Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லாலு பிரசாத் யாதவ்
 

பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு

 

எல்லா தேர்தலைக் காட்டிலும் பீகார் தேர்தல் விறுவிறுப்போடு கடந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கல்லூரியில் தொடங்கிய லாலுவின் முற்போக்கு அரசியல் பயணம்

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள புல்வாரியா எனும் கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த லாலு,  பாட்னாவில் உள்ள பி.என் கல்லூரிக்கு நடந்தே தினமும் சென்றார்.  கல்லூரியில் பின்தங்கிய மாணவர்களுக்கான பேருந்து வசதிக்குப் போராடியதில் துவங்கியது அவரது அரசியல். 1973-ம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழக மாணவர் தலைவராக வெற்றி பெற்றார். அரசியல் பின்புலமும், சாதிய பின்புலமும், பண பலமும் கொண்டவர்களின்  வாரிசுகளை வீழ்த்தியதில் துவங்குகிறது அவரது வெற்றிப் பயணம். 

நிலப்பிரபுக்களின் கோட்டையாகவும், பெரும்பாலான நிலம், கல்வி அரசியல், அதிகாரம் என அனைத்தும் உயர்ஜாதியினர் கைகளில் மட்டுமே சுற்றிச் சுற்றி வந்த பீகாரில் இருந்து வரும் லாலு, அனைவருக்கும் விடுதலை எனும் கொள்கை கொண்ட சோசலிசவாதியான ராம் மனோகர் லோகியாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரோடு இணைகிறார்.

கல்லூரி காலத்திலேயே ABVP-க்கு எதிராக வேலை செய்த லாலு

ஜெயபிராகாஷ் நாராயணன் (எ) ஜெ.பி தலைமையில் அவருக்கு நெருக்கமான இளம் தலைவராக உருவாகினார். இதே காலகட்டத்தில் பாட்னா பல்கலைக்கழகத்தில் இன்றைய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பீகார் பிஜேபி தலைவர் சுஷில்குமார் மோடி போன்ற ABVPஐ சேர்ந்தவர்களும் ஜெ.பி-யின் இயக்கத்தில் இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் லாலு-வின் செல்வாக்கு ABVB-ன் வேலைத்திட்டத்திற்கு எதிராக இருந்ததால், ஜெயபிரகாஷ் நாராயணனிடம் லாலு குறித்து அவதூறுகள் வைப்பதன் மூலம் மாணவர் அரசியலில் இருந்து அவரை அகற்ற நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. 

பீகார் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் மக்கள் தலைவரானார்

லாலுவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் 18.3.1974 அன்று நடந்த பீகார் சட்டசபை முற்றுகைப் போராட்டம்தான். ஜெயபிரகாஷ் நாராயணனின் அழைப்பில் நடந்த போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு, தடியடி, துப்பாக்கிச் சூடு என சகல வழி அடக்குமுறைகளையும்   நிகழ்த்தியது காவல்துறை. துப்பாக்கிச்சூட்டில் லாலு கொல்லப்பட்டுவிட்டார் என்கிற வதந்தி பரப்பினர்கள். பீகார் முழுக்க பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் மாணவர் தலைவர் மட்டுமல்ல, மக்கள் தலைவர் என்று நாடறிந்தது அதில்தான். 

ஊடகங்கள் லாலுவை ஜோக்கராகவும், எந்த விவரமும் தெரியாத பாமரனைப் போலவும் காட்டியது. ஆனால் அவர் பி.என் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்ததோடு, அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

lalu2.jpg

மிசா சட்டத்தில் சிறையிலிருந்தபடியே பெற்ற வெற்றி

இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் ”மிசா” சட்டத்தில் லாலு கைது செய்யப்பட்டார். நெருக்கடி நிலையை தீவீரமாக எதிர்த்த இளம் தலைவரானார். இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிறகு நடந்த தேர்தல் அது. காங்கிரசைத் தோற்கடித்து மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அப்பொழுது சிறையில் இருந்தபடியே 3.75 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் லாலு. தனது 29-வது வயதில் மிக இளம் பாராளுமன்ற உறுப்பினராக ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

lalu-and-his-wife.jpg
லாலுவும் அவரது மனைவி ராப்ரியும் தங்கள் இரு மகன்களுடன் / படம்: பிரவீன் ஜெயின்

1990-ல் முதலமைச்சரானார்

1980-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு 1989-ம் ஆண்டு பீகாரின் எதிர்க்கட்சித் தலைவராகிறார். 1990-ல் ஜனதா தளம் பீகாரில் ஆட்சியைப் பிடிக்க முதல்வருக்கான போட்டியில் ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார் லாலு. 

1750204_1419941278-1024x649.jpg
முதல்வராக பதவியேற்ற லாலு

அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்திய லாலு

அந்த நாட்களில் லாலு பிற்படுத்தப்பட்டவர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற தலைவராக உருவாகியிருந்தார். வி.பி.சிங் அரசு கொண்டுவந்த மண்டல் கமிஷன் இடஒதுக்கீட்டை உறுதியாக ஆதரித்த தலைவர் அவர்.

கலவர நோக்கத்துடன் ரத யாத்திரை நடத்திய எல்.கே.அத்வானியை செப்டம்பர் 23, 1990 அன்று லாலுபிரசாத் சமஸ்திபூரில் கைது செய்தார். ராம ரத யாத்திரையை துணிச்சலுடன் தடுத்து நிறுத்தி பரபரப்பை உருவாக்கினார். வி.பி.சிங் அரசை பாரதிய ஜனதா கட்சி கவிழ்த்த போது, வி.பி.சிங் அரசையும் அவரையும் கடைசிவரை ஆதரித்தவர் லாலு.

 

1990-ம் ஆண்டு அத்வானியின் ரதயாத்திரையின் போது லாலுவின் எச்சரிக்கை

அத்வானியை ஏன் கைது செய்தீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நாட்டைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் என்று பதில் சொன்னார் லாலு. மேலும் ”அத்வானியின் ரதயாத்திரை மண்டல் கமிஷனை அமல்படுத்தியதன் விளைவுதான். இது மண்டலுக்கும் கமண்டலத்திற்குமான போர். இதில் கமண்டலம் நீண்ட நாள் வெல்ல அனுமதிக்க முடியாது” என்று கூறினார். 

OBC இடஒதுக்கீட்டை தடுக்கவே பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் இடித்தது என்றார்

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கவே பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் இடித்தது என்று உறுதியாகக் கூறுவார் லாலு. அதனை அவர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு பத்திரிகையாளர்களிடம் பேட்டியாகக் கூறினார்.

அப்போது லாலு பேசிய கீழ்காணும் வார்த்தைகள் முக்கியமானவை. 

“சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த இந்தியா அதன் மதச்சார்பற்ற செயல்பாடுகளால் கொண்டிருந்த புகழ் உலகறிந்தது. சங் பரிவாரங்களும், அதன் கிளை இந்துத்துவ அமைப்புகளும் எப்போதுமே அந்த புகழை சீர்குலைக்கும் முயற்சிகளோடு இயங்கி வருபவை. இனவாதமும், பிரிவினையும்தான் அவற்றின் கொள்கைகள்.

மண்டல் கமிஷனின் இடஒதுக்கீடு குறித்தான அறிக்கைக்குப் பின்னர், இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரின் நலன் அதிகரித்தது. அதைப் பலவீனப் படுத்துவதற்காகவே பாபர் மசூதி இடிப்பு நடத்தப்பட்டது. இடிக்கப்பட்டது பாபர் மசூதி என்றாலும், நொறுங்கிச் சிதறியது இந்திய தேசத்தின் இதயம்தான்.”

பீகார் முதல்வராக லாலு நிகழ்த்திய அதிரடிகள்

பீகாரின் முதல்வராக லாலு இருந்த காலத்தில் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் அற்புதமானவை.

  • அரசு நிலத்தில் அமைந்திருந்த கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர் பாட்னா கோல்ஃப் மைதானத்தை அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தது, 
  • பணக்காரர்களின் பொழுதுபோக்கு இடமாக  இருந்த பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீத இடத்தை கையகப்படுத்தி ஏழை பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வீட்டு திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான சமூகக் கூடமாக்கியது,
  • தலித்துகளுக்கு வீட்டு வசதியை உருவாக்கியது

என முக்கியமான விடயங்களை லாலு மேற்கொண்டார்.

லாலு மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு 

1995-ம் ஆண்டு மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தார். ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை பதவி விலகச் செய்தார்கள். தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். 1997-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேறி ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். 

2000-ம் ஆண்டு நடைபெற்ற அடுத்த தேர்தலிலும் மக்கள் ஆதரவோடு ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. மாநில முதல்வர் பதவியை மனைவியிடம் கொடுத்த லாலு, பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்றார்.

பாஜக-வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்

1990-ம் ஆண்டு லாலு ஆட்சியை பிடிக்கும்போது, பாரதிய ஜனதா கட்சி  39 சட்டமன்ற உறுப்பினர்களோடு, 11.61% வாக்குகளோடு மூன்றாவது பெரிய கட்சியாக தன் சித்தாந்த எதிரியான லாலுவை வீழ்த்த வழி தேடிக் கொண்டிருந்தது. 

ஏனென்றால் 1990-ல் ஆட்சிக்கு வந்த பிறகு மட்டுமல்ல, ஜனதா தளம் கட்சியை உடைத்து பாரதிய ஜனதா கட்சி உருவாகிற போதே அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் லாலு. பாஜக தலைவராக இருந்த வாஜ்பாய் பிரிட்டிஷ் ஆதரவாளராக செயல்பட்டதை லாலு அம்பலப்படுத்தினார். 

அதனைத் தொடர்ந்து தேவிலால் 1989-ம் ஆண்டு அகில இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் சங்கத்தின் சார்பாக ”வெள்ளையானே வேளியேறு இயக்கத்தினை ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்த வாஜ்பாய் மிகப் பெரிய தேசபக்தர்” என்று துண்டறிக்கைகள் வெளியிடக் காரணமாக இருந்தது லாலுதான்.  

பாராளுமன்றத்தில் சாவர்க்கர் படம் வைக்க எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் சாவர்க்கர் படம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டவருக்கு பாராளுமன்றத்தில் படம் திறக்கக் கூடாது என்று மக்களைவையில் பேசினார். அப்போது வாஜ்பாய் எதிர்த்ததையும் மீறி முழங்கினார். 

கோல்வால்கரின் Bunch Of Thoughts எரிப்பு

தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ் தத்துவ மூலமான கோல்வால்கரின் ’Bunch of Thoughts’ புத்தகத்தை எடுத்துச் சென்று மக்கள் திரளை அந்த புத்தகத்தை எரிக்க சொல்லி, முதல் ஆளாக அவரே எரித்தார். 

1990-ம் ஆண்டு காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே பாஜக எதிர்ப்பில் மிகத் தீவிரமாக இருந்தார்.  

லாலுவை வீழ்த்த பாஜகவால் முன்னிறுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக முகம் நிதிஷ்குமார்

இப்படிப்பட்ட லாலுவை பாஜகவால் நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தான் இன்னொரு பிற்படுத்தப்பட்ட முகமான நிதிஷ்குமார் தேர்தெடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார். ஆமாம் நிதிஷ் குமாரின் முதுகில் ஏறி பாஜக வளரவில்லை. பாஜக தன் முதுகில் நிதிஷ்குமாரை ஏற்றி லாலுவிற்கு எதிராக வளர்த்தது. 

1995-ல் லாலு ஆட்சியைப் பிடித்த இரண்டவது தேர்தலில் 41 இடங்களைப் பிடித்து பாஜக எதிர்க்கட்சியாக வந்த போது, நிதிஷ் குமாரின் ’சமதா கட்சி’ பெற்ற வெற்றிகள் வெறும் 7 இடங்கள் 7.1% வாக்குகள் தான். 

1996-ம் ஆண்டு தன்னை சோசலிஸ்டாக மண்டலுக்குப் பின்னான தலைமையாக அடையாளம் காட்டிக் கொண்டிருந்த நிதிஷ் குமார்தான், தன் கைப்பாவையாக இருப்பதற்கான ஆளாக பாஜக தேர்வு செய்கிறது. அதன்பின் நிதிஷ் குமாரை அரசியலில் முன்னுக்கு இழுத்து வருகிறது பாஜக. 

2000-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 67 இடங்களைப் பெற்று இரண்டாவதாகவும், நிதிஷ்குமார் 34 இடங்களைப் பெற்று மூன்றாவது  கட்சியாகவும் தான் வந்தார். இந்த நிதிஷ் குமாரைத்தான் 2005-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 88 இடங்களில் வெற்றி பெறவைத்து கூட்டணியாக ஆட்சியில் ஏற்றியது பாஜக.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் 19 இடங்களையும், 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 23 இடங்களையும் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக இருந்த பாஜக, மண்டலுக்குப் பின்னான அரசியலில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டவர்களின் தலைவராக நிற்கும் லாலுவை வீழ்த்த குர்மி இனத்தின் நிதிஷ்குமாரை முன்னிறுத்தியது. 

665451-nitish-prasad-pti-1024x576.jpg
நிதிஷ் குமார் மற்றும் ரவிசங்கர் பிரசாத்

தொடர்ந்து பாஜக கூட்டணியிலேயே ஆட்சியில் இருந்த நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் ஆட்சியில் இருக்கும் மூன்று ஆட்சிக் காலங்களில், தனித்து பெரும்பான்மை பெற்றது 2010-ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் மட்டும்தான். அதுவும் பாஜக கூட்டணியில் பெற்ற வெற்றிதான். 

2015-ம் ஆண்டு நிதிஷ்குமாரின் கட்சியை விட, லாலுவின் கட்சி 9 இடங்கள் அதிகம் பெற்றிருந்த போதும், நிதிஷ்குமாரின் வாக்குகளைப் பெற்றுதான் ஆர்.ஜே.டி வெற்றி பெற்றதாகக் கூறினார்கள். இந்த தேர்தல் எது உண்மை என்று நிரூபித்திருக்கிறது.

லாலுவின் சமுக சீர்திருத்தங்களை, சமூக நீதிக் கொள்கைகளை எல்லாம் இருட்டடிப்பு செய்து அவரை ஊழல்வாதியாகக் கட்டமைத்த ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்-சின் கைப்பாவையாய் மாறிப் போன நிதிஷ்குமாரை புகழ்ந்து எழுதிக் கொண்டிருந்தன. 

ரயில்வே அமைச்சராக லாலுவின் சாதனை

லாலு பிரசாத் ரயில்வே துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ரயில்வே துறை எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 15 ஏப்ரல் 2006, Washington Times ஊடகம் உலகின் அதிக அளவு வேலைக்கு ஆட்களை நியமித்தவர் லாலு என்று அறிவித்தது. ஏறக்குறைய 15 லட்சம் பணியாட்களை நியமித்தார். அதிக அளவு பணியாட்களை நியமித்தும், ரயில் கட்டணத்தை உயர்த்தாமல் 15.5% அதிக லாபத்தைக் கொண்டுவந்தவர் லாலு. 

நிதிஷ்குமாரும், லாலுவும்

நிதிஷ் குமாரின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் 1996-ம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை அவர் பாஜக-வோடு தான் இருக்கிறார். 2010-ம் ஆண்டில் தனி பெரும்பான்மை கிடைத்திருந்து, 2013-ம் ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மட்டும் தான் இடையில் உறவை முறித்திருந்தார். அது தன்னை முன்னிறுத்தவில்லை என்கிற ஆதங்கமே தவிர, கொள்கை முரண் அல்ல. 

ஆனால் ஆர்.எஸ்.எஸ்-சை எதிர்ப்பதை தன் கொள்கையாகக் கொண்ட லாலுவோ, 2015-ம் ஆண்டின் தேர்தலில் தான் வெற்றி பெற்ற இடங்களை விட, நிதிஷ் குமார் கட்சி குறைவாகவே வென்றிருந்தாலும், பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு விட்டுக் கொடுத்தார். 

ஆனால் நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் மாஞ்சியை பிரித்து தனிக் கட்சியை உருவாக்கியது பாஜக. அப்படி தன்னை பலவீனப்படுத்திய பின்பும், தன் கொள்கை தலைமையான பாஜகவிடம் ஒரே ஆண்டில் சரணடைந்தார் நிதிஷ்குமார். 

சமதா கட்சியாக இருந்தாலும், ஐக்கிய ஜனதா தளமாக இருந்தாலும் நிதிஷ்குமார் ஆர்.எஸ்.எஸ் கைப்பாவையாகத் தான் இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயணன் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பை முன்வைத்த போது வெளியேறாமல் அங்கேயே தங்கிய ஆர் எஸ்.எஸ்காரர் என்று சொல்லும் படிதான் நிதிஷ்குமாரின் செயல்பாடுகள் இருந்தது.  

எனவே நிதிஷ்குமாரை வைத்து பாஜக அங்கு வளரவில்லை. பாஜகதான் தன் சித்தாந்த எதிரியான லாலுவை வீழ்த்துவதற்காக அவரை வளர்த்தது.

2020 தேர்தலில் இடர்பாடுகளை தகர்த்து தனிப்பெரும் சக்தியாக நிற்கும் ஆர்.ஜே.டி

1973-ம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழகத்திலும், ஜெ.பி இயக்கத்திலும் என ஆர்.எஸ்.எஸ் ஊடுருவிய அனைத்து இடங்களிலும் தத்துவார்த்த போர் நிகழ்த்திய லாலுவை அரசியல் அரங்கில் இருந்து நீக்க வேலை நடந்தது. ஊழல் குற்றச்சாட்டு, சிறை என்று லாலு மொத்தமாக முடக்கப்பட்ட பின்னரும், இன்று அவரது மகன் தேஜஸ்வி தலைமையில் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்த வரலாறுப் பின்புலத்தில் இருந்துதான், நிதிஷ் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, நாங்கள் பிஜேபியை எதிர்த்து நிற்கிறோம் என்றார் தேஜஸ்வி. அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆளும்கட்சி அதிகாரம், ஊடகம், தேர்தல் முறைகேடு என்று சாம தான பேத தண்ட வழிகளைக் கையாண்டு பாஜக வென்றிருக்கலாம். ஆனால் மண்டலுக்கும் கமண்டலத்திற்குமான இந்த போரில் கமண்டலம் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

https://madrasradicals.com/politics/one-has-to-know-lalus-history-to-understand-the-bihar-election/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.