Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: இதுவரை 21 பேர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பாகிஸ்தான் பனிப்பொழிவில் சிக்கிய பயணிகள்

பட மூலாதாரம்,ISPR

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.

 

பனிப்பொழிவு

பட மூலாதாரம்,PUNJAB POLICE, PAKISTAN

தலைநகர் இஸ்லமாபாத்திற்கு வடக்கே அமைந்துள்ள மலை நகரம் தான், முர்ரே. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவைக் காண கடந்த சில நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கார்கள் முர்ரேக்குள் நுழைந்தன. இதனால், நகருக்குள்ளும் வெளியே செல்லும் சாலைகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 
பனிப்பொழிவு

பட மூலாதாரம்,PUNJAB POLICE, PAKISTAN

குறைந்தது ஆறு பேர் தங்கள் கார்களில் உறைந்து இறந்தனர். ஆனால் மற்றவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். புகையை உள்ளிழுத்த பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

தற்போது அந்தப் பகுதி பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அங்கிருந்து விலகியே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

"மக்கள் பயங்கரமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்," என்று கடுமையான பனிப்பொழிவுக்கு நடுவே நகரத்தில் சிக்கியிருக்கும், உஸ்மான் அப்பாசி என்ற சுற்றுலாப் பயணி ஏ.எஃப்.பி செய்தியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

 
பனிப்பொழிவு

பட மூலாதாரம்,PUNJAB POLICE, PAKISTAN

"சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல, உள்ளூர் மக்களும் எரிவாயு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்," என்று அவர் கூறியுள்ளார்.

"15 முதல் 20 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் முர்ரேயில் குவிந்தனர். இதுவொரு பெரிய நெருக்கடியை உருவாக்கியது," என்று ரஷீத் காணொளி தகவலில் கூறினார்.

பிரதமர் இம்ரான் கான், சுற்றுலாப் பயணிகளின் இறப்பு குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

"இதுபோன்ற துயரங்களை தடுப்பதை உறுதி செய்வதற்காக, விசாரணைக்கு உத்தரவிட்டு வலுவான விதிமுறைகளை வகுத்துள்ளேன்," என்று இம்ரான் கான் ஒரு டிவீட்டில் கூறியுள்ளார்.

 
பாகிஸ்தான் பனிப்பொழிவில் சிக்கிய பயணிகள்

பட மூலாதாரம்,ISPR

முர்ரே 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் காலனித்துவ துருப்புகளுக்கான மருத்துவ தளமாகக் கட்டப்பட்டது.

என்ன நடந்தது?

"மலைகளின் ராணி," என்று அழைக்கப்படும், மலைப்பகுதி நகரமான முர்ரே குளிர்காலத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும். நூற்றுக்கணக்கான வாகனங்களால் அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலைகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் பனிப்பொழிவின் கீழ் சாலையில் இரவைக் கழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு இஸ்லமாபாத்-முர்ரே நெடுஞ்சாலையை மூடியுள்ளது. அதோடு, முர்ரே மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளது.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் குடிமைப்பணி நிர்வாகத்திற்கு உதவ ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: இதுவரை 21 பேர் உயிரிழப்பு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான்: பனியில் புதைந்த வாகனங்கள்; சாலையில் தவித்து நிற்கும் மக்கள் - தற்போதைய நிலவரம் என்ன?

  • ஹுமைரா கன்வல்
  • பிபிசி உருது செய்தியாளர், இஸ்லாமாபாத்தில் இருந்து
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

 

படக்குறிப்பு,

பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

பாகிஸ்தானின்பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. வாகனங்களின் கண்ணாடிகளைத் தட்டி மக்களின் நிலையை அறிய முயல்கின்றனர். பதில் கிடைக்கவில்லையென்றால், வாகனத்தை உடைத்துத் திறந்து உள்ளே இருப்பவர்களுக்கு உதவும் முயற்சி நடந்துவருகிறது.

இறந்தவர்களில் 10 ஆண்கள், இரண்டுபெண்கள் மற்றும் 10 குழந்தைகள் அடங்குவர் என்று'அவசரகால சேவை' 1122 வெளியிட்டபட்டியல் தெரிவிக்கிறது. முர்ரியின் உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் சிக்கிய பயணிகள் மற்றும் மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முர்ரியில் கடும்பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள்பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். காரில் நீண்டநேரம் அமர்ந்திருந்ததாலும், ஜன்னல்கள் மூடப்பட்டு, ஹீட்டர் ஆன்செய்யப்பட்டதாலும் வாகனத்திற்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, பலசுற்றுலா பயணிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

முர்ரிக்கு செல்லும் எல்லா சாலைகளும் மூடப்பட்டுவிட்டன என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்தார். ஆனால் சாலை மூடப்பட்டிருந்தாலும் இப்போதும் அங்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் முயற்சிக்கின்றனர்.

இஸ்லாமாபாத்திலிருந்து முர்ரிக்கு செல்லும் முக்கியசாலைகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. ஆனால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் முர்ரி செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்

 

பனியிலிருந்து காரை மீட்கும் வீரர்

பட மூலாதாரம்,ISPR/HANDOUT VIA REUTERS

 

படக்குறிப்பு,

பனியிலிருந்து காரை மீட்கும் வீரர்

முர்ரியில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த திடீர் பனிப்பொழிவுக்கு நிர்வாகம் தயாராக இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

காலநிலை விவரங்களை தெரிந்து கொள்ளாமலேயே இவ்வளவு அதிகமான சுற்றுலாப் பயணிகள் முர்ரிக்கு வருவார்கள் என்று நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

"சுற்றுலாப் பயணிகளின் பரிதாப மரணம் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு மற்றும் வானிலை குறித்து தெரியாமல் அதிக அளவில் வந்த சுற்றுலாப் பயணிகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சோகம் நடக்காமல் இருக்க இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது," என்று இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடுமையான போக்குவரத்து நெரிசல்

 

பனிசூழ் சாலையில் வாகனங்கள்

 

படக்குறிப்பு,

பனிசூழ் சாலையில் வாகனங்கள்

"இப்போதும்நிறைய போக்குவரத்து நெரிசல் உள்ளது. குறைந்தது முந்நூறு வாகனங்கள் பதினேழு மைல் தொலைவில் உள்ள சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில்சுமார் 500 வாகனங்கள் நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியில் சிக்கிக் கொண்டுள்ளன," என்று முர்ரியில் வசிக்கும் ஷஃபிக் பிபிசியிடம் கூறினார்.

"சாலைகள் மூடப்பட்டுள்ளது என்று இரவுதான் எங்களுக்குத் தெரியும். சிலர் இரவு 3 மணியிலிருந்தும், சிலர் காலை 5 மணியிலிருந்தும் இங்கு நிற்கிறார்கள்" என்று ஷஃபீக் தெரிவித்தார்.

ஷஃபிக் சனிக்கிழமை அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். "முதல் பாயிண்டில் செரேனா ஹோட்டலுக்கு அருகிலும், இரண்டாவது பாயிண்டில் டோக்ரி செளக்கிலும் சோதனைச்சாவடி உள்ளது. சாலை ஒரு பக்கத்திலிருந்து மூடப்பட்டுள்ளது. செரேனா சௌக் மூடப்பட்டுள்ளது. பாரா காஹுவுக்கு செல்லும் மக்கள்கூட்டம் அதிகமாக உள்ளது."என்று அவர் குறிப்பிட்டார்.

"முர்ரியில் சாலை மூடப்பட்டதாக செய்திகள் வந்தாலும், பாரா காஹுவின் பிரதான முர்ரிசாலையில் பலர் எதிரே வரும் வாகனங்களை நிறுத்து, முர்ரி வருகிறீர்களா என்று கேட்கிறார்கள்," என்கிறார் ஷஃபீக்.

முர்ரியில் வசிக்கும் ஷஃபீக், கரடு முரடான சாலை வழியாக கோடாகலிக்கு அருகிலுள்ள தனது வீட்டை எப்படியோ சென்றடைந்தார்.

'நான் பனி கல்லறையில் புதையுண்டிருந்தேன்'

 

பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

பட மூலாதாரம்,SANIA DAWOOD

 

படக்குறிப்பு,

பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

பிபிசி செய்தியாளர் சஹர் பலோச்சிடம் பேசிய சானியா தாவூத், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை இரவு முர்ரிக்கு புறப்பட்டதாக கூறினார்.

"தற்போது நிலைமை மோசமாகி வருகிறது. ஜிக்கா செளக்கிலிருந்து இருநூறுமீட்டர் தொலைவில் நாங்கள் இருக்கிறோம். கழிவறைக்கு செல்ல நீண்ட வரிசை உள்ளது, மேலும் சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளன. காலையில் நாங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிற்றுண்டி வாங்க நடந்து சென்றோம். ஆனால் அங்கு இப்போது சமையல் கேஸும் குறைவாகவே உள்ளது. சாலைகள் வழுக்குவதால் நடப்பது சிரமம். இனி வண்டியைவிட்டு எங்களால் வெளியே செல்லமுடியாது," என்று அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமை இரவு தனது சொந்த ஊரான பெய்ரூட்டுக்கு சென்று கொண்டிருந்த ரெஹான் அப்பாஸி, முந்தையநாள் மாலை 6 மணி முதல் பனியில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்தார். "இப்போதும் பனியில்சிக்கியுள்ளேன். வாகனங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டது. இங்கு குளிர் அதிகமாக உள்ளது. பனிக்கல்லறையில் புதையுண்டதுபோல காரில் நேரத்தை கடத்தினேன். நல்ல வேளைநான் உயிர்பிழைத்தேன்,"என்றார் அவர்.

பனிப்பொழிவின் போது இதுபோன்ற சூழ்நிலையை தனது வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் தற்போது சன்னிவங்கி இருக்கும் பிரதான நெடுஞ்சாலையில் தான் இருப்பதாகவும், சனிக்கிழமை முதல் தனது கார் கில்ட்னாவுக்கு இரண்டு கிலோமீட்டர் பின்னால் சிக்கியிருப்பதாகவும், முர்ரியில் வசிக்கும் மெஹ்தாப் அப்பாஸி கூறினார்.

"வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு பாடயாவில் இருந்து கிளம்பும் போது பனி பொழிய ஆரம்பித்தது. மதியம் 12 மணிக்கு பனிப்பொழிவு வலுத்தது. நெரிசலில் சிக்கி கில்ட்னாவில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இறங்கி நடக்கஆரம்பித்தேன். காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு நின்றுவிட்டது. இப்போது கொஞ்சம் சூரிய ஒளிவந்துவிட்டது."என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் யாரும் இரவில் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இப்போது நிவாரணப் பணியாளர்கள் வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ முயற்சிக்கின்றனர் என்று மெஹ்தாப் கூறுகிறார்.

 

பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

பட மூலாதாரம்,UMAIR ABBASI

 

படக்குறிப்பு,

பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

"முக்கிய பகுதிகளில் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களுக்குச் செல்வது கடினமாக இருக்கிறது," என்று மெஹ்தாப் கூறுகிறார்.

"இந்த நேரத்தில் இயந்திரங்களை முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் சிக்கல் உள்ளது. ஒரு நெடுஞ்சாலை வாகனம்,சன்னி வங்கியில் சிக்கியுள்ளது. அதற்கு முன்னால் இரண்டு இயந்திரங்கள் சிக்கிக்கொண்டுள்ளன" என்று அவர்கூறினார்.

தற்போது முர்ரியில் மின்சாரம் இல்லை என்றும் சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைத்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள் ஹோட்டல்களிலும், தஃப்தார்-இ-இஸ்லாம் அகாடமியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,"என்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நபர் ஒருவர் பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத்திடம் தெரிவித்தார்.

"நிர்வாகத்தின் முழு கவனமும் இரவு முதல் இந்த சுற்றுலாதலத்தின் மீது இருந்து வருகிறது. கில்ட்னாவின் பெரும்பகுதி காடுகளாகும். நிர்வாகம் சனிக்கிழமை காலை இங்குவந்தது. நானும் இங்குதான் இருக்கிறேன். உள்ளூர்மக்கள் தன்னார்வலர்களாக நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா பயணிகளுக்கு உதவி வருகின்றனர்," என்று அவர் மேலும் கூறினார்.

சில வாகனங்களை தட்டிக் கேட்டாலும் அங்கிருந்து எந்த பதிலும்வரவில்லை என்று முர்ரி சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள குல் ஹசன் என்பவர் தெரிவித்ததாக பத்திரிகையாளர் ஜுபைர் கான் குறிப்பிட்டார்.

 

பனியில் அவதிப்படும் மக்கள்

பட மூலாதாரம்,RESCUE 1122

 

படக்குறிப்பு,

பனியில் அவதிப்படும் மக்கள்

"சில வாகனங்களை தட்டிக் கேட்கிறோம். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதுபோன்ற இரண்டு வாகனங்களை அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்," என்று குல் ஹசன் கூறினார்.

நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள மற்றொருவரான முகமது மொஹ்சின், "உண்மையில் கூறப்படுவதைவிட நிலைமை மோசமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்,"என்றார்.

"சனிக்கிழமை காலை முதல் நிவாரணப் பணியாளர்கள் பயணிகளுக்கு உதவி வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் பனியில் சிக்கியவர்களை வெளியேற்றி வருகின்றனர். நிவாரணப் பணியாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று நான் நினைக்கிறேன். நிவாரணப்பணிகளை மிக வேகமாக விரைவுபடுத்தவேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

'முர்ரியில் இவ்வளவு பேர் இறந்ததை முதல்முறையாகக் கேள்விப்படுகிறோம்'

 

மீட்புப் பணியில் அதிகாரிகள்

பட மூலாதாரம்,KAZIM ABBASI

 

படக்குறிப்பு,

மீட்புப் பணியில் அதிகாரிகள்

முந்தைய தினம் பத்து குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் தடுத்து நிறுத்தியபோதிலும் அவர்கள் காலையில் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் முர்ரியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான காசிம் அப்பாஸி பிபிசியிடம் கூறினார்.

மாலை 5 மணி முதல் மீண்டும் பனிப்பொழிவு தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். "இங்கு ஏற்கனவே ஐந்தடி பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 10 நிமிடங்களில் நடந்து செல்லும் தூரத்தைக்கடக்க தற்போது 2 மணி நேரம் ஆகிறது. காரை ஓட்டிச்செல்லும் பேச்சுக்கே இடமில்லை,"என்றார் அவர்.

"கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். மேலும், முர்ரி வர வேண்டும் என்றால் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை வருமாறு எங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் சுற்றுலாப் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இப்போது கூட மக்கள் சுங்கச்சாவடிகளில் இருந்து நடந்து முர்ரிக்கு வர முயற்சிப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

நிவாரணப் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்ட காசிம், "எந்த ஏஜென்சிகள் வேலை செய்தாலும், அவர்கள் மண்வெட்டி மூலம் வேலை செய்பவர்களைக் கொண்டுவருவதுதான் ஒரே தீர்வு" என்றார்.

"முர்ரியில் பனி பொழியும் போதெல்லாம், மண்வெட்டி மூலமாக நகரத்தை சுத்தம் செய்யும் பணியைச் செய்யும் தெஹ்சில் முனிசிபல் கமிட்டியின் ஆட்கள், நெடுஞ்சாலைத்துறையினருடன் சென்று உறைந்த பனியை அகற்றுவார்கள்,"என்றார் காசிம்.

மூன்று வருடங்களுக்கு முன் இங்கு இதே போன்றதொரு நிலை ஏற்பட்டது. அப்போது நிறைய பனிப்பொழிவு ஏற்பட்டபோதிலும் முர்ரியில் ஒருவர் கூட இறக்கவில்லை என்று காசிம் கூறுகிறார். அப்போது வானிலையை எதிர்கொள்ள முகமைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் கூறினார்.

"முர்ரியில் பனி பெய்யும் போதெல்லாம், சீகா கலி, மால் ரோடு, ஜிபிஓ சௌக், கில்ட்னா, கார்ட் ரோடு (சன்னி பேங்கில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை) ஆகிய இடங்களில் அதன் சொந்த பனி அகற்றும் இயந்திரங்கள் இருந்தன. ஆனால் இந்த முறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. முர்ரியில் பனிப்பொழிவில் இவ்வளவு பேர் இறந்தது இதுவே முதல் முறை," என்று அவர் சொன்னார்.

கடும் பனியில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?

 

மீட்புப் பணியில் அதிகாரிகள்

பட மூலாதாரம்,ISPR/HANDOUT VIA REUTERS

 

படக்குறிப்பு,

மீட்புப் பணியில் அதிகாரிகள்

உலகின் பல நாடுகளில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கு முன்பாகவே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வானிலை மோசமாக இருக்கலாம், எனவே மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மக்களிடம் கூறப்படுகிறது, ஆனால் முர்ரியில் எச்சரிக்கையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பனிப்பொழிவு நிலைமையில் நிர்வாகம் முதலில் சாலைகளை மூடியிருக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் தௌஃபிக் பாஷா மெராஜ், பிபிசி செய்தியாளர் சஹர் பலோச்சிடம் கூறினார்.

பாஷா சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறார். அதை பின்பற்றினால் பனியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மேலும் சேதத்தைத் தவிர்க்கலாம்

- இதுபோன்ற சூழ்நிலை எப்போதாவது ஏற்பட்டால், உங்கள் குழந்தைகள் அல்லது குடும்பத்தினருடன் நீங்கள் வாகனங்களில் சிக்கிக்கொண்டால், உதவி வரும் வரை பெட்ரோல் அல்லது டீசலை சேமிக்க அந்த வாகனங்களை அணைத்துவிடுங்கள்.

- மற்றவரின் உதவியுடன் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்துங்கள். சாலையின் நடுவில் நிறுத்த வேண்டாம். முடிந்தால் வாகனத்தை சூடாக வைத்திருப்பதற்கான ஹீட்டரை இயக்காதீர்கள்.

அதிகம் பேர் இருக்கும் காரில் ஹீட்டரை இயக்கும்போது, இதன் காரணமாக வாகனத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு காரில் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால், மனித உடலின் வெப்பம் மூலமாகவே காரின் உட்புறம் சூடாக இருக்கும்.

-எந்த சூழ்நிலையிலும் உங்கள் காரை விட்டுவிட்டு நடக்கக்கூடாது. ஏனென்றால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு முன்னால் வானிலை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது. சாலையில் தனியாக திறந்த வெளியில் மாட்டிக்கொள்வதை விட, காரின் உள்ளே அமர்ந்திருப்பது மிகச் சிறந்த தீர்வாகும்.

https://www.bbc.com/tamil/global-59927875

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.