Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்வெட்டி- கோமகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

மண்வெட்டி- கோமகன்

சம்பவத்தில் இவர்கள் :

பெயர் : லூக்காஸ் யாகோப்பு

தொழில் : விவசாயம்

உப தொழில் : தேவாலயத்தில் மணியடித்தல் மற்றும் சேமக்காலையில் குழி வெட்டல்

அம்மா பெயர் : எலிசபெத் யாகோப்பு

மகள் பெயர் : ஜெனிஃபர்

0000000000000000000000

கோமகன் பிருந்தாஜினி பிரபாகரன்

“இந்தா……. காலங்காத்தாலை அடக்க ஒடுக்கமாய் வீட்டிலை வேலைவெட்டியளை செய்வமெண்டில்லை பூசி மினுக்கி வெளிக்கிட்டுட்டாள் வே*********. பெத்த கொப்பன் கோத்தைக்கும் ஒரு அறிவில்லாமல் கிடக்கு. எக்கணம் இனி என்ன வில்லங்கத்தை வாங்கப்போறாளோ என்ரை ஏசப்பா ……..”

என்ற எலிசபெத்து கிழவியின் குரல் அந்தக்  காலைவேளையை மாசுப்படுத்தியதுமில்லாமல், அழகாக வெளிக்கிட்டு வெளியே வந்த ஜெனிஃபரை ஒரு நிமிடம் நிறுத்தியது.

“இஞ்சை அப்பம்மா………. நீ பெத்த லூக்காஸ் பேசாமல் இருக்க, இப்ப என்னத்துக்கு குத்தி முறியிறாய்? என்ரை வேலை எனக்குத் தெரியும். சரியோ ….? ” என்று விட்டு நகர்ந்த மகள் ஜெனிஃபரின் கதைகளும் அம்மா எலிசபெத்தின் கதைகளும் தூரத்தே இருந்து தனது மண்வெட்டியை துப்பாரவாக்கி அலகை தீட்டி கொண்டிருந்த லூக்காசின் காதுகளில் விழுந்தாலும் அம்மாவின் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாது அமசடக்கியாக இருந்தான்.

“ஏன்ராப்பா லூக்காசு உன்ரை மனுசி ஒண்டும் மோளுக்கு சொல்லுறேலையோ………? வந்ததும் சரியில்லை பிறந்ததும் சரியில்லை” என்று தனது மருமகளான திரேசம்மாவின் மீதுள்ள வெறுப்பை காட்டுவதுடன் மகன் லூகாஸையும் இந்த சம்பவத்துக்குள் இழுத்துவிட முயன்றாள்.

அந்தக்காலை வேளையில் ரெண்டாயிரம் கண்டு பொயிலை தோட்டத்துக்கு தண்ணி மாறி விட்டு ஆயிரம் கண்டு வெங்காயத்தறைக்கு மருந்தும் அடிச்சுப் போட்டு வந்த லூக்காசுக்கு அம்மாவின் கதைகள் கோபத்தைக் கொண்டு வரவில்லை. அவனைப்பொறுத்தவரையில், ‘அம்மா எதுவும் நல்லதுக்குத்தான் சொல்லுவா’ என்பது அவனின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இவர்களுக்கிடையில் நசிபடுவது திரேசம்மாதான். அன்றைய நல்ல காலம் திரேசம்மா வெள்ளனவே அந்தோனியார் கோயிலுக்குச் சென்று விட்டாள்.

000000000000000000

லூக்காஸ் கையில் வைத்து துப்பரவாக்கிக் கொண்டிருந்த மண்வெட்டி அவனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பொருளாகும். இதை அவனது அப்பா அந்தோனிப்பிள்ளை தனது நினைவாக அவனுக்குக் கொடுத்திருந்தார். அந்த மண்வெட்டியின் பிடி சாதாரண பூவரசு மரத்தில் இல்லாமல் வன்னிக்குப் போய் வாங்கி வந்த வைரம் பாய்ந்த முதிரை மரத்தினால் செய்யப்பட்டதாகும். இதனால்த்தான் அவனது தந்தை அந்தோனிப்பிள்ளையை அடக்கம் செய்ய அந்தோனியார்  கோயிலுக்குப் பின்பக்கம் இருந்த சேமக்காலையில் குழி வெட்டி இருக்கின்றான். அந்தோனிப்பிள்ளையைப் போல் பல அந்தோனிப்பிள்ளைகளுக்கும் குழிவெட்டிய துயர சம்பவங்களை இது தன்னகத்தே கொண்டது. அத்துடன் ஒரு இனம்புரியாத ஆத்மபிணைப்பு ஒன்றும் இதற்கும் அவனுக்கும் இருந்து வந்தது. அநேகமான வேளைகளில் இந்த மண்வெட்டியின் அலகில் அந்தோனிப்பிள்ளையினதும் தாத்தன் யாகோப்பினதும் முகங்களே வந்து போகும். அவன் அந்தோனியார் கோயிலுக்கு மணியடிக்க வெளிக்கிட்டாலும் இந்த மண்வெட்டியை அவன் மறப்பதில்லை. இதனால் அவனுக்கு ‘மம்பட்டி லூக்காஸ்’ என்ற துணைப்பெயரும் அந்த ஊரில் உண்டு.

கடின விவசாயியான லூக்காஸ் அந்த ஊரில் இருந்த அந்தோனியார் கோயிலில் பகுதிநேரமாக ஆராதனைக்கு மணி அடிப்பதாலும் பின்பக்கமாக இருந்த சேமக்காலையில் மரித்தவர்களுக்கு குழி வெட்டுவதும் அவனது இலவச சேவையாக இருந்ததால் லூக்காஸை தெரியாதவர்கள் கிடையாது. இந்த வேலைகள் அவனது அப்பா அந்தோனிப்பிள்ளை, அவரது அப்பா யாகோப்பு என்று  பரம்பரையாகச் செய்யப்பட்டு  இப்பொழுது இவனில் வந்து நிற்கின்றது. தனது காலத்திற்குப் பின்னர் இதனைச் செய்வதற்குத் தனக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே என்ற கவலையும் லூக்காஸின் மனதின் ஒரு ஓரத்தில் உண்டு.

0000000000000000000000

அந்தோனியார் கோயிலுக்குப் போய் வந்த திரேசம்மாவை, எலிசபெத்துக்கிழவி ரின் கட்டி வெளுக்கத் தொடங்கி விட்டாள். இருண்டது விடிஞ்சது தெரியாத திரேசம்மா ‘என்னவென்று’ பார்வையால் லுக்காஸைக் கேட்டாள். லூக்காஸின் உடல்மொழியைப் புரிந்து கொண்ட அவள்,

“அத்தொண்டுமில்லை மாமி….. நேத்து இரவு ஜெனிஃபர் தனக்கொரு ஸ்பெசல் கிளாஸ் ஒண்டு இருக்கு விடிய போகவேணும் எண்டு சொன்னவள். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ…….”

“இஞ்சை……………. உமக்கு கொஞ்சமெண்டாலும் அறிவிருக்கே? இப்பத்தையானுகள் எங்கை உள்ளது சொல்லுதுகள்? அதுகளின்ரை வயசு அப்பிடி. நாங்கள் தான் நல்லது கெட்டதுகளை சொல்லி அதுகளை ஒரு வழிக்கு கொண்டுவரவேணும். இருக்கிறது ஒரேயொரு குமர்ப்பிள்ளை. நாளைக்கு அது வில்லங்கமில்லாமல் ஒரு குடும்பத்துக்குள்ளை போகவேணும் சொல்லிப் போட்டன்.”

நல்ல தருணம் பாத்துக் காத்துக் கொண்டிருந்த லூக்காஸ்,

“என்ன அம்மா….. எங்கடை ஜெனிஃபர் அப்பிடியான பிள்ளையே ? அவள் இப்ப ஏ எல் முடிச்சு போட்டு கம்பஸிலை டாக்குத்தருக்கு எல்லோ படிக்கிறாள். எங்கடை பரம்பரையிலை இப்பிடி ஆரும் படிக்கேலை. அவளுக்கு தெரியும் நல்லது கெட்டதுகள். அவளை ஆம்பிளை பிள்ளை போலைதானே வளக்கிறன், ஏன் சும்மா யோசிக்கிறியள்? ” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

“சொல்லுறதை சொல்லுறன்ராப்பா லூக்காசு. பேந்து குத்துது குடையிது எண்டு இங்கை என்னட்டை வரப்படாது சொல்லிப் போட்டன்.” என்ற எலிசபெத்துக் கிழவி மகனின் பேச்சுக்கு ஒருவாறு அடங்கினாள்.

கிழவி சொல்வதிலும் பல நியாயங்கள் இருந்தாலும் லூக்காஸிற்கு தனது மகளின் மேல் அளவு கடந்த நம்பிக்கை உண்டு. அவளை சிறுவயதிலேயே ஒரு ஆம்பிள்ளை பிள்ளைபோலவே எல்லா விதத்திலும் வளர்த்திருந்தான். ஜெனிஃபரும் படிப்பிலும் விளையாட்டிலும் முதல் பிள்ளையாக வந்து இப்பொழுது கம்பஸில் மருத்துவத்துறையில் முதலாம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் கம்பஸில் நுழைந்த நாளில் இருந்து சீனியர் மாணவிகளினது ராக்கிங் தொல்லைகள் தவிர்க்க முடியாத சம்பவமாகி விட்டது. சிலவேளைகளில் சீனியர் ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ஆரம்பத்தில் அவளும் பயத்தினால் அவர்களின் ராக்கிங்களுக்கு ஒத்துழைத்தாலும் இப்பொழுது அவளுக்கு அது கட்டாயமாக்கப்பட்டு விட்டது. அந்த ராக்கிங்-ன் வடிவங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் இருந்து வந்தது. சிலவேளைகளில் அது அவளையும் அவளது தோற்றத்தையும் கேவலப்படுத்துவதுமளவுக்கு வளர்ந்திருந்தது. இப்பொழுதெல்லாம் ஜெனிஃபர் தனது மனக்கட்டுப்பாட்டை இழக்கத் தொடக்கி விட்டாள். முன்னர் இருந்த மனஉறுதியெல்லாம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் கொண்டிருந்தது. இன்றுங்கூட அவள் ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் அவசரம் அவசரமாக வெளிக்கிட்டது சீனியர் மாணவிகளது வற்புறுத்தலினாலேயே.

அவர்கள் சொல்லியிருந்த கார்கில்ஸ் மோலுக்கு வந்தபொழுது அவளது சீனியர்கள் ஆண்கள் பெண்கள் என்று ஒரு ஏழு பேர் பிக்கினிக்குக்கு செல்லும் ஆயுத்தத்தில் மோட்ட சைக்கிளில் நின்றிருந்தனர்.

“வாடி கார்கில்ஸ்-குள்ளை போய் சாப்பிட்டு கொண்டு கதைப்பம். நீதான் காசு குடுக்கவேணும் ” என்று பிரியதர்ஷினி அவளுக்கு கட்டளை இட்டாள். கார்கில்ஸ் எல்லாம் ஜெனிஃபருக்கு பெரிய விடயம் என்றாலும் அவர்களது மிரட்டல் அவளை அடிபணிய வைத்தது. எல்லோரும் உள்ளே நுழைந்து கே எஃப் சி-யில் ஓடர் கொடுத்து விட்டு இருந்த பொழுது  பிரியதர்ஷினி, மீண்டும் அவளை சீண்டினாள்.

“என்னடி முழுசிக்கொண்டு இருக்கிறாய்..? நீ என்ன பெரிய ரம்பையோ…? உன்ரை முழிக்கண்ணும் வெள்ளை நிறமும் முன்பக்கம் பின்பக்கம் எல்லாம்  எங்களுக்கு இடைஞ்சலாய் கிடக்கே……… அதோடை உனக்குப் பின்னாலைதான் பெடியள் எல்லாம் மொய்ச்சு போய் கிடக்கிறாங்கள் எண்டு இவர் கோகுல் சொல்லுறார் உண்மையே…..?

“இல்லை, அப்பிடியெல்லாம் இல்லை. ஆரோ உங்களுக்கு கதைகட்டி விட்டிருக்கினம்”. அவள் பவ்வியமாகச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லாத மாதிரி கோகுல் தனது தொலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தான். பீச்சில் அவளுக்குச்  செய்யப்போகும் வேலைகள் பற்றி அவன் தனது நண்பனுக்கு ரெக்ஸ்ரோ செய்து கொண்டிருந்தான்.

“சரி சரி நம்பிறம். காசைக்கட்டிப்போட்டு வா, நாங்கள் இண்டைக்கு எல்லாரும் கர்சூனா பீச்-க்கு போறம்.”

“இல்லை…….. என்னாலை வரேலாது. அப்பா அறிஞ்சாரெண்டால் என்னை கொண்டு போடுவார். என்னை விடுங்கோ நான் வீட்டை  போகவேணும்.” இப்பொழுது கோகுல் தனது பங்கிற்கு ஆரம்பித்தான்,

“என்னடி சும்மா பயந்து சாகிறாய் ? இதெல்லாம் நோர்மல் தானே? இப்ப இப்பிடி சோசலாய் பழகாட்டி எப்ப எல்லாரோடையும் பழக போறாய்? நீ இண்டைக்கு வாறாய் அவ்வளவுதான்.” என்று முடிவாகவே சொன்ன பொழுது ஜெனிஃபருக்கு அடக்க முடியாத அவமானத்திலும் கோபத்திலும் அழுகை எட்டிப்பார்த்தது. ‘தனது அப்பா கூட தன்னுடன் இப்படி மரியாதைக்குறைவாகக் கதைத்ததில்லை இவன் கதைக்கின்றானே’ என்று அவளிற்கு கோபம் எட்டப்பார்த்தது

அவர்கள் எல்லோரும் கர்சூனா பீச்-க்கு வந்தபொழுது வெய்யில் நன்றாக ஏறி விட்டது. ஜெனிஃபரைத் தவிர எல்லோரும் கடலில் நீந்துவதற்கு இறங்கி விட்டார்கள்.  பிரியதர்ஷினியின் சமாதானப்படுத்தல்கள் ஜெனிஃபரை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து விட்டது. அவளும் வரப்போகும் வினைகளை அறியாது நீந்துவதற்குக்  கடலில் இறங்கி விட்டாள். கடலின் உள்ளே மீன்குஞ்சு போல் நீந்திக்கொண்டிருந்த ஜெனிஃபர் நன்றாக நனைந்து விட்டாள். இப்பொழுது அவள் துடைத்து விட்ட சிலை போல் மினுங்கினாள். அவளது மேடுபள்ளங்கள் எல்லாம் மிகவும் எடுப்பாகத் தெரிந்தது. பிரியதர்ஷினி அவளுக்குத்தெரியாமல் தனது தொலைபேசியால் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தாள். அவள் நீந்திக்கொண்டிருந்தபொழுது சுழியோடி அவளருகில் வந்த கோகுல்  திடீரென மேலெழுந்து அவளை இறுக்கி அணைத்துக் கொஞ்சினான். அதிர்ந்து போன அவள் கரைக்கு வந்து அழுதுகொண்டிருந்தாள். அவளை சமாதானப்படுத்துவது பிரியதர்ஷினிக்குப் பெரும் பாடாகப் போய்விட்டது.

ஜெனிஃபர் வீட்டிற்கு வரும் பொழுது மிகுந்த கலக்கத்துடனேயே வந்தாள். இவர்களது செய்கைகள் அவளை வதைத்துக்கொண்டிருந்தன. அதுவும் கோகுலின் செய்கை அவளிற்கு அருவருப்பாக இருந்தது. தான் இந்தக் கம்பஸில் கட்டாயம் படிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வி அவளைக் குடைந்து கொண்டிருந்தது. பீச்சுக்கு போய் வந்து ஓரிருகிழமையாக கம்பஸில் பெரிதாக அவர்கள் அவளை ஒன்றும் செய்யவில்லை. எல்லாமே சுமூகமான பொழுதாக சென்றது.

அன்று இரவு அவள் புராஜெக்ட் செய்து கொண்டிருக்கும் பொழுது அவளது தொலைபேசியின் வட்ஸ்அப் ஒளிர்ந்தது. வட்ஸ்அப் தொலைபேசியை அவள் தடவிய பொழுது எடுத்த எடுப்பிலேயே,

“என்னடி செய்யிறாய்………… ?”

இஞ்சை கோகுல்……….. கொஞ்சம் மரியாதையாய் கதையுங்கோ. நானும் உங்களைப்போலைதான்  மெடிசின் செய்யிறன்.”

“உனகென்னடி மரியாதை எருமை ? நீ எங்கடை ஜூனியர். உனக்கு என்ன திமிர் இருந்தால் என்னைப் பேர் சொல்லி கூப்பிடுவாய்? அந்தளவுக்கு உனக்கு அமர் முத்திப் போச்சோ?”

“கலோ………. கோகுல் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. மரியாதையாய் கதைக்கிறதெண்டால் கதையும். இல்லாட்டில் அப்பாவிட்டை சொல்லுவன்.”

“என்ன கொப்பரிட்டை சொல்லுவியோ. கொஞ்சம் பொறடி……….”

சிறிதுநேரம் வட்ஸ்அப் தொலைபேசி அமைதியானது. பின்னர் அது மீண்டும் ஒளிர்ந்தது. அவள் அன்று கர்சூனா பீச்சில்  நீரில் ஒட்டிய உடைகளுடன் குளித்த படம்  அதில் குளோசப்பில் இருந்ததை கண்டவுடன் அவளுக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது.

“இப்ப போய் சொல்லடி உன்ரை கொப்பிரிட்டை. நான் நினைச்சால் நாளைக்கு நீ நெற்றிலை நாறுவாய்.”

“நான் இப்ப உங்களுக்கு என்ன சொன்னான். என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ கோகுல். எல்லாத்தையும் மறப்பம். இப்பிடியெல்லாம் யோசிக்காதையுங்கோ. அந்தப்படத்தை அழிச்சு போடுங்கோ.”

“அப்ப நீ என்னை லவ் பண்ணுறாய் என்ன ? எங்கை ஐ லவ் சொல்லு செல்லம்…….”

அவள் அழுகையுடன் ‘ஐ லவ் யூ’ சொன்னாள். அவளை நிரந்தர அடிமையாக்கிய நிறைவில்  எதிர்ப்பக்கத்து வட்ஸ்அப் தொலைபேசி அணைந்தது. எப்படி இந்தப்படம் இவனிடம் வந்தது என்ற கேள்வியே அவளைக் குடைந்து கொண்டிருந்தது. அவள் எப்படி யோசித்தாலும் அதற்கு அவளால் விடை கண்டுபிடிக்க முடியாது இருந்தது. அவள் எல்லாவற்றையுமே அப்பாவுடன் கதைக்கின்றவள் இதை மட்டும்  கதைக்கத் தயக்கமாக இருந்தது. அப்பா ஒருவேளை அப்பம்மாவுக்கு சொன்னால் அப்பம்மா தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவாளே என்றுவேறு பயந்தாள்.

ஆனாலும் வினை கோகுல் வடிவில் அவளைத் தொடர்ந்தது. அவள் அவனுடன் கதைத்த பின்னர் ஓரிரு நாட்கள் கம்பஸ் பக்கம் போவதை தவிர்த்தாள் . மீண்டும் ஓரிரவில் அவளது வட்ஸ்அப் தொலைபேசி ஒளிர்ந்தது. எதிரே கோகுல். அவள் தொலைபேசியை எடுக்கவில்லை. சில மணித்தியாலங்கள் கழித்து மீண்டும் அவன் அழைத்தான். எரிச்சல் தாங்காது அவள் தொலைபேசியை எடுத்தபொழுது,

“ஏனடி ரெலிபோன் எடுக்கேலை. உன்ரை லவ்வரோடை கதைக்க உனக்கு என்ன பிரச்சனை? சரி இப்ப என்னடி செய்யிறாய்?

“எல்லாம் உங்களுக்கு சொல்ல வேணுமோ………..?”

சில நிமிட இடைவெளியின் பின்னர் மீண்டும் வட்ஸ்அப் தொலைபேசியை இயங்கியது. அவன் அவளைக் கடலில் வைத்துக் கொஞ்சிய படத்தை அனுப்பி இருந்தான்.

“இப்ப நான் சொல்லுறதுகளை நீ கேக்காட்டில் நாளைக்கு உன்ரை படங்கள் எல்லாம் நெற்றிலை வரும். நீ எனக்கு ஒருக்கால் முழுசாய் உன்ரை முன்பக்கத்தை இப்ப காட்டவேணும் குஞ்சு.”

“என்னை ஏன் இப்பிடி கொல்லுறியள்? எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை. நான் இப்பிடியான கேர்ள் இல்லை. உங்கடை அம்மாவோடை இப்பிடியெல்லாம் கதைப்பியளே ? என்னை விடுங்கோ ப்ளீஸ்.”

“என்னடி…. அண்டைக்கு பீச்சிலை எங்களோட எல்லாம் சேந்து குளிக்கிறாய். நான் கிஸ் அடிக்க விடுறாய். இண்டைக்கு லெப்பல் கதையள் கதைக்கிறாய். உது சரிவராது இப்ப திறந்து காட்டுறியோ இல்லையோ ? ”

அவள் பொங்கிய அழுகையுடனும் நடுக்கத்துடனும் வட்ஸ்அப் தொலைபேசியை அணைத்து விட்டு சிம் கார்ட்-ஐ வெளியே எடுத்து விட்டாள்.

000000000000000000

கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக்கொண்டிருக்கும் எலிசபெத்துக் கிழவிக்கு ஜெனிஃபரின் அசுகைகள் கடந்த இரண்டுகிழமைகளாக சரியாக இருப்பதாகத் தெரியவில்லை. அன்று அவள் பேத்தியை பேசியதும் அதற்காகத்தான். ஆனால் பேத்தி அதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஜெனிஃபருக்கு தெரியாது அவளது கண்கள் அவளை மேய்ந்துக்கொண்டிருந்தன. அவள் அடிக்கடி தொலைபேசியில் ஒதுக்கமாகப் பேசுவதும் பின்னர் யாருக்கும் தெரியாது அழுதுகொண்டிருப்பதும் எலிசபெத்துக் கிழவிக்கு தெரிந்திருந்தாலும் இந்த விடயத்தில் இன்னும் அவள் பொறுமை காத்தாள்.

இப்பொழுதெல்லாம் கோகுலினால் மனக்கட்டுப்பாடினை முற்றுமுழுதாக அவள் இழக்கத்தொடங்கி விட்டாள். அவளுடைய கலகலப்பும் துடியாட்டமும் அவளிடமிருந்து விடைபெற்றுவிட்டது. கோகுலின் இறுதித் தொலைபேசியினால் அவள் தனது அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். அப்பா அம்மா எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார்கள் தனது ஒவ்வொரு ஆசையையும் பாத்துப் பாத்தல்லவா வளர்த்தார்கள். தான் தெரியாத்தனமாக இதில் மாட்டிக்கொண்டதை நினைக்க அவளிற்கு வாழ்வு மீது வெறுப்பே வளர்ந்தது. கோகுல் அனுப்பிய அந்தப்படமே அவளைக் கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தது.

அன்றைய பொழுது சாய்ந்து நடு இரவை நெருங்கிக்கொண்டிருந்தது. வெளியே முழுநிலவு வானத்தில் எழும்பியிருந்தது. நிலவின் ஊடகச்  சில வௌவால்கள் பறந்து சென்றன. வானம் துடைத்து விட்டாற்போல் நட்சத்திரக்குவியலால் நிறைந்திருந்தது. எங்கும் அமைதி விரவியிருந்தது. எல்லோருமே நித்திரைக்குப் போய் விட்டார்கள் எலிசபெத்துக் கிழவி மட்டும் நித்திரை கொள்வது போல் நடித்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் நித்திரை வராது இருந்த ஜெனிஃபர் மெதுவாகக் கிணற்றடிப்பக்கமாக வந்து துணிதோய்க்கும் கல்லில் இருந்து கொண்டாள். இதமான குளிர்ந்த காற்று முகத்தில் பட்டாலும் அது அவளை ஒன்றும் செய்யவில்லை. அழுதழுது அவளது முகமும் கண்களும் விகாரமாக இருந்தன. அவள் கிணற்றுக்  குந்தில் ஏறிநின்று கிணற்றின் உள்பக்கமாக குதிக்க முயன்ற பொழுது நடுங்கும் இரு கைகள் அவளின் பின்பக்கமாக இருந்து அவளை இழுத்துக்கொண்டன.

“என்னடா……….. இது ? என்ன வேலை செய்யிறாய் ? எங்கடை பரம்பரையிலை இல்லாத எளிய பழக்கம். கிணத்துக்குள்ளை குதிச்சு சாகிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை? எங்களை எல்லாம் விட்டுப் போட்டு எப்பிடி உனக்கு சாக மனம் வந்துது?”  என்று எலிசபெத்துக்கிழவியின் குரல் கேள்விகளால் மெதுவாகக் கரகரத்தது.

“அப்பம்மா…………. “என்று கட்டிப்பிடிச்சு விசும்பிக்கொண்டிருந்த பேத்தியை அழ விட்டாள் எலிசபெத்துக் கிழவி.

“என்னடா ………. அப்பிடியென்ன தலைபோற  பிரச்சனை? நாங்கள் இருக்கிறம் தானே ? உன்னை இப்பிடியே விடுவமே ? என்ன நடந்தது ? சொல்லு குஞ்சு.” என்ற எலிசபெத்துக் கிழவியின் கேள்விகள் அவளை ஒரு நிலைக்கு கொண்டு வந்தன.

யாருக்கு பயந்து கொண்டிருந்தாளோ அந்த அப்பம்மாவின் கனிந்த பேச்சில் கரைந்து போய் ஆதியிலிருந்து அந்தம் வரை விசும்பலின் ஊடே சொல்லி முடித்தாள் ஜெனிஃபர்.

“அட இதுக்கே கிணத்துக்கை குதிக்க பாத்தனி விசர் பெட்டை ? உன்ரை தாத்தன் யாகோப்பு என்னை சின்ன வயசிலை விட்டு போட்டுப்  போட்டார். உன்ரை கொப்பரையும் சித்தப்பா அல்பேர்ட்-ஐயும் வளக்கிறதுக்கு எவ்வளவு பாடு பட்டிருப்பன் ? தாலி அறுந்த எனக்கு எவ்வளவு பேர் நூல் விட்டிருப்பங்கள்….? உதுக்கெல்லாம் நான் பயந்திருந்தால் உன்ரை கொப்பர் உனக்கு கிடைச்சிருப்பரே விசர் குஞ்சு? முதல்ல எங்களை நாங்கள் நம்பவேனும். ஒண்டுக்கும்  பயப்பிடக்கூடாது. பயந்தால் தான் கண்ட நாயும் காலை ஒருக்கால் தூக்கப் பாக்கும். எல்லாத்துக்கும் பயமில்லாமல் முகம் குடுக்க வேணும். அப்ப உனக்கு கிட்ட ஒரு நாயும் வராது. ஏனெண்டால் அதுக்கு தெரியும் தன்ரை பருப்பு உன்னிலை வேகாதெண்டு. நீ நாளைக்கு இதுகள் நடந்த மாதிரி தெரியாமலே கம்பசுக்கு போ. எங்கை உனக்கு கிலிசை கேடு நடந்ததோ அங்கை நீ நிண்டு நெஞ்சை நிமித்த வேணும். அதுதான் உனக்கு கெப்பர் கண்டியோ. இந்த கம்பசாலைதான் நீ படிச்சு முடிச்சு டாக்குத்தராய் வரவேணும். நாங்கள் எல்லாரும் இருக்கிறம். ஒண்டுக்கும் யோசியாதை பெட்டை. நீ படிச்சு பெரிய டாக்குத்தராய் வரவேணும் அதுக்குத்தானே உன்ரை கொப்பன் தோட்டத்துக்குள்ளை நேரகாலம் இல்லாமல் கிடக்கிறான். இப்ப, இப்படி விசர் வேலையள் செய்ய மாட்டன் எண்டு நீ எனக்கு சத்தியம் செய்து தா.” என்றாள் எலிசபெத்துக் கிழவி.

அப்பம்மாவின் பேச்சுகள் அவளை மெதுமெதுவாக உசுப்பேற்றின. அப்பம்மா தன்னை விட எவ்வளவுதூரத்துக்கு கஸ்ரப்பட்டிருப்பா என்று யோசித்துத் தனது செய்கைக்காக வெட்கப்பட்டாள். எலிசெபெத்துக் கிழவி மறுநாளே லூக்காசுக்கும் திரேசம்மாவும் நடந்தவைகளை சொன்னாள். லூக்காஸ் கலங்கி விட்டான். திரேசம்மா உறைந்து போய் இருந்தாள். தனது மகளுக்கு நடந்த அவமானத்தை அவனால் மறக்க முடியாமல் இருந்தது. மனம் அமைதிப்பட அவன் அந்தோனியார் கோயிலுக்கு வெளிக்கிட்டான். பூசை நேரத்துக்கு இல்லாத நேரத்தில் வந்த லுக்காஸைப் பார்த்த குருத்தந்தை ஜோசுவா அவன் சேவித்து முடிந்ததும் அவனை விசாரித்தார். எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்ட குருத்தந்தை அவனுக்குப் பல புத்திமதிகள் சொன்னாலும் அவனது மனம் லேசில் அமைதி பெற மறுத்தது.

‘எவ்வளவுகாலம் பிள்ளைகள் இல்லாமல் இருந்தேன்? எத்தனை விரதம் இருந்தேன்? எத்தனைமுறை சிலுவை தூக்கியிருப்பேன்? மரியாவாக இறங்கிய பிள்ளையல்லவா ஜெனிஃபர்? அவளை ஒரு ஆம்பிளை பிள்ளை மாதிரிதானே வளர்த்தேன்? அவள் கேட்டதெல்லாம் அம்மா பேசப்பேச செய்து கொடுத்தனே? அவன் அப்பிடி கேட்கும் பொழுது என்ன பாடு பட்டிருக்கும் என்ரை பிள்ளை ? எங்கேயோ கோளாறு நடந்து விட்டது.’ என்று அவனது மனம் பலவாறு கலங்கித் தவித்தது. அன்றிரவு திரேசம்மா அவனிடம் ,

“மெய்யே இவளை என்ன செய்யலாம் ? ஏதாவது யோசிச்சியாளோ ? இவள் இனியும் இப்பிடி செய்வாள் எண்டதுக்கு என்ன கரண்டி ? நல்லகாலம் மாமி பாத்தது. இல்லாட்டில் ,யோசிக்கவே ஒரே பயமாய் கிடக்கு. மெல்லமாய் நியூஸிலாந்திலை அல்பேர்ட்டிட்டை அனுப்பி அங்கை படிக்க விடுவமோ ?”

“இல்லை. அங்கை எப்பிடி இவளை தனிய விடுறது? அதோடை நான்  தம்பியிட்டை இதுவரையிலை ஐஞ்சு சதத்துக்கும் கை நீட்டினதில்லை. என்ரை உழைப்பிலை தான் இவளுக்கு எல்லாம் செய்தன். இனியும் அப்பிடித்தான் செய்யவேணும். அம்மா சொல்லுறதும் சரிபோலதான் கிடக்கு. அவள் இங்கை இருந்து படிக்கட்டுமே. கை காலுக்கை ஓடித்திரியிற பிள்ளையை பிரிஞ்சு நாங்கள் என்னெண்டு இருக்கிறது?  எங்களுக்கென்ன நாலைஞ்சு பிள்ளையளே இருக்கு ?”

“அப்ப இப்பிடி செய்வமோ …………அந்தப் பெடியனை விசாரிச்சு ஒருக்கால் அவனோடை கதைச்சு பாத்தால் என்ன?  அவனுக்கும் ஒருக்கால் புத்தி சொல்லி பாப்பம். எல்லாரும் ஒரே வயசு ஆக்கள் தானே? சொல்லு கேப்பினம் .”

“உதுவும் நல்ல யோசனைதான். பிள்ளையை ஒருக்கால் கேட்டு சொல்லும். அந்தப்பெடியோடை கதைப்பம்.”

00000000000000000000

ஜெனிஃபர் சொல்லிய கோகுலின் கோப்பாய் முகவரிக்கு லூக்காஸ் சைக்கிளை விரட்டிக்கொண்டிருந்தான். சோழகக்காற்று சைக்கிளின் வேகத்தை மட்டுப்படுத்தியது. கோப்பாய் சந்தியிலேயே அவன் சந்திப்பதாக சொல்லியிருந்தான். லூக்காஸ் பெரிய அளவு படிக்கவில்லை என்றாலும் அனுபவப்  படிப்பும் உலகஞானங்கழும் அவனிடம் உண்டு. கோகுலை அவன் அந்த தேநீர் கடையில் சந்தித்தபொழுது வெய்யில் ஏறிவிட்டிருந்தது. எடுத்த எடுப்பிலேயே லூக்காஸ் ,

“தம்பி நீர் எனக்கு ஒரு மகன் மாதிரி. இப்படி எல்லாம் செய்யலாமோ? நீங்கள் எல்லாம் படிச்சு ஒரு நல்ல நிலைக்கு வரவேணுமெல்லோ? சண்டையிலை எக்கச்சக்கம் ஆக்களை குடுத்திட்டம் மிஞ்சி இருக்கிறது உங்களை போலை ஆக்கள் தான். ஏன் இப்பிடி எல்லாம் நடக்கிறியள்?”

“அங்கிள் இதெல்லாம் ஒரு பகிடிக்கு தானே ஒழிய சீரியஸ் இல்லை. இதெல்லாம் புதுக்க படிக்க வாற ஆக்கள் பயப்பிடாமல் எல்லாரோடையும் பழக்க வேணும் எண்டதுக்காக இங்கை காலம் காலமாய் செய்யிற வேலையள் தான். இனிமேல் இப்பிடி யெல்லாம் நடக்காது. ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ அங்கிள் ஜெனிஃபரை கம்பசுக்கு அனுப்புங்கோ.”

“மெத்தப்பெரிய உபகாரம் தம்பி. நான் தோட்டம் செய்து தான் பிள்ளையை படிக்க வைக்கிறன். எல்லாரும் நல்லாய் படிச்சு முன்னுக்கு வரவேணும். அதுதான் உங்கடை அப்பா அம்மாவுக்கு நீங்கள் செய்யிற உபகாரம்.”

லூக்காஸ் அவனுடன் கதைத்து விட்டு திரும்பியதும் ஜெனிஃபர் பழையபடி சந்தோசமாக  கம்பசுக்குப் போய் வந்தாள் என்றாலும் எலிசபெத்துக் கிழவி ஒரு கண் வைக்கத்தான் செய்தாள். இரண்டு கிழமையாக எதுவித தொல்லையும் இல்லாமல் கம்பசுக்கு சென்று வந்த ஜெனிஃபரை அன்றைய இரவு உலுக்கிப் போட்டது. கோகுல் மீண்டும் அவளுக்கு அனுப்பியிருந்த படத்தில் போட்டோ ஷொப் உதவியினால் அவள் ஒட்டுத்துணியுமில்லாமல் அவனுடன் கொஞ்சியபடி இருந்தாள். தனக்கு தான் சொல்லியபடி திறந்து காட்டா விட்டால் இரண்டு நாளையின் பின்னர் அந்தப்படத்தில் நெற்றில் உலாவ விடுவதாக வெருட்டியிருந்தான். அவள் அப்பம்மாவிடம் போய் சொல்லி அழுதாள்.

“நீ ஒண்டுக்கும் யோசிக்காமல் படிக்க போ குஞ்சு. நாங்கள் இருக்கிறம். அழாதை. அழுகையை நிப்பாட்டு. குலைக்கிற நாய் ஒருக்காலும் கடிக்காது. அது குலைச்சுக்கொண்டுதான் இருக்கும். நான் அப்பாவோட கதைக்கிறன். எலிசபெத்துக்கிழவியின் கதைகளினால் அவளின் அழுகை அடங்கினாலும் இவன் என்ன செய்வானோ என்ற பயம் மட்டும் அவளை இன்னும் விட்டுப்போகவில்லை.

எலிசபெத்துக்கிழவியின் கதையை கேட்ட நேரத்தில் இருந்து லூக்காசின் மனம்  கொதியின் உச்சிக்கே போய் விட்டது. அவன் தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்தோனியார் கோயிலுக்கு வெளிக்கிட்டான். கோயிலில் அன்னை மரியாவின் சொரூபத்தை நீண்டநேரம் பார்த்தவாறே இருந்தான். தொண்டூழியம் செய்கின்ற தனது பரம்பரைக்கு வந்த அவலத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனது மனம் பலவாறாக அலை பாய்ந்தது. ஆனால், ஜெனிஃபர் அதே கம்பஸில் தான் படிக்க வேண்டும் என்ற முடிவில் மாறாது இருந்தான். செபத்தை முடித்துவிட்டுக் கோயிலின் பின்புறமாக இருந்த சேமக்காலையில் வந்தமர்ந்தான். அவனது தாத்தா வைத்திருந்த மரங்கள் யாவும் இப்பொழுது வளர்ந்து விருட்சமாக இருந்தன. அங்கே வரிசையாக இருந்த மரங்களும் நீண்டு விரிந்த மண் புட்டிகளும் புதிய பழைய கல்லறைகளுமாக அந்த சேமக்காலை அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. அருகில் இருந்த ஒரு மர இருக்கையில் இருந்து கல்லறைகளைக் கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தான். மெதுவாக எழுந்து தனது குடும்பத்துக் கல்லறைக்கு அருகில் அவன் வந்தான். அப்பாவும் தாத்தாவும் எவ்வளவு அமைதியாக அதில் உறங்குகின்றார்கள். தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று அவனது மனம் கொதித்தது. அந்தக் கல்லறையில் முழங்காலிட்டு அமர்ந்தவாறே அரற்றினான். அவனால் அவனைக்கட்டுப்படுத்த முடியவில்லை தனது கவலைகளையும் ஆற்றாமைகளையும் தனது முன்னோருக்குச் சொல்லி அழுதான். அப்படியாது அவனது கொதி அடங்கவில்லை.

அடுத்தநாள் விடிகாலைபொழுதில் ஜெனிஃபர் கம்பசுக்கு சென்ற பொழுது கம்பஸ் பகுதி ‘குய்யோ’ என்றது. மாணவர்கள் பதட்டத்துடன் இருந்தார்கள். பிரியதர்ஷினி அன்று வந்திருக்கவில்லை. ஏதோ ஒன்று விவகாரமாக நடந்து விட்டதாக ஜெனிஃபரின் உள் மனம் சொல்லிக்கொண்டிருந்தது. கோப்பாயில் இருந்து கைதடி போகும் ரோட்டில் கோகுல் இரத்தம் உறைந்த நிலையில் தலைகுப்புற விழுந்து கிடந்தாகவும். அவனருகே மண்வெட்டி ஒன்று கிடந்ததாகவும் மாணவர்கள் தங்களிடையே குசுகுசுத்துக் கொண்டனர்.

கோமகன்-பிரான்ஸ்   

கோமகன்

 

https://naduweb.com/?p=16774

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ராகிங் பிரச்சினைகளால் புதிய மாணவர்கள் படும் அவஸ்தையையும் பழைய மாணவர்களின் வக்கிரமான எண்ணங்களையும் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் கோமகன்......!  🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.