Jump to content

#P2P போராட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#P2P போராட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு

 
236BB25B-3F1B-42A5-B6DF-380A0AF6EC91-696
 25 Views

”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது” என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

”வடக்கு கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து வடக்கை நோக்கிப் பயணித்த அந்தப் பயணத்திற்கு பாரிய வரவேற்பு கிடைத்தமை சிறப்பானது.

உண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் பங்களிப்பு இருந்தது. அனைத்துப் பிரதேசங்களிலும், கிராமங்களிலும் இருந்து எமக்கு ஆதரவளித்த எமது சகோதரங்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அத்தோடு பல அரசியற் பிரமுகர்களும் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார்கள்.

இந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றது. அதனைப் பற்றி நாங்கள் அலசி ஆராய வேண்டிய தேவையில்லை. ஏனெனில் போராட்டம் வெற்றியளித்தது என்ற செய்தி மட்டுமே எங்களுக்குத் தேவை. நாட்டின் தெற்கிலும், சர்வதேச ரீதியில் இந்தப் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது ஒரு சில கட்சிகள், சில தனிநபர்கள் இதனைக் குழப்புவதற்காகப் பல பிரயத்தனங்களைச் செய்திருந்தார்கள். அதன் சலசலப்புகள் தான் அவையே தவிர வேறெதுவும் இல்லை.

இந்தப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது உலகம் பூராகவும் பார்க்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகள் உற்றுநோக்கப்பட வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தோம். ஆனால் சிலர் நான் தெரிவித்த கருத்துக்களை வைத்து சாணக்கியன் ஏமாற்றிவிட்டார் என்ற கருத்துக்களைச் சொல்லுகின்றார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேச சமூகம் அனைத்திற்கும் தெரியப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு தனி நிகழ்வை மையப்படுத்தி செய்ததாக யாரும் கருதுவார்களாக இருந்தால் அது தவறு.

தற்போது பலரும் பலவாறு சொல்லுகின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் போது செயற்குழு என்ற ஒரு கட்மைப்பு உருவாக்கபபட்டது. அந்தக் குழுவிலே பங்குபெறாதவர்கள், அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள் எல்லாம் இந்த நிகழ்வைப் பற்றிக் கருத்துச் சொல்வது மிகவும் வேடிக்கையான ஒரு விடயம். இந்தப் போராட்டமானது தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டமாகவே நடத்தியிருந்தோம். இதனை எவரும் திசைதிருப்பக்கூடாது.

இந்தப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார்கள். ஊடக சந்திப்புகளெல்லாம் நடத்தியிருந்தார்கள். இன்று காலையில் கூட கல்முனை நீதிமன்றத்தால் எனக்கு இந்தப் போராட்டம் தொடர்பில் வழக்கிற்கான அழைப்பாணை கிடைக்கப்பெற்றது. ஆனால் ஒரு சிலருக்கு இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது கேள்விக்குரிய விடயம்.

இந்தப் போராட்டத்தின் வெற்றியை மாத்திரம் கருதி நாங்கள் பல விடயங்களை அலசாமல் இருந்தாலும் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக ஊடக சந்திப்புகள் நடத்தி இந்தப் போராட்டத்தைப் பற்றிய கருத்துகளைச் சொல்வதைப் பார்க்கும் போது. சில அடையாளம் இல்லாதவர்கள் தங்களின் அடையாளத்தை உருவாக்குவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றார்களா? என்று ஒரு சந்தேகமும் இருக்கின்றது. ஏனெனில், உண்மையில் சட்டரீதியான சிக்கல் வரும் போது அனைவருக்கும் சேர்த்துத் தான் அது வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் வந்ததாக நான் அறியவில்லை.

இந்தப் போராட்டத்தை வெற்றியாக முடித்தமையையிட்டு ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் அந்த எழுச்சி நிகழ்வு எமது தமிழினத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஒரு விடயம். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு விடயம்.

ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகளைப் பார்த்தால் நகைச்சுவைப் படங்கள் நடிப்பது போல் சில செயற்பாடுகள் மேற்கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சிறுபிள்ளைத் தனமான அரசியற் செயற்பாடுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்றுமே செய்யாமல் இருந்து ஒரு பஸ் வண்டியை ஓட்டி விளம்பரம் தேடுவதான காட்சிகளைக் கூட காண்கின்றோம்.

ஒரு பாதையில் போகமுடியாவிடின், பஸ் வண்டிக்கு சாரதி இல்லாவிட்டால் புதிய சாரதியொருவரை நியமனம் செய்வதும், அந்தப் பாதையைச் சீர்செய்வதும்தான் அபிவிருத்தி என்று சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள் செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களில் நகைச்சுவைப் படங்கள் நடிப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.

நேற்றைய தினம் நீர்ப்பாசன விடயங்கள் சம்மந்தமாக இராஜாங்க அமைச்சரொருவர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். உண்மையில் அங்கு தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட திட்டங்கள். முதலாவது நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நான் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களைச் சந்தித்து எமது மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் குறையில் காணப்படுகின்ற நீர்வழங்கல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுகையில் ஒரு மாத காலத்திற்குள் திட்டங்களைத் தயாரித்து வழங்குவதாக தெரிவித்து, அதையும் அவர் தந்திருந்தார். அந்த நேரம் நமது அபிவிருத்திக் குழுத் தலைவர் சிறையிலே இருந்தார். அவர் அறிய வாய்ப்பும் இருந்திருக்காது. எனவே அவையெல்லாம் முடிந்த விடயங்கள். அவ்வாறான முடிந்த விடயங்களைக் கையில் எடுத்து ஒரு இராஜாங்க அமைச்சரைக் கொண்டு வந்து கூட்டம் நடாத்துவதென்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு விடயம்.

இதை விடுத்து புதிய நீர்வழங்கள் திட்ங்கள், புதிய தண்ணீர்த் தாங்கி நிறுவும் திட்டங்கள், புதிய வீதிகள் நிர்மானித்தல், புதிய பஸ்கள் இறக்குமதி போன்ற செயற்பாடுகளைச் செய்து, அதற்காக நிகழ்வுகளை நடத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள். அதேபோன்று சப்ரிகம என்ற திட்டம், கடந்த கம்பெரலிய திட்டம் என்பது பாரிய அபிவிருத்தித் திட்டமாகும். அதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 60 கோடி ரூபாய்களுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய சப்ரிகம திட்டத்தில் கம்பெரலியவில் 10 வீதம் கூட ஆளுந்தரப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் அபிவிருத்தி செய்வோம் என்று மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தார்கள். இருந்தாலும், இவர்கள் விளம்பரம் தேடும் ஒரேயொரு விடயத்தை மாத்திரம் நன்றாகச் செய்கின்றார்கள்.

நாங்கள் இன்று மக்களுக்காகப் போராடி வழக்குகளுக்கான அழைப்பாணைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிலர் நகைச்சுவைப் படங்களை நடித்து விளம்பரம் தேடுவது மிகவும் வேடிக்கையான ஒரு விடயம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தினூடாக அரசியல் என்பதை விட தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். இதுதான் முக்கியமான விடயம். இதன்போது மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் மற்றும் முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிப்பு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் வடக்கு கிழக்கிலே தேசியம் சார்ந்த நாங்கள் எங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியாது.

இது நாங்கள் ஒன்றுபட வேண்டிய ஒரு காலம். இதனை விரும்பாதவர்கள் தான் மிகவும் கேவலமான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள், கருத்துகளை முன்வைக்கிறார்கள். மக்களிடம் எழுச்சி ஒன்று ஏற்பட்டால் தங்களுடைய பொய்கள் அடங்கிப் போகும், அரச கைக்கூலிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் என்ற அச்சமே அவர்களை இவ்வாறு சொல்ல வைக்கின்றது. இதனை இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. ஆனால், தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கிலே அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=42351

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.