Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்

 

உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது. மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த  சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள்.

முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது, அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது. அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது. கொழும்புப் புதினங்கள் அறிய விழைந்த பெரியவர்களின் ஆர்வத்திற்கும் கதி அதேதான். ஓடும் புளியம்பழமும்போல பழகவேண்டுமெனச் சொல்லிக்கொடுத்ததுபோல் அந்தக் குடும்பத்தில் எல்லோரும் விலகி விலகி நடந்துகொண்டார்கள்.

அவருக்கு பையன் பெண்ணாக ஒன்றுவிட்டு ஒன்றாய் ஆறேழு பிள்ளைகள். அயல்வீட்டின் ஒரு குடும்பத்துப் பிள்ளைகளின் தொகையை இவ்வாறு அண்ணளவாகக் குறிப்பிடுதல் வக்கிரமாய் இருந்தாலும், அந்த வருஷத்தில் ஆறாயிருந்த அத்தொகை அடுத்தடுத்த வருஷத்தில் ஏழாகிக்கொண்டிருந்ததில், அண்ணளவான மதிப்பீட்டில் பெரும்பிழை சொல்வதற்கு இல்லை. சராசரி ஆண்டு ஒன்று இரண்டுக்கு அவர் மனைவியும் ஒரு குழந்தைவீதம் அவருக்கு பெற்றுப் போட்டுக்கொண்டே இருந்தாள்.

அவர் அங்கு வந்த சிறிதுகாலத்திலேயே அவர் பெயரை பெருமாளென்று அயல் அறிந்திருந்தும், கொழும்பாரென்றே குறிப்பிட்டு வந்ததில், சிறுவனாயிருந்த துரையனுக்கும், அவர்கள் கொழும்பிலிருந்து வந்திருந்ததாய் அனுமானிக்க முடிந்திருந்தது. அவரை கொழும்பார் அல்லது கொழும்பிலாரென்றும், அவரது மனைவியை கொழும்பார் மனுஷியென்றும், அவர் பிள்ளைகளை கொழும்பார் வீட்டுப் பிள்ளைகளென்றுமே ஊர் அடையாளப்படுத்தி வைத்தது.

பிள்ளைகள் கல்வியில் பிரபலமான வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். படிப்பே அவர்களது மூச்சுப்போல எல்லாம் ஓர் ஒழுங்கில் அமைவாகிக்கொண்டு இருந்தது. அவர்களில் மூன்றாவதான பையன் பரமேஸ்வரன் துரையன் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் சேர்ந்துகொண்டதில் அவனுக்கு ஒரு புளுகமான மனநிலை இருந்திருந்தாலும், நாட்கள் வாரங்கள் செல்லச் செல்ல பரமேஸ்வரனின் படிப்பிலான கெட்டித்தனம் ஆசிரியர்களால் மெச்சப்பட ஆரம்பிக்க, பிடிப்பின்மையாய்ப் போனது.

ஆனால் அண்ணனைவிட உயரமாக, சிவப்பாக, நல்ல வடிவாக வளர்ந்திருந்த பரமேஸ்வரனுக்கு நேரே இளைய தங்கை பவளமலரில் மட்டும் காரணம் புரியாத ஓர் ஈர்ப்பும் பிரியமும் வளர ஆரம்பித்துவிட்டது. கறுப்பெனினும் அழகாகவும், கொழும்பு நாகரிக வாசத்தோடும் இருந்த அவளுக்கு இளைய இரண்டு தங்கைகளும் ‘எடுப்புக் காட்டாமல்’ அவனுடன் அயல் வீட்டுக்காரனென்ற பரிச்சயத்தோடு சிரிக்கவும் கதைக்கவும் செய்தாலும், பவளமலர் மட்டும் அயலானை அந்நியனாகவே கருதி நடந்துகொண்டாள். அதுவே அவள்மீதான ஈர்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்து அவனது படுக்கையில் தூக்கம் வரும்வரையான பொழுதின் கனவுத் தோழியாக ஆக்கிவிட்டது.

பெருமாள் 1958இல் நடந்த இனக்கலவரத்தோடேயே அவ்வூர் வந்திருந்தார். அதுவே காரணத்தைப் பொதுப்புத்திக்குப் புலப்படுத்திவிட்டது. ஆயினும் அவருக்கு வேலையென்னவோ கொழும்பிலேதான் இன்னுமிருந்தது. வெள்ளி மதியம் கொழும்பிலிருந்து ரயிலேறி அன்றிரவே வீடு வந்துசேரும் பெருமாளுக்கு, மறுபடியான பயணம் ஞாயிறு இரவு கொழும்பு மெயிலிலாய் இருக்கும். அவர் ரயில்வேயில் வேலைசெய்வதாக ஊர் அறிந்திருந்தது.  தான் ரயில் என்ஜின் ட்ரைவராக இருப்பதை சிலபேரிடமே சொல்லியிருந்தார். ஆனால் பரமேஸ்வரன் மட்டும் தனது தந்தை ரயில் என்ஜின் ட்றவரென்று பள்ளிக்கூடம் முழுக்க பெருமையாகத் தம்பட்டம் அடித்துத் திரிந்தான். அதுவும் துரையனின் பரமேஸ்வரன் மேலான பிடிப்பின்மைக்கு ஒரு காரணமாக இருக்கமுடியும்.

ஊரில் பல அரசாங்க உத்தியோகத்தர்கள் இருந்தார்கள். சிலர் ஆசிரியர்களாக, இன்னும் சிலர் டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் கிளார்க்குகளாக, சிலர் யாழ்ப்பாணம் கச்சேரியிலேயே வேலை செய்பவர்களாகவும் கூட இருந்தார்கள். ஆனாலும் ரயில் என்ஜின் ட்ரைவராக வேலைசெய்வதென்பது பெரிய விஷயம்தானென்று அவனது நண்பர்கள் பேசுவார்கள். பதினைந்து இருபது பெட்டிகள்கொண்ட அவ்வளவு நீண்ட ரயிலில் பரமேஸ்வரனின் தந்தை ட்ரைவராக வேலைசெய்வதை நினைக்கும்போது, துரையன் அந்த ரயிலே தன்மீது ஊர்ந்தது போல் நசிந்துபோவான்.

ஆனாலும் தந்தையற்ற துரையனுக்கு பெருமாளின் மீது பெரும் மதிப்பு இருந்தது. வீட்டில் அவர் நிற்கிற நாட்களில் அவர் கண்பட எந்தத் தறுகுறும்பும் செய்யாததோடு அம்மாவை எதிர்த்து வாய்காட்டாமலும் இருந்தான்.

காலம் இவ்வாறு நகர்ந்துகொண்டிருக்க அவரின் மேலான அந்த மதிப்பைத் தொடர்ந்தும் தக்கவைக்க முடியாத நிலை தனக்கு ஏற்பட்டுவிடுமோ என்று துரையனுக்கு மனவுளைச்சலாகிப் போனது. பலநேரங்களில் அவன் எண்ணியிருக்கிறான், தனக்கு பாதி விளங்காத பெருமாள் மனைவியின் கொழும்புப் பேச்சை, முழுவிளக்கம் கொண்ட பாவனை காட்டி கொஞ்சம் சிரிப்பிலும் கொஞ்சம் பேச்சிலும் மீதி சைகையிலுமாய்ச் சமாளிதத்தபடி, அந்த வீட்டின் பல விஷயங்களை அறிந்திருந்தும் தன் தாயாரால் எப்படி ஆரம்பத்திலிருந்தது போலவே தொடர்ந்தும் அவளுடனான சங்காத்தத்தை தக்கவைத்திருக்கிறாள் என.

வருஷத்தில் ஒன்றோ இரண்டோ தடவைகள் பெருமாளின் வீடு வரும் கண்டிப் பெரியசாமியும், கொழும்பிலிருந்த பெருமாளுக்கும் கண்டியிலிருக்கும் பெரியசாமிக்குமிடையே ஏற்பட்டிருந்த அந்த அந்நியோன்யமான நட்புக்கு காரணமென்னவாக இருக்குமென அவனை யோசிக்கவைத்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அம்மாவுக்கும் தங்கைக்குமிடையே நடந்த உரையாடலில், விஜயலட்சுமியென அறியப்பட்டிருந்த பெருமாளது மனைவியின் கூப்பன் பெயர் விசாலாட்சியென அறியவந்தபோதும் அவனுள் கேள்விகள் முளைவிட்டன. அவை, தானும் தன் பாடுமாய், அமைதியாய், தன் பேச்சு ஒழுங்கைக்குக்கூட கேட்காதளவு மென்மைப்பட்டவராய் வாழ்ந்த பெருமாளிலிருந்து ஒருவகையான விடுபடுதலை அவனுள் ஏற்படுத்திவிட்டது. நாளடைவில் அது வெறுப்பாய்ப் பரிமளிக்கவும் துவங்கியது. அந்தளவும் அவனது கேள்விகளுக்கான ஐயந்திரிபற்ற பதில்கள் கிடைக்காத நிலையிலேயே.

துரையனும் பள்ளிக் கல்வியின் பின் அரசாங்க மலேரியா தடுப்புத் திணைக்களத்தில் வேலை கிடைத்ததோடு வவுனியா, கிளிநொச்சியென அலைய ஆரம்பித்துவிட்டான். பின்னால் அவனுக்கு அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் நிரந்தரமாய் அற்றென்டன்ற் வேலையும் கிடைத்தது. அவனது ஊராகவும் வேறோர் ஊர் ஆகிக்கொண்டிருந்தது. கொழும்பார் வீட்டு நினைவு, குறிப்பாக பரமேஸ்வரனின் நினைவு, முற்றிலுமாய் அகன்றுபோனது. அனுராதபுரத்தில் வேலைசெய்கையில் சிங்களப் பெண்ணொருத்தியுடனான சிநேகிதம் கல்யாணம் வரை சென்றுவிட்டதில் பவளமலரின் மேலான ஈர்ப்பும் துரையனில் விட்டுப்போனது. ஆனால் பெருமாளின் மீதான மர்மம் இன்னும் அவனுள் உயிர்ப்புடனிருந்து அவரின் பவ்யத்தையும், ஊர் மனிதர்களுடனான அளவான உறவாடலையும் கேள்விப் படுத்திக்கொண்டே இருந்தது.

அந்த மர்மத்தில் மேலுமொரு கணு விழும்படியான சம்பவமொன்று ஒருநாள் நிகழ்ந்தது.  அவன் ஊர் செல்வதற்காய் நள்ளிரவை வந்தடையும் கொழும்பு -  யாழ்ப்பாணம் மெயில்வண்டியைக் காத்து அனுராதபுரம் ஸ்ரேஷனில் நின்றுகொண்டிருக்கிறான்; ஸ்ரேஷனில் பெரிய கூட்டம்; எனினும் முக்கால்வாசிச் சனம் யாழ்ப்பாணம் – கொழும்பு மெயில்வண்டிக்காகக் காத்துநின்ற கூட்டம்தான்; கொழும்பு – யாழ்ப்பாணம் மெயில்வண்டி வருகிறது; இறங்குபவர் தொகை அதிகமாகவிருப்பதில் அவன் அவசரப்படாமல் என்ஜின்புறமாக மேடையிலிருந்து வந்துகொண்டிருக்கிறான்; அப்போதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில்விழுந்து திடுக்கிட வைக்கிறது.

தலையில் ஒரு கடும் வர்ண லேஞ்சியைக் கட்டிக்கொண்டு, கறுப்பு லோங்சுடனும் கரி பிரண்ட வெள்ளை பெனியனுடனும் பெருமாள் என்ஜின் வாய்க்குள் கரியை சவளால் வாரி வாரிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்.

என்ஜின் அவ்வப்போது மூசிமூசி கரும்புகையை புகைபோக்கிவழி தள்ளிக்கொண்டிருக்கிறது. அருகிலே நின்ற ஒரு பறங்கி, அவனே ட்ரைவராய் இருப்பான்போலும், ஊதொலியை ஒலிக்கச்செய்கிறான். ரயில் மெல்ல நகர்கிறது. துரையன் ஓடிப்போய் ரயிலில் ஏறிக்கொள்கிறான்.

என்ஜின் உதவியாளாக இருப்பதை மறைத்து பெருமாள் ஏன் ஊரிலே அவ்வாறான ஒரு பெயர் உலவ அனுமதிந்தார்? அதுபோலவே அவரால் மறைக்கப்பட்ட மற்ற விஷயங்களையும் தொடராக அப்போது சிந்தித்து ஒரு காரணத்தையேனும் கண்டடைய முயன்றான் அவன். ஆயினும் விடை கிடைக்காத கேள்விகளாக இருக்கவே அவை விதிக்கப்பட்டவைபோலும். அவன் குழம்பியே இருந்துகொண்டிருந்தான்.

பெருமாள்மீதான வெறுப்பாக இவை விழுந்திருந்தும் அவனது அனுராதபுர வாழ்நிலைக் காலத்திலேயே அவர்கள் காணி வாங்கி புதிதாக ஒரு சின்ன வீடு கட்டிக்கொண்டு போனதன் பின்னால், பரமேஸ்வரன் மேலும் கெட்டிக்காரனென்ற அடையாளம் மாறி, பொய்யனென்ற பெயர் ஒட்டப்பட்ட பின்னால் அவன் பொருள் செய்ய அதிலேதும் இருக்கவில்லை. எப்போதாவது மிதந்தெழும் கேள்விகள் தம்மிருப்பைக் காட்டுவதோடு அடங்கிப்போய்க்கொண்டு இருந்துவிட்டன.

1983இன் இனக் கலவர காலத்தில் அனுராதபுரத்தில் பட்ட ஈறல்களின் பின்னால் சில நிலைமைகளை வேறுமாதிரிச் சிந்திக்க அவனுக்கு வழி சமைந்திருந்தது. அந்தளவுக்கு இனக் கலவரம் அவனை மறுபிறப்பெடுத்தவனாய் ஆக்கியிருந்தது. ஓர் உயிரபயம் தேடல் என்பது வெறுமனே வாழ்வு என்பதில்மட்டும் மையம்கொண்டு இருக்கவில்லை, அது பயத்தின் உச்சநிலையில் உயிரையும் துச்சமாக்கிவிடுகிற புள்ளி, வாழ்வாதாரம் தேடும் காரணத்தோடு இது எள்ளளவிலும் பொருந்துவதில்லையென்ற அறிகை அவனுள் எழுந்தது. பெருமாளும் 1958 கலவர காலத்தில் கொழும்பிலிருந்து அவனூர் வந்தவர். எத்தனை அவலங்களை, அவதிகளை சுமார் பத்தளவிலான அங்கத்தவர்களைக்கொண்ட அந்தக் குடும்பம் அனுபவித்திருக்கமுடியும்? வேறோர் ஊரில் தன் தமிழ் அடையாளத்தையே முற்றுமாய் அவன் திரஸ்கரித்து வாழவில்லையா? ஓர் இன வன்முறையிலிருந்து  தன்னைத் தப்புவிக்க தானெடுத்த முயற்சிகள் நியாயமெனின், பெருமாளின் சுயஅடையாள மறைப்புக்குப் பின்னாலும் ஏதோவொரு நியாயம் இருக்கமுடியுமென அவன் நம்பத் தலைப்பட்டான்.

அதையும் காலம் ஒருநாள் அவனுக்கு விளக்கமாகப் புரியவைத்தது.

1990களுக்கு சற்று முன்பின்னாக அனுராதபுரத்தில் நிலைத்திருந்த சில தமிழ்வழிக் குடும்பங்கள் மத்தியிலேயே பீதி கிளம்புமளவிற்கு மீண்டுமொரு கலவர நிலைமை விழுந்துவிட்டிருந்தது. தெரிந்த வாடகைக் காரொன்றை அமர்த்திக்கொண்டு, குடும்ப சகிதமாக வடக்குநோக்கி புறப்பட்டுவிட்டான் துரையன். யாழ்ப்பாணம் செல்வதுதான் அவனது உத்தேசமாக இருந்தது. ஆனையிறவு ராணுவ தடை முகாமைக் கடப்பது சிரமமெனினும் அவனது சிங்கள மனைவியுடனான பயணத்தில் அது கைகூடக் கூடியதே. ஆனால் அவனது சிங்கள மனைவிக்கு அது விருப்பமாயிருக்கவில்லை. விடுதலை இயக்கங்கள் வீச்சாக வளர்ந்திருப்பதை தன் மறுப்புக்குக் காரணம் காட்டினாள் அவள். அது இலகுவில் சமாதானப் படுத்தப்படக்கூடிய அம்சமும் அல்லதான். அதனால் கிளிநொச்சியில் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் தங்கிக்கொண்டு உசிதமானவற்றை பின்னர் செய்யலாமென அங்கேதான் சென்றான்.

அது தொழிலாளர் நலன்களுக்காக உழைத்துக்கொண்டு கமத் தொழிலாளியாயிருந்த ஒரு மலையகத் தமிழருடையதாயிருந்தது. அங்கே தங்கியிருந்தபோதுதான் 1983இல் மலையகத் தமிழர் குடியேற்றப்பட்டிருந்த வடக்கின் காந்தீயக் குடியேற்றங்களுக்கு நேர்ந்த கொடுமையை அவன் விரிவாக அறிந்தது. தொடர்ந்து வடக்கில் மலையகத் தமிழரின் சீணப்பட்ட வாழ் நிலைமை மற்றும் சமூக அந்தஸ்தின்மை ஆகியவற்றை விரிவாக அங்கே அவனால் உணரமுடிந்தது.

‘தோட்டக்காட்டார்’, ‘வடக்கத்தியார்’போன்ற அவர்கள் மேலான பதப் பிரயோகம்பற்றி அவன் அறிந்திருந்தானாயினும்,  அனுபவப்பட்டவர்களின் நேர்மொழியினூடாக விபரங்கள் அறிந்தபோது அவன் பதைத்துப்போனான். மனித கௌரவங்கள் பறிக்கப்பட்ட வாழ்நிலைமையை முன்பானால் அவனால் கற்பனைகூட செய்துபார்க்க முடிந்திராது.

அப்போது அவனுக்கு பெருமாள் ஞாபகமானார். அவரின் அடையாள மறைப்பிலுள்ள நியாயம் அப்போது அவனுக்கு வெளிச்சமாயிற்று. துரையன் கண் கலங்கியேபோனான்.

தாயாரைப் பார்க்க ஊர் வரும் வேளைகளில் பெருமாள் குடும்பம் குடியிருந்த பொன்னம்பலத்தின் வீட்டைத் தாண்டியே செல்ல நேர்கிறது. அந்த வளவிலுள்ள சளிந்த கிழப் பூவரசைக் காண்கையில் அவனுக்கு கட்டையான, சளிந்த தோற்றமுடைய பெருமாள் விஸ்வரூப தரிசனமாகிறார். ’கௌரவப் பிரஜை!’ அவன் முணுமுணுத்துக்கொள்கிறான்.

அப்போது அவர்மீதான தன் கடந்தகால எண்ணங்களை எண்ணுகிறபோது அவனுக்குச் சிரிப்பும் வருகிறது.

*

 தாய்வீடு, டிச. 2021

https://devakanthan.blogspot.com/2021/12/blog-post.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வு மனப்பாண்மை கொண்ட மனித மனங்களை காட்டும் நல்ல கதை .......!  👍

நன்றி நுணா.......!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.