Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம்

குறும் தேசியவாதிகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வெற்றிபெற்ற மக்கள் போராட்டம்

     — வி. சிவலிங்கம் — 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை யாத்திரை  

பரந்த தமிழ்பேசும் மக்கள் தேசிய முன்னணிக்கான அறைகூவல் !! 


–        தமிழ்க் குறும்தேசியவாதம் பின்தள்ளப்படுகிறது. 

–        இருதேசம் ஒருநாடு காணாமல் போயுள்ளது. 

–        சிவில் சமூக அணித் திரட்சி கருக்கட்டுகிறது. 

–        புதிய தலைமுறையின் புதிய தேசியவாதம் முகிழ்கிறது. 

–        தமிழ்முஸ்லீம்மலையக அணிச் சேர்க்கை யதார்த்தமாகிறது. 

–        சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மீதான புதிய அழுத்தங்கள். 

நடந்து முடிந்த ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை அமைதியாக, தெளிவாக, இறுக்கமாக புதிய வரலாற்றிற்கான ஆரம்பத்தினை வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தினை கிழக்கு மாகாண மக்கள் திறந்திருப்பது பல அனுபவங்களை, பல செய்திகளை, பல திருப்புமுனைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

மிகவும் குறுகிய காலத்தில், சிங்கள பெருந்தேசியவாதிகள் விழித்தெழுவதற்கு வாய்ப்பளிக்காமல், பொருத்தமான காலகட்டத்தில் இப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சிவில் அமைப்புகள் பலமாக வளராத நிலையிலும், காலத்திற்கு ஏற்றவாறான வகையில், பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் பெரும் நீண்ட  பயணத்திற்கான திட்டமிடுதல்களை மேற்கொண்டிருப்பது பிரச்சனைகளின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்ததன் வெளிப்பாடே என்பதை யாத்திரை மிக நன்றாக வெளிப்படுத்தியுள்ளது.  

தமிழ் அரசியல் கட்சிகளின் தலையீடு 

அரசியல் கட்சிகளின் கைகளில் இந்த யாத்திரையின் கட்டுப்பாடு முழுமையாகச் சென்றிருக்குமாயின் அவை இடைநடுவில் பிளவுபட்டுச் சென்றிருக்கும் என்பதை யாத்திரையின் இறுதி முடிவுகளில் ஏற்பட்ட சில சலசலப்புகள் உணர்த்தின. இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்ட வேளையில் அல்லது அவை பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் முஸ்லீம் அமைப்புகளின் ஆதரவு இந்த அளவிற்குக் கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே. ஆனால் இப் பயணத்தின் முன்னதாகவே சுமந்திரன், சாணக்கியன் என்போரின் பாராளுமன்ற உரைகளின் தாக்கம் முஸ்லீம் மக்களால் பெரிதும் உணரப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் இந்த யாத்திரையின் முக்கிய அங்கங்களாக அவதானிக்கப்பட்டமையால் முஸ்லீம் மக்களின் பிரதேசங்களிலிருந்து பெண்கள் உட்படப் பெருந்தொகையானோர் கலந்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாநகரசபை மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

யாத்திரை ஆரம்பித்த சில மணி நேரங்களில் பொலீசாரின் கெடுபிடிகள் அதிகரித்த நிலையிலும் மக்கள் அவற்றைப் புறக்கணித்து சாரி சாரியாக இணைந்தனர். இதற்கான காரணம் என்ன? ஒரு புறத்தில் மக்களால் அறியப்பட்ட சிவில் சமூக உறுப்பினர்களும், மறு புறத்தில் பொலீசாரின் கெடுபிடிகளை சுமந்திரன்,சாணக்கியன் ஆகியோர் மிகவும் அப்பட்டமாகவே உதறி எறிந்து மக்களுக்குத் தலைமை தாங்கிய சம்பவங்கள் இளைஞர் மத்தியிலே புதிய உற்சாகத்தை, வேகத்தை அவர்களுக்கு வழங்கியது. மிகப் பெருந்தொகையான முஸ்லீம் இளைஞர்கள் உற்சாகத்துடன் மாலைகள் இட்டு வரவேற்ற நிகழ்வுகள் முற்றிலும் எதிர்பார்க்க முடியாதவை.  

இவ்வாறான சம்பவங்கள் இப்போது எப்படிச் சாத்தியமாகிறது? தாம் அடையாளம் காணும் இன்றைய தலைவர்களை இனவாதிகளாக அல்லது முஸ்லீம் எதிர்ப்பாளர்களாக அவர்கள் காணவில்லை. இதனால்தான் தமது நம்பிக்கைகளை அவர்கள் மீது வளர்க்கிறார்கள். அவ்வாறான அரசியல் தலைமைகள் அன்று காணப்பட்டார்கள். இன்று இனவாதிகளாக, தமிழ்க்குறும் தேசியவாதிகளாக, பிரிவினைவாதிகளாக, முஸ்லீம் எதிர்ப்புவாதிகளாக, சிங்கள எதிர்ப்பு வாதிகளாகக் காண்கிறார்கள். தேசிய ஒற்றுமை என்பதை மிகவும் போலியாக நடிப்பதை மிக நீண்ட காலமாகவே அவதானித்து வருகிறார்கள். இதனால்தான் கடந்தகால இவ்வாறான சுமைகளற்றவர்களை நோக்கி மக்கள் இன, மத பேதங்களைக் கடந்து செல்கிறார்கள்.  

இன இணக்கத்துக்கு ஆபத்தான அரசியல் தலைமகள் 

இந்த யாத்திரை அரசியல்வாதிகளின் கைகளில் முழுமையாகச் சிக்கியிருக்குமானால் குறுந்தேசியவாத சக்திகளால் மேலும் நிலமைகள் சிக்கலாகியிருக்கும். வடக்கு, கிழக்கு இணைப்பு எனவும், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனவும் கூச்சல் போட்டு இன இணக்கத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். இந்த  நிகழ்வின்போது ‘இரு தேசம், ஒரு நாடு’எனக் கூறிக்கொண்டு, தேசிய நல்லிணக்கத்தைக் கேள்விக் குறியாக்கிச் செல்லும் அரசியல் சக்திகளை மக்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்த பலர் அந்த யாத்திரை என்ற படகில் அவர்களையும் ஏற்றினார்கள். ஆனால் தம்மிடையேயுள்ள பிணக்குகளையே இந்தப் பயணத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தினார்கள். காணாமல் போனார்கள். ஆனால் மக்கள் மிகவும் பொறுமையுடன் சகலரையும் அணைத்துச் சென்றமை என்பது சிவில் சமூகத்தினரின் ஆற்றலை, நோக்கத்தினை நன்கு வெளிப்படுத்தியது. 

வழி நெடுகிலும் ஆயிரக் கணக்கான மக்களின் பங்குபற்றலோடு இந்த ஊர்வலம் முஸ்லீம் மக்களின் செறிந்த பிரதேசங்களைக் கடந்து சென்ற வேளையில் ஆயிரக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் உற்சாகமாகப் பங்கு கொண்டது மட்டுமல்ல, வரலாறு காணாத வகையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்! எமது நிலம் எமக்கு வேண்டும்! ஜனாசாவை எரிக்காதே! மலையக மக்களுக்குச் சம்பளம் கொடு! கொலைகார அரசே நீதி வேண்டும்! என வான் அதிரக் குரல் கொடுத்ததை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. எம்மால் நம்பவும் முடியவில்லை. நேற்றுவரை சாத்தியமா? என்றவர்கள் வியக்கிறார்கள். முஸ்லீம் இளைஞர் இந்த அளவிற்கு ஆழமாக சிந்தித்து அவ்வாறான கோஷங்களை முன் வைத்துள்ளார்கள். வீதிக்கு வந்து இணைந்துள்ளனர். 

முஸ்லிம்கள் குரல்கொடுத்த தமிழர் பிரச்சினைகள் 

சிறைக் கைதிகள் குறித்து எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் இதுவரை குரல் எழுப்பியதில்லை. மலையக மக்களின் சம்பளம் குறித்துப் பேசியதில்லை. ஆனால் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யான போராட்டம் அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறான குரல்களை வீதிக்கு எடுத்து வந்திருக்கிறது. சிங்களப் பெருந்தேசிய கனவான்களின் கனவைச் சிதைத்திருக்கிறது. யார் இதனைச் சாத்தியமாக்கினார்கள்? இவ்வாறான முயற்சியை ஏன் பழைய பெருச்சாளிகள் சிந்திக்கவில்லை, நடத்தவில்லை? ஏனெனில் அவர்களும் இனவாதிகளே. விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் சகோதரப் படுகொலைகளையும்,தமிழ்பேசும் மக்கள் எனக் கூறிக்கொண்டே நடத்திய படுகொலைகளையும் வாய்மூடி மௌனிகளாக ஆதரித்து நின்றதன் விளைவே இதுவரை தமிழ்பேசும் மக்களிடையே இவ்வாறான இணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அன்று சிங்களம் படிப்பதைத் தடுத்தார்கள். ஆனால் இன்று பாராளுமன்றத்தில் தமிழர் ஒருவர் சிங்களத்தில் பேசினால் சிங்களம் அதிர்ந்தது என ஊடகங்கள் தலைப்புச் செய்தி தருகின்றன. அவ்வாறாயின் சகல தமிழர்களும் சிங்களம் படித்திருந்தால் பாராளுமன்றத்தில் சிறந்த சிங்களத்தை அதாவது இன்று கொச்சைச் சிங்களத்தைச்  சிங்களவர் என்ற பெயரில் அவர்கள் பேசுகையில் மிகவும் நாகரிகமான, காத்திரமான சிங்களத்தில் எமது மக்கள் பேசியும், எழுதியும் அசத்தி இருப்பார்கள். சிங்கள மக்களே வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள்.  

சந்தேகங்கள் 

இந்த யாத்திரை தொடர்ந்த வேளையில் பல்வேறு ஆலோசனைகளும், சந்தேகங்களும் பலராலும் முன்வைக்கப்பட்டன. இவற்றில் பல ஆரோக்கியமானதாக இருந்த போதிலும் இந்தப் பயணம் நடந்துகொண்டிருந்த வேளையில் உற்சாகமளிப்பதற்குப் பதிலாக இவ்வாறான சந்தேகங்களை அவ்வேளையில்  எழுப்புவதன் நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிவில் அமைப்புகள் பல்வேறு புறக்காரணிகளால் பலமான அமைப்பாக தோற்றம் பெற முடியவில்லை. சந்தர்ப்பவாத சக்திகளால் நிறைந்து காணப்படும் அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகளின் போராட்டங்களுக்குள் ஊடுருவி அவற்றின் போக்கைச் சீரழிப்பது வரலாறாக இருக்கிறது. தேசிய நல்லிணக்கத்தைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் சிவில் அமைப்புகள் காலப் போக்கில் குறும்தேசியவாத சக்திகளால் காவு கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் மேல் ஆழமான ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டுமாயின் மக்கள் பலம் அல்லது பண பலம் அவசியமாகிறது. இவற்றில் எதுவும் அற்று வெறுமனே உயர்ந்த சமூக கோட்பாட்டுச் சிந்தனையும், இன ஐக்கியத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்படும் இவ்வாறன அமைப்புகள் மிகவும் கவனமாக வளர்த்தெடுத்தல் அவசியமாகிறது. அரசியல் கட்சிகளின் மேல் பாரிய கண்காணிப்புத் தேவைப்படுகிறது.  

போலித்தேசியவாதிகள் ஏற்படுத்திய கேடு 

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யாத்திரை இறுதிக் கட்டத்தை அடைந்த வேளையில் பல்வேறு தனிப்பட்டவர்களும், சுயநல சக்திகளும்,போலித் தேசியவாதிகளும் அவற்றின் போக்கை மாற்ற எடுத்த எத்தனிப்புகளை ஊடகங்களில் வெளிவந்த காட்சிகள் உணர்த்தின. யாத்திரையின் அமைப்பாளர்கள் சில சமயங்களில் மிகவும் மௌனமாகவே காணப்பட்டார்கள். சில சமயம் அவை கட்டுப்பாட்டை மீறிவிடுமோ! என்ற அச்சம் காணப்பட்டது. பொலீசாரும் இதற்கான வேளையை, கலவரத்தை எதிர்பார்த்தே செயற்பட்டனர். திட்டமிட்டே பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புகளும் காணப்பட்டன. இருப்பினும் மிக அமைதியாகவும், கௌரவமாகவும் யாத்திரையை உரிய இடத்திற்கு எடுத்துச் சென்றமைக்குத் தலைசாய்க்கிறோம்.  

ஆதிக்கம் செலுத்த முனைந்த சுமந்திரன் – சாணக்கியனின் போக்கு  

சிவில் சமூகத்தினால் குறிப்பாக கிழக்கின் மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பயணம் பல இடங்களை இன்னும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மக்கள் தயார் நிலையில் இருப்பதை குறிப்பாக இன, மத. மொழி பேதங்களுக்கு அப்பால் இணைந்து செல்ல முடிவு செய்திருப்பதை இந்த யாத்திரை சந்தேகத்திற்கு இடமின்றி உணர்த்தியுள்ளது. அவ்வாறாயின் அடுத்த நடவடிக்கைகளை மிகவும் இறுக்கமான விதத்தில் அமைவது அவசியமாகிறது. உதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் என்போரின் பிரசன்னம் என்பது பலவகையான விமர்சனங்களுக்குள் சென்றுள்ளது. ஒரு புறத்தில் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களான அவர்கள் தமது கட்சியின் ஆதிக்கத்தைக் கையிலெடுப்பதற்கான போராட்டம் ஒன்றிற்குள் ஈடுபட்டுள்ளதால் அதற்கான ஆதரவுத் தளமாக இதனை மாற்ற முனைவதில் ஆச்சரியமில்லை. ஆனால் தமது கட்சிக்குள் காணப்படும் ஜனநாயக விரோத நிலமைகளை மாற்ற உள்ளுக்குள் போராட்டத்தை நடத்துவதை விடுத்து, சிவில் சமூகத்தின் முயற்சிகளுக்குள் ஊடுருவி அதன் மூலம் தத்தமது கட்சிகளுக்குள் அழுத்தங்களை ஏற்படுத்த முனைவது ஜனநாயக விரோதமானது. மக்கள் மத்தியிலே சுயாதீனமான மக்கள் அமைப்புகள் இல்லாத காரணத்தினால்தான் இன்று கட்சிகளும், இயக்கங்களும் அராஜகத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களிற்கு அத்தனை துன்பங்களையும் ஏற்படுத்தினார்கள். இவ்வாறான நிலையில் மக்கள் மத்தியிலே தாமாகவே எழுகின்ற அமைப்புகளைத் தமது தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்ற எண்ணுவது மிக மோசமான ஜனநாயக விரோத செயலாகும். இவ்வாறாக ஒரே கட்சியைச் சார்ந்தவர்கள் ஆதிக்கத்தைச் செலுத்தும்போது ஏனையவர்கள் தாம் ஒதுக்கப்படுவதாக எண்ண வாய்ப்புகள் உண்டு. இங்கு தேசம் தழுவிய அடிப்படையிலான பொதுக் கோரிக்கைகளில் உடன்பாட்டினை எட்டுவதே இலக்காகும். இதனால்தான் நாம் விலகிப் போங்கள் எனக் கோருகிறோம். மக்கள் மத்தியிலே காத்திரமான ஜனநாயக சூழலை ஏற்படுத்த உதவுங்கள். அதன் மூலமே கட்சிகளுக்குள் ஜனநாயக சக்திகளை நுழைக்கலாம் என நம்புகிறோம்.  

மக்களின் ஏகோபித்த ஆரவாரத்தோடு தொடர்ந்த ஊர்வலத்தின் வெளிப்பாடே அசாத் சாலி, மனோ கணேசன் போன்றோரை இழுத்து வந்துள்ளது. மிகவும் பெருமிதத்தோடு இணைந்து பயணித்தார்கள். இவை சிங்களப் பகுதிகளில் புதிய விசையை நிச்சயம் ஏற்படுத்தும். இன்றைய ஆட்சியாளர்கள் அரசுக்கு எதிரான பிரமுகர்களை பொதுமக்களின் கௌரவத்திற்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டும் வகையில் ஆணைக்குழு அமைத்து அச்சுறுத்துகிறது. அநுர குமார திஸாநாயக்கா, சுமந்திரன் மற்றும் பலர் மீது சட்டத்தை மீறியதாக பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரஞ்சன் ராமநாயக்காவிற்கு நடந்தது போல் பறிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.  

இலங்கையின் லீ குவான் யூ 

நிலாவைக் காட்டி பாற் சோறு தீத்துவது போல இன்று இலங்கையின் லீ குவான் யூ என்ற படம் காட்டி சிங்கப்பூரில் இன்று ஜனநாயகப் படுகொலை நடப்பது போல நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் முக்கிய அரசியல்வாதிகளைச் சிறையில் தள்ள சதி நடக்கிறது. இலங்கையின் லீ குவான் யூ என சில சிங்கள பெருந்தேசியவாதிகள் நந்தசேன கோதபய ராஜபக்ஸ அவர்களைப் போற்றி மகிழ்கின்றனர். சிங்கப்பூரில் பொருளாதாரம் வளர்ந்ததால் ஜனநாயகப் படுகொலை குறித்து மக்கள் பேசுவதில்லை. ஆனால் இலங்கையில் பொருளாதாரமும், ஜனநாயகமும் சம காலத்தில் படுகொலை செய்யப்படுகிறது. தேர்தல் காலத்தில் அரசிற்கு பண உதவி செய்தவர்கள் நாட்டைச் சூறையாட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு புறத்தில் நாட்டை யாரோ கைப்பற்ற முயற்சிப்பதாகவும், அதிலிருந்து காப்பாற்றத் தம்மையே அவதார புருஷராக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் எனவும் மக்களை அச்சுறுத்தி பொருளாதாரப் பற்றாக்குறைகளை மறைக்க, மக்கள் அவற்றிற்கு எதிராக குரல் எழுப்புவதைத் தடுக்க மறைமுகமான சர்வாதிகார அரசியல் சதி ஒப்பேற்றப்படுகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய யாத்திரைக்கான வாய்ப்புகள் அதிகரித்தே செல்கின்றன. எனவே நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இணைந்து செயற்படுவதற்கு,அரசியலுக்கு அப்பால் நாட்டின் நலன் கருதிச் செயற்படுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் இடமளிக்க வேண்டும். இந்த ஆபத்துகளை இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள் என நம்புகிறோம்.  

நாம் ஜெனீவா அரசியலை நம்பிக் காலத்தை ஓட்ட முடியாது. எமது மக்களால் முடியும் என்பதை இந்த யாத்திரை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. மக்களிலிருந்து விலகி வெறுமனே கோஷங்களுக்குள் வாழும் சில அரசியல்வாதிகளின் கைகளில் எமது மக்களின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது. உலக நாடுகள் எமது ஆட்சியாளரை மாற்றப் போவதில்லை. நாமே அப் பணியை மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகளை நம்பிய அரசியல் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் எந்த மாற்றத்தையும் தந்ததில்லை. துன்பங்கள் அதிகரித்ததே தவிர சுதந்திரம் தூரவே சென்றது.  

பலமற்ற சிவில் அமைப்புகள்      

மறு பக்கத்தில் மக்கள் மத்தியிலே உருவாகும் சிவில் அமைப்புகள் மிகவும் ஆரம்ப நிலையிலிருப்பதாலும், ஓர் பலமான ஆளுமை மிக்க மனிதர்கள் அல்லது குழுவினர் மக்கள் மத்தியிலே பிரபலமற்ற நிலையில், அவ்வேளையில் பிரபலமானவர் என அவர்கள் மத்தியிலே தெரியப்படும் அரசியல்வாதிகளைப் பயன்படுத்துவதும் தவிர்க்கமுடியாதவாறு ஏற்பட்டு விடுகிறது. அவ்வாறான ஒன்றாகவே நாம் தற்போதைய நிலமைகளை அவதானிக்கிறோம். இவை சரியானது என எண்ணவேண்டிய அவசியமில்லை. ஆனால் உண்மையாகவே இன்றைய தேசியப் பிரச்சனையில் இந்த அரசியல்வாதிகளுக்குக் கரிசனை இருக்குமாயின் இவ்வாறான சுயாதீன மக்கள் அமைப்புகளுக்கு ஊக்கமளித்து சுயாதீனமாக இயங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

இந்தப் பயணத்தின்போது அரசியல்வாதிகளுக்கும் அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கும், சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையே அவ்வப்போது முறுகல் நிலை தொடர்ந்து காணப்பட்டது. உதாரணமாக ஊர்வலத்தின் முன்னணியில் ‘வேலன் சுவாமி’ அவர்கள் காணப்பட்ட போதிலும் அவரின் செயற்பாடு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. பேரணி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இவ்வாறான இழுபறிகளை முன்கூட்டியே எதிர்பார்த்து தீர்க்கமான முடிவுகளுடன் சென்றிருத்தல் வேண்டும். 

இனிதே நடைபெற்ற ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை 21ம் ஆண்டில் புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை இன்றைய சிங்கள பௌத்த இனமையவாத சக்திகளே வழங்கியுள்ளனர். எப்போதுமில்லாத வகையில் வடக்கு முதல் தெற்கு வரை புதிய ஐக்கியத்திற்கான புறச் சூழலைத் தந்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி புதிய அரசியல் அத்தியாயத்தைத் திறப்பது தாயகத்தின் முன்னேற்றத்திற்காகச் செயற்படும் சகல ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இந்த வரலாற்றுப் பணியின் கனதியை எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள் என நம்புகிறோம். பதவிகளுக்காக அரசியலை நகர்த்தாமல் எமது சந்ததிகளின் இனிய எதிர்காலத்திற்காக இணைந்து செயற்படுமாறு சிவில் சமூக செயற்பாடுகளுக்கு உரிய இடத்தை வழங்குமாறு கோருகிறோம்.   

 

https://arangamnews.com/?p=3537

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.