Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்!

எஸ்.அப்துல் மஜீத்

எழுத்தும், வாசிப்பும் வாழ்வதற்கான பிடிமானத்தை, வாழ்க்கைக்கான அர்த்தத்தை, நோக்கத்தை வழங்கக் கூடியவை. அவற்றைத் தனித்த ஒரு அனுபவமாகவே உலகளாவிய இலக்கியர்கள், எழுத்தாளர்கள் முன்வைக்கிறார்கள்.

எழுத்தாளர் போர்ஹே, புத்தகங்களைத் தனிப் பிரபஞ்சமாகவே பார்க்கிறார்; எழுத்துக்கு நிகரான ஒரு செயல்பாடாகவே வாசிப்பையும் அவர் முன்வைக்கிறார். இடாலோ கால்வினா மரணத்திலிருந்து தப்பிக்கும் முயற்சிதான் எழுத்து என்கிறார். சினுவா அச்சபே, உலகுக்கு நம்பிக்கை அளிப்பதையே எழுத்தாளனின் கடமையாகப் பார்க்கிறார். நபொகோவ் எழுத்தை மந்திரம் என்கிறார். புதிதாக எழுத வருபவர்களுக்கும் சரி, எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் சரி; தங்களுக்கென்று தனித்த ஓர் எழுத்துமுறையை உருவாக்கிக்கொள்ளும் வரையில், அதன் செயல்பாடு தொடர்பில் குழப்பமும், நம்பிக்கையின்மையும் ஏற்படுவது இயல்பு.

தற்போது உலகம் கொண்டாடும் எழுத்தாளர்கள் அந்தத் தத்தளிப்பை எதிர்கொள்ளாமலா இருந்திருப்பார்கள்? எழுதுவது குறித்து, எழுத்துச் செயல்பாடு குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கலாம்!

ஜார்ஜ் ஆர்வல் (George Orwell):

spacer.png

என்னைப் பொருத்தவரையில் எழுதுவதற்கு நான்கு விஷயங்கள் துணைபுரிகின்றன. அது ஒவ்வொரு எழுத்தாளருக்கும், அவரவர் வாழும் இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும். அவை:

1. ஈகோ: புத்திசாலியாக இருக்க விழைவது, தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என எண்ணுவது, தான் இறந்த பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என நினைப்பது, சிறுவயதில் தாழ்த்தியவர்கள் முன் உயர்ந்து வாழ நினைப்பது… இப்படி! எழுத்தாளர்கள் மட்டுமில்லாது அறிவியலர்கள், கலைஞர்கள், அரசியலர்கள், வழக்குரைஞர்கள், படை வீரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடமும் இத்தகைய தன்மையைக் காணலாம்.

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நாம் நினைப்பதுபோல் கடுமையான சுயநலர்கள் அல்ல. 30 வயது ஆனவுடனேயே அவர்கள் தனிமனிதர் எனும் உணர்வை மெல்ல இழக்கலாகிறார்கள். பிறருக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். கடின உழைப்பில் மூழ்குகிறார்கள். மனிதர்களில் ஆசீர்வதிக்கப்பட்ட சிலர் உள்ளனர். அவர்கள்தான் வாழ்வின் கடைசி வரை, தங்கள் வாழ்க்கையைத் தங்களுக்காகத் துணிச்சலோடு வாழ்வார்கள். எழுத்தாளர்கள் இந்த வகையில் அடங்குவர். இதில் தீவிர எழுத்தாளர்கள், பொருளீட்டுவதில் அதிக ஆர்வமில்லாதவர்களாகவும், அதிக தன்முனைப்போடும் செயல்படுவார்கள்.

2. அழகியலில் மீதான ஆர்வம்: புற உலகின் அழகியல் மீதான ஆர்வம், வார்த்தைகள் மற்றும் அவற்றின் சரியான ஒழுங்கமைவு, நல்ல உரைநடையின் தன்மையில் அல்லது நல்ல கதையின் தாளத்தினால் உண்டாகும் மகிழ்ச்சி, தவறவிடக் கூடாத மதிப்புமிக்க ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவது எனச் சொல்லலாம். நிறைய எழுத்தாளர்களுக்கு அழகியல் நோக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. துண்டுப் பிரசுரம் எழுதுபவர்கள் அல்லது பாடப்புத்தகங்கள் எழுதுபவர்கள்கூட அழகியல் உணர்வோடு இருக்கிறார்கள். எந்தப் புத்தகமும் அழகியல் நோக்கத்திலிருந்து விடுபட்டது இல்லை.

3. வரலாறு மீதான தேட்டம்: விஷயங்களை அதன் தன்மையிலேயே காண்பது, விஷயங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது, அதைப் பிற்கால சந்ததியினருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம்.

4. அரசியல் நோக்கம்: - அரசியல் என்ற வார்த்தையை நான் பரந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன். உலகத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்த வேண்டும் என்ற விருப்பம், சமுதாயத்தைப் பற்றிய சிந்தனையை மாற்ற முனைதல். உண்மையில், எந்தப் புத்தகமும் அரசியல் சார்பிலிருந்து விடுபட்டிருப்பது இல்லை. கலைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்ற கருத்தே ஓர் அரசியல் அணுகுமுறைதான்!

ஜோர்ஜ் லூயி போர்ஹே (Jorge Luis Borges):

spacer.png

நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏதோவொரு மர்மமான, தெளிவற்ற வழியில் நான் இலக்கியத்துக்காக விதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். ஆனால், ஆரம்பத்தில் நான் எதை உணரவில்லை என்றால், வாசகனாக இருப்பதைத் தவிர, எழுத்தாளராகவும் ஆவேன் என்பதைத்தான். ஒன்றுக்கு மற்றொன்று சளைத்தது இல்லை.

எல்லா இலக்கியங்களும் அடிப்படையில் உளவியல் சார்ந்தவை என்று நினைக்கிறேன். நான் இலக்கியம் தொடர்பான கல்விப்புலக் கோட்பாடுகளை நம்பவில்லை. எழுத்தாளரையே நம்புகிறேன்.

சாத்தியமிக்க எல்லா வகை இலக்கியப் பிழைகளையும் நான் செய்திருக்கிறேன். அதுவே, எதோவொரு நாளில் என்னை வெற்றியடையச் செய்யும் என்று நினைக்கிறேன். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெளிவான முறையில், அலங்காரமான முறையில் எழுதும் நிலையை அடைய நான் எழுபது வயதை எட்டியிருக்க வேண்டும். ஒருவர் தவறுசெய்யும்போதெல்லாம் அவர் தவறுதான் செய்கிறார் என்று அவருக்குத் தெரியும். இருந்தும் அவர் அதைச் செய்கிறார். எவரும் தன்னுடைய நடத்தையை முன்மாதிரியான ஒன்று என்று நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த உண்மை இலக்கியத்துக்கும் பொருந்தும்.

மிலன் குந்தேரா (Milan Kundera):

spacer.png

அன்னா கரீனா நாவலின் முதல் வரைவில் டால்ஸ்டாய், அன்னாவைப் பரிவு இல்லாத பெண்ணாகவும், அவளுக்கு ஏற்பட்ட துயர முடிவுக்கு அவள் தகுதியானவள்தான் என்பதுபோலும், அவளுக்கு அது நியாயமான முடிவு என்பதாகவும் கதையை எழுதினார். ஆனால், இறுதி வடிவில் நாவல் வேறொன்றாக மாறியது. இடைப்பட்டக் காலத்தில் டால்ஸ்டாயின் அறரீதியிலான பார்வை மாறியிருக்கும், அதனால் நாவல் வேறொன்றாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. மாறாக, நாவலை எழுதும் செயல்பாட்டில், கதையிலிருந்து உருவாகிவரும் ஒரு குரலுக்கு அவர் செவி மடுத்திருப்பார் என்றே நினைக்கிறேன். நான் அதை எழுத்தாளருக்கு அந்த நாவல் அளிக்கும் ஞானம் என்று குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு உண்மையான நாவலாசிரியனும் அந்தக் குரலுக்கு செவிமடுப்பான். அதனால்தான் பெரும் படைப்புகள் அதை எழுதிய ஆசிரியனைவிட சற்றுக் கூடுதல் அறிவார்ந்ததாக இருக்கிறது. தான் எழுதும் நாவலைவிட அதிக அறிவு கொண்டவனாக ஒரு நாவலாசிரியன் இருப்பான் என்றால், அவன் வேறு எதாவது வேலைக்குத்தான் செல்ல வேண்டும். ஒட்டுமொத்தத்தில் நாவல் உண்மையை அல்ல, மனித இருப்பின் சாத்தியத்தை ஆராய்கிறது.

இடாலோ கால்வினோ (Italo Calvino):

spacer.png

மரணம் கடிகாரத்தில் ஒளிந்திருக்கிறது. உலகில் ஒவ்வொரு கருவியும் மரணத்திலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்கே பயன்படுகின்றன. தவிர்க்கவே முடியாத, இரண்டு விதிக்கப்பட்ட புள்ளிகளை ஒரு நேர்கோட்டால் இணைக்கும்போது அது அந்தப் பயணத்தைத் துரிதமாக்கிவிடுமென்றால், சுற்றுப்பாதை அந்தப் பயணத்தைத் தாமதமாக்கும். அந்தச் சுற்றுப்பாதை சிக்கலானதாக இருந்து நம் வழித்தடங்களை மறைக்கக்கூடியதாக இருந்தால் - யாருக்குத் தெரியும்; ஒருவேளை மரணத்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம், ஒருவேளை காலம் அதன் பாதையைத் தொலைத்துவிடக்கூடும், ஒருவேளை நாம் மறைவிடங்களில் ஒளிந்தபடியே இருக்கலாம். ஓர் எழுத்தாளராக ஆரம்பித்திலிருந்தே என்னுடைய இலக்கு, மனவெளியில் நிகழும் வெளிச்சப் பொறிகளை பின்தொடர்வதுதான். அவை காலம் மற்றும் வெளியில் உள்ள இருவேறு புள்ளிகளை இணைக்கும்.

விளாதிமிர் நபொகோவ் (Vladimir Nabokov):

spacer.png

ஓர் எழுத்தாளனை மூன்று விதங்களில் அணுக முடியும். கதைசொல்லி, ஆசிரியர், மாயவியர். பெரும் படைப்பாளி இந்த மூன்றையும் கொண்டவனாக இருப்பான். எனினும், மாயவியரே அவரிடம் அதிகம் வெளிப்படுவார். அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக மாற்றுகிறது.

கதைசொல்லியிடம் நாம் பொழுதுபோக்கை, வியப்பூட்டுதலை, உணர்ச்சியை, உற்சாகமான ஒரு பயணத்தை எதிர்பார்க்கிறோம். எழுத்தாளனிடம் ஆசிரியனைத் தேடுபவர்கள், அவனிடம் பிரச்சாரகர், ஒழுக்கவியர், தீர்க்கதரிசியை எதிர்பார்ப்பார்கள். அற விழுமியங்களுக்காகப் பொது விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் நாம் ஓர் எழுத்தாளனிடம் ஆசிரியனைத் தேடுவோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலானது, ஓர் எழுத்தாளன் மாயவியராக இருப்பதுதான். அத்தகைய எழுத்தாளரின் மேதமையையும் தனித்துவத்தையும் அவரது படைப்புகளின் பாணியையும் நாம் உணர முயற்சிக்கையில் உண்மையான கலை உணர்வை அடைகிறோம். அந்த மாயத்தில் மூழ்க விரும்பும் வாசகன், புத்தகத்தை இதயத்தாலோ, மூளையாலோ அல்ல தண்டுவடத்தால் படிப்பான். அப்போது வாசிப்பு இன்பமும், அறிவின்பமும் நம்முள் கிளர்ந்தெழ, எழுத்தாளன் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு கட்டும் கோட்டையானது பளபளக்கும் கண்ணாடி மாளிகையாக மாறுவதைத் தரிசிப்போம்.

சினுவா அச்சபே (Chinua Achebe):

spacer.png

துயரக் கதைகளை உலகிற்கு சொல்லத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். போதுமான அளவு துயரக் கதைகள் இருக்கின்றன. எழுத்தாளருக்கென்று கடமை இருக்குமென்றால், அது உலகிற்கு நம்பிக்கையை - முட்டாள்த்தனமான, குருட்டுத்தனமான நம்பிக்கையை அல்ல - உலகம் நன்றாக இல்லைதான், ஆனால் அதை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். சும்மா உட்கார்ந்துகொண்டு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று எதிர்பார்க்காமல், அந்த நல்லதை நிகழ்த்த நாம் செயலாற்ற வேண்டும். அதன் பொருட்டே நான் என்னை ஒரு எழுத்தாளனாக நினைக்கிறேன்.

நல்ல கதைகள் நம்மைக் கவரும். நல்ல கதைகள் அறத்தை வலியுறுத்தும் கதைகளாக இருக்கும். நல்ல கதையென்று கூறப்படும் எதிலும் நான் அறமற்ற தன்மையைக் கண்டதில்லை. நல்ல கதைகளை நோக்கித் தூண்டும் ஏதோ ஒன்று நம்மிடம் இருப்பதாக நினைக்கிறேன். அத்தகைய கதைகளை உருவாக்குபவர்கள் இருந்தால், நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்.

நம்முடைய செயல்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது இல்லையென்றால், நாம் தூங்கிக்கொண்டும் குடித்துக்கொண்டும் மரணத்தை எதிர்நோக்கிபடி வாழ நேரிடும். ஆனால், நாம் அப்படி இருக்க விரும்பவில்லை. நாம் போராட வேண்டும் என்று ஏதோ ஒன்று நம்மை உந்துகிறது. நாம் ஏன் போராட வேண்டும் என்று நமக்குத் தெரியாது. ஆனால், போராடுகிறோம். ஏனென்றால் சும்மா உக்கார்ந்துகொண்டு பேரழிவுக்காகக் காத்திருப்பதைவிட, போராடுவது சிறந்தது என்று நினைக்கிறோம். அதைத்தான் வாழ்க்கைக்கான அர்த்தமாகப் பார்க்கிறேன். எனில், அந்தப் போராட்டத்தின் கதையை நாம் அடுத்தத் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும். ஆக, நம்மிடம் போராட்டமும், அது தொடர்பான கதையும் இருக்கின்றன. அவைதான் என் வாழ்வுக்கான அர்த்தமாக இருக்கின்றன.

ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin):

spacer.png

நீங்கள் உண்மையில் எழுத்தாளனாக ஆகப்போகிறீர்கள் என்றால், உங்களை எவராலும் தடுக்க முடியாது. அதேபோல் நீங்கள் எழுத்தாளனாக ஆகப்போவதில்லையென்றால், யாராலும் உங்களுக்கு உதவிசெய்யவும் முடியாது. உங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் உங்களுக்குத் தேவைப்படுவது, எழுதுவதற்குக் கடின உழைப்புத் தேவை என்று எவராவது உங்களிடம் தெரிவிப்பது மட்டும்தான்.

என்னைப் பொருத்தவரையில் எழுத்து என்பது, நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத, கண்டடைய விரும்பாத ஒன்றை நோக்கியப் பயணம்தான்.

எளிமை. அதுதான் உலகத்தின் மிகவும் கடினமான விசயம். அச்சுறுத்தும் விசயமும்கூட. உங்களுடைய அனைத்து வேடங்களையும் நீங்கள் கழற்ற வேண்டும். அவற்றில் சில உங்களிடம் இருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. எலும்பைப் போல் சுத்தமாக இருக்க வேண்டும் உங்களுடைய வார்த்தைகள்.

வில்லியம் ஃபாக்னர் (William Faulkner):

spacer.png

என் கையில் கிடைக்கும் அனைத்தையும், எந்த ஒரு முன் தீர்மானமும் இல்லாமல் நான் வாசிப்பேன். அப்படி வாசித்ததுதான் என்னுள் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அதுதான் என் எழுத்துகளில் வெளிப்படுகின்றன. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். அவன் படிப்பவை மட்டுமல்ல, அவன் கேட்கும் இசை, அவன் பார்க்கும் படங்கள் என ஓர் எழுத்தாளன் அனுபவிக்கும் எந்த அனுபவமும் அவனது படைப்புகளில் தாக்கம் செலுத்தவே செய்யும்.

வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள் எல்லாவற்றையும் - குப்பை, கிளாசிக், நல்லது, கெட்டது என எல்லாத்தையும் - வாசியுங்கள். தச்சன் தொழில் கற்றுக்கொள்வது போலத்தான் அது. வாசியுங்கள். அது உங்களுக்குள் ஊடுறுவும். பிறகு எழுத ஆரம்பியுங்கள். அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே கண்டறிவீர்கள். நன்றாக இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுங்கள்.

எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway):

spacer.png

ஒரே நேரத்தில் நிறைய எழுதக் கூடாது என்பதுதான் எழுதுவது குறித்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். ஒரே நாளில் எல்லாவற்றையும் எழுதித் தீர்த்துவிடாதீர்கள். மறுநாளுக்கு சற்று மீதம் வைத்திருங்கள். எப்போது நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். நன்றாக எழுதிக் கொண்டிருக்கும்போது, சுவாரஸ்யமான இடத்தை வந்தடையும்போது, அடுத்து என்ன வரப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியும்போது எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். அதன் பிறகு அதைப் பற்றி சிந்திக்கக் கூடாது. உங்களுடைய ஆழ்மனம் அந்த வேலையைச் செய்துகொள்ளும்.

நல்ல தூக்கத்துக்குப் பிறகு மறுநாள் காலையில் நீங்கள் புத்துணர்வுடன் இருக்கும்போது, முந்தைய நாள் எழுதியதை திருத்தி எழுதுங்கள். முந்தைய நாள் நிறுத்திய இடத்துக்கு வந்தபிறகு அங்கிருந்து புதிதாக எழுதத் தொடங்குங்கள். அடுத்த உச்சத்தை அடையும்போது நிறுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் உங்கள் நாவலை எழுதுகையில் அதன் ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யமானதாக இருக்கும். நீங்கள் எந்த இடத்திலும் தடுமாறி நிற்கமாட்டீர்கள். எழுதுவதே சுவாரஸ்யமன செயல்பாடாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் எழுதியதைத் திருத்தி, தேவையற்றதைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். நீங்கள் எவற்றையெல்லாம் வேண்டாம் என்று தூக்கிப் போடுகிறீர்களோ அதன் மூலமே நீங்கள் நன்றாகதான் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் தூக்கி எறியும் பகுதி, வேறு ஒருவருக்கு சுவாரஸ்யமான ஒன்றாக தோன்றும்பட்சத்தில் நீங்கள் நன்றாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

எழுதுவதற்கு நிறைய இயந்திரத்தனமான உழைப்பைப் போட வேண்டி இருப்பதை நினைத்து சோர்வடைய வேண்டாம். வேறுவழியில்லை. அது அப்படித்தான்.  ‘எ ஃபேர்வல் டு ஆர்ம்ஸ்’ (A Farewell to Arms) நாவலை நான் குறைந்தது ஐம்பது முறை திருத்தி எழுதினேன். முதல் வரைவு என்பது எப்போதும் குப்பையாகத்தான் இருக்கும்.

உண்மையில் உங்களிடம் எழுத்துத் திறமை ஒளிந்திருக்குமெனில், அது என்றாவது ஒருநாள் வெளிப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், அது உங்களிடம் வெளிப்படும் வரையில் விடாது தொடர்ச்சியாக எழுத வேண்டும். அது கடினமானதுதான். நான் பத்து கதைகள் எழுதுகிறேன் என்றால் அதில் ஒரு கதைதான் நன்றாக இருக்கும். மீதமுள்ள ஒன்பது கதைகளை நான் தூரத்தான் வீசுகிறேன்.

நீங்கள் எழுத ஆரம்பிக்கையில் எல்லாரும் உங்களைத் தட்டிக்கொடுப்பார்கள். நீங்கள் நன்றாக எழுதத் தொடங்கியதும் உங்களை அழிக்க முயல்வார்கள். நீங்கள் தொடர்ந்து மேலே இருக்க வேண்டுமெம் என்றால், நல்லப் படைப்புகளைத் தருவதைத் தவிர வேறு வழியில்லை.

ஷைதி ஸ்மித் (Zadie Smith):

spacer.png

ஆரம்பக் காலகட்டத்திலே எனக்குத் தெரிந்துவிட்டது, இரு வருடங்களுக்கு ஒரு நாவல் எழுதும் நபராக நான் இருக்கப்போவதில்லை என்று. ஒரு நாவலை எழுத வேண்டும் என்றால், அதற்கான நிர்பந்தத்தை நான் உணர வேண்டும். ஆகையால், எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றாத வரையில், நான் எழுத ஆரம்பிப்பதில்லை.

ஒரு நாவலை எழுத ஆரம்பிப்பது வலி மிகுந்தது. அதை முடிப்பது சித்தரவதையானது. ஆனால், இடைப்பட்ட வெளியில் ஒவ்வொரு நாளும் நீங்கள் நிறைய எழுதுவீர்கள். நீங்கள் ஆக்கப்பூர்வமாக உணர்வீர்கள்; முன்னகர்ந்து செல்வீர்கள்... நீங்கள் ஒரு நாவலை எழுதி முடிக்கும்போது, உங்களுக்கு பணம் முன்னுரிமையாக இல்லையென்றால், உங்கள் நாவலை விற்றாக வேண்டிய தேவை உங்களுக்கு இல்லையென்றால் தாமதிக்காமல் அதை உங்கள் மேஜை டிராயரில் வைத்துப் பூட்டிவிடுங்கள். எவ்வளவு காலம் முடியுமே அவ்வளவு காலத்துக்கு. ஒரு வருடத்துக்கு மேல் சென்றால் சிறப்பு. மூன்று மாதங்கள் தாக்குப் பிடித்தாலும் பாதகமில்லை. அதன் பிறகு உங்கள் படைப்பை நீங்கள் ஒரு எழுத்தாளராக இல்லாமல் வாசகராகப் படித்துப்பார்க்க வேண்டும்.

நீல் கெய்மேன்  (Neil Gaiman):

spacer.png

முழுமையை அடைதல் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் சாத்தியம் இல்லை. முழுமையை அடைய வேண்டும் என்பது ஒரு லட்சியம். அது நாம் நோக்கிச் செல்லும் ஒரு மலை. அது மலை மீது அமைந்திருக்கும் நாம் சென்றடைய விரும்பும் ஒரு பளபளப்பான நகரம். ஆனால், நாம் செய்யும் எவற்றிலும் சிறிதளவாவது தவறுகளும் பிழைகளும் இருக்கும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதன் பொருட்டு நாம் முடங்கிவிடக் கூடாது. நீங்கள் எதையாவது எழுதினால்தான் அதனை மேம்படுத்த முடியும். ஒன்றுமே எழுதாவிட்டால் என்ன செய்யவது? சரியாக வராத ஒரு சிறுகதையை மாற்றி எழுத முடியும். சரியாக வராத ஒரு வசனத்தை திருத்தி அமைக்க முடியும். ஆனால், ஒன்றுமில்லாத வெற்றுக் காதிகத்தை நீங்கள் சரி செய்ய முடியாது.  எனவே, நீங்கள் தைரியமாக எழுத ஆரம்பியுங்கள். அந்த செயல்பாடே உங்களை நகர்த்திச் செல்லும்.

 சார்லஸ் புக்கோவ்ஸ்கி (Charles Bukowski)

spacer.png

ஆகவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள்...

எல்லாவற்றையும் மீறி அது உங்களிடமிருந்து 
வெடித்து வெளிவரவில்லையென்றால் 
அதைச் செய்யாதீர்கள் 
கேட்காமலேயே அது 
உங்கள் இதயத்திலிருந்து, உங்கள் மனதிலிருந்து, 
உங்கள் நாவிலிருந்து, உங்கள் அடியாளத்திலிருந்து வரவில்லையென்றால் 
அதைச் செய்யாதீர்கள் 
மணிக்கணக்காக உங்கள் கணினித் திரையை 
வெறித்துக்கொண்டோ 
அல்லது உங்கள் தட்டச்சு இயந்திரம் முன் 
குனிந்தமர்ந்தோ 
வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தால் 
அதைச் செய்யாதீர்கள் 
பணத்துக்காகவோ, புகழுக்காவோ என்றால் 
அதைச் செய்யாதீர்கள் 
பெண்களை அடைய வேண்டும் என்பதற்காக என்றால் 
அதைச் செய்யாதீர்கள் 
பலமுறை திருத்தி எழுத வேண்டுமெனில் 
அதைச் செய்யாதீர்கள் 
அதைச் சிந்திப்பதே பெரும் பாரமாக இருக்குமெனில் 
அதைச் செய்யாதீர்கள் 
வேறொருவரைப் போல எழுத முயல்கிறீர்கள் என்றால் 
அதை மறந்துவிடுங்கள் 
அது உங்களிடமிருந்து கர்ஜித்து வெளிவரக் காத்திருக்க வேண்டுமெனில் 
பொறுமையுடன் காத்திருங்கள் 
அது உங்களிடமிருந்து ஒருபோதும் கர்ஜித்து வெளிவாரதெனில் 
வேறு எதாவது வேலையைச் செய்யுங்கள் 
அதை முதலில் 
உங்கள் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ அல்லது காதலனிடமோ 
அல்லது உங்கள் பெற்றோரிடமோ அல்லது வேறு எவரிடமோ 
படித்துக்காட்ட வேண்டியிருப்பின் 
நீங்கள் இன்னும் அதற்கு தயாராகவில்லை 
வேறு எழுத்தாளர்களைப் போல இருக்காதீர்கள் 
தங்களை எழுத்தாளர் என்று கூறிக்கொள்ளும் 
ஆயிரமாயிரம் நபர்களைப் போல் இருக்காதீர்கள் 
மந்தமாக, ஆர்வமற்று, பாசாங்காக இருக்காதீர்கள் 
சுயமோகத்தில் திளைக்காதீர்கள் 
உங்களைப் போன்றவர்களால் 
உலகில் உள்ள நூலகங்கள் சோம்பித் தூங்கின்றன 
அந்த பட்டியலில் சேராதீர்கள் 
அந்த வேலையைச் செய்யாதீர்கள் 
ஒரு ராக்கெட்டைப் போல் விசையுடன் உங்களிடமிருந்து 
அது வெளிவாந்தாலன்றி, 
சும்மா இருப்பது உங்களை பைத்திய நிலைக்கோ அல்லது தற்கொலைக்கோ அல்லது கொலைக்கோ 
இட்டுச் சென்றாலன்றி 
அதைச் செய்யாதீர்கள் 
உங்கள் உள்ளே இருக்கும் சூரியன் 
உங்கள் அடிவயிற்றை எரித்தாலன்றி 
அதைச் செய்யாதீர்கள் 
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவரெனில் 
சரியான நேரத்தில் 
அது தன்னைத்தானே நிகழ்த்திக்கொள்ளும் 
நீங்கள் சாகும் வரையில் 
அல்லது அது உங்களில் சாகும் வரையில் 
வேறேதும் வழி இல்லை 
ஒருபோதும் வேறு வழி இருந்ததில்லை!

https://www.arunchol.com/abdul-majid-article-for-how-to-write-writers-view-arunchol

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் ஒரு எழுத்தாளராக இல்லை.......!  😁

நன்றி கிருபன்......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.