நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல் !
Published By: Digital Desk 3
26 Dec, 2025 | 03:13 PM
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.
சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன.
2005 முதல், டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக, டித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டது.
இன்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெற்றதுடன் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன.
திருகோணமலை - மூதூர்
ஆழிப்பேரலையின் தாக்கத்தால் திருகோணமலை, மூதூர் பிரதேசம் பாரிய சேதங்களை எதிர்கொண்டது. இது வரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், மூதூரில் மட்டும் 286 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து, நீண்டகால வேதனைகளுக்கு உள்ளாகினர்.
இந்தப் பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் ஆன்மா சாந்திக்காக துஆ பிரார்த்தனை நிகழ்வு மூதூர் தக்வா நகர் ஏ.சி.பள்ளிவாசலில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட பலரும் பிரார்த்தனையில் கலந்த நினைவேந்தலில் பங்குபற்றினர்.
யாழ். உடுத்துறை
21 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து, பொது ஈகைச் சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அஞ்சலி உரைகளை வடமராட்சி கிழக்கு தலைமை கிராம சேவகர் செபமாலை தோமஸ்யூட், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.
இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயகம்
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று (26) திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயகத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள்.
தம்பலகாமம்
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் நடை பெற்றது. இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார்.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா
வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் ஏற்றி வைத்திருந்தார்.
இதனை அடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலர் மாலை மற்றும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை அங்கு கலந்து கொண்டிருந்தவர்களால் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டு.ஓந்தாச்சிமடம்
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று
தேசிய பாதுகாப்பு தினமும், சுனாமி ஆழிப் பேரலையின்21 வது அண்டு நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கடற்கரை அண்மித்த கரையோரப் பிரதேசத்தில் ஒரு லெட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.
ஹட்டன்
அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் அட்டன் நகர சபை பிரிவு குடியிருப்பாளர்கள் இணைந்து சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமி பேரழிவினால் மட்டுமன்றி ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தாயாரான மைக்கல் றெசிலின் ராணி அவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மதகுருமார்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், வினோநோதாரலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சி.குகனேசன், சி.வேதவனம், வர்த்தக சங்கத்தினர்,
பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு, கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர்.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள், கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவஅமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராமமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்ட செயலகம்
சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நோக்கிலும், பேரழிவு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை
சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
https://www.virakesari.lk/article/234452
By
ஏராளன் ·