Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலந்துரையாடல்

- சுரேஷ்குமார இந்திரஜித்

 

என் பெரியப்பா தா. ச. மயில்வாகனன் தீவிர சைவர். ‘நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். “ராமன் வழிபட்ட தெய்வம் அவன்” என்பார். “சிவன் தப்பு செய்துவிட்டு முழிக்கும்போது பெருமாள்தானே அவரைக் காப்பாற்றினார்” என்பார் பெரியம்மா.

பெரியப்பா என்றால் என் தாயாரின் உடன்பிறந்த அக்காவின் கணவர். தாயாரின் குடும்பம் சைவ சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடைய சிவவழிபாட்டுக் குடும்பம். வைணவக் கடவுள் படங்கள் எதையும் நான் அவர்கள் வீடுகளில் பார்த்ததில் லை. தந்தையின் குடும்பம் நாத்திகக் குடும்பம். சாமி படங்களே கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஓரளவு நவீன இலக்கியங்களிலும் பரிச்சயம் உடையவர்களாக இருந்தார்கள். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, மற்ற பையன்களிடம் 'கடவுள் இல் லை' என்று சொல்வது எனக்குப் பெருமையாக இருக்கும்.

"சிவகாசி ஆப்செட் யந்திரத்திலே சாமி படத்தை அச்சடிச்சு குடுக்கறான்லே. அதை ஃப்ரேம் பண்ணி வைச்சு சாமின்னு கும்பிடறாங்க. ஒருத்தன் உருவாக்குன சிலையை சாமின்னு கும்பிடறாங்க. சிந்தனை இல்லாதவங்க” என்பார் அப்பா. இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு, படுக்கையில் இருந்தபோது "துன்பப்படற மனசை எங்கே கொண்டுபோய் ஆற்றுப்படுத்தறதுன்னு தெரியலையே. கடவுள் நம்பிக்கை இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கே” என்றார் என்னிடம். ஆனால் அவருக்குக் கடவுள் நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள முடியவில் லை. மனதை ஆற்றுப்படுத்த கர்னாடக சங்கீதம் கேட்பார். அதில் அவர் மனம் ஆற்றுப்பட்டது என்றே நினைக்கிறேன். எனக்கும், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் உறவின் சூட்சுமம் புரிந்தது.

பெரியப்பா நெற்றியில் மூன்று விபூதிப்பட்டை அடித்திருப்பார். கழுத்தில் ருத்ராட்சம். அவர் மகனின் பெயர் சிவக்கொழுந்து. எல்லாம் சிவன் செயல் என்பார், முகச்சவரம் செய்யும்போது பிளேடு வெட்டினால்கூட. ராமன் வைணவக் கடவுள் என்பதால் கம்பராமாயணம் பக்கம் போகாமலிருந்தார். பொழுது போகாமல் ஒருநாள் வீட்டுவாசலில் உட்கார்ந்திருந்தபோது, சற்றுத் தொலைவில் கம்பன் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சொற்பொழிவு அவா காதில் விழுந்துகொண்டிருந்தது. ஏதோ சுவாரஸ்யம் ஏற்பட சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டார். பிறகு தினமும் சென்றார். தொடர் சொற்பொழிவு முடியும்போது பெரியப்பா கம்பராமாயண ரசிகராகி விட்டார். ஆனால் ராமனைப் பற்றிப் பேசமாட்டார். ராமனைப் பற்றி எழுதியுள்ள கம்பனின் கவித்திறனைப் பற்றித்தான் பேசுவார்.

என் மனைவி தலைப்பிரசவத்திற்காகத் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பெரியப்பா வீட்டில்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இரவு சாப்பிடுவதற்காகப் பெரியப்பா வீட்டிற்கு வந்தேன். பெரியப்பா உணவை முடித்துவிட்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“இலங்கையிலே என்னதான்லே நடக்குது. சர்க்காரு ஒண்ணும் மசியமாட்டேங்குதே” என்றார். பிறகு, "அனுமன் மாதிரி ஒரு ஆளை அனுப்பிட்டு, அப்புறம் ராமர் மாதிரி படையெடுத்துப் போயிருக்கணும்லே. இப்ப எல்லாம் முடிஞ்சிபோச்சு” என்றார். மர அலமாரியைத் திறந்து கம்பராமாயணத்தை எடுத்து வந்தார். சம்மணம் போட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார். பருமனான புத்தகங்களை வைத்துப் படிக்கும் மர ஸ்டேண்டில் அப்புத்தகத்தை வைத்தார்.

"கம்பர் அனுமனை வருணிக்கிறார் பார்லே” என்றவர். "கிஷ்கிந்தா காண்டம்” என்று சொல்லி வாசிக்கலானார்.

"மின் உருக்கொண்ட வில்லோர் வியப்புற வேதனல் நூல்

பின் உருக்கொண்டது என்னும் பெருமை ஆம்பொருளும்தாழ

பொன் உருக்கொண்டமேரு, புயத்திற்கு உவமைபோதாத

தன் உருக்கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்”

என்று படித்துவிட்டு, "வில்லோர் என்றால் வில்லேந்தியவர்கள் என்று பொதுவாக நினைக்கக்கூடாது. அது ராம லெட்சுமணரைக் குறிக்குதில்லே. தருமத்தின் தனிமை தீர்ப்பான் என்றால் தருமம் என்பது ஒரு பண்புச்சொல்; பெயர்ச்சொல்; வினைச்சொல். மேலும் தருமம் என்பது ராம லெட்சுமணரை இந்த இடத்தில் குறிக்கிறது என்றும் கூறலாம்லே. அவர்களின் தனிமையைத் தீர்க்கக் கூடியவன் என்று பொருள்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஜன்னலோரமாக குரங்கின் சாயலில் ஆஜானுபாகுவான ஒரு மனிதர் நின்று பார்ப்பதுபோல் தெரிந்தது. நான் எழுந்து சென்று பார்த்தேன். ஒருவரையும் காணோம். நிஜமா, பிரமையா என்ற குழப்பம் ஏற்பட்டது.

யோசித்துக்கொண்டே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து, படுக்கையில் சாய்ந்தேன். இருளில், ஜன்னல் பக்கம் ஏதோ மனத நடமாட்டம் தெரிந்தது. எழுந்து சென்று பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தேன். வெளிச்சத்தைப் பார்த்ததும் ஓர் மனித உருவம் ஜன்னலை நோக்கி வந்தது. குரங்கின் சாயலில் ஒருவர், ஜீன்ஸ் பேன்ட்டும், டீ சர்ட்டும் அணிந்திருந்தார். "யார்" என்று கேட்டேன். "அனுமன்" என்றார். "அனுமனா!” என்றேன். "ஆம்” என்றார். பின் "கதவைத்திற, வாசலுக்கு வருகிறேன்” என்றார்.

நான் கதவைத்திறந்தேன். அனுமன் உள்ளே வந்தார். அணிந்திருந்த ஷூவையும், சாக்சையும் கழட்டி வைத்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தார் அனுமன்.

அனுமன் பேசினார். "கிஷ்கிந்தா காண்டத்தில், நட்புக் கோட் படலத்தில் என் னை வருணிக்கும் பாடலைக் கேட்டேன். உங்களுக்கு அவர் என்ன வேணும்?” அவர் குரல் நல்லா இருந்தது.

"சுற்றிலும் கடல் உள்ளதால் இலங்கை இயற்கையழகு உள்ள நாடு. ஆனால் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறது. நிறைய இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடப்பதைப் பார்க்கிறேன். இலங்கைப் பிரச்சினை என்ன நிலையில் இருக்கிறது? உன்னை மாதிரி இளைஞர்கள்கிட்டே கேட்டாத்தான் சரியான தகவல்கள் கிடைக்கும்.”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்தால் நிறைய விஷயங்கள் இருப்பதாகத் தோன்றியது. எதைச் சொல்வது, எதை விடுவது, எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. மேலும் எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றும் சொல்ல முடியாது.

"மக்களின் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன். என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் அனுமன்.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. "அப்படியானால் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன். நீங்கள் கலந்துகொண்டு கருத்துக்களை அறிந்து கொள்ளுங்கள்" என்றேன்.

"அப்படியே ஆகட்டும்” என்றார். பிறகு "நயன்தாரா சீதாபிராட்டியாக நடித்த படம் பார்த்தேன். சீதா பிராட்டியார், நயன்தாராவை விட அழகு. படாடோபமான ஆடை அணிகலன்கள் அணிந்து கொண்டு எல்லோரும் வருகிறார்கள். பார்க்க அசிங்கமாக இருக்கிறது. அந்த வகையில் 'காஞ்சன சீதா' படம் பரவாயில்லை” என்று கூறினார் அனுமன்.

“ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டேன்.

"வாழைப்பழங்கள் இருக்கிறதா” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்.

"எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். நகரத்திலுள்ள பிரபலமான ஒரு ஓட்டலைச் சொன்னார். "எப்படிப் போவீங்க” என்று கேட்டேன். "பறந்து செல்லலாம். ஆனால் டாக்ஸிதான் உத்தமம்” என்றார்.

"ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டுச்சென்றார். எனக்கும் ஏதாவது கூட்டம் நடத்தி அதனால் ஏதாவது பயன் கிடைத்தால் நல்லதுதானே என்ற எண்ணம் ஏற்பட்டது.

கலந்துரையாடல் நடைபெறும் நாள் வந்தது. நான் ஓட்டலுக்குச் சென்று, அனுமனை அழைத்து வந்தேன். கூட்டத்தை ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவந்து அவரவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம் என்று அறிவித்தேன். கூட்டம் தொடங்கியது.

"இலங்கையில் தேயிலைத்தோட்டங்களில் பணிபுரிய அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் நிலையை 'பரதேசி' படத்தில் அழகாகச் சித்தரித்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தால் எனக்கு நெஞ்சம் பதறுகிறது."

"இல்லை, அழகாகச் சித்தரிக்கவில்லை. அவலத்தைக் கலையழகுடன் சித்தரித்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.”

"அந்தத் தமிழர்கள் வேறு, இந்தத் தமிழர்கள் வேறு. இவர்கள் பூர்வீகத் தமிழர்கள்.”

"ஏன் அந்தத் தமிழர்களுக்காக இந்தத் தமிழர்கள் போராடவில்லை?"

"ரெண்டு தமிழர்களுக்கும் உள்ள பிரச்சினையைப் பேசவா வந்தோம். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள்.”

'பஃறுளியாற்றுடன் பன்மணையடுக்கத்து குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள' என்று தொல்காப்பியத்தில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்ற பூகோளப்பகுதிதான் இலங்கை. மகாநாம எழுதிய சிங்கள ஆதிநூலில் குறிப்பிடப்படும் பூர்வகுடிகளின் தலைவி பெயர் குவேணி. இது தமிழ்ப்பெயர் என்பதால் பூர்வகுடிகளாகத் தமிழர்கள் இருந்தார்கள் என்பது உறுதியாகிறது.'

"ஆம். கி.மு. 200இல் அசோகனின் மகனும் மகளும் சந்தித்த இலங்கை அரசன் பெயர் தேவநம்பிய திஸ்ஸ. இது தமிழ்ப்பெயர். தலைநகர் பொலநறுவை. இதுவும் தமிழ்ப்பெயர்.”

"ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.”

“உங்கள் கட்சி உள்ள நாடுகள் எல்லாமும்தான் இனவெறி அரசை ஆதரிக்கின்றன.”

"வர்க்கப்போரை நோக்கிச் செல்ல வேண்டும். வர்க்கப்போர் வெற்றியடைந்தால் இனமும், மொழியும் விடுதலையடையும்."

"புலிகள் பயங்கரவாதிகள். போராளிகள் அல்ல.”

"அதெப்படிச் சொல்லலாம். அவர்கள் போராளிகள். ஒரு அரசைத் தமிழன் எதிர்க்கறதுன்னா சும்மாவா? அதுவும் எப்படி....? வடக்கு - கிழக்கு முழுக்க அவுங்க கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு குற்றம் கிடையாது. ஒழுக்கமானவர்கள். நல்லாட்சி நடந்தது.”

“அதான் எல்லாத்தையும் கொன்னாச்சே. மாற்றுக் கருத்து சொன்னால் அவர்கள் துரோகிகள். கூட இருந்த எல்லா இயக்கத் தோழர்களையும் கொன்னாச்சு. சர்வாதிகார ஆட்சியில் வெளியிலே உள்ளவர்களின் குற்றம் குறைவாகவும் உள்ளே உள்ளவர்களின் குற்றம் அதிகமாகவும் இருக்கும்."

"ஏய், எப்படிச் சொல்லலாம்? தமிழனை விமர்சனம் பண்றியா?”

“பிரதமராக இருந்த ராஜீவை இந்திய மண்ணில் கொன்னதைப் பொறுக்கவே முடியாது.”

"அவர் ஏன் படையை அனுப்பிச்சாரு. எத்தனை தமிழ்ப்பெண்களைப் படைகள் கற்பழிச்சிருக்கு.”

"13வது சட்டத்திருத்தத்தை புலித்தலைவர் ஏற்றுக் கொண்டிருந்தால் இப்ப நிலையே மாறியிருக்கும்.”

"அதுலே அதிகாரமே இல் லையே. அப்புறம் எப்படி அந்தத் திருத்தத்தை ஏத்துக்கிறது?”

"எடுத்த உடனே தனிநாடு கிடைக்குமா. படிப்படியா போகணும். சண் டை போட்டா போதுமா? சாமர்த்தியமா நடக்கத் தெரியணும். உலக சூழ்நிலை மாறியிருச்சுன்னா நாமளும் மாறணும். தெரிய வேண்டாமா? அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தை, அவர் வீட்லே சாப்பிட்டுட்டு அவரைக் கொன்னவங்கதானே.”

“ஏய் நிறுத்து. அவர் துரோகி. துரோகிகளுக்கு இதுதான் தண்டனை."

"உங்களோட மாறுபட்டு நிக்கறவங்க எல்லாம் துரோகிகள் தானே உங்களுக்கு.”

"அதனாலே இனப்படுகொலை சரியாயிடுமா?”

"சரின்னு யார் சொன்னா. புலிகளைப் பத்தி யாரும் எதுவும் சொல்லக்கூடாதா? சிறுவர் சிறுமிகளைப் படைகள்லே சேத்தது யாரு? மக்களுக்குள்ளே மறைஞ்சிருந்தது யாரு?”

"மக்களுக்குப் பாதுகாப்பு புலிகள் தான். அதனாலே மக்களுக்குள்ளே இருந்தாங்க."

"அதனால் தான் மக்கள் அழிஞ்சாங்க."

"மக்கள் வேறு, புலிகள் வேறு அல்ல. மக்கள் மேலே குண்டு போட்டு கொத்துக் கொத்தா அழிச்சது இனவெறி ராஜபக்சே அரசாங்கம். அவரை உடனே தூக்கிலே போடணும். இந்த வாக்கியம் உள்ள போஸ்டரை ஒட்டிட்டுத்தான் இங்க வாரோம்.”

"எப்படிய்யா உடனே தூக்கிலே போட முடியும்? யார் போடறது?"

"நீ என்ன தமிழன் மாதிரியா பேசறே. சரி, கொள்கை லெவல்லே தூக்கிலே போடணும்ங்கிறதை ஒத்துக்கிறீங்களா?”

"சரி, கொள்கை லெவல்லே ஒத்துக்கறம்.”

"எங்க கட்சி அந்தக் காலத்திலேயே தீர்மானம் போட்டிருக்கு.”

"உங்க கட்சியைப் பத்தி பேசாதே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னமே விலகியிருந்தீங்கன்னா இப்படி மக்கள் செத்திருப்பாங்களா?”

"விலகியிருந்தா மக்கள் மேலே குண்டு போடாம இருந்திருப்பாங்களா?”

"விலகியிருந்தா ஆட்சி கவிழும்ங்கிற நிலையிலே இந்தியா கடுமையா நடவடிக்கை எடுத்து மக்கள் மேலே குண்டு போடறதைத் தடுத்து நிறுத்தியிருக்கும்.”

"கவிழும்ங்கிற கேள்வியே எழாது. ஏன்னா, அப்ப எலெக்ஷன் பல கட்டமா நடந்தநேரம். அப்ப இருந்த சர்க்காரே கேர் டேக்கர். அது எப்படிக் கவிழும். அப்புறம் எப்படி விலகி நெருக்கடி கொடுக்கறது?”

"எப்படியிருந்தாலும் விலகியிருக்கணும்.”

"விலகினா பதவிதான் போகும். வேறென்ன பிரயோசனம் இருக்கும். குண்டு போடறதை எப்படிய்யா அவன் நிப்பாட்டியிருப்பான். இப்ப விலகி என்ன ஆச்சு? ஜெனிவா மாநாட்டிலே இந்தியா தீர்மானம் கொண்டு வந்துச்சா? அப்புறம் எப்படி அப்ப விலகியிருந்தா இந்தியா தலையிட்டு தடுத்திருக்கணும்னு சொல்ல முடியும்?”

"எங்க அம்மா சட்டசபையிலே தீர்மானம் கொண்டு வந்திருக்காங்க. சரித்திரத்திலே பொன்னாலே பொறிக்க வேண்டிய தீர்மானம்.”

"இங்க தீர்மானம் போட்டு என்ன செய்ய. ஆப்கானிஸ்தான்லே அமெரிக்கா தலைமைல இருக்கிற நேட்டோ படையை வாபஸ் வாங்கணும்னு தமிழ்நாடு சட்டசபையிலே தீர்மானம் போடுங்களேன். சட்டசபை தீர்மானத்தை ஐ.நா. சபையில்ல நிறைவேத்தணும். உங்க அம்மா புலித்தலைவரை அரெஸ்ட் பண்ணி இந்தியாவுலே தூக்கிலே போடணும்னு சொன்னவங்கதானே!"

"ராஜீவ் மரணத்திற்கு முன்னே, பின்னேன்னு இரு நிலைகள் இருக்கு.”

"எங்க தலைவர்தான் உண்மையா அக்கறை காண்பிக்கிறாரு. புதிய அமைப்பு அதுக்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கு.”

"எல்லாம் நாடகம். கபட நாடகம்."

“நீங்க ஆரம்பத்திலே இருந்து தமிழ் விரோதி. உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?”

இதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நானும் அனுமனும் விலக்கிவிட்டோம்.

"எங்க தலைவரும் அய்யாவும்தான் ஆரம்பத்திலேருந்து ஒரே மாதிரி அக்கறையோட இருக்கோம். மக்களுக்கும் அது தெரியும்.”

“உங்க தலைவருக்கு சுகர் கம்ப்ளெயின்டே வராது. ஏன்னா நடந்துக்கிட்டே இருக்காரு."

"ஏய் நக்கலா பண்றே? பொதுமக்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களிலும் தலையிட்டு தன்னை உருக்கிக்கிட்டிருக்கிற தலைவர்.

"ஆமா, இப்படி நடந்துக்கிட்டே இருந்தா உருகித்தான் போவாரு.”

"உங்களை மாதிரி சொகுசு வாழ்க்கை வாழணும்னு நெனைக்கிறியா?"

இதைத் தொடர்ந்து மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட, மீண்டும் விலக்கிவிட்டோம்.

"நான் ஒரு பேராசிரியர். இந்து மகாசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திருகோணமலை. அந்த இடத்தை வைத்துக் கொண்டு சீனாவிடமும், அமெரிக்காவிடமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை. சீனாவிடம் நெருக்கம் கூடிவிடும் என்று தோரணை காட்டி இந்தியாவைத் தள்ளிப் போய்விடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை. புலிகள் இயக்கம், இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டை என்பது வேறு. இதில் பொதுமக்கள் இருதரப்பினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது தமிழர்களின் வாழ்வாதாரம்...''

"யோவ், என்ன ஹிஸ்ட்ரி கிளாஸ் நடத்தறியா? நடந்தது இனப் படுகொலை என்பதை ஒத்துக்க. போர்க் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும்."

"நான் இல்லைன்னா சொல்றேன். நான் சொல்லவந்தது என்னன்னா, ஒரு விஷயத்தைப் பார்க்கிறப்ப எல்லாப் பரிமாணத்தையும் பாக்கணும். தற்போது அவுங்க வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பார்க்கணும்.”

"என்னய்யா திரும்பப் பாடம் நடத்தறே. இனப் படுகொலைக்குப் பதில் வேண்டும்."

"இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கை ஆராய வேண்டும். ஆயுதங்கள் கொடுத்து இனப்படுகொலைக்கு இந்தியா துணைபோயிருக்கிறது. இதைத் தட்டிக்கேட்க வேண்டும்."

"இந்தியா ஆயுதங்கள் கொடுக்கவில்லை. ராடார்தான் கொடுத்தது.”

"அது போதாதா. அதை வைத்துத்தானே இனப்படுகொலை நடந்தது."

"இலங்கை நட்பு நாடு. சார்க்கில் ஒரு உறுப்பினர்.”

"என்னய்யா பேசறான் இந்த ஆள். இனப்படுகொலை செய்த நாடு நட்பு நாடா? எதிரி நாடு என்று அறிவிக்க வேண்டும்."

இந்த நேரத்தில் கூட்டத்தின் ஒரு பகுதியில் தகராறு ஏற்பட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

"எங்க தலைவராலேதான் தீர்வு காணமுடியும்."

"எங்க தலைவினாலேதான் தீர்வு காணமுடியும்."

"எங்க தலைவர்தான் சுயநலமில்லாம பணியாற்றுகிறார். அவரால் தான் முடியும்.”

"நீ நாடகமாடுறே!”

“நீ மாறிமாறிப் பேசறே. உள்ளத்திலே உனக்குப் பாசம் கிடையாது."

“உன்னாலே ஒண்ணும் செய்ய முடியாது.”

"உன்னாலேதான் ஒண்ணும் செய்ய முடியாது."

"உங்க ரெண்டு பேராலையும் ஒண்ணும் செய்ய முடியாது."

"தலைவர் வாழ்க!”

"தலைவி வாழ்க!”

"அப்பழுக்கற்ற தலைவர் வாழ்க!”

"நீ ஒழிக!”

“நீதான் ஒழிக!”

"ரெண்டு பேரும் ஒழிக!”

அனுமன் திகைத்துப் போயிருந்தார். "ஒரே சிக்கலா இருக்கே” என்றார். அப்போது நாலைந்து புதிய நபர்கள் உள்ளே நுழைந்தார்கள். அதில் ஒருவர் அனுமனை நோக்கிக் கைநீட்டிப் பேசினார்.

"இராவணன் திராவிடன். இராமன் ஆரியன். திராவிடனைக் கொன்ன ஆரியனுக்குத் துணைபோன நீ எப்படி திராவிடத் தமிழர்களுக்காகக் கூட்டம் நடத்தலாம். உனக்கு என்ன தகுதியிருக்கு? என்னய்யா பாத்துக்கிட்டிருக்கீங்க.”

உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் அனுமனுக்கு எதிராகத் திரும்பி விடுமோ என்ற கற்பனை ஏற்பட்டது. கூட்டத்தில் ஒழுங்கு குலைந்து அவரவர் தரப்பை பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரே இரைச்சலாக இருந்தது. புதிதாக வந்தவர்களில் ஒருவர் அனுமனைத் தாக்க முன்னேறினார். நான் காவலர்கள் உதவியுடன் அனுமனைப் பாதுகாப்பாக வெளியில் காத்திருந்த டாக்ஸியில் ஏற்றி நானும் அவருடன் ஓட்டலை நோக்கிச் சென்றேன்.

வழியில் சென்று கொண்டிருக்கும்போது "எல்லோருடைய நோக்கமும் ஒன்னாத்தான் இருக்கு. ஆனா பல விருப்பு வெறுப்பு கருத்தோட்டங்கள். பல தரப்புகள் இருக்கு. தங்களைத்தவிர மத்தவங்களுக்குப் பேர் வந்திரக்கூடாதுன்னு ஒவ்வொரு தரப்பும் நெனைக்கிற மாதிரி தெரியுது. உருப்புட்டாப்லதான்” என்றார் அனுமன்.

நான் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கண் தெரியாத கிழவி, சாலையில் வருபவர்களிடம் யாசித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தேன். துயரமாக இருந்தது.

 

உயிர்மை, மே 2013

நடனமங்கை சிறுகதைத் தொகுதி

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்துவிட்டு உயிர்மை பக்கம் போகலாம் என்றால் இப்படி வருதே ?

Deceptive site ahead

Attackers on gocrossdouble.live may trick you into doing something dangerous like installing software or revealing your personal information (for example, passwords, phone numbers or credit cards). Learn more

  • கருத்துக்கள உறவுகள்

“This site may be hacked “ என்று உள்ளது.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில் தேடினால் கிடைக்கும் site பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

எனினும் இந்தக் கதை மின்னிதழில் இல்லை!

59 minutes ago, பெருமாள் said:

இதை பார்த்துவிட்டு உயிர்மை பக்கம் போகலாம் என்றால் இப்படி வருதே ?

Deceptive site ahead

Attackers on gocrossdouble.live may trick you into doing something dangerous like installing software or revealing your personal information (for example, passwords, phone numbers or credit cards). Learn more

 

55 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

“This site may be hacked “ என்று உள்ளது.. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள அரசியல் கருத்தாடல்களும் இந்தக் கதையில் வரும் கலந்துரையாடல் போலத்தான்! முடியைப் பிச்சிக்க வைக்கும்😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.