Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லரசுகளை கையாள இராஜதந்திரமே தேவை-சிவசக்தி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வல்லரசுகளை கையாள இராஜதந்திரமே தேவை-சிவசக்தி ஆனந்தன்

 

இலங்கையை மையப்படுத்திய அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போட்டி வலுத்துள்ளது. இந்தப்போட்டி எதிர்வரும்காலத்தில் மிகவும் தீவிரமடைந்து தொடரத்தான் போகின்றது. ஆகவே இந்த நாடுகளை தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்டு இராஜதந்திர மூலோய வியூகங்களுடன் கையாள வேண்டும் என்பதே எமது கட்சியினது நிலைப்பாடாகவும் உள்ளது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ரொசான் நாகலிங்கத்திற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கேள்வி:- பத்துக்கட்சிகளின் கூட்டும் அடுத்தக்கட்டச் செயற்பாடுகளும் எவ்வாறான நிலைமையில் உள்ளது?

பதில்:-தென்னிலங்கையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சிங்கள, பௌத்த வாதத்தினை மையப்படுத்திய ஆட்சியொன்று நடைபெறுகின்றது. இந்த தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டது. வெறுமனே பெயரளவில் ஒற்றுமையாக செயற்படுவது, தேர்தல்களுக்கு முகங்கொடுப்பது என்பதற்கு அப்பால், ஒரு கட்டமைக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட ‘தமிழ்த் தேசிய ஐக்கிய அணியாக’ உருவெடுப்பதே பலரது விருப்பமாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலா ஒவ்வொரு பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிக்கும் வகையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது, நிறுவன ரீதியாக செயற்படுவதற்கான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.

இதனைவிடவும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியானது உருவாகுகின்ற ஐக்கிய முன்னணி எவ்விதமாக கட்டமைக்கப்பட்ட முறையில் அமைய வேண்டும்.

வினைத்திறனான செயற்பாடுகளுக்காக எத்தகைய கட்டமைப்புக்கள் ஸ்தாபிக்க வேண்டும் என்பது தொடர்பிலான முன்மொழிவொன்றையும் ஏனைய தரப்புக்களுடன் பகிர்ந்துள்ளது. ஆகவே, விரைவில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

கேள்வி:-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் இந்த ஐக்கிய அணியில் பங்கேற்கின்றன. அதேநேரம் கூட்டமைப்பினையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- கூட்டமைப்பு பதிவு செய்யப்படும் என்று கூறுவது வெறுமனே பகற்கனவாகும். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பிற்குள் இருந்து நாம் கூட்டமைப்பினை நிறுவன ரீதியான கட்டமைக்கப்பட்ட அமைப்பாக மாற்றியமைப்பதற்காக போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். முட்டிமோதியிருந்தோம். எமது எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கூட ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. அதுகூட இறுதி தருணத்தில் திட்டமிட்டு குழப்பியடிக்கப்பட்டது. ஆகவே பத்து ஆண்டுகளாக கூட்டமைப்பினை நிறுவன மயப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை குழப்பியவர்கள் தற்போதும் அந்த அணியில் வீறாப்புடன் இருக்கையில் அதனை பதிவு செய்ய இடமளிப்பார்களா என்பதே இங்குள்ள கேள்வியாகும்.

கேள்வி:- ஐக்கிய அணியில் இடம்பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சார்ந்த கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக உள்ளது?

பதில்:- பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ் மக்களும், புத்திஜீவிகளும், புலம்பெயர் தரப்புக்களும் தமிழ்த் தேசிய அரசியலை அடுத்தகட்டத்திற்கு முன்னகர்த்திச் செல்வதற்கு தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளிடையே ‘ஐக்கியம்’ அவசியம் என்று வலியுறுத்தின. தற்போதைய அரசியல் சூழலில் அதுவே யதார்த்தமுமாகும். விசேடமாக தமிழர் விவகாரத்துடன் நீண்டகாலமாக பின்னிப்பிணைந்திருக்கும் இந்தியத் தரப்புக்களே தமிழர் தரப்புக்கள் ஐக்கியப்பட வேண்டும். ஏக குரலில் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை பிரதிபலிக்க வேண்டும் என்ற கருத்தினை பல்வேறு தளங்களில் தெரிவித்துள்ளன.

இவ்வாறான பின்னணியின் அடிப்படையில், அரசியல் பேதங்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் விடயம் தொடர்ந்தும் நீட்சி பெற்றுச் செல்லக்கூடாது என்று ஒரேநோக்கத்தினை அடிப்படையாக கொண்டே நாம் ஐக்கிய முன்னணியில் பங்கேற்றிருக்கின்றோம். இதில் தேர்தல் அரசியல் நலன்கள் என்று எதுவுமில்லை. ஆகவே இவ்விதமான சிந்தனையுடன் ஏனைய தரப்புக்களும் இதயசுத்தியுடன் தமது அர்ப்பணிப்பான வகிபாகத்தினைக் கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய தரப்புக்கள் இந்த முயற்சியில் தொடர்ச்சியாக பங்குபற்றி வருகின்றன. விசேடமாக தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையின் தலைவர் சி.வி.கே.சிவஞானமே சந்திப்புக்கள் உள்ளிட்ட இதர ஒருங்கிணைப்பணிகளை முன்னெடுத்து வருகின்றார். ஆகவே அவர்களும் மக்களின் நிலைப்பாடுகளை அறிந்திருக்கின்றார்கள். சமகால அரசியல் சூழல்களையும் உணர்ந்திருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடாகவே அவர்களின் பங்கு பற்றுதல் காணப்படுகின்றது என்று கருதுகின்றேன்.

கேள்வி:- கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர் ஐக்கிய அணியை விரும்பவில்லை என்றும் தகவல்கள் உள்ளதே?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு யாரெல்லாம் விரும்பவில்லையோ அவர்கள் நிச்சயமாக இவ்வாறானதொரு கட்டமைப்பு உருவாகுவதை விரும்பமாட்டார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கூட்டமைப்பில் உள்ள அரசில்கட்சிகள் ஐக்கிய அணியில் இணைந்து செயற்பட ஆரம்பிக்கின்றபோது ஐக்கிய அணியை விரும்பாத, தம்மை முன்னிலைப்படுத்தும் நபர்கள் மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படுவர்கள். அவர்கள் மக்களுக்கே பதிலுரைக்க வேண்டியவர்களாக இருப்பர். ஆகவே அவ்விதமான ‘சுயலாப’ நபர்களை பற்றி அதிகம் பேசுவதால் எவ்விதமான பயனுமில்லை.

கேள்வி:- உருவாகும் ஐக்கிய அணியின் தலைமைப்பதவியை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தாவுக்கு வழங்க வேண்டும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் முன்மொழிந்திருக்கின்றார், ஆரம்பத்தில் மாவை.சேனாதிராஜாவே அப்பதவிக்கு இயல்பாக தெரிவு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது? இங்கும் தலைமைத்துவ போட்டியொன்று ஏற்படுகின்றதா?

பதில்:- பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது தனிப்பட்ட பரிந்துரையொன்றை வெளிப்படுத்தியிருக்கின்றார். மாவை.சேனாதிராஜாவுக்கும் அதுபோன்று தனிப்பட்ட விருப்பொன்று காணப்படலாம்;. இதுபோன்று எங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கும். ஜனநாயக தளத்தில் தனிப்பட்ட விருப்புக்களை வெளிப்படுத்துவதில் தவறேதுமில்லையே.

ஆனால் ஐக்கிய அணியின் கட்டமைப்புக்கள், பதவி நிலைகள் அனைத்துமே பரந்துபட்ட கலந்துரையாடல் ஊடாகவே இறுதி செய்யப்படும். ஆகவே அதற்குரிய தருணங்கள் எதிர்வரும் காலத்தில் தான் ஏற்படும். அதற்கு முன்னதாகவே அதுபற்றி அதிகமாக பேசுவதால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். குழப்பங்களை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் தரப்புக்களுக்கு இவ்விதமான சில்லறை விடயங்களை மையப்படுத்தி எம்மால் தீனிபோட முடியாது.

கேள்வி:- 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான அரசியல் சூழல் எப்படியிருக்கின்றது?

பதில்:- பௌத்த தேரர்கள், முப்படை உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட செயலணிகள், முக்கிய பதவி நிலைகளில் 30இற்கும் மேற்பட்ட முன்னாள் படை அதிகாரிகள் போன்றவற்றை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியிடத்தில் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இவை நேரடியாக சிறுபான்மை இனங்களை பல்வேறு பட்ட வழிகளிலும் முடக்குவதற்கு, அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் மகாவலி திட்டத்தின விஸ்தரபிப்பது பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது. மறுபக்கத்தில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தல் என்ற போர்வையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் கிழக்கிலும் பௌத்த விகாரைகள் அமைத்தல், தொல்பொருளின் பெயரில் காணிகளை கைப்பற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனிநபரிடத்தில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதால் இவ்விதமான செயற்பாடுகள் மேலும் விரிவடையும். வேகமடையும். அவ்வாறான நிலைமை ஏற்படுகின்றபோது தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையொன்று உருவாகும் ஆபத்துள்ளது.

கேள்வி:- இலங்கையை மையப்படுத்தி ஏற்பட்டுள்ள பூகோளப்போட்டியை தமிழ்த் தரப்புக்கள் முறையாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்ற நிலையில் அதுபற்றிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்:- தமிழ் அரசியல் தரப்புக்களை மையப்படுத்திய வெளிவிவகார குழுவொன்றை அமைத்தல், அதுபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு அவற்றுக்கான தீர்வு நோக்கி நகர்த்திச் செல்வதற்கான துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமித்தல் ஆகிய இரு பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த பரிந்துரைகளுக்கு விரைந்து செயல்வடிவம் அளிப்பதே எமது இலக்காவுள்ளது.

தற்போது இலங்கையை மையப்படுத்திய அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போட்டி வலுத்துள்ளது. இந்தப்போட்டி எதிர்வரும்காலத்தில் மிகவும் தீவிரமடைந்து தொடரத்தான் போகின்றது. ஆகவே இந்த நாடுகளை தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்டு இராஜதந்திர மூலோய வியூகங்களுடன் கையாள வேண்டும் என்பதே எமது கட்சியினது நிலைப்பாடாகவும் உள்ளது என்றார்.

https://www.eelachseithy.com/?p=993&fbclid=IwAR2VRaQWJp38SbY0wFMm5N7eJHrXZjJydhQULUGh5OGaPh6dQcF37TxW7hE

இவரது பேட்டி எப்படி இருந்த போதும், பதவி, பாராளுமெல்லாம் வரும்போது எல்லோரும் சுயநலமாகவே செயட்படுவார்கள். இது ஆண்டாண்டுகளாக கூட்டிணைவதும் , பிரிவதுமான போக்கை கொண்ட ஒரு முயட்சியாகவே இருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகள் சுயநலம் மறந்து தமிழ் மக்களுக்காக ஒன்றுபட தீர்வுக்காக போராடும்வரை முடிவுக்கு வருமென்று கூற முடியாது.

இப்போதுள்ள உலக அரசியல் நிலவரம், இங்குள்ள ராஜபக்சேக்களின் ஆட்சியை எல்லாம் பார்க்கும்போது தீர்வு கிட்டிய தூரத்தில் இல்லை. இருந்தாலும் ஆகக்கூடிய தீர்வு 13 மைனஸ் ஆகத்தான் இருக்கப்போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.