Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்) - கருணாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)

‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்)

  — கருணாகரன் — 

தமிழ் தேசியம் – சில கேள்விகள் 

“தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலையே ஆதரிக்கிறார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் பலவும் கூட தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்திருக்கும் மக்களிலும் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலின் பக்கமே நிற்கின்றனர். அப்படியிருக்கும்போது நீங்கள் தமிழ்த்தேசிய அரசியலின் மீது கடுமையாக விமர்சனங்களையும் எதிர்ப்பையும் முன்வைக்கிறீர்களே! இது தவறென்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராக நிற்பது தவறென்று உணரவில்லையா?” என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். 

இந்தக் கேள்வி சிலரிடம் அல்ல, பலரிடமும் உள்ளது என்பதை அறிவேன். இது நீண்ட நாட்களாகப் பலருக்குள்ளேயிருந்து துளைத்துக் கொண்டிருக்கும் கேள்வி என்பதையும் அறிவேன். 

ஆனால், என்ன செய்வது, ரஜினிகாந் ஒரு திரைப்படத்தில் சொல்வதைப்போல, “என் வழி தனி வழி” என்று சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறு எதைத்தான் சொல்ல முடியும்? அல்லது ரஜினியே இன்னொரு படத்தில் சொல்வதைப்போல “மந்தை கூட்டமாகத்தான் வரும். சிங்கம், சிங்கிளாகத்தானிருக்கும்” என்றுதான் சொல்ல வேண்டும். 

இதொன்றும் பகடியல்ல. அல்லது இதைப் பகடியாக்கிக் கடந்து செல்லவும் முடியாது. ஆனால், உண்மையில் இது பகடியாக்கப்படுகிறது. அதையும் இவர்களே செய்கிறார்கள். 

“ஏனென்றால், உண்மையில் தமிழ்த்தேசியம் என்றால் என்ன?” என்ற தெளிவும் புரிதலும் இவர்களிடம் உண்டா? அந்தக் கேள்வியும் தேடலும் இவர்களிடம் உள்ளதா? 

தேசியவாதத்தின் உள்ளடக்கம், அதன் பண்புகள் குறித்த விளக்கமேதும் இவர்களுக்கிருக்கிறதா? 

அதன் சிறப்பியல்புகளையும் குறைபாடுகளையும் அதனுள்ளே மறைந்திருக்கும் பயங்கரத்தையும் இவர்கள் அறிந்திருக்கிறார்களா? அல்லது இதைப்பற்றிய உரையாடல்கள் எதையாவது இவர்கள் செய்திருக்கிறார்களா? 

இப்போது கூட இவ்வாறான உரையாடல்களைச் செய்வதற்கும் இது குறித்த புரிதல்களை அடையவும் இவர்கள் தயாரா? 

இந்த நண்பர்கள் கூறுவதைப்போல அல்லது நம்முடைய நிலைப்பாட்டைக் குறித்துக் கவலைப்படுவதைப்போல தற்போது பிரயோகத்தில் உள்ளதுதான் தமிழ்த்தேசியமா? 

இவர்களுடைய தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கும் புலிகளுடைய நிலைப்பாட்டுக்கும் இடையில்  உள்ள ஒற்றுமை – வேற்றுமை (வேறுபாடு – மாறுபாடுகள்) என்ன? 

புலிகளின் அரசியலையே பின்பற்றுவதாக இருந்தால் அதை எந்த வகையில் பின்பற்றுகிறார்கள்? அதைப் பற்றிச் சொல்ல முடியுமா? 

அல்லது அதைக் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க இவர்கள் தயாரா? அது இவர்களால் முடியுமா? 

புலிகளின் அரசியல் தொடர்ச்சியைத்தான் இவர்கள் முன்னெடுப்பதாக இருந்தால் அது எந்த அளவுக்கு எதிர்காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும்? 

புலிகளிலிருந்து வேறுபடுவதாக இருந்தால் அந்த வேறுபாடு என்ன? யுத்தத்துக்குப் பிறகு தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுக்கும் முறைமை குறித்து இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் அணுமுறை சரியானதா? 

இந்த அணுகுமுறையின் மூலம் பெற்ற – பெற்றுக் கொண்டிருக்கும் – வெற்றிகளும் நன்மைகளும் என்ன? இதைப்பற்றிய மதிப்பீடுகள், ஆய்வுகள் உண்டா? 

சாதி, பால், பிரதேச ஒடுக்குமுறைகளுக்கும் பாரபட்சத்துக்கும் (அசமத்துவங்களுக்கு) இவை தமது தமிழ்த்தேசியத்தினுள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? அதற்கான வேலைத்திட்டம் என்ன? அவ்வாறான அநீதியும் ஒடுக்குமுறையும் நிகழுமிடங்களில் இவை எங்காவது அதைக்குறித்துத் தமது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றனவா? செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனவா? 

இந்த மாதிரியுள்ள ஆயிரம் கேள்விகளுக்குரிய பதிலாகவே என்னுடைய நிலைப்பாடுள்ளது. அதாவது இவை எதிலும் இவை உருப்படியாகவும் வெளிப்படையாகவும் நிலைப்பாடுகளை முன்வைக்காமல் தனியே அரச எதிர்ப்பு – சர்வதேச சமூகத்தின் நீதிப் பரிந்துரை என்ற அரசியல் முன்னெடுப்பை நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அது மக்களுக்கு எந்தவிதமான நன்மைச் சாத்தியங்களை உருவாக்கப்போவதுமில்லை. 

இதை இன்னும் அழுத்தமாகச் சொன்னால், மக்களுக்கான அரசியலைச் செய்யாமல், மக்களை வைத்து, மக்களின் பேரால் தமக்கான அரசியலைச் செய்வதை நிராகரிக்கிறேன். இந்த அரசியல் தவறு. அநீதியானது என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாடு என்பது கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் அரசியல், வரலாறு மற்றும் சமூக விஞ்ஞான அடிப்படையிலானதுமாகும். 

இதை இன்னும் சுருக்கமாகவும் நேரடியாகவும் சொல்வதென்றால், அரசியல் என்பது மக்களுக்கானது. மக்களுடைய வெற்றிக்கானது. அவர்களுடைய எதிர்காலத்துக்கானது. அவர்களைப் பாதுகாப்பதற்கானது. அவர்களை மேம்படுத்துவதற்கானது. உலகளாவிய அரசியற் பொருளாதாரப் போக்கின்பாற்பட்டது. அதற்குத் தாக்குப்பிடித்து நிற்கக் கூடியது. இதை மறுப்பதாக இருந்தால் இவர்கள் கூறும் அந்தப் பெரும்பான்மையான தமிழ்த் தேசியவாதிகளை நோக்கிச் சில கேள்விகளை எழுப்பலாம். 

முதலில் இவர்கள் அனைவரும் புலிகளின் அபிமானிகளாக புலி நிழலில் ஊஞ்சலாடுகிறார்கள். ஆகவே அதைக்குறித்துச் சில கேள்விகள். 

1. விடுதலைப்புலிகளையும் அவர்களுடைய தியாகங்களையும் மதிப்பதாக கூறும் அல்லது அப்படிக் காட்டிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் அந்தக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் நடைமுறையில் புலிகளுக்கு மாறாகவே செயற்படுவது ஏன்? உதாரணமாக – 

2. புலிகள் காடழிப்புக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதேவேளை வனவளப்பாதுகாப்புப் பிரிவை உருவாக்கி காட்டைப் பாதுகாத்ததுடன், மரநடுகைகளிலும் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் நடுகை செய்த காடுகள் வடக்குக் கிழக்கில் இன்னமும் பல இடங்களிலும் உண்டு. 

ஆனால், இப்பொழுதோ காடழிப்புக் கட்டற்ற முறையில் நடக்கிறது. ஒரு பக்கம் மரம் வெட்டுதலாக, மறுபக்கத்தில் அரச செல்வாக்கைப் பயன்படுத்தி காணி பிடிப்பதற்காக என. இதைச் செய்வது வேறு யாருமல்ல. அரச எதிர்ப்பைப் பலமாகக் கூவிக் கூவித் தம்மைப் புலிகளின் தொடர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருக்கும் தரப்புகளே. இதற்கு சட்டம், ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தரப்புகளும் வனப்பிரிவும் ஏதோ வகையில் ஒத்துழைக்கின்றன. 

அதெப்படி அரசியலில் அரச எதிர்ப்பைச் செய்து கொண்டு அரசாங்கத்தின் ஏஜென்டுகளாக இருக்கும் காவல் பிரிவினர், வனப்பிரிவு, காணிப் பிரிவு, அமைச்சுகள், அதிகாரிகள் போன்ற தரப்புகளின் மூலமாகதங்களின் தனிநலன்களைப் பேணுவது நீதியாகும்? தவிர, புலிகளின் காடு பராமரிப்புக்கு இது எதிரானதாக உள்ளது அல்லவா! 

3. தனித்தேசமும், அந்தத் தேச வளங்களும் முக்கியம். தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு அதற்கு மாறாக – தமிழ்த்தேசிய அடிப்படைக்கு மாறாக எப்படிச் செயற்பட முடியும்? புலிகளின் தமிழ்த்தேசியம் என்பது தமிழீழம் என்ற தேச வரையறையையும் வரன்முறையையும் உள்ளடக்கமாகக் கொண்டது. அந்த அடிப்படையில் அவர்கள் நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, சமூகப் பாதுகாப்பு, வளப் பேணுகை, வள உருவாக்கம், சமூகச்சமத்துவம் என்றவாறாக தேசக் கட்டுமானங்களில் கவனம் கொண்டிருந்தனர். இதில் சரி பிழைகள் இருக்கலாம். தங்கள் நோக்கில் இவ்வாறான கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்தனர். ஆனால், புலிகளின் பெயரைச் சொல்லி, அவர்களுடைய தியாகத்தில் அரசியல் நடத்துவோர் இதை எந்தளவுக்குப் பின்பற்றுகிறார்கள்? எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள்? 

4. இதைப்போல மணல் அகழ்வுக்கு எதிராகவும் வயல் நிலத்தில் அல்லது பயிர்ச்செய்கைக்குரிய நிலத்தில் வீடுகள், வணிக மையங்கள் போன்றவற்றை அமைப்பது தவறு என்பதில் புலிகள் உறுதியாக நின்றனர். 

ஆனால், இன்றோ இதற்கு மாறாகவே பலரும் நடக்கின்றனர். வயல்களில் கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. குளங்கள் மூடப்படுகின்றன. எப்போதும் எங்கும் குளங்களைத் தூர் வாருவதே நடப்பதுண்டு. ஆண்டுதோறும் குளங்களை அகழ்ந்து, வாய்க்கால்களைப் புனரமைப்பது வழமை. ஆனால், இப்பொழுது குளங்கள் மூடப்படுகின்றன. வாய்க்கால்கள் நிரவப்படுகின்றன. இந்த வாரம் கூட வவுனியாக் குளத்தை அபிவிருத்தியின் பேரால் மண் நிரப்பிச் சுருக்குவதற்கு எதிராக வவுனியா நகரில் மக்களால் ஒரு போராட்டம் நடக்கிறது. 

ஆனால், மறுவளத்தில் குளங்களை மூடுவோரும் வயல் நிலங்களை ஆக்கிரமிப்போரும் புலிகளின் விசுவாசிகளாகவே தம்மைக் காட்டிக்கொள்கின்றனர். இது எந்தளவு சரியானது புலிகளை உண்மையாக நேசித்தால், அவர்களையும் அவர்களுடைய இலட்சியத்தையும் உண்மையாகவே மதித்தால் இப்படி எதிர்மறையாகச் செயற்பட முடியுமா? 

5. கசிப்பு, போதைப்பொருள் போன்றவற்றைக் கடுமையாக புலிகள் எதிர்த்தனர். இதற்கு மரண தண்டனை வரையில் கொடுத்தனர். ஆனால், புலிகளை ஆதரிப்பதாகக் கூறுவோரில் பலரே இப்பொழுது கசிப்புக் காய்ச்சுவது, கசிப்பை விநியோகிப்பது தொடக்கம் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இவர்களும் தமக்கு வசதியாக சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான தரப்புகளை (அரச தரப்பை) பயன்படுத்துகின்றனர். 

ஒரு பக்கம் தமிழ்த்தேசியமும் அரச எதிர்ப்பும். மறுபக்கத்தில் அரச நிறுவனங்களின் அனுசரணையைப் பயன்படுத்தி சட்டவிரோத, சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை எப்படிச் சொல்வது? இந்த முரணுக்கு (அயோக்கியத்தனத்துக்கு) என்ன பெயர்? 

6. புலிகளுடைய இன்னொரு முக்கியமான நிலைப்பாடு ஊழலுக்கு எதிரானது. ஆனால், இன்று தமிழ்ப் பிரதேசங்களில் அரச நிர்வாகப் பிரிவுகள் தொடக்கம், சட்டத்தைப் பாதுகாக்கும் பிரிவுகள், பாடசாலை அதிபர்கள் வரையில் எல்லா இடங்களிலும் ஊழல் பெருத்துள்ளது. இதில் ஈடுபடுவோரிலும் அநேகர் நான் முன்னரே குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டை அல்லது அந்த அரசியல் அடையாளத்தைக் கொண்டோரே! 

7. மேலும் புலிகள் முன்னெடுத்த அல்லது தமது செயற்பாட்டில் அவர்கள் கொண்டிருந்த சமூகப் பாதுகாப்பு, பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாம் இன்று எந்த நிலையில் உள்ளன? பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் மீதான வன்முறை போன்றவற்றுக்கு இடமிருந்ததில்லை. பெண்களின் பாதுகாப்பு ஒப்பீட்டளவில் உயர்வாகவே இருந்தது. ஆனால் இன்று? இது தலைகீழாகி விட்டது. இப்பொழுது யாருக்குமே பாதுகாப்பில்லை என்ற அளவுக்கு சமூக வன்முறைகளும் ஒடுக்குறைகளும் பாரபட்சங்களும் அதிகரித்து விட்டன. இதைக்குறித்து தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு என்ன? நடவடிக்கை எது? 

குறைந்த பட்சம் இதையெல்லாம் இந்தக் கட்சிகளும் தலைமைகளும் எப்படிப் பார்க்கின்றன? இந்தச் சீரழிவுக்கு இவை எந்த அளவில் பொறுப்பேற்கின்றன? இவற்றைத் தடுப்பதற்கு என்ன வகையான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கின்றன? இவற்றில் பால் அசமத்துவம் (பால்வேறுபாடு) சாதியப் பிரிவினை போன்றவை முக்கியமானவை. 

8. புலிகளால் முன்னெடுக்கப்பட்ட நினைவு கூரல்களைச் செய்வது மட்டும் பணியல்ல. அதற்கு நிகரானவை இந்தச் சமூகச் சீரழிவுகளைத் தடுப்பதும் தேச வளங்களைச் சூறையாடுவதை எதிர்ப்பதுமாகும் அல்லவா? 

இதில் ஏன் இவை அக்கறைப்படாமல் உள்ளன? இவர்களுடைய ஆதரவாளர்கள் இவற்றில் ஈடுபடுவதை ஏன் கட்டுப்படுத்தத் தயங்குகின்றன? இவற்றுக்கு எதிராக இந்தச் சக்திகள் ஏன் போராட முன்வரவில்லை? குறைந்த பட்சமாகத் தங்களுடைய அரசியல் உரையாடல்களில் இதைப் பற்றிய பிரக்ஞை தவறியதேன்? 

9. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் நலத் திட்டங்களையும் திறன் வளர்க்கும் கட்டமைப்புகளையும் உருவாக்கிச் செயற்படுத்தினர். இதுவரையில் உங்களில் எவராவது அப்படிச் சிந்தித்ததுண்டா? செயற்பட்டதுண்டா? 

10. ஆனால், ஒன்றை மட்டும் வெற்றிகரமாகச் செய்கிறீர்கள். அவர்களுடைய நினைவு கூரல்களை மட்டும் செய்கிறீர்கள். இது அவர்களுடைய தியாகத்தில் குளிர்காய்வதாகும். இதற்கு அதிகமாக உழைக்க வேண்டியில்லை. செலவழிக்க வேண்டியதுமில்லை. இந்த நினைவு கூரலைச் செய்ய முற்படும்போது ஏற்படுத்தப்படும் தடைகள் கூட உங்கள் அரசியலுக்கு முதலீடாகும். அப்படித்தான் முதலீடாக்கப்படுகிறது. மற்றும்படி சமூக, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவற்றைக் குறித்துச் சிந்திப்பதும் அவற்றைச் செயலாக்கம் செய்ய முயற்சிப்பதும் கிடையாது. ஆக மொத்தத்தில் தேசம் பற்றிப் பேசும் அளவுக்கு அந்தத் தேச உருவாக்கம், அந்தத் தேசத்தின் கட்டுமானம், அதன் இயங்கு நிலை, அதன் வளங்கள் குறித்தெல்லாம் அக்கறையே இல்லை. இது பெரும் முரண்பாடு மட்டுமல்ல பெரும் போலியுமாகும். 

முக்கியமாகச் செயற்பாட்டு அரசியலை முன்னெடுப்பதற்கு முடியாத தயக்கம் இது. இந்தத்  தயக்கத்தையும் இந்த முரண்பாட்டு அரசியற் செயற்பாட்டையும் எப்படிச் சொல்வது? இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்? 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=4527

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

என் வழி தனி வழி – 2 (தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்?)

  — கருணாகரன் — 

தமிழ் தேசியக் கட்சித் தலைவர்களிடம் சில கேள்விகள்? 

தற்போதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகள் (முக்கியமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) செயற்பாட்டு அரசியலைக் கொண்டிருக்காதவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். சரி பிழைகளுக்கு அப்பால் புலிகள் உட்பட விடுதலை இயக்கங்கள் அத்தனையும் செயற்பாட்டு அரசியலையே பிரதானமாகக் கொண்டவை. அதனால்தான் அவற்றினால் தமிழ்ச்சமூகத்திலும் தமிழ் அரசியற் பரப்பிலும் மாற்றங்களைச் செய்ய முடிந்தது. தற்போதுள்ள மாகாணசபை முறைமை கூட இயக்கங்கள் முன்னெடுத்த செயற்பாட்டு அரசியலின் விளைவுகளில் ஒன்றாகும்.  

ஆனால் இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகள் அப்படியானவையல்ல. அவை செயற்பாட்டு அரசியலுக்குப் போகாதவை. மட்டுமல்ல, போகவே முடியாதவை. அவற்றின் அரசியற் பண்பும் ஒழுக்கமும் அப்படியானதே. அவற்றின் எந்தத்தலைவருக்கும் அப்படியானதொரு செயற்பாட்டுப் பழக்கமும் நடைமுறையும் இல்லை.  

மாவை சேனாதிராஜா, சம்மந்தன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் என ஒவ்வொருவரையும் நீங்கள் பரிசீலித்துப் பார்க்கலாம். இயக்க அரசியற் பாரம்பரியத்திலிருந்து (செயற்பாட்டு அரசியலில் இருந்து) வந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரும் புளொட்டும் கூட இன்று செயற்பாட்டு அரசியலுக்கு வெகு தொலைவிலேயே நிற்கின்றன. இதுவே இவற்றின் பெருந்தோல்வியாகும். இவை தேர்தல் வெற்றிகளின் மூலமாகத் தங்களைத் தக்க வைத்திருக்கின்றனவே தவிர, மக்கள் அரசியலில் வெற்றியடைந்தவை அல்ல. தேர்தல் வெற்றியில் கூட இவற்றின் இடம் இப்போது கேள்விக்குள்ளாகியே உள்ளது.  

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதற்கு முன் நடந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் இவற்றின் இறங்குமுகம் தெளிவாகியது.  

இந்தத் தலைவர்களை விட எதிர்நிலையில் நின்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் இராமநாதன், சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) போன்றோர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தனர். இது செயற்பாட்டு அரசியலின் பெறுபேறாகும். தமிழ்மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இந்தத் தலைவர்களுடன் உடன்பாடின்மை இருந்தாலும் செயற்பாட்டு ரீதியாக மக்களுக்கிருக்கும் நம்பிக்கையும் அதன் தேவைசார்ந்த அடையாளமுமே இவர்களுக்கான ஆதரவாகும். 

ஆக மொத்தத்தில் செயற்பாடின்மையே தமிழ்த்தேசிய அரசியலாக உள்ளது. இதை மேலும் நாம் விரித்து ஆராயலாம். அதைச் செய்வது அவசியமானது. 

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப்போல புலிகளின் நீட்சியாகவோ நிழலாகவோ தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்தக் கட்சிகள், புலிகள் முன்னெடுத்த எந்தவிதமானஅரசியல் பிரதிபலிப்பையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டோம். அரச எதிர்ப்பையும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதையும் இவை பதிலாகக் காட்ட முற்படலாம். அது ஒன்றும் புதியதல்ல. 1950 களிலிருந்தே தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் போன்றவையும் பின்னர் இவற்றின் கூட்டான தமிழர் விடுலைக்கூட்டணியும் முன்னெடுத்த வாய்ப்பேச்சு அரசியலே இதுவாகும். இதையே பின்னர் வந்த செயற்பாட்டு அரசியலாளர்களான இயக்கத்தினர் வெட்டிப்பேச்சு அரசியல், முழக்க அரசியல், மோசடி அரசியல் என்று நிராகரித்தனர். நிராகரித்தது மட்டுமல்ல, இந்த அரசியலை முன்னெடுத்தோரைத் தண்டிக்கவும் செய்தனர். ஆலாலசுந்தரம், கனகரத்தினம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சித்தார்த்தனின் தந்தையார் வி. தர்மலிங்கம் போன்றோர் உயிரிழந்தது இந்தக் காரணத்தினாலேயே. 

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு இப்பொழுது மறுபடியும் அதே அரசியல்தான் வழிமுறைப்படுத்தப்படுகிறது என்றால், இதன் அர்த்தம் என்ன? 

இது தோற்றுப்போன – நடைமுறைக்கு உதவாத – அரசியல் என்று வரலாறு நிரூபித்திருக்கிறது. அதுவும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே. அன்றே கழித்துக் குப்பைக் கூடைக்குள் போடப்பட்ட அரசியலைத் தூக்கி மேசையில் அலங்கரித்து வைப்பது என்றால் தமிழ்ச்சமூகத்தின் இயலா நிலையையும் தமிழ் அரசியலின் வெறுமையையும் எப்படிச் சொல்வது?அதுவும் இவ்வளவு பெரிய – நீண்ட போராட்டத்தை நடத்திய பின்பு. இவ்வளவு இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்த பிறகு. இவ்வளவு காலம் கடந்த பிறகு. 

இதற்குள்ளே நாம் பெற்றதென்ன? கற்றதென்ன? என்ற அடிப்படை அறிவைக் கூட தமிழ் மக்களும் தமிழ்த்தலைமைகளும் தமிழ்க்கட்சிகளும் கணக்கிற் கொள்ளாமல் விடுவதேன்? 

குறிப்பாக கடந்த கால அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளைப் பற்றிய மதிப்பீட்டையும் ஆய்வையும் நேர்மையான முறையில் செய்யாமல் தவிர்ப்பதேன்? இந்தத் தயக்கத்தை தொடர்வதேன்? 

கடந்த கால அரசியலில் மிக மோசமாகத் தலைவிரித்து நின்றது ஜனநாயக வெறுமையும் ஆதிக்கப்போட்டியுமாகும். இயக்கங்கள் தமக்கிடையிலும் தமக்குள்ளும் மட்டுமல்ல,  மக்களுக்கும் தமக்கும் இடையிலும் கூட ஜனநாயகத்தைப் பேணவில்லை. இதுவே  செய்யப்பட்ட அத்தனை தியாகங்களையும் மேற்கொள்ளப்பட்ட அத்தனை போராட்டப் பெறுமதிகளையும் இல்லாதொழித்தது. இருந்தபோதும் இதற்குள் ஏற்பட்டிருந்த சமூக முன்னேற்றங்கள், பால் சமத்துவம் அல்லது பெண்களுக்கான இடம், சாதியப் பாகுபாடற்ற நிலை போன்றவை குறிப்பிடத்தக்கன. இவற்றோடு சமூகப் பாதுகாப்பு, இயற்கை வளப்பேணுகை, ஊழலற்ற நிர்வாகம் போன்றவையும் முக்கியமானவையாகும். 

ஆனால், இவை கூட இன்று இல்லாது போயுள்ளனவே. இன்றைய தமிழ்த்தேசியவாத அரசியலில் ஜனநாயகம் கட்சிகளுக்குள்ளும் இல்லை. சமூக வெளியிலும் இல்லை. அதைப்போல சமூக நீதியும் சமத்துவமும் பால்நிலையிலும் இல்லை. சமூக வெளியிலும் இல்லை. இதனால் பெண் ஒடுக்குமுறையும் சாதியமும் மறுபடியும் மேற்கிளம்பியுள்ளன. பிரதேசவாதம் தலையெடுத்துள்ளது. தேர்தலின்போது சாதிபார்த்து, ஊர் அல்லது பிரதேசம் பார்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, வாக்குச் சேகரிப்பது, வாக்களிப்பது எல்லாம் நடக்கிறது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளில் கூட சாதியும் பிரதேசமும் பார்க்கப்படுகிறது. 

இதெல்லாம் விடுதலை அரசியலுக்கு ஏற்றவையா? 

இந்தக் கேள்வி ஏனெனில் தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ் மக்களுக்கான விடுதலை அரசியலாகவே காண்பிக்கப்படுகிறது. அப்படிக் காண்பிக்கப்படும் அரசியல் உண்மையான விடுதலை அரசியலுக்குரிய அடிப்படைகளைக் கொண்டுள்ளதா?அதற்கான பாதையில் செல்கிறதா? அதற்குரிய பண்புடன் உள்ளதா? 

விடுதலை அரசியலுக்குச் சில முக்கியமான பண்புகள் உண்டு. 

1. அது மக்கள் நலனையும் அவர்களுடைய பாதுகாப்பையும் அடிப்படையாகக் கொண்டது. 

2. ஜனநாயக உள்ளடக்கத்தைப் பேணுவது. 

3. விஞ்ஞான பூர்வமானது. அதாவது அறிவு பூர்வமானது. எதையும் பகுத்தாராய்ந்து முன்னகர்வது. அதை உணர்ச்சிகரமாக அணுகவே கூடாது. அப்படி அணுகினால் அது பேரழிவிலேயே கொண்டு போய் விடும். 

4. முக்கியமானதும் தவிர்க்கவே முடியாததும் செயற்பாட்டு ரீதியான அரசியலை முன்னெடுப்பது. சொல்வதை விடவும் செய்வதே முக்கியம். கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அடிப்படையான விடயங்களில் பலமான நிலையில் மக்களை வைத்திருக்கவேண்டும். விடுதலை அரசியலுக்கு இது மிகமிக அவசியமானது. 

5. சமூகப் பாதுகாப்பும் சமூக நீதியும் சமத்துவமும். 

6. பால் வேறுபாடுகளற்ற நிலையைப் பின்பற்றுவது. பெண்களின் ஆற்றலுக்கும் உரிமைக்கும் பொறுப்பளித்தல். 

7. இயற்கை வளங்களைப் பேணுவதும் அவற்றை மேம்படுத்துவதும் சுதேசத் தன்மையுடையதும். 

8. சோரம்போகாதிருத்தல். எந்த மேற்சக்திகளிடத்திலும் குறுகிய நலனுக்காக அடிப்படையான இலக்கையும் கொள்கையையும் விட்டுக் கொடாதிருத்தல். 

9. புதிய தலைமுறையினருக்கான இடத்தை உரிய வகையில் அளித்தல். 

10. பால் வேறுபாடுகளற்ற நிலையைப் பின்பற்றுவது. பெண்களின் ஆற்றலுக்கும் உரிமைக்கும் பொறுப்பளித்தல். 

இவற்றில் எதையேனும் இந்தத் தேசியவாதக் கட்சிகளும் தலைமைகளும் கொண்டுள்ளனவா? அப்படியென்றால் அவை எவை என்று யாராவது சொல்லுங்கள்? 

இதைக் குறித்துக் கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்பது தவறா? அப்படிக் கேட்டால் அதை அரசியல் மாண்பின் அடிப்படையில் ஏற்றுப் பரிசீலிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் பதிலாக அவதூறுகளை வாரி இறைப்பது ஏன்? அவ்வாறு கேள்வி எழுப்புவோரையும் விளக்கங்களைக் கேட்போரையும் எதிரிகளாகப் பார்ப்பதும் துரோகிகளாகச் சித்திரிப்பதும் ஏன்? இப்படிச் செய்து தனிமைப்படுத்தி சமூகத்திலிருந்து ஒதுக்க முற்படுவது எந்த வகையில் நியாயம்? 

இதனால்தான் இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகளையிட்டு நாம் எச்சரிக்கை அடைய வேண்டியுள்ளது. அவற்றைப் பொருட்படுத்துவது அவசியமில்லை என்று கருதவேண்டியுள்ளது. இவை நடிப்புச் சுதேசிகள். போலி டப்பாக்கள். விடுதலைக்கு எதிரானவை. மக்கள் விரோதமானவை. இப்படியான கட்சிகளையும் தலைமைகளையும் எப்படி ஏற்றுக் கொள்வது? 

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=4575

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)

என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்)

    —  கருணாகரன் — 

தமிழ்த்தேசியக் கட்சிகளின் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) அரசியல் போதாமைகளும் ஜனநாயகப் பற்றாக்குறையும் சமூக நீதி குறித்த அக்கறையின்மையும் செயற்பாட்டுப் பலவீனமும் அவற்றை விட்டு நம்மைத் தூரத் தள்ளுகின்றன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளை முறியடிக்கக் கூடிய விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படைத் தகுதிகளை இவை கொண்டிருக்கவில்லை என்பது இதில் முக்கியமான குறைபாடாகும். இதிலும் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தினரோடு கொள்ள வேண்டிய உறவைப் பற்றியும் இணைந்து செயற்பட வேண்டிய அரசியல் தேவையைப் பற்றியும் இவற்றிடம் எந்த விதமான தெளிவான சித்திரங்களும் இல்லை. நடைமுறைகளும் இல்லை. 

இதைப்போலவே வடக்கும் கிழக்கும் எப்படி அகரீதியாகவும் புறரீதியாகவும் இணைந்து அரசியல் மற்றும் பண்பாட்டு உறவில் நீடிப்பது என்பதைக்குறித்தும் இவற்றிடம் எந்த விதமான சிந்தனைகளையும் செயற்பாட்டு முறைமைகளையும் காணமுடியவில்லை. அவ்வாறே வடக்குக் கிழக்கில் உள்ள சிங்கள மக்களுடன் எப்படியான அரசியல் தன்மைகளை மேற்கொள்வது? அரசியலுக்கு அப்பால் சமூக வாழ்விலும் பண்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பிற செயல்முறைகளிலும் எப்படி இணக்கப் புள்ளிகளையும் ஒருங்கிணைவையும் கொள்வது என்பதிலும் எந்தத் தெளிவும் இல்லை. (இதைக் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயலாம்). 

இந்த நிலையில் தனியே அரச எதிர்ப்புவாதமும் சர்வதேசத்தை நோக்கிய கையேந்தலுமாக தமிழ்த்தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியுமா? அது பயன் தருமா? அதுவும் போராடிப் பேரிழப்புகளைச் சந்தித்த நிலையிலிருக்கும் மக்களுக்கு இவ்வாறான மேலோட்டமான அரசியல் (சட்டை கசங்காத அரசியல் அல்லது வெள்ளை வேட்டி அரசியல்) பயனுடையதா? சரியானதா? 

இவ்வாறான நியாயமான கேள்விகளை நாம் எழுப்பும்போது உடனடியாக நம்மைநோக்கி, “அப்படியென்றால், நீங்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவரா? அரச சார்பானவரா, ஒத்தோடியா?” என்று கேட்கிறார்கள். 

ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று உண்மையில் விளங்கவில்லை. இதொரு குறுக்கு வழி எண்ணமே இவர்களை இப்படிக் கேட்க வைக்கிறது. மாற்றுச் சிந்தனைக்கு செல்ல முடியாத, மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்க முடியாத, மாற்றுச் செயல் முறையில் தம்மை ஈடுபடுத்த முடியாததன் காரணமே இது. 

நாம் சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது அந்தத் தரப்பிலுள்ளவர்களின் பொறுப்பாகும். அதுவும் அரசியல் ரீதியான கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படையாக முன்வைத்தால் அதை அதே வெளிப்படைத் தன்மையோடு அணுகி, அவற்றுக்கான பதிலைக் காண முற்படுவதே நியாயம். அதுவே அழகு. அதுவே சரியானது. அதை விடுத்து, எதிர்க்கேள்விகளின் மூலம் திசை திருப்பல்களை மேற்கொள்வதும் அரச ஆதரவாளர் என்று குறிசுட்டு ஒரு பக்கம் தள்ளுவதும் நியாயமற்றது. அது கீழ்மையானது. 

அரச ஆதரவு என்பதும் அரசை  எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அரசைப் புரிந்து கொள்வது என்பதும் வெவ்வேறானது. நிபந்தனையற்ற (கேள்விகளற்ற) அரச ஆதரவு என்பதும் நிபந்தனையற்ற (கண்மூடித்தனமான) அரச எதிர்ப்பு என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அடித்தால் மொட்டை. கட்டினால் குடும்பி என்ற மாதிரி. இதையே கறுப்பு – வெள்ளை அரசியல் என்கிறோம். இந்தப் பார்வையே துரோகி – தியாகி என்ற பிரிகோட்டை உருவாக்கக் காரணமாகியது. இரண்டினதும் விளைவுகளில் வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அரசியல் அடிப்படைகளில் இரண்டுக்கும் ஒத்த தன்மைகளுண்டு. முக்கியமாக உண்மைகளைக் காணத் தவறும் போக்கில். 

மற்றும்படி அரச ஆதரவு – அரச எதிர்ப்பு என்பதற்கு அப்பாலானதொரு வழிமுறையைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று பலரும் கேட்கலாம். அல்லது இதைக்குறித்த குழப்பம் அவர்களுக்கிருக்கலாம். இதற்கு முன்பு நாம் ஒன்றைப் பற்றி அறிய வேண்டும். 

இதுவரையான (60 ஆண்டுகளுக்கு மேலான) அரச எதிர்ப்பு நமக்கு எதைப் பெற்றுத் தந்தது? அதைப்போல இதுவரையான (20 ஆண்டுகள் வரையான) அரச ஆதரவு தந்தது என்ன? 

எனவேதான் நாம் இரண்டுக்கும் அப்பாலான ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அது கண்மூடித்தனமான அரச எதிர்ப்போ அரச ஆதரவோ அல்ல. இரண்டுக்கும் இடையிலானதைப் போன்றது. அதாவது தேவையானபோது –சரியானவற்றுக்கான ஆதரவைக் கொடுப்பது. பிழையானபோது அவற்றை எதிர்ப்பது. மறுப்பது. 

இதை ஒரு அரசியல் வழிமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. ஆனால் இந்தக் கடினங்களை எதிர்கொண்டே நாம் நம்முடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். எந்தக் கடினங்களையும் எதிர்கொள்ளாமல் எந்த இலக்கையும் எட்ட முடியாது. 

சரி, ஆனால், இதற்கான சாத்தியங்கள் எப்படி? என்ற கேள்வியொன்று உங்களுக்குள் எழலாம். ஏனென்றால் அரச எதிர்ப்பில் பிரச்சினையே இல்லை. அரச ஆதரவை வரையறை செய்வதில்தான் பிரச்சினையே. நாம் நினைப்பதைப்போல அரச ஆதரவை வரையறுத்து வழங்க முடியாது. அது அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று நீங்கள் வாதிடலாம். 

அதில் உண்மையுண்டு. நிபந்தனையற்ற ஆதரவையே அதிகாரம் விரும்பும். அதையே அனுமதிக்கும். இந்த மாதிரி இடைநிலை நிற்கும் தன்மையை அது அனுமதிக்காது. அதற்கு இடமளிக்காது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சில தேவைகள் –அவசியங்கள் உண்டு. அதைக் கவனித்து அதற்குள் காரியங்களைச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செயற்படுத்திக் கொள்ளலாம். அது சோரம் போதல் அல்ல. அது அரசியல் சாதுரியமாகும். மக்கள் நிலைநின்று,மக்கள் நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாகும். இதை இராஜதந்திர ரீதியாகச் செயற்படுவது என்றும் கருதிக் கொள்ளலாம். 

இவ்வாறு வலிமையாகச் செயற்படுவதன் மூலம் ஒரு புதிய அரசியல் அடையாளத்தையும் வழிமுறையையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த அரசியல் வழிமுறையும் அடையாளமும் முக்கியமானது. இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியதும் அதுவே. எப்படியென்றால், அரச எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் சரியானதை ஏற்றுக் கொண்டு, தவறானதை நிராகரித்தும் மறுத்தும் நியாயமாகச் செயற்படுவதாக ஒரு அடையாளத்தை உருவாக்குதல். இந்த அடையாளம் முக்கியமானது. இது எதிர்த்தரப்புகளுக்கும் வெளிச்சமூகத்துக்கும் ஒரு புதிய சேதியைச் சொல்லும். குறிப்பாக சிங்கள மக்களிடம் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தும். 

இப்போதுள்ள அரச எதிர்ப்பை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நாட்டுக்கும் தமக்கும் எதிரான போக்கு என்று கருதும் அல்லது கருதப்பட வைக்கும் நிலையே காணப்படுகிறது. எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பைக் காட்டுவது என்பது “எதிர்த்தரப்பு – எதிரித் தரப்பு” என்று அடையாளமாக்கி, அதற்கான எதிர் மனநிலையை சிங்கள மக்களிடத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அடையாளத்தையும் மனநிலையையும் பயன்படுத்தியே சிங்கள மேலாதிக்க –இனவாத அரசியல் நடத்தப்படுகிறது. 

இதை நான் மேற்சொன்ன இடையூடாட்ட (சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் கருதிச் செயற்படும்) அரசியல் உடைக்கக் கூடியதாக இருக்கும். நாம் எதற்கும் எப்போதும் எதிரானவர்களல்ல. சரியானதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு ஆதரவழிப்போம். தவறானதை எதிர்ப்போம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவே நாம் எப்போதும் சரியானதை – நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்துவது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற எதிர் அடையாளத்தை மாற்றியமைப்பது. 

“இதிலும் பிரச்சினை உண்டே!” என்று நீங்கள் கேட்கலாம். “எங்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது அவர்களுடைய நோக்கில் தவறாகத் தெரியும். அவர்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது எங்களுக்குப் பிழையாகத் தோன்றும். இப்படியிருக்கும்போது நாம் எப்படிப் பொதுவான சரியை ஏற்றுக் கொள்வது?” என்ற விதமாக. 

இந்தச் சிக்கலும் சிரமமும் உண்டே. அதுதான் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு மிகமிகக் கடினமான வழிமுறை என்று. ஆனால் வேறு வழியில்லை. போர் மட்டும் இலகுவான வழியாக இருந்ததா, என்ன? அதில் எவ்வளவு இழப்புகள்?முக்கியமாக உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், வாழ்விழப்புகள், உடமை, வாழிட இழப்புகள் என ஏராளம் இழப்புகளை நாம் சந்திக்கவில்லையா? முப்பது ஆண்டுகள் அந்த வழியில் நம்மைச் செலவிடவில்லையா? 

இது அதை விட இலகுவானது. ஆனால்,மிகப் பொறுமையாக, மிக நிதானமாக, மிக விவேகமாகச் செயற்பட வேண்டியது. 

இரண்டு தரப்புக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய சரிகளை முதலில் ஏற்றுக் கொள்வது. அதற்கான ஆதரவை வழங்குவது. அதைப்போல சிக்கலான இடங்களில் மிக நிதானமாக எமது தரப்பின் நியாயப்பாடுகளைச் சொல்லி, முன்பு சரியானவற்றுக்கு வழங்கிய ஆதரவை நினைவூட்டி எதிர்ப்பது. 

இப்படிச் செய்து கொண்டு வரும்பொழுது நியாயமாக நாம் எதிர்ப்பைக் காட்டுகிறோம். நியாயங்களைக் கேட்கிறோம். நியாயமாகப் பேசுகிறோம் என்ற உணர்வு ஏற்படும். ஏனெனில் எதிர்த்தரப்பில் (சிங்களத்தரப்பில்) உள்ளவர்களுக்கு இதயமும் மூளையும் மனச்சாட்சியும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அவர்களிடமும் அறவுணர்வும் புரிதலும் உண்டு. உண்மையில் அவர்களை நாம் எதிர்த்தரப்பு என்றே கருத வேண்டியதில்லை. அப்படிக் கருதுவதே ஆயிரம் பிரச்சினைகளை உற்பவிக்கக் கூடியது. இது நம்முடைய கடந்த கால அனுபவம் இல்லையா? 

என்பதால் நாம் இந்தச் சரியென்றால் அதை ஏற்றும் பிழையென்றால் அதை எதிர்த்தும் நிற்கும் ஒரு அரசியல் வழிமுறையை உருவாக்கி நிலைப்படுத்த வேண்டும். அதன் மூலம் புதிய அரசியல் திறப்பை (சாவியை) நம்முடைய கையில் எடுத்துக்கொள்ள முடியும். இன்றுள்ள ஒரே வழிமுறை இதுதான். அரசியலில் மாற்றுப்பார்வைகளுக்கு எப்போதும் இடமுண்டு என்பது யதார்த்தம். ஆனால், அந்த பலதரப்பட்ட பார்வைகளில் எவை சரியானவை, அனுபவத்துக்கும் அறிவுக்கும் நெருக்கமானவை என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. தமிழ் அரசியல் முன்னெடுப்பு என்பது முற்று முழுதான ஆராய்வுக்குரியதாக இன்றுள்ளது. அதைச் செய்தே தீர வேண்டும். 

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=4741

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)

என் வழி தனி வழி — (04) (உரியதை உரிய காலத்தில் ஏற்க மறுக்கும் தமிழ் பெருந்திரள்)

     — கருணாகரன் — 

பெருந்திரள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அரசியலுக்கும், நடைமுறை யதார்த்தத்துக்குமிடையில் உள்ள இடைவெளி வரவரப் பெருத்துக் கொண்டே போகிறது. இடைவெளி அதிகரிக்க, அதிகரிக்க நடைமுறைத் தோல்விகள் கூடிக் கொண்டே போகும். இது இயல்பு. இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. ஒரு பக்கத்தில் அது சர்வதேச சமூகத்தை – குறிப்பாக மேற்குலகத்தையும் அதன் நீதியுணர்வையும் மிக ஆழமாக நம்பிக்கொண்டிருக்கிறது. இதில் ஒரு சாரார் இந்தியாவையும் இந்த நம்பிக்கையில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சாரார், இந்தியாதான் இன்னும் இந்தப் பிரச்சினையின் வகிபாகமாக உள்ளதென்று நம்புகிறார்கள். மறுபக்கத்தில் இவர்களே அரசியல் என்பது நலன்களின் அடிப்படையில் நீதிக்கு அப்பால் நிகழ்கிறது என்றும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இதைப்போல இவர்களே இந்தியாவை முழுதாக நம்ப முடியாது எனவும் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே அக முரணியக்கத்தில் இவர்கள் சிக்கித் தவிப்பது ஏன்? 

இலங்கையின் இனப்பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் செல்வாக்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது தமிழ்ப் பெருந்திரளுடைய நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதைப்போலவே பிராந்திய சக்தி என்ற அடிப்படையில் இந்தியாவுக்கொரு வகிபங்குண்டு. ஆனால் அதில் இடையீட்டைச் செய்யுமளவுக்கு இன்று சீனாவின் உள்நுழைவும் வளர்ச்சியும் இலங்கைச் சூழலிலும் இந்தப் பிராந்திய நிலையிலும் உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். அதிகம் ஏன், தற்போது அழுத்தப் பிரயோகத்துக்கு முற்படுத்தப்படும் போர்க்குற்ற விசாரணை அல்லது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சீனா மற்றும் அதனோடிணைந்த நாடுகளின் செல்வாக்கு எப்படித் தடையாயிருக்கிறது என்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம் அல்லவா. இதைப் புரிந்து கொள்ளாமல் எப்படி சர்வதேசக் கணக்கைப் பார்க்க முடியும்? 

தமிழ்ப் பெருந்திரளிடம் சில அடிப்படைக் குறைபாடுகள் அல்லது பலவீனங்களுண்டு. அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, அதீதமாக ஒன்றை நம்புவது, அதேயளவுக்கு ஒன்றைக் கடுமையாக அல்லது முழுமையாக  எதிர்ப்பது, ஜனநாயகத்திலும் முற்போக்கிலும் நம்பிக்கையற்றிருப்பது அல்லது அதற்கு எதிராக இயங்குவது, கற்பனாவாதத்தில் திளைப்பது, உலக நடைமுறைகளுக்கு வெளியே நிற்பது அல்லது அதை நெருங்குவதற்குத் தயங்குவது, தன்மோகத்தில் திளைத்திருப்பது, தனக்கு சார்பாகவே எல்லாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது  என இது நீளும். 

இவையெல்லாம் விடுதலைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கும் பொருந்தாதவை. அநேகமாகச் சிறுபிள்ளைத் தனமானவை. இதில் பலவற்றை கடந்த கால அனுபவங்களின் வழியாக தமிழ்ச்சமூகம் கடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. அதுவே முதிர்ச்சி, பக்குவமாகும். குறிப்பாக இந்தியாவின் செல்வாக்கும் அக்கறையும் எவ்வளவுக்கு என்பதும் போர் நடந்த போது அந்தப் போருக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் போர்க்குற்றங்களின் போது சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகளும் எப்படி இருந்தன. இப்பொழுது கூட தமது நலனுக்காகவா எமது நலனுக்காகவா அவை முயற்சிக்கின்றன என்பதையும் பார்க்க வேணும். 

ஐந்தறிவு ஜீவன்களான விலங்குகள் கூடப் பட்டறிவின்படியே நடக்கும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்பதை இங்கே நினைவு கொள்ளலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் மட்டும் இந்த உயிரியல் விதிக்கு பொருந்தாத ஜந்தாக உள்ளது. இதனால்தான் அது மிக நீண்ட போராட்டத்தை மிகப் பெரிய தியாகங்களின் வழியே செய்தும் வெற்றியடைய முடியாமல் தோல்வியின் படிக்கட்டில் குந்திக் கொண்டிருக்கிறது. 

இதைப் பற்றி தொடர்ந்து நான் உட்படச் சிலர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறோம். ஆனால் இதைப் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ யாரும் தயாரில்லை. இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. காரணம், இதில் முன்னரே குறிப்பிட்டுள்ளதைப்போல தமிழ்ப் பெருந்திரளானது அதிகமதிகம் உணர்ச்சி வசப்பட்டு, அதீத கற்பனையில் மிதப்பதால், யதார்த்தத்துக்குப் புறம்பாகச் சிந்திப்பதால் அது இப்படித்தான் செய்யும். எந்த உண்மையையும் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. பதிலாக கற்பனையில் திளைக்கவே விரும்பும். 

தமிழ்ப் பத்திரிகைகளிலும் தமிழ் இணைய வெளியிலும் தினமும் கொட்டப்படும் செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகளைப் பார்க்கும்போது இது தெளிவாகப் புரியும். பெருந்திரள் தமிழ் அரசியலாளர்களும் திரும்பத்திரும்ப ஒன்றையே வாந்தியாகக் கொட்டுகின்றனர். இதனால்தான் இதை –இந்த அரசியல் உணர்ச்சியை (அறிவை அல்ல) சுய இன்பத்தின்பாற்பட்டது என்கிறோம். சுய இன்பத்தை அனுபவிக்கும்போது வேறு எதுவும் புலப்படாது. அது மட்டுமே ருசிக்கும். அதுவே அற்புதமாக இருக்கும். இதில் அதிகமதிகம் திளைப்பது தமிழ்ப் புத்திஜீவிகளும் தமிழ் மேட்டிமையினருமே. அவர்கள் அதை கீழடுக்குகளுக்கும் மிக லாவகமாகப் பரப்பி விடுகின்றனர். அதற்கு இவர்கள் பயன்படுத்துவது தமிழ் இனம், தமிழ் மொழி என்ற அடையாளங்களையும் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையுமாகும். இவை இரண்டும் இவர்களுக்கு வாய்பாக இருக்கின்றன. இவை இரண்டும் சரிசமமாக வேலை செய்கின்றன. இதைப் புரிந்து கொள்வோர் இதைக் கடந்து செல்லவே முயற்சிப்பர். புரியாதோர் இதற்குள் சிக்குண்டு அமிழ்ந்து விடுவர். இதுவே நடக்கிறது. 

ஆகவே தமிழ்ப் பெருந்திரள் தன்னைத்தானே சிறை வைத்துள்ளது. அது பெருந்திரளாக இருப்பதால் விலகலாகச் சிந்திப்போரும் தவிர்க்க முடியாமல் இந்தச் சிறைக்குள் சிக்க வேண்டியிருக்கிறது. ஆட்டுக்கு உள்ளதுதான் குட்டிக்கும் என்பதைப்போல. ஊரோடு ஒத்தது என்பதைப்போல. சிறிய திரளினரால் சரியாகச் சிந்தித்தாலும் தேர்தல் அரசியலில், அது உருவாக்கியிருக்கும் அரசியல் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த முடியாது. ஆனால் அவர்கள் சொல்வதும் வலியுறுத்துவதுமே பின்னர் நடைமுறையாகிறது. என்னவொன்று,அது காலம் பிந்தியதாக – காலம் கடந்ததாக அமைந்து விடும். எளிய உதாரணம், இலங்கை இந்திய உடன்படிக்கையின் மூலமான மாகாணசபை முறைமை என்பது ஒரு நல்ல தொடக்கம் என்பதை தமிழ்ப்பெருந்திரள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகே அதை ஏற்றுக் கொண்டு அதில் போட்டியிடுவதற்குத் தமிழ்ப் பெருந்திரள் வந்தது. இதைப்போல ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணத் தயார் என்று சொல்லும் நிலைக்கும் அது பல இழப்புகள், பல பின்னடைவுகள், பல ஆண்டுகாலத் தாமதத்திற்குப் பின்னரே வந்திருக்கிறது. 

எனவே இப்போது நாம் வலியுறுத்துகின்ற – பேசுகின்ற எந்த விடயங்களைப் பற்றியும் கவனிக்காமல், இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கும் இந்தப் பெருந்திரள் இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பின் வேறு வழியின்றிக் கதியின்றி வந்து சரணாகதியில் நிற்கும். அதுவரையிலும் அதனுடைய முட்டாள்தனமாக அலைச்சல்களில் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகமும் சேர்ந்திழுபட வேண்டியதுதான். இதை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம். 1987க்குப் பின்னரான அரசியலில் (யுத்தத்தில்) இழப்புகளைத் தவிர அரசியல் ரீதியாக எதையும் பெற முடியாததைப்போலவே தற்போதைய கால வீணடிப்பும் நிகழப்போகிறது. 

அப்படியென்றால் இதுவரையிலும் நடந்த நீதி மறுப்புகளுக்கும் இழப்புகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் பதிலென்ன? சர்வதேச சமூகம் இலங்கைக்கு (அரசுக்கு) அழுத்தம் கொடுக்க முற்படும்போது அதை நாம் விட்டு விடலாமா? இலங்கை அரசை அல்லது சிங்கள ஆட்சியாளரை எப்படி நம்புவது? எந்த அடிப்படையில் நாம் மாற்று அரசியலை – அரசுடனான அரசியலை மேற்கொள்வது என்ற மாதிரியான கேள்விகள் உங்களுக்குள் எழும். 

நிச்சயமாக இலங்கையில் மேற்கொள்ளப்படுவது இனவாத ஒடுக்குறையே. அதில் அது பழுத்த அனுபங்களையும் பயிற்சியையும் மிகத் திறமையான நுட்பங்களையும் பெற்றிருக்கிறது. அதனால்தான் அது தமிழ்ப் பேசும் சமூகங்களை ஒன்றிணைய விடாமல் பிரித்து வைத்திருக்கிறது. மலையகத் தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழ்மக்கள் என. அடுத்த அடுக்கில் வடக்கும் கிழக்கும் தனித்தனி என்ற விதமாக. அடுத்த அடுக்கில் தமிழ்த் தரப்பிலேயே அரச ஆதரவுத் தரப்பு – அரச எதிர் தரப்பு என. அடுத்த அடுக்கில் அரச எதிர்த் தரப்புகளுக்குள்ளேயே பல குழுக்களாகவும் பல கட்சிகளாகவும். அடுத்த அடுக்கில் அரச ஆதரவுத் தரப்புகளையும் தனித்தனியாக – பல குழுக்களாக. இதைத் தவிர, தீர்வு யோசனைகள், அரசியலமைப்பு விடயங்கள் போன்றவற்றையும் அது பொருட்படுத்தாமல் தந்திரோபாயமாக இழுத்தடித்து வருகிறது. இப்படி ஆயிரம் நுட்பங்களோடும் தந்திரங்களோடும் அது இனவாதத்தை மேற்கொள்கிறது. 

இதை முறியடிக்கக் கூடிய வினைத்திறனும் நுட்ப அறிவும் இராஜ தந்திரமும் தமிழ்ப் பெருந்திரளுக்கு வேண்டும். அதற்கான பொறிமுறைகள் வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும். அதை நோக்கி நகர வேண்டும். அத்தனையும் செய்முறைப் பயனுடையதாக இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பாக்கமும் செயலூக்கமும் வேண்டும். உழைப்பும் அர்ப்பணிப்பும் வேண்டும். இப்படிப் பல. இதொன்றும் இல்லாத வெற்றுக் கூச்சலையே தமிழ்ப்பெருந்திரள் இப்போது கொண்டுள்ளது. அதை அது அரச எதிர்ப்பு வாதப் பூச்சில் வைத்துச் செய்கிறது. இது மேலும் தமிழ்ச்சமூகத்தைப் படுகுழியிலேயே விழுத்தும். 

 

https://arangamnews.com/?p=5060

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வழி தனி வழி (05): (அரச ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியலுக்கு அடுத்தது என்ன?)

spacer.png

“தமிழ்த்தேசிய அரசியலையும் (எதிர்ப்பு அரசியலையும்) அரசாங்கத்துடனான இணக்க அரசியலையும் மறுத்துப் பேசி வருகிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் முன்வைக்கும் அரசியல் என்ன? அந்த அரசியலின் பொருத்தப்பாடுகள், சாத்தியப்பாடுகள் என்ன? அதற்கான வழிமுறை என்ன? அதை யார் முன்னெடுப்பது? எப்படி அதை முன்னெடுப்பது? இந்தக் காலகட்டத்திற்கு அது இயலுமா? இப்பொழுது அந்த அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் இருக்கின்றனவாக?” என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகிறார்கள். 

முதலில் இது ஒரு முதற்கட்ட வெற்றி. ஏனென்றால் இவர்கள் மறு அரசியல் ஒன்றை – மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குள் சில ஐயப்பாடுகள் – குழப்பங்கள், நம்பிக்கையீனங்கள் உள்ளன. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலின் வெறுமையை இவர்கள் புரிந்துள்ளனர். அதாவது வெறும் அரச வெறுப்பு அரசியல் என்பது அந்த அரசியலை முன்னிறுத்தும் சிறியதொரு உயர் குழாத்தினரின் நலன்களையும் அந்தஸ்தையும் உயர்த்துகிறதே தவிர, பரந்து பட்ட தமிழ் மக்களின் – குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண நிலையிலுள்ள மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வராது. அவர்களுக்கான தீர்வையோ அந்தஸ்தையோ நலன்களையோ இது நிறைவேற்றாது என்று புரிந்திருக்கிறது. இவர்கள் தங்களுடைய  அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் நேர்மையாக உள்ளனர். மக்களுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது   என்பதுடன் காலத்தை மேலும் விரயம் செய்யவும் இவர்கள் விரும்பவில்லை. அத்துடன் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படித் தோற்பதற்கு எந்த வகையான நியாயமும் இல்லை. அவசியமும் இல்லை என்பதிலும் தெளிவோடும் உறுதியோடும் உள்ளனர். இதுவரையான அனுபவம் இந்த மெய்ஞானத்தை உண்டாக்கியுள்ளது. ஆகவே இவர்களைப் பாராட்ட வேண்டும். 

இதைப்போல இணக்க அரசியலில் –தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றாக அல்லது அதை எதிர்த்துக் கொண்டு அரச சார்புடன் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் –நம்பிக்கை வைத்திருந்தோரிலும் பலர் அதனால் ஒரு எல்லைக்குமேல் எதையும் செய்ய முடியாது. அரசின் மேலாதிக்க நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு இழுபடமுடியுமே தவிர சுயாதீனமாக எதையும் செய்ய முடியாது. அதற்கான வெளி (Space) கிடைக்காது. மட்டுமல்ல, அடிப்படைப் பிரச்சினைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது. அரசுடன் இணைந்திருப்பதன் மூலம் சிறிய அளவிலான நன்மைகளை (நிதி ஒதுக்கீடு வேலை வாய்ப்பு போன்றவற்றில்) பெறலாம். அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்குள்தான் என்று புரிந்துள்ளனர். குறிப்பாகத் தன்னுடைய நலன்களை மையப்படுத்தி அரசு சிந்திக்குமே தவிர தனக்கு ஆதரவளிக்கிறார்களே என்று அது சிந்திக்கவில்லை. தன்னை ஆதரிக்கும் இந்தச் சக்திகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் இவை விரும்பவில்லை. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் அங்கயனைத் தனியாகவும் டக்ளஸ் தேவானந்தாவைத் தனியாகவும் கையாள்கின்றன. வன்னியிலும் அப்படித்தான். கிழக்கில் பிள்ளையான் சந்திரகாந்தனைத் தனியாகவும் கருணா மற்றும் வியாழேந்திரனைத் தனித்தனியாகவும் கையாள்கிறது. முஸ்லிம் கட்சிகளையும் இப்படியே இவை தனித்தனியாகக் கையாண்டன. 

இங்கே அரசு என்று குறிப்பிடுவது அந்தந்த ஆட்சியாளர்களையே குறிக்கிறது. அது ஐ.தே.கவாக இருந்தாலென்ன சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் அதனோடு இணைந்த பொது ஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சியாக இருந்தால் என்ன? இரு தரப்பினரும் ஒரே அணுகுமுறையையே சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பாகக் கொண்டிருக்கின்றனர். இவர்களும் தங்களுடைய அறிவுக்கும் மனச்சாட்சிக்கும் விசுவாசமாக உள்ளனர். சனங்களைக் குறித்து நேர்மையாகச் சிந்திக்கின்றனர். தமிழ் மக்களின் மெய்யான முன்னேற்றம், அவர்களுடைய சிறப்பான –உத்தரவாதப்படுத்தப்பட்ட எதிர்காலம் போன்றவற்றை உண்மையாகவே விரும்புகின்றனர். 

ஆகவே இந்த இரு அரசியலிலும்  (எதிர்ப்பு அரசியல் – இணக்க அரசியல்) நம்பிக்கை இழந்த ஒரு தரப்பு வளர்ச்சியடைந்து வருகிறது. இது மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்கிறது. அந்த மாற்று அரசியல் என்ன? என்பதே இவர்களுடைய பிரச்சினை. 

மாற்று அரசியலைப் பற்றி நாம் பேச முற்பட்ட போது சிலர் அதைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டவர்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும் அவசர அவசரமாக தலைகளை மாற்றவும் பெயர்களை மாற்றவும் முயற்சித்தனர். அதாவது அடிப்படையே தவறு என்பதை விட்டு விட்டு போத்தலை மாற்றினால் சரி என்ற மாதிரிச் செயற்பட்டனர். இதன் விளைவே தமிழ் மக்கள் பேரவை, விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அதி தீவிர அரசியல் போன்றவை. இது ஒரு பொய்யான ஏற்பாடு. வெறும் கற்பிதம். எந்த வகையிலும் மாற்று அல்ல என்பதை இவை மிக விரைவிலேயே காண்பித்து விட்டன. முக்கியமாக அரச எதிர்ப்பு என்பதைச் சற்றுத் தீவிரமான நிலையில் மேற்கொள்வன என்பதற்கு அப்பால் எந்த விதமான செயற்பாட்டுப் பொறிமுறையையும் இவை உள்ளடக்கவில்லை. இதனால் இவையும் வெளிறிப்போயுள்ளன. 

தமிழ் மக்களுக்கு இன்று தேவையாக இருப்பது செயற்பாட்டு அரசியலே. ஏனெனில் அது போரினாலும் ஒடுக்குமுறையினாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பை ஈடுசெய்யக் கூடிய – ஒடுக்குமுறையை செயல்பூர்வமாக எதிர்க்கக் கூடிய –பிராந்திய, சர்வதேச சக்திகளைக் கையாளக் கூடிய, அவற்றை வெற்றிகரமாக அணுகக் கூடிய அரசியலே வேண்டும். அத்தகைய அரசியலை முன்னெடுக்கக் கூடிய அறிவும் ஆற்றலும் உள்ள தரப்புகளுமே வேண்டும். 

அதைக்குறித்தே நாம் சிந்திக்கிறோம். அதையே பேச விரும்புகிறோம். அதுவே தேவையானது. அதுவே பொருத்தமானது. 

இதற்கு முதலில் அரசைக் கண்மூடித்தனமாக நம்புவதையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. பழக்கப்பட்ட வழிமுறைகளை விட (பழகிய பாதையை விட) வேறு புதியதொரு பாதையில் பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல. அதுவும் இனவாதமும் ஒடுக்குமுறையும் எதிர்ப்புணர்வும் வலுவடைந்திருக்கும் ஒரு சூழலில். ஆனால் வெற்றியைப் பெற வேண்டுமானால், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டுமானால் இந்தக் கடினமான பாதையில் பயணிக்கவே வேண்டும். புதிய பாதையில் காலடியைப் பதிக்கவே வேண்டும். 

இதற்கு தொடக்கமாக அரசாங்கத்தை முழுதாக எதிர்க்காமலும் முழுதாக ஆதரிக்காமலும் செயற்படும் ஒரு நிலைப்பாடும் செயற்பாட்டு உத்தியும் வேண்டும். இதற்கு அரசு கடுமையான முகச் சுழிப்பைக் காட்டும். அதைப்போல தமிழ்த்தேசிய – அரச எதிர்ப்புத் தரப்பினரும் இந்தத் தரப்பை நம்ப முடியாது. இது அரசின் கையாட்கள், கூலிகள், விலங்கு மீன்கள், ஏன் துரோகிகள் என்று கூறி இதை எதிர்ப்பர். ஊடகங்களும் ஆய்வறிஞர்களாக இருப்போரும் கூட இதில் நம்பிக்கை வைப்பதற்குத் தயங்குவர். தமிழ்த்தரப்பில் பொதுவாகவே ஒரு பொதுக்குணம் உண்டு. முதலில் எந்தப் பெறுமதியான விசயங்களையும் அவர்கள் ஏற்று அங்கீகரிப்பதில்லை. காலம் பிந்தியே அதற்கான அங்கீகாரத்தைக் கொடுப்பர். கொடுப்பதோடு நிற்பதில்லை. அதைச் சுவீகரித்துக்கொள்ளவும் முயற்சிப்பர். 

இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. மாகாணசபை தொடக்கம் பெண்கள் சைக்கிள் ஓடுவது, பிற இடங்களில் குடியேறுவது, வெளியே சென்று உழைப்பது வரையில் ஏராளம். ஏன் பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்தபோதே அது வேண்டாம் என்று நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர்கள்தானே. இவற்றில் முதலில் ஈடுபட்டவர்களை நிராகரித்து,அவமதித்து, கேலி செய்து, வகைபாடியவர்களே பின்னர் இதை முழுதாக ஏற்றுக் கொண்டு அதில் முழுதாக ஈடுபட்டனர். இப்படியானதுதான் நம்டைய வரலாறு. 

ஆகவே இப்பொழுது நாம் கூறுகின்றதை இவர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்வர் என்றில்லை. ஆனால் அதற்காக நாம் இதைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் இது சரியானது. அவசியமானது. மாற்றானது. புதியது. வெற்றியளிக்கக் கூடியது. இருந்தும் உடனடியாக இதற்கு மக்களின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைத்து  விடும் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல எந்தச் சரியான விசயங்களையும் தமிழ் மக்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவோ அங்கீகரிக்கவோ மாட்டார்கள். காலப்போக்கிலேயே அவர்கள் அந்த வழிக்கு – அந்த இடத்துக்கு வந்து சேருவார்கள். ஆகவே அதுவரையில் 

இதை – இந்த இடையூடாட்ட அரசியலை (முழுதாக அரச எதிர்ப்பும் இல்லாத – முழுதாக அரச ஆதரவும் இல்லாத வழிமுறையை) உடனடியாக மக்களிடம் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது. ஆனால் அதற்காகக் கை விடவும் முடியாது. சரியானதொன்றை எப்படிக் கை விட முடியும்? எனவே இதற்கு மிகப் பொறுமையோடு வேலை செய்ய வேண்டும். அதற்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான செயலணியையும் செயல் வழிமுறையையும் உருவாக்க வேண்டும். இருந்தும் மக்களின் அங்கீகாரம் உடனடியாகக் கிட்டவில்லை என்றால் எப்படி இந்தப் போட்டிச் சூழலின் தாக்குப் பிடித்து நின்று வேலை செய்வது? இன்றைய உலகப்போக்கே மாறியிருக்கும்போது இலட்சியவாதச் சிந்தனையோடு யார்தான் வருவார்கள்? என்று நீங்கள் கேட்கலாம். 

அடிமை நிலையை நீக்க வேண்டும் என்றால், ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் எனில் அதற்கு அர்ப்பணித்து வேலை செய்தே ஆக வேண்டும். தவிர்க்க முடியாது. இதில் முக்கியமானது, அரசுக்கு நாம் எதிரானவர்களில்லை. அரசு அல்லது ஆட்சியாளர் மேற்கொள்ளும் அநீதிக்கும் பிழைகளுக்கும் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்குமே நாம் எதிரானர்கள். அதையே எதிர்க்கிறோம் என்பதை சிங்கள மக்களுக்கும் பிற சிங்களச் சமூகத்துக்கும் வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக ஆட்சியாளர்களையும் அரசையும் கடந்து சிங்கள மக்களிடம் தாற்பரியத்தை –உண்மைகளை – நியாயங்களை தெளிவாக்க வேண்டும். மக்கள் வேறு. அரசு வேறு என்ற அடிப்படையில் இதைச் செய்வது அவசியம். இதைச் சிங்கள மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலான உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆட்சியாளர்கள் லேசில் ஏற்றுக் கொள்ளவோ இடமளிக்கவோ மாட்டார்கள். அவர்கள் இதற்குத் தடைகளை ஏற்படுத்தி இடையூறுகளைச் செய்வர். இனவாதத்தைக் கடந்து செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இனவாதமே அவர்களுக்கு சோறு போடுகிறது. லாபங்களை அள்ளிக் குவிக்கிறது. எனவே இனவாதத்தைக் கடந்து சிங்கள மக்களிடம் தமிழ் அரசியல் செல்வதை,தமிழர்களின் நியாயம் உணரப்படுவதை அவர்கள், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே நமக்குப்பெரும் இடைஞ்சலும் நெருக்கடியும் ஏற்பட்டே தீரும். 

(மாற்றுப் பாதை தொடரும்) 

 

https://arangamnews.com/?p=5089

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.