Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும்

 

The-Woman-Must-Prepare-Herself-to-get-Ri

பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும்.

எமது தேசநிர்மாணிப்பில் தமிழீழ நீதிமன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு தனி அத்தியாயமாக விளங்குகின்றன. இவை மக்களின் பிரச்சினைகளை அணுகி ஆராய்ந்து, நியாயமான தீர்ப்புக்களை வழங்குவதைக் குறிக்கோளாகக்கொண்டு, எமது தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டு எமது சமுதாயத்தின் வளர்ச்சியின் உயிர் நாடியாய் விளங்கும், இந்த நீதிமன்றங்களின் தோற்றமானது, எமது சமூகத்தில் புரையோடிப்போன பல சிக்கல்களைத் தீர்த்து வைத்துள்ளது. தற்போது உள்ள நெருக்கடியான நிலைக்கு ஏற்புடைய நிர்வாக ஒழுங்குகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியினுள்ளே தீர்த்து வைக்கப்படுகின்றன. வழக்குகள் இழுபறி நிலையில் காலம் தாழ்த்தப்படுவதில்லை. இந்த ரீதியில் இந் நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஒரு வருடத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை முப்பத்தொன்பதாயிரத்து அறுபத்தி மூன்று. இதில் தீர்க்கப்பட்ட வழக்குகள் ஆயிரத்து அறுநூற்றுப் பதின்மூன்று. இவற்றுள்ளும் மேன்முறையீடு செய்யப்பட்ட நாற்பத்தி ஏழு வழக்குகளில் முப்பது வழக்குகள் தீர்க்கப்பட்டன. இவ் வழக்குகளில் முன்னூற்று அறுபத்தைந்து வழக்குகள் பெண்கள் சம்பந்தப்பட்டவை. இங்கு நாம் குறிப்பிட முனைகின்ற விடயம், பெண்கள் தொடர்பான வழக்குகள் பற்றியவையாகும்.

எமது போராட்டம் இந்த மண்ணின் விடுதலையை வென்றெடுக்கின்ற அதேநேரம், சமுதாய விடுதலையையும் வென்றெடுக்க வேண்டும் என்பதே தலைவரின் கனவு. இந்த சமூக விடுதலையின் முக்கிய ஓர் அங்கமாக பெண் விடுதலை அமைகிறது. பெண்கள் விடுதலை பெற்றால் மாத்திரமே, ஒரு இனத்தின் முழுமையான விடுதலையைக் காணமுடியும். எமது சமுதாய அமைப்பில் நிலவிவரும் ஒடுக்குமுறை அழுத்தங்களிலிருந்து பெண்ணினம் விடுதலை வேண்டி நிற்கிறது. முதலில் பெண்கள் தமக்கு எதிராக தலையெடுத்து நிற்கும் ஒடுக்கு முறையின் தன்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். தனது சீரழிந்த வாழ்க்கை நிலையைச் சீரமைத்துக் கொண்டு பெண்ணினம் விழிப்புக் கொள்ளவேண்டும். தனக்கு விதிக்கப்பட்ட விதி என்றும், கர்மவினை என்றும் தங்கள் துன்பத்தை மன ஆழத்துக்குள் புதைத்து வைப்பதனால் துன்பங்கள் தீரப்போவதில்லை.

எனவே விடுதலைக்காகப் போராடும் எம் இனத்தின், பெண்களின் வளர்ச்சி நோக்கிய பார்வை முக்கியமானது. இந்த வகையில் பெண்களின் சிக்கல்களை நுணுகி ஆராய்ந்து அவற்றுக்கான காரணிகளைக் கண்டறிந்து களையமுற்படுவது புதிய புரட்சிகரமான சமுதாயப் பிறப்புக்கு வழிவகுக்கும்.

நீதிமன்றங்கள் ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை வந்த, பெண்கள் சம்பந்தமான வழக்குகளினை ஆராயுமிடத்து அவை பெரும்பாலும் குற்றவியல் தொடர்பான வழக்குகளாகக் காணப்பட்டன. இந்த வழக்குகள் எத்தனையோ பெண்களின் கண்ணீர் வாழ்க்கையையும், ஆழமான சோகங்களையும் தாங்கி நிற்கின்றன. குடும்ப வாழ்க்கையில் பரஸ்பரம் புரிந்துணர்வற்ற நிலையையும், வறுமையும், சமூக வளர்ப்புச் சூழ்நிலையையும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆணாதிக்க சமுதாயமும் அநேக பெண்களின் வாழ்வில் துன்பங்களைச் சேர்த்திருக்கின்றது. இந்த வழக்குகளை ஆராயும்போது நாம் ஒன்றைமட்டும் தெளிவாகப் பார்க்கலாம். அதாவது அறியாமை இருளும், போதிய கல்வியறிவற்ற நிலையும் இன்றும் பெண்களை இருட்டில் வாழவழிவகை செய்திருக்கிறது – பெண்களை சிக்கல்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய தன்மையோ, தன்னம்பிக்கையோ அற்ற நிலையில் வளர்த்த விதம், எவ்வளவு தூரம் அவளது வாழ்க்கையைப் பாதிப்படைய வைத்திருக்கிறது என்பது ஆழமான சமுதாய நோக்கோடு ஆராயப்பட வேண்டிய ஒன்று. நகர்ப்புறச் சூழ்நிலையில் பெண்களின் கல்வியறிவு வீதாசாரம் ஒரளவு உயர்ந்த நிலையிலேயே உள்ளது. என்று கூறிக்கொண்டாலும், இன்றும் கிராமத்து மூலைகளில் பெண்களின் அழுகுரல்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றன.

இங்கு நாம் ஆராய்ந்த இக்குற்றவியல் பிரிவில் தாபரிப்பு வழக்குகள், காதலித்துப் பெண் கைவிடப்பட்ட வழக்குகள், பெண்ணைத் தாய்மை அடையச் செய்து கைவிட்ட வழக்குகள், சமுதாயச் சீர்கேட்டு வழக்குகள், மணமுறிவு வழக்குகள் மற்றும் பாலியல் வல்லுறவு வழக்குகள் என்பன அடங்கியிருக்கின்றன. இத்தகைய வழக்குகளில் அநேகமானவை தாபரிப்புக் கோரும் வழக்குகளும், காதலித்துப் பெண்ணைக் கைவிட்ட வழக்குகளுமாகும். யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் இத்தகையவையாகும். அவற்றுள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகளில், திருமணம் செய்து பெண்ணைக் கைவிட்டநிலையில், அப்பெண் ஆணிடமிருந்து தாபரிப்புக்கோரும் வழக்குகள் கூடுதலானவை. சமூகச்சீர்கேட்டு நடவடிக்கை தொடர்பான வழக்குகள் பெரும்பாலும் இடம் பெயர்ந்த மக்கள் வாழும் தங்ககங்களை ஒட்டிய பகுதிகளிலிருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இங்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்குகளில் ஒப்பீட்டு ரீதியில் ஆண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விட பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகம். இந்த வழக்குகள் எத்தனையோ பெண்களின் மன உடைவுகளையும், மன உளைச்சல்களையும் தாங்கி நிற்கின்றன. ஆணை மனப்பூர்வமாக விரும்பி, அவனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை ஒருபுறம், தனது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன என்று, கணவனால் தள்ளப்பட்ட தாய்மாரின் சோகங்கள் மறுபுறமாக பெண்களின் துயரங்கள் பரந்து காணப்படுகின்றன. இன்றும் தங்களுடைய துன்பங்களை வெளியிலே சொல்ல முடியாதவர்களாக, வெளியே தெரிந்தால் சமூகம் தன்னை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்குமே என்று ஒதுங்கி மூலையிலே கண்ணீர் வடிக்கும் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிலையில் தங்கள துயரங்கள் வெளியில் கொண்டுவரப்பட்டால் சமுதாயம் திருந்தும். தமக்கு நீதி கிடைக்கும் என்று பெண்ணினம் எழுந்து விட்ட நிலையும் வந்துவிட்டது. அதற்கு நீதிமன்றங்களிற் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சான்றுகளாக இருக்கின்றன.

அண்மையில் ஒரு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிறப்பில் வாய் பேசாத ஊமைப்பெண் அவள் கையில் இரட்டைக் குழந்தையுடன் பாதிக்கப்பட்டவளாக வந்தாள். அப் பெண்ணை விரும்பி ஏமாற்றியவன், அவளை இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாக்கி விட்டு வேறு திருமணம் செய்துவிட்டான். தற்போது அவன் குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என்றும், தான் அப்பெண்ணை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளான். பெண் தரப்பில் சாட்சிகள் அற்றநிலை. வாய் பேசமுடியாத பெண் என்றமையால் இதற்கான மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி காதலித்தவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகள் பல வந்திருக்கின்றன.

இவற்றைப் பொறுத்தவரை, எமது சமூக அமைப்பு மரபுகள் பெண்ணை மட்டும் ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டியவளாகப் பார்க்கிறது. அவள் தவறுதலாகவோ அன்றி சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாகவோ தவறிழைத்தால் சமூகம் அவளை முற்றுமுழுதாகவே புறக்கணித்து, ஆண் குற்றவாளியாக இருப்பினும் கூட பெண்ணின் நடத்தையே சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகிறது. சமூகத்தில் “ஆண் தவறிழைத்தால் சம்பவமாகவும், பெண் தவறிழைத்தால் சரித்திரமாகவும் பேசப்படும்” மரபே உள்ளது. காலங்காலமாக இருள் படிந்து போன எமது சமுதாயம், பெண் என்பவள் முள்ளின் மேல் நடக்கவேண்டும் என்றே எதிர் பார்க்கிறது. பெண்கள் படிக்கிறார்கள், எல்லா உத்தியோகத்திலும் இருக்கிறார்கள் என்பதால் எமது சமூகம் முன்னேறிவிட்டது என்று கூறினாலும், இன்றும் நாலு சுவருக்குள் தங்கள் துன்பங்களை ஆழத்துள் புதைத்துக் கொண்டு மௌனியாக இருக்கும் பெண்கள் ஏராளம்.

“எனது பிரச்சினை என்னோடு, எனக்கு இது தான் விதிக்கப்பட்டது” என்று நாளும் பொழுதும் கண்ணீர் சிந்தும் பெண்கள் அனேகம். அதைவிட பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிமன்றங்கள் ஏறுவதை ஏதோ செய்யக்கூடாத செயல் என்று ஒதுங்கிப்போவதும் நாம் வாழ்க்கையில் காணும் ஒன்று. தங்களது பிரச்சினைகள் பெரிதாக உருவெடுத்த பின்னும் “தாம் செத்தாலும் பரவாயில்லை, ஆனால் நீதிமன்ற வாசற்படியில் ஏற மாட்டோம்” என்று பிடிவாதமாக நிற்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைவிட நீதிமன்றங்களுக்கு நாங்கள் போகமுடியாது என்ற அறியாமையில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.

அதற்கு பழைய தேசவழமைதான் காரணம். முன்னைய ஒல்லாந்தர் காலத் தேசவழமையில் ஒரு பெண் கணவனின் அனுமதியின்றி வழக்கல் தாக்கல் செய்யவோ, ஒரு சாட்சியாக நிற்கவோ முடியாது. இதன் காரணமாக அநேக பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாது மனமுடைந்த நிலையிலுள்ளனர். ஆனால் தமிழீழ தேசவழமைச் சட்டம் இந்த நடைமுறையில் புதிய சீர் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதற்கு யாருடைய அனுமதியையும் வேண்டி நிற்கத் தேவையில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளைக் கண்டு அனுபவித்து, மனரீதியாகப் பாதிக்கப்படுகின்ற நிலைமையைத் தவிர்த்து தங்கள் பிரச்சினைகளை வெளிக் கொணர வேண்டும். அதற்கு எமது நீதிமன்றங்கள் நியாயமான தீர்ப்புக்களை வழங்கும்.

யாழ். மாவட்டத்திலுள்ள நீதி மன்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிற் பல தாபரிப்பு வழக்குகளாக இருக்கின்றன. தாபரிப்பு என்னும்போது போதிய வசதிகள் படைத்த ஒருவன், தனது மனைவியைப் பராமரிக்கத் தவறினால் அல்லது சட்டப்படியான திருமணத்தின் விளைவாகவாயினும் அல்லது வேறுவிதமாகவாயினும் தனக்குப் பிறந்த பிள்ளையைப் பராமரிக்கத் தவறினால், அந்தத் தந்தையிடமிருந்து பராமரிப்புக் கோரும் உரிமை மனைவிக்கு உண்டு. இங்கு பருத்தித்துறை நீதிமன்றில் பதிவாகியுள்ள வழக்குகள் அனைத்தும் தாபரிப்பு வழக்குகளாகவே இருந்தன. கணவனாற் கைவிடப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இங்கு தாபரிப்புத் தொகை தீர்ப்பாக வழங்கப்பட்டது.

அதாவது இங்கு பெண்களைத் திருமணம் செய்து குழந்தைகள் உள்ள நிலையிலும்கூட, குடும்பப் பிணக்குகள் காரணமாகப் பிரிந்து வாழும் குடும்பங்கள் அநேகம். இதில் மனைவி இருக்க வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து, தமிழீழத்தை தாண்டி வெளியே சென்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்கள் அனேகம். பெண்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்தபோது, ஒன்று மட்டும் அங்கு தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறு இருந்தது. அதாவது இப்பிரச்சினை மிகவும் அடிமட்ட நிலையிலேயே பரவலாகக் காணக்கூடியதாக இருந்தது. ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் வயதெல்லை கூடுதலாக பதினெட்டு வயதுக்குள்ளேயே காணப்பட்டன. அதாவது இவர்கள் சிறிய வயதுக்காரராகவே காணப்பட்டனர். எமது தமிழீழ தேசவழமைச் சட்டத்தின்படி, பெண்ணுக்கான சிற்றகவை வயது பதினெட்டுக்கு உட்பட்டும் மேற்றகவை வயதாக பதினெட்டுக்கு மேலும், அதேவேளை ஆணுக்கான சிற்றகவை வயது இருபத்தியொன்றுக்கு உட்பட்டும் மேற்றகவை இருபத்தியொன்றுக்கு மேற்பட்டதாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

காதலனாற் கைவிடப்பட்ட பெண்களின் வழக்குகளில் அநேகமானவை, இந்தச் சிற்றெல்லைக்குள் உட்பட்டதாகவே காணப்பட்டன. இவை வாழ்க்கையின் அடிப்படையான தன்மைகளை அறியாத குறிக்கோளற்ற காதல்களும் அதனால் ஏற்பட்ட முறிவுகளுமாகும். ஆனால் இந்தக் காதல் முறிவுகளில் பாதிக்கப்படுபவள் பெண் என்று அறிந்தும் இத்தகைய பெண்கள் இவற்றில் மூழ்கி அமிழ்ந்து போவதாக ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சாதாரணமாக ஏற்படும் பாலினக் கவர்ச்சிகளினால் ஒருவனைப் பற்றியும் தனது எதிர்காலம் பற்றியும் தொலைநோக்கோடு சிந்திக்காத இவர்கள் விடும் தவறுகள், பெண்களையே பாதித்து நிற்கின்றது என்பது முற்றுமுழுதான உண்மை. எமது சமுதாய அமைப்பும் மரபுகளும் பெண்களினது நடத்தைகளையே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணக்கு நியாயமான தீர்ப்புக்கள் வழங்கி பெண்களை விழிப்புணர்வுக்குத் தூண்டுவதற்குப் பதிலாக காலமெல்லாம் ‘தவறிழைத்தவள்’ என்ற தண்டனையைக் கொடுத்து விடுகின்றது. ஆண் தவறிழைத்தால் அவனது தவறுகள் சில காலங்களுக்குள் மறைந்து விடும் படியாக, ‘இந்தச் சேற்றுக்குள் கால் வைத்து அந்தக் குளத்தில் கழுவிவிடும்’ தன்மையாக அதிலிருந்து மீட்டு விடுகிறது. ஆனால் இவ்வாறு வாழ்க்கையில் ஏமாற்றப்பட்ட பெண்களோ அவளிடம் தவறு இல்லாதவிடத்திலும் கூட, வாழ்நாள் முழுவதும் ஒதுக்கப்பட்டவளாகிறாள். இதனால் எத்தனையோ பெண்கள் வாழ்வில் விரக்தியுற்று பலவிதமான உளவியல் தாக்கங்களை அனுபவிக்கிறார்கள். இவற்றிலிருந்து மீளமுடியாமல் தாங்கொணாத் துன்பங்களுக்கு தம்மை உட்படுத்துவதும், தற்கொலையில் முடிவதும் பரவலாக உள்ளது.

The-Woman-Must-Prepare-Herself-to-get-Ri

இதில் ஒன்றைப் பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும், இப்படியான பிரச்சினைகளிலிருந்து விடுபட பெண்கள் தம்மைத் தயார்ப் படுத்தவேண்டும். பெண்ணானவள் இந்தச் சமுதாயத்தின் வளர்ச்சியோடு தன்னை இறுகப்பிணைத்துத் தன்னைப் பலதுறையிலும் முன்னேற்றிக் கொள்ளவேண்டும். ஆழமான வாழ்க்கைக் கல்வி பெண்களுக்கு அவசியம். திருமணமே வாழ்க்கை என்ற நிலையை விட்டு வாழ்க்கையின் ஒரு அங்கமாக திருமணம், குடும்ப உறவுகளை வரையறுத்துக்கொண்டு குறிக்கோளோடு வாழவேண்டும். வாழ்வில் இலட்சியங்களையும், நோக்கங்களையும் வகுத்துக் கொண்டு அவற்றின் முன்னேற்றத்தில் அயராது உழைக்கவேண்டும்.

எல்லாவற்றிலும் மேலாக இனிவரும் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை, தன்னம்பிக்கை உடையவர்களாக சுயமான சிந்தனையாற்றல் உள்ளவர்களாக எப்பிரச்சினைகளுக்கும் முகங் கொடுக்கின்ற தன்மையுடையவர்களாக பெற்றோர்கள் வளர்த்தெடுக்க முனைதல் அவசியமாகிறது.

எழுத்துருவாக்கம்: தமிழீழத்திருந்து கொற்றவை.
நன்றி – களத்தில் இதழ் (30.12.1994).

 

https://thesakkatru.com/the-woman-must-prepare-herself-to-get-rid-of-the-problems/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இந்த நீதி மன்ற முயற்சியே, இவற்றை கங்காரூ நீதிமன்றம் என்று சர்வதேச சமூகம் சொன்னது. இதுவும் மிக முக்கியமான காரணம் சர்வதேச சமூகம் புலிகளுடன் முரண்பட்டதில்.


புலிகளின் நீதிபதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.  

நான் ஒரு முறை புலிகள் நியமித்த நீதிபதியின் வயதை 22 - 23 கேட்டு நம்பவில்லை, பின்பு தேடிப்பார்த்த போது அது உண்மை என்று தெரிய வந்தது.  அந்த நீதிபதியின் ஒரே ஒரு அனுபவம், புலிகளில் இணைந்து, களத்தில் நின்றது. அவர் பயிற்றுவிக்கப்பட்டு, நீதிபதி ஆக்கப்பட்டார் என்றும் அறிந்தேன்.  

நீதிபதிகள் ஒரு போதுமே பயிற்றுவிக்கப்பட்ட முடியாது.

நீதிபதிகள் என்பவர்கள் , முதலில் சட்டத்தரணிகளாக பல வழக்குகளை, அந்த நேரத்தில் இருந்த சமுதாய இயற்கை நீதி, நியாயாதிக அடிப்படையில் வழக்குகளை வாதாடி இருக்குறார்களா என்ற பல கோணங்களில் ஆராய்ந்தே, நீதிபதிகள் நியமன  விண்ணப்பம் திறக்கப்பட்டு, அதில் விண்ணவிப்பவர்களுக்கு மேலும் பல தகைமைகள், நேர்முகத் தேர்வு என்று வைக்கப்பட்டு நியமனம் வழங்கப்படும்.  

புலிகள் இதனால் இழந்தது, ஏற்கனவே இருந்த சட்ட அறிவும், அனுபவமும்.  

படத்தில் உள்ளவர்கள் நீதிபதிகளா அல்லது சட்டத் தரணிகளா? 

நீதிபதிகள் என்றால், எவரேனும் நம்பமாட்டார்கள்.

இதை இப்படி செய்யுமாறு  எவர் புலிகளுக்கு அறிவுரை வழங்கினார்களோ தெரியவில்லை.

இப்படி செய்ததன் மூலம், புலிகளின் தலைமையையும், பிரபாகரனையும் ஓர் விதமாக கொச்சைப்படுத்துதலுக்கு ஆளாக்கியுள்ளனர்.                

புலிகள் ஓய்வு பெற்ற  நீதிபதிகளை கொண்டு தொடங்கி  இருக்கலாம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.