Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா?

ஜெயமோகன்

September 21, 2021
nove.jpg Vincent Van Gogh “The Novel Reader”

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான், கற்பனைக்கதைகள் வாசிப்பது வெட்டிவேலை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. பொதுஅறிவை அளிக்கும் கட்டுரைநூல்களை வாசிக்கிறோம் என்று சொல்வார்கள்.

அவர்கள் கட்டுரைநூல்கள் என்று சொல்வது பெரும்பாலும் அரசியல்நூல்கள். இடதுசாரி அரசியல்நூல்கள்தான் அதிகமும். சிலர் சேப்பியன்ஸ் போன்ற நூல்களைப் படிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை சிலர் வாசிக்கிறார்கள். செய்திகளை தெரிவிக்கும் புத்தகங்களும், வரலாற்றுப்புத்தகங்களும் மட்டும்தான் பயனுள்ளவை என்று பலரும் பொதுவாகப் பேச்சில் சொல்கிறார்கள்.

நான் எங்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்த மூத்த நண்பரிடம் பேசினேன். அவரும் இடதுசாரிதான். அவர் சொன்னார் “புனைவுகள் உண்மைகளைச் சொல்வதில்லை. அவை ஒருவரின் கற்பனைகளைச் சொல்கின்றன. உண்மைகளைச் சொல்லும் புனைவல்லாத நூல்களும், உண்மைகளை அறியும் வழிகளைக் கற்பிக்கும் கொள்கைநூல்களும்தான் வாசிக்கவேண்டியவை. வாசிப்புப்பழக்கம் உருவாவது வரை புனைவுகளை வாசிக்கலாம். வாசிக்க ஆரம்பித்த பிறகு நிறுத்திவிடவேண்டும்”

உங்கள் கருத்து என்ன? எப்படியும் புனைவின் முக்கியத்துவம் பற்றித்தான் சொல்வீர்கள். ஆனால் நீங்கள் இதை எப்படி விளக்குவீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

கிருஷ்ணன் சம்பத்

nove2.jpg Gautam Mukherjee,Novel Reader

அன்புள்ள கிருஷ்ணன் சம்பத்,

பொதுவாக நம் அரட்டைகளில் அடிபடும் ஒரு கருத்துதான் இது. அதிலும் இடதுசாரிச்சூழலில். அன்றெல்லாம் எங்கள் தொழிற்சங்கச் சூழலில் ஒருவர் புனைவு படிக்கிறார் என்றாலே எவரோ ஒரு தோழர் கண்டிப்பாக இதைச் சொல்வார். ஏனென்றால் இடதுசாரி அமைப்புகளுக்குள் இளைஞர்களைக் கொண்டுவருவதற்கான வழியாக அவர்களுக்கு முதலில் கார்க்கியின் ‘தாய்’ போன்ற நாவல்களை வாசிக்க கொடுப்பதும், அவர்கள் வாசிக்க ஆரம்பித்ததும் மேற்கொண்டு எளிய கொள்கைவிளக்கப் பிரச்சார நூல்களை அளிப்பதும் வழக்கம். அதன்பின் படிக்கவிடமாட்டார்கள். “கதையா படிக்கிறீங்க?”என்று இளக்காரத்துடன் கேட்கும் தோழர்களைச் சந்திக்காமல் இடது அமைப்புகளுக்குள் எவரும் இலக்கியம் சார்ந்து செயல்படமுடியாது.

அதேபோல பொதுவான ஜனங்களுக்கு கதை என்றாலே இளமைப்பருவத்தில் வாசிக்கும் கிளுகிளுப்பான, விறுவிறுப்பான புனைவுகள்தான் என்னும் எண்ணம் உண்டு. பொழுதுபோக்குக்காக மட்டுமே அவற்றை வாசிக்க வேண்டும் என்னும் உளப்பதிவு. ஆகவே இவர்களிடமிருந்து இரண்டுவகையான எதிர்வினைகள் வரும். “நான்லாம் சின்ன வயசிலே நெறைய கதை படிச்சேன் சார். அதுக்குப்பிறகு குடும்பம் குட்டின்னு ஆயிடிச்சு. இந்த காதல் கீதலிலே எல்லாம் நம்பிக்கை போய்டிச்சு” அதாவது கதை என்றாலே காதல்கதைதான் இவர்களுக்கு. “அதெல்லாம் படிக்கிறதில்லீங்க, எங்கங்க நேரம்?” என்பது இன்னொரு வரி. அதாவது நேரம்போகாமல்தான் கதைபடிக்கிறார்கள் என்னும் புரிதல்

இவ்விரு தரப்புகளின் குரல்களைத்தான் ”புனைவு படிக்க மாட்டேன், கட்டுரைநூல்கள்தான் படிப்பேன்” என்று சொல்பவர்களும் எதிரொலிக்கிறார்கள். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று பாருங்கள். பொதுவாக இவ்வாறு சொல்பவர்கள் மிகமிகக் குறைவாக வாசிப்பவர்களாக இருப்பார்கள். ஓரிரு நூல்களே மொத்த வாழ்நாளிலும் வாசித்திருப்பார்கள். அவர்களுக்கென சில மூலநூல்கள் இருக்கும். ஒரே புத்தகத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதையொட்டி ஒரு துறைசார்ந்து சில நூல்களைச் சொல்வார்கள். சிலருக்கு அவை தன்னம்பிக்கை நூல்கள். சிலருக்கு பொதுவான ஆன்மிகநூல்கள். சிலர் ’அள்ளஅள்ளப் பணம்’, ‘பங்குமார்க்கெட்டில் பணமீட்டுவது எப்படி?’ வகையான செயல்முறை நூல்களில் இருப்பார்கள். சிலர் “அக்கினிச் சிறகுகள்” “ஸ்டீவ் ஜாப்ஸ்” வகை வாழ்க்கை வரலாறுகளை வாசிப்பார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் நம்பும் அரசியல் தரப்பைச் சார்ந்த ஓரிரு நூல்களை வாசித்திருப்பார்கள். ஆனால் எவருமே தொடர்வாசகர்களாக இருக்க மாட்டார்கள்.

நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களில் புனைவை வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையினர்தான். ஆய்வாளர்கள். வரலாறு, சமூகவியல் போன்ற ஏதேனும் தளத்தில் தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்து நூல்களை எழுதிவருபவர்கள் புனைவுகளை வாசிப்பதில்லை. நானறிந்த ஆய்வாளர்களில் அ.கா.பெருமாள் போன்றவர்கள் முக்கியமானவை என்று சொல்லப்படும் புனைவுகளை மட்டுமாவது வாசித்துவிடுவார்கள். ஆனால் புனைவுகளை வாசிக்கும் மனநிலை ஆய்வாளர்களுக்கு இருப்பதில்லை.  ஏனென்றால் புனைவுகளை வாசிக்கத் தேவையான கற்பனை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் ஆய்வுத்துறைக்கு எதிரானது கற்பனை. அவர்கள் கறாரான புறவய நோக்கில் தகவல்களை பரிசீலிக்கவேண்டியவர்கள், திட்டவட்டமான முறைமைகளைப் பேணவேண்டியவர்கள். ஆகவே அவர்கள் புனைவுகளை வாசிக்காமலிருப்பது இயல்பானதே. ஏற்றுக்கொள்ளத்தக்கதே

ஆனால் ஒரு பொதுவான வாசகர் புனைவை வாசிக்காமலிருப்பது உண்மையில் குறைப்பட்ட வாசிப்புதான். வாசிப்பே அல்ல என்றுகூடச் சொல்லலாம். ஏன்?

அ. உலக சிந்தனை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இதுவரையில் எழுதப்பட்டு தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு நீடிக்கும் பெரும்பாலான படைப்புகள் புனைவுகளே.

இது ஏன் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். செய்திகளைச் சொல்லும் நூல்கள் ஒரு தலைமுறைக்குள் காலாவதியாகிவிடுகின்றன. ஏனென்றால் அச்செய்திகள் அடுத்த தலைமுறைக்கு தேவையானவை அல்ல. வரலாற்று நூல்களும் பழையனவாகிவிடுகின்றன. ஏனென்றால் மேலதிகத் தரவுகளுடன் வரலாறு மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. கொள்கைகளையும் தத்துவங்களையும் சொல்லும் நூல்களில் மிகமுக்கியமானவை, செவ்வியல் தகுதி கொண்டவை மட்டுமே நீடிக்கின்றன. அவையும்கூட பலசமயம் மீண்டும் எழுதப்பட்டுவிடுகின்றன.

ஆனால் புனைவுகள் காலம் செல்லச்செல்ல மேலும் தகுதி பெறுகின்றன. வெறும் சித்தரிப்பாக அமையும் எளிய கதைகள்கூட அந்தக் காலகட்டத்தை பதிவுசெய்யும் ஆவணங்களாக மாறி வாசிக்கப்படுகின்றன. புனைவுகளில் இருந்து மேலும் புனைவுகள் உருவாகின்றன. புனைவுகள் வழியாகவே முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறையை அறிகிறது. புனைவு வழியாகவே அறிவுத்தொடர்ச்சி உருவாகிறது.ஆகவே புனைவை வாசிக்காதவர் பெரும்பாலும் சமகாலத்தில் சிக்கிக்கொண்டவராகவே இருப்பார். புனைவுகளை வாசிப்பவர் அடையும் முழுமையான காலச்சித்திரத்தை அவர் அடையமுடியாது.

ஆ. புனைவுகள் வழியாகவே வாழ்க்கை தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய வாழ்க்கையை புனைவுகளாக சொல்லியும் எழுதியும் தொகுத்துக்கொண்டே இருக்கிறது. அதன் கனவுகளும் அச்சங்களும் கதைகளிலேயே இருக்கின்றன. அக்கதைகள் அடுத்த தலைமுறையால் தெரிவுச்செய்யப்பட்டு, தொகுத்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சிலசமயங்களில் மறுஆக்கம் செய்யப்படுகின்றன. மறுவிளக்கம் அளிக்கப்படுகின்றன. இவ்வாறுதான் தலைமுறை தலைமுறையாக பண்பாட்டுநினைவுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரே ஒழுக்காக ஆக்கப்படுகின்றன. இனக்குழுக்களின் பண்பாட்டுநினைவுகள், ஊர்களின் பண்பாட்டு நினைவுகள், சமூகங்களின் தேசங்களின் பண்பாட்டு நினைவுகள். அவை இணைந்து மானுடத்தின் பண்பாட்டு நினைவுத்தொகுதியாக ஆகின்றன.

அந்த மாபெரும் நினைவுத்தொகுதிதான் அத்தனை சிந்தனைகளுக்கும் கச்சாப்பொருள். வரலாறு,சமூகவியல், அரசியல் எல்லாமே அதை ஆராய்ந்தே தங்கள் முடிவுகளைச் சென்றடைகின்றன.அந்த மாபெரும் நினைவுத் தொகுதி ஒவ்வொரு தனிமனிதனையும் இலக்கியம் வழியாகவே வந்தடைகிறது. ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு சமூகத்தில் பிறந்து, ஒரு மொழியில் வாழும்போதே கதைகளாக அந்த நினைவுத்தொகுதி அவரை வந்தடைந்துவிடுகிறது. அதுவே அவருடைய உள்ளத்தை உருவாக்குகிறது. அவர் சிந்திப்பதும் கனவுகாண்பதுமெல்லாம் அதைக்கொண்டுதான். சாமானியர்களுக்கு அது ஓர் எல்லையில் நின்றுவிடுகிறது. இலக்கிய வாசிப்பு என்பது அதை தொடர்ந்து பயின்றுகொண்டே இருப்பது. அவ்வளவுதான் வேறுபாடு,

இ. புனைவு இல்லாமல் எவராலும் வாழமுடியாது. புனைவை வாசிக்காதவர்கள் என தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் கூட புனைவுகளில்தான் பெரும்பாலும் புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவது புனைவுதான். சினிமாக்கள், டிவி சீரியல்கள், பொழுதுபோக்கு எழுத்துக்கள், இலக்கியங்கள் என புனைவுகள் பெருகிச்சூழ்ந்துள்ளன. அவற்றை முற்றாகத் தவிர்ப்பவர் எவர்? செய்திகளும் புனைவுத்தன்மை கொண்டவைதான். புனைவு இல்லாத இடமே இல்லை. புனைவிலக்கியத்தை வாசிப்பவர் புனைவை அது என்ன என்று தெரிந்து, அதன் நுட்பங்களை உணர்ந்து, அறியும் திறமைகொள்கிறார். புனைவிலக்கியத்தை வாசிக்காதவர் அவரை அறியாமலேயே புனைவை விழுங்கி உள்ளத்தில் நிறைத்துக்கொண்டிருக்கிறார்.

ஈ. புனைவிலக்கியமே சமகாலத்து உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதை அறிய புனைவிலக்கியத்தை வாசித்தாகவேண்டும். புனைவிலக்கியம் செயல்படும் விதமென்ன என்பது இன்று ஆய்வாளர்களால் விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. புனைவிலக்கியம் எழுத்தில் இருந்து பேச்சுக்குச் செல்கிறது. நிகழ்த்துகலையாகிறது. மக்கள் நினைவில் தொன்மம் ஆகிறது. தொன்மம் மீண்டும் இலக்கியமாகி விரிவடைகிறது. சிலப்பதிகாரக்கதை தமிழ் மக்களிடையே வாய்மொழிக்கதையாக இருந்தது. சிலப்பதிகாரமாக ஆகியது. மீண்டும் கதையாகி, தொன்மம் ஆகியது. அத்தொன்மம் மீண்டும் நவீன இலக்கியமாக ஆகியது.

இந்த தொடர்ச்சுழல் வழியாகவே நம் உள்ளத்தின் அடிப்படை அலகுகளான ஆழ்படிமங்கள், தொன்மங்கள், படிமங்கள் உருவாகின்றன. அவற்றைக்கொண்டே நாம் சிந்திக்கிறோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். ஒருவர் இலக்கியம் படிக்காவிட்டாலும் இந்த சுழற்சியில்தான் இருக்கிறார். ஆனால் புனைவிலக்கியம் வாசிப்பவர் இது எப்படி நிகழ்கிறது என்னும் தெளிவை அடைகிறார். ஆகவே தன் உணர்ச்சிகளையும், அவ்வுணர்ச்சிகள் உருவாகும் விதத்தையும் அவர் அறியமுடியும்.

உ. புனைவிலக்கியம் வாசிக்காதவர்களால் மானுட உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாது.மனிதர்கள் சிந்தனைகளால் வாழ்வதில்லை, உணர்ச்சிகளால்தான் வாழ்கிறார்கள். அரசியலையும் அன்றாடவாழ்க்கையையும் வணிகத்தையுமேகூட உணர்ச்சிகளே தீர்மானிக்கின்றன. புனைவிலக்கியவாசிப்பே இல்லாதவர்கள் வெறுமே கருத்துக்களையாக கக்கிக்கொண்டிருப்பதை, அக்கருத்துக்களின் அடிப்படையில் எல்லாவற்றையும் எளிமையாக்கி புரிந்துகொள்வதை காணலாம். அவர்களால் தங்கள் உணர்வுகளை, பிறர் உணர்வுகளை, சமூக உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. இது அவர்களுக்கு ஒரு மூர்க்கமான அணுகுமுறையை, ஒருவகையான பிடிவாதத்தை உருவாக்கிவிட்டிருக்கும்

ஊ. புனைவிலக்கியமே வாசகனின் தனித்தன்மையையும், பயணத்தையும் அனுமதிப்பது. புனைவிலக்கியம் என்பது யாரோ ஒருவரின் கற்பனையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது என்றும், புனைவில்லா எழுத்தே ‘உண்மையை’ச் சொல்வதும் என்றும் நம்புவது மேலே சொன்ன ஐந்து அடிப்படைகளையும் அறியாத ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் மாயை. மிக அபத்தமானது அக்கருத்து.

புனைவிலக்கியம் அல்லாதவை அனைத்துமே தர்க்கத்தின் மொழியில் அமைந்தவை. நாம் அவற்றை நோக்கி நம் தர்க்கத்தையே திருப்பி வைக்கிறோம். அங்கே நிகழ்வது தர்க்கபூர்வமான ஓர் உரையாடல். அந்த நூலாசிரியர் மிகச்சாதகமான நிலையில் இருக்கிறார். அவர் தன் துறையின் நிபுணராக இருப்பார். தன்னுடைய தர்க்கத்தை முன்னரும் பலமுறை முன்வைத்து, பலவகையான எதிர்வினைகளைக் கண்டு பழகி, தேர்ச்சி பெற்றவராக இருப்பார். அவருக்கு தன் தர்க்கங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து சீராக முன்வைக்கும் வாய்ப்பை அந்நூல் வழங்குகிறது. பலசமயம் தேர்ந்த நூல்தொகுப்பாளர்கள் இணைந்து அந்த நூலை பழுதகற்றி அமைத்திருப்பார்கள்.

அந்நூலின்முன் வாசகன் கிட்டத்தட்ட நிராயுதபாணியாக நிற்கிறான். அவனும் அத்துறையில் அதேயளவு நிபுணன் அல்ல என்றால் அவன் அங்கே தோற்கும் தரப்புதான்.நீங்கள் இதை நடைமுறையில் பார்க்கலாம். சேப்பியன்ஸ் நூலை வாசிக்கும் ஒருவாசகர் மிக எளிதாக யுவால் நோவா ஹராரியின் பார்வைக்கு அடிமையாவார். அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். புனைவல்லா நூலின் வாசகர்கள் அப்படி சில நூல்களையே விதந்தோதிக்கொண்டிருப்பதைக் காணலாம். அப்படி அன்றி அந்நூலால் ஆட்கொள்ளப்படாதவர் இருந்தார் என்றால் அவர் அந்நூலுக்கு எதிரான சிந்தனைகளால் ஏற்கனவே ஆட்கொள்ளப்பட்டவராக இருப்பார். மார்க்ஸியர் சேப்பியன்ஸ் நூலை மூர்க்கமாக ஒற்றைப்படையாக மறுப்பார்கள். அது இன்னும் மோசமான அடிமைநிலை.

சரி, வெறும் செய்திநூல்கள் என்றால்? அங்கும் செய்திகளில் எது முக்கியம், எது தேவையில்லை என்னும் தெரிவு அதை அளிப்பவரிடம் உள்ளது.செய்திகளை அடுக்குவது அந்த ஆசிரியரிடம் உள்ளது.  பெரும்பாலான செய்தித்தொகுப்புகள் மிக மறைமுகமாக வலுவான கருத்துநிலையை முன்வைப்பவை. 2000 ஆண்டு நிறைவின்போது இரண்டாயிரமாண்டின் வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி லண்டன் டைம்ஸின் செய்திச்சுருக்கம் ஒன்றை மலையாள மனோரமா இயர்புக்குக்காக மொழிபெயர்த்தேன். வெறும் செய்திகள், தேதிகள். வேறெந்த கருத்தும் இல்லை. ஆனால் அதில் பிரிட்டனில் ஓர் ஆர்ச்ப்பிஷப் பதவியேற்பது ஒரு செய்தி. சீனாவில் ஓர் அரசவம்சம் முடிவுக்கு வருவதுதான் செய்தி.

பெரும்பாலான துறைசார் நூல்களில் நாம் வெறும் கருத்தேற்பாளர்களாகவே இருக்கிறோம். நம்மையறியாமலேயே நாம் நம் தரப்பை அந்நூல்களை ஒட்டி உருவாக்கிக் கொள்கிறோம். அவ்வாறன்றி உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்றால் அத்துறைசார் நூல்களிலேயே எல்லா தரப்பையும் வாசிக்கவேண்டும். அவ்வாறு எத்தனை துறைகளை ஒருவரால் வாசிக்க முடியும்? அப்படியென்றால் அவர் தனக்கான உண்மையை அறிவது எப்படி? எப்படி தன் நிலைபாட்டை அவர் எடுக்கமுடியும்?

அவருக்கென இருப்பது அவருடைய அனுபவங்கள் மட்டுமே. அந்த அக- புற அனுபவங்களில் இருந்து அவர் நேரடியாக அடைவனவே அவருக்குரியவை. அவற்றை அளவுகோலாகக் கொண்டுதான் அவர் எல்லாவற்றையும் மதிப்பிட்டு தனக்கான முடிவுகளை அடையமுடியும். அத்தனைபேரும் இயல்பாகச் செய்வது அதைத்தான். ஆனால் எவராக இருந்தாலும் ஒருவரின் அனுபவம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டது. அதைக்கொண்டு அனைத்தையும் புரிந்துகொள்ளுமளவுக்கு ஆழ்ந்த அறிதல்களை அடையமுடியாது. அதற்குத்தான் புனைவுகளை வாசிப்பது உதவுகிறது.அவை நாம் அடைந்த அனுபவங்களை கற்பனையில் விரிவாக மீண்டும் அனுபவிக்க உதவுகின்றன.

உதாரணமாக, நான் குமரிமாவட்ட வாழ்க்கையையும் தர்மபுரி மாவட்ட வாழ்க்கையையும் மட்டுமே அறிந்தவன். ஆனால் தேவிபாரதியின் நாவல்கள் வழியாக என்னால் ஈரோடு மாவட்ட வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கண்மணி குணசேகரன் வழியாக விழுப்புரம் வட்டார வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கீரனூர் ஜாகீர்ராஜா வழியாக இஸ்லாமிய வாழ்க்கைக்குள்ச் செல்லமுடியும். புனைவுகளினூடாக தமிழகம் முழுக்க வாழ்ந்த அனுபவத்தை நான் அடையமுடியும். அவ்வாசிப்பு எனக்கு உண்மையில் வாழ்ந்த அனுபவத்துக்கு நிகரான அறிதல்களை அளிக்கமுடியும்.

புனைவுகளை வாசிக்காதவர்கள், புனைவல்லாதவற்றை மட்டுமே வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் கருத்துக்களின் அடிமைகளாக இருப்பதைக் காண்கிறோம். அவர்களுக்குச் சுயசிந்தனை மிக அரிதாகவே இருக்கும். நூல்களால் ஆட்கொள்ளப்பட்டு, நூல்களை திருப்பிச்சொல்லும் கருத்தடிமைகள் அவர்கள். காரணம் இதுதான், கருத்துக்களும் செய்திகளும் அவர்களை நோக்கி மலைமலையாக கொட்டப்படுகின்றன. அக்கருத்துக்களை திறன்மிக்க நிபுணர்கள் தேர்ந்த தர்க்க ஒழுங்குடன் அளிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த கருத்துக்கள் வழியாக அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கம் உள்ளது.ஆகவே அவர்கள் மிகுந்த விசையுடன் செயல்படுகிறார்கள்.அக்கருத்துக்களை மட்டும் வாசிப்பவர்களுக்கு அவற்றை மதிப்பிடுவதற்குரிய சுயமான அளவுகோல்கள் ஏதும் இல்லை. ஆகவே முற்றான அடிமைத்தனமே எஞ்சுகிறது.

அடிமைகளுக்கு இருப்பது நம்பிக்கை அல்ல, பற்று அல்ல, விசுவாசம் மட்டுமே. ஒரு சிந்தனையாளன் எந்த படையிலும் உறுப்பாக இருக்க மாட்டான். எந்த இடத்திலும் வெறும் எதிரொலியென செயல்படமாட்டான். விரிவான புனைவு வாசிப்பு இல்லாதவர்களின் மூர்க்கம் அந்த விசுவாசத்தில் இருந்து வருவது. அவர்களுக்கு தங்களின் சார்புகள்மேல் சந்தேகமே இருப்பதில்லை. ஆகவே திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். எத்தனை ஆண்டுகளானாலும் மாறாமல் அப்படியே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் ஆழ்ந்த தன்னம்பிக்கையுடன் பேசமுற்படுகிறார்கள். இணையவெளியில் பாருங்கள். கருத்தடிமைகள் எந்த ஐயமும், எந்த வளர்ச்சியும் இல்லாமல் முழுநேரமாக ஆண்டுக்கணக்கில் இயந்திரம் போல செயல்பட்டுக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

புனைவுகளை வாசிப்பவர்களுக்கு சுயமான அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. ஐயங்களை உருவாக்குகின்றன. ஆகவே அவர்கள் மேற்கொண்டு கற்று முன்சென்றுகொண்டே இருக்கிறார்கள். புனைவுகளை வாசிக்காதவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அவர்கள் வாசித்த சில வலுவான நூல்களால் முற்றாக ஆக்ரமிக்கப்பட்டுவிடுவார்கள். அந்நூல்களின் நிலைபாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்வதனால் அவர்களின் மூளை நிரம்பிவிடும். விசுவாசம் உருவாகிவிடும்.ஐயங்கள் இருப்பதில்லை. மேற்கொண்டு எதையும் கற்க முடியாது. ஆகவே வளர்ச்சியும் மாற்றமும் இருக்காது. விசைத்தறி ஓடுவதுபோல ஒரே டடக் டக் சடக் சட் ஓசைதான் எழுதுகொண்டிருக்கும் அவர்களிடமிருந்து. எண்ணிப்பாருங்கள் அப்படி எத்தனை முகங்கள் உங்கள் நினைவிலெழுகின்றன என.

ஆனால் புனைவின் வாசகன் வளர்ந்துகொண்டிருப்பான். ஆகவே அவன் நிலையாக இருக்க மாட்டான். அவனைப் பற்றி புனைவல்லாதவற்றை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டே அவன் உறுதியாக இல்லாமல் ‘அலைபாய்ந்துகொண்டிருக்கிறான்’ ‘குழப்பவாதியாக இருக்கிறான்’ என்பதாகவே இருக்கும். அதாவது அவர்கள் தங்களைப்போல மூளை உறைந்த விசுவாசநிலையை புனைவு வாசகனிடம் எதிர்பார்க்கிறார்கள். இயல்பாக பேசினாலே தெரியும், ஒரு நல்ல புனைவுவாசகன் புனைவல்லாதவற்றை மட்டும் படிப்பேன் என்பவனை விட மிகப்பலமடங்கு நுண்ணிய அவதானிப்புகளும் சுயமான சிந்தனைகளும் கொண்டவனாக இருப்பான். ஆனால் அதை உணருமளவுக்கு அந்த புனைவல்லாதவற்றின் வாசகர்களுக்கு நுண்ண்ணுணர்வு இருப்பதில்லை. அவர்களின் விசுவாசம் அவர்களை ஐம்புலன்களும் முற்றாக மூடப்பட்டவர்களாக ஆக்கியிருக்கும்.

ஆனால் விந்தை என்னவென்றால், இங்கே புனைவின் வாசகர்களிடம்தான் ”புனைவை வாசிக்காதீர்கள், அந்த ஆசிரியரால் அடித்துச்செல்லப்படுவீர்கள்” என்று பலரும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதைச் சொல்பவர்கள் எவர் என்று பார்த்தால் ஒன்று கருத்தடிமைகள் அல்லது ஒன்றும் தெரியாத பொதுக்கும்பல்.இந்த அபத்தம் எங்குமென பரவியிருப்பதனால் நமக்கு உறைப்பதே இல்லை. புனைவுஅல்லாத நூல்களில்தான் ஆசிரியர் வாசகனை ஆட்கொள்ள, நம்பவைக்க, தனக்கு அடிமையாக ஆக்க முழுமூச்சாக முயல்கிறார். தன் தர்க்கத்திறன், தன் தரவுகள் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். புனைவுநூல்களில் ஆசிரியர் அப்படிச் செய்தால் அது பிரச்சாரம் எனப்படும். அதற்கு மதிப்பே இல்லை. புனைவின் மதிப்பு அது எந்த அளவுக்கு வாசகசுதந்திரத்தை அளிக்கிறது என்பதைப் பொறுத்தே உள்ளது.

புனைவு எத்தனை அப்பட்டமாக பிரச்சாரநோக்கம் கொண்டிருந்தாலும்கூட ஒற்றைப்படையானது அல்ல. அது நமக்கு அளிப்பது ஒரு நிகர்வாழ்க்கையை. நாம் ஒரு மெய்யான வாழ்க்கையைப்போலவே அப்புனைவு அளிக்கும் வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அந்த அனுபவத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிதல்கள் அந்த ஆசிரியன் சொல்லும் கருத்துக்கள் அல்ல. நாமே அனுபவித்து அறியும் நமது கருத்துக்கள் அவை. நூல்கள் அளிக்கும் அனுபவமே அத்தனை வாசகர்களுக்கும் பொதுவானது. கருத்துக்கள் வாசகர்களால் அவர்களின் அறியும்திறனுக்கு ஏற்ப உருவாக்கப்படுபவை. நீங்களும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறோம். நாம் அடையும் புறஅனுபவம்தான் ஒன்று. அக அனுபவம் வெவ்வேறானது. அதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிதல்களும் வேறுவேறு. அதைப்போலத்தான் இலக்கியம் அளிக்கும் அறிதல்களும்.

புனைவின் செயல்முறையே தரவுகளைக்கொண்டு ஓர் அனுபவக் களத்தை உருவாக்கி வாசகன் அந்த அனுபவத்தை அவனே கற்பனைசெய்துகொள்ளச் செய்வதுதான். எத்தனை செயற்கையாக ஜோடனை செய்தாலும் அதில் ஆசிரியரை மீறி செய்திகளும் தரவுகளும் குரல்களும் இடம்பெற்றிருக்கும். கலைத்தன்மை கொண்ட படைப்பு என்றால் அது முற்றிலும் ஆசிரியரை விட்டு எழுந்து அவனுடைய கனவு போல தானாகவே மொழியில் நிகழ்ந்ததாக இருக்கும். அந்த ஆசிரியனை மீறியதாக இருக்கும். ஆசிரியன் சொல்ல விரும்புவதை அப்படியே அது சொல்வதில்லை. அவனே அறியாதவற்றையும் அது சொல்லும். சொல்லாதவற்றைச் சுட்டிநிற்கும். ஆசிரியனைவிட அது ஆழம் கொண்டதாக இருக்கும். சமயங்களில் அவனுடைய எதிர்மறைத்தன்மையைக்கூட காட்டிக்கொடுக்கும்.

பன்முகவாசிப்புக்கு இடமளிப்பதே இலக்கியப் படைப்பு. ஆகவேதான் இலக்கியப்படைப்பைப் பற்றி முற்றிலும் வேறுவேறான வாசிப்புகள் வரமுடிகிறது.ஒரு வாசகர் காணாததை இன்னொரு வாசகர் காண முடிகிறது வாசிப்பு பெருகுந்தோறும் இலக்கியப்படைப்பின் ஆழமும் கூடுகிறது. காலந்தோறும் அதன் அர்த்தம் வளர்ந்து உருமாறமுடிகிறது. இலக்கிய வாசிப்பு என்பது போதனை அல்ல. ஆசிரியர் கொடுக்க வாசகன் பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியரும் வாசகனும் இணைந்து ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆசிரியர் வாசகனின் கனவை தொட்டு அதை வளரச் செய்கிறார். வாசகன் அடைவது அவனுடைய கனவையேதான்.

புனைவுநூல்கள் கட்டுரைநூல்களைப்போல தர்க்கபூர்வமானவை அல்ல. அவை தர்க்கத்தை பயன்படுத்தினாலும்கூட தர்க்கம்கடந்த நிலையிலேயே அவை பொருளுணர்த்துகின்றன. கட்டுரைநூல்களை வாசிக்க ஒரு காலிமூளை கொண்ட வாசகன் போதும். புனைவுகளை வாசிக்க கற்பனைத்திறன் கொண்ட வாசகன் தேவை. புனைவுநூல் தன் வாசகனுக்கு வண்ணங்களையும் சில கனவுகளையும் அளிக்கிறது. அவன் தன் ஓவியத்தை தானே வரைந்துகொள்ளவேண்டும். கட்டுரை நூல் வாசகன் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவன் சுவரில் ஓர் ஓவியத்தை மாட்டிவிட்டுச் செல்கிறது.

கட்டுரைநூல்களில் அந்நூலாசிரியர் உருவாக்க எண்ணும் கருத்துக்கு தேவையானவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். புனைவு அப்படிச் செயல்பட முடியாது.அதில் முக்கியமானவை என ஏதும் இல்லை. ஒரு சூழலைச் சொல்ல, ஒர் உணர்வைச் சொல்ல அது ‘எல்லாவற்றையும்’ சொல்லித்தான் ஆகவேண்டும். ஆசிரியர் அந்தக் கற்பனைக்குள் செல்லும்போது தன்னிச்சையாக எல்லாமே உள்ளே வந்து பதிவாகும். உணர்வுகள் இயல்பாகவே வந்து நிறையும். ஆகவே சின்னவிஷயங்கள், விளிம்புவிஷயங்கள், எதிர்மறை அம்சங்கள் எல்லாம் புனைவில் நிறைந்திருக்கும். ஆசிரியன் பொருட்படுத்துவன மட்டுமல்ல அவனால் பொருட்படுத்தாதவை கூட புனைவில் இருக்கும்.

சின்னவிஷயங்களால் ஆனது வாழ்க்கை. அவை பதிவாகும் ஒரு களம் புனைவு மட்டுமே. சங்ககாலத்தில் பெண்கள் எப்படி அணிசெய்தார்கள் என நீங்கள் கலித்தொகையைக் கொண்டே அறியமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு சமையல் என்ன என்பதை நாவல்களே காட்டமுடியும். இன்றைய அன்றாடம் புனைவில் மட்டுமே எஞ்சியிருக்கும். சின்னச்சின்னச் செய்திகள் வாசகனுக்கு முக்கியமானவையாக இருக்கலாம்.மிகச்சாதாரணமான ஒரு செய்தி அல்லது காட்சியில் இருந்து வாசகன் முக்கியமான எண்ணங்களை, புரிதல்களை அடையலாம். புனைவுவாசிப்பு அளிக்கும் இந்த வாய்ப்புகளையே நாம் அதன் முதன்மை தகுதிகளாகக் கொள்கிறோம்.

இன்று வாசிப்புசார்ந்த இலக்கியக் கொள்கைகளே மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. புனைவை ஒரு மொழிக்கட்டமைப்பாக பார்க்கும் ரோலான் பார்த், புனைவை ஆசிரியன் அறிந்தவையும் அறியாதவையுமான வெவ்வேறு குரல்களின் பெருந்திரளாகக் காணும் மிகயீல் பக்தின், புனைவை வாசகன் அர்த்தமேற்றிக்கொண்டே செல்வதை ஓர் ஆடலாகப் பார்க்கும் ழாக் தெரிதா என அதன் படிநிலைகள் பல. வாசக எதிர்வினை கொள்கைகள் என ஒரு பெரிய சிந்தனை மரபே உள்ளது. ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் தொடங்கி பலர். இவை எல்லாமே புனைவு அளிக்கும் வாசிப்பு வாய்ப்புகளைப் பற்றிய ஆய்வுகள். புனைவை எப்படி வாசிக்கவேண்டும் என்று இவை சொல்லவில்லை, உண்மையில் நாம் எப்படி புனைவை வாசிக்கிறோம் என்று இவை விளக்கமுயல்கின்றன. நாம் புனைவை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்ள முயன்றாலும்கூட அது நிகழ்வதில்லை. அது ஓர் உரையாடல், ஒரு கூட்டுச்செயல்பாடு. இந்தச் சிந்தனைமரபின் ஒரு துளியை அறிந்த ஒருவர் கூட புனைவுகளை வாசிப்பவன் ஆசிரியனை அப்படியே ஏற்றுக்கொள்கிறான் என்று சொல்ல மாட்டார்கள்.

கடைசியாக ஒன்று, புனைவல்லா நூல்களில் மட்டுமே ஈடுபடுபவர்கள் முற்றிலும் அன்றாடவாதிகளாக, உலகியல் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். தங்களைச் சார்ந்து, தங்கள் சூழல் சார்ந்து மட்டுமே யோசிப்பார்கள். முழுமைநோக்கு என்பதே ஆழ்நோக்கும்கூட. அதுவே ஆன்மிகம் என்று சொல்லப்படுகிறது. வாசிப்பில் அது புனைவினூடாகவே எய்தப்பெறுவது. ஏனென்றால் புனைவிலேயே கற்பனைக்கு இடமிருக்கிறது, வாசகன் தன் அனுபவமாக உணர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

சரியான வாசிப்பு என்பது புனைவும் புனைவல்லாதவையும் இணைந்து உருவாகும் ஒரு வெளி. புனைவல்லா நூல்கள் நமக்குச் செய்திகளையும் பார்வைகளையும் அளிக்கின்றன. புனைவு நமக்கு அனுபவங்களை அளித்து அவற்றினூடாக நம் அறிதல்திறனை வளர்க்கிறது. இவை ஒன்றையொன்று நிரப்பிக்கொள்ளவேண்டியவை

ஜெ

https://www.jeyamohan.in/154691/

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

//சரியான வாசிப்பு என்பது புனைவும் புனைவல்லாதவையும் இணைந்து உருவாகும் ஒரு வெளி. புனைவல்லா நூல்கள் நமக்குச் செய்திகளையும் பார்வைகளையும் அளிக்கின்றன. புனைவு நமக்கு அனுபவங்களை அளித்து அவற்றினூடாக நம் அறிதல்திறனை வளர்க்கிறது// - உண்மைதான்..

புனைவிலக்கியங்கள் வானமே எல்லை போல பரந்து விரிந்து கற்பனை வளத்தை அதிகரித்துக்கொண்டு போகும்.. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.