Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன்

 
1053.jpg
 2 Views

பெங்களூரின் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள். மாணவர்களுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அந்த நகரத்தில் வாழும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். “விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது கிளர்ச்சியாகாது” “அநீதி சட்டபூர்வமாக்கப்படும் போது அதனை எதிர்ப்பது எமது கடமை” போன்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகத்தில் புன்சிரிப்புடன் காணப்பட்ட 22 வயது நிரம்பிய டிஷா ரவியின் (Disha Ravi) படத்தை அவர்களில் பெரும்பாலானோர் தூக்கி வைத்திருந்தார்கள்.

618eb75a-a346-4b0e-9fe8-27e04d29d9ba.jpe

சுற்றுச்சூழல் விடயங்கள் தொடர்பாக பெங்களூர் நகரத்தில் மிகவும் துடிப்பாகச் செயற்பட்டு வருகின்ற ஆர்வலர்கள் நடுவில், கடந்த மூன்று வருடங்களாக மிகவும் அறியப்பட்ட ஒருவராகவே டிஷா இருந்திருக்கிறார். ஆனால் தம்மை எதிர்ப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்ற ஓர் அரசு அவரைக் கைதுசெய்திருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னர், சனிக்கிழமை, தனது தாயாருடன் டிஷா வதியும்  இல்லத்திலே வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு, விமானத்திலே டெல்கிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, கிளர்ச்சி செய்ததாகவும் அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, எந்தவித சட்டத்தரணிகளின் உதவியையும் நாட முடியாத வகையில் டெல்கி காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டார்.

“இந்திய அரசு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது என்பது மட்டுமன்றி மிகத் தெளிவான, கவலையைத் தரவல்ல ஓர் அணுகுமுறையை இங்கே தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது” என்று பெங்களூரை வதிவிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான லியோ சல்தானா தெரிவித்தார். “சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பை நிர்மூலமாக்கி அதனை முற்று முழுதாக அழித்து விடுவதே இவர்களது நோக்கமாகும்” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் விவசாயிகளினால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக சுற்றுச் சூழல் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள் மேலதிக தகவல்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்குகின்ற ஓர் ஆவணம் (‘toolkit’ document) தொடர்பாகவே டிஷா குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியிருக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றவர்களாக தனியார் நிறுவனங்கள் மாறிவிடும் ஆபத்து தமக்கு ஏற்பட்டிருக்கிறது என்ற காரணத்தினால் விவசாயிகள் தொடர்பாக அரசு புதிதாக இயற்றியிருக்கும் மூன்று சட்டங்களையும் அரசு மீளப்பெற வேண்டும் எனக்கோரி, கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்கி நகரத்தைச் சுற்றிக் கூடாரமிட்டிருக்கின்றார்கள். பல விவசாயிகளின் பேரப்பிள்ளையாக விளங்குகின்ற டிஷா, இந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு தனது உளப்பூர்வமான ஆதரவை வழங்கியிருக்கிறார்.

731f0f3e-cb14-4ea8-9b94-dafb5bf3873e.jpe

சுற்றுச்சூழல் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் டிஷா ஒன்றும் புதியவரல்லர். ‘பூகோளம் வெப்பமடையும்’ பிரச்சினை உரிய முறையில் கையாளப்படாததை எதிர்த்து,  பாடசாலையைப் புறக்கணிக்கின்ற, உலகம் பூராவும் வாழ்கின்ற பல மில்லியன் கணக்கிலான பாடசாலை மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘எதிர்காலத் துக்கான வெள்ளிக்கிழமை’ (Fridays for Future) என்று அழைக்கப்படுகின்ற அமைப்பைத் தாபித்த, சுவீ டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலரான கிரேற்றா துன்பேர்க் (Greta Thunberg) என்பவரின் செயற்பாடுகளால் தூண்டப்பட்டு, கிரேற்றாவுடன் இணைந்து, டிஷா அந்த அமைப்பின் இந்திய நாட்டுக்கான கிளையை தாபித்து, நாடுபூராவும் வேலை நிறுத்தங்களை ஒழு ங்கு செய்து வந்திருந்தார்.

தனது சொந்த வாழ்வில் காலநிலை மாற்றம் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை டிஷா ஏற்கனவே உணரத் தொடங்கியிருந்தார். தன்னைத் தனியாகவே வளர்த்தெடுத்த தனது தாயுடன் வதிகின்ற அந்தப் பட்டணத்து வீட்டில் (city house) மழை பெய்கின்ற ஒவ்வொரு தடவையும் வெள்ளம் ஏற்படுவதை டிஷா பார்த்திருக்கிறார். வருடாவருடம் இந்த நிலை இன்னும் மோசமாகிக் கொண்டு இருப்பதோடு இன்னும் சில ஆண்டுகளில் பெங்களூர் நகரமும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை விரைவில் சந்திக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தினால் தோற்றுவிக்கப்படுகின்ற வறட்சி, பயிர்கள் முறையாக வளர்ந்து பயன்கொடுக்கத் தவறுதல், வெள்ளம் ஏற்படுதல் போன்றவற்றினால் விவசாயத்தொழிலை  மேற்கொள்ளுகின்ற தனது பாட்டனார்கள், விவசாயத்தைத் தொடர்ந்து செய்ய முடியாது திண்டாடிக்கொண்டிருப்பதை டிஷா நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

“விவசாயிகளான எனது பாட்டனார்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக தமது தொழிலை மேற்கொள்ள முடியாது பட்ட துன்பங்களைப் பார்த்த பின்னர்தான் காலநிலை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் என்னிலே ஏற்பட்டது” என்று 2019 மேற்கொள்ளப்பட்ட ஓர் நேர்காணலில் டிஷா குறிப்பிட்டிருந்தார். “எனது பிரதேசத்திலே காலநிலை தொடர்பான கல்வி எதுவும் இருக்காதபடியால் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் உண்மையிலே காலநிலை மாற்றம் தொடர் பானவை என்பதை அப்போது நான் புரிந்திருக்கவில்லை.”

4500.jpg

சுற்றுச்சூழல் தொடர்பான வேலைநிறுத்தங்களை ஒழுங்கு செய்வதாக இருந்தாலென்ன, ஏரிகளைத் துப்புரவு செய்யும் செயற்பாடுகளாக இருந்தாலென்ன, மரம் நடுகைத் திட்டத்தை முன்னெடுப்பதாகவோ அல்லது காலநிலைச் செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வுகளை நடத்துவதாக இருந்தாலென்ன எல்லாவற்றிலுமே டிஷா தவறாது பங்குபற்றுவதை அவதானிக்கக் கூடியதாக விருந்தது. அப்படிப்பட்ட விடயங்கள் தொடர்பாக மிகவும் ஆழமான அறிவையும் தெளிவையும் டிஷா கொண்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு வேண்டிய வருமானத்துக்காக உழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு மட்டுமே இருந்ததால், தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு உணவைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதை யும் அதனோடு ஓர் மனித உரிமை ஆர்வலராக உழைப்பதையும் அவர் சமாளித்து வந்தார்.

மிக மிகக் கடுமையாக உழைக்கின்ற ஒருவராகவும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு தன்னை முற்றிலுமே அர்ப்பணித்துவிட்ட ஒருவராகவும் விளங்கிய டிஷா, தனது அர்ப்பணத்தின் காரணமாக தன்னையே உருக்கிப் பணியாற்றிக்கொண்டிருந்தார். “தனது செயற்பாடுகளின் காரண த்தினால் தனது  சொந்த நலன்களையே தியாகம் செய்து கொண்டிருந்த டிஷா தொடர்பாக நான் கவலை கொண்டிருந்தேன்” என்று பெங்களூரில் அவருடன் இணைந்து பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஓரு ஆர்வலர் தெரிவித்தார்.

FFF  இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பன்னாட்டு ஊடகங்கள் செய்திகளைத் தொகுத்து வழங்கும்போதெல்லாம், ஊடகவியலாளர்கள் டிஷாவைத் தவறாது நேர்காணல் செய்வது வழக்கம். இவ்வாறான நேர்காணல்களில் எல்லாம் மோடியைத் தலைமை அமைச்சராகக் கொண்ட அரசின் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சிப்பவராகவே டிஷா இருந்திருக்கிறார்.

“எதிர்காலத்துக்காக மட்டும் நாங்கள் போராடவில்லை. நிகழ்காலத்துக்காகவும் சேர்த்தே நாங்கள் போராடுகின்றோம்” என்று 2020ஆம் ஆண்டு அவர் காடியன் (Guardian) ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். “மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நடுவில் இருந்து வருகின்ற எங்களைப் போன்றவர்கள், காலநிலை தொடர்பாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின் போது மேற்கொள்ளப்படும் உரையாடல்களை மாற்றியமைத்து, அரசின் சிறு சிறு குழுக்களுக்காக அன்றி மக்களுக்கு நன்மை பயக்கின்ற மீட்சித் திட்டங்களுக்கு அவற்றை இட்டுச் செல்ல விரும்புகிறோம்.”

இந்தியாவின் Friday For Future அமைப்பு ஏற்கனவே டெல்கி காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யக்கூடிய ஒரு சட்டத்தை 2020 இல் அரசு அமுலாக்கம் செய்ய இருந்த நேரத்தில் இந்தக் குழு அதனை எதிர்த்து இணையத் தளத்தில் ஓர் பரப்புரையை முன்னெடுத்த போது, டெல்கி காவல் துறையின் இணையக் குற்றப் பிரிவினால் அந்தக்குழுவின் இணையத்தளம் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது.

தனது குடும்பம் விவசாயத்துடன் பின்னிப்பிணைந்து இருப்பதன் காரணத்தினால் இந்திய நாட்டின் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து டிஷா முற்று முழுதாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறார். இதனைச் செய்ய வேண்டாம் என்று தாம் டிஷாவை எச்சரிக்கை செய்ததாக அவருடன் இணைந்து பணி புரிகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பது, இப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், அவர்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், ஏன் அவர்கள் போராட்டங்கள் தொடர்பாக செய்திகளை வெளியிட்டவர்கள்மீதும் இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்ற அதிகாரிகளினதும் அரசினதும் அநாவசியமான கவனத்தை டிஷா மட்டில் ஈர்க்கும் என்பது உணரப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்பவர்கள் ஏற்கனவே குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார்கள். அத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்த முகாம்களைச் சுற்றி கொங்கிறீட்டினாலான தடைச்சுவர்கள், முட்கம்பி வேலிகள் போன்றவை காவல்துறையினால் போடப்பட்டிருந்தன. ஒரு பேரணியின் போது வன்முறையைத் தூண்டினார்கள் என்று குற்றஞ் சாட்டப்பட்ட விவசாயிகள் பயங்கரவாதச் சட்டங்கள் ஏவப்பட்டு ஆறு மாதங்களுக்கு அவர்களுக்குப் பிணை வழங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு தான் ஆதரவளிக்கின்றேன் என்ற செய்தியை சுற்றுச்
சூழல் ஆர்வலரான கிறேற்றா துன்பேர்க் டுவிற்றர் வலைத்தளம் மூலமாக வெளியிட்டபோது, பகிர்ந்துகொள்ளப்பட்ட ‘ரூல்கிற்’ என்ற ஆவணத்திலிருந்து தான் டிஷாவுக்குப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்து உதவ விரும்புகிறவர்களுக்கு துணை செய்யும் முகமாக இந்த ‘ரூல்கிற்’ ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. பலவிதமான தகவல்களின் தொகுப்பாகவும், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த வேண்டிய ஹாஸ்டாக்குகள், முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடுகள், பல்வேறு யோசனைகள்,தொடர்பு கொள்ளப்பட வேண்டியவர்கள் தொடர்பான தொடர்பு விபரங்கள் போன்றவை மேற்குறிப்பிட்ட‘ரூல்கிற்’ ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

டுவிற்றர் மூலமாக கிறேற்றா வெளியிட்ட செய்தி, அதனை வெளிநாடுகளின் தலையீடாகப் பார்த்தவர்களுக்கு கடுமையான கோபத்தைத் தோற்றுவித்திருந்ததுடன் அவரது முகத்தைத் தாங்கிய உருவப் பொம்மைகளும் அதனை எதிர்த்தவர்களி னால் எரியூட்டப்பட்டன.

அவ்வேளையில் கிறேற்றாவால் பகிரப்பட்ட அந்தக் குறிப்பிட்ட ஆவணத்தைக் காவல்துறை கையகப்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக பொருண்மிய, சமூக, பண்பாட்டு மற்றும் பிரதேச ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சதி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற குற்றச் சாட்டுக்கு அந்த ஆவணம் ஒரு சான்று என வாதித்தார்கள். பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து மேற்குறிப்பிட்ட ஆவணத்தைத்தயாரித்தாகவும் மில்லியன் கணக்கில் தன்னைப் பின் தொடர்பவர்களுடன் கிறேற்றா அதனைப்பகிரத் தூணடியதாகவும் டிஷா மீதும் இன்னும் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அக்குறிப்பிட்ட ஆவணத்தில் இரண்டு வரிகளை மட்டுமே தான் சரிசெய்ததாகவும் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்தவிதமான எண்ணமும் தனக்கு இருக்கவில்லை என்றும் இரு வாரங்களுக்கு முன்னர் டிஷா நீதிமன்றத்தில் தெரிவித்தார். “விவசாயிகளுக்கு எனது ஆதரவை நான் வழங்கினேன். விவசாயிகளே எங்கள் எதிர்காலம் என்பதாலும் நாம் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்பதற்காகவுமே விவசாயிகளுக்கு நான் ஆதரவளித்தேன்” என்று  ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட முன்னர் டிஷா அழுதபடியே நீதி மன்றில் தெரிவித்தார்.

6c0a9cb4-5fbc-4db6-b062-3a3c0c7b7652.jpe

டிஷா கைதுசெய்யப்பட்ட வேளையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடுவில் அது அச்ச அலைகளைத் தோற்றுவித்தது. பயத்தின் காரணமாக அவருடன் இணைந்து பணியாற்றும் ஆர்வலர்கள் ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்குவதைத் தவிர்த்ததோடு அக்குழுவினால்  அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்து ‘வட்ஸ்அப்’(WhatsApp) குழுக்களும் அமைதிகாக்கத் தொடங்கின.

டிஷா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. டிஷாவைத் தடுத்து வைத்திருக்கும் செயற்பாடு “மிகக் கொடுமையானது” என்பது மட்டுமன்றி “எந்தவித அவசியமும் இன்றி மேற்கொள்ளப்படும் ஒரு துன்புறுத்தலும் அச்சுறுத்தலும் ஆகும்” என்று முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சரான ஜெய்ரான் றமேஷ் தெரிவித்தார். அதே வேளையில் 50 கல்வியியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், டெல்கி காவல்துறையின் செயற்பாடுகள் “சட்டவிரோத தன்மையைக் கொண்டவை” என்றும் அரசு இவ்விடயத்தில் “தேவைக்கதிகமாகச் செயற்பட்டிருக்கிறது” என்றும் குறிப் பிட்டிருக்கிறார்கள்.

டிஷா மேல் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக மேலதிகமான தகவல்களைத் தமக்கு வழங்குமாறு கேட்டு, பெண்களுக்கான டெல்கி ஆணையம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காவல்துறைக்கு ஒரு அறிவித்தலை அனுப்பியிருக்கிறது. “அபத்தமான நாடக அரங்காக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது” என்று முன்னாள் நிதியமைச்சர்  பா.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

குறிப்பு:

பெப்ரவரி 23 இல் டிஷா ரவி பிணையில் விடுதலை

வன்முறையாளர்களுக்கும் டிஷாவின் செயற்பாடுகளுக்கும் எந்தவிதமான தொடர்பையும் காணமுடியவில்லை என்பதைத் தெரிவித்து டிஷா ரவியை டெல்கி நீதிமன்று பெப்ரவரி 23ஆம் திகதி பிணையில் விடுதலை செய்திருக்கிறது. டிஷாவுக்கு எந்தவிதமான குற்றப்பின்னணியும் இல்லை என்பதைக் குறிப்பிட்டு இந்திய அரசியலமைப்பின் 19ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்துக்கான உரிமையையும் இன்னும் பல விடயங்களையும் கோடிட்டுக்காட்டி நீதியாளர் டிஷா ரவியைப் பிணையில் விடுதலை செய்திருக்கிறார்.

நன்றி: தகாடியன் (www.theguardian.com)

 

https://www.ilakku.org/?p=43679

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.