Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை

ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது.  எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப்  படைத்துவிட்டுச் செல்வார்கள்.  கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது.

அவ்வாறாகப் போற்றப்பட வேண்டிய ஈழத்துக் கொற்றவைத் தெய்வங்களில் ஒருத்திதான் "சாதனா". பெயருக்கேற்ற வகையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்து வரலாறாகிப் போவாள் என்று அவளின் பெற்றோர்கள் அன்று அவளுக்குப் பெயர் சூட்டும்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

தமிழர் தலைநகரான திருகோணமலையில் தான் இவள் வீரப்பிறப்பெடுத்தாள். சாதனாவின் தந்தையார் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தாயார் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவளது இரண்டு வயது வரைக்குமான வாழ்க்கைப் பராயம் திருகோணமலையில் தான் இனிதே கழிந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் வன்கவரப்பட்டுக் கொண்டிருந்த இவளது தந்தையின் சொந்த ஊரிலே தான் இவளது குழந்தைப் பருவத்தின் முதலிரண்டு ஆண்டுகள் கழிந்தன. இவளது குடும்பத்தினர்  ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள், காடையர்கள், இராணுவத்தினரின் கொடும் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள். இதனால் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாதனாவின் தாயாரின் பிறப்பிடமான முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று குடியேறினார்கள். அங்கு பெயர் சொல்லக்கூடிய மிகவும் செல்வாக்கான வசதிமிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தான் அவளின் தாயின் குடும்பத்தினர். பல ஏக்கர் கணக்கான விளைநிலங்களும் மாட்டுப் பண்ணையுமென செல்வம் படைத்த, பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தினராகவும் அவ்வூரிலேயுள்ள ஏழை எளியவர்கள் இல்லை என்று வந்து நிற்கும் போது அள்ளிக் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.

சாதனா சிறுவயதிலிருந்தே மற்றச் சாதாரண  குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேறுபட்ட சிந்தனையுடைய ஒரு அசாதாரண குழந்தையாகவே காணப்பட்டாள். வீட்டிலே அதிகாலையிலே எழும்பி தாயாருக்கு உதவியாகப் பால் கறப்பது. தந்தையாருக்கு உதவியாக வயல் வேலைகளுக்குச் செல்வது. அவ்வேலைகளை முடித்துவிட்டு வந்து  பாடசாலை செல்வது என்று வீட்டிலே பொறுப்புமிக்க மனமுதிர்ச்சி கொண்ட ஒரு குழந்தையாகவே வளர்ந்து வந்தாள். முல்லைத்தீவு மாவட்டத்திலேயுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பாடசாலையிலேயே சாதனா தனது கல்வியினை சிறுவயது முதல் கற்று வந்தாள். கல்வி, விளையாட்டு, ஓவியம் வரைதல், சிறுகதைகள்,  கவிதைகள் எழுதுதல் போன்ற பல்துறைகளிலும் ஆற்றல்மிக்கவளாக விளங்கியதோடு மட்டுமன்றி ஆசிரியரை மதித்து நடத்தல், சகமாணவரை அனுசரித்துப் போதல், அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது முதல் ஆளாக நின்று உதவி செய்தல் போன்ற காரணங்களினால் கல்லூரியிலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு மாணவியாகத் திகழ்ந்தாள்.

பொதுவாகவே அவளிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு  காணப்பட்டது. அதாவது வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் ஓடிப்போய் உதவி செய்தல், உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு தனது  வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து உதவுதல் போன்ற இரக்கமான மனப்பாங்கு கொண்டவளாகக் காணப்பட்டாள். இந்திய இராணுவத்தினரால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், உயிர்க்கொலைகள், மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட  எறிகணை வீச்சுகள், விமானக்குண்டு வீச்சுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணங்களினால்  உளத்தாக்கமடைந்து "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா...?அவர் இருக்கிறார் என்றால் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறார்" என்று அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாள். இதன் காரணத்தினால் தாயார் கோவிலுக்குச் சென்றுவரக் கூப்பிட்டால் "இராணுவம் இத்தனை அப்பாவி மக்களைக் கொல்லும் போது உந்தக் கடவுள் சும்மா தானே பார்த்துக் கொண்டிருந்தவர்....அதனைவிட தன்னின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தன் மண்ணிற்காக மக்களிற்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களைக் கும்பிடலாம்" என்று மறுத்துக் கூறி இறைவழிபாட்டை வெறுத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கே சென்று கல்லறைகளுக்கு மலர் வைத்து வழிபடுவாள்.

பாடசாலைகளில் தமிழீழ மாணவர் அமைப்பினால் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்படும் முதலுதவி வகுப்புகள் மற்றும் சிரமதானப்பணிகள் போன்றவற்றிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தாள். இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதுதான் சாதனாவுக்கும்  போராளிகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது. போராளிகளின் தன்னலமற்ற உதவிபுரியும் மனப்பாங்கு, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பு, நீதி, நேர்மை, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடுகள் போன்றனவற்றின்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற விருப்பு அவள் மனதில் ஏற்பட்டது.

அதன் காரணத்தினால் தனது 15 ஆவது அகவையில் 9 ஆவது வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்காகச் சென்றாள். அவளது வயதினையும் கற்றலின் முக்கியத்துவத்தினையும் கருத்தில் கொண்டு  விடுதலைப்புலிகள் அமைப்பு க.பொ.த சாதாரணம் படித்து முடித்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்பியது. சாதனாவும் இடைப்பட்ட ஒன்றரை வருட காலப்பகுதியில் தான் கொண்ட உறுதியில் தவறாது தொடர்ந்து க.பொ.த சாதாரணம் பயின்று பொதுத்தேர்வில் தோற்றி தேர்வுகள் முடிந்த மறுநாள் மீண்டும் வந்து அமைப்பில் இணைந்துகொள்கின்றாள். தமிழீழ விடுதலைப்புலிகள்  அமைப்பில் இணைந்த பிறகு அவளது க.பொ.த சாதாரண பரீட்சை தேர்வு முடிவுகள் வெளிவருகின்றது. அந்த மிகவும் பிரபல்யமான பாடசாலையிலேயே அதிகூடிய பெறுபேறுகள் பெற்றவர்களின் பட்டியலில் அவளின் பெயரும் இடம்பெற்றது. அடிப்படைப் பயிற்சி முகாமில்  அடிப்படைப்பயிற்சிகளை மேற்கொண்டு புடம் போடப்பட்டு ஒரு உறுதியான போராளியாக உருவாக்கப்படுகின்றாள்.  எந்தக் கடின பயிற்சிகளிலும் பின்வாங்காத உறுதி, இராணுவக்கல்விக் கற்கைநெறிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கும் விதம், சகிப்புத்தன்மை, இரகசியம் காத்தல் போன்ற ஒவ்வொரு திறமைகளும் அடிப்படைப் பயிற்சிமுகாமில்  அவதானிக்கப்பட்டு பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகின்றாள்.

அங்கு மறைமுகக் கரும்புலிகள் தொடர்பான நிருவாகப்பணிகளை மேற்கொள்ளும் போராளி ஒருவருக்கு உதவியாளராக சாதனா செயற்படுகின்றாள். முகாமில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவளாகவும் அறிவுத்தனமான உரையாடல்களில் மட்டுமே பங்கு கொள்பவளாகவும் தனது குடும்பம், அன்பு, பாசப்பிணைப்புகள் பற்றி எவரிடமும் கதைக்காத தன்மை கொண்டவளாகவும் தேசியத்தலைவர் சிந்திப்பது போலவே ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பவளாகவும் ஒரு மனமுதிர்ச்சியடைந்த போராளியாக அவள் காணப்பட்டாள்.

அவளிடம் ஓவியம் வரைதல், உருவப்பொம்மைகள் செய்தல் போன்ற தனித்திறமைகளும் காணப்பட்டன. தான் ஓய்வாக இருக்கும் போது எமது மக்களின் இன்னல்கள் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவாள். உபயோகித்து முடித்த பிளாஸ்ரிக்காலான வெற்று பொன்ட்ஸ் பவுடர்  (ponds powder) போத்தல்களை பிளேட்டினால் (blade) வெட்டி பெண் முதல் மாவீர வித்தான 2ம் லெப்ரினன்ட் மாலதி, தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபன், முதலாவது தரைக்கரும்புலி மாவீரரான லெப்.கேணல் போர்க் போன்றவர்களின் உருவங்களை மிக அழகாகச் செதுக்கி உருவப்பொம்மைகளாக்கி தனது பணியிடம் முழுவதும் ஓவியங்களாலும் உருவப்பொம்மைகளாலும் அலங்கரித்து வைத்து அவர்களின் நினைவிலேயே தானும் மனதில் உறுதியேற்றியபடி வாழ்ந்திருந்தாள். அதைவிட சிறுகதைகள்,கவிதைகளாலும் தனது நாளாந்தக் குறிப்பேடுகளை நிரப்பி வைத்திருந்தாள்.

அங்கே பணிமுடித்து ஓய்வான நேரங்களில் சாதனா உலக புலனாய்வு அமைப்புகள் தொடர்பான நூல்களை விரும்பி வாசிக்கின்றாள். மேலும் அவ்வமைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள், கேள்விகள், சந்தேகங்களை மிகவும் ஈடுபாட்டுடன் தனது பொறுப்பாளரிடம் துருவித் துருவிக் கேட்டுத் தெளிந்து கொள்கின்றாள். இதன் காரணத்தினால் அவளுக்கு மறைமுகக் கரும்புலிகள் அணியில் தானும் சேரவேண்டும் என்ற ஈடுபாடு வருகின்றது. அதனைத் தனது பொறுப்பாளரிடம் தெரிவிக்கின்றாள். இது தொடர்பில் அவளது தேடல்,  அதீத ஈடுபாட்டினைக் கண்ட பொறுப்பாளரும் துறைசார் முதன்மைப் பொறுப்பாளருக்கு அதனைத் தெரிவிக்கின்றார். அவரும் அவளை ஒருமுறை நேரில் சந்தித்துக் கதைத்துப் பார்த்து அவளது சுயதேடல், மனவுறுதி, விடுதலைப்போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று என்பனவற்றை இனங்கண்டு மறைமுகக் கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட அனுமதியளிக்கின்றார்.

பின்பு சாதனா மறைமுகக் கரும்புலிகள் அணியின் சிறப்புப் பயிற்சிகள், கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கு இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது ஒருவர் பற்றி இன்னொருவருக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால்  வழங்கப்படும் தனிக் கொட்டில் வாழ்வு, உருமறைப்பிற்கான மூடிய ஆடைகள் எனச் சென்ற அந்தப் பயிற்சிக் காலம் என்பது அவளுக்குள் தன்னை மறைத்து, தன்னை ஒறுத்து, தமிழீழ விடுதலைக்காய் வெளியே தெரியாத வெளிச்சமாகிப் போகும் வாழ்விற்கு அவளை அணியப்படுத்தியது.

மறைமுகக் கரும்புலிகள் அணியில் சாதனாவின் பயிற்சிகள் நிறைவுற்றதும் மொழிகள் (ஆங்கிலமொழி, சிங்களமொழி)  தொடர்பான அறிவு பெறுவதற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கு சிங்களமொழி கற்பிப்பதற்கு ஆசிரியரை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மாதம் தாமதமாகின்றது. அந்தக் காலத்தை வீணடிக்காது, ஒரு மாதத்திலேயே சிங்களமொழி நூல்களை படிப்பகத்திலிருந்து பெற்று சுயமாகவே கற்றுத் தேர்ச்சியடைகின்றாள். பின்பு சிங்களமொழி ஆசிரியரால் மொழி கற்பிக்கப்படும்போது  ஏற்கனவே சிங்களமொழி நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரைப்போல அவளது மொழி தொடர்பான அதீத திறமையைக் கண்டு அவர்  திகைப்படைகின்றார். இப்படியாக எதனையும் சுயமாகவே முயன்று கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவளிடம் காணப்பட்டது.

பின்பு அவளுக்குரிய இலக்கு வழங்கப்பட்டு வெளிநடவடிக்கை ஒன்றிற்காக  சிங்களமொழி பேசும் ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கே அவள் மறைப்பில் இருந்தகாலத்தில் தொழினுட்பக் கல்லூரியொன்றில் கல்விகற்று சான்றிதழும் பெற்றுக் கொள்கின்றாள். மக்களோடு மக்களாக எதிரிக்கு சந்தேகம் வராத மாதிரி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தனது இலக்கிற்குத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றாள்.

க.பொ.த சாதாரணதர சிறந்த பெறுபேறு, தொழில்நுட்பக்கல்லூரியில் கிடைக்கப் பெற்ற தகைமைச் சான்றிதழ் என்பனவற்றைக் கொண்டு கொழும்பில் மிகப்பிரபல்யமான மேல்தட்டுவர்க்கத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைந்து கல்வியைத் தொடர்ந்துகொண்டு இலக்கினை நோக்கி அணியப்படுத்திக்கொள்ளுமாறு அவளை அவளின் பொறுப்பாளர் பணிக்கிறார். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

 சாதனாவின் ஆங்கில மொழிப் புலமை, சிங்கள மொழிப் புலமை, அமைதியுடன் கூடிய அழகிய தோற்றம் போன்றவற்றினால் அவளில் எவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அங்கே கற்கைநெறியினை மேற்கொள்ளும்போது சாதனாவுக்கு நிறைய மேல்தட்டுவர்க்க சிங்கள நட்புகள் கிடைக்கின்றன. எவருமே போகமுடியாத முக்கிய நகரப்பகுதிகளில் உள்ள பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லும் இடங்களான விளையாட்டரங்குகள், உயர்தரக் கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு தனது சிங்கள நண்பர்களுடன் சென்று தனது இலக்கிற்கான தகவல்களை மிகவும் திறமையாகச் சேகரிக்கின்றாள். பாதுகாப்புக் காரணங்களினால் வெளிநாடு ஒன்றிலிருந்து மிகச் சுருக்கமாகப் பரிமாறப்படும் தகவல்களின் மூலமாக மட்டும் தன்னுடைய பொறுப்பாளருடனும் துறைசார் பொறுப்பாளருடனும் தொடர்பினைப் பேணியவாறு தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வந்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கிற்கான தகவல்கள் வாய்ப்புகள் மட்டுமல்லாது வேறு இலக்குகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் வெற்றியளித்த பல நடவடிக்கைகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் சாதனாவின் அதீத திறமையினால் அவள் சார்ந்த துறை மேலாளருக்கு அவளால் வழங்கப்பட்டன.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சாதனா வெறும் 20 அகவையினையே அடைந்திருந்தாள். அவள் கல்வி கற்குமிடத்தில் அவளுடன் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் இவளது அழகு, உதவும் மனப்பாங்கு , கற்றலில் உள்ள திறமை இவற்றைக்கண்டு சாதனாவின் மேல் காதல் வயப்படுகின்றான். அவள் அதனை முதிர்ச்சியுடன் கையாண்டு அவனைத் தனது இனிய நண்பனாகவும் சகோதரனாகவும் ஏற்றுப் பழகிக்கொண்டு அவனின் உதவியாலும், அவனின் அறிவுக்கு எட்டாத வகையிலும், சந்தேகம்வராத வகையிலும் தனது இலக்கிற்கு தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொள்கின்றாள்.  பருவகால இளவயது, மனதை மாற்றக் கூடிய சூழல்கள், காதல் போன்றவற்றினைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது, சிறப்புப் பயிற்சிகளின் முடிவில் அவள் உறுதிமொழியேற்கும் போதிருந்த அதே உறுதியுடன் மிகத்தெளிவாக தனது சரியான இலக்கை நோக்கி செயற்பட்டுக்கொண்டிருந்தாள்.

சிங்களமொழி பேசும்  இடங்களில் வசித்ததால் சாதனாவிடம் சிங்கள நாளிதழ்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் காணப்பட்டது. அப்போது தான் சிங்கள மக்கள் அப்பாவிகள் இல்லை என்பதும் அவர்கள் தமிழ்மக்களுக்கெதிராக கடும் மனவெழுச்சி கொண்டிருந்ததும் கருத்தியல் ரீதியாக அவளுக்குப் புரிந்தது. மற்றும் வன்னியில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களால் தனது மக்களும் போராளிகளும் கொல்லப்படுவதைக் கண்டு அவளது உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது. அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வெறி அவளது உள்ளத்திலே ஆழ வேரூன்றியது. அதற்குச் சரியான வழி சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் பயிற்சி முகாமிலேயே வைத்து அவர்களை அழிப்பது என்று உணர்ந்து அந்த இலக்குத்  தொடர்பான தகவல்களையும் தானே முன்னின்று சேகரித்துத் தலைமைக்கு  கொடுத்து அது தொடர்பான வெற்றித் தாக்குதல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்தாள்.

அவளுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மேல்தட்டுவர்க்க சிங்கள நண்பி ஒருவரின் விருந்துபசார விழா ஒன்றிற்கு சென்றபோது அங்கே ஒரு இராணுவ அதிகாரியை அவள் தற்செயலாகக் காணக் கிடைத்தது. தென்தமிழீழத்தில் படுகொலைகளை முன்னின்று நடாத்தி எமது மக்களை நேரில் நின்று கொன்றுகுவித்த சிங்கள இராணுவ அதிகாரி தான் அவன் என தான் முன்னர் வாசித்துத் துன்பப்பட்ட தென்தமிழீழப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை மீள்நினைவூட்டி உறுதிப்படுத்திக்கொண்டாள். அவனைப் பற்றிய நெருக்கமான தகவல்களைத் திரட்டியதோடு அவனை அணுகக் கூடிய வாய்ப்பும் அவளுக்குத் தற்செயலாகக் கிடைத்தது. அவளது மனதில் ஈவிரக்கமற்றுப்  பொது மக்களைக் கொன்று குவித்த  அந்த இராணுவ அதிகாரியை அழிக்க வேண்டும் என்ற வன்மம் உருவாகுகின்றது.  அந்த இராணுவ அதிகாரியை தானே சுட்டுக் கொல்ல தலைமையிடம் அனுமதி கோருகின்றாள். ஆனால் தலைமை அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கு வேறு என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது பாதிக்கப்படும் என்று விளக்கங்கூறி அதற்கான அனுமதி அவளுக்கு மறுக்கப்படுகின்றது. ஆனால் சாதனா தனது இலக்கினைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுமதி  வாங்கி அதற்கான ஆயுதத்தினை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கின்றாள். அவனது நாளாந்த நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை அவதானித்து தெளிவான இலக்கிற்காக காத்திருக்கின்றாள். ஒருநாள் அந்த அதிகாரி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாளிதழ் கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லக்கூடிய  தெளிவான இலக்கு அமைகின்றது. மிகத் திறமையாக இலக்குப் பிசகாது அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடுகின்றாள். அன்று அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தது அவளுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது.

அந்தக் கொலைக்கான சூத்திரதாரியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தார்கள். அவர்களால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவளின் பாதுகாப்பு கருதியும் அவளைப் போன்ற திறமையுடைய அனுபவமுடைய போராளியால் மட்டுமே இன்னும் பல போராளிகளை உருவாக்கலாம் என்பதைக் கருதியும்   இந்தத் தாக்குதல் வெற்றியடைந்ததே போதும் அவளது இலக்கை வேறொரு மறைமுகக் கரும்புலியிடம் கையளிக்கலாம் என்று கருதியும் சாதனாவைத் திரும்பி வன்னிக்கு வருமாறு தலைமையிடமிருந்து  பணிப்பு வந்தது. ஆனால் அவளோ தனது இலக்கை அடையாமல் திரும்பி வரமாட்டேன் என்று தனது இலக்கிற்காகக் காத்திருந்தாள். கடைசியில் அவளது உறுதியின் முன்னால் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளது இலக்கை அவள் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்தது. அவள் காத்திருந்த இலக்கும் ஓர்நாள் வந்தது. வெகுமகிழ்வுடன் அதற்குரிய ஆயத்தங்களுடன் இலக்கை நோக்கிச் செல்கின்றாள். ஆனால் அவளால் அதனை நெருங்க முடியவில்லை. திரும்பியும் செல்ல முடியாத நிலையில் தன்னையே உயிராயுதமாக்கி வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவி வீரவரலாறாகின்றாள்.

16 வயதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் எவருமே செய்ய முடியாத சாதனை படைத்து வரலாறான  சாதனாவின் வரலாற்றைப் படிக்கும் ஏனைய போராளிகள் இன்னும் புடம் போடப்பட்டு உத்வேகத்துடன் உருவாகுவார்கள். சாதனா மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியமான புலனாய்வுப் போராளியாக என்றும் எல்லோரின் மனங்களிலும் வாழுகின்றாள்.

"உயிர் மின்னல் கீறும்

ஒரு  ஓவியம்...

அது வரைகின்ற நேரம்

பெரும் காவியம்...

திரை மூடி வாழும்

ஒரு ஜீவிதம்...

வெளி தெரியாமல் ஆடும்

உயிர் நாடகம்….

புரியாத புதிராக

ஒரு தென்றல் போகும்...

புயலாகும் நேரத்தில்

இடியாக மாறும்...

அழியாத கதையாகி

வரலாறு மீளும்...

அவர் நாமம் ஒரு காலம்

தமிழீழம் பேசும்!"

யாவும் கற்பனை அல்ல...

-நிலாதமிழ்(தமிழ்நிலா).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.