Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணும்பொழுது - ஜெயமோகன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எண்ணும்பொழுது - ஜெயமோகன் 

spacer.png

“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான்.

அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது.

அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள்

“சும்மா”

”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள்

“பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?”

“பாக்கிறது மட்டுமா?”

“பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம் வெறும் உடம்பு”

“ம்க்கும், ஏதாவது கேட்டா உடனே ஏதாவது சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பிச்சிடறது”

அவள் தங்க வளையல்களைக் கழற்றினாள். அவள் நகைகளைக் கழற்றும்போதும் மேஜை மேலிருந்த சிறிய பீங்கான் கிண்ணத்தில் போடும்போதும் அவை மெல்லிய உலோக ஓசையிட்டன. ஓசையிலிருந்தே எது வளையல், எது மோதிரம் என்று சொல்லமுடிந்தது.

“என்னமோ சொன்னீங்களே?” என்றாள்

”என்ன?”என்றான்

“என்னமோ கன்னின்னு?”

“அதுவா? அது ஒரு கதை… நான் முன்னாடி கேரளத்திலே வடகரைங்கிற ஊரிலே வேலை பாத்தப்ப ஒருநாள் ஒரு சின்னக்கோயிலிலே கதை கேக்கப் போனேன். நம்மூர் வில்லுப்பாட்டு மாதிரி அங்க ஒருவகை பாட்டு. பானைப்பாட்டுன்னு பேரு. பானைவாயிலே தோலைக்கட்டி அதிலே குச்சியாலே தட்டிட்டே பாடுறது… நீட்டி நீட்டிப் பாடுவாங்க… அப்ப எல்லாமே ஆச்சரியமா இருந்த காலகட்டம். அதனாலே அதை ரொம்ப ரசிச்சுக் கேட்டேன்”

“ஓகோ” என்று அவள் ஆர்வமில்லாமல் சொன்னாள். கண்ணாடியில் உடலைத் திருப்பி தன்னை பார்த்துக்கொண்டாள்.

“தெக்குதிருவீட்டில் கன்னியோட பாட்டுகதை”

“அது எதுக்கு இப்ப ஞாபகம் வந்தது?”

“சும்மாதான்… ஏன் ஞாபகம் வந்தது, என்ன சம்பந்தம்னுதான் யோசிச்சிட்டிருக்கேன்.”

”எப்ப பார் யோசனைதான்… ஒருநாள் மண்டையே ஷார்ட் சர்க்யூட் ஆகி புஸ்னு கருகிரப்போகுது”

அவன் புன்னகைத்தான்.

அவள் “இருங்க” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.

அவன் தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு காலை நீட்டி ஆட்டியபடி அந்த கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவள் இன்னமும் இருப்பதுபோல கண்ணாடிக்குள் அவள் கழற்றி வைத்த நகைகள் இருந்தன.

கண்ணாடிக்குள் அவள் ஆழத்தில் தோன்றினாள். நைட்டி அணிந்திருந்தாள். நீரிலிருந்து எழுவதுபோல கண்ணாடிப் பரப்பில் இருந்து எழுந்து அணுகி வந்து முகத்தைப் பார்த்துக்கொண்டாள். இப்பாலிருப்பது பிம்பம் என எண்ணிக்கொண்டான். அவள் கன்னத்தில் பூனைமுடி ஈரத்தில் ஒட்டியிருந்தது. நெற்றியிலும் முடி நனைந்திருந்தது. முகத்தை கையால் நீவிவிட்டாள். வெண்துவாலையால் முகத்தையும் கழுத்தையும் அழுத்தித் துடைத்தாள்.

“ஏன் இங்கேயே டிரஸ் மாத்திக்கிடறது?”

‘இங்கியா?”

“மொத்தமாக் கழட்டுறே, அப்ற மாத்துறதுக்கு என்ன?”

“அதெல்லாம் மாட்டேன்.”

“ஏன்னு கேட்டேன்.”

”மாட்டேன், அவ்ளவுதான்.”

“சரி, வா.”

“என்ன அவசரம்?” அவள் தாலியைக் கழற்றி கண்ணாடிமுன் இருந்த கொக்கியில் மாட்டினாள்.

“அதை மட்டும் ஏன் மாட்டுறே?”

“கீழே வைச்சா சிக்கிடுது,” என்றாள் ?அப்றம் அதை சிடுக்கெடுக்கிறது பெரிய ரோதனை.”

“தாலிச்சிடுக்கு.”

“என்னது?”

“இல்ல, ஒண்ணுமில்லை”

அவள் அருகே வந்தாள். இயல்பாக இரு கைகளையும் தூக்கி தலைமுடியை சீரமைத்தாள். இதை பெண்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே செய்கிறார்கள். அவள் மார்புகள் மெல்லிய வழுவழுப்பான நைட்டிக்குள் ஏறி இறங்கின. அவற்றின் உறுதியான வடிவை உணர்த்தியபடி. அவற்றின் நுனிகள் இறுகியிருக்கின்றன என்று காட்டியபடி.

அவள் கட்டில் அருகே வந்து நின்று “சரண்யா அக்கா நாளைக்கு மலைக்கோயில் போலாமான்னு கேட்டாங்க… கார் போகுது. ஒரு சீட் இருக்குன்னு சொன்னாங்க.”

“போயேன்… எங்கிட்ட கேக்கணுமா?”

“சொல்லணும்ல?”

இதுவும் ஒரு ஜாலம். உச்சிமுனைக்கு ஒரு கணம் முன் தயங்கி நின்று இயல்பான அன்றாடப் பேச்சை எடுப்பது. வேறெங்கோ என நடிப்பது. உடலொன்று பேச சொற்கள் பிறிதொன்று பேசும் ஒரு நுண்ணிய நடிப்பு. நடிப்பவரே அறியாத நடிப்புபோல அழகுடையதொன்றில்லை. அதைப்போல கூர்மையானதுமில்லை.

“சொல்லிட்டேல்ல?” என்றான். அவள் கையைப் பிடித்து இயல்பாக அருகே அமரச் செய்தான்.

“நாளைக்கு கேஸுக்கு சொல்லணும்… எப்ப வேணுமானாலும் தீந்துடும்,” என்றாள்.

”ஓகோ” என்றான் “அப்றம்?”

“என்ன அப்றம்?”

“மத்தபடி மளிகை, சமையல்…”

“வெளையாட்டா? டைமுக்கு வந்து உக்காந்துட்டு ஏன் லேட்டுன்னு கேக்கத் தெரியுதுல்ல?”

“சரி, இனிமே கேக்கலை,” என்றான்

அவள் மீண்டும் கைகளை தூக்கி கொண்டையை அவிழ்த்து முடியை கைகளால் விரித்து தோளில் இட்டுக்கொண்டு மெத்தைமேல் காலை தூக்கி வைத்து அமர்ந்தாள்.

“எல்லா தலைகாணியையும் எடுத்து வைச்சுகிடணுமா?”

“நீ வேணுமானா எடுத்துக்க.”

எத்தனை சொற்கள் வழியாக…

அவள் தலையணையை எடுத்து வைத்து அதை கைகளால் அழுத்தி பதமாக்கினாள்.

“தலைகாணியிலே சாய்ஞ்சு உக்காந்தா குழி விழுந்திடுது. அப்றம் காலையிலே எனக்கு கழுத்து வலி.”

“நான் தெக்குதிருவீட்டில் கன்னி கதையப்பத்திச் சொன்னேன்ல?”

“ஆமா, அது என்ன கதை?”என்றபடி சாய்ந்து அமர்ந்தாள்.

“தெக்குதிருவீட்டில் கன்னி ஒரு பெரிய அழகி. பெரிய குடும்பம். தெக்குதிருவீடுன்னா ஒரு குட்டி ராஜாவோட வம்சம். வடக்கே நாடுவாழிகள்னு சொல்லுவாங்க. அவளுக்கு பதினெட்டு வயசு இருக்கிறப்ப குளிக்கப்போறா. அப்ப போம்பாளர்னு இன்னொரு நாடுவாழி அந்தப்பக்கமா போறார். அவரோட பல்லக்குத்தூக்கிகளோட சத்தம்கேட்டு கன்னி குளப்புரையோட தூணுக்குப் பின்னாடி ஒளிஞ்சுகிட்டா. ஆனா தண்ணியிலே அவளோட பிம்பத்தை போம்பாளர் பாத்துட்டார். அவள் மேலே காதலாயிட்டார்.”

அவள் சிரித்து “இது நல்லாயிருக்கு,” என்றாள்

“நானும் கொஞ்சம் மேலோட்டமான ஆர்வத்தோடதான் கதையைக் கேட்டேன். ஆனால் இந்த எடம் அப்டியே உள்ள இழுத்துட்டுது. சாதாரணமா இந்த மாதிரியான பாட்டுகளிலே இப்டி ஒரு சூட்சுமமான விஷயம் இருக்கிறதில்லை.”

“அப்றம்?” என்றாள்

“அவர் வந்து பெண் கேட்கிறார். அவரு ஏழு கப்பலுக்கு உரிமையாளர். பெரிய படை வச்சிருந்தவர். அவருக்கு திருவீட்டுக்கன்னியை கட்டிக்குடுக்கிறாங்க. தண்ணியிலே பாத்த பெண்ணை அவர் நேரிலே பாக்கிறார். ஆனா அவளை கண்ணாடியிலே பாத்தாத்தான் அழகுன்னு நினைச்சு ஆறன்முளையிலே சொல்லி ஆளுயர கண்ணாடி செஞ்சு அதிலே நிக்கவைச்சு பார்க்கிறார்…”

“ஓகோ, வித்தியாசமா இருக்கே?”என்று அவள் புன்னகைத்தாள்.

“அவங்க பதினாறு வருசம் மனசு ஒப்பி சேந்து வாழுறாங்க.”

“குழந்தைங்க இல்லியா?” என்றாள்

‘இல்லை… பதினாறு வருசம் கழிச்சு போம்பாளர் கப்பலிலே வியாபாரத்துக்கு கிளம்பறார். அஞ்சு வருசமாகும் திரும்பி வர்ரதுக்கு. அதுவரைக்கும் பிரிஞ்சிருந்தா ஆம்புளை மனசு மாறாதான்னு கன்னி கேட்டா. போம்பாளர் கன்னிகிட்டே ஒரு மோதிரத்தைக் குடுக்கிறார். அது பொன் மோதிரம். ஆனா அது மாயப் பொன். இந்தப் பொன் மோதிரம் எப்ப வெள்ளி மோதிரமா மாறுதோ அப்ப நான் உனக்கு துரோகம் பண்ணிட்டதா நினைச்சுக்கோன்னு சொல்றார்.”

அவள் கையால் தலைமுடியை பிடித்துச் சுருள்களாகச் சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தாள். கண்கள் மாறிவிட்டிருந்தன.

“அவர் கிளம்பறப்ப அவள் ஒரு முல்லைக்கொடியை அவருக்குக் கொடுக்கிறா. இந்த முல்லைக்கொடிக்கு நாளும் தண்ணி விடணும். எப்ப இது வாடுதோ அப்ப நான் துரோகம் பண்ணினதா நினைச்சுக்கிடுங்கன்னு சொல்றா. அவர் கெளம்பிப் போயிடறார்.”

அவன் அவளுடைய உளம்கூர்ந்த முகத்தை பார்த்தான். என்ன நினைக்கிறாள்? கதையைப் புரிந்துகொள்கிறாளா, இல்லை வேறெதாவது யோசிக்கிறாளா?

“அப்றம்?”என்று அவள் கேட்டாள்.

“கப்பல் பல மாத காலம் கடலிலே போச்சு. பொருள் கொள்முதல் பண்ணிட்டு திரும்பி வர்ரப்ப புயல் வந்திட்டுது. கப்பல் திசைமாறி அலைகளிலே ஓட ஆரம்பிச்சிட்டுது. கப்பல் உடைஞ்சு போம்பாளர் கடலிலே விழுந்தார். ஆயிரம் அலை சேந்தடிச்சுது. பத்தாயிரம் அலை சேந்து அடிச்சுது. போம்பாளர் ஒரு கட்டையை புடிச்சுக்கிட்டு கடலிலே நீந்தினார். ‘திருவீட்டில் கன்னியின் கணவன் நான் கடலே, என்னைத் திரும்பி போகவிடு கடலே’ன்னு அவர் மன்றாடினார். ‘நஞ்சு மூத்த நாகராஜாவைபோல் படமெடுக்கும் கடலே, என் நெஞ்சு அழிஞ்சு நானே வந்தா எடுத்துக்கோ கடலே’ன்னு கூவி அழுதார்”

“அத்தனை அலையிலேயும் அந்த முல்லைச்செடியை அவர் விடவே இல்லை. முல்லைச்செடியை விட்டா ரெண்டு கையாலேயும் நீந்தலாம்னு தோணினாலும் விட மனமில்லை. முல்லைச்செடியை பிடிச்சிட்டிருக்கிற போம்பாளரை மூழ்கடிக்க கடலுக்கு அதிகாரமில்லை. கடல் அலையாலே அடிச்சடிச்சு பாத்தது. அதிலே இருந்து ஒரு முல்லைப்பூ கூட உதிரலை. அதனாலே கடல் அவர்மேல்  மனசிறங்கி அவரை கடலுங்கரைங்கிற ஒரு தீவிலே கொண்டு போய்ச் சேத்தது. அவர் அங்கே கரையேறினார். அவர் கையிலே அந்த முல்லைச் செடி இருந்தது.”

“அங்கே கடலுங்கரை நாடுவாழி ஒருத்தர் இருந்தார். அவர் போம்பாளரை காப்பாற்றி ஒரு கடலோர வீட்டிலே தங்க வைச்சார். அவருக்கு ஒரு படகுகட்டி அதிலே ஏற்றி ஊருக்கு அனுப்புறதா வாக்குறுதி குடுத்தார். கடலுங்கரை தம்பினானோ மகள் பெயர் கடலுங்கரை கன்னி. அவ பெரிய அழகி… திருவீட்டு கன்னிக்கு தண்ணியோட அழகு. கடலுங்கரை கன்னிக்கு தீயோட அழகு. திருவீட்டுக் கன்னிக்கு குழிமுயலோட அழகு. கடலுங்கரை கன்னிக்கு கருநாகத்தோட அழகு.”

அவள் “உம்” என்றாள்

“கடலுங்கரைக் கன்னிக்கு போம்பாளரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. கப்பல் வேலை முடியும் வரை அவர் அங்கேயே தங்கவேண்டியிருக்கு. அங்கேருந்து ஏழுகடல் தாண்டித்தான் போம்பாளரோட ஊர் இருக்கு. அவராலே வேற எங்கேயும் போகமுடியாது. ஏன்னா அது ஒரு தீவு. கடலுங்கரை கன்னி போம்பாளரை கவர முயற்சி பண்றா. கட்டாயப்படுத்திப் பாக்கிறா. கடலிலே துரத்தி விட்டிருவேன்னு பயமுறுத்தியும் பாக்கிறா. அவர் அவளைத் திரும்பிக்கூட பாக்கலை”

அவள் கண்களைப் பார்த்தபடி கதையைத் தொடர்ந்து சொன்னான். அவன் எப்போதுமே எதையாவது அப்படிப் பேசுவதுண்டு. படித்தது, பார்த்தது. ஆனால் எல்லாமே அவள் பார்வையில் கேலிக்குரியவைதான். ஆரம்பத்தில் அந்தக் கேலி ஓர் இனிய விளையாட்டாக இருந்தது. ஆனால் அதன்பின் அதில் பிடிவாதமாக நீடித்த புறக்கணிப்பு அவனைக் குத்தத் தொடங்கியது. அது இயல்பான புறக்கணிப்பு அல்ல, நான் புறக்கணிக்கிறேன் என்ற நிலைப்பாடு. அதை ஐயமில்லாமல் தெரிவித்தாக வேண்டும் என்னும் உறுதி. அதைத் தெரிவிக்க அவள் கண்டுகொண்டவழி கள்ளமற்ற, சிறுமித்தனமான கேலி. அறியாமையைத் தன் இளமையின் அடையாளமாக முன்வைப்பது. ஒருவகை தகுதியாகவே அதை நினைத்துக்கொள்வது. அதை எப்போது விளையாட்டல்ல என்று உணரத் தொடங்கினான்? அதைவிட அதை எப்படி விளையாட்டே என நம்பினான்?

“போம்பாளர் தன்னைப் புறக்கணிச்சதை கடலுங்கரைக் கன்னியாலே மறக்கவே முடியலை. நினைக்க நினைக்க அது தீயா படர்ந்து சுட ஆரம்பிச்சுது. ஊணும் உறக்கமும் இல்லாம அவள் மெலிஞ்சா. அவளோட தோழிகள் அவள் ஏன் அப்டி இருக்கான்னு கேட்டாங்க. அவ பதில் சொல்லாம அழுதா. அவங்களுக்கும் புரியலை.”

“அந்த ஊரிலே கோணச்சின்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு ஒண்ணரைக்கண்ணு, காக்காய்நெறம், சோழிப்பல்லு, ஒண்ணரைக்காலு. அவ குரூபியா இருக்கிறதனாலே அவளை யாருமே பார்க்கறதில்லை. அந்த குரூபத்துக்குப் பின்னாலே அவ ஒளிஞ்சிட்டிருந்து எல்லாரையும் பாத்திட்டிருந்தா. அவ முன்னாலே யாரும் எதையும் ஒளிக்கலை. ஏன்னா அவளை யாரும் பாக்காததனாலே அவ அங்க இல்லைன்னே அவங்க மனசும் நினைச்சுக்கிட்டிருந்தது. அவ முன்னாடியே ஆம்புளைங்க நிர்வாணமாக் குளிப்பாங்க. பொம்புளைங்க கள்ளப்புருஷனை பாப்பாங்க. ஆணும்பெண்ணும் கூடி இருப்பாங்க.”

“கோணச்சி காணாத ஒண்ணுமில்லை. மனுஷனோட எல்லா கோணலும் அவளுக்குத் தெரியும். ஆனா அவளுக்கும் ஒரு குறையுண்டு. உடலிலே கொஞ்ச கோணல் இருந்தால்கூட அவங்களை அவளாலே கூர்ந்து பாக்கமுடியாது. ஏன்னா அவங்க அவளைப் பாத்திருவாங்க. அவங்க பார்வை பட்டாலே அவ ஒளிஞ்சுகிடுவா. ஆயிரம் பேர் போற மைதானத்திலே அவ கண்ணிலே கோணலான உடம்புள்ளவங்க மட்டும் தெரியவே மாட்டாங்க. அப்டிப்பட்டவ.”

அவள் புன்னகைத்து “இதெல்லாம் அந்த கதையிலே இருந்திச்சா?”என்றாள்.

“கிட்டத்தட்ட இப்டித்தான்,” என்றான்.

“அப்டியே அடிச்சு விடுறது… சரி சொல்லுங்க,” என்றாள் சிரித்தபடி.

“கோணச்சி வந்து கடலுங்கரை கன்னியைப் பாத்தா. உடனே அவளுக்குத் தெரிஞ்சுட்டுது, கடலுங்கரை கன்னி காதலிலேதான் நோயாளி ஆயிட்டான்னு. அவளைப் பக்கத்திலே உக்காந்து கூர்ந்து பாத்தா. அவள் கட்டிலைச் சுத்தி கடலிலே எடுத்த கூழாங்கல்லு நாலஞ்சு கிடந்தது. உடனே ஆளைக் கண்டுபிடிச்சிட்டா. நேரா போய் போம்பாளரைப் பாத்தா. அவரோட மனசையும் தெரிஞ்சுகிட்டா. திரும்பி வந்து அவ கடலுங்கரை கன்னிகிட்டே சொன்னா. ‘அம்மையே, கடலோடி போம்பாளன் ஏன் கன்னியைத் திரும்பிப் பாக்கலேன்னு தெரியுமா?’ கடலுங்கரை கன்னி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குன்னு கண்டு ஆச்சரியப்பட்டா. ‘ஏன்?’ன்னு கேட்டா. ‘கோணச்சிக்குத் தெரியும். பத்து பவுனுக்கு உபாயம் சொல்லித்தருவேன்’ன்னு கோணச்சி சொன்னா”.

spacer.png

“கடலுங்கரை கன்னி ஆமாடப்பெட்டியை திறந்து பத்து பவுன் எடுத்துக் கொடுத்தா. கோணச்சி உபாயம் சொல்லிக்குடுத்தா. போம்பாளன் எப்பவுமே ஒரு முல்லைச்செடி பக்கத்திலே போய் உக்காந்திட்டிருக்கான். அதிலே பூக்குற பூவையே எண்ணி எண்ணிlg பாத்திட்டிருக்கான். அந்த பூச்செடியை கொடுத்தவள் ஒரு கன்னியாத்தான் இருக்கணும். அது அவன் மனசிலே நிறைஞ்ச மங்கை. அவளை மறக்கமுடியாமல்தான் உன்னை ஏற்கமுடியாமல் இருக்கான். அவளை மறந்தால் உன்னை அணைப்பான்.”

“கடலுங்கரை கன்னி இன்னும் பத்து பவுன் எடுத்து கோணச்சிக்கு குடுத்தா. ‘போம்பாளன் அவளை மறக்கவும் என்னை மணக்கவும் ஒரு மார்க்கம் சொல்லடி கோணச்சி’ன்னு கடலுங்கரை கன்னி கேட்டா. கோணச்சி சொன்னா, ‘அவன் அவளை மறக்கணுமானா அவள் அவனுக்கு துரோகம் செய்யணும். அவள் அவனை மறக்கணுமானா அவன் அவளுக்கு துரோகம் செய்யணும்’. கடலுங்கரை கன்னி கேட்டா ‘ஒரு மனசோடே உறவுகொண்ட ரெண்டு பேர் எப்படியடி கோணச்சி துரோகம் செய்வார்?’ கோணச்சி சொன்னா ‘மனுஷ மனசறிஞ்ச கள்ளி நான். மனசறிஞ்சு மனசறிஞ்சு கோணச்சியாய் போனேன்ந கடலுங்கரை கன்னி அவள் கையைப்பிடிச்சுட்டு ‘மனசிலே அறிஞ்ச மர்மம் என்னன்னு சொல்லுடி கோணச்சின்’னா. கோணச்சி அறியாத ரகசியங்கள் இல்லை. ஏன்னா அவளோட வழியெல்லாம் குறுக்குவழி. அவளோட நடையெல்லாம் பதுங்கி நடை. அவளோட பார்வையெல்லாம் ஓரப்பார்வை. அவளோட குரலெல்லாம் காதோடதான்.”

“கோணச்சி சொன்னா. ‘எண்ணக்கூடாது அம்மே. எண்ணி எண்ணிப் பார்ப்பதெல்லாம் எண்ணிக்கை தவறும். கணக்கிட்டுப் பார்ப்பதெல்லாம் குறைஞ்சுகூடும். ரெண்டு பேரையும் எண்ண வைப்போம், இழந்ததும் விட்டதும் எண்ணினால் கூடும். எடுத்ததும் வைச்சதும் எண்ணினால் குறையும்’. கடலுங்கரை கன்னிக்கு சந்தேகம் ‘எண்ண வைக்கிறது எப்டியடி கோணச்சி?’ன்னு கேட்டா. ‘பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும் அம்மையே’ன்னா. ‘சரி எப்டியாவது அவரை எண்ணவை. உனக்கு இன்னும் பத்து பவுன் பரிசா தாறேன்’னு கடலுங்கரை கன்னி சொன்னா.”

“எப்டி?” என்று அவள் கேட்டாள். இப்போது அவள் கதையிலிருந்து வெளியே போய்விட்டது தெரிந்தது. கண்களில் ஒரு சுருக்கம்.

“எப்டீன்னு சொல்லு?” என்றான்.

“தெரியலை,” என்றாள்.

“கதையிலே இப்டி இருக்கு,” என்றான். “கோணச்சி அந்த முல்லைச் செடியை பாத்தா. இப்டி ஒரு செடி இங்க இருக்குன்னா அங்க போம்பாளரோட மனைவிகிட்டே வேற ஒண்ணு இருக்குன்னு கண்டுகிட்டா. அவ அங்கே எண்ணினாள்னா இவர் இங்க எண்ணுவார். இவர் இங்க எண்ணினார்னா அவ அங்க எண்ணுவா. அதுக்கு ஒரு மந்திரம் உண்டு. கோணச்சி கோணமலை உச்சியிலே ஏறி அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தா.”

“ஏழு நாள் மந்திரம் போட்டுட்டு எட்டாம் நாள் கோணச்சி கீழே இறங்கி வந்தா. மந்திரம் பலிக்குதான்னு பாக்க கடலுங்கரை கன்னி கடலோரத்திலே போம்பாளர் தங்கியிருந்த வீட்டுக்கு போனா. அங்க போம்பாளர் முல்லைச்செடி பக்கத்திலே பதறிட்டு நிக்கிறதை பார்த்தா. என்னன்னு கேட்டா. ‘இதிலே பூத்த பூவிலே ரெண்டு பூவை காணலை… நேற்று இருந்த பூவொண்ணு இன்னைக்கு மறைஞ்சிட்டுது. நேற்று இன்னொரு பூவும் மறைஞ்சிட்டுது. பூவை கண்டால் சொல்லிடு’ன்னு சொன்னார் போம்பாளர்.”

“கடலுங்கரை கன்னி போம்பாளரோட வேலைக்காரன்கிட்டே என்னன்னு கேட்டா. ‘பூவெல்லாம் ஒண்ணும் குறையல்லை. முந்தாநாள் ராத்திரியில் சொப்பனம் கண்டு எந்திரிச்சார். ஓடிப்போய் செடியிலே பூத்த பூவையெல்லாம் எண்ணிப் பார்த்தார். இப்படி பூவை எண்ணி பாத்ததே இல்லை. என்ன ஆச்சு இவருக்குன்னு நான் பக்கத்திலே போய் கேட்டேன். ஒரு பூ உதிர்ந்த மாதிரி சொப்பனம் கண்டேனடான்னு சொன்னார். பூ உதிர்ந்தா கீழே கிடக்குமேன்னு நான் சொன்னேன். சந்தேகம் போகாம பக்கத்திலே உக்காந்து எண்ணி எண்ணிப் பாக்க தொடங்கினார். பொழுது போய் பொழுது வளர சந்தேகம் கூடிட்டே இருக்கு’ன்னு வேலைக்காரன் சொன்னான். சிரிச்சுகிட்டே கடலுங்கரை கன்னி திரும்பி வந்தா.”

“அங்கே ஏழு கடலுக்கு அந்தப் பக்கம் திருவீட்டில் கன்னி கணவன் போன நாள் முதல் நோன்பிருந்து கும்பிட்டு காத்திருந்தா. பூவோட இதழெல்லாம் விளக்குச் சுடர் மாதிரி அவளைச் சுட்டது. அடுப்புத்தீயோ ஆயிரம் நாக்காலே உண்ண வந்தது. வெயிலையும் தீயையும் ஆடையா அணிஞ்சதுபோல் இருந்தது. ‘ஆறப் பொறுத்தாச்சு தீயே அமையப் பொறுக்க மாட்டயா’ன்னு அவ தீக்கிட்டே கேட்டா. அப்டி காத்திருந்தவ திடீர்னு நாளுக்கு நாற்பத்தொரு தடவை அந்த மோதிரத்தை எடுத்து வெளுத்திருக்கா வெளுத்திருக்கான்னு பாத்தா. ஊணில்லை உறக்கமில்லை. பார்த்துப் பார்த்து பொன்மோதிரத்தை வெளுக்க வைச்சா. ஒருநாள் காலையிலே மோதிரத்தை எடுத்து பாத்தா. அது வெள்ளி மோதிரமா இருந்தது. அவ நேராப் போய் காட்டிலே தீவைச்சு அதிலே குதிச்சு ஆடையும் அணியும் ஊனும் எலும்பும் எரிஞ்சு செத்தா.”

அவள் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தாள்.

“இங்க முல்லைக்கொடியிலே எல்லா பூவும் உதிர்ந்திட்டுது. போம்பாளர் கண்ணீரோட பாத்திட்டிருந்தார். கொடியே வாடினதும் ஓடிப்போய் கடலிலே குதிச்சு உயிர்விட்டார். ‘குளிர்கடலே, அலைகடலே, ஆழக்கடலே நானே வந்திட்டேன்’ன்னு சொல்லிட்டே குதிச்சார். கடலோட ஆயிரம் வாசல்கள் திறந்து அவர் ஆழத்துக்கு போய்ட்டார்.”

“அப்றம்?”

“அந்த ரெண்டு ஆத்மாக்களும் சந்திக்கவே இல்லை. ஏன்னா திருவீட்டில் கன்னி தீயிலே போனாள். கப்பல்கார போம்பாளன் கடலிலே போனார். தீயிலே போனவ மேகங்களுக்குமேலே உள்ள சொர்க்கத்துக்கு போனா. கடலிலே போனவர் ஆழத்திலே இருக்கிற சொர்க்கத்துக்குப் போனார்… அவங்க ரெண்டும் பேருக்கும் நடுவிலே தீராத வானமும் மடங்காத காலமும் இருந்தது.”

”அப்றம்?”என்றாள்.

“அவ்ளவுதான் கதை.”

“என்ன கதை? ஒருமாதிரி வாலும் தலையுமில்லாம?” என்றாள்.

“இந்த மாதிரி கதையெல்லாம் இப்டித்தான். ஒரு டிராஜடி மட்டும்தான் இருக்கும். நீதியெல்லாம் இருக்காது.”

“என்ன கதையோ!” என்று சொல்லித் தலையணையை மீண்டும் கையால் அடித்தாள். “நடுவிலே இவ்ளவு குழி… இதை வைச்சு உக்காராதீங்கன்னா கேக்கிறதில்லை.”

அவன் “இனிமேல் இல்லை,” என்றான். அவள் வயிற்றின்மேல் கைபோட்டு “என்ன படுத்தாச்சு?”என்றான்.

“ஆ, படுக்காம? பகல் முழுக்க வேலை. வீடு ஆபீஸ்னு பெண்டு எடுக்குது!”

“எந்த பெண்டு?”

“சீ” என்று அவன் கையைத் தட்டிவிட்டாள்.

நீண்ட கைப்பழக்கத்தால் அவன் அவளை மீட்டுவதெப்படி என அறிந்திருந்தான். உச்சுக் கொட்டல்கள், தட்டி விடுதல்கள், புரண்டு படுத்தல்கள், ‘என்ன இப்ப?” என்ற சிணுங்கல்கள் வழியாக அவள் அவனை அணுகிக்கொண்டிருந்தாள்.

“இப்ப எதுக்கு அந்த கதை ஞாபகம் வரணும்?” என்று அவன் காதில் கேட்டாள்.

“சும்மா, வந்திச்சு… இந்த புக்லே கேரளா டூரிசம் படம் பாத்தேன். அதனாலேகூட இருக்கலாம்…  இதென்ன?”

“அப்ளம் பொரிக்கிறப்ப ஒரு சொட்டு தெறிச்சிட்டுது.”

அவன் அதன்மேல் முத்தமிட்டான்.

“அய்யே!”

“என்ன பெரிய இவ மாதிரி?”

“பெரிய இவதான்… அதானே தேடி வர்ரீங்க?”

“ஆமாடி, தேடித்தான் வர்ரோம்.”

அவன் முரட்டுத்தனமாக அவளை அள்ளி அணைத்துக்கொண்டான். அவள் அது வரை அவனைக் கொண்டுவந்து சேர்த்திருப்பதை உணர்ந்தான்.

பெருமூச்சு கலந்த சொற்களால் உரையாடல். உடல்களால் உடலின் தொடுகையை உணர்தல். அதன்பின் உடல்களை பிணைத்துக்கொள்ளுதல். உடல் உடலை விழுங்கிவிட முயல்வதுபோல. உடல் உடலை ஆட்கொள்வதுபோல.

அந்த அசைவுகளின் புரளல்களின் துவளல்களின் நடுவே அவள் அவன் இரு செவிகளையும் பிடித்து, அவன் தலையை சற்றே பின்னுக்கு தள்ளி, அவன் கண்களை கூர்ந்து பார்த்து “என்ன கதை அது? மடத்தனமா?” என்றாள்.

“ம்” என்று அவன் சொன்னான்.

அவள் கண்கள் தீபட்டு வெம்மைகொண்டவை போலிருந்தன. முகமே கொதிப்பதுபோல.

“அவ்ளவும் கிறுக்கு… கிறுக்கு தவிர மண்டையிலே ஒண்ணுமில்லை!”

அவள் வெறிகொண்டு அவனை இழுத்து அணைத்து அவன் உதடுகளைக் கவ்வி கடித்தாள். பற்கள் பதிந்தன. அவளுடைய அந்த வெறி மிக அரிதாகவே அவன் அறிந்தது. கைகளும் கால்களும் பரபரக்க மூச்சு சீறி ஒலிக்க ஊடே தொண்டையின் கமறல்போன்ற ஓசைகள் கலக்க அவள் மேலும் மேலும் கொந்தளிப்படைந்தபடியே சென்றாள்.

பின்னர் மூச்சு சீராகிக்கொண்டிருக்க அவளுடைய உடல்மேல் அவன் குப்புறக்கிடந்தான். அவள் தோளின் வளைவில் முகம் அமைத்திருந்தான். அவள் மூச்சு அவன் தோள் மேல் பட்டுக்கொண்டிருந்தது. மென்மையான துணி ஒன்று தொட்டு அசைவதுபோல. அவன் முதுகில் அவள் கைநகங்கள் பதிந்ததன் எரிச்சல். தோளில் அவள் பற்கள் பதிந்த வலி.

அவன் புரண்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். அவள் ஒருக்களித்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு, இன்னொரு கையை மடித்து ஊன்றி அதில் தலைவைத்து எழுந்து அவனைப் பார்த்தாள். அவள் தோள்களில் கூந்தல் விழுந்து கிடந்தது. வெறுந்தோளில் சிறு தழும்பு ஒன்று. கழுத்தில் நீல நரம்பு ஒன்று புடைத்து மெல்லத் துடித்தது. ஒரு மார்பு மெத்தையில் அழுந்தியிருக்க கரிய சுருக்கங்களுடன் காம்பு கூர்ந்திருக்க இன்னொரு மார்பு வெண்ணிற மென்மையுடன் ததும்பிச் சொட்ட முற்பட்டு நின்றதுபோல் தெரிந்தது.

அவன் அதை தொடப்போக அவள் தோளை விலக்கி அவனை அகற்றினாள். “அந்தக் கதையிலே எனக்கு சந்தேகம்,” என்றாள்.

“என்ன?”

“ரெண்டு பேரிலே யாரு முதன்முதலா எண்ணிப் பாக்க ஆரம்பிச்சது?”

“ஏன்?”

”இல்ல கேட்டேன்.”

“அது கதையிலே இல்லியே?”

“யாரா இருக்கும்?”

“அதை கோணச்சிகூட சொல்லிட முடியாது!” என்றான்

“அந்தாள்தான்!”

“இல்லை… வேணுமானா இப்டி சொல்லலாம். ஒரே செகெண்டிலே. ஒரு செக்கண்ட்டோட ஒரு பக்கம் இவ மறுபக்கம் அவர். ரெண்டு பேருமே சேந்து.”

”சும்மா உளறிட்டு!” என்று அவள் உதட்டைச் சுழித்து அவன் கையை தட்டினாள். உருண்டு மறுபக்கம்  எழுந்தாள். முதுகில் கூந்தல் கற்றைகள் விழுந்து அலை பாய பாத்ரூமுக்குச் சென்றாள்.

அவன் செல்பேசியில் மின்னஞ்சல்களையும் குறுஞ்செய்திகளையும் பார்த்தான். அவள் திரும்பி வந்து “இந்த குழாய் எவ்ளவு மூடினாலும் சொட்டிக்கிட்டே இருக்கு. ராத்திரியிலே சிலசமயம் சத்தம் தூங்கவே விட மாட்டேங்குது,” என்றாள்

“பாப்போம்!” என்றான்.

“என்ன பாக்கிறது? ராமையாவை பாத்து வந்திட்டு போகச் சொல்லுங்க… இங்க வாட்டர்டாங் பக்கம்தான் அவன் வீடு.”

“சரி.”

அவன் எழுந்து பாத்ரூம் சென்று வரும்போது அவள் நைட்டியை அணிந்து தலைமுடியை தலைமுடிக்குமேல் தூக்கி விட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.

அவன் படுத்துக்கொண்டு செல்பேசியை எடுத்தான்.

“படிக்கப்போறீங்களா?”

“அஞ்சு நிமிஷம்”

”லைட்டை ஆஃப் பண்ணிடுங்க… எனக்குத் தூக்கம் வருது,” என்று அவள் புரண்டு மறுபக்கம் நோக்கி படுத்துக்கொண்டாள்.

அவன் விளக்குகளை அணைத்துவிட்டு செல்பேசியை இயக்கினான்.

 

http://vallinam.com.my/version2/?p=7297

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா காதல் வியாதியே பொல்லாதது, அதிலும் சந்தேகம் நுழைந்து விட்டால் "கள்ளு குடித்த குரங்குக்கு தேள் கொட்டினது" மாதிரித்தான் ........!   நன்றி கிருபன்......!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.