Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.!

ulaga-cinema-varalaaru_FrontImage_513.jp

உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி.

‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில.

டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். இதற்கு இவர் கூறும் காரணம்: “சாதாரண மக்களுக்கு எதையும் புரியும்படிச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தங்களை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் நடிப்பை ஒரு தொழில் என்று நம்புவதில்லை.”
 அப்பாஸ் கிராஸ்தமியின் படங்கள் அனைத்தும் எளிமையான தோற்றத்துடன் மிக ஆழமான உணர்வுகளை பிரதிபலிப்பவை. ஒரு திரைப்படத்திற்கு தகுதியில்லாவை என முதல்பார்வையில் ஒதுக்கித் தள்ளும் எளிய நிகழ்வுகளே இவரது திரைப்படங்களை கட்டமைக்கின்றன. இந்த நிகழ்வுகள் வாழ்வின் ஆதார சுருதியை மீட்டிச் செல்ல ஒருபோதும் தவறியதில்லை என்பது இவரது கலை ஆளுமையின் சிறப்பு.

அப்பாஸ் கிராஸ்தமி என்றதும் அவர் ரசிகர்களுக்கு நினைவு வருவது குழந்தைகள். குழந்தைகளின் உலகை இவரளவிற்கு யதார்த்தமாக காட்சிப்படுத்திய இயக்குனர்கள் வேறில்லை என்றே சொல்லலாம். குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிவது தனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் அப்பாஸ் கிராஸ்தமி. குழந்தைகள் கேமராவின் முன்பு மிக இயல்பாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். முககியமாக அவர்கள் பணத்திற்கோ புகழுக்கோ ஆசைப்படுவதில்லை என்பது இவரது கருத்து.

தனது ஒவ்வொரு படத்திலும் புதிய யுக்திகளை மிக இயல்பாக முயன்று வருபவர் இவர். ‘Through the Olive Trees’ படம் ஒரு டாக்குமெணட்ரியை போல எடுக்கப்பட்டது. படத்தின் தோற்றம் டாக்குமெண்ட்ரியை கொண்டிருந்தாலும், டாக்குமெண்ட்ரிக்குரிய வறட்டுத்தனம் சற்றும் இதில் எட்டிப்பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்.

Ten’ திரைப்படம் முழுக்க ஓடும் காரில் எடுக்கப்பட்டது. பதினைந்து நிமிடங்கள் ஒரே கோணத்தில் குளோசப் ஷாட்டில் சிறுவன் ஒருவனின் பேச்சை படம் பிடிக்கும் துணிச்சல் இவரை தவிர வேறு யாருக்கும் வருமா என்பது சந்தேகமே.

அப்பாஸ் கிராஸ்தமியின் கலை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்று, ‘The Wind will Carrys us.’

மரங்கள் இல்லாத பெரிய மலைகளின் வளைந்து செல்லும் பாதைகளினூடே புழுதி கிளப்பி வரும் ஜீப்பிலிருந்து படம் தொடங்குகிறது. லாங் ஷாட்டில் காட்டப்படும் ஜீப்பில் இருப்பவர்களின் பேச்சு திரையில் ஒலிக்கிறது. அவர்கள் டெஹ்ரானிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள Siah Dareh என்ற சிறிய கிராமத்திற்கு செல்பவர்கள். பாதி வழியில் சிறுவன் ஒருவன் அவர்களை கிராமத்திற்கு வழி நடத்தி அழைத்து செல்கிறான்.

28077id_ThroughtheOliveTrees_4_w1600.jpg

மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் ஒருவர் மட்டுமே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறார். அவரை கிராமத்திலுள்ளவர்கள் என்ஜினியர் என்று அழைக்கிறார்கள். என்ஜினியரும் அவர் நண்பர்களும் எதற்காக அந்த கிராமத்திற்கு வருகிறார்கள் என்பது படத்தில் சொல்லப்படவில்லை.

Siah Dareh-ல் உள்ள நூறுவயதை தாண்டிய மூதாட்டி ஒருத்தி சாகும் தருவாயில் இருக்கிறாள். அவளின் இறுதி சடங்கை படம்பிடிக்கவே என்ஜினியரும் அவர் குழுவும் அங்கு வந்திருக்கிறது. படத்தில் வரும் காட்சிகள் இப்படியொரு ஊகத்துக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது என்றாலும் இதுதான் காரணம் என்பது படத்தில் திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.

மூதாட்டியின் மரணம் நாள் கணக்கில் தள்ளிப்போகிறது. இந்த காலகட்டத்தில் என்ஜினியருக்கு அக்கிராமத்தில் உள்ளவர்களுடன் ஏற்படும் சிறிய நிகழ்வுகள், வழிகாட்ட உதவிய சிறுவனுடன் ஏற்படும் உறவு ஆகியன பார்வையாளர்களுக்கு Siah Dareh கிராமத்துடன் இனம் புரியாத ஒட்டுதலை ஏற்படுத்துகின்றன.

இறுதியில் மூதாட்டியின் மரணம் நிகழும்போது என்ஜினியர் கிராமத்தை விட்டு புறப்படுகிறார். மூதாட்டியின் மரணமும் படத்தில் அறுதியிட்டு கூறப்படவில்லை. படத்தில் வரும் காட்சிகள் இப்படியொரு தீர்மானத்துக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது, அவ்வளவே!

நல்ல கதையே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குகிறது என்ற பொதுவான கருத்து இன்றும் நம்மிடையே நிலவி வருகிறது. நல்ல கதையை காட்சிகள் மூலமும், வசனங்கள் வாயிலாகவும் பார்வையாளர்களுககு புரியும்படியும், அவர்கள் உணர்வுளை தூண்டுபடியும் யார் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறார்களோ அவர்களே சிறந்த இயக்குனர்கள். இப்படிப்பட்ட திரை ஆக்கங்களில் நிகழ்வுகளே கதையை நகர்த்தும் பிரதான விஷயங்களாக அமைகின்றன. சரியாக சொன்னால் நிகழ்வுகளின் தொகுப்பே கதையாக பரிணமிக்கிறது.

Screenshot-2020-10-17-12-47-47-111-org-m

உதாரணமாக ‘கில்லி’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் த்ரிஷாவை இழுத்துச் செல்லும்போது விஜய் எதிரில் வருகிறார். இது ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வு நடைபெறாமல் போயிருந்தால் அதாவது விஜய் வராமல் போயிருந்தால் கதை என்னவாக ஆகியிருக்கும்? யூகிக்க சிரமமாக இருக்கிறதல்லவா? இந்த நிகழ்வுக்குப் பிறகு வரும் அனைத்து நிகழ்வுகளும் அதாவது விஜய் த்ரிஷாவை காப்பாற்றுவது, பிரகாஷ்ராஜ் சென்னை வருவது ஆகிய அனைத்தும் நாம் முதலில் பார்த்த நிகழ்வின் ஆதாரத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு நிகழ்வை உருவினாலும் கதை சீட்டுக்கோபுரமாக பொலபொலவென சரிந்துவிடும்.

portrait_of_abbas_kiarostami_credit_janu

மாறாக ‘The Wind will Carry us’ திரைப்படத்தில் நிகழ்வுகள் கதையை கட்டமைக்கவில்லை. சரியா சொன்னால் இப்படத்தில் வரும் நிகழ்வுகள் கதை என்று திட்டவட்டமாக ஒன்றை உருவாக்கவேயில்லை. ஆகையால் விஜய் வராமல் போயிருந்தால் என்பது போன்ற ஒரு கேள்வியை இப்படத்தின் மீது வைக்கவே இயலாது. பல நிகழ்வுகள் ஒன்றிணைந்து கதை என்ற ஒன்றை கட்டமைக்காததும், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே முழுமை பெற்று வேறு நிகழ்வுகளை சாராமல் இருப்பதுமே இதற்கு காரணம்.

சரி, கதையே திரளாத ஒரு திரைப்படம் பார்வையாளர்களுக்கு என்ன அனுபவத்தை தர முடியும்? அதுதான் இத்திரைப்படத்தில் அப்பாஸ் கிராஸ்தமி தனக்குத்தானே வகுத்துக்கொண்ட சவால்.

Siah Dareh சிறிய கிராமம். மலைகளுக்கு நடுவில் ஒரு குன்றின் மீது செங்கலாலும், மண், சுண்ணாம்பு சுதையாலும் நிர்மாணிக்கப்பட்ட மிகச்சிறிய கிராமம். படத்தினூடாக வரும் அக்கிராமத்தின் எளிய மனிதர்கள், குறுகலான தெருக்கள், வளர்ப்பு பிராணிகள், காற்றில் பொன்னிறத்தில் அலையும் தானிய கதிர்கள், புழுதி கிளப்பும் மண் பாதைகள் என ஒவ்வொன்றும் பார்வையாளர்களை அக்கிராமத்துடன் உணர்வுபூர்வமான ஒரு உறவை ஏற்படுத்துக்கின்றன. படத்தில் சுவாரஸியமான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அதில் ஒன்று.

கிராமத்தில் என்ஜினியருக்கு சரியாக செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. சிக்னல் கிடைக்க வேண்டுமென்றால் அவர் தனது ஜீப்பில் ஏறி அப்பகுதியிலேயே உயரமாக இருக்கும் கிராமத்தின் இடுகாடு அமைத்திருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் என்ஜினியர் ஜீப்பில் ஏறி இடுகாட்டுக்கு விரைகிறார். திரும்பத் திரும்ப வரும் இக்காட்சி படத்திற்கு ஒரு ரிதத்தை அளிக்கிறது.

இடுகாட்டில் கிராமத்தை சேர்ந்த ஒருவன் தொலை தொடர்பு துறைக்காக பெரிய குறுகலான பள்ளம் ஒன்றை தோண்டுகிறான். போன் பேச வரும் என்ஜினியர் அவனுடன் உரையாடுகிறார். அவர் போன் பேச வரும்போதெல்லாம் உரையாடல் தொடர்கிறது. எனினும் பள்ளத்திற்குள் இருக்கும் மனிதனின் முகம் கடைசிவரை காட்டப்படவில்லை. இறுதி காட்சியில் மண் சரிந்து குழிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் அவனை கிராமத்தவர்கள் என்ஜினியரின் ஜீப்பில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதும் அவன் கால்கள் மட்டுமே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது

கிராமத்தில் தேனீர் விற்கும் வயதான பெண்மணியுடன் உரையாடுகிறார் என்ஜினியர். அவளிடம், “இதுவரை பெண்கள் உணவு பரிமாறி நான் பார்த்ததில்லை” என்கிறார், ஹோட்டலில் பெண்கள் உணவு பரிமாறுவதில்லை என்ற அர்த்தத்தில். உடனே அப்பெண்மணி “உனக்கு பெற்றோர் உண்டா?”என்று கேட்கிறாள்.

“உண்டு!”

“அப்படியானால் உன் அப்பாவுக்கு உணவு பரிமாறுவது யார்?”

“அம்மா.”

“பிறகெப்படி பெண்கள் பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை என்று சொல்லலாம்.”

என்ஜினியர் அப்பெண்மணியிடம் வருத்தம் தெரிவிக்கிறார்.

குடிப்பதற்கு பால் வாங்க ஒரு வீட்டிற்கு என்ஜினியர் செல்கிறார். அது இடுகாட்டில் குழி தோண்டுபவனின் காதலியின் வீடு. அவளுக்கு வயது பதினாறு. நிலவறையில் இருட்டான பகுதியில் அவர்கள் மாடு கட்டப்பட்டிருக்கிறது. அரிகேன் விளக்குடன் வரும் அப்பெண்ணின் கால்பகுதி மட்டுமே தெரிகிறது. முகம் தெரியவில்லை. அவள் பால் கறக்கும் போது, ஈரானின் புகழ்பெற்ற பெண் கவிஞர் Forough Farrokhzad- ன் கவிதையை சொல்கிறார் என்ஜினியர். அக்கவிதையில் வரும் ஒரு வார்த்தையே ‘The Wind will Carrys us.’

maxresdefault.jpg

இந்த புகழ் பெற்ற கவிதையையே இந்தப் படத்தில் காட்சி ரூபமாக்கியுள்ளார் அப்பாஸ் கிராஸ்தமி என்கிறார்கள் விமர்சகர்கள்.

மேலோட்டமாக பார்த்தால் இறப்புக்கான காத்திருந்தலே இப்படம். படத்தின் இறுதியில் வரும் மருத்துவரும் இறப்பு குறித்து பேசுகிறார். முதுமைப் பருவம் மிக மோசமானது என்று கூறும் என்ஜினியருக்கு, அதைவிட மரணம் மிக மோசமானது என்று பதிலளிக்கிறார் மருத்துவர். “மரணம் இந்த இயற்கையை, இதன் அதிசயங்களை, இதன் தீராத அழகை முற்றிலுமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது.” மேலும், மற்ற அனைத்து செயல்களையும்விட இயற்கையை கவனிப்பதே மகிழ்வானது என்கிறார் மருத்துவர்.

அப்பாஸ் கிராஸ்தமியின் இந்தப் படத்தில் Siah Dareh கிராமமும், அதை சுற்றியுள்ள அற்புதமான ‘லேண்ட் ஸ்கேப்’பும் ஆச்சரிப்படும் விதத்தில் பார்வையாளனுக்குள் பதிய வைக்கப்படுகிறது.

முதல் காட்சியில் ஜீப்பில் உள்ளவர்கள் முகவரி அடையாளமாக மலையில் தனித்து நிற்கும் மரம் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். ஜீப், அதிலுள்ளவர்களின் உரையாடல் இவற்றை தாண்டி பார்வையாளனும் அந்த மரத்தின்பால் கவனத்தை குவிக்கிறான்.

பிறிதொரு காட்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் ஒருவனை என்ஜினியர் அழைக்கிறார். அழைப்பு கேட்காத அவனை சிறு குன்று ஒன்று மறைக்கிறது. கேமரா அந்த குன்றின் பின்னணியில் மோடடார் சைக்கிளின் சத்தத்தை பின் தொடர்கிறது. சில விநாடிகளில் குன்றின் மறுபுறம் அம்மனிதன் பார்வையாளர்களின் கண்களில் மீண்டும் தென்படுகிறான்.

என்ஜினியர் இடுகாட்டுக்கு கிராம நுழைவாயிலை கடந்து ஜீப்பில் செல்கிறார். வாயிலை கடந்ததும் ஜீப் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறது. ஆனாலும், திரையில் அந்த காட்சியே தொடர்கிறது. சில நொடிகள் கழித்து மறைந்த கார் தொலைவில் சாலையில் மீண்டும் தோன்றுகிறது.

நாம் மேலே பார்த்தது போன்ற ஏராளமான காட்சிகளின் வழியாக கிராமமும் அதனைச்சுற்றியுள்ள பூகோள அமைப்பும் மிக நுட்பமாக பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. இறுதி காட்சியில் மருத்துவர் இயற்கையை குறித்து பேசும்போது இந்தப் பதிவுகள் பார்வையாளர்களுக்குள் இயற்கை குறித்த தன்னெழுச்சியை சுண்டிவிடுகின்றன.

மேலும, 118 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் கடைசி மூன்று நிமிடங்கள் மட்டுமே பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது. மீதி படம் முழுக்க இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஒரு முழுமையான அழகியல் படைப்பு அப்பாஸ் கிராஸ்தமியின் ‘The Wind will Carry us‘ என்பதில் மிகையில்லை.

https://vanakkamlondon.com/cinema/2020/10/88107/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.