Jump to content

அதுவொரு அழகிய வானொலி காலம்


Recommended Posts

 

அதுவொரு அழகிய வானொலி காலம் 1 – 6

 

 

அருள்செல்வன்.

தொடர்புக்கு: arulselvanrk@gmail.com

செவியில் விழுந்து இதயம் நுழைந்த இலங்கையின் குரல்கள்!

arul-selvan-series
இலங்கை வானொலியின் லைப்ரரி | கோப்புப் படம்

எழுபதுகளில் தன் பால்யத்தைக் கழித்தவர்களின் வாழ்க்கையில் இலங்கை வானொலியின் நினைவில் மூழ்கிக் குளித்து எழாமல் கடந்து போக முடியாது.

தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழக ரசிக மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான் .குறிப்பாக என்னைப்போன்று தென்தமிழ்நாட்டில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது இலங்கை வானொலி மட்டும்தான். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, அதாவது சுப்ரபாதமாகவும் இரவு தூங்கப்போகும்போது கேட்கும் தாலாட்டாகவும் இருந்தது இலங்கை வானொலிதான். அவர்களது வாழ்க்கையோடு ஒன்றிணைந்து கலந்து வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது இலங்கை வானொலி என்பதை மறுக்கவே முடியாது.

 

ஆல் இண்டிய ரேடியோ சென்னை நிலையம் இரைச்சலுடன் கரகரவென ஒலிப்பது போல இருக்கும் . எங்களுக்குப் பக்கம் என்பதால் திருச்சி சற்று கூடுதல் ஒலியுடன் கேட்கும். அவ்வளவுதான். விவசாய நிகழ்ச்சிகள், செய்திகள், சில நாடகங்கள் தவிர முழுக்க முழுக்க கர்நாடக இசை ஆக்கிரமிப்புகள்தான் ஆல் இண்டிய ரேடியோவில் ஒலிக்கும். எனவே, தமிழக மக்கள் இலங்கை வானொலி ஒலித்த அந்தக்காலத்தில் ஆல் இண்டிய ரேடியோவைச் சற்றுத் தள்ளி ஏன் புறக்கணித்தே வைத்திருந்தார்கள். அதை ஒரு தீண்டத்தகாததாகவே கருதி வைத்திருந்தார்கள்.

மாநிலச்செய்திகள் கேட்ட பிறகு கூட உடனே, ” சிலோனுக்கு ஸ்டேஷனை மாற்று” என்று தவிப்பார்கள். அந்த அளவுக்கு மக்களை ஈர்த்துக்கொண்டு கிறக்கத்தில் வைத்திருந்தது இலங்கை வானொலி .எங்கள் ஊர் வேதாரண்யம் பக்கம் இருந்ததால் ஃப்யூஸ் போன பேட்டரியை வானொலிப் பெட்டியில் போட்டால் கூட இலங்கை நிலையம் எடுக்கும். புதுப்பேட்டரி போட்டால்தான் சென்னை கொஞ்சம் எடுக்கும்.ப்பதுங்கிப் பதுங்கி ஏறி இறங்கி ஒலிக்கும். அந்த அளவுக்கு ட்ரான்ஸ் மீட்டர்கள் ‘வலு’வாக இருந்தன.

1586609049343.jpg

இலங்கை வானொலி ஆசியாவிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெருமைக்குரிய ஒன்று .பிபிசி தொடங்கப்பட்ட மூன்றாண்டுகளில் 1922-லேயே தன் சோதனை ஒளிபரப்பை அது தொடங்கிவிட்டது. இலங்கை வானொலியின் முக்கியமான அங்கம்தான் ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ தமிழ்ச் சேவை. சட்டக் கட்டுப்பாடுகளுக்கு விலக்கு பெற்று புதிய மாற்றங்களுடன் 1966 -ல் சில நெகிழ்வுத் தன்மையுடன் மறுமலர்ச்சி பெற்று ஒலிக்கத் தொடங்கியது. 1950-ல் செப்டம்பர் 30-ல் இமயமலை ஏறிய ஹில்லாரியும் டென்சிங்கும் கூட முதலில் கேட்டது இலங்கை வானொலியைத்தான்.

1952-ல் அகில இந்திய வானொலி நிலையம் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை தடை விதித்தது. தமிழ் திரைப்படவுலகம் தன் வியாபாரத்தை விரிவு செய்ய விளம்பரம் செய்யும் ஊடகமாக இலங்கை வானொலியை நம்பியிருந்தது. அதன்படி இலங்கை வானொலியும் அந்த விளம்பரச் சேவையைப் பிரமாதமாகச் செய்தது; கல்லாவும் கட்டியது. இங்கே இதைப் பார்த்து தவித்துப் போனார்கள். பிறகு இந்திய வானொலி விவித் பாரதி 1957, அக்டோபர் 2-ல் ஆரம்பிக்கப்பட்டது

வானலைகளில் தனக்கு ஒரு ரசிகப் பேரரசை, வெறித்தனமான சாம்ராஜ்யத்தை இலங்கை வானொலி நிலையம் கைப்பற்றியிருந்ததற்கு அவர்களின் ஒப்பற்ற பணியும், ஈடுபாடும் நிகழ்ச்சியில் வழங்கிய புதுமைகளும், அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரது தனித்துவமும் காரணங்கள் என்று சொல்லலாம்.

இலங்கை வானொலியில் தமிழ், ஆங்கிலம் ,சிங்களம் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள் இருந்தனவாம். அதுமட்டுமல்ல 1920களில் முப்பதுகளில் இருந்த இசைத்தட்டுகள் கூட அவர்களது சேமிப்பில் இருந்தன. மிகக் குறைந்த அளவில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு அதுவும் மேல்தட்டு மக்களுக்காக கர்நாடக சங்கீதம் என்று போய்க்கொண்டிருந்தால் அகில இந்திய வானொலியால் மக்கள் செல்வாக்கு பெற முடியவில்லை. பெரும்பான்மை பாமர மக்களின் இலக்கியம் என்பது திரைப்படப் பாடல்கள்தான் என்ற புரிதலோடு இலங்கை வானொலி செயல்பட்டதால் அனைத்து மக்களின் இதயம் கவர்ந்த ஒன்றாக அது இருந்தது.

அதுவொரு அழகிய வானொலி காலம் – 2: பொங்கும் பூம்புனல்… எங்கும் நினைவுகள்!

srilankan-radio
 

தகவல் தொடர்பு இல்லாமல் ஒரு தினசரி பத்திரிகைக்குக் கூட வழியில்லாமல் இருந்த குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் காதுகள் வழியே ஒரு சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. திரைப்பாடல் மட்டுமல்லாமல் திரைக்கலைஞர்களின் பேட்டிகள், நாடகங்கள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. இலங்கை வானொலிக்காகப் பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இளையராஜா, வைரமுத்து பேட்டிகள் இன்றும் நினைவில் உள்ளன.கே .எஸ்.ராஜா எடுத்த வைரமுத்து பேட்டியும் நினைவில் வருகிறது.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை .காலையில் இடம்பெறும் ‘பொங்கும் பூம்புனல்’ அதன் ஆரம்ப இசை நரம்புகளில் புது குளுக்கோஸ் ஏற்றும். இதில் இடம்பெறும் பிறந்த நாள் வாழ்த்தும் பாடல்களும் அருமையாக இருக்கும்.

 

இப்படித் தொடங்கும் நிகழ்ச்சிகள் இரவில் கடைசி நிகழ்ச்சியான ‘இரவின் மடியில்’ வரை பல ருசியான சுவை நுகர் கனிகளை நமக்குக் காது வழியாக கடத்திக் கொண்டே இருக்கும். இலங்கை வானொலி என்றாலே அதில் குரல் தரும் அறிவிப்பாளர்களைத் தவிர்த்துவிட்டு நாம் பேச முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு அவர்கள் காதுகளின் வழியே நம் இதயங்களில் அமர்ந்திருந்தார்கள். பிடிக்காத குரல் என்று எதுவுமே இருக்காது. வகைவகையாக விதம்விதமான குரல்கள், ஒவ்வொன்றும் மாணிக்கப் பரல்கள்.

நிகழ்ச்சி அறிவிப்பாளர்களை எடுத்துக்கொண்டால் நடராஜ சிவம், ராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சிவராஜா, புவனலோசினி துரைராஜசிங்கம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், மயில்வாகனம் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீத், சில்வஸ்டர் எம்.பாலசுப்பிரமணியம், சந்திரமோகன், அனுசுஜா ஆனந்த ரூபன்,ஜி.பால் ஆண்டனி ,ஜெயகிருஷ்ணா, எஸ்.எஸ்.நாதன், ஜோக்கிம் பெர்னாண்டோ, விசாலாட்சி ஹமீத் ,ஜோசப் ராஜேந்திரன் என்று வளர்ந்து ,செய்தியை வாசிக்கும் நடேச சர்மா வரை அனைவரும் மனதில் ஒட்டி இருந்தார்கள்.

அவர்களில் சூப்பர் ஸ்டார்களாக சிலர் வானொலி ரசிகர் மனங்களையும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அவர்கள் ராஜேஸ்வரி சண்முகம், நடராஜ சிவம் ,புவன லோஷினி துரைராஜசிங்கம் ,கே.எஸ்.ராஜா,பி எச்.அப்துல் ஹமீத் போன்றவர்கள். இவர்கள் தங்களுக்கு என்று பெரிய ரசிகர் வட்டத்தை சம்பாதித்து இருந்தார்கள்.

இலங்கை வானொலியில் காலையில் ஒளிபரப்பாகும் ‘பொங்கும் பூம்புனல்’ நிகழ்ச்சி தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் காலை வணக்கம் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். அது அப்போது அனைத்து தமிழக வீடுகளிலும் ஒலித்து காலையில் ஒரு சுபசகுனமாக உணரப்பட்டது.

‘பொதிகைத் தென்றல்’ ஒரு நிகழ்ச்சி. அதை ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்தான் தொகுத்து அளிப்பார். திரைப்பாடல்கள் எந்த அளவுக்கு இலக்கியத் தரமாக உள்ளன என்ற கோணத்தில் அதைக் கொடுப்பார்.யாரும் எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்ததெல்லாம் தகவல்களை எடுத்துக்கொண்டு வழங்குவார். எங்கிருந்தோ தோண்டி சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பது போல் அவரது தகவல்கள் இருக்கும். சங்க இலக்கிய வரிகள் திரைப்பாடலில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டி நயம் பாராட்டி உரைப்பார்.

‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற வரிகள்

‘செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது,’ என்று இருப்பதை சுட்டிக் காட்டுவார். ‘ஞாயும் ஞாயும் யார் ஆகியரோ?’ என்ற சங்க வரி தான் ‘யாரோ நீயும் நானும் யாரோ?’ என்ற பாடலாக வந்து இருப்பதைச் சொல்வார்.

‘தம்மின் மெலியாரை நோக்கித்

தமதுடைமை

அம்மா பெரிதென் றகமகிழ்க’

-என்ற குமரகுருபரரின் சிந்தனைதான் ‘ உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று வந்து இருப்பதைச் சொல்வார். இந்த சிந்தனையின் ஓடு பாதையில் பயணித்தால் ‘காலுக்குச் செருப்பு இல்லையே என்று கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும் வரை’ என்று கவிஞன் ஷா – அதியோ, கலீல் கிப்ரானோ கூறியதாகப் படித்ததும் நினைவுக்கு வரும்.

‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற கம்பராமாயண சிந்தனைதான் ‘நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை’ என்று மறு வடிவம் எடுத்துள்ளதைக் கூறுவார்.

பாடல்களை ஒப்பிட்டுப் பேசும்போது ‘ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி; மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி; முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி; முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி’ என்று வர்ணிக்கும் ‘அபூர்வ ராகங்கள்’ பாடலோடு ‘ ஒருபுறம் உன்னைக் கண்டால் கோபுரக் கலசம்; மறுபுறம் பார்க்கும்போது மேனகை தோற்றம்; நடையினில் அன்னம் கண்டேன்; இடையினில் மின்னல் கண்டேன்’ என்று ‘மாலை சூடவா’ படப் பாடலானதை ஒப்பிட்டுச் செல்வார். இதுபோல் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இது எத்தனை பாமர மக்களுக்குப் புரியும்? என்று நினைக்காமல் திரைப் பாடல்களின் மூலம் இலக்கிய சிந்தனைக்கு வழிவகுத்தார் அவர். அந்தப் பள்ளிப் பருவத்தில் எனக்கு ஓர் இலக்கிய அனுபவமாக அந்த நிகழ்ச்சி இருக்கும். வெறும் பாடலை மட்டும் ஒலிபரப்பாமல் இப்படிப்பட்ட ஆராய்ச்சி நோக்கில் இந்த நிகழ்ச்சியை அமைத்து அமர்க்களப்படுத்துவார் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம். 2014-ல் மறைந்த அவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனியாக இருந்து கடைசி வரை தானே சமைத்துச் சாப்பிட்டு மறைந்தார்.

அதுவொரு அழகிய வானொலி காலம் – 3: மதுரக் குரல் மன்னனின் திரை விருந்து!

radio-series
 

இலங்கை வானொலியின் மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்ச்சி ‘பாட்டுக்குப் பாட்டு’. அந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இது ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். பாடல் தொடங்கும் முதல் எழுத்தை பி.எஸ்.அப்துல் ஹமீத் கூற, போட்டியாளர் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பாடலைப் பாட வேண்டும். இது உலகம் முழுக்க அறிந்த நிகழ்ச்சியாக தொலைக்காட்சி மூலம் மறு வடிவம் பெற்றது.

பலருக்கும் பாடல் பல்லவிகள் தெரியலாம். முழுப் பாடல் தெரியாது. ஆனால் ஹமீத் ஆயிரக்கணக்கான பாடல்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு போட்டியாளர் பாடும்போது திணறினால் வரிகளைக் கூறி சரிசெய்வார். அவரது நினைவாற்றல் வியக்கவைக்கும். இந்த அனுபவமும் ஞானமும்தான் பிற்காலத்தில் தொலைக்காட்சியிலும் அவரை ஒளிர வைத்தது.

 

உமாவின் ‘வினோத வேளை’ என்றொரு நிகழ்ச்சி. அறிவிப்பாளர் கே எஸ் .ராஜா தொகுத்து வழங்குவார். இது மேடையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். பார்வையாளர்களின் ஆரவாரக் கைதட்டல் ஒலியுடன் நிகழ்ச்சி இருக்கும். போட்டியாளர், அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவுடன் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். ஆம் ,இல்லை என்று பதில் அளிக்கக் கூடாது.

வார்த்தைகளுக்கு இடையே ஐந்து வினாடிகள் மௌனம் சாதிக்கக் கூடாது. ஒரே வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறக்கூடாது. சுற்றிவளைத்துப் பேசக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு பேசவேண்டும். பார்க்க சாதாரணம் போல் தோன்றும். ஆனால், பலரும் தோற்றுப் போய் விடுவார்கள். யாராவதுதான் சாமர்த்தியமாகப் பேசி ஜெயிப்பார்கள். மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது. மேடையில் நடக்கும்போது அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக நாமும் அமர்ந்து பார்த்த அனுபவத்தைத் தரும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது தனித்தன்மையால் ஒளிரச் செய்பவர் கே.எஸ்.ராஜா.

தான் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பார்வையாளரைப் பங்கேற்க வைக்கும் நிகழ்ச்சிகளிலும் தன் திறமையால் அதை சுவாரஸ்யப்படுத்திவிடுவார். விறுவிறுப்பான வேகமான பேச்சும், உச்சரிப்பும், உரையாடும்போது அவரது சொல்லாடலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தன. ‘மதுரக் குரல் மன்னன்’ என்று அழைக்கப்பட்டார். கே.எஸ்.ராஜா வந்துவிட்டாலே நிகழ்ச்சியில் தனது முத்திரையைப் பதிக்காமல் போகமாட்டார். அவர் தொகுத்தளிக்கும் திரைப்படம் சம்பந்தப்பட்ட ‘திரைவிருந்து’, தமிழ்த் திரைப்படம் சார்ந்த விளம்பரங்கள் என ஒவ்வொன்றிலும் தெரிவார். ‘உங்கள் விருப்பம்’ நிகழ்ச்சியில் மற்றவர்களைவிட அதிகமான நேயர்களின் பெயர்களை இடம்பெறச் செய்வார். அவ்வளவு வேகமாக வாசிப்பார்.

‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரி பெண்கள் நிகழ்ச்சியை ராஜேஸ்வரி சண்முகம் தொகுத்து வழங்குவார். கலகலப்பாகவும் கம்பீரமாகவும் பேசுவார். அவர் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கூட வருவார். அப்போது சிறுவர்களிடம் ‘வாங்க போங்க’ என்று மரியாதையுடன் பேசிக் கவர்வார். தமிழகத்திலிருந்த இலங்கை வானொலி ரசிகர்கள் இவரை அழைத்துப் பாராட்டு விழாவெல்லாம் அந்தக் காலத்தில் நடத்தி இருக்கிறார்கள்.

புவன லோசினி துரைராஜசிங்கம் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். சலங்கை கட்டிய குரல் அவருக்கு. விரைவாகவும் ரிதமாகவும் பேசுவார். அது ஓர் அழகு. பல நிகழ்ச்சிகளில் வருவார், பேசுவார், பாடுவார், நடிப்பார். அனைத்தும் செய்வார்.

அதுவொரு அழகிய வானொலி காலம் – 4: இதயம் மறக்காத ‘இசையும் கதையும்’

srilankan-radio
 

இன்று தொலைக்காட்சிகளில் கூட இப்படிப்பட்ட யோசனைகளைச் செயல்படுத்தி நிகழ்ச்சிகள் அமைந்ததில்லை என்று கூறிவிடலாம். அப்படியொரு அபூர்வ நிகழ்ச்சி ‘இசையும் கதையும்’ என்ற நிகழ்ச்சி. அது மாலை நேரங்களில் ஒலிக்கும். அனேகமாக அது ஒரு வாராந்திர நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். சரா இமானுவேல் என்பவர் தொகுத்து வழங்குவார். தொகுத்து வழங்குவார் என்பதை விட நடித்து வழங்குவார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கதையை எழுதி வாசிப்பார். அதன் சூழலுக்கேற்ற பாடல்கள் இடையிடையே ஒலிக்கும். அது வேடிக்கை வினோதக் கதையாக இருக்காது. ஆழமான சோகமான துயரமான வகையில் இருக்கும். கதையை வாசிக்கும்போது நவரசங்களையும் காட்டி வாசிப்பார். அந்தக் கதைகளைக் கேட்டு உருகிக் கரைந்திருக்கிறேன். என் சின்னம்மா வானொலிப் பெட்டியின் அருகே நின்றுகொண்டு இந்தக் கதையைக் கேட்டுத் தாரை தாரையாகக் கண்ணீர் விடுவார். முப்பது நிமிட நேரத்தில் காதுகள் வழியே சிவாஜியை உணர வைப்பார் சரா இமானுவேல்.

‘மலர்ந்தும் மலராதவை’ என்றொரு நிகழ்ச்சி வரும். பாடல் ஒலிப்பதிவு செய்து படத்தில் இடம்பெறாத பாடல்கள் இந்தத் தலைப்பில் ஒலிபரப்பாகும். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதேபோல் ‘ஜோடி மாற்றம் ‘என்றொரு நிகழ்ச்சி. ஒரு பாடகர் அல்லது பாடகி மற்ற பாடகர் அல்லது பாடகியோடு இணைந்து பாடிய பாடல்களின் அணிவகுப்பு அது.

 

‘இன்றைய நேயர்’ என்றொரு பகுதியில் தினமும் ஒரு நட்சத்திர நேயரை அழைத்து அவருடன் கலந்துரையாடி அவருக்குப் பிடித்த பாடல்களைப் போடுவார்கள். வானொலியைத் தொடர்ந்து கேட்கும் நேயர்களுக்கான கெளரவம் அது.

திரைப்படப் பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? அத்தனை பரிமாணங்களையும் இலங்கை வானொலி எங்களுக்குத் தரிசிக்கக் கொடுத்தது. எங்கள் ரசனையை விரிவு செய்து விசாலமாக்கியது.

சினிமா பாட்டை வைத்துக்கொண்டு ‘குறுக்கெழுத்து போட்டி’ என்று யோசிக்க முடியுமா? அவர்கள் யோசித்தார்கள். செய்தார்கள். குறுக்கெழுத்துப் போட்டி நடத்தினார்கள்.

அந்த வயதில் முதலில் எனக்குப் புரியவில்லை. ‘இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னடா இது ? என்று நினைப்பேன். ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான் புரிந்தது. தாளில் கட்டங்கள் போட்டுக் கொண்டு கவனிக்க வேண்டும். விடைக்கான குறிப்புகளாகப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதிலிருந்து விடைகளைக் கண்டுபிடித்து எழுத வேண்டும். இதைச் சில பாமரர்கள் ‘என்ன இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று புரியாமல் நினைத்து இருந்தாலும் இடையில் ஒலிக்கும் பாடல்களுக்காக ரசிப்பார்கள். வானொலியில் விதவிதமான சோதனை முயற்சிகளைச் செய்து வெற்றி கண்டார்கள்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை (Sports ) ஒருவர் பரபரப்பாக வழங்குவார். அவர் பெயர் எஸ்.எழில்வேந்தன்.

ஒரு காலத்தில் மனதில் பதிந்தவை நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டுமல்ல ஒலிக்கும் விளம்பரங்களும் அப்படியே மனதில் பதிந்திருக்கும். ராணி சந்தன சோப், இந்தியன் வங்கி, உமா கோல்டு ஹவுஸ், நுலம்புத் தொல்லையா?, விவா, ஹார்லிக்ஸ், வுட்வார்ட்ஸ் க்ரைப் வாட்டர் போன்றவை. ‘உங்கள் விருப்பம்’ நிகழ்ச்சியில் இடம்பெறும். நட்சத்திர வாசகர்களாக மட்டக்களப்பு மங்களா, தங்களா, தேவிபுரம் விமலா, கமலா என்ற நேயர்கள் பெயர்கள்கூட ஞாபகமிருக்கிறது.

ஒரு நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு அறிவிப்பாளர் விடைபெற்றுக்கொண்டு போகும்போதும் அடுத்துப் பொறுப்பேற்பவர் வரும்போதும் அதைச் சொல்லிவிட்டுத்தான் விடைபெற்றுச் செல்வார்கள். அது நமக்கு Live – ஆன நேரலையாக உணரவைக்கும். நேரடி அனுபவத்தைத் தரும். இந்த இடத்தில்தான் நமது வானொலிகள் ஏன் பெரிதாகக் கவராமல் போய்விட்டன என்ற கேள்வி எனக்கு எழுந்தது.

அதுவொரு அழகிய வானொலி காலம் – 5: பி.எச். அப்துல் ஹமீதை துரத்திய கேள்வி!

srilankan-radio
 

நம் தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர், யார் வந்தவர் என்று நமக்குத் தெரியாது. காரணம் அவர்களது பெயர்கள் அன்று அறிவிக்கப்பட்டதில்லை. அந்த அளவுக்கு எந்திரத்தனமாக வைத்திருந்தார்கள். இலங்கை வானொலியில் பணியாற்றுவோரின் ஒவ்வொருவர் பெயரும் தெரிவதால் அவர்களுடன் நாமும் பயணித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றும். அவர்கள் பணியை உணரவைக்கும்.

பி.எச்.அப்துல் ஹமீது பணியாற்றியபோது விசாலாட்சி ஹமீது என்ற அறிவிப்பாளரும் இருந்தார். பெரும்பாலானவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றுதான் நினைப்பார்கள். அந்தக் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக அந்த இருவரும் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் பி.எச் அப்துல் ஹமீத் விடைபெறும்போது உங்களிடமிருந்து விடை பெறுபவர் சகோதரி விசாலாட்சியுடன் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் என்பார். அப்போது “சகோதரி” என்பதை அழுத்திச் சொல்வார். இருந்தாலும் அவரைப் பார்க்கிறவர்கள் எல்லாம் விசாலாட்சி உங்கள் மனைவியா என்று கேட்பார்களாம். அந்தத் தர்மசங்கடக் கேள்வி கடைசிவரை அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம் நேரில் பார்த்தபோது வருத்தத்துடன் சொன்னார்.

 

அப்போது இலங்கை வானொலியும் தமிழ்த் திரையுலகமும் பின்னிப்பிணைந்து கிடந்தன. இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் படங்கள் எல்லாம் எடுத்தார்கள். அப்போது இலங்கை நடிகைகள் தமிழ்ப் படங்களில் நடித்தார்கள். ‘பைலட் பிரேம்நாத்’ படத்தில் சிவாஜிகணேசனுடன் பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா இணைந்து நடித்திருந்தார். அது சார்ந்த பாடல்கள் கூட ஞாபகத்தில் இருக்கின்றன.

‘இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதோ?’ என்றொரு பாடல் உண்டு.

‘அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே; அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான் குமரி அழகிலே’ என்றும் ஒரு பாடல் உண்டு. ‘தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை’ என்றொரு பாடல் வரும். அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் நினைவுக்கு வருகின்றன. அது மட்டுமல்ல இலங்கை மண் சார்ந்தவையாக சில பாடல்கள் ஒலிக்கும். அதில் மறக்க முடியாத பாடல் அங்கேயே தயாரித்த ‘மாமியார் வீடு’ என்ற படத்தில் ஜோசப் ராஜேந்திரன் பாடியது.

1587813460343.jpg

‘இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள்; என் கனவுகள் பலித்திடும் பெருநாள் .’என்ற பாடல் அடிக்கடி ஒலிக்கும். அது மட்டுமல்ல ‘சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே? பள்ளிக்குப் போனாளோ; படிக்கப் போனாளோ?’ என்ற அந்த நையாண்டிப் பாடலும், ‘கள்ளுக்கடை பக்கம் போகாதே; காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்’ என்ற மதுவிலக்கு அறிவுரைப் பாடலும் அடிக்கடி ஒலிக்கும்.

தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தரவரிசை நேயர்களால் வாக்களிக்கப்பட்டு வாராவாரம் தேர்வாகும். அதில் ’மாம்பூவே சிறு மைனாவே’ என்ற சந்திரபோஸ் இசையமைத்த ’மச்சானை பார்த்தீங்களா’ படப்பாடல் ஓராண்டு தாண்டியும் பல வாரங்கள் முதலிடத்திலேயே இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.

இலங்கை வானொலியில் ஒலித்த தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் கூட நினைவில் பதிந்துள்ளன. உழைக்கும் கரங்கள், சங்கிலி, திசை மாறிய பறவைகள், நினைத்தாலே இனிக்கும் போன்ற பட விளம்பரங்களில் அது சார்ந்த பாடல், வசனம் என்று சில வரிகளைப் போட்டு ஒலிபரப்புவார்கள். புதுமையாக இருக்கும்.

அறிவிப்பாளர்களே தங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் ‘என் விருப்பம்’ என்ற நிகழ்ச்சி வரும். அதில் அறிவிப்பாளர்களுக்குப் பிடித்த பாடல்கள் வரும். ஏன் பிடித்தது என்பதையெல்லாம் சொல்வார்கள். அதிலிருந்து ரசனைப் புரிதலால் ஒவ்வொருவரையும் நமக்கு நெருக்கமாக உணர்வோம்.

‘இசையமைப்பாளர்’ என்றொரு பகுதி குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாடல்களை அதில் தொகுத்து வழங்குவார்கள். இப்படி நிறைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சில நேரம் ’மரண அறிவித்தல்’ வரும். அப்போது மட்டும் மனதுக்கு ’திக்’கென்று இருக்கும்.

அப்போதெல்லாம் எங்கள் ஊர்ப்பகுதியில் எங்கே எந்த விவசாய வேலை நடந்து கொண்டிருந்தாலும் அங்கே ஒரு வானொலிப் பெட்டி கம்பீரமாக அமர்ந்திருக்கும். அந்த உழைக்கும் மக்களின் சுவாசமாகவும் ஆசுவாசமாகவும் இலங்கை வானொலி இருந்தது. மின்சார வசதி கூட இல்லாத காலம் அது. எங்கள் பகுதியில் மிக மிக அவசியமான பொருட்களாக வெல்லம், டீத்தூள் இருக்கும். தேநீர் போட பால் கூட அடுத்தபட்சம்தான்.ஆனால் அச்சு வெல்லம் , டீத்தூள் கண்டிப்பாக வாங்குவார்கள். இந்த அத்தியாவசியப் பட்டியலில் அடுத்தபடியாக வானொலிக்கு பேட்டரி வாங்குவது என்று பட்ஜெட்டில் வைத்திருப்பார்கள். அது இலங்கை வானொலிக்காகத்தான்.

தங்களை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருப்பது இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் என நினைப்பார்கள்.

புகையிலை சாகுபடி இருக்கும்போது கொல்லை நடுவில் வானொலி இருக்கும். கொல்லை முழுதும் கேட்கும். நாலு பக்கமும் புகையிலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள். வானொலி ஒலித்துக் கொண்டே இருக்கும் .

உற்ற தோழனாக உற்சாகம் தரும் ஊக்க மருந்தாக சிலநேரம் கிரியா ஊக்கியாகவும் அந்த வானொலி தோன்றும். வயல்களில் நீர் நிறைந்து நெல் சாகுபடிக் காலம் என்றாலும் வயல் வரப்புகளில் வானொலிப் பெட்டி உட்கார்ந்து இருக்கும். அல்லது மரத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். சிலர் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு திரிவார்கள். சிலர் சைக்கிளில் பொருத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

கருவேலங்காட்டில் சருகு குவிக்கப்போனாலும் முள் மரங்கள் நடுவே கூட அங்கே வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும் .உழைப்பின் எல்லா வலிகளையும் போக்கும் அருமருந்தாக வானொலி காதுகள் வழியே மனதிற்குள் களிம்பு பூசிக்கொண்டிருக்கும். அதற்குக் காரணம் அவ்வளவு நிகழ்ச்சிகள் வரும். காலை நிகழ்ச்சிகள் 10 மணிக்கு முடிந்தாலும் அடுத்து நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும். நம் ஆல் இண்டியா ரேடியோவை அதற்குள் இரண்டு முறை மூடித் திறந்து விடுவார்கள்.

காலை 10 மணி முதல் பகல் 12 வரை மணி வரைதான் இடைவெளி. அப்போது நிலையம் மாற்றினால் ஒருவர் வயலின் வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது இன்னொருவர் மிருதங்கம் வாசிப்பார் அல்லது ‘மாயா மாளவ கௌள’ பாடிக்கொண்டிருப்பார். யாரோ ஒருவர் லயவின்யாசம் செய்வார். யாராவது தலைவர்கள் இறந்து விட்டால் , ஒரு வாரம் சோக இசை போட்டே இழுப்பார்கள். அப்போதெல்லாம் இலங்கை வானொலிதான் எங்களைக் காப்பாற்றும்.

இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக்கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.

லைட்ஸ் ஆன், டயலாக் , விஷ்வல் பேஸ்ட், புக் ஷெல்ப், பயோடேட்டா, ரீடர்ஸ் ஒபீனியன், ஆட்டோகிராப், ரேஷன் கார்டு, டவுன்லோடு மனசு, ப்ளாஷ்பேக், இன்பாக்ஸ், ப்ளாக் அண்ட் ஒயிட், டாப் ஆங்கிள், கமெண்ட்டூன், ரிலாக்ஸ் ப்ளீஸ், டாப்டென் மூவீஸ், சூப்பர் சிங்கர், டிரைலர் டைம், சாங் ஃபார் யூ, க்ரைம் டைம், க்ரைம் ஸ்டோரி, ப்ரைம் டைம், பயோகிராபி, ஹலோ டாக்டர், கிச்சன் டைம் ,பிக் பாஸ், கனெக்‌ஷன்ஸ், ஜீன்ஸ், மியூசிக் ட்ராக்ஸ், மேக்ஸ் மசாலா, மிட்நைட் மசாலா, கிராமபோன், செம காமெடி, கோலிவுட் ஹிட்ஸ், என்றும் சூப்பர், சினி டைம் .

இவை எல்லாம் என்ன தெரியுமா? இன்றைய பிரபல அச்சு, காட்சி ஊடகங்களில் வரும் பிரபலமான தலைப்புகள். இவற்றில் எங்காவது தமிழ் இருக்கிறதா? இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .

‘மைக்’ என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.

அந்தத் தமிழ் இன்று எங்கே போனது? தங்கள் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் ரசனையை மட்டுமல்ல தமிழையும் வளர்த்தார்கள். அதுமட்டுமல்ல அந்த மண்ணில் புழங்கும் வார்த்தைகளான காலக்கிரமத்தில், மணித்தியாலம், வழமைபோல், கமக்காரர்கள் போன்ற சொற்களைக் கேட்கும்போது புதிதாக இருக்கும்.

இலங்கை வானொலியின் மூலமாக காதுகளுக்குள் கவரி வீசி மனதிற்குள் மகரந்தம் தூவிய அறிவிப்பாளர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். சைக்கிளில் சென்றால்கூட இரண்டு மணிநேரத்தில் சென்றுவிடக் கூடிய தூரம்தான். ஆனால், இடையில் இந்தியப் பெருங்கடல் இருக்கிறது. அது வேறு நாடாகவும் இருக்கிறதே என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கும். ஒவ்வொருவரையும் சென்று பார்க்கவேண்டும் பேசவேண்டும் பழகவேண்டும் என்கிற அவா அடி மனதில் உறங்கிக்கொண்டிருக்கும். ஆனால் எதுவுமே வாய்க்கவில்லை. நான் சந்தித்த ஒரே ஒரு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் மட்டும்தான். நான் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். அவர் தொலைக்காட்சியில் இன்றும் உயிர்ப்போடு நிகழ்ச்சிகளை வழங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

திரைப்படப் பாடல்கள் சார்ந்த அவரது அனுபவமும் அறிவும் அபரிமிதமான நினைவாற்றலும் ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல மிரளவைக்கும். அவர் பழகுதற்கு இனிய பண்பாளர்.

அதுவொரு அழகிய வானொலி காலம் – 6: உள்ளம் கொள்ளையடித்த நம்மவர்கள்!

srilankan-radio
 

இலங்கை வானொலியின் ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை’ என்ற வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையோடு கலந்துவிட்டவை. பிறகான காலங்களில் உள்நாட்டு அரசியல் சூழல்களால் ஒலிபரப்பில் பல தடைகள். பிறகு வர்த்தக சேவை, ஆசிய சேவை என்று மாறி மாறி வந்தாலும் அந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளை எங்களால் மறக்க முடியாது. அது ஒரு கனாக்காலம் போல் இப்போதும் நினைத்து ஏங்க வைக்கிறது; சிலிர்க்க வைக்கிறது; மகிழ வைக்கிறது; நெகிழ வைக்கிறது. மீண்டும் அந்தக் காலம் வராதா என்று ஏங்க வைக்கிறது.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதில் தடைகளும் பிரச்சினைகளும் ஏற்பட்ட பிறகு என் கவனம் இங்கே நம்மூர் பக்கம் திரும்பியது .இருந்தாலும் அவர்கள் கொடுத்த திருப்தியும் மகிழ்ச்சியும் இவர்களால் சிறு சதவீதம் கூட அளிக்க முடியவில்லை. இருந்தாலும் திருச்சி ,சென்னை வானொலி நிலையங்களில் நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறேன்.

 

திருச்சி வானொலி நிலைய அறிவிப்பாளர்களைத் தேடித் தேடிப் போய்ப் பார்த்தபோது குரல்களுக்கும் உருவங்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அழகான, அடித்தொண்டையில் மிருதுவான குரலில் பேசும் தூத்துக்குடி ராஜசேகரனைப் போய்ப் பார்த்தபோது அவர் பெரிய மீசையுடன் ராணுவ ஜவான் போல் கம்பீரமாக இருந்தார் .சில்வர் குரலில் பேசிய ஆர்.சீனிவாசனைப் பார்த்த போது வெற்றிலை பாக்கு வாயுடன் வித்துவான் போலத் தோன்றினார்.

திருச்சி வானொலியின் சூப்பர் ஸ்டார் போல் நினைத்த டி.எம். கமலா ஒரு தேவதை போல குரலில் தெரிந்தவர்,நேரில் பார்த்தபோது மனம் உடைந்து சுக்கு நூறானது.

சென்னை வந்து தென்கச்சி சுவாமிநாதனைப் பார்த்தேன். வானொலி அண்ணாவையும் சந்தித்தேன்.தென்கச்சி பேசும்போது “எனக்கு ஏராளமான கடிதம் எழுதுபவர்கள் என்னை நேரில் சந்தித்த பின் எழுதுவதே இல்லை. அவ்வளவு ஏமாற்றம். தந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். கேட்கும் குரல்களுக்கு நாமாக ஓர் உருவம் செதுக்கிக் கொள்வோம்; உடைகள் உடுத்தி வைப்போம்; உடல் மொழியும் சிருஷ்டித்திருப்போம். இப்படி நமக்குள் ஒரு சித்திரம் வரைந்து வைத்திருப்போம். அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையாக இருக்கும். ஆனால் அது நேரில் பார்க்கும்போது இதற்கு நேர்மாறாக இருக்கும். ஆனால் நமக்கு ஒரு கற்பனை செய்யும் சுதந்திரம் இருந்தது. தொலைக்காட்சியில் பார்க்கும்போது அவர்கள் காட்டும் முகத்தை, உடையைத்தான் நாம் பார்க்க வேண்டும்.அதனால் அவை சலிப்பூட்டுகின்றன.

வானொலி மூலம் தேனொலியாக நம் காது வழியாக நுழைந்து நம்மைக் காதலிக்க வைத்த குரல்கள் நிறைய உண்டு. சில குரல்களுக்குரியோரைப் பார்க்க முடியாவிட்டாலும் அது அப்படியே போகட்டும். அந்தக் குரலும் அது சார்ந்த கற்பனை வடிவமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

வாழ்வின் மீது பிடிப்பும் ரசனை உணர்வும் வளர்த்த வகையில் கலை உணர்வைப் பாமரனுக்கும் ஊட்டிய வகையில் இலங்கை வானொலிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களுக்கு மனதின் கரடுமுரடான பகுதியைச் செப்பனிட்டு நீர் பாய்ச்சி, நெகிழ வைத்துச் செழுமைப்படுத்தி ,ரசனையை மேம்படுத்தியதில் இலங்கை வானொலியின் பணியை மறக்க முடியாது.

இன்று ‘எஃப்எம் வானொலி ‘என்கிற பெயரில் ’குரைப்பது’ போல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது. இடையில் வரும் விளம்பரங்களும் எரிச்சலின் உச்சம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் செய்யும் அலப்பறைகள் வெறுப்பூட்டும் ரகம். அதிகப்பிரசிங்கித்தனங்களும்,தத்துபித்துத் தனங்களும், கத்துக்குட்டித் தனங்களும் அரைவேக்காட்டுத்தனங்களும் மலிந்துவிட்டன. கேட்கவும் பார்க்கவும் மிகவும் கொடூரமாக உள்ளன. கலையுணர்வு சிறிதும் அற்றவர்களாக இருக்கிறார்கள். வியாபாரம் என்றும் டிஆர்பி என்றும் அலைகிறார்கள்.

ஊடக அறம் என்பது மெல்ல இறந்து வருகிறது. எல்லாமே மாறிவிட்டன. ரசனை உள்ள நிகழ்ச்சிகள் மிக மிகக் குறைந்துவிட்டன. பரபரப்பு என்கிற பெயரில் ஆபாசமும் வன்முறையும் தலைவிரித்தாடுகின்றன. இவர்கள் எப்போது திருந்துவார்கள்? ஏக்கம்தான் மிஞ்சுகிறது. என்றாலும் இதுபோன்ற ஊரடங்கு நெருக்கடிக் காலங்களில் தொலைக்காட்சியும் இல்லாமல் போனால் வானொலி மட்டும்தானே நமக்கு நண்பனாக இருக்கமுடியும்.

https://www.hindutamil.in/news/blogs/553948-srilankan-radio.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.....எவ்வளவு ஏராளமான இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை இங்கு சிதற விட்டிருக்கின்றார் அருள்செல்வன், அன்பரே உமக்கு நன்றி.அந்தக்காலம் இனி வராதுதான் ஆனால் நினைவுகள் அழியாதுதானே.....!  😇

பகிர்வுக்கு நன்றி நுணா, எங்கு தேடிப்பிடித்தீர்கள் இந்த செய்திகளை....!  👌

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.