Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள்

  • அதாஹோல்பா அமேரீஸ்
  • பிபிசி நியூஸ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சீன முதலீடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனாவின் 'விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு' அங்கு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஒரு முக்கிய காரணம்.

இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சீனா, கடந்த 40 ஆண்டுகளில் தனது 85 கோடி குடிமக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியுள்ளது.

1976 இல் மாவோ சேதுங்கின் மரணத்திற்குப் பிறகு சீனா தனது கொள்கையை சிறிது மாற்றி, பழமைவாத கம்யூனிசத்திற்கு பதிலாக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய பாதையை ஏற்றுக்கொண்டது.

அந்நிய முதலீட்டுக்கு நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டது.

இதன் விளைவாக அடுத்த சில தசாப்தங்களில் முதலீடு அதிகரித்தது மற்றும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக ஒன்பது சதவிகிதத்தில் வளரத் தொடங்கியது.

அந்நிய முதலீட்டில் சரிவு

ஆனால், பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் போக்கு தற்போது தலைகீழாக மாறுவதாக தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறிப்பாக யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில், சீன நாணயமான யுவானில் பத்திரங்கள் வடிவில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 150 பில்லியன் டாலர்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

"இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவுக்குள் மூலதன வரத்து அதிகரித்தது. ஆனால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறும் வேகம், எந்த ஆண்டிலும் எந்த ஒரு காலாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்தக்காலாண்டில் மிக அதிகமாக இருந்தது. இந்தப்போக்கு ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்தது," என்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸின் மே மாத அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு, சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கூறுகிறது. இது 2021 உடன் ஒப்பிடும்போது இருமடங்காகும். 2021 ஆம் ஆண்டில், 129 பில்லியன் டாலர் மதிப்புள்ள மொத்த சொத்துக்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.

இந்த போக்குக்கான ஐந்து முக்கிய காரணங்களை பிபிசி ஆராய்ந்தது. அடுத்த சில மாதங்களுக்கு இந்த போக்கு தொடர்ந்தால், சீனப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் என்ன, அதைத் தடுக்க சீன அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கண்டறிந்தது.

 

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஷாங்காய் நகரில் பல பெரிய பகுதிகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அங்குள்ள மக்களிடமிருந்து அரசு கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளதால் அங்கு பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

1- 'ஜீரோ கோவிட்' கொள்கை

"ஜீரோ கோவிட் கொள்கையை சீனா செயல்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயின் முதல் அலையின்போது இருந்ததுபோல இது சீனாவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது" என்று ஸ்பெயினின் பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான பேராசிரியர் குவான் ரமோன் ராய்லோ பிபிசியிடம் கூறினார்.

பெருந்தொற்று தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகள் பொதுமுடக்கத்தை முடித்து, பிற கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டன. ஆனால் சீனாவில் அப்படி இல்லை.

பெருந்தொற்றுக்கு முன் சீனாவின் முக்கிய முன்னுரிமை அதன் பொருளாதார முன்னேற்றமாகும். நகரத்தின் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இருப்பினும் சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு இப்போது பொருளாதார முன்னேற்றம் அரசின் முன்னுரிமையாக இல்லை.

ஷாங்காயில், கொரோனா பரவலைத் தடுக்க, அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நகரத்தின் பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகித பங்களிப்பை வழங்குகிறது. இது தவிர, நாட்டின் பிற நகரங்களிலும் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அங்கும் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில், நகரங்களில் வேலையின்மை 6 சதவிகிதம் அதிகரித்தது. அதே நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகள் 0.68 சதவிகிதம் சுருங்கியது. இந்த ஆண்டு சீனா 5.5 சதவிகித வளர்ச்சி விகிதத்தை அடைய முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு.

"பல நிறுவனங்கள் இன்றும் சீனாவை ஒரு பெரிய மற்றும் முக்கியமான சந்தையாகவே பார்க்கின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதைச் செய்வது அவர்களுக்கு கடினமாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட முழு உலகமும் கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வந்துவிட்டது. ஆனால், சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் இப்போதும் நடைமுறையில் உள்ளன," என்கிறார் ஹாங்காங்கில் உள்ள எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் பிரிவின் முதன்மை ஆய்வாளர் நிக் மாரோ.

சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை காரணமாக சீனாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர் என்று மாரோ கருதுகிறார்.

"முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று விதிகள் மாற்றப்படலாம் என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது. இதனால் முதலீடுகளைத் திட்டமிடுவது மற்றும் எதிர்கால திட்டங்களுக்கான முடிவுகளை எடுப்பது கடினம்" என்று அவர் குறிப்பிட்டார்.

"பூஜ்ஜிய கோவிட் கொள்கையை சிறிது காலத்திற்கு சகித்துக்கொள்ளக்கூடிய ஒரு தற்காலிக பிரச்னையாக முதலீட்டாளர்கள் பார்க்கிறார்களா என்பது அடுத்த விஷயம். இந்தக்கொள்கை நீண்ட காலத்திற்கு அமலில் இருந்தால், அவர்கள் இங்கு பணியாற்றுவது சிரமமாக இருக்கக்கூடும்".

 

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சீனாவில் ரியல் எஸ்டேட்டில் பெரும் முதலீடு நிகழ்ந்த பிறகு, இதுபோன்ற படங்கள் காணப்படுவது வழக்கமாகிவிட்டது. இது நாட்டின் கிழக்கில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹுவாங்ஷானில் உள்ள ஒரு கிராமம். இது பல ஆண்டுகளாக பாதி கட்டிமுடிந்த நிலையில் நிற்கிறது.

2. சீனாவின் ரியல் எஸ்டேட் நெருக்கடி

சீனாவின் ரியல் எஸ்டேட் துறை சமீபத்திய தசாப்தங்களில் ஏற்றம் கண்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, வங்கிகளின் அதிகரிக்கும் கடன் சுமை என்ற கருமேகம் இந்தத் துறையை சூழ்ந்துள்ளது. நாட்டின் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது.

சீனாவில் ரியல் எஸ்டேட் நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற அச்சம் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. ஆயினும், பூஜ்ஜிய கோவிட் கொள்கை மற்றும் பொருளாதாரத்தின் பிற காரணிகளின் கலவையின் பயம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது.

"கடந்த தசாப்தத்தில் சீனாவின் பொருளாதாரம் ஏற்றம் அடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மலிவான கடன்கள் மற்றும் இதன் காரணமாக ஏற்பட்ட ரியல் எஸ்டேட் குமிழி," என்கிறார் பேராசிரியர் குவான் ரமோன் ரெய்லோ.

குமிழி உடைந்த பிறகு நாடு இப்போது பலன்தரக்கூடிய மாறுபட்ட மாதிரியை நோக்கி நகர்கிறது. ஆனால் இந்த செயல்முறை 'சிக்கலானது' என்று அவர் கூறுகிறார்.

"இந்த குமிழி உடைந்ததன் தாக்கத்தை கையாளும் செயல்முறை மெதுவாகவே இருக்கும். மேலும் அதில் வேறு வகை சிரமங்களும் இருக்கும். சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடிக்கும் அணுகுமுறையை பார்க்கும்போது, இதன் விளைவு விரைவில் முடிவடையும் என்று தோன்றவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

இது சீன அதிகாரிகளுக்கு தெரியாது என்று சொல்வதற்கில்லை.

ரியல் எஸ்டேட் சந்தையை புதுப்பிக்க அவர்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.மத்திய அரசு வங்கி, அடமான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.

நெருக்கடியை சமாளிக்க வித்தியாசமான பாதையில் செல்லும் சில நாடுகளில் சீனாவும் உள்ளது.

சீனாவுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவின் மத்திய வங்கி மற்றும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் ஆகியவை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

அதிகரித்து வரும் உலகப் பணவீக்கத்தின் மத்தியில் பல நாடுகள் சீனாவின் இந்த நடவடிக்கையை ஆபத்தானதாகக் கருதுகின்றன. ஆனால் ரியல் எஸ்டேட் நெருக்கடியை சமாளிக்க சீனா, பொருளாதாரத்தில் அதிக பணத்தை கொண்டுவரத்தயாராக உள்ளது.

 

புதின் - ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையே கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தை சமாளிக்க தங்களிடையே வலுவான உறவுகளை வலியுறுத்துகின்றனர்.

3. ரஷ்யா, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்

யுக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து, உலக அளவில் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதற்காக ரஷ்யா மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தைவானுக்கு எதிராக ஷி ஜிங்பிங் ராணுவ நடவடிக்கையை அறிவித்தால், ஹாங்காங்கில் வளர்ந்து வரும் சீன எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவர பலப்பிரயோகம் செய்யமுடிவு செய்தால் அல்லது தன் அண்டை நாட்டுடனான எல்லை பிரச்னையை தீர்க்க ராணுவ பலத்தை பயன்படுத்த முடிவு செய்தால், சீனாவில் தங்கள் முதலீட்டின் வருங்காலம் என்னவாகும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

மறுபுறம், யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல் விஷயத்தில் ரஷ்யாவின் பக்கம் சீனா நிற்பது முதலீட்டாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

"ரஷ்யாவுடனான சீனாவின் உறவுகள் குறித்து சந்தையில் கவலை உள்ளது. இது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. யுக்ரேன் மீதான தாக்குதலின் விளைவுகள் இப்போது தெரியத் தொடங்கியுள்ளன" என்று முதலீட்டு சேவையான SPI அசெட் மேனேஜ்மென்ட்டின் நிர்வாக பங்குதாரரான ஸ்டீபன்ஸ் இன்னிஸ் கூறுகிறார்:

"முதலீட்டாளர்கள் சீனப் பத்திரங்களை விற்கத் தொடங்கினர். நாங்கள் சீனப் பத்திரங்களை வாங்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று ப்ளூம்பெர்க்கிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்டீபன்ஸ் கூறினார்.

"இப்போது படிப்படியாக உலக வர்த்தகம் பிராந்திய மட்டத்தில், அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மற்றும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில்," என்று விளக்குகிறார் பேராசிரியர் ராய்லோ.

"மேற்கத்திய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்ற குழுவில் உள்ள நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிப்பது தங்கள் நலன்களுக்கு எதிராக இருக்கலாம் என்று நம்பத் தொடங்கியுள்ளன. அதனால் அவர்கள் அந்த சந்தையை இழக்கத் தயாராக உள்ளனர்."

 

சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பொருளாதார மற்றும் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் சீனாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் ஆழமடைந்துள்ளன. கூடவே ஜனநாயக மதிப்புகள் மற்றும் மனித உரிமைகள் குறித்து சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே சூடான விவாதங்கள் உள்ளன," என்று ஆய்வாளர் நிக் மாரோ மேலும் கூறுகிறார்.

உலகின் மிகப்பெரிய செல்வ நிதி நிர்வாக நிறுவனமான நார்வேயின் நோர்ஜஸ் வங்கி முதலீட்டு மேலாண்மை, இந்த ஆண்டு மார்ச் மாதம் சீன விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பாளரான லி நிங்கின் பங்குகளை சேர்க்க மறுத்தது. 'இதில் பெரிய ஆபத்து உள்ளது. இது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடும்,' என்று அதற்கு காரணம் கூறப்பட்டது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பருத்தி துணி உலகின் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், இந்தத் துணியைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இந்தப் பிரச்னை காரணமாக, சில மேற்கத்திய பிராண்டுகள் கடந்த ஆண்டு ஜின்ஜியாங் பருத்தியை விநியோகச் சங்கிலியில் இருந்து அகற்றியுள்ளன. இது இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சீன பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா மற்றும் பிற பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளர்கள் விசாரணையை துவக்கினர். இதன் காரணமாக ஜாக் மா பல பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

4. தனியார் துறையின் கொள்கை

பொருளாதாரத்தில் ஏற்றம் மற்றும் நாட்டிற்குள் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றுடன் கூடவே தனது சுதந்திர சந்தை மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு சீனா, சீர்திருத்தங்களை செயல்படுத்தியது.

"தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டுமே இதன் மூலம் பயனடைந்திருக்கலாம். ஆனால் சீர்திருத்த திட்டம் பாதியிலேயே நின்றுபோனது" என்கிறார் நிக் மாரோ.

"தற்போது பல துறைகளில், குறிப்பாக தொழில்நுட்ப விஷயத்தில் தங்கள் தொழிலைப் பாதுகாப்பதற்காக அரசுகள், அவற்றில் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்காக தேசிய பாதுகாப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டில், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சீன அரசு, தனது பிடியை இறுக்கத் தொடங்கியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் அலிபாபா போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

கட்டுப்பாட்டாளர்களின் நடவடிக்கை, ஜாக் மாவின் நிறுவனத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 'நம்பிக்கை இல்லை' என்ற போர்வையில், அந்த நிறுவனத்தின்மீது சுமார் 2.8 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. சீனாவின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய அபராதத் தொகையாகும்.

சீன அரசு, மாகாணங்களின் கைகளில் அதிக அதிகாரத்தை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது பொருளாதார வளர்ச்சியின் பாதைக்கு திரும்புவதற்கான முயற்சிகளை மெதுவாக்கலாம்.

இந்தத் துறையில் கொள்கைகளின் தாக்கம் குறித்து அரசு தீவிரமாக இருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமீபத்தில், செய்தி முகமைகளான ராய்ட்டர்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க், ஆதாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தன. ஆனால் இது வரை அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 

ஷாங்காய் பங்குச்சந்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2021 இன் முதல் மாதங்களில், ஷாங்காய் பங்குச் சந்தை வேகமாக சரிந்தது.

5. சந்தை, வணிகம் மற்றும் அரசு

சமீபத்திய மாதங்களில், சீனாவின் பங்குச் சந்தையாலும், தங்கள் முதலீடுகளுக்கான அதிக பலனை முதலீட்டாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை.

ஷாங்காய் பங்குச் சந்தை ஏப்ரல் பிற்பகுதியில் மிகக் குறைந்த மட்டத்தில் திறக்கப்பட்டது, அதன் பிறகு அது ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால் அது ஆண்டின் தொடக்க நிலையை நெருங்கவில்லை. அதே நேரத்தில், மே மாதத்தில், சீன நாணயமான யுவானின் மதிப்பு ,டாலருக்கு எதிராக இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் இருந்தது.

ஆயினும் சீன சந்தையில் காணப்படும் சரிவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற சந்தைகளில் காணப்படும் சரிவை விடக்குறைவு என்றும் கூறலாம். 2021 ஆம் ஆண்டில் அதிகபட்ச அளவை எட்டிய பிறகு இந்த சந்தைகளிலும் சரிவுப்போக்கு ஏற்படத்தொடங்கியுள்ளது.

முதல் காலாண்டில் சீனாவின் வர்த்தக உபரி 200 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இதற்கு ஒரு காரணம் ஏற்றுமதியில் ஏற்பட்ட குறைவு. ஆனாலும் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்கு வெளியே சென்றதால் ஏற்பட்ட நஷ்டத்தை இது ஓரளவு ஈடுகட்டியது.

இந்நிலையில், தனது ஏற்றுமதி உறுதிமொழிகளை நிறைவேற்றும் அளவுக்கு அன்னியச் செலாவணி உள்ளதால், அன்னிய முதலீடு நாட்டைவிட்டுச்செல்வது சீனாவை அதிகம் பாதிக்காது என்று சர்வதேச நிதி கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் செய்யப்படும் முதலீட்டிற்கு அதன் சொந்த சிரமங்களும், வரம்புகளும் உள்ளன என்று இந்தக்கழகம் கூறுகிறது.

"பெரிய நிறுவனங்கள் இந்த சந்தையை விட்டு வெளியேற விரும்புவதை நாங்கள் காண்கிறோம். ஆனால் இதை ஒரு வெளியேற்றமாக நாம் கருதக்கூடாது. இவற்றில் பல நிறுவனங்கள், பல தசாப்தங்களாக சீனாவில் இயங்கி வருகின்றன. இங்கிருந்து வெளியேறுவதற்கான அவர்களது முடிவு எளிதாக இருக்காது," என்று அது மேலும் தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/global-61886346

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.