Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்குடாநாட்டு இடம்பெயர்வு என்பது ஒரு சம்பவமாக கடந்து செல்லமுடியாத வரலாறு-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்குடாநாட்டு இடம்பெயர்வு என்பது ஒரு சம்பவமாக கடந்து செல்லமுடியாத வரலாறு-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

 
refugee_day_-1.jpg
 310 Views

மியான்மார் என்கிற பௌத்த தேசத்தின் இன அழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல இலட்சம் ரோகிங்கியா இன முஸ்லீம் மக்கள் பங்காளாதேசத்திற்கு இடம்பெயர்ந்த சம்பவம், இன்று மியான்மார் மீது இன அழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் வரை சென்றுள்ளது.

சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இடம் பெற்றுவரும் போரில் ஏறத்தாள 12 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், இந்த இடப்பெயர்வானது உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களை பராமரிப்பதற்கு 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் தேவை என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

Jaffna-Peninsula-consisting-four-sub-reg

இந்த சம்பவங்களின் முக்கியத்துவம் என்பது அந்த நாடுகள் சார்ந்துள்ள பூகோள அரசியல் நலன்சார்ந்ததாகும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏறத்தாள 5 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்த நாளும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் நாளாகும்.

ஓக்டோபர் 17 ஆம் நாள் சமாதானத்திற்கான போர் என்ற போர்வையில் சிறீலங்கா அரசின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்காவினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் நடவடிக்கையின் போது, நடத்தப்பட்டக் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள், வான் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து உயிர்தப்பவும், முன்னேறிவரும் சிங்கள படையினரின் இனப்படுகொலையில் இருந்து தப்பிப்பதற்காகவும் இரவோடு இரவாக தமிழ் மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு தென்மராட்சி, வன்னி மற்றும் வடமராட்சி நோக்கி நகர்ந்த சம்பவமானது உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இடிமுழக்கம், முன்நோக்கி பாய்தல் போன்ற நடவடிக்கைகளில் பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும், சூரியக்கதிர் நடவடிக்கைளில் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டதும், தமிழ் மக்களை மிகுந்த அச்சத்திற்குள் தள்ளியிருந்தது. எனவே தான் மிகப்பெரும் இனப்படுகொலைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், இன்று ரோகிங்கியா மக்கள் பங்களாதேசத்திற்கு இடம்பெயர்ந்தது போல, உள்நாட்டுக்குள் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர்.

தமிழ் மக்களின் இந்த இடம்பெயர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அன்றைய செயலாளர் நாயகம் பூட்ரரஸ் பூட்ரரஸ் காலி அவர்கள் தனது கவலையை தெரிவித்திருந்ததுடன், மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் வழமைபோல இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை தெரிவித்து, ஊடகத் தடைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு தெரியாமல் மறைத்துவிட்டது சிறீலங்கா அரசு.

ஐ.நா செயலாளர் நாயகத்தின் கருத்தை தொடர்ந்து பெருமளவான அனைத்துலக ஊடகவியலாளர்கள் கொழும்புக்கு வருகைதந்து வடபகுதி நோக்கி செல்ல முற்பட்டபோதும், அவர்களை தடுத்த சிறீலங்கா அரசு, மனிதாபிமான தொண்டு நிறுவனங்களுக்கும் தடைகளை விதித்திருந்தது.

Jaffna-Exodus-3.jpg

இடம்பெயர்ந்த மக்கள் ஒரு இலட்சம் பேரே என அன்றைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்ததுடன், ஐ.நா செயலாளருக்கும் தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாது குறைந்தளவான நிவாரணப் பொருட்களையே சிறீலங்கா அரசு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் யாழ் குடாநாட்டு மக்களில் நான்கில் மூன்று பகுதி மக்கள் இடம்பெயர்ந்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பிரதிநிதி பீற்றர் மெஜீர் தெரிவித்திருந்தார்.

அன்று சிறீலங்கா அரசின் பொய்களை நம்பியது போல, பாவனை செய்த அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போதும் தொடர்ந்திருந்தது. சிறீலங்கா அரசின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கியிருந்ததுடன், ஒரு இனஅழிப்புக்கும் அவர்கள் துணைபோயிருந்தது முள்ளிவாய்க்காலில் மட்டும் தான் இடம்பெற்றது அல்ல, 1995 ஆம் ஆண்டும் அனைத்துலக சமூகம் தனது கண்களை இறுக மூடியே இருந்தது.

2000 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டை கைப்பற்ற விடுதலைப்புலிகள் முனைந்தபோது அங்கு சிக்கியிருந்த 40,000 படையினரை காப்பாற்ற இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டிபோட்டு களமிறங்கியது போல 5 இலட்சம் மக்களை காப்பாற்றவோ அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்கவோ எந்த நாடும் முன்வரவில்லை.

சிறீலங்கா படையினரின் தாக்குதல்களினால் காயப்பட்டும், இடப்பெயர்வினால் ஏற்பட்ட சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளினால் நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டும் பெருமளவான மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டபோதும், அவர்களை பரமரிப்பதற்கு போதிய மருத்துவ வசதிகளும் இருக்கவில்லை.

இடம்பெயர்ந்த மக்களில் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் கடுமையான மழை நேரத்திலும் தங்குமிடமின்றி வெளியான இடங்களில் துன்பங்களுக்கு மத்தியில் தங்கியிருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெராட் பெய்றிநெட் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறீலங்கா அரசின் கடுமையான அடக்குமுறைகளுக்கு அஞ்சிய ஊடகவியலாளர்கள் மக்கள் பட்ட அவலத்தைக் கூட புகைப்படங்களாக பதிவு செய்ய தவறியிருந்தனர். அங்கு என்ன இடம்பெறுகின்றது என்பதை அனைத்துலகம் அறிவதை சிறீலங்கா அரசு தனது முழுமையான வளங்களையும் பயன்படுத்தி தடுத்திருந்ததாக தான் உணருவதாக மேற்குலக தொண்டுநிறுவன அதிகாரி ஒருவர் நவம்பர் 5 ஆம் நாள் வெளிவந்த த ரொரொன்டோ ஸ்ரார் என்ற பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான தமிழீழ விடுதலைப்போர் என்பது பல பரிணாமங்களினூடாக பயணித்து வருகின்றது. அதில் மக்களும் விடுதலைப்புலிகளும் இணைந்து பயணித்து வந்திருந்ததே வரலாறு. எனவே தான் குடிக்க நீரோ, உணவோ இன்றி பல மைல்கள் நடந்து நாவற்குழிப் பாலத்தை கடந்த ஒவ்வொரு மக்களின் கால்களும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பங்களிப்பை வழங்யிருந்ததாக விடுதலைப்புலிகளின் மூத்த கவிஞர் புதுவை இரத்தினதுரை அன்று தெரிவித்திருந்த கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது விடுதலைப்போரில் மக்களும், போராளிகளும் கொடுத்த விலை என்பது மகத்தானது என்பதுடன் மக்கள் அனுபவித்த துன்பங்களும் அதிகமானவை. அது பல வரலாறுகளை சுமந்தே செல்கின்றது. அந்த வரலாற்றில் யாழ்குடாநாட்டு இடப்பெயர்வு என்பதும் முக்கியமானது.

ஆனால் நாம் வரலாறுகளை வெறுமனவே கடந்து செல்லாது, அது ஏற்பட்டதன் காரணம், அது ஏன் அனைத்துலக சமூகத்தின் கனவத்தை ஈர்க்கவில்லை, அதனை சிறீலங்கா அரசு எவ்வாறு கையாண்டது, அன்றும் இன்றும் பூகோள அரசியலின் எமது முக்கியத்துவம் என்ன? 1995 ஆம் ஆண்டு ஏற்பட்டதே 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலிலும் ஏற்பட்டது என்றால் அது தொடர்வதற்கான காரணம் என்ன என்பதை அறிவதும், எமது வரலாறுகளின் பாடத்தை இளைய சமூதாயத்திடம் தெளிவான சிந்தனையுடன் விட்டுச் செல்வதும் தான் நாம் தொடர்ந்து முன்னெடுத்துவரும் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.

உதாரணமாக இஸ்ரேலினால் இடிக்கப்பட்ட வீடுகளின் சாவிகளை இளையசமூதாயத்திடம் கையளிக்கும் போராட்டம் ஒன்றையும் பலஸ்தீன மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் மூலம் தான், தாம் எதிர்கொண்ட இனப்படுகொலையின் வடுக்களை நினைவில் நிறுத்துவதுடன், விடுதலைக்கான அவசியத்தையும் தமது அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்ல முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

https://www.ilakku.org/யாழ்குடாநாட்டு-இடம்பெயர/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30.10.1995 அன்று மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பு

Jaffna-Displacement-1995.jpg

30.10.1995 அன்று “மக்கள் அளித்த மாபெரும் பங்களிப்பு”…

25 வருடங்களுக்கு முன் (1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு.

தமிழீழ மக்களின் சமூக, கலாச்சார பொருளாதார மையமாகவும், தளராத கோட்டையாகவும் பொங்கிப் பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்த யாழ்ப்பாணத்தில், மண்ணும் மக்களும் எனப் பிணைந்து போயிருந்த உறவின் தொப்புள்க்கொடியறுத்து, ஐந்தரை இலட்சம் மக்களை ஓரிரு இரவில் குடிபெயரவைத்தது சிங்களத்தின் “சூரியக்கதிர்.”

நல்லைக்கந்தன் முற்றத்திலிருந்து, செம்மணி வெளிநிறைந்து… நாவற்குழிப் பாலம் நிரம்பி இறுக்கி, முட்டி மோதியது மனிதத் தலைகள். ஒரு காலடி எடுத்துவைத்து மறு காலடி எடுத்துவைக்க குறைந்தது 30 நிமிடங்கள் பிடித்தது. இது மிகையல்ல. நிஜம். ஏனெனில் இம் மக்கள் வெள்ளத்தில் நானும் ஒருவன்.

மழை பெய்து கொண்டிருந்தது. “ஆட்லறி” எறிகணைகள் மக்களைக் கடந்து சென்று அருகில் விழுந்து வெடித்துக்கொண்டிருக்க, மேலே எதிரியின் “புக்காரா” குண்டு வீச்சு விமானம் வட்டமடித்து, எந் நேரத்திலும் குண்டுகளை வீசக்கூடியதாக பறந்து இடங்களிலேயே விழுந்து இறந்து கிடக்க, பிரசவங்களும் அவ்விடத்திலேயே நிகழ்ந்தேறின. பிறந்த குழந்தையும் உப்புநீரில் குளித்து, மழை நீரைக் குடித்து பாலம் கடந்தது, தமிழ் மானம் உயர்ந்தது. இது எனது அனுபவத்தினூடான மனப்பதிவின் சில துளிகள் மட்டுமே. இன்னும் எத்தனையோ சொல்லாணாத் துன்பங்கள் அனுபவித்து தமது நிலபுல சொத்து சுகங்களைக் கைங்களிவிட்டு உடுத்த உடுப்புடன் கையில் எடுத்த பொருட்களுடன், எதிரியின் எண்ணத்துக்கு வேட்டு வைத்து, தம் மண்ணைவிட்டு வெளியேறி விடுதலைக்கு உரம் சேர்த்தனர் எம் மக்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூட அந்த வரலாற்று இடப்பெயர்வு குறித்து கூறும்போது, “இது எம் மக்கள் அளித்த ஒரு உயர்ந்த பட்ச பங்களிப்பு. அது எங்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து லட்சம் மக்களும் செய்த ஒரு பெரிய பங்களிப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“யாழ்ப்பாண மக்களை விடுதலை செய்யப்போகிறோம். அவர்களுக்கு விமோசனமளிக்கப்போகிறோம், அவர்கள் விடுதலைப் புலிகளின் பிடிக்குள் இருந்து கஸ்ரப்படுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதே எமது பணி” எனக் கூறிக்கொண்டு 40.000 படைகளை களத்தில் இறக்கி, பன்மடங்காக ஆயுத பலத்தைப் பெருக்கிக் கொண்டு “சூரியக் கதிர்” படைநடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியது. இருந்தும் என்ன பயன்? சிறீலங்கா அரசின் 2000 ஆண்டு கால வரலாற்றில் முதன்முலாக ஜனசஞ்சாரமற்ற, சுடுகாடுபோல காட்சியளித்த வெறும் நிலப்பரப்பை மட்டுமே பிடிக்க முடிந்தது. “நாம் சுதந்திரத்துக்காக போராடுகின்ற மக்கள் சோத்துக்காக வாழ்பவர்களல்ல” என சிறீலங்கா அரசுக்கு பறைசாற்றிய எம் மக்கள் புலிகளை ஆதரித்து அவர்கள் பின்னே சென்றனர். முகத்தில் கரி பூசிக்கொண்டது சிங்கள அரசு. விடுதலைப் புலிகளும் மக்களும் ஒன்றே என்றும், தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக சிங்கள அரசை வெறுக்கின்றார்கள், விடுதலைப் புலிகளையே தமது தலைமையாக ஏற்றுக்கொண்டு செயற்படுகிறார்கள் என்பதையும் முழு உலகிற்குமே தெரியப்படுத்தியது இந்த மாபெரும் வரலாற்று இடப்பெயர்வு.

யாழ் குடாவில் இன்றுவரை ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து வருகின்றனரே என சிலர் நினைக்கக்கூடும். ஆனால் அன்றைய தினத்தில் தரைவழியாக ஒரு ஒற்றையடிப் பாதையாகிலும் அம் மக்களுக்குக் கிடைத்திருக்குமாயின்… இன்று வரை யாழ்ப்பாணத்தில் இராணுவம் “இலையான்” தான் கலைத்துக் கொண்டிருந்திருக்கும் என்பது அவர்கள் அறியவேண்டிய உண்மையாகும். ஒரு வேளை அப்படி நடைபெற்று இராணுவம் மட்டுமே யாழ் குடாவில் இருந்திருக்குமாயின், எப்பொழுதோ இலகுவாக, எந்தச் சிக்குலுமின்றி, விடுதலைப் புலிகள் யாழ் குடாவை மீட்டிருப்பார்கள் என்பது உறுதி.

இப்படை நடவடிக்கையானது சிங்கள அரசின் அரசியல், தந்திரோபாயத்துக்கும், நோக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய தோல்வி என்பதை உலக நாடுகளே சுட்டிக் காட்டியிருந்தன. தம்மிடம் இருந்த மிகப் பெரிய பலமான ஆட்பலத்தை வைத்துக் கொண்டு, ஆயுத பலத்தின் உதவியுடன் விடுதலைப் புலிகளை வலிந்து சண்டைக்கிழுத்து அவர்களைப் பலவீனப்படுத்தி விடுவதென்று சமரை ஆரம்பித்த சிங்களப் படைத்தலைமை, சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, யாழ்ப்பாணத்தைவிட்டு புலிகள் தந்திரோபாயமாகப் பின்வாங்கி விடுவார்கள் என்று. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இந்த 5 வருட காலப்பகுதியில் பேரினவாத அரசால் எதனைச் சாதிக்கமுடிந்தது ஒன்றுமே இல்லை.

யாழ் குடாவை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்த பின்னர் 1995இல் தனது மாவீரர்நாள் உரையின்போது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூறிய விடயமொன்றை இங்கு குறிப்பிடுவது இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைவதுடன், அவரது நுட்பமான திட்டமிடலுக்கும், தீர்க்கதரி சனத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது திண்ணம். அது யாதெனில் “பெரும் படையைத் திரட்டி நிலத்தைக் கைப்பற்றுவது கடினமான காரியமல்ல. ஆனால் கைப்பற்றிய நிலத்தில் காலூன்றி நிற்பது தான் கடினமான காரியம். உலகெங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்கொண்ட வரலாற்று உண்மையிது. இந்த வரலாற்றுப் பாடத்தை சிறீலங்கா இராணுவம் படித்துக் கொள்வதற்கு வெகுகாலம் செல்லாது” என்பதே.

இவரது ஐந்து வருடத்திற்கு முந்தைய கூற்று, இன்று செயல் வடிவம் பெற்று, பெரு வெற்றி கண்டு வருவதானது “புலிகள் சொன்தைச் செய்பவர்கள்” என்பதனை கட்டியங் கூறி நிற்கிறது.

நிலங்களை இழப்பதும், பின் அவற்றை மீட்பதும் உலக விடுதலைப் போராட்டங்கள் அனைத்துமே சந்தித்த, சந்திக்கின்ற ஒரு பொதுவான நிகழ்வுதான். 1943இல் “மா வோசேதுங்”கின் “செஞ்சேனைப்” படைகள் “யேனான்” எனும் பகுதியைவிட்டுப் பின் வாங்கிப் பின் அதை மீட்டெடுத்த வரலாற்று வெற்றி, 1974இல் எரித்திரிய விடுதலை இயக்கம் “அஸ்மாறா” எனும் தனது தலை நகரை இழந்து, சில வருடங்களின் பின் மீண்டும் அதை மீட்ட வரலாறு. வியட்நாம் விடுதலைப் போரில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்பு, நில மீட்புச் சம்பவங்கள் போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள் இதற்கு உதாரணம்.

 
 
 

இந்த உதாரணங்களின் அடிப்படையில் இன்று யாழ் மண்ணை புலிகளின் ஓயாத அலைகள் மீட்டெடுத்து வருவதானது, 5 வருடங்களுக்கு முன்பு தமது மண்ணுடனான உறவின் தொப்புள்க்கொடியறுந்து, இன்றுவரை நெஞ்சில் வலிசுமந்து வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு மட்டுமன்றி, முழு ஈழத்தமிழனுக்குமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுக் கொடுக்கின்ற இனிப்பான செய்தி மட்டுமல்ல, உடுத்த உடுப்புடன், எங்கே செல்வது, எங்கே தங்குவது, எதை உண்பது என்று எதுவுமே தெரியாத நிலையிலும், விடுதலைப் புலிகளின் சொல் கேட்டு அவர்களின் பின்னே சென்று போராட்டத்துக்கு வலுச்சேர்த்த மக்களுக்கு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தன் நெஞ்சு நிறைந்து கொடுக்கின்ற பரிசாகவும் அமையும்.

இந்தப் பரிசுகளில் ஒன்றுதான் தமிழீழத்தின் தொண்டக்குள் சிக்கிய “முள்” ஆக இருந்த ஆனையிறவு, இன்று பகைவனின் உச்சியில் அறைகின்ற ஆணியாக மாறியிருப்பதும் ஆகும்.

யாழ் மண்ணை ஆக்கிரமித்து, விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்திவிடலாம் எனப் பகற்கனவு கண்ட சிங்கள அரசுக்கும், அதன் படைகளுக்கும், இன்று அந்த மக்களின் துணையுடனேயே பிரபாகரனின் சேனைகள் சென்று புதைகுழி அமைத்து வருவது உலக வரலாற்றில் பதியப்படவேண்டிய இன்னொரு அத்தியாயமாகும். தமிழ் மக்களை மீட்கவென வந்திறங்கிய சிங்களப் படைகள், இன்று மீண்டு செல்ல முடியாது விழிபிதுங்கி நிற்பதானது இன்று உலகறிந்த பரிதாபம்.

தமிழ் மக்களின் நீண்ட விடுதலைப் பயணமானது பல படைகளைத் தாண்டி இன்று வெற்றிப் படிகளில் முன்னேறி வருகிறது. எதிரி ஆக்கிரமித்திருந்த பெரும் பிரதேசங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய வரலாற்று இடப்பெயர்வை நினைவு கூர்ந்து நிற்கின்ற நாம், இவ் வேளையில் ஒன்றைமட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

“ஈழத் தமிழனுக்கு இனிமேலும் குடிப்பெயர்வு என்பதே இல்லை@ எல்லாமே குடிபுகும் விழாக்கள்தான்.”

எழுத்துருவாக்கம்: மொறிஸ் தர்மபாலன்.
நன்றி – எரிமலை இதழ் (ஐப்பசி 2000).

 

https://thesakkatru.com/jaffna-displacement-1995/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.