Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழிவடைந்து கொண்டிருக்கும் சிவன் ஆலயம் – ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழிவடைந்து கொண்டிருக்கும் சிவன் ஆலயம் – ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்

 
image4-696x392.jpeg
 47 Views

திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில்  இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும். அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.

சமகால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போத்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

122052006_10158560820329985_759639987453ஆயினும் தற்காலத்தில் அவ்வாலயங்கள் இருந்த ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வாலயங்களின் அழிபாடுகளை அடையாளம் காணமுடிகின்றது. ஆயினும் அவ்வழிபாடுகளை வைத்து அவ்வாலயங்களின் கட்டிட அமைப்பையோ, கலைமரபையோ, வழிபாட்டிலிருந்த தெய்வங்கள் பற்றியோ அறியமுடியவில்லை. இதற்கு இம்மாகாணங்களின் கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய போத்துக்கேயரும்,பின்வந்த ஒல்லாந்தரும் சுதேச மதங்களுக்கு எதிராகக் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் இவ்வாலயங்கள் அழிக்கப்பட்டதே காரணமாகும்.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களின் கட்டிடப் பாகங்களைக் கொண்டே அவர்களின் ஆட்சிக்காலக் கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் என்பன கட்டப்பட்டன. இந்த உண்மையை அவர்களின் ஆட்சி ஆவணங்களே உறுதி செய்கின்றன. இதை தற்போது யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் இந்து ஆலயங்களுக்குரிய கட்டிடப் பாகங்கள் மேலும் உறுதி செய்கின்றன.

122033962_10158560820624985_554764296647

இருந்த போதிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியில், அவர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை அண்டிய மாகாணங்களில் ஏற்பட்டிருந்ததனால் அவர்களின் கலையழிவுக் கொள்கையில் இருந்து மாகாணங்களின் உட்பகுதியில் இருந்த ஆலயங்கள் தப்பித்திருக்க இடமுண்டு. அவற்றில் ஒன்றாகவே திருமங்கலாய்ச் சிவன் ஆலயத்தைப் பார்க்கின்றேன்.

இவ்வாலயம் திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட திருமங்கலாய் என்ற வரலாற்றுப் பழமை வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றி திருகோணமலை தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது இவ்வாலயம் கிளிவெட்டியின் பிரதான வீதியில் இருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் மீன்சார வேலி போடப்பட்ட அடர்ந்த காட்டின் மத்தியில் காணப்படுகின்றது.

122463105_10158560820614985_365255619201இவ்விடத்திற்குச் செல்லும் பாதையில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் யானைகளின் நடமாட்டத்தை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. இவற்றின் காரணமாகவே இதுவரை தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளனர் எனலாம்.

இந்நிலையில் திருமங்கலாய் பிரதேசத்தில் வாழ்ந்த மூதாதையினரின் வழித்தோன்றல்களாக தற்போது கிளிவெட்டியில் வாழ்ந்து வரும் திரு. வி.முத்துலிங்கம். திரு.கே.குரேந்திரராசா திரு. கே. மாணிக்கராசா முதலியோர் இவ்வாலயத்தை ஆய்வு செய்வதற்கு எமக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதமும் உதவிகளும் அவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது.

இந்த ஆய்வில் எமது பல்கலைக்கழக தொல்லியல் இறுதிவருட மாணவர்களுடன் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்திட்ட முகாமையாளர் திரு. லக்ஷ்மன் சந்தன மைத்திரிபால மற்றும் யாழ்ப்பாண பிராந்திய தொல்லியற் திணைக்களக அதிகாரிகளான திரு.மணிமாறன். திரு.கபிலன் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் எம்முடன் இணைந்து பல நாட்களாக ஆய்வில் பங்கெடுத்தமை மாணவர்களுக்குப் புதிய ஆய்வு அனுபவத்தைக் கொடுத்தது.

122048105_10158560821449985_568651174104தற்போது இவ்வாலயத்தின் பெரும்பகுதி முற்றாக அழிவடைந்து அதன் அழிபாடுகள் ஆங்காங்கே கற்குவியல்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் அவ்வாலயத்தின் கட்டிட அமைப்பையும் அதன் கலை மரபையும் ஆலயம் தோன்றி வளர்ந்த காலத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய நம்பகரமான ஆதாரங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது.

கருங்கற்களையும், செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கர்பக்கிரகமும் அதன் மேலமைந்த விமானமும் முற்றாக அழிவடைந்து அதன் கட்டிடப் பாகங்கள் ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுகின்றன. கர்பக்கிரகம் இருந்த இடம் பிற்காலத்தில் புதையல் எடுப்போரால் தோண்டப்பட்டு அவ்விடம் தற்போது ஒரு குழியாகக் காணப்படுகின்றது.

image1-2-1.jpeg

கர்பக்கிரகத்திற்கு முன்னால் அழிவடைந்து காணப்படும்  ஆலய காலப் பொருட்கள் சிலவற்றுடன் பிற்காலத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்ட சிவலிங்கமும் காணப்படுகின்றது. அந்தராளத்திற்கு முன்னால் மகாமண்டபமும். பலிபீடமும் இருந்தன. அத்திவாரங்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரத் தன்மை கொண்ட பல கருங்கற் தூண்களும் காணப்படுகின்றன. இம்மகாமண்டத்திற்கு வலப்பக்கமாக பயன்படுத்தப்படாத நிலையில் கருங்கற்களான மாடங்கள், தெய்வச் சிலைகள் வைப்பதற்குப் பயன்படுத்திய பீடங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

122268819_10158560820134985_163335866563

மகாமண்டபத்தின் இடப் பக்கமாக ஆலயத்தில் பயன்படுத்தியிருந்த கோமுகிகள், சந்தனம் அரைக்கும் கற்கள், கபோத வடிவிலமைந்த அரைவட்டத் தூண்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்திற்கு மிக அருகில் கருங்கற்களைக் கொண்டு சற்சதுர வடிவில் ஆழமாகக் கட்டப்பட்ட ஆலயத்தின் தீர்த்தக் கிணறு காணப்படுகிறது.

மேலும் இவ்வாலயத்தைச் சுற்றி சுற்று மதில்களும் அவற்றிடையே துணைக் கோவில்களும் (பரிவாரத் தெய்வங்கள்) இருந்திருக்கலாம் என்பதை அவற்றிற்குரிய அத்திவாரங்களும், பரவலாகக் காணப்படும் செங்கட்டிகளும், கருங்கற்களும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஆய்வின் போது கட்டிட அழிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் இவ்வாலய வரலாற்றுடன், கிழக்கிலங்கை வரலாறு பற்றிய ஆய்விலும் அதிக முக்கியத்துவம் வாய்ததாகக் காணப்படுகின்றது. எமக்குத் தெரிந்தவரை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களுடன் அவ்வாலயங்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு அம்சங்களும் முதன் முறையாகத் திருமங்கலாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் எழுத்தமைப்பைக் கொண்டு அவை வேறுபட்ட காலங்களில், வேறுபட்ட நோக்கங்களுக்காக பொறிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. அவற்றுள் கி.பி. 10 ஆம், கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய மூன்று கல்வெட்டுக்கள் ஆலய நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், அவ்வாலயத்திற்கு சிற்றம்பலம் உடையார், திருவெண்ணைக்கூற்றன் திருவரங்கம் முதலான அதிகாரிகள், சமூகப் பெரியவர்கள் வழங்கிய தானங்கள் (காசு) பற்றியும் கூறுகின்றன.

122013629_10158560819949985_174295388439

கி.பி. 15 ஆம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக்குரிய ஏனைய இரு கல்வெட்டுக்களும் இவ்வாலயத்திற்கு பசுக்கள் தானமாக வழங்கப்பட்ட செய்திகளைக் கூறுகின்றன. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கங்குவேலி என்ற இடத்தில் திருமங்கலாய் ஆலயத்திற்குரிய மணி ஒன்று காணப்படுகின்றது.

இது திருமங்கலாய் ஆலயத்தில் இருந்து பிற்காலத்தில் கங்குவேலிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மணியாகும். ஆவ்வாலய மணியில் திருமங்கலாய் கோவிலுக்கு அவ்வூரில் வசித்த (திருமங்கலாயில் வசித்த) “பத்திபெட்டி மகன் பத்தன் உடைய உபையம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இச்சாசனத்தின் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.17 ஆம் நூற்றாண்டிற்கு உரியதெனக் கூறலாம். ஆகவே மேற்கூறப்பட்ட கல்வெட்டுகள், ஆலய மணிச் சாசனம் என்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வாலயம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஏறத்தாழ 17 ஆம் நூற்றாண்டுவரை அழிவடையாத நிலையில் இப்பிரதேச மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளமை தெரியவருகின்றது.

இவ்வாலயம் இலங்கைத் தமிழர் குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் பின்வரும் அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

1.இவ்வாலயம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து திராவிடக் கட்டிடக்கலை மரபில் தோன்றி வளர்ந்ததற்குப் பின்புலமாக திருமங்கலாய்ப் பிரதேசத்தின் தொன்மையான. செறிவான தமிழ்க் குடியிருப்புக்கள் இருந்துள்ளமை தெரிகின்றது. இந்த உண்மையை எமது ஆய்வின் போது இப்பிரதேசத்தில் ஆங்காங்கே பிற தேவைகளுக்காக வெட்டப்பட்டிருந்த ஆழமான குழிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் உருவங்கள் முதலான சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

image4.jpeg

2.தமிழகத்தில் பல்லவர் ஆட்சியில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் சமகால இலங்கையிலும் கற்களைப் பயன்படுத்தி திராவிடக் கலைமரபில் ஆலயங்கள் அமைக்கும் மரபு தோன்றி வளர்ந்ததைக் காணமுடிகின்றது. அவற்றுள் சோழ ஆட்சியின் தலைநகராக இருந்த பொலநறுவையில் கட்டப்பட்ட இரண்டாம் சிவதேவாலயமே இலங்கையில் இதுவரை ஓரளவு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய திராவிடக் கலைமரபில் கட்டப்பட்ட ஆலயம் எனக் கூறப்படுகின்றது.

ஆனால் பொலநறுவை இராசதானி கால வரலாற்றில் எந்த இடத்திலும் சொல்லப்படாத திருமங்கலாய் சிவன் ஆலயம் அதன் கட்டிட அமைப்பிலும், கலைமரபிலும் சற்று மேலோங்கிக் காணப்படுவதன் முக்கியத்துவம் எதிர்காலத்தில் விரிவாக ஆராயபட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

3.சோழர் ஆட்சியிலும் சோழர் ஆட்சிக்குப் பின்னரும் பொலநறுவைக்கு அப்பால் வடக்கு – கிழக்கு இலங்கையிலேயே சோழ ஆட்சியாளர், தமிழ் அதிகாரிகள், தமிழ் வணிக கணங்கள் முதலியோரால் கட்டப்பட்ட ஆலயங்கள் பற்றிப் பல தமிழ்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆயினும் அக்கல்வெட்டுக்கள் கூறும் ஆலயங்கள் எந்த இடங்களில் இருந்துள்ளன என்பது பெரும்பாலும் இதுவரை அடையாளம் காணப்படாமலே உள்ளன. ஆனால் திருமங்களாயில் ஆலயம் பற்றிய கல்வெட்டுக்களுடன், ஆலய அமைப்பையும், அதன் கலை மரபையும் அறியக்கூடிய அரிய பல ஆதாரங்கள் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் கிழக்கிலங்கை இந்துக்களின் வரலாறு, பண்பாடு பற்றிய எதிர்கால ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

4.இலங்கையில் அநுராதபுர இராசதானியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில பௌத்த ஆலயங்களே தற்காலத்திலும் வழிபாட்டிற்குரிய ஆலயங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் அநுராதபுரத்திலும் இலங்கையின் ஏனைய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான ஆதிகால இடைக்கால ஆலயங்கள் இலங்கையின் மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பிற்காலத்தில் அவை சுற்றுலாத் துறையின் முக்கிய மரபுரிமை மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்த மக்களின் பிரதான வழிபாட்டு ஆலயமாகவே இருந்துள்ளது.

இந்த உண்மையை அவ்வாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களும், ஆலய மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனமும். அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களின் நில உரிமைப் பத்திரங்களும் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாலயத்தின் பழமையையும், அதன் வரலாற்றுப் பெறுமதியையும் எமது ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட சக்தி தொலைக்காட்சி நிறுவனம், இவ்வாலயத்தை ஆவணப்படுத்த முன்வந்தது.

இதற்காக அரச திணைக்கள அனுமதியுடன் அன்றைய சக்தி வானொலி அலைவரிசை பிரதானி திருமதி உமாச்சந்திரா பிரகா தலமையில் தற்போதைய சக்தி வானொலி அலைவரிசை பிரதானி ஆர்.பி. அபர்ணா சுதன். திரு.ஞா.கணாதீபன் முதலியோரைக் கொண்ட குழுவினரை திருமங்கலாய்க்கு அனுப்பி வைத்தது.

அவர்கள் ஏழு மையில் தூரம் கால் நடையாகவும், உழுவு இயந்திரத்திலும் அச்சத்துடன் காட்டு வழியாகப் பயணம் செய்து திருமங்கலாய் சிவன் ஆலயத்தில் காணப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆவணப்படுத்தினர். இவ்வரிய பணியால் ஆய்வில் ஈடுபட்ட எமக்கும், அங்கு கூடியிருந்த மக்களுக்கும்,தனது காலத்திலேயே இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் என அயராது உழைத்து வரும் திரு. வி.முத்துலிங்கத்திற்கும் பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாலயத்தை ஆவணப்படுத்திய சக்தி தொலைக்காட்சி நிறுவனம் அது பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற போது இவ்வாலயம் பற்றி மேலும் அறிய வேண்டும், நேரில் பார்வையிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட நாம் இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்து பாதுகாக்கும் நோக்கில் திருமதி உமாச்சந்திரா பிரகா அவர்களுடன் இணைந்து பல முயற்சியகளில் ஈடுபட்டோம். அதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், அமைச்சின் அதிகாரிகள், கௌரவ இராஜங்க கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலியோரின் உதவிகளை நாடினோம்.

இலங்கைத் தொல்லியற் திணைக்களம் தனது அதிகாரிகளை அனுப்பி இவ்வாலயத்தின் பழமையை உறுதிப்படுத்திக் கொண்டது. மத்திய கலாசார நிதியம் ஆலயத்தை மீள்புனரமைப்புச் செய்வதைப் பரிசீலிப்பதாகப் பதில் அனுப்பியது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலிக்க முன்வந்த அதிகாரிகளும் பதவி மாற்றம் செய்யப்பட்டதால் தற்போது, எல்லா முயற்சிகளையும் நாம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

அதற்கு நாட்டின் தற்போதைய நிலையும் சாதகமாகக் காணப்படவில்லை.
இருப்பினும் விலைமதிக்க முடியாத எமது மரபுரிமைச் சின்னம் ஒன்று எம் கண்முன்னே மண்ணுக்குள் மறைந்து போவதை வேடிக்கை பார்க்கும் நிலையிலும் இல்லை என்றே நம்புகின்றோம்.

image3.jpeg

ஏனெனில் கடந்த முப்பது ஆண்டுகால அனர்த்தத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய போது தமது இருப்பிடங்களைக் காட்டிலும் தமது வழிபாட்டு ஆலயங்களை மீளுருவாக்கம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த பெருமைக்குரியவர்கள்.  இது மதத்தின் மீது எமது மக்களுக்கு உள்ள அதித நம்பிக்கையைக் காட்டுகின்றது. ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் ஒரு வழிபாட்டு ஆலயமாக மட்டும் பார்க்க முடியவில்லை.

பலதரப்பட்ட மக்களின் பார்வையில் இவ்வாலயம் இலங்கையில் உள்ள தேசிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக நோக்கப்படலாம், ஆனால் இந்து மக்களைப் பொறுத்தவரை இவ்வாலயம் அவர்களின் எதிர்காலச் சந்ததியினரிடம் கையளிக்கப்பட வேண்டிய நம்பிக்கை நாற்று. அதற்கும் அப்பால் இலங்கையில் இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை அடையாளப்படுத்தும் விலை மதிக்க முடியாத மரபுரிமையின் அடையாளம்.

இம்மரபுரிமைச் சின்னங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களின் வரலாறும், பண்பாடும் பொதிந்து காணப்படுகின்றது. ஆகவே இவ்வாலயத்தை மீட்டெடுத்து, மீளுருவாக்கம் செய்து, பாதுகாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும். இப்பணி அரசியல், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மையை உரியவர்களிடம் கொண்டு செல்வதற்கு எமது தகவல் தொடர்புச் சாதனங்கள் தமது பணியை தொடர்ந்தும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் எமக்குண்டு.

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
வரலாற்றுத்துறை
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

 

https://www.ilakku.org/அழிவடைந்து-கொண்டிருக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கல் புதிதாக கட்டுவதை விட, இவற்றை பாத்துகாப்பது மிக, மிக முக்கியம்.

இல்லாவிட்டால், சிங்களம் இதை விகாரை என்று கொண்டாடும்.

இதில் சமயத்தை பாதுகாப்பதை விட, எமது வரலாறும், தொன்மையுமே இதை பேணுவதால் பாதுகாக்கப்படும்.

இதை தமிழ் கிறீஸ்தவர்களுக்கு கூட பங்கு இருக்கிறது 

நேரடி அனுபவமாக சொல்கிறேன். சிங்களவர் அனைவருமே (ஓர் சிறு பகுதியை  தவிர), தமிழரின் தொல்லியல், வரலாற்று சான்றுகளை ஒன்றில் தாமதாக்குவதற்கு, அல்லது சுவடு  தெரியாமல் அழிப்பததில் முனைப்பாக  இருக்கிறார்கள்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.