Jump to content

மெட்டாவெர்ஸ்' மூலம் ஃபேஸ்புக் வருங்காலத்தை ஆக்கிரமிக்கப் போகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மெட்டாவெர்ஸ்' மூலம் ஃபேஸ்புக் வருங்காலத்தை ஆக்கிரமிக்கப் போகிறதா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மார்க்

பட மூலாதாரம்,META

ஃபேஸ்புக் என்று அழைக்கப்பட்டு வந்த நிறுவனம் மெட்டா என்ற புதிய பெயரைப் பெற்றிருக்கிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபலமான செயலிகள் / இணையதளங்கள் அனைத்தும் தொடர்ந்து அதே பெயரில்தான் இருக்கும். ஏனெனில் இப்போதைக்கு மெட்டா என்பது அனைத்து தளங்களின் தாய் நிறுவனத்துக்கான மறுபெயர் மட்டுமே.

இந்தப் பெயரே, தொழில்நுட்பத்தின் அடுத்த அத்தியாயத்தில் - இணையத்தின் எதிர்காலமாகக் கவனிக்கப்படும் மெட்டாவெர்ஸ் என்ற முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பங்கேற்க மக்களை அழைக்கிறது.

ஆனால் மார்க் சக்கர்பெர்க்கின் புதிய தொலைநோக்கில் பங்கேற்கும் அளவுக்கு அந்த நிறுவனத்தை மக்கள் நம்புவார்களா என்று சில நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

மெட்டா என்பது அவ்வளவு முக்கியமா?

புதிய பெயரான மெட்டா என்பது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் அது குறித்த லட்சக்கணக்கான ஆன்லைன் தேடல்களை உருவாக்கியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அவற்றில் கீழ்கண்ட பிரபலமான கேள்விகள் அடங்கும்:

மெட்டா என்றால் என்ன?

மெட்டா என்றால் என்ன பொருள்?

மெட்டா என்பது எதைக் குறிக்கிறது?

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் மெட்டாவுக்கு பல்வேறு வரையறைகள் கிடைக்கின்றன. முன்னொட்டாகக் இது வரும்போது "மாற்றம், வரிசைமாற்றம், பதிலீடு, அப்பால், மேலே, உயர் நிலையில்" என்பது போன்ற பல பொருள்களைக் கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் தான் தேர்ந்தெடுத்த மெட்டாவுக்கு "அப்பால்" என்ற பொருள்பட விரும்புவதாகக் கூறுகிறது. அதே நேரத்தில் அது ஒரு வகையான உருமாற்றத்தையும் விரும்புகிறது.

ஆவணக் கசிவுகள், எதிர்மறை பத்திரிகை விமர்சனங்களால் கறைபடாத ஒரு புதிய பிராண்டை வரவேற்கும் வாய்ப்பும் கூட இதன்மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கிடைக்கலாம். இருப்பினும் ஒரேயொரு பெயர் மாற்றத்தின் மூலம் நிறுவனத்துக்கு ஏற்கெனவே இருக்கும் சிக்கல்களை அழித்துவிட முடியாது என்று ஓர் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

ஆயினும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்டால் இந்தப் பெயர் எதிர்காலத்தைப் பற்றியது. ஃபேஸ்புக் அப்படித்தான் கூறுகிறது.

"எங்கள் புதிய பிராண்ட் எங்கள் நிறுவனம் எங்கு நோக்கிச் செல்கிறது என்பதையும் நாங்கள் உருவாக்க விரும்பும் எதிர்காலத்தையும் குறிப்பிடுகிறது" என்று மெட்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் குறிப்பிடும் இலக்கு "மெட்டாவெர்ஸ்" ஆகும்.

பூமியில் மெட்டாவெர்ஸ் என்றால் என்ன?

நாம் இணையத்தைப் பயன்படுத்தும் முறையின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் நம்புகிறது.

"இந்த எதிர்காலத் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் பயணம் செய்யாமலேயே அலுவலகத்திற்கு செல்லவோ அல்லது நண்பர்களுடன் ஒரு கச்சேரியில் பங்கேற்கவோ, இல்லையெனில் உங்களது பெற்றோருடன் இருக்கவோ முடியும். உங்களது ஹாலோகிராம் முப்பரிமாண முறையில் தேவைப்படும் இடத்துக்குச் சென்றுவிடுகிறது " என்று மார்க் சக்கர்பெர்க் எழுதுகிறார்.

தொற்றுநோயைக் காலத்தில் காணொளி காட்சிகள் மூலம் சந்திப்புகளை நடத்தியவர்களுக்கு இதுபற்றி ஓரளவு தெரிந்திருப்பது போலத் தோன்றலாம். ஆனால் மெட்டாவெர்ஸ் இன்னும் மேம்பட்டது. உங்களது இரண்டாவது வாழ்க்கையைப் போன்ற மெய்நிகர் உலகங்களை நினைவூட்டக்கூடியது.

மெய்நிகர்

பட மூலாதாரம்,META

ஆயினும் இது அப்படியே மெய்நிகர் உலகம் அல்ல. பல வழிகளில் முப்பரிமாணத்தைப் பயன்படுத்துகிறது. "மேம்பட்ட யதார்த்த (Augmented Reality) தொழில்நுட்பத்தைக் கொண்ட கண்ணாடிகள் மூலம் நீங்கள் உங்களது இடத்தில் இருந்தபடியே புதிய இடத்துக்கு தாவிச் செல்ல முடியும்"

"நீங்கள் நேரில் ஒன்றாக இருக்க முடியாவிட்டாலும் கூட, மற்றவர்களுடன் மேம்பட்ட உண்மையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்; நிஜ உலகில் உங்களால் நேரடியாகச் செய்ய முடியாத செயல்களை ஒன்றாகச் செய்ய முடியும்" என்று நிறுவனம் கூறுகிறது.

"இது ஓர் அறையின் மூலையில் அமர்ந்திருக்கும் மெய்நிகர் ஹெட்செட்டில் இருக்கும் ஓர் அம்சமாக இருக்கப்போவதில்லை. இது பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும், செயல்படுத்தப்படும் அம்சங்களின் தொகுப்பாக இருக்கும். சாதனங்கள் மேம்பட்டவையாக மாறும்" என்கிறார் "எக்ஸ்பொனென்சியல்" என்று புத்தகத்தின் ஆசிரியர் அஸீம் அசார்.

இது நினைத்தபடி செயல்படுமா?

"ஸ்மார்ட்ஃபோன்களுக்குப் பிறகு வருங்காலத்தில் ஏதாவது இருக்குமென்றால், அதற்கு ஃபேஸ்புக் உரிமையாளராக இருக்க விரும்புகிறது, வாடகைதாரராக அல்ல."

ஆனால் மெட்டாவெர்ஸை ரியல் எஸ்டேட் போல் எடுத்துக் கொள்ளலாமா?

இதைக் கொண்டு நாம் உண்மையில் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்விக்கு அசார் பதிலளிக்கிறார். "விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி ஆகிய தொழில்நுட்பங்களின் முழுமையான மற்ற அனைத்தையும்விட மேம்பட்ட பயன்பாட்டை நாம் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்" என்கிறார் அவர்.

அது வெற்றியடைந்தால், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை மாற்றுவதற்குப் பதிலாக, மெட்டாவர்ஸ் அதனுடன் இணையாகவே பயணிக்கும்.

"எஸ்எம்எஸ் அனுப்புவது பிரபலமாகி சுமார் இருபது ஆண்டுகள் ஆகியிருக்கலாம். இப்போது பல மேம்பட்ட பல வழிகள் வந்துவிட்டன. ஆனால் இன்னும் பலர் அதை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்."

இவையெல்லாம் எப்போது நடக்கும்?

"மெட்டா" ஏற்கனவே விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் தயாரிப்பாளரான Oculus- ஐ வாங்கிவிட்டது.

கடந்த ஆண்டு இரண்டு மெட்டாவர்ஸ் திட்டங்களின் சோதனை பதிப்புகளை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. நண்பர்களை மெய்நிகர் முறையில் சந்திக்க வாய்ப்பு வழங்கும் ஹொரைசன் வேர்ல்ட், அலுவலக ரீதியான மெய்நிகர் சந்திப்புகளை உருவாக்கும் ஹொரைசன் வொர்க்ரூம்ஸ் ஆகியவை இதன் பயன்பாடுகள்.

ஃபேஸ்புக் கனெக்ட் நிகழ்வில் "ப்ராஜெக்ட் கேம்ப்ரியா" என்று அழைக்கப்படும் புதிய உயர்நிலை ஹெட்செட்டை பற்றிய தகவலை சக்கர்பெர்க் கூறினார்.

மெட்டா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தில் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் பயனை முழுமையாக உணர இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்று மெட்டா கூறுகிறது.

இதை செயல்படுத்த பில்லியன் கணக்கான டாலர்களை மெட்டா நிறுவனம் செலவு செய்ய இருக்கிறது. இந்த திட்டத்தில் பணியாற்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் 10,000 பேரை பணியமர்த்துவதாகவும் அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

மெட்டாவர்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?

ஃபேஸ்புக் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இப்படியொரு சூழலில் மார்க் சக்கர்பெர்க் உருவாக்கும் ஒரு நிழல் உலகத்தை மக்கள் நம்புவார்களா?

"உங்கள் உடல் மொழி, உங்கள் உடலியல் மூலமான பதில்கள், நீங்கள் யாருடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது" ஆகியவற்றின் அடிப்படையில் குறிவைத்து விளம்பரங்கள் அனுப்பப்படலாம் என்று கார்டியன் கூறுகிறது.

"நம்பிக்கை இல்லாததால், மெட்டாவின் மெட்டாவர்ஸ் திட்டங்கள் ஏற்கனவே ஆபத்தில் உள்ளன," என்கிறார் ஆய்வு நிறுவனமான ஃபாரெஸ்டரின் ஆய்வு இயக்குநர் மைக் புரோல்க்ஸ்.

சக்கர்பெர்க்கின் மெட்டா சகாவும் பிரிட்டனின் முன்னாள் துணைப் பிரதமரும் நிக் கிளெக் ஆகியோர் இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய முயன்றிருக்கின்றனர்.

ஒழுங்குமுறையைும் தொழில்நுட்பத்தை சரியாகவும் பெறுவதற்கு பல ஆண்டுகள் இருப்பதாக கிளெக் குறிப்பிட்டார். ஆனால் "தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவை முதல் நாளிலிருந்தே மெட்டாவெர்ஸில் கட்டமைக்கப்பட வேண்டும்." என்கிறார் சக்கர்பெர்க்.

"வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் மட்டுமே ஃபேஸ்புக் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம் " என்று முறைகேடுகளை அம்பலப்படுத்தும் பிரான்சிஸ் ஹவ்ஜென் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் இதற்குப் பதிலளித்திருக்கிறது. அதிகபட்சமான நபர்களுக்கு நேர்மறை அனுபவங்களை வழங்குவதைத் தவிர வேறு எந்த வகையில் வணிக ரீதியாகவோ, நெறிமுறைகளைக் கடந்தோ செயல்படவில்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/science-59122068

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.