Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்சிக் கதிரையை கைப்பற்ற, தக்கவைக்க....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக் கதிரையை கைப்பற்ற, தக்கவைக்க....

[28 - July - 2007]

* இதுவொரு அதிகாரப் போட்டி மட்டுமே

-காலகண்டன்-

கொழும்பில் நேற்று முன்தினம் ரணில், மங்கள தலைமையிலான அரசியல் கூட்டணி `மக்கள் அலை' என்னும் ஆர்ப்பாட்டப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தின. பல ஆயிரக் கணக்கானோர் கலந்த இப் பேரணியும் கூட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) க்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கி இருப்பதாகவே அவதானிக்க முடிகிறது. அதேவேளை, இம்மக்கள் அலைப்பேரணி ஒன்றரை வருடகால மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மிகப் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

"நாடு அழிகிறது - தடுக்க முன் வருக"! என்னும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட `மக்கள் அலை' ப் பேரணியில் கலந்து கொண்டோர் மகிந்த சிந்தனை அரசாங்கத்தை எதிர்த்து வன்மையான முழக்கங்களை எழுப்பினர். ராஜபக்‌ஷ சகோதரர்களின் நிறுவன ஆட்சி நடப்பதை அம்பலப்படுத்தி வந்ததோடு கேலிச் சித்திரப் படங்களும் பேரணியில் எடுத்து வரப்பட்டன. விலைவாசி ஏற்றத்தையும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் வெளிப்படுத்தும் படங்களும் பதாகைகளும் பேரணியில் காணப்பட்டன. இவை எல்லாம் ஒரு எதிர்க்கட்சியின் அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் இடம்பெறக் கூடியதாக இருந்த போதிலும் ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடத்தில் இப்படி ஒரு எதிர்ப்பலையை மகிந்த சிந்தனை அரசாங்கம் எதிர்கொண்டிருப்பது அதன் எதிர்காலத்திற்கு உகந்ததாக இல்லை என்றே கூற வேண்டும்.

இவ்வாறு மக்கள் அலைப் பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்களிடையே அடுத்த ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொனி முனைப்புடன் காணப்பட்டாலும், ஜனநாயகம், மனித உரிமைகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு போன்றவற்றுக்கான கேள்விகள் பெரும்பாலான மக்களுக்கு நியாயமானவைகளாகவே காணப்படுகின்றன. அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சு அரசாங்கத்தின் தலைமையை பதிலிறுக்க முடியாதவாறான சங்கடத்திற்குள் தள்ளியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது. வரவு - செலவுத் திட்டத்தின் 75 வீதமான நிதி ராஜபக்ஷ சகோதரர்களால் கையாளப்பட்டு வருவதாகவும் மிகுதி 25 வீதமானவை மட்டுமே பாராளுமன்றத்தின் ஊடாகப் பரிமாறப்படுவதாகவும் ரணில் கூட்டத்தில் பகிரங்க குற்றச்சாட்டாகச் சுமத்தினார். அத்துடன், புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் பற்றியும் கேள்வி எழுப்பினார். அத்துடன், வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு கூரையைப் பிய்த்துக் கொண்டு வானத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகவும் எடுத்துக்காட்டினார். முடிவாக ராஜபக்ஷ சகோதரர் நிறுவனம் நடத்தும் இன்றைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து எதிர்ப்பியக்கங்களைத் தொடரப் போவதாகவும் ரணில் சூளுரைத்துக் கொண்டார்.

அதேவேளை, அரசாங்கத்தரப்பினர் இவ் எதிர்ப்புப் பேரணியை மழுங்கடிக்கும் வகையில் கொழும்பிலும் வெளியேயும் அரசாங்க ஆதரவுப் பேரணிகளை நடத்தினர். அவற்றில் பெரும் தொகையினர் இல்லாதுவிடினும் அரசாங்க ஆதரவாளர்கள் உரத்து முழக்கமிட்டனர். தொப்பிகல வெற்றியும் கிழக்கு மீட்பும் மகிந்த சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி என்றும் அதே பாதையில் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று போர்க்குரல் எழுப்பியதுடன், இராணுவத்தை வாழ்த்தியும் முழக்கமிட்டனர். இந்த அரசாங்க ஆதரவுப் பேரணிகளில் பல அமைச்சர்கள் முன்னின்றதையும் காண முடிந்தது. வெளியிடங்களில் இடம்பெற்ற பேரணிகளில் பௌத்த குருமார் கலந்து கொண்டதுடன் ஜாதிக ஹெல உறுமய பிக்குமாரை ரணில் விக்கிரமசிங்க அவமதித்துவிட்டார் என்பதும் முக்கிய பிரச்சினையாகக் கிளப்பப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட்டு வரும் எந்தவொரு கேள்விக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு பதிலையும் அரசாங்க சார்புப் பேரணி எனப்பட்டவற்றில் காண முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதிப் பதவி ஏற்று அவரின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றரை வருடங்களைக் கடந்து நிற்கிறது. மகிந்த சிந்தனை என்ற வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டை ஒளிமயமான பாதையில் முன்னெடுத்துச் செல்வது என்ற பிரகடனமும் முழக்கங்களும் இன்று முடங்கி மூலையில் கிடந்து வருவதையே காணமுடிகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமான அரசியல் தீர்வு என்ற வாசகம் யுத்தத்தின் மூலமாக இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சியும் மாவட்டத்திற்கான அதிகாரப் பரவலாக்கலும் என்ற நிலையில் இருந்து இம்மியளவும் நகரப் போவதில்லை என்பதை ஜனாதிபதியான மகிந்த மீண்டும் இடித்துரைத்து நிற்கிறார். அத்துடன், கிழக்கைப் போன்று வடக்கையும் மீட்பேன் என்ற சூளுரையையும் வெற்றி விழாவின் போது கூறியுள்ளார். இந்நிலையில் இந்த நாடு எங்கே கொண்டு செல்லப்படப் போகிறது என்ற கேள்வியும் ஆதங்கமும் இயல்பாகவே எல்லோரிடமும் எழவே செய்கிறது.

இந்நிலையிலே அண்மையில் இந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும் அநுரா பண்டாரநாயக்கா கூறிய சில கூற்றுகள் சகலரினதும் கவனத்திற்குரியதாகிறது. அநுரா எந்த நேரத்தில் எத்தகைய பேச்சுகளைப் பேசுவார் என எவரும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியாது. அதேபோன்று எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்றும் கூற முடியாது. ஆனால், அவரது கூற்றில் பல உண்மைகள் வெளிப்பட்டு வருவதை நிராகரிக்க இயலாது. அண்மையில் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது அதிகரித்த அரசாங்க வாகனங்களும் வீண் விரயமும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாது விடில் மக்கள் இந்த அரசாங்கத்தைத் தூக்கி வீசி விடுவார்கள் என்ற எச்சரிக்கை கலந்த பேச்சைப் பேசி உள்ளார். அத்துடன், யுத்தத்தின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் தொப்பிகல வெற்றியானது விழாக் கொண்டாடக் கூடியதொன்றல்ல என்றும், காரணம் புலிகள் ஆயுத பலத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதையும் அநுரா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அநுரா தனது பேச்சின் போது பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு அங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களிடம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்திக் கூறி உள்ளார்.

இதே அநுரா பண்டாரநாயக்கா சில வாரங்களுக்கு முன்பு விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்நாட்டின் அரசியலிலும் பாராளுமன்றத்திலும் பௌத்த பிக்குகள் பிரவேசித்துக் கொண்டதானது நாட்டுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது அக் கூற்றில் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்திருந்ததை நியாய சிந்தையுடைய எவரும் மறுப்பதற்கு இல்லை.

இக் கூற்றினை யோசிக்கும் போது பல விடயங்கள் சிந்தனையில் பொறிதட்டுகின்றன. பௌத்த தர்மத்தையும் தனித்துவமான மார்க்கத்தையும் வகுத்தவர் கௌதம புத்தர். அவர் அரண்மனை வாழ்வையும் குடும்ப வாழ்வையும் துறந்து அரச மரத்தடியை இருப்பிடமாக்கிக் கொண்டவர். அரண்மனை வாழ்வைத் துறப்பதென்பது சுகபோகங்களையும் அரசியலையும் துறந்துகொள்வதாகும். ஆனால், நம் நாட்டில் இதற்கு மாறாகவே நடந்து வந்துள்ளது. புனிதமான புத்தரின் சிலைகளை அரச மரத்தடியில் வைத்துவிட்டு சுகபோக வாழ்வில் சில பௌத்த பிக்குமார் திளைத்து வருகிறார்கள். அதேவேளை, உரிய பௌத்த தர்மத்தின்படி பல பிக்குமார் வாழ்ந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. கௌதம புத்தரும் அவர் வகுத்தளித்த பௌத்த மார்க்கமும் சிறப்பானதும் கௌரவத்திற்கும் உரியதாகும். ஆனால், அதைப் பின்பற்றுவதாகக் கூறும் சில பிக்குமார்களினதும் பேரினவாத அரசியல்வாதிகளினதும் பேச்சும் செயலுமே பிரச்சினைகளினது மையமாக விளங்கி வந்துள்ளன.

அந்த வகையில் கடந்த தேர்தலில் ஒன்பது ஆசனங்களுடன் அரசியலுக்குள் பிரவேசித்த ஜாதிக ஹெல உறுமய கட்சி பேரினவாதத்தின் மொத்த உருவகமாக இருந்து வருகின்றதைக் காண முடிகிறது. அன்பு, அகிம்சை, கருணை, பொருள் தேடாமை, ஆடம்பரம் நாடாமை என வழிகாட்டியவர் புத்தர். அந்த மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டே அசோகச் சக்கரவர்த்தி யுத்தத்தை கைவிட்டு பௌத்த மதம் தழுவி அதனை இலங்கையிலும் பரப்பிக்கொண்டார். ஆனால், ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றப் பிக்குமார் யுத்தம் செய்வதைப் புத்த பெருமான் ஏற்றுக்கொண்டவர் எனக் கூறி இன்றைய இன ஒடுக்குமுறை யுத்தத்தை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களான பிக்குமார் சிலர் ஆடம்பர மோட்டார் வாகனமான "பென்ஸ்" பயன்படுத்தி வருவதைப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், தீர்வையற்ற ஆடம்பரக் கார்களுக்கான அனுமதிப் பத்திரங்களை முறைகேடாக விற்றுப பணம் பெற்றதாகவும் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இவற்றையெல்லாம் அவதானித்ததன் விளைவாகவே பௌத்தரான அநுரா பண்டாரநாயக்கா புத்த குருமார் அரசியலில் பிரவேசித்தது `நாட்டின் துரதிர்ஷ்டம்' என்று கூறினார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றப் பிக்குமார் அரசாங்கத்தில் அங்கம் வகித்து யுத்தத்திற்கு எண்ணெய் வார்ப்பதில் முன்னின்று வருகின்றனர் என்பது பகிரங்கமானதாகும். அரசியலுக்குள் எவர் புகுந்தாலும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் விமர்சனங்களுக்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு ஈடுகொடுக்க முடியாவிட்டால், விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாவிட்டால் அரசியலைத் துறந்துவிடுவது தான் முறையானதாகும். அந்த வகையில் பௌத்த பிக்குமாரை ரணில் விக்ரமசிங்க தாக்கிப் பேசிவிட்டார் என அரசாங்கம் பிரசாரப்படுத்துவது மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியேயாகும்.

ரணில் - மங்கள கூட்டணி நடத்திய `மக்கள் அலை' பேரணியும் `நாடு அழிகிறது - மீட்க முன்வருக' என்ற கோரிக்கையும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இலக்கை நோக்கியே செல்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அரசாங்கம் அம் முயற்சியைத் தடுப்பதில் வெற்றிபெற வேண்டுமானால், அங்கே எழுப்பப்பட்ட மக்கள் சார்பான கோரிக்கைகள், கேள்விகள் என்பனவற்றுக்கு நியாயமான தீர்வை முன்வைக்க வேண்டும். அதனை இன்றைய மகிந்த சிந்தனை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கலாமா?

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.