Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்)

இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம்.

spacer.png

தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர்.

இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால், அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

இந்தப் படுகொலைகளின் பொழுது, ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற வேறுபாடுமின்றி அங்குமிங்குமாக 71 பொதுமக்கள், சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் முகங் குப்பறப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் முதுகில் சுடப்பட்டிருந்தனர். நூற்றுக்கும்மேற்பட்டபொதுமக்கள்காயமடைந்திருந்தனர்.

 

stOaoDpCNTIdhNZsQfu3.jpg

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது.

யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில் தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும்.

இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்றுபார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

 

KUNQBeb5iT3eTAHGLYF3.jpg

 

 • 63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர்.இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
 • 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
 • 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
 • 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
 • வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
 • 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.
 • எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின்அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாகஅச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?
 • வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள் பற்றி பழ. நெடுமாறன் அவர்களால் எழுதப்பட்டவை கீழ் வருமாறு :
 • தம்பி பிரபாகரன் அவர்களையும் மற்றும் பல புலிகளையும் பெற்றெடுத்த ஊர் என்பதனாலும், இவ்வூர் மக்கள் அனைவருமே புலிகளுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர்கள் என்பதனாலும் வல்வெட்டித்துறை மீது இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மிகுந்த கோபம் இருந்தது. அந்தக் கோபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்ட விதம் மிகக் கொடூரமானது.
 • 1919ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியான்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொது மக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் ‘சுட்டேன், சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்' என்று கொக்கரித்தான்.
 • ஜாலியான் வாலாபாக் படுகொலை இந்திய மக்களை அன்று கொதித்தெழ வைத்தது. ஆனால், அதே இந்திய நாட்டைச் சேர்ந்த இராணும் வல்வெட்டித் துறையில் மற்றொரு ஜாலியன் வாலாபாக்கை நடத்திக் காட்டியது.
 • இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகளை இந்திய அரசு திட்டமிட்டு மறைத்தது. இந்தியப் பத்திரிகைகளுள் பெரும்பகுதி இச் செய்தியை மறைப்பதில் ஒத்துழைப்புக் கொடுத்தன.
 • ஆனால், வல்வெட்டித்துறையில் இச்சம்பவம் நடந்த 13 நாள்களுக்குப் பிறகு அங்கு சென்ற இலண்டன் ‘பெர்னாண்டஸியல் டைம்ஸ்' பத்திரிகையின் நிருபர் டேவிட் ஹவுஸ்கோ இச்சம்பவத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலாக ஆகஸ்ட் 17ம் நாளன்று அவரது பத்திரிகைகளில் இச் செய்தி வெளிவந்தது. பரபரப்பாக வெளி வந்த பிறகு செப்டம்பர் 3ம் நாள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' சிறிய அளவில் இச் செய்தியை வெளியிட்டது.
 • இந்த முறை வல்வெட்டித் துறைக்கு நான் சென்ற போது இந்தப் படுகொலைகள் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முயற்சி செய்தேன். வல்லவை மக்கள் குழுவின்தலைவர் எஸ்.செல்வேந்திரா, செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் நடன சிகாமணி உட்பட பலரை நான் சந்தித்துப் பேசினேன். இப்படுகொலைகள் நடைபெற்று ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப் பிறகு கூட அந்த அதிர்ச்சியில் இருந்து வல்லவ மக்கள் மீளாததை நான் பார்த்தேன்.

1989ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள் வல்வெட்டித் துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித் துறையைச் சுற்றி இருந்த மூன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுற்றுக் கொன்றார்கள். மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன் வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மூன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப் போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டனர். கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும் பெற்றோர் உடலைப் பிள்ளைகளும் பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர்.

 

 

0wFkhMrTgvWw4eyXg7YJ.jpg

மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. சில கடைகளில் அவற்றின் முதலாளிகளையும் உயிருடன் உள்ளே தள்ளி எரித்தார்கள். மொத்தமாக 62 போக்குவரத்து வாகனங்கள் எரிக்கப்பட்டன. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரி கேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின் வருமாறு கொக்கரித்தாராம்.

‘இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நூற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகில் 4வது பெரிய இராணுவம்'.

 

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லவை நகரம் சுடுகாடானது.

வல்வெட்டித் துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் மேலும் பரவிக் கொணடே இருந்தது. இராணுவத்தினர் போய் விட்டதாக நினைத்து அங்கிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

வல்லவை மக்கள் குழுவின் செயலாளர் ஆனந்தராஜாவும், அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஒத்துழைத்தார். அப்போது உடுப்பிட்டியில் இருந்து இந்திய இராணுவச் சிப்பாய்கள் 30 பேர் திடீர் என அங்கு வந்து சேர்ந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆனந்த ராஜாவை அவர்கள் பார்த்து விட்டார்கள். அவர் ஓடுவதற்கு முயற்சி செய்யவில்லை. ஏற்கனவே தன்னை இராணுவத்தினர் அறிவார்கள் என்பதால் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அருகில் வந்து ஒரு சிப்பாய் அவரைப் பலமாகத் தாக்கினான். அவருடன் சேர்ந்து மேலும் 8 பேரைப் பிடித்துக் கைதிகளாகத் தங்களுடன் இழுத்துச் சென்றார்கள்.

அப்போது கேப்டன் பர்க் என்னும் இந்திய அதிகாரி அங்கு வந்தார். அவர் ஏற்கனவே ஆனந்தராஜாவிற்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரிடம் ஏதோ முறையிடுவதற்காக ஆனந்தராஜா முயன்ற போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவர் மார்புக்கு நோக்கி தூக்கிப் பிடித்தார். ஆனந்தராஜ் பாடசாலை ஒன்றின் முதல்வர். மக்கள் குழுவின் செயலாளர். இந்திய இராணுவத்திற்கு மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டவர். ஒரு முறை பருத்தித்துறை இந்திய இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவனைப் புலிகள் கைது செய்து கொண்டு போய் விட்டார்கள்.

 

அவரை மீட்பதற்கு வடமராட்சி மழுவதும் இராணுவத்தினர் சல்லடை போட்டு தேடினார்கள். ஆனாலும், அவர்களால் சிப்பாயை மீட்க முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய அதிகாரி, ஆனந்தராஜாவிடம் மன்றாடினார். புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளரான தீபன் என்பவருடன் தொடர்பு கொண்டு அந்தச் சிப்பாயை விடுவிக்கச் செய்து இந்திய இராணுவ அதிகாரிகளிடம் ஆனந்தராஜாவும் மக்களும் ஒப்படைத்தார்கள்.

இப்படியெல்லாம் செய்த ஆனந்தராஜாவையே அவர்கள் துச்சமாக மதித்தார்கள். ஆனந்தராஜாவையும், அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் அழைத்துச் சென்று உடுப்பிட்டி இராணுவ முகாமில் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். முகாமின் வாசலில் 67 சீக்கியர்கள் உருளைக் கட்டைகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக அடித்து நொறுக்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். தனக்கும் இந்த கதி தான் என்பதை உணர்ந்த ஆனந்தராஜா அந்தக் கொடுமையைத் தாங்குவதற்கு தயாரானார். அப்போது கேப்டன் மேனன் என்ற ஓர் அதிகாரி அவரிடம் ஓடி வந்தார்.

‘மிஸ்டர் ஆனந்தராஜா உங்கள் புலிகள் எங்களுடைய சிப்பாய்கள் 9 பேரைக் கொன்று விட்டார்கள். நாங்கள் யார் என்பதை அவர்களுக்குக் காட்டுகிறோம். உங்களையும் உங்கள் ஊரையும் என்ன செய்கிறோம் பார்' என்ற ஆத்திரத்துடன் கத்தினார். பிறகு அவருடைய கழுத்தில் கையை வைத்து உள்ளே தள்ளினார். அங்கே நான்கு சீக்கிய சிப்பாய்கள் ஆனந்தராஜாவைச் சுற்றிக் கொண்டு உருளைக் கட்டைகளால் மாறி மாறித் தாக்கினார்கள்.

 

ltd4ZnKgFSh2Z0DYPnsy.jpg

அவர் தலையில் இருந்து குருதி ஓடியது. முகத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்த அவர் தொண்டையின் மீது ஒரு மரக்கட்டையை வைத்து சீக்கிய சிப்பாய் ஒருவன் அதன் மீது நின்றான். தான் இறக்கப் போவதை உணர்ந்து விட்ட நேரத்தில் அவர் அவனைப் பிடித்துத் தள்ளியதும் ஆத்திரம் கொண்ட அந்தச் சிப்பாய் அவர் முகத்தில் மாறி மாறி மிதித்தான். அவர் மூச்சுத் திணறி மயங்கி விட்டார். அவர் இறந்து விட்டதாகக் கருதி அந்த வெறியர்கள் விலகிச் சென்றார்கள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த இராணுவ டாக்டர்.கேப்டன் சௌத்ரி ஆனந்தராஜாவை ஏற்கனவே அறிந்தவர். அதனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தக்க சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றினார்.

மறுநாள் காலை மருத்துவமனையில் படுத்திருந்த ஆனந்தராஜாவை டாக்டர்.கேப்டன் சௌத்ரி ‘உடல் நிலை விசாரிப்பது போல்' வந்தார். தலையிலே பட்ட காயத்திற்கு மருந்து போடப்பட்டு இருந்தது. முகம் வீங்கி இருந்தது. வலது கன்னத்தில் ஆழமான காயம் இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. படுத்திருந்தார். டாக்டருடன் வந்த கேப்டன் கர்பத்சிங் என்னும் சீக்கியன் அவரின் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நிமிர்த்தினான். பின்பு இந்தியில் ஏதோ திட்டினான். ‘மிஸ்டர் ஆனந்தராஜா, நேற்று வல்வெட்டித் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மிகக் கொடூரமானவை. இது பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். தமது இராணுவ வீரர்கள் இறந்ததைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

 

‘போரில் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்; ஆனால், போரில் எந்தச் சம்பந்தமும் இல்லாத பொது மக்களிடம் நீங்கள் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித் தனமானது, கொடூரமானது' என ஆனந்தராஜா பதில் கூறினார். அதைக் கேட்ட டாக்டரின் முகம் கோபத்தினால் சிவந்தது.

‘அப்படியா, அது இருக்கட்டும், எங்களுக்கு வல்வெட்டித் துறைப் பிரமுகர் ஒருவரைக் கொன்று விடும்படி இந்தியாவிலிருந்து ஆணை வந்துள்ளது. உங்களுடைய பெயரை அறிவித்து விட்டோம். இன்று 9.45 மணிக்கு வலி எதுவும் இல்லாமல் உங்களைக் கொல்லப் போகிறோம். நீங்கள் அதற்கு முன்னால் உங்களுக்கு விருப்பமான கடவுளை வேண்டிக் கொள்ளலாம்' என மிரட்டினார்.

இந்திய இராணுவ டாக்டருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா ஆச்சரியப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாகத் தமது மக்களிடம் இந்திய இராணுவத்தினர் எல்லாவற்றையும் நடந்து கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்தவர். ஆதலால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், டாக்டரோ மேலும் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

 

‘புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடத்தை நீங்கள் காட்டிக் கொடுத்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றும் படி மேலதிகாரிகளுக்கு நான் சிபாரிசு செய்வேன். நீங்களும், குடும்பஸ்தர், பள்ளியின் முதல்வராக இருப்பவர். எதற்காக வீணாக உயிரை இழக்கவேண்டும்' என்றார்.

அவரது வார்த்தைகளைக் கேட்டதும் ஆனந்தராஜா அந்த வேதனையின் நடுவிலும் சிரித்துக் கொண்டே, ‘டாக்டர் நான் கடவுளைப் பிரார்த்திக்கப் போகிறேன்' இவ்வாறு கூறியதும் டாக்டர் சௌத்ரி வேகமாக விலகிச் சென்றார்.

பின்பு பிரிகேடியர் முன்பு ஆனந்தராஜா ஆஜர்படுத்தப்பட்டார். ‘மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாடுதானா உங்கள் நாடு? சே! என்னால் நம்பவே முடியவில்லை. என்று வேதனையோடு ஆனந்தராஜா கூறிய போது அந்தப் பிரிகேடியர் பின்வரும் பதிலைச் சொன்னார்.

 

‘மிஸ்டர் ஆனந்தராஜா, வெரி சாரி, உங்களைத தற்செயலாகத் தான் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக மனம் வருந்துகிறேன். உங்களுடைய சொல்லைப் புலிகள் கேட்க மாட்டார்கள். எப்படியாவது அவர்களை நாங்கள் அழித்து விடுவோம். அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்கள் தான் உதவி செய்ய வேண்டும். புலிகள் ஒளிந்திருக்கும் இடங்களை நீங்கள் கூறினால் உங்களைப் பத்திரமாக இந்தியாவுக்கே அனுப்பி அங்கே நீங்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறோம். நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் முகத்தை மறைத்து முகமூடி போட்டு அழைத்துச் செல்கிறோம். எங்களுடைய ஜீப்பில் வந்தே புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்கலாம்' என்றார்.

பிரிகேடியரின் இந்தக் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா எரிச்சலுடன் பதில் கூறினார்.

‘அத்தகைய துரோகத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன். புலிகளை அழிக்க நினைப்பதை மறந்து விட்டு அவர்களுடன் பேசிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அது தான் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது. அதை விட்டுவிட்டுச் சிறு பையன்களிடம் கூறுவது போல என்னிடம் கூறாதீர்கள்' என்று கூறிவிட்டு அவர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

 

பிரிகேடியர் அருகே நின்ற கர்னல் சர்மா ‘நாங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் உம்மைக் காங்கேயன் துறைமுகத்துக்கு அனுப்பிவிடுவோம்' என்று மிரட்டினார்.

புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சித்திரவதை முகாமான காங்கேயன் துறை முகாமுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கு 750 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் 150 பேரை அடைத்து வைப்பார்கள். ஒரே ஒரு மலக்கூடத்தைத் தான் அத்தனை பேரும் பயன்படுத்த முடியும். சாப்பாடு ஒழுங்காக அளிக்கப்படுவது இல்லை. கைதி நாளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். ஆனால், கைதிகளிடம் கையெழுத்து பெற்றுக் கொள்வார்களே தவிர பணத்தைக் கொடுக்க மாட்டார்கள். இராணுவ அதிகாரிகளே அவற்றை எடுத்துக் கொள்வார்கள். யாராவது தப்பித் தவறி இதைத் தட்டிக் கேட்டால் அன்று முழுவதும் அவருக்கு அடியும் உதையும் தான் கிடைக்கும்.

முன்பொருநாள் காங்கேயன் துறை முகாமுக்கு அங்குள்ள கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளைக் கேட்டு ஏதாவது உதவி செய்வதற்காகச் சென்ற மக்கள் குழுவில் ஆனந்தராஜாவும் ஒருவராக இருந்தார். அந்தக் கொடுமையான முகாம் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியும். அதனால் தான் அவரை அந்த முகாமுக்கு அனுப்ப போவதாக அதிகாரிகள் மிரட்டினார்கள்.

 

‘அந்த முகாமுக்கு அனுப்புவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றால் கூட நீங்கள் கூறும் கீழ்த்தரமான வேலைகளை நான் செய்யப் போவது இல்லை' என ஆனந்தராஜா பதில் கூறினார்.

ஒரு மரண வீட்டில் துக்கம் கொண்டாடுவதற்காக உறவினர்கள் வந்து கூடியிருந்தார்கள். திடீர் என அந்த வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடு இல்லாமல் வெளியே இழுத்து வந்து வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். நீங்கள் எல்லோரும் புலிகள், உங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வெறி பிடித்தவன் போல ஒரு சிப்பாய் கத்தினான். துக்க வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடி வந்து சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள்.

ஆனால் அந்த மூர்க்கர்களின் மனம் இரவில்லை. ஆண்களையெல்லாம் அடித்து இழுத்துக் கொண்டு முச்சந்தியை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும் ஓடி வந்த பெண்களை ‘பூட்ஸ்' கால்களினால் உதைத்தும், துப்பாக்கிக் கட்டைகளினால் அடித்தும் விரட்டினார்கள். வல்வெட்டித் துறைச் சந்திப்பை அடைந்ததும் அவர்களை ஒரு சாலையில் உட்கார வைத்தார்கள். முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப் போய் அங்கேயே கிடந்தன. சிலருடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எதிர்ப்புறமாக எரிந்த கடை ஒன்றில் முன்னாள் நிற்க வைத்தார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்றஅச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. அங்கே நின்ற மற்றொரு சிப்பாய் அவ்வாறு நிறுத்தப்பட்ட ஆறு பேரையும் சுட்டுத் தள்ளினான். அந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே அவர்களுடைய உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்க துடிதுடித்து இறந்தார்கள்.

 

 

வல்வெட்டித் துறைப் பிள்ளையார் கோயில் ஊரிலிருந்து சிறிது ஒதுக்குப்புறத்தில் அமைந்து இருக்கிறது. பொதுவாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்கள் அங்கே ஓடி அடைக்கலம் புகுவார்கள். அன்றும் ஏறக்குறைய 400 பேர் வரையில் அந்த ஆலயத்திற்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். அவர்களையும் இந்திய ராணுவம் விட்டு வைக்கவில்லை.

கோவில் என்றும் பார்க்காமல் ‘பூட்ஸ்' கால்களோடு வெறித்தனமாகப் பாய்ந்து ஓடி வந்தார்கள். உள்ளே நுழைந்த அவர்களின் கண்களுக்கு முதலில் பட்டவர்கள் கோயில் அர்ச்சகர்கள் தாம். அந்த இரண்டு அர்ச்சகர்களையும் கோவிலுக்குள் வைத்தே பலமாகத் தாக்கினார்கள். பிறகு அங்கே இளைஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து அடித்து வெளியே சந்திக்குக் கொண்டு வந்தார்கள். மேலும் மற்றப் பகுதிகளில் பிடிப்பட்டவர்களையும் அங்கே கூட்டி வந்தார்கள். கொதிக்கும் வெயிலில் அங்கிருந்து உருண்டு கொண்டே உடுப்பிட்டியில் இருந்த இந்திய இராணுவ முகாம் நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டார்கள். கொதிக்கும் தார்ச்சாலையின் சூட்டைப் பொறுக்க முடியாமல் வேதனையுடன் உருண்டு உருண்டு சென்று கொண்டிருந்த மக்களை மரக்கட்டைகளால் அடித்துக் கொண்டே சென்றார்கள்.

 

(மூன்று நாட்களும் வல்வெட்டித்துறையில் நடந்த சம்பவங்கள் இதுவரை எங்கும் நடைபெறாதவை. வல்வெட்டித்துறையில் நடந்த சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் திட்டமிட்டு மறைத்தன. அந்நியநாட்டைச் சேர்ந்த ஊடகங்கள்தான் அம்பலப்படுத்தின. சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசியா வாட்ச் போன்ற உலக மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விசாரணை நடத்தி இந்திய ராணுவத்தை கண்டனம் செய்தனர். தமிழர்கள் என்றும் மறக்க முடியாத நிகழ்வு இது.)

‘தம்பி’ வீட்டில் இந்தியப்படை

1985ம் ஆண்டு, அக்டோபரில் வல்வெட்டித் துறையில் உள்ள தம்பி பிரபாகரன் அவர்களுடைய வீட்டிற்கு நான் சென்று பார்த்த பொழுது வீட்டின் கூரை மட்டுமே நாசமாகிக் கிடந்தது. சுவர்கள் சேதமடையாமல் நின்றன. சிங்கள இராணுவம் அதற்கு மேல் நாசப்படுத்தவில்லை. ஆனால் ஐந்தாண்டுகளுக்குப் பின் 1990ம் ஆண்டு, மாரச் மாதம் அதே வீட்டைச் சென்று பார்த்த போது சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டு அடியோடு நாசமாகிக் கிடந்தன.

 

 

பிரபாகரனைப் பிடிக்க முடியாத இந்திய ராணுவம் பீரங்கியால் சுட்டு அவரின் வீட்டை நாசப்படுத்தியது. பிரபாகரனைச் சுட முடியாத ஆத்திரத்தை அவரது வீட்டைச் சுட்டுத் தீர்த்துக் கொண்டது.

ஆனாலும், இந்தியப் படை வீரர்கள் பிரபாகரன் மீது எத்தகைய மதிப்பு வைத்திருந்தார்கள் என்பது பின்னால் வெளியாயிற்று.

இந்தியப்படை வீரர்கள் தம் நாட்டிற்குத் திரும்பும் சமயத்தில் அணி, அணியாக அந்த வீட்டிற்கு வந்து அதன் முன் நின்று ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த வினோதக் காட்சியை வல்வெட்டித் துறை மக்கள் வேடிக்கையாகப் பார்த்து ரசித்தனர்.

- பழ.நெடுமாறன்

 


 

CKNNOeXDbaH3OjWdTr7S.jpg

 

 

DUUUsT2dj5FEcywn4Lhb.jpg

 

 

thYvmr9ZjyxlM20rz2f4.jpg

 

 

 

m4efVCaZxtiIJgig6jsB.jpg

 

 

 

 

 

Uc3uIe2j8ExCqnzzC2aj.jpg

 

 

 

Qkm0PpbqUUuPKdkJAtW1.jpg

 

 

 

 

K0as5gbgqtdDJIuu0Dfd.jpg

 

 

CLPoTi2MCqyTgjYZJ35t.jpg

 

 

 

N5Ak0qGBs0T7O2y9kwZX.jpg

 

 

oOe94KhjtUk6IwPHKpxm.jpg

 

b0eLX1EnuZzWehE9bAqp.jpg

 

 

 

 

F3zUfOckrQqK8Hd4iG5B.jpg

 

 

 

 

CnADk3XslQPIYnkPr72B.jpg

 

 

 

0u8aBhwUhOMkO4Hx3nB6.jpg

 

 

 

6gZjBlvxnHV5NQKJQTVd.jpg

 

 

 

 

 

 

JhRXPWzbnry58w6xuSmC.jpg

 

 

https://yarl.com/forum3/forum/58-எங்கள்-மண்/?do=add

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.