Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம்

தாஜ்

கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப்படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலிவுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது.

‘கோலிவுட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிறபோதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி! முகம் சுழிக்கும் அளவுக்கு! ஆனால், அங்கேதான் உலக அளவில் ரசிகர்களைத் தேடிவைத்திருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் உருவாகி / வடிவுகொண்டு / வெளியாகிறது! வியப்புதான்!!

தமிழ்த் திரைப்படம் பேசத்துவங்கி சுமார் எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் ஆரம்பப் படம் தொட்டு இன்றைய சினிமாவின் பிரமாண்ட வடிவம்வரை அது உருமாறிய எண்ணிக்கைகள் அதிகம். தனது பரிணாம வளர்ச்சியின் கூறாய் என்னென்னவோ வேஷமெல்லாம் காட்டியிருக்கிறது. ஆனால் யதார்த்தம் / கலைநுட்பம் என்பதைத் தவிர. என்றாலும், அதன் நீண்ட வரலாற்றில் அப்படியான சுவடுகள் இல்லையென்று சொல்லிவிட முடியாது.

ஆரம்ப காலத்தில் எல்லா மொழிகளின் சினிமா மாதிரியே, நம் தமிழ்ப் படமும் புராணக் கதைகளையே சதமென நம்பித்தான் முகிழ்ந்து தவழ்ந்திருக்கிறது. அடுத்து, ராஜா ராணி கதை வட்டத்திற்குள் வெகுகாலம் சுற்றியப்படி, மூச்சுக்கு மூச்சு பாடிக்கொண்டு, தப்பிக்க வழி புரியாத ஓர் சஞ்சாரத்தில் ‘நாட்டு சுதந்திரத்தாகப் பேர்வழியாக’ தலையெடுத்தது. பின்னர் சமூகக் கதைகளுக்குள் கால் வைத்தது ‘கிளிசரின்’ இல்லாமலே படம் அத்தனையிலும் அழுது தீர்த்தது அல்லது பாடித் தீர்த்தது. அதன் நீட்சியாய் சமூதாய சீர்திருத்த வேகம்காட்டி நீண்ட வசனங்களைப் பேசவும் கைத்தட்டல் வாங்கி பெருமிதம் கொள்ள,அடுத்த யுக்தியாக ஒருபக்கமும் தீவிர கதை சொல்லும் உந்தலோடும், இன்னொருப் பக்கம் பொழுதுபோக்கு அம்சங்களோடும் முகம் காட்டி அமோகமாக வாகைச் சூடியது.

தீவிர கதை சொல்லுதல் என்பது, தமிழ்ச் சினிமாவில் ஆதிதொட்டு தொடர்ந்த பழைய அழுகையின் புதிய பதிப்பு. பொழுது போக்கு அம்சமென்பது நாயகிகளின் அரைகுறை ஆடை மேனி / அவர்களின் திமிரிய வனப்புகள் / விகரதாப நெளிதல்கள் / ஆடல் பாடல்கள் / நியாயத்தை நிலைநாட்ட எதிரிகளை நாயகன் பந்தாடுவது என்பனவற்றை முதன்மைப்படுத்துவது. முன்னது சிவாஜியின் படங்கள் என்றால் பின்னது எம்.ஜி.ஆர். அவர்கள் இருவரும் இறந்து போய்விட்டார்கள் என்றாலும், அவர்களது ஃபார்முலா இன்னும் உயிரோடுதான்!! சரியாக சொல்வதானால் அது இன்னும் கூடுதலான மெருகுடனும், தொழில்நுட்பப் பின்னலுடனும் வெற்றிகரமாக ஜீவிக்கிறது!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களை தமிழ்ச் சினிமாவில் ஸ்திரபடுத்திக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் வங்கத்தில் திரு.சத்யஜித்ரே தனது திரைப்பட மேன்மையை உலகிற்கு காட்டினார். கலையின் பரிமாணங்களுடன் நுட்பமான யதார்த்தங்களை அவர் காட்சிகளாக்கிக் காட்ட, சினிமாவின் அடுத்தக் கட்டத்தை விரும்பிய அனைவரும் அதில் லயித்து போனார்கள். தமிழைத்தவிற பிற மொழி தயாரிப்புகள் இந்த காலக்கட்டத்தில் விழித்துக் கொண்டார்கள். அடுத்தக்கட்ட சினிமா குறித்து குறைந்த பட்சமேனும் சிந்திக்கவாவது செய்தார்கள். இந்த சிந்திப்பையொட்டிய எழுச்சியின் கூறாகத்தான் ‘பூனாஃ பிலிம் இன்ஸிட்டியூட்’.

சத்யஜித்ரேயின் எழுச்சியை தமிழ்த் திரையின் விசயஞான பெரிசுகள் கீச்குரலில் பாராட்டிக் கொண்டிருக்க, "உலகப்பார்வைக்கு இந்தியாவின் ஏழ்மையைப் படம் பிடித்துக் காட்டி பரிசுகள் பெறுவதா?" என்கிற விமர்சன கூக்குரலும் இங்கே எழுந்தது. இங்கே மட்டுமல்ல எங்கேயும் எதிலும் அதிமேதாவிகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தயங்குவதே இல்லை. இவர்களின் விமர்சனக் குரல் வங்கத்திலிருந்த சத்யஜித்ரேவுக்கு எட்டியதா என்று தெரியாது. எட்டியிருக்குமென்றால் அதை அவர் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்? யோசிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

சத்யஜித்ரேவின் எழுச்சிக்குப்பிறகு விழித்துக் கொண்ட பிறமொழி தயாரிப்புகளில் மலையாளப் படங்கள் தங்களது புதிய ரூபங்களை காட்டத் துவங்கியது. ‘செம்மீன்’/ ‘துலாபாரம்’யென நகர்ந்து, ‘காடு’ எடுத்து எழுந்து தங்களது மேல்நோக்கியப் பயணத்தை உறுதிப்படுத்தியது. அந்தப் படங்கள் ‘ஆர்ட்மூவி’ இல்லையென்றாலும் நிச்சயம் அதை நோக்கி நகர்ந்த படங்கள். அந்த மூன்று படங்களுக்குமே இங்கே தமிழ் ரசிகர்களிடையும் மிகுந்த வரவேற்பு இருந்தது. இருந்தும், அதையொத்த தயாரிப்பை நிகழ்த்த இங்கே யாரும் தயாராக இல்லை. அதற்காக இங்கே உள்ளவர்களின் கபால மடிப்புகள் குறைந்ததென்றும் சொல்லிவிட முடியாது.

எது ஒன்றையும் எளிமைப்படுத்தி, இரட்டிப்பு லாபநோக்குடன் அணுகுவதே நம் சினிமாக்காரர்களின் தீர்மானமான குறி. செம்மீன் இங்கே படகோட்டியானது, துலாபாரம் அதே பெயரில் ஆனால் வியாபார மாற்றங்களுடன் மறுபதிவு கண்டது. காடுவை இங்கே எப்படி சிதைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் செய்திருப்பார்கள். ஆனாலும், சத்யஜித்ரேயின் எதிரொலி அதிர்வு இங்கே இல்லாமல் இல்லை. ஜெயகாந்தன் ‘பாதை தெரியுது பார்’ என்று முயன்றதெல்லாம் அந்த எதிரொலியின் அதிர்வுதான்.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தங்களது ஃபார்முலாவின் முழுவெற்றியால், தமிழ்த் திரையரங்குகளை ரொம்பி வழியவிட்டுக் காட்டியபோது, அவர்களின் நகலாக இங்கே இன்னும் பல சூப்பர்ஸ்டார்களும், நவரச நாயகர்களும் கிளைத்துக் கிளம்பி தனி கடைகள் திறந்தார்கள். பெருசுகளின் வெற்றி ஃபார்முலாவுக்கு இன்னும் கூடுதலான பூச்சுவேலைகளை செய்துகொண்டார்கள். இப்படி அவர்களும் பணத்தை அள்ளத் துவங்கிய நேரத்தில் பெங்கால், மலையாளம், இந்தி, கன்னடம், மராட்டி, துளு போன்ற மொழிகளில் சத்யஜித்ரேயின் கலைவடிவத்திற்கு நிகரானப் படைப்புகள் திரையேறத் தொடங்கியது. ஒவ்வொரு மொழியிலும், இன்றும் வருடத்திற்கு ஐந்து கலைப் படங்களேனும் நிச்சயம் என்கிற நிலை.

சத்யஜித்ரே, அபர்ணாசென், ஸியாம் பெனகல், கோவிந்த் நிஹலானி, மீரா நாயர், சேகர் கபூர், தீபாமேத்தா, ரிக்விக்கடக், கிரிஷ்கர்னாட், காசரவல்லி, அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், கே.ஜி. ஜார்ஜ், வாசுதேவன் நாயர், ஜான் ஆபரஹாம், ராஜீவ் அஞ்சல், டி.வி.சந்திரன், சித்திக் போன்ற கலை ஆர்வம் கொண்ட இயக்குனர்களின் சீரிய முயற்ச்சிகளால் நமக்கு உன்னதமான படங்கள் பார்க்க கிடைத்தது அல்லது கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியுண்டு என்றால் இவர்களால் இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பேசப்படுவதிலும் பெருமை சேர்ப்பதிலும் அந்த மகிழ்ச்சி கிளைத்து விண்ணைத் தொடுகிறது.

பணம்கொட்டும் சினிமா மாதிரியான மீடியாக்களில் ஈடுபடுகிறவர்கள் தங்களது உழைப்புக்கு மீறிய வகையில் பன்மடங்கு பணம் ஈட்டுவதை குறியாகவே கொண்டிருக்கிறார்கள். சம்பாத்திய இலக்கணமெல்லாம் இவர்களுக்கு எப்பவும் ஆகாது. மக்களின் நாடித்துடிபை துல்லியமாக கணித்து, திரையை வண்ணமயமாக்கி மக்களை கவர்ந்திழுத்து சுரண்டுவதில் வல்லவர்கள். இதனாலேயே இவர்களுக்கு சினிமாவை, ‘வாழ்வின் யதார்த்தத்தை பதிவாக்கிப் பார்க்கும்’ பார்வையே இல்லாமல் போய்விட்டது. இவர்களுக்குள் தவறி யாரேனும் ஒருவர் கலைப்படம் என்பதாக முயன்றால், அவர் இங்கே பைத்தியக்காரன்! பணம் பண்ணவேண்டிய இடத்தில் கலை என்பது இவர்களுக்கு ஆவதேயில்லை. கோடிகளில் புரளும் தகிப்பில் உலகில் மிகச்சிறந்த பூஷ்வாக்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுபவர்கள் இவர்கள்.

அடூர் கோபாலகிருஷ்ணனை ஒரு பத்திரிகை நிருபர் பேட்டிக் காணுகையில், "உங்கள் படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லையே? பின் எப்படி சமாளிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "என் படங்கள் லாபம் தராமலா நான் தொடர்ந்து படம் எடுக்கிறேன். நான் திட்டமிட்டு குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்கிறேன். அதை என் ரசிகர்களும் பார்க்கிறார்கள். எனக்கொன்று நான் நிர்ணயித்துக் கொள்ளும் மாதாந்திர சம்பளம் அதன் வழியே கிடைக்கத்தான் செய்கிறது. பிறகு இதில் என்ன பிரச்சனையிருக்கிறது!" என்றார்.

திட்டமிட்டு தயாரிக்கும் முயற்ச்சியும், குறைந்த லாபத்தின் அளவில் திருப்தியும் இருக்கும் பட்சம் கலைப்படம் எடுப்பதில் பிரச்சனை எழாது என்பதாக அவரது பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். திரைப்பட தயாரிப்பின் வழியே, கோடிகளிலான வரவு செலவு தரும் ஆனந்தம், போதை தரும் சுகம், தேடிவந்து மடியும் பெண்களின் வாசனை, எளிதில் வாய்க்கும் பேர்/ புகழ்/ பந்தா, வருங்கால முதலமைச்சருக்கான கனவு போன்ற நட்சத்திர சங்கதிகளோடு சஞ்சரிக்கும் நம் சினிமாகாரர்களுக்கு அடூர் கோபாலக்கிருஷ்ணனின் இந்த பதில் இஷ்டப்படாது.

தமிழ்ச் சினிமா பேச ஆரம்பித்து, வெற்றிகரமான வியாபார ஸ்தலமாக உருவெடுத்தத் தருணத்தில், ஊர் ஊராய் தெருகூத்தும் நாடகம் போட்டுக்கொண்டிருந்த அத்தனை கலைஞர்களும் தங்களது ஜாகையை சினிமாவின் பக்கம் மாற்றிக்கொள்ளத் துவங்கினார்கள். அந்த நடிகர்கள் அங்கே நடிக்கும்போது என்னென்ன குணச்சேட்டைகள் செய்தும், விடிய விடியப் பாடியும் கைத்தட்டல்கள் வாங்கினார்களோ, அது அத்தனையையும் சினிமாவிலும் செய்தார்கள். இங்கேயும் அதற்கு அதே கைத்தட்டல் கிடைத்தது. நாடகத்தையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க யாரும் முயலவேயில்லை. தமிழ் சினிமா வெகுகாலம் தன் வளர்ச்சிப் பாதையில் இப்படிதான் சறுக்கத் தொடங்கியது.

இந்த சறுக்கலின் தொடர்ச்சி கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்வரைகூட இருந்தது. கத்திப் பேசுவது, கர்ஜிப்பது, கதறி அழுவது, தனக்குத்தான் பேசிக்கொள்வது, விழிகளை உருட்டி மிரட்டுவது, புருவங்களை வளைத்து நெளிப்பது, பேச்சில் ஏற்ற இறக்க மேனரிஸங்கள் செய்வது, நடையில் அபிநயம் காட்டுவது போன்றவற்றை நடிப்பின்பேரால் தாராளமாக நிகழ்த்தினார்கள். இதில் நம் நடிகர்திலகம் ரொம்பவும் கெட்டி. கடைசிவரை அதில் அவர் பிசகவே இல்லை. வட்டத்தைத் தாண்டாத நடிகர். இன்றைக்கு அவரது கீர்த்திகள் வாழ்வது மாதிரி, அவரது நடிப்பு குறித்த வியப்புகளும் வாழ்கிறது.

நடிகர்கள் மட்டுமல்ல, அரங்க அமைப்பாளர்களில் இருந்து இயக்குனர்கள்வரை தமிழ்ச் சினிமாவில் ஆதிக்கம் புரிந்த பலரும் மேடைவழி வந்தவர்கள். இவர்கள் எல்லோராலுமே நம் சினிமா விஸ்தீரணமாகப் பாதிக்கப்பட்டது. நம் ‘இயக்குனர் சிகரம்’மும் நாடகவழி வந்தவர்தான். அவர் தனது கட்டுரை ஒன்றில், "இயக்குனராக இயங்க ஆரம்பித்து நாலைந்து படங்கள்வரை எனக்கு நாடக இயக்கத்திற்கும், சினிமா இயக்கத்திற்கும் வித்தியாசமே தெரியாமல்தான் இருந்தது" என்றிருந்தார். எப்படி இருக்கிறது கதை! தமிழ்ச் சினிமா இன்றைக்கு தன்பாதையில் கொஞ்சமேனும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றால், அதெல்லாம் இந்த மாதிரியான சிகரங்களின் மீதேறித் தாண்டியதால்தான்.

சினிமா என்கிற வீசுவல்மீடியாவை பற்றி வழிமுறையாகப் பாடம் போதிக்க பூனாவில் ஃபிலீம் இன்ஸிட்டியூட் ஏற்பட்டது மாதிரி, பிற்காலத்தில் சென்னையிலும் அப்படியொன்று ஏற்பட்டது. அதன் வழியாவது தமிழ்ச் சினிமாத்துறைக்கு விமோச்சனம் கிட்டும் என்றும், வருடத்திற்கு ஐந்தாறு கலைப் படங்களாவது வர வாய்ப்பிருக்கிறது என்றும், நம்பிய சிலரில் நானும் ஒருவன். அதன் ஆரம்ப அறிகுறியும் அப்படித்தான் இருந்தது. அதில் படித்து வெளிவந்த ருத்ரய்யா ‘அவள் அப்படித்தான்’ தந்தபோது துளிர்த்த நம்பிக்கை அது. ஆனால் அதன் பிறகு வந்த அந்த இன்ஸிட்டியூட் மாணவர்களில் எவர் ஒருவரும் அப்படி நம்பிக்கை தரும் படம் தந்தார்கள் இல்லை. இன்றுவரையிலும்கூட அதுதான் நிலை.

மாறாய், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவர்கள் நடிகர் விஜயகாந்திற்கு பின்புலமாக நின்று தயாரித்து காட்டிய ‘வன்முறையும், இரைச்சலும், பிரமாண்டப் பவிசும்’ கூடியப் படங்கள் நம் ரசிப்பின் விதியை நிர்ணயப்பதாக ஆகிப்போனது. அதுதான் இன்றுவரை நம்மை மாறிமாறி துரத்திக் கொண்டு இருக்கிறது. விடாது கருப்பு!

இன்றைக்கு, உலகச் சினிமாவின் பிரமாண்டத்தோடு நேர் நிற்கும் வல்லமை கொண்டதாக தமிழ்ச் சினிமா உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இத்தொழிலில் வளர்ந்துள்ள தொழில் நுட்பம் அத்தனையையும் நமது சினிமா உள்வாங்கி பெருத்துவிட்டது. இசையின் பதிவில், காட்சிகளின் லாவகத்தில், அதன் தெளிவில், கிராஃபிக் யுக்தியில் என்று கிடுகிடு வளர்ச்சி. இன்றைய ரசிகர்களும் தாங்கள் கொடுக்கும் காசுக்கு அத்தகைய வித்தைகளை எல்லாம் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்ச்சினிமாவின் நிலை இப்படி கிளைத்துவிட்ட இந்த காலத்தில், இங்கே கலைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நியாயமாக யோசிப்பார்கள். அவர்கள் அருகிப் போக வாய்ப்புகள் அதிகம். எங்கும் எப்பொழுதும் யதார்த்தத்திற்கு பிரமாண்டம் சத்ரு.

வியாபாரப்படம், கலைப்படம் என்றிருந்த நிலைபோய், வியாபாரப்படம் மட்டுமே என்கிற நிலை இங்கே மெல்ல மெல்ல ஸ்திரப் பட்டுவிட்டது. இப்பொழுது வியாபாரப் படங்களிலேயே நல்லப்படம் / நல்லா இல்லாத படம் என்கிற ரீதியில் இருகூறாகப் பார்க்கச் சொல்கிறார்கள். அதாவது மசாலாத்தனம் நிறைந்த, சொதப்பல் கூடியப் படத்தை நல்லா இல்லாத படமென்றும், மசாலத்தனம் கொஞ்சம், சொதப்பல் கொஞ்சம், கலைநேர்த்தி செய்நேர்த்தி என்பதும் கொஞ்சம்யென்று கலந்துப்பட்ட படத்தை நல்ல படம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

எல்லாத் தரப்பிலும் அதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆக, பிறமொழிகளின் சினிமா ரசிகர்களுக்கு கிட்டிய கலைப் படங்களிலான பேரானந்தம், தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்க்கவாய்த்த தமிழ் ரசிகர்களுக்கு இனி இல்லையென்று ஆகிவிட்டது. இங்கே நேற்றைக்கது இல்லை. நாளைக்கும் அது இல்லவே இல்லை. இதில் பெருவாரியான தமிழ் ரசிகர்களுக்கு எந்தவொரு வருத்தமுமில்லை என்பது இங்கே முக்கியச் செய்தி.

எழுபத்தி ஐந்து வருட தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ தொடங்கி, ஜெயபாரதியின் ‘குடிசை’ பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள், வீடு’ ருத்திரய்யாவின் ‘அவள் அப்படிதான்’ துரையின் ‘பசி’ சேதுமாதவனின் ‘மறுபக்கம்’ ஜானகி விஸ்வநாதனின் ‘குட்டி’ பாலச்சந்தரின் ‘ஒரு வீடு இருவாசல்’ பிரதாப்போத்தனின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மணிரத்தினத்தின் ‘இருவர்’ பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’ ஞானசேகரனின் ‘மோகமுள், முகம், பாரதி’ ஜெகன்ஜியின் ‘கோடம்பாக்கம்’ கமலின் ‘ஹேராம், அன்பே சிவம்’ முடிய தமிழில் வந்த கலைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சிலருக்கு இந்த பட்டியல் சலுகை கூடியதாக தெரியும் வாய்ப்புண்டு. ஒருவகையில் அதுவும் நிஜம்தான். நீண்ட சரித்திரமும், பெரிய ஆகிருதியும் கொண்ட தமிழ்ச் சினிமாவை முன் நிறுத்திப் பார்க்கிறபோது மேற்கண்டப் பட்டியலின் எண்ணிக்கை என்பது ஒன்றுமில்லை.

இன்றைக்கு குறிப்பிடப்படுகிற நல்லப்படம் அல்லது இடைநிலைப்படம் என்பது இன்றைக்குத்தான் என்றில்லை அது இயக்குனர் ஸ்ரீதர் காலத்திலேயே உருகொள்ளத் தொடங்கிவிட்டது. அவரது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ‘வெண்ணிற ஆடை’ என்பதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள்தான். இந்த வரிசையில் தமிழில் சொல்லி கொள்ளத் தகுந்தப் படங்கள் உண்டு. பாலுமகேந்திரா / மகேந்திரன் / மணிரத்தினம் / ஃபாசில் போன்றோர் பெரும்பாலும் இந்த வரிசைப் படங்களையே எடுப்பவர்களாக இருந்தார்கள். தவிர, அதன் கூறுகளை புதிப்பிக்கவும் செய்தார்கள். கமலும் தன்னுடையப் படங்களை இந்த வரிசையில் நிறுத்த பலத்த முயற்சிகள் எடுத்துக் கொள்வார். ‘ராஜப்பார்வை’யில் தொடங்கிய அவரது அந்த முயற்சி இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதில், அவர் தேறினதும் உண்டு தேறாததும் உண்டு.

மேலே குறிப்பிட்டிருக்கிற தமிழ் இயக்குனர்களின் இடைநிலைப் படங்கள் அல்லது நல்லப்படங்கள் நமது ரசனையை உரசி கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பது வாஸ்தவம்தான். என்றாலும், கேரளச் சினிமாவில் இப்படியான இடைநிலைப் படங்களை இயக்கிய அல்லது இயக்கிக்கொண்டிருக்கும் பரதன், சத்தியன் அந்திகாடு, சீனிவாசன், சிபிமலயில், ஃபாசில், கமால், பாலச்சந்திரமேனன், லெனின் ராஜேந்திரன், மேகந்தாஸ் போன்றவர்களிடம் காணும் கதைச்சொல்லும் முறை, காட்சிகளின் எளிமை, உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தும் பாங்கு, காட்சிக்கு காட்சி பின்னிக் கொண்டு நெளியும் நகைச்சுவை, கதாபாத்திரங்களின் சகஜம், நடிகர்களின் செயற்கைத்தனமில்லா ஒத்துழைப்பு போன்ற அம்சங்கள் அலாதியான ரசனைக்கொண்டது. மலையாள மொழியில் வெளிவரும் படங்களில் பாதிக்குப்பாதி இப்படியானதே என்பது இன்னொரு உபசெய்தி.

சமீபகாலத்து தமிழ் இயக்குனர்களான தங்கர்பச்சன், பாலா, செல்வராகவன், எஸ்.ஜெனநாதன், அமீர் ஆகியோரது இடைநிலைப் படங்கள் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. தங்கர்பச்சனின் அழகியும், சொல்ல மறந்த கதையும் கலைப்படத்தின் நெருக்கம் கொண்டது. பாலாவின் ‘பிதாமகன்’ ஓர் சாத்திய முயற்சி என்றால் அமீரின் ‘பருத்தி வீரன்’ விசாலமான கற்பனை வளம் முகிழ்ந்த நிஜத்தின் அழகியப் பதிவு. அதன் பரிமாணத்தின் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் உச்சம் தெளிவாகத் தெரிகிற இடைநிலைப்படமிது. அர்த்தமற்ற வாழ்வோடு காலத்தின் போக்கில் கரைகிற மக்கள் நம்மில் ஏராளம். உள்ளார்ந்த கிராமப் புறங்களில் அந்த தொகை அதிகம். அவர்களில் சிலரை மையப்புள்ளியாக்கியிருக்கிற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனியை "சூப்பர் ஸ்டார்" ஆகத்தான் பலகாலமாகத் தெரிந்திருந்தது.. எனினும் அவரின் நடிப்புத்திறனை "அவள் அப்படித்தான்" மற்றும் "முள்ளும் மலரும்" போன்ற படங்களைப் பார்த்த பின்னர்தான் அறியமுடிந்தது.. நிறையவே திறமையுள்ள ரஜனி "சிவாஜி" போன்ற படங்களில் நடிப்பது வெறும் லாபம் சம்பாதிக்க மாத்திரம் என்று நிறையப் பேருக்குத் தெரிந்தாலும் தங்கள் பங்கினைச் செலுத்த முண்டியடித்துக்கொண்டு சினிமாக் கொட்டகைக்கு ஓடத்தான் செய்கிறார்கள்!

கலை கூட வியாபார ரீதியில் வெற்றிபெறாதவிடத்து எவரும் அதனை முழுநேர முயற்சியாய்த் தொடரமுடியாது என்பது கசப்பான உண்மை தான். மாற்றம்

முற்றிலும் இரசிகர்களின் கையில் தான் உள்ளது. ஆனால் இதில் உள்ள பெரிய

சிக்கல் என்னவெனில், தற்போதைய தமிழ் திரைப்படங்களால் அதிருப்தி அடையும் இரசிகர்கள் தங்களது அறிவின,; இரசனையின் அலைவரிசையில் அதிரும் படைப்புக்களைப் பிற மொழிகளில் அல்லது திரைப்படம் அல்லாத இதர வடிவங்களில் தேடிச் சென்று திருப்தி கண்டு விடுகிறார்கள். இதனால் ஒரு குறிப்பிடும் சாரார் தான் தமிழ் திரை இரசிகர்களாக நிலைப்பதனால் அச்சாராரால் மட்டுமே இரசிக்கப்படக்கூடிய படைப்புக்கள் தான் தமிழில் கோலோச்சும் நிலை...

புலம்பெயர் தேசங்களில் பலவகைப்பட்ட கலை வடிவங்களைப் பார்த்தும், இத்தேசங்களின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறிந்தும் கற்றும் வளருகின்ற நம்மவர்களேனும் பிரமிப்புக்களை தமிழ்திரைப்பட முனையில் ஏற்படுத்துவார்களா என்றால், அவர்களும் தாம் பார்த்த அறிந்த அனைத்துக்குள்ளும் தென்னிந்திய தமிழ்த்திரையின் சாயலையே வடிகட்டி எடுத்துப் பின்பற்றுகிறார்கள். கனடாவில் பிறந்து வளாந்த தமிழ் படைப்பாளிகள் ஏற்கனவே மரத்தைச் சுற்றி ஓடி டூயட் பாடத் தொடங்கி விட்டார்கள்!

ஈழத்தமிழர்களிடம் இல்லாத பிரமாண்ட சந்தை இந்தியத் தமிழர்களிடம் உள்ளது.

அறுபது மில்லியன் சனத்தொகை என்பது கனடா போன்ற நாடுகளின் சனத்தொகையின் இரண்டு மடங்கு. இந்நிலையில், இந்தச் சந்தையில் ஒரு பங்கினைப் பெற்றாலேயன்றி தமிழில் கலைஞர்களாய் வாழ ஆசைப்படும் ஈழத்தமிழர் எவராலும்நிலைக்க முடியாது. ஆனால் நமது படைப்பாளிகளோ நம்மவரின் மனங்களைக் கூட இன்னமும் கவராது உள்ள நிலையில் இந்திய

சந்தையை ஆக்கபூர்வமாகப் பிடிப்பதற்கு இன்னமும் சற்று நாளாகும் என்றே தோன்றுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.