முடியும், அதனைத் தாண்டி எதுவும் சுயமாகச் செய்துவிட முடியாது என்பதே உண்மை.

கிழக்கிற்குத் தனித் தலைமை வேண்டும் என்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் சிறுபிள்ளைத் தனமாகவே இருக்கின்றன. மக்கள் அபிவிருத்தியை எதிர்பார்க்கின்றார்கள், வேலைவாய்ப்பைக் கோரி நிற்கின்றார்கள். எனவேதான் நாங்கள் தனித்துச் செயற்பட விளைகிறோம் என்பது அவர்களின் நியாயமாக இருக்கின்றது. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை நாட்டு மக்களின் உரிமைகள். அவற்றை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. ஒரு அரசாங்கமானது தனது வாக்களித்த மக்களுக்காக மட்டும் சேவையாற்ற முடியாது. தனக்கு எதிராக வாக்களித்த மக்களை அரசாங்கம் வஞ்சிக்கின்றது என்றால் அதன் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முயல்வதே அறிவாளிகள் செய்யக் கூடியது. எசமானர்கள் வீசி எறியக் கூடிய எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொள்வதைப் பெருமையாகக் கருத முடியாது.

தமிழ் மக்களின் பலம்மிக்க அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே எதிர்க் கட்சியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சி மாத்திரமல்ல. அது எதிர் அரசியல் நடத்தும் ஒரு கட்சியுமாகும். ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமாயின் இந்த எதிர்நிலை அரசியல் முக்கியமானது. அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பவற்றுக்குக் கூட்டமைப்பு விரோதமான கட்சியல்ல. மாறாக, அந்தக் கட்சி அவற்றை சலுகையாக அல்லாமல் உரிமையாகப் பெற முயற்சிக்கின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இதனை நிகழ்த்தியும் காட்டியது.
இந்த முறை தேர்தல் முடிவுகள் மக்களின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது என்பது கிழக்கிற்கான தனித்தலைமையை முன்மொழிபவர்களின் வாதங்களுள் ஒன்றாக உள்ளது. இது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதமே. மக்கள் என ஒட்டுமொத்தமாகச் சொல்வதை விட இளைஞர்கள் இன்று ஆளும்தரப்பை ஆதரிக்கத் தயாராக உள்ளனர் என்பது உண்மையே. அவர்கள் கடந்தகால வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாதவர்களாக அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதவர்களாக இருந்து வருகின்றனர். இந்தப் போக்கு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் அவதானிக்கப் பட்டுள்ளது. கிழக்கில் வாக்களித்த மக்கள் கிழக்கிற்கான தலைமையை வலியுறுத்துகின்றனர் எனப் புரிந்து கொண்டால் வடக்கில் ஆளுந் தரப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இளைஞர்களின் கருத்தை எவ்வாறு அர்த்தப் படுத்துவது.

 

தமிழர்களுக்கு எதிரான முதலாவது சிங்கள இனவெறித் தாக்குதல் ஆரம்பமாகியது கிழக்கு மாகாணத்திலேயே. 1956 ஆம் ஆண்டு தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் கல்லோயா குடியேற்றத் திட்டத்திலேயே தமிழர்களுக்கு எதிரான முதலாவது படுகொலை நிகழ்த்தப்பட்டது. யூன் 11 முதல் 16 வரை தமிழ் மக்களை இலக்குவைத்து சிங்களக் குடியேற்றவாதிகளாலும் கல்ஓயா அபிவிருத்திச் சபை பணியாளர்களாலும் அரச படையினரின் ஆசீர்வாதத்துடன் நடாத்தப்பட்ட இந்தக் கலவரத்தில் 150 பேர்வரை கொல்லப்பட்டதுடன் 100 பேர்வரை காயங்களுக்கும் இலக்காகி இருந்தனர்.
அது மாத்திரமன்றி சிங்கள இனவெறித் தாக்குதல்களுக்கு எதிரான முதலாவது வன்முறைச் செயற்பாடுகளும் கிழக்கிலேயே நிகழ்ந்தன. மட்டக்களப்பில் இருந்த சிங்களவருக்குச் சொந்தமான ஒரு தங்குவிடுதி எரியூட்டப்பட்டது. இதன்போது விடுதி உரிமையாளர்; இரண்டு தமிழர்களைச் சுட்டுக் கொன்றுள்ளார். காரைதீவில் வைத்து கல்ஓயா அபிவிருத்திச் சபை வாகனங்களுக்குக் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது. இது மாத்திரமன்றி கல்முனைப் பகுதியில் வாகனங்களில் வந்த காடையர்கள் மீது துறைநீலாவணையைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களால் நிகழ்த்தப்பட்ட முதலாவது ஆயுதத் தாக்குதலாகவும் இது பதிவாகியது.

ஈழவிடுதலைப் போராட்டத்தை வடக்கிற்குள் சுருக்கிவிட முயற்சிக்கும் அறிவுஜீவிகள் கல்ஓயாவில் எதனால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இது தொடர்பான விடயங்களை இன்றைய இளைஞர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்துசென்ற பின்னரேயே கிழக்கிற்கான தனித்துவக் குரல் கேட்கத் தொடங்கியது என்பதல்ல. அது 1950 களிலேயே கேட்கத் தொடங்கி விட்டது. எவ்வாறு அரச உயர் பதவிகளில் வாய்ப்புக் கி;ட்டாத சிங்கள இனத்தவர்கள் ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும் கோபம் கொண்டார்களோ, அதனைப் போன்றே வாய்ப்பு கிட்டாத கிழக்கு மாகாணத்தவர் சிலரும் வடக்கு மாகாணத்தவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்தார்கள். (இத்தகைய காழ்ப்புணர்வு உருவாகுமாறு வடக்கின் அதிகாரிகள் பலர் நடந்து கொண்டார்கள் என்பது தனிக்கதை.)
கிழக்குப் பல்கலைக் கழகம் 1981 அக்டோபர் முதலாந் திகதி பல்கலைக் கழகக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலாக கிழக்கிற்கான தனித்துவம் பற்றிய கதையாடல்கள் ஓங்கத் தொடங்கின. அந்தக் காலப் பகுதியில் பல்கலைக் கழகத்தில் சிற்றூழியனாகப் பணியாற்றியவன் என்ற அடிப்படையில் இத்தகைய கருத்தாக்கத்தின் பிதாமகர்கள் யார், அவர்களின் நோக்கம் எத்தகையது உள்ளிட்ட பல விடயங்களை நேரில் இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்று கிழக்குத் தனித்துவம் பேசிய பலரும் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்பது உபரிக் கதை.

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றுமொறு விடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது.

இது தொடர்பாக அடுத்த வாரம் பார்க்கலாம்…..

 

https://www.meenagam.com/?p=15017

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், இவ்வாறான கட்டுரைகளை உங்களால் மட்டுமே தேடித்தேடி இணைக்கமுடியும். பலரின் கருத்துக்கள் இதன்மூலம் வெளித்தெரியலாம் என்று நினைத்துச் செய்கிறீர்கள் என்று நீங்கள் சொல்வதன் பின்னால் உள்ள சூட்சுமத்தையும் புரிந்துகொள்வது கடிணமானதல்ல. ஆனால், இக்கட்டுரைக்கு பதிலாக வரவிருக்கும் எதிர்வினைகளை இனிப் பார்க்கலாம்.

ஸ்டான்லி எனும் பிள்ளையானின் ஆலோசகர் தொடங்கி, இக்களத்தில் சிங்களப் பேரினவாதிகளின் பினாமிகளான பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றவர்களை தீவிரமாக ஆதரிக்கும் சிலரின் மிகக்கடுமையான பதில்களையும் இனி இங்கே காணலாம். 

பற்றவைத்துவிட்டீர்கள், இனி நடப்பதை வேடிக்கை பாருங்கள். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

இந்த முறை தேர்தல் முடிவுகள் மக்களின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது என்பது கிழக்கிற்கான தனித்தலைமையை முன்மொழிபவர்களின் வாதங்களுள் ஒன்றாக உள்ளது. இது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளத்தக்க வாதமே. மக்கள் என ஒட்டுமொத்தமாகச் சொல்வதை விட இளைஞர்கள் இன்று ஆளும்தரப்பை ஆதரிக்கத் தயாராக உள்ளனர் என்பது உண்மையே. அவர்கள் கடந்தகால வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாதவர்களாக அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதவர்களாக இருந்து வருகின்றனர். இந்தப் போக்கு கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் அவதானிக்கப் பட்டுள்ளது. கிழக்கில் வாக்களித்த மக்கள் கிழக்கிற்கான தலைமையை வலியுறுத்துகின்றனர் எனப் புரிந்து கொண்டால் வடக்கில் ஆளுந் தரப்பிற்கு ஆதரவாக வாக்களித்த இளைஞர்களின் கருத்தை எவ்வாறு அர்த்தப் படுத்துவது.

 

ரஞ்சித்,

தமிழ்த்தேசியம் நலிந்துபோயுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டால், கிழக்குமாகாண அரசியல் போக்குகளை மட்டுமல்ல, தீவிரமாகச் செயற்படும் இளைஞர்கள் ஏன் ஆளும் தரப்பை கிழக்கிலும் வடக்கிலும் ஆதரிக்கின்றார்கள் என்பதையும் அலசவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தமிழ்த்தேசியம் நலிந்துபோயுள்ளது

உண்மைதான். தமிழ்த்தேசியம் உயிப்புடன் இருந்தால் இன்று எவருமே சோரம்போயிருக்கமாட்டார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (2)

October 10, 2020
257E1B23-1F10-40EB-8A8B-44AB61CB317D-114

சுவிசிலிருந்து சண் தவராஜா

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றுமொறு விடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது.
இந்த நோக்கத்துக்காக எந்தச் சாத்தானுடனும் கைகோர்க்க அவர்கள் தயாராக உள்ளனர். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் கணிசமானோர் கைகோர்த்து நின்றாலும் பின்னாளில் போராட்டத்தின் விரோதிகளாக முஸ்லிம்கள் ஆக்கப் பட்டார்கள். அண்மைக் காலம்வரை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் தரப்புகளுடன் சேர்ந்து நின்று பல்வேறு சலுகைகளை (உரிமைகளை அல்ல) பெற்றுக் கொண்டார்கள் என்பது நிதர்சனம். இதனால் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவற்றில் கிழக்கு முஸ்லிம்கள் பலபடி முன்னேறி உள்ளார்கள் என்பதுவும் மறுக்க முடியாதது. முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தமிழ் மக்களின் எதிரிகளாக முன்னிறுத்தி தமது அரசியல் இலக்குகளை வெற்றிகொண்ட சிங்கள இனவாதம் தற்போது முஸ்லிம்களைத் தட்டிப் பணியவைக்க கிழக்குத் தனித்துவம் என்ற கருவியைக் கையில் எடுத்துள்ளமை ஒன்றும் வியப்பல்ல. இதிலே மிக நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் சிங்கள அரசாங்கம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் மக்களுக்கோ சலுகைகளை வழங்கத் தயராக உள்ளதே தவிர உரிமைகள் எதனையும் கிஞ்சித்தேனும் வழங்கத் தயராக இல்லை என்பதே.

ஒடுக்குமுறையின் வலியை நன்கு அனுபவித்த ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்குவதற்குத் துணை போகின்றது என்றால் அதனை விட வரலாற்று முரண் எதுவாக இருக்க முடியும்? அதிலும் 1980 களின் நடுப்பகுதி வரை அண்ணன் தம்பியாகப் பழகிய இனங்கள், “புட்டும் தேங்காய்ப் பூவும் போல” ஒன்றாகச் செயற்பட்ட சமூகங்கள் ஒரு குறுகிய கால இடைவெளியில் பரம எதிரிகளைப் போல ஆனது எப்படி?

ஆயுதப் போராட்டத்தின் விளைவு காரணமாக இயக்கங்களில் இணைந்து கொண்ட பலருக்கும் முஸ்லிம் மக்களின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றித் தெரியாது போனமை ஒன்றும் வியப்பான விடயமல்ல. ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய காலகட்டத்திலேயே இயக்கங்களில் இணைந்து கொண்ட, அரசியல் களத்திலே முஸ்லிம் சகோதரர்களோடு தோளோடு தோளாக நின்று செயற்பட்ட எம் போன்றவர்களுக்கு முஸ்லிம்களின் போராட்டப் பங்களிப்பு பற்றி நன்கு தெரியும். புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற இயக்கங்களில் மேல்மட்டங்களில் கூட முஸ்லிம் போராளிகள் இருந்திருக்கின்றார்கள். பிற்காலத்தில் முஸ்லிம் மக்களில் பலரைக் கொலைசெய்தும், யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு அவர்களை விரட்டியடித்தும் வரலாற்றுக் கறையைப் பூசிக் கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட முஸ்லிம் போராளிகளின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் 35 வரையான முஸ்லிம் மாவீரர்களின் கல்லறைகள் உள்ளன.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவில் எப்போது விரிசல் உருவாகியது, அது எப்போது விரிவாகியது என்பவை தொடர்பில் ஆழமான பார்வை அவசியமாகின்றது.

ஆயுதப் போராட்டம் 70 களிலேயே ஆரம்பமாகிவிட்ட போதிலும் கூட அது வீறு கொண்டது 83 இல் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப் படுகொலைக்குப் பின்னரேயே. அது வரையும், அதற்குப் பின்னரும் கூட ஆயுதப் போராட்டத்தின் பங்காளிகளாக முஸ்லிம் இளைஞர்கள் இருந்திருக்கின்றார்கள். “காட்டிக் கொடுப்பாளர்கள்” என முத்திரை குத்தப்பட்டுக் கொலை செய்யப் பட்டவர்களிலோ, காவல்துறையைச் சேர்ந்தவர்களிலோ கூட ஆரம்பத்தில் முஸ்லிம்கள் இடம் பிடித்திருக்கவில்லை.

1984 யூன் மாதம் முதலாம் திகதி சிறி லங்கா அமெரிக்கத் தூதுவராலயத்தில் இஸ்ரேலின் நலன் காக்கும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. அதே காலகட்டத்திலேயே இஸ்ரேலில் பயிற்சியை முடித்துக் கொண்ட விசேட அதிரடிப் படையினர் மட்டக்களப்பில் களமிறக்கப் பட்டார்கள். இதன் பின்னான காலப் பகுதியிலேயே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்ட வகையில் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன, ஊதிப் பெருப்பிக்கப்பட்டன. தத்துவார்த்த அடிப்படையில் வளர்ந்த இயக்கங்கள் எனத் தங்களைத் தாங்களே கற்பனை செய்துகொண்ட இயக்கங்கள் கூட இஸ்ரேலின் நலன் காக்கும் பிரிவு பற்றியோ அதன் நாசகாரத் திட்டங்கள் பற்றியோ கரிசனை கொண்டிருக்கவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்று, அதற்கூடாக இஸ்ரேல் பற்றியும், அந்த நாட்டு உளவுப் பிரிவின் தந்திரோபாயங்கள் பற்றியும் கண்டும், கேட்டும் நேரடியாக அறிந்திருந்தும் கூட அவர்கள் அலட்சியமாக இருந்தது மட்டுமன்றி, மொசாட் உளவுப் பிரிவின் தந்திரோபாயங்களுக்குப் பலியாகவும் ஆகியிருந்தனர். (இதே இஸ்ரேல் நாட்டில் பிற்காலத்தில் தமிழ்ப் போராளிகளும், சிங்களப் படையினருடன் அருகருகாகப் பயிற்சி பெற்றார்கள் என்பது பிந்திய வரலாறு)

இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவின் அபாயத்தை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால், அன்றைய தினம் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். முஸ்லிம் பிரதேசங்கள் எங்கும் வீதிகளில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கவே இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவை அப்போதைய அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தனா அழைத்திருந்தார். ஆனால், அதனைப் பற்றித் தமிழ் இயக்கங்களோ, தமிழ் மக்களோ அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, தமிழ்ப் போராட்டத்தையும் அழிவிலிருந்து காக்கும் நோக்குடன் கிழக்கு முஸ்லிம்கள் வீதிக்கு இறங்கினர்.

முஸ்லிம்களின் போராட்டம் பல இளைஞர்களின் கைதுகளால் ஒடுக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களுடன் முஸ்லிம் இளைஞர்களும் அடைக்கப்பட்டார்கள். அது மாத்திரமன்றி தமிழ் இளைஞர்களை விடவும் அதிகமாகத் தாக்கப் பட்டார்கள். சில இடங்களில் முஸ்லிம் இளைஞர்களைத் தாக்குமாறு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் தூண்டினர். எனினும், முஸ்லிம் இளைஞர்களைத் தாக்க தமிழ் இளைஞர்கள் முன்வரவில்லை.


முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட ஒருசில மணிநேர இடைவெளியிலேயே – பின்னாளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசிற்குத் தமைமை தாங்கிய – சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் மட்டக்களப்பு பிரதான காவல் நிலையத்துக்கு நேரில் வந்து கூண்டில் இருந்த இளைஞர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போது தமிழ் இளைஞர்களுக்கும் அவர் உதவிக்கரம் நீட்டினார். அப்போது சிறைக்கைதியாக அடைபட்டிருந்த நான் ஒரு உண்மையான அரசியல் தலைவரை நேரில் தரிசிக்க முடிந்தது. எங்களைப் போன்றவர்களுக்கு அவரால் பெரிதாக எதுவும் உதவியிருக்க முடியாது. ஏனெனில், நாங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருந்தோம். ஆனால், அந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடங்களுக்கு நேரில் சென்று அவர்களைச் சந்திக்க தமிழ் அரசியல்வாதிகள் எவரும் துணியவில்லை என்பது அஷ்ரப் அவர்களின் மீதான மரியாதை மேலும் உயரக் காரணமானது.

இந்தக் கடையடைப்புச் சம்பவம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் இஸ்ரேலின் செயற்திட்டத்தை நிச்சயம் துரிதப் படுத்தியிருக்கும் எனலாம். மறுபுறும், முஸ்லிம்களின் தலைவராகப் பரிணமிக்க வேண்டிய தேவையை அஷ்ரப் அவர்களுக்கு உணர்த்திய தருணமாகவும் இருக்கலாம். 84 காலப் பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு தமிழ் முஸ்லிம் முரண்பாடு எவ்வாறு தீவிரமாகியது என்பது ஞாபகத்திற்கு வரக்கூடும். மோதலில் சம்பந்தப் பட்டவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் கூட, மோதல்கள் யாவும் இயல்பாக உருவாகியவை அல்ல என்பதும் தெரிந்திருக்கக் கூடும். சம்பவங்களை விடவும் வதந்திகளே இந்தக் காலகட்டத்தில் அதிகமாக உலவின. தமிழ் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முதன்முதலாக இடம்பெயர வேண்டிய சூழல் இதன்போது உருவாகியது என்றாலும் கூட, எல்லைப் புறங்களில் வசித்த முஸ்லிம் மக்களும் இந்தக் கதிக்கு ஆளாக வேண்டியிருந்தது.

இதே காலகட்டத்திலேயே முஸ்லிம் ஊர்காவல்படையின் தோற்றம் நிகழ்ந்தது. முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து காப்பது என்ற ஒற்றை நோக்குடனேயே உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை தன்னுடைய பணியை அளவுக்கு அதிகமாகவே செய்தது என்பதை நாம் அறிவோம். இந்த ஊர்காவல்படையின் பிதாமகனும் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவே.
அன்று தோன்றிய தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் இரண்டு தரப்பிலும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழர் மத்தியில் தீர்மானகரமான சக்திகளாக விடுதலைப் புலிகள் மாறியதைப் போலவே, முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதம் ஏந்திய முஸ்லிம் ஊர்காவல் படையினரும், புலனாய்வாளர்களும் உருவாகினர். குடிமக்கள் சமூகத்தின் குரல்கள் இரண்டு தரப்பிலும் அமுங்கிப் போனதன் விளைவை இன்றுவரை இரண்டு சமூகங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

1984 காலகட்டத்தில் தொடங்கிய தமிழ்-முஸ்லிம் மோதல்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் ஆயுதப் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொள்வது 1990 யூனில் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பமாகும் வரை நீடிக்கவே செய்தது. இந்திய இராணுவம் தமிழ் மண்ணில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பலவீனமாக இருந்த விடுதலைப் புலிகள் இறுதிவரை தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருந்ததென்றால் அது முஸ்லிம் மக்களின் உதவி இல்லாமல் நிகழ்ந்திருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓட்டமாவடி-நாவலடி பகுதியில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வயல்காணிகளைத் திருப்பி வழங்கும் நிகழ்வு ஒன்றில் பேசும் போது விடுதலைப் புலிகளின் அப்போதைய மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அது குறித்துப் பேசியதை நேரில் கேட்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.
இத்தகைய வரலாறு பலரும் அறிந்தவையே. ஆனால், பொதுவெளியில் பலரும் அதுபற்றிப் பேசுவதில்லை. இன உணர்வில் பொங்கித் தவிப்பவர்களுக்கு தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், கொடுமைகள், பாரபட்சம் போன்றவை மாத்திரமே ஞாபகத்தில் இருக்கும். தம்மிடம் இருக்கும் இனவெறியை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

1956 இல் தாய்மொழிக் கல்வித் திட்டம் அமுலுக்கு வந்தது. அதனை அறிமுகஞ் செய்வதற்கான காரணங்களுள் ஒன்றாக அப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான அரச உயர்பதவிகளை வகித்த யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களிடம் இருந்து பதவிகளைப் பறித்து சிங்கள மேட்டுக்குடியினரின் கைகளில் வழங்குவது ஒன்றாக இருந்தது. அன்றைய நிலைமை சிங்கள மக்களுக்கு மாத்திரமன்றி, யாழ் குடாநாட்டுக்கு வெளியே வசித்த மூவின மக்களுக்கும் கூடப் பிடித்தமானதாக இருக்கவில்லை. யாழ் மேலாதிக்கம் என்ற விடயம் தமிர்களைக் கூடப் பாதித்தது. பின்னாளில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டு, யாழ் குடாநாட்டிற்கு வெளியே வாழும் தமிழ் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்புக் கிட்டியபோதில், அந்த வாய்ப்பையும் கூடப் பின்கதவு வழியாகக் கவர்வதற்கு யாழ் மேட்டுக்குடியினர் பல்வேறு தந்திரோபாயங்களைப் பாவித்தமை ஒன்றும் இரகசியம் அல்ல.

கிழக்கில் முஸ்லிம்களின் கடந்தகாலச் செயற்பாடுகளும் கிட்டத்தட்ட அத்தகையதே. தமிழ் மக்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் – தமது இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – முஸ்லிம் இளையோருக்கு வேலைவாய்ப்புகளிலும் பதவி உயர்வுகளிலும் முன்னுரிமை வழங்கினார்கள்.

யாழ் மேட்டுக்குடியினர் தமது நியாயமான உரிமைகளைத் திட்டமிட்டுப் பறித்தபோதில் பொங்கியெழாத கிழக்குத் தேசியவாதிகள் முஸ்லிம்கள் அவ்வாறு நடந்து கொள்ளும்போது மாத்திரம் பொங்கியெழுகின்றார்கள் என்றால் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான நோக்கம் மாத்திரமன்றி இனவாத அடிப்படையிலான நோக்கமும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சொல்லும்போது முஸ்லிம்கள் அடாத்தாக விடயங்களைச் செய்யும்போது பாராமுகமாக இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. முஸ்லிம் மக்களோடு, அரசியல் தலைமைகளோடு மனந்திறந்த உரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும். அவர்களுக்கு விடயங்களை விளக்குவதன் ஊடாக யாரும் யாருடைய உரிமைகளையும் பறித்துவிடக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும். சகோதரர்கள் இருவருக்கிடையிலான முரண்பாடு எவ்வாறு பேசித் தீர்க்கப்படுகின்றதோ அதைப்போன்றே இந்த விடயமும் அணுகப்பட வேண்டும். இதற்கான முன்நிபந்தனையாக கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக இரண்டு தரப்பும் மனந்திறந்த முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இரண்டு இனங்களும் நெருங்கிவரும் வகையிலான ஒரு வேலைத்திட்டமாக கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சி இருந்தது. தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து அந்த ஆட்சியை அமைத்திருந்தனர். துர்வாய்ப்பாக, அந்த இணைப்பின் உள்ளார்ந்த அர்த்தம் தமிழ் மக்களுக்கோ, முஸ்லிம் மக்களுக்கோ முறையாகப் புரிய வைக்கப்படவில்லை. அவ்வாறு மக்களுக்குப் புரியவைப்பது மக்கள் தலைவர்களின் பணி. ஆனால், நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்தமைக்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக இதுவே இருந்தது என்பது எத்தகைய முரண்நகை?

இன்றைய தென்னிலங்கை அரசியல் சூழல் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உவப்பான ஒன்றாக இல்லை. இந்தத் தருணம் இரண்டு இனங்களும் – விட்டுக் கொடுப்போடு – இணைந்து பயணிக்க வேண்டிய தருணம். எந்தச் சிங்கள இனவாதம் பிரித்தாளும் தந்திரோபாயம் கொண்டு இரண்டு இனங்களையும் மோதவிட்டதோ, அந்த இனவாதத்துக்கு எதிராக இரண்டு இனங்களும் கரங்கோர்த்து நின்று செயற்பட வேண்டிய தருணம். இதற்கு அதீத முயற்சியெல்லாம் அவசியமல்ல. திறந்த மனதுடனான கலந்துரையாடலும், அதனைத் தொடர்வதற்கான தூரநோக்குடன் கூடிய தலைமைகளுமே அவசியம். அது நடைபெறும்போதே, சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படும் கிழக்குமைய, முஸ்லிம் விரோத தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் இருந்து காணாமற் போவார்கள்.

கிழக்கு மைய அரசியல் பேசுபவர்கள் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் சமகாலத்தில் செயற்படாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமது கவனத்தைக் குவிப்பதற்குக் காரணம் எதுவும் இருக்கிறதா? இதுபற்றி அடுத்தவாரம் பார்க்கலாம்.
 

https://www.meenagam.com/?p=15469

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.