Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !

May 23, 2022
russia-ukraine-war.jpg
– பாகம் 1
டந்த பிப்ரவரி 24-ம் தேதி, ‘நவ நாஜிக்களை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது இரஷ்யா. இரண்டு மாதங்கள் ஆகின்றன, போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது, இரஷ்யாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவது-நெருக்கடி கொடுப்பது, இரஷ்யாவிற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகளின் மூலம் உக்ரைனுக்கு வெளியிலிருந்து இப்போரை அமெரிக்காவே நடத்திக் கொண்டிருக்கிறது.
இரஷ்யாவும் சரி, உக்ரைன் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியும் சரி, இப்போர் நீண்டகாலம் நீடிக்கலாம்; எனவே அதற்கான தயாரிப்புகளில் இறங்க வேண்டும் என்று கூறுகின்றன. போர் நிறுத்தத்திற்கோ அமைதிப் பேச்சு வார்த்தைக்கோ எந்த தரப்பும் தாயாரில்லை. குறிப்பாக, உக்ரைனை பலிகடாவாக்கி இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போரை (Proxy War) நடத்திவரும் அமெரிக்கா பின்வாங்கத் தயாராக இல்லை. தீவிரப் போர் வெறியோடு செயல்பட்டு வருகிறது.
போரின் நெருக்கடிகள் மக்களின் தலையில்..
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இந்த நாய்ச்சண்டையில் பலியாகிக் கொண்டிருப்பதோ உக்ரைன் உழைக்கும் மக்கள்தான். போரில் தாம் கொல்லப்பட்டுவிட்டால், தம் குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக முதுகில் முகவரிகளை எழுதும் பெற்றோர்களின் அவலம் குறித்த செய்தி நமது நெஞ்சை உலுக்குகிறது. உக்ரைனில் அரசாட்சி செய்கிற நவநாஜி கும்பலோ போரில் இரஷ்ய இராணுவம் முன்னேறுவதைத் தடுக்க பெண்கள், குழந்தைகள் என சொந்த நாட்டு மக்களையே மனிதக் கேடயமாகப் (Human Shield) பயன்படுத்தி வருகின்றனர்.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட (40,19,287) மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளியேறியவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 18 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள் கட்டாய இராணுவ சேவைக்கு தேவைப்படுவார்கள் என்பதால், உக்ரைன் நாஜி அரசு வெளியேற அனுமதிக்கவில்லை.
ஆனால், இரஷ்யப் படையினரே உக்ரைன் குடிமக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றுகொண்டிருப்பதாக, ஒருதலைபட்சமான பல பேய்க்கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கின்றன அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள்.
இரஷ்யா உலக அளவில் பெட்ரோல் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. பலநாடுகளின் கோதுமை தேவைகள் உக்ரைன், இரஷ்யாவின் ஏற்றுமதி மூலமே நிறைவுசெய்யப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே இப்போரின் காரணமாக உலக நாடுகளில் எரிவாயு விலை உயர்ந்து காணப்படுகிறது; பல நாடுகளில் கோதுமைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பல உற்பத்திப் பொருட்களின் மூலப்பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு எனப் போர் உண்டாக்கியிருக்கும் நெருக்கடிகள் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் தலையிலேயே விழுகின்றன.
மூன்றாம் உலகப்போர் அபாயம்!
ஏப்ரல் 24 அன்று உக்ரைனுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனும் பாதுகாப்புத்துறைச் செயலர் லொயிட் ஆஸ்டினும் இரஷ்யாவை இராணுவ ரீதியில் முடமாக்குவதே இப்போரில் எங்களது (அமெரிக்கா) நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
அமெரிக்காவின் செல்லப் பிராணியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “எங்களுக்குத் தேவை ஆயுதங்கள், மென்மேலும் கூடுதலான ஆயுதங்கள்” என்று எஜமானருக்குத் தோதாக ஊளையிடுகிறார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்தும் இப்போரில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவின் எல்லையை ஒட்டிய கிழக்கு ஐரோப்பில் தனது 8,000 துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளது.
இரஷ்யாவை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு மலைமலையாக பணத்தை வாரியிறைத்து வருகிறது அமெரிக்க அரசு. போர் தொடங்கியபோது உடனடியாக 1.3 கோடி டாலர்களை வழங்கியது. மார்ச் மாத தொடக்கத்தில் 20 கோடி டாலர்களை ஒதுக்கியது. பிற்பாடு சிறிது நாட்களிலேயே 80 கோடி டாலர்களை அறிவித்தது. தற்போது உக்ரைனுக்கு உதவுவதற்காக 3,500 கோடி டாலர்கள் வரை வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார் அதிபர் பைடன்.
நிதி உதவி மட்டுமல்லாது விமான எதிர்ப்பு கருவிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், அதிநவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட கொடிய போர்க் கருவிகளையும் தனது உளவுத்துறையின் உதவியையும் உக்ரைனுக்கு வழங்கி வருகிறது அமெரிக்கா.
ukraine.jpg உக்ரைனில் அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நவநாஜிக் கும்பலான அசோவ் பட்டாலியன் படையினர்.
தன் நாட்டு ஆயுதங்களை உக்ரைனுக்கு தங்குதடையின்றி வழங்குவதற்காக ‘உக்ரைன் – ஜனநாயக பாதுகாப்புக் கடன் மற்றும் குத்தகைச் சட்டம் 2022’-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார் பைடன். இரண்டாம் உலகப்போரின்போது, இங்கிலாந்துக்கு தன்னுடைய ஆயுதங்களை வழங்குவதற்காக, முதன்முதலாக 1941-ம் ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது உக்ரைனுக்காக அதை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் பைடன். குடியரசுக் கட்சியும் ஜனநாயக கட்சியும் இணைந்து பெரும்பான்மை ஆதரவோடு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
அமெரிக்கா மட்டுமல்லாது 30 உறுப்பினர்களைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகின்றன. இராணுவ வல்லரசான இரஷ்யாவினுடைய தாக்குதலை உக்ரைன் இத்தனை நாள் சமாளிப்பதற்குப்பின் உள்ள காரணம் இதுவே.
மேலும் ஏப்ரல் 19 அன்று ஜெர்மனியில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் உள்ளிட்டு 43 நாடுகள் ஒன்றுகூடி, போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். உக்ரைனுக்கு போர்ச் செலவினங்களுக்காக நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நாடுகள் முன்வந்திருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் தங்களது திட்டம் பற்றி இக்கூட்டமைப்பு நாடுகள் ஆலோசிக்க இருக்கின்றன.
நிலைமைகளை அவதானிக்கும்போது, இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பனிப்போர் மூன்றாம் உலகப் போருக்கான அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனை அமெரிக்காவும் இரஷ்யாவுமே மாறிமாறிச் சொல்லிக் கொள்கின்றன. எனவே இருதரப்புமே எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி, அம்மணமாக தங்களது நோக்கங்களை அறிவித்துக் கொண்டு, போர்த் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
பனிப்போரின் தொடர்ச்சியும்; நேட்டோவில் உக்ரைன் இணைப்பும்
இரஷ்ய-உக்ரைன் போரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் நடைபெற்ற பனிப்போரைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக 1950-களின் பிற்பகுதி தொடங்கி, 1991 வரையுள்ள காலகட்டம் மற்றும் 1991-லிருந்து தற்போது வரையிலான காலகட்டம் என இரண்டாகப் பிரித்து, நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவானது ஏகாதிபத்திய முகாமிலேயே தலைமை தாதாவாக – மேல்நிலை வல்லரசாக வளரத்தொடங்கியது. 1950-களின் பிற்பகுதியில், சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தனர்; ஆகையால் சோசலிச சோவியத் யூனியன், சமூக ஏகாதிபத்தியமாக (சொல்லில் சோசலிசம்; செயலில் ஏகாதிபத்தியம்) சீரழிந்து அமெரிக்காவுடன் உலக ஆதிக்கத்திற்கான போட்டா போட்டியில் இறங்கியது.
இதற்கு முன்னதாக, 1945-ம் ஆண்டு – இரண்டாம் உலகப் போரின் முடிவில், பாசிச ஹிட்லரின் பிடியிலிருந்த நாடுகளை சோவியத் செம்படை விரட்டியடித்து அல்பேனியா, பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கிழக்கு ஜெர்மனி வரை விடுவித்திருந்தது. இந்த நாடுகளெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் சோசலிச குடியரசுகளாக மாறின.
இந்நிலையில், சோசலிசம் பரவிவருவதைக் கண்டு அச்சமுற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்காக உருவாக்கிய அரசியல்-இரணுவக் கூட்டணியே நேட்டோ.
1949-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலின் வடபகுதியைச் சேர்ந்த நாடுகளான பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐலாந்து, இத்தாலி, லுக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்சுகல், இங்கிலாந்து, அமெரிக்கா என 12 நாடுகள் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் நேட்டோவை ஏற்படுத்தின. வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு என்பதன் சுருக்கமே நேட்டோ (NATO) ஆகும்.
மறுபக்கம் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளை தனது சுரண்டலுக்கான தொங்கு சதை நாடுகளாக ஆக்கிக் கொண்டது சோவியத் சமூக ஏகாதிபத்தியம்; மேலும் 1955-ம் ஆண்டு நேட்டோவை எதிர்கொள்வதற்காக அந்நாடுகளை ஒருங்கிணைத்து வார்சா ஒப்பந்த அமைப்பை (WTO) ஏற்படுத்தியது. இதுவும் நேட்டோவைப் போலான அரசியல்-இராணுவக் கூட்டணியாகும்.
சுமார் 35 ஆண்டு காலத்திற்குமேல் நடைபெற்ற பனிப்போரில், 1990-1992களில் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளில் சிக்கிய சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்காவிடம் தோற்றது. 90-களின் இறுதியில் வார்சா கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. இரஷ்யாவுடனான சோவியத் கூட்டமைப்பிலிருந்து 14 நாடுகள் வெளியேறியதால் சோவியத் யூனியனும் சிதறியது. ஆனால் இதே காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி கிரீஸ், துருக்கி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட நாடுகளை இணைத்துக் கொண்டு விரிவடைந்தது.
90-களுக்குப் பின் செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகள் 1999-ம் ஆண்டும்; பல்கேரியா, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 2004-ம் ஆண்டிலும்; அல்பேனியா மற்றும் க்ரோஷியா 2009-ம் ஆண்டிலும்; மண்டேநீக்ரோ 2017-ம் ஆண்டிலும்; 2020-ம் ஆண்டில் வடக்கு மாசிடோனியாவும் நோட்டோவில் இணைந்தன.
வட அட்லாண்டிக் பிராந்திய நாடுகளை மட்டுமே கொண்டிருந்த நோட்டோ படை, முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகள் உள்ளிட்டு பெரும்பான்மையான கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பாகத் திகழ்கிறது. தற்போது 30 நாடுகள் அதில் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
000
பனிப்போர் காலத்தில், மேலும் கிழக்கு நோக்கி எங்களது படைகளை விரிவுபடுத்த மாட்டோம் என்று இரஷ்யாவுக்கு கொடுத்த வாக்கை மீறியுள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ. தற்போது நேட்டோ நாடுகள் இரஷ்யாவை சுற்றிவளைத்துள்ளன.
america.jpg உக்ரைனுக்கு போர் உதவிகள் வழங்குவது பற்றி நாடாளுமன்றத்தில் உரையாடும் அதிபர் பைடன்.
இரஷ்யாவின் நிலப்பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவை நேட்டோவில் இருக்கின்றன. தற்போது இரஷ்யாவுடன் மிகப்பரந்த அளவில் நிலப்பகுதியை பகிர்ந்துகொள்ளக்கூடிய உக்ரைனையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா. உக்ரைனைப் போலவே நார்வே, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
தனது மேலாதிக்கப் பரப்பை விரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், இரஷ்யாவை சுற்றி வளைத்துத் தாக்கவும் உகந்த புவிசார் முக்கியத்துவமிக்கப் (Geo-political importance) பகுதியாக உக்ரைனைக் கருதுகிறது அமெரிக்கா. இதை முறியடிப்பதற்காகத்தான் இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. எனவே இப்போர் ஒரு திடீர் நிகழ்வல்ல. அமெரிக்க-இரஷ்ய வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரின் தொடர்ச்சி.
அமெரிக்கப் பதிலிப் போரின் முன்தயாரிப்பு பணிகள்
2000-ம் ஆண்டிலிருந்து உலகின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2021-ம் ஆண்டு உலகளாவிய இராணுவச் செலவு சுமார் 2 டிரில்லியன் டாலர். இதில் பாதிக்கும் மேற்பட்டவை நேட்டோ நாடுகளைச் சேர்ந்தவை.
1991 முதல் 2021 வரையிலான காலங்களில் உக்ரைனுக்கு பெருமளவிலான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது அமெரிக்கா. 1991-2014 வரை சுமார் 380 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளை செய்திருக்கிறது. அதுவே ஒப்பீட்டு நோக்கில் 2014-2021 வரையான குறுகிய ஆண்டுகளில், 240 கோடி டாலர் அளவிற்கான இராணுவ உதவிகளாக அதிகரித்திருக்கிறது.
இரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகுதான் அமெரிக்காவும் நேட்டோ கூட்டணியும் உக்ரைனுக்கு உதவிகள் வழங்கிவருகின்றனர் என்பது கிடையாது; ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா உக்ரைனை களமாகக் கொண்டு இரஷ்யாவுக்கு எதிரான பதிலிப் போருக்கு தாயரித்துள்ளது என்பதை விளக்கும் சித்திரம்தான் மேற்சொன்ன புள்ளிவிவரம்.
000
இசுலாமிய நாடுகளில் ஒசாமா பின்லேடன், ஐ.எஸ்.ஐ.எஸ்., தாலிபான் உள்ளிட்ட இசுலாமிய தீவிரவாதக் குழுக்களை வளர்த்துவிட்டதைப் போல் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.வும் அந்நாட்டின் இராணுவத் தலைமையகமும் 500 கோடி டாலர் செலவுசெய்து உக்ரைனில் அசோவ் எனும் நவநாஜிக் கும்பல்களை வளர்த்துவிட்டுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில், இரஷ்யப் படையினரை எதிர்த்து சண்டையிடுவது உக்ரைன் இராணுவம் மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து அசோவ் பட்டாலியன் எனும் நவநாஜி ஆயுதப் படையும் சண்டையிட்டு வருகிறது. அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்கள் இக்குழுவினரின் கட்டுப்பாட்டிற்கே செல்கின்றன.
உக்ரைனில் தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை உருவாக்க ஆட்சிக் கவிழ்ப்புகளையும் அமெரிக்கா நடத்தியிருக்கிறது. 2004-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரஷ்ய ஆதரவாளரான விக்டர் யனுகோவிச் அதிபரானார். இதைப் பொறுக்காத அமெரிக்கா தனது விசுவாசக் கும்பல்கள் மூலம் உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ என்ற பெயரில், ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அரங்கேற்றி அமெரிக்க ஆதாரவளரான விக்டர் யுஷ்செங்கோவை அதிபராக்கியது.
2010-இல் நடைபெற்ற தேர்தலில், இரஷ்ய ஆதரவாளரான யனுகோவிச் மீண்டும் அதிபரானார். இவர் இரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்பினார். இதற்கு எதிராக அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட நவநாஜிசக் கும்பல்கள் போராட்டங்களில் இறங்கின. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாக அதிபர் பதவியிலிருந்து யனுகோவிச் விலகினார். பாசிசக் கும்பல்கள் ஆட்சியைக் கைப்பற்றின. தற்போது ஆட்சியிலிருக்கும் ஜெலன்ஸ்கியும் நவநாஜிக் கும்பலின் ஆசி பெற்ற அதிபரே.
இனவெறி கொண்ட உக்ரைன் நவநாஜிக் கும்பல்கள் இரஷ்யர்கள் அதிகம் வாழும் கிரீமிய தீபகற்பம் மற்றும் டான்பாஸ் பிரதேசம் ஆகியவற்றில் இனவெறி அடக்குமுறை – அத்துமீறல்களை அரங்கேற்றி வந்தன. இந்த உள்நாட்டு இன அழிப்புப் போரில் 14,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரஷ்யா 2014-ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் மூலமாக கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
(தொடரும்…)
புதிய ஜனநாயகம்பால்ராஜ்
https://www.vinavu.com/2022/05/23/russia-ukraine-war-risk-of-world-war-part-1/
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2

May 24, 2022
russia-ukraine-war.jpg
 – பாகம் 2
அமெரிக்கப் பதிலிப்போரின் நோக்கம்
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் விநியோகத்திலும் மேலாதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவுக்குப் போட்டியாக இரஷ்யா வளர்ந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது எண்ணெய் இறக்குமதியில் கால்பங்கு அளவிற்கும் இயற்கை எரிவாயுவில் 40 சதவிகிதம் அளவிற்கும் இரஷ்யாவை நம்பியே உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரும் பொருளாதார பலத்தைக் கொண்ட ஜெர்மனி தனது இயற்கை எரிவாயுத் தேவையில் பாதிக்கு மேலானவற்றையும், கச்சா எண்ணெயில் 30 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் இரஷ்யாவையே சார்ந்திருக்கிறது.
2020-ல் ஜெர்மனியின் இயற்கை எரிவாயுத் தேவை 75 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. மின்சாரத் தேவையை அணு ஆற்றலின் மூலம் பூர்த்தி செய்து கொள்கிற பிரான்சும் தனக்குத் தேவையான பெட்ரோலுக்கும், நிலக்கரிக்கும், இயற்கை எரிவாயுவிற்கும் இரஷ்யாவையே சார்ந்திருக்கிறது.
மேலும், உக்ரைனில் ‘ஆரஞ்சு புரட்சி’ ஏற்பட்ட காலத்திற்கு முன்பு வரை, இயற்கை எரிவாயுவை மானிய விலையில் இரஷ்யாவிடமிருந்தே உக்ரைன் பெற்றுக் கொண்டிருந்தது.
000
இரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் எரிவாயுவானது உக்ரைன் மற்றும் போலந்து வழியாக குழாய்கள் மூலம் ஏற்றுமதியாகிறது. இது மட்டுமின்றி, வடக்கு இரஷ்யாவிலிருந்து பால்டிக் கடல் வழியாக, நேரடியாக ஜெர்மனிக்கு வடக்கு எரிவாயு குழாய் (Nord Stream pipeline) திட்டத்தின் மூலம் எரிவாயு அனுப்பப்படுகிறது.
2018-ம் ஆண்டு வடக்கு எரிவாயு குழாய்-2 திட்டம் தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் உக்ரைன், போலந்து போன்ற நாடுகள் வழியாக தரை மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இரஷ்யா எரிவாயுவை அனுப்பத் தேவையில்லை. எரிவாயுவை ஐரோப்பாவுக்கு அனுப்புவதற்காக உக்ரைன், போலந்து நாடுகளுக்கு இரஷ்யா கப்பமும் கட்டத் தேவையில்லை.
இந்த எரிவாயுத் திட்டத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான 13,500 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை இரஷ்யா அனுப்ப முடியும் என்பதோடு வர்த்தகத்தையும் வலுவாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
அதேவேளையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு சந்ததையை ஆக்கிரமிக்கத் துடிக்கிறது. உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரைக் காரணம் காட்டி இரஷ்யா மீது அமெரிக்காவும், ஜரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இரஷ்ய எதிர்ப்பு : ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே முரண்பாடுகள்
அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து இரஷ்யா, சீனா தலைமையில் அணிதிரளும் நாடுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் உறுதியான அணியாய் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் காட்சிப்படுத்தப்படுகிறது. உண்மை என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் கட்டற்ற ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அக்கூட்டணிக்குள்ளேயே முரண்பாடுகள் தீவிரமாகிவருகிறது.
ஆஸ்திரியா, ஜெர்மனி, ஹங்கேரி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இரஷ்யா மீதான எரிவாயு தடையை ஆதரிக்கவில்லை. இவற்றுள் ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகியவை நேட்டோ கோரியபடி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்துவிட்டன. ஜெர்மனியும் தொடக்கத்தில் ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டியது. அமெரிக்கா மற்றும் இதர நேட்டோ நாடுகளின் தொடர்ச்சியான விமர்சனத்திற்கு பிறகே ஆயுதங்களை வழங்க சம்மதித்தது.
பெரும்பான்மையான நாடுகள் இரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்தாலும் நீண்ட காலத்திற்கு அதைத் தொடர முடியாது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) “இரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நல்லதல்ல” என்று விமர்சித்துள்ளது. உண்மையும் அதுதான். இரஷ்யாவின் எரிவாயுவிற்கு உறுதியான மாற்று எதுவும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளிடம் இல்லை.
nato.jpgஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் (CREA – Center For Research on Energy and Clean Air) என்ற அமைப்பு கடந்த மாத இறுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உக்ரைன் போருக்கு பின்னரே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விற்றதன் மூலம், இரஷ்யாவுக்கு கிடைத்துள்ள இலாபம் இருமடங்காக உயர்ந்துள்ளதாம். இதுவரை 4,600 கோடி ஈரோ இலாபம் ஈட்டியுள்ளது இரஷ்யா. இதுதான் சொல்லிக்கொள்ளப்படும் பொருளாதாரத் தடையின் இலட்சணம்.
இச்சூழலில் மற்றொரு புள்ளிவிவரமும் வெளியாகி நமக்கு நகைப்பை வழங்குகின்றது. 2014-ஆம் ஆண்டு இரஷ்யாவின் கிரிமிய இணைப்பு நடவடிக்கைக்காக ஐரோப்பிய யூனியன் இரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்க தடைவிதித்தது. ஆனால், இத்தடையை மதிக்காமல் அவ்வாண்டுக்குப் பிறகே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் 23 கோடி ஈரோ அளவிற்கு இரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்றுள்ளனவாம். அது தற்போது உக்ரைனுக்கு எதிராக இரஷ்யாவால் பயன்படுத்தப்படலாம் என்று செய்திகள் உலாவருகின்றன.
சரிந்துவரும் பெட்ரோ-டாலரின் மேலாதிக்கமும் இரஷ்ய-சீனக் கூட்டணியும்
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, உலகின் 88 சதவிகிதம் வர்த்தகம் டாலரிலேயே நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துள்ள இரஷ்யாவும் சீனாவும் டாலரின் இந்த மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட எத்தனிக்கின்றன. குறிப்பாக இரஷ்யா எண்ணெய் வர்த்தகத்தில் டாலரின் மேலாதிக்கத்திற்கு சாவால்விட்டுக் கொண்டிருக்கிறது.
1970-களின் முற்பகுதியில், அமெரிக்கா எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியாவுடன் உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. 50 ஆண்டுகாலம் பெட்ரோ-டாலரின் ஆதிக்கம் கேள்விக்கிடமற்ற முறையில் நிலைநாட்டப்பட்டது.
ஆனால், 2014-ஆம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்த பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டபோது, இந்நிலை இரஷ்யாவால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. டாலர் வர்த்தகம் மேலாண்மை செலுத்தும் சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பான ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) மாற்றாக எஸ்.பி.எஃப்.எஸ். (SPFS – System for Transfrer of Financial Messages) எனும் அமைப்பை இரஷ்யா உருவாக்கியது. இது ரூபிளில் வர்த்தகம் செய்வதற்கு பிறநாடுகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
இதேபோல 2015-ஆம் ஆண்டு ஸ்விஃப்ட்-க்கு (SWIFT) மாற்றாக சீனாவும் சி.ஐ.பி.எஸ் (CIPS – China’s Cross-Border Interbank Payment System) என்ற அமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. இது சீன நாணயமான யுவானில் வர்த்தகம் செய்ய முன்வரும் பிறநாடுகளை ஒருங்கிணைக்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி அந்நாட்டுடன் டாலர் அல்லாத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இன்ஸ்டெக்ஸ் (INSTEX – Insrtument in Support of Trade Exchanges) என்ற பொறியமைவை உருவாக்கியுள்ளார்கள். 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உருவாகிய இந்த அணியில், அவ்வாண்டின் இறுதிக்குள்ளாகவே பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன் ஆகிய இதர ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைய விரும்புவதாக கூட்டாக அறிவித்தன. இரஷ்யாவும் இம்முயற்சியை வரவேற்றிருந்தது.
இவையன்றி இரஷ்யா தலைமையில், ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்த்தான், கிரிகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட யுரேசிய பொருளாதார ஒன்றியம் (EAEU – Eurasian Economic Union) என்ற கூட்டமைப்பு; பிரிட்டன், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு ஆகியவையும் டாலரின் மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிகளாக உள்ளன.
000
முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை டாலருக்கு மற்றாக இதர நாணயங்களிலும் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளன. குறிப்பாக சவூதி அரேபியா சீனாவின் யுவானை அங்கீகரிக்கவிருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன. சமீபத்தில் இஸ்ரேலும் சீனாவின் யுவான் நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நாடுகளெல்லாம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இரஷ்யாவின் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், அந்நாட்டிடமிருந்து 30 சதவிகித தள்ளுபடியில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், பெட்ரோ-டாலரின் மேலாதிக்கம் எந்த அளவிற்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்.
இரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக, இனி ஐரோப்பிய நாடுகள் இரஷ்யாவிடமிருந்து பெறும் எண்ணெய், இயற்கை எரிவாயுவிற்கான தொகையை டாலருக்கு மாற்றாக ரூபிளில் செலுத்தும்படி கேட்கிறது இரஷ்யா.
ரூபிளில் வர்த்தகம் செய்ய வேண்டுமானால், அந்நாடுகளுக்கு ரூபிள் கையிருப்பில் இருக்க வேண்டும். அதற்கு இரஷ்யாவுடன் வர்த்தம் செய்ய வேண்டும். இரஷ்யாவின் இந்நிபந்தனை, ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரத்தடைகளை தாங்களே கைவிடக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுவரை நான்கு ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களது கொள்முதலை ரூபிளில் செய்வதற்கு முன்வந்துள்ளன.
நேட்டோ: இரஷ்யா-சீனாவுக்கு எதிரான உலகு தழுவிய இராணுவக் கூட்டணி!
அமெரிக்காவானது சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை எப்படியாவது முட்டுக் கொடுத்து தக்கவைத்துக் கொள்ளப் போகிறதா அல்லது தோல்வியுற்று வீழப்போகிறதா என்பதை உக்ரைனில் நடக்கின்ற போரில், இரஷ்யாவின் வெற்றி-தோல்விதான் தீர்மானிக்கப்போகின்றது. அதனால்தான் “இரஷ்யாவை முடமாக்குவதே எங்கள் இலங்கு” என அறிவித்திருக்கிறது அமெரிக்கா.
இரஷ்யாவுக்கோ தனது எதிரியான அமெரிக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்தி தன் வளர்ச்சிக்கு சாதகமான உலக நிலைமையை உருவாக்கிக் கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பு. எனவே போர் உக்கிரமாக நடக்கிறது.
அமெரிக்காவுக்கு எதிரான அரசியல்-பொருளாதார மேலாதிக்கப் போட்டியில், இரஷ்யாவும் சீனாவும் கூட்டாகச் செயல்படுகின்றன. எனவே அமெரிக்கா இவ்விரு நாடுகளையும் ஒருசேர எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தற்போது அமெரிக்காவை மதிக்காமல் இந்தியா இரஷ்யாவுடன் நெருக்கம் பேணுவதால், சீனாவுக்கு எதிராக இந்தியாவை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான குவாட் இராணுவக் கூட்டணி பலவீனமாகிவிட்டது. ஆகவே இரஷ்யா மட்டுமல்லாது சீனாவையும் சுற்றி வளைத்து வீழ்த்துவதற்காக நேட்டோவை பேரளவில் விரிவுபடுத்தும் திட்டத்தை வைத்துள்ளது அமெரிக்கா.
நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் டெலிகிராப் இதழுக்கு அளித்த பேட்டியில், இரஷ்யா மட்டுமல்லாது சீனாவும் உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் அதையும் கருத்தில் கொண்டு எங்கள் கொள்கையை வகுத்துக் கொள்ளவிருக்கிறோம் என்று கூறினார். இதுகுறித்து ஜீன் மாதம் நடக்கவுள்ள நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாகவே முடிவுசெய்வோம் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் போருக்கு உதவுவதற்காக ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில், நேட்டோ அல்லாத 13 நாடுகளை அழைத்திருந்தது அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்கத் திட்டத்திற்கு துலக்கமான சான்று.
Nato-1.jpgஅம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரிலேயா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேல், கத்தார், ஜோர்டன் ஆகிய நாடுகளும் ஆப்பிரிக்காவிலிருந்து கென்யா, லைபீரியா, மொரோக்கோ மற்று துனிசியா ஆகிய நாடுகளும் கலந்துகொண்டிருந்தன.
வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் தொடங்கி கிழக்கு ஐரோப்பய நாடுகள் வரை இணைத்துக் கொண்டு இரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நேட்டோ கூட்டணி, சீனாவையும் இரஷ்ய-சீன செல்வாக்கு மண்டலங்களையும் சுற்றுவளைப்பதற்காக உலகம் முழுக்க விரிவடைய இருக்கிறது.
மேலாதிக்கத்துக்கான இழுபறியில் நாம் அணிசேர முடியாது
பனிப்போர் தோல்விக்கு பின் மீண்டும் பழைய வகையில் இரஷ்யா அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. சீனா அரசியல், பொருளாதாரம், இராணுவம் ஆகிய அனைத்திலும் ஏகாதிபத்தியங்களுடன் போட்டிப் போடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
2008-இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை. தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு தளர்ந்துவரத் தொடங்கியது. அதற்கு மொத்தமாக முடிவுரை எழுதுவதற்கு இரஷ்யாவும் சீனாவும் கூட்டணி அமைத்துக் கொண்டு முன்னேறுகின்றன. இந்த இருபிரிவுகளுக்கு இடையிலான போராட்டம்தான் இன்றைய சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்காக உள்ளது.
இருபிரிவிலும் இல்லாமல் தாங்கள் நடுநிலைவகிப்பதாகவும் சுயேட்சையாக நிற்ப்பதாகவும் கதையளக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. மேற்ச்சொன்ன இழுபறியில் எந்த பிரிவு வலுப்பெறுகிறதோ அந்த கூட்டணியை தழுவிக்கொள்வதற்காக அவைகள் காத்துக்கிடக்கின்றன. முடிவான நிலை எதுவும் ஏற்பட்டுவிடாத காரணத்தால் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பொருளாதாரத்தை மீட்க எந்த வழியும் தெரியாத அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், புரட்சியின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுப்பதற்கும், தமது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான கடைசி ஆயுதங்களாக பாசிசத்தையும் உலகப் போரையும் கருதுகின்றன.
இந்த உலகச் சூழலின் பின்னணியிலிருந்துதான் உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரைப் பார்க்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான இடதுசாரி அணியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் அமெரிக்காவின் நேட்டோ விரிவாக்க அடாவடிகளை மட்டுமே கண்டிப்பதைப் பார்கிறோம். இரஷ்யா குறித்து விமர்சிப்பதில்லை.
இரஷ்யாவின் போரை ‘தற்காப்புப் போர்’ என்று அவர்கள் வரையறுக்கின்றனர். அது ஒருவகையில் உண்மைதான் எனினும் போரிடும் இரண்டு நாடுகளும் ஏகாதிபத்தியங்கள் என்பதை நாம் மறந்தவிடக்கூடாது.
இப்போரில் வெற்றி பெறுவதன் மூலம் தான் சுற்றி வளைக்கப்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், அமெரிக்க மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாகுவதன் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் இப்போரைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது இரஷ்யா. இதைத்தான் கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரில், அவைகள் பலவீனமடைவதை பாட்டாளி வர்க்கம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்; பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு ஏகாதிபத்தியத்துக்கு (அமெரிக்கா) எதிராக மற்றொரு ஏகாதிபத்தியத்தை (இரஷ்யா) ஆதரிக்க முடியாது.
மாறாக ஆதிக்கத்துக்கான இப்போரில் ஏதோவொரு வகையில் தங்கள் நாடுகளையும் அணிசேர்க்க எண்ணி இரஷ்ய எதிர்ப்பு, நேட்டோ ஆதரவு, போர்வெறி-தேசவெறி பிரச்சாரத்தில் ஈடுபடும் மற்றும் போலியான நடுநிலை வகிக்கும் சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களை புரட்சிகர சக்திகள் தோலுரிக்க வேண்டும்; உள்நாட்டுப் புரட்சிப் போருக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும்!
புதிய ஜனநாயகம்பால்ராஜ்

 

https://www.vinavu.com/2022/05/24/russia-ukraine-war-risk-of-world-war-part-2/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.