Jump to content

அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

அதிமுக பொதுக்குழு

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே விவகாரத்தில் வைரமுத்து என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று தமது தீர்ப்பை அளித்தார். அதன் விரிவான தகவலை இங்கே வழங்குகிறோம்.

இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள முழு தகவலும் ஆய்வு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய மனுக்களில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் வழங்க முகாந்திரம் ஏதுமில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

தற்போது நீதிமன்றம் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்னை, அதிமுகவின் விவகாரம். கட்சி உள் விவகாரங்கள் அல்லது எந்தவொரு விவகாரத்திலும் ஒரு கட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானம், விதிகள் திருத்தம் போன்றவற்றில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு நுழையக்கூடாது என்பதே சட்டம்.

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லாததால், இது நீதிமன்றங்கள் தலையிடக் கூடாத விஷயமாக கருதப்படும். இவை நீதிமன்ற அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டவை. சொந்த விதிகளுக்கு உள்பட்டு கட்சி விவகாரங்கள் நிர்வகிக்கப்படும்போது, அது பொதுக்குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படி நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

ஜனநாயகமே பெரியது

 

அதிமுக பொதுக்குழு

ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினரின் விருப்பமே மேலோங்கியிருக்க வேண்டும்.

உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மையாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு முடிவு தீர்மானிக்கப்பட வேண்டும் என பொது விதி கூறுகிறது.

ஒரு கட்சி/அமைப்பின் உள் நிர்வாக விஷயங்களில் பெரும்பான்மையினர் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தினால், நீதிமன்றங்கள் பெரும்பான்மையினரின் முடிவில் தலையிடாது.

நிர்வாகத்தின் செயல்கள் கட்சியின் அதிகார வரம்புக்குள்ளேயே இருந்தால், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கும் இடையிலான எந்தவொரு சர்ச்சையும் சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்புக்குள்ளாக இருக்கும் விதிகளின்படியே தீர்மானித்துக் கொள்ளப்பட வேண்டும். அவை நீதிமன்றத்தால் தீர்க்கப்படக் கூடிய விஷயங்கள் அல்ல.

பொதுக்குழுவுக்காக விடுக்கப்பட்ட கட்சி நோட்டீஸ் கட்சி விதிகளின்படி செல்லுமா என்பதை ஆராய்ந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுக்குழுவில் உள்ள 2,665 உறுப்பினர்களில் 2,190 உறுப்பினர்கள் 23.06.2022 நடந்த கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழுவைக் கூட்ட கையொப்பமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொதுக்குழுவை கூட்ட முகாந்திரம் உண்டு

 

அதிமுக பொதுக்குழு

அதே கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.07.2022 அன்று நடைபெறும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தை கூட்டுவது குறித்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத்தலைவர் கூறியுள்ளார்.

இத்தனைக்கும், கட்சி விதி 19(vii)-இன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் 15 நாட்களுக்கு முன்கூட்டிய பொதுக்குழுவுக்கான முன்னறிவிப்பு தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய அறிவிப்பை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று விதிகளில் கூறப்படவில்லை.

அந்த வகையில், 11.01.2022 அன்று பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்து 23.06.2022 அன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பே நோட்டீஸாக கருதப்பட முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது.

கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?

 

அதிமுக பொதுக்குழு

இந்த வழக்கில், மனுதாரர்கள் (ஓபிஎஸ், வைரமுத்து) நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளனர். கட்சி உறுப்பினர்களின் ஆதரவையோ நம்பிக்கையையோ பெற முடியாத நிலையில் அவர்கள் நீதிமன்றங்களை தங்களுடைய கருவிகளாகக் கொண்டு தங்களை மீட்கக் கோரி தங்களுடைய சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு தலைவர், பொதுக்குழுவை அணுகி, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி கட்சியின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமக்குள்ள யோசனைகள் மற்றும் திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மீண்டும் நீதிமன்றத்துக்கு விரைந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

தன்னால் சாதிக்க முடியாத முடியாததை, நீதிமன்றத்தின் மூலம் அடைய மனுதாரர் விரும்பியிருக்கிறார். நிச்சயமாக, நீதிமன்றங்கள் கட்சியின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கும். அதுவும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு முரணாக ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் எதிர்க்கும் விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது.

ஏதேனும் கட்சி விதி மீறல் மற்றும் விதிகளுக்கு எவரும் இணங்காத பட்சத்தில், பொதுக்குழுவால் அது நன்கு அங்கீகரிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் பொதுக்குழுவின் முன்பாக தமது குறைகளை முன்வைக்கலாம் அல்லது முடிவை ஏற்கக் கூடாது என்று கூறலாம். ஒருவேளை தமது குரலை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது அவர் தமது உரிமையை கேட்டுப்பெற சிவில் நீதிமன்றத்தை அணுகலாமே தவிர இந்த நீதிமன்றத்தை அல்ல.

மனுக்கள் தள்ளுபடி

 

அதிமுக பொதுக்குழு

மேலே குறிப்பிட்ட விவாதங்களின்படி கட்சி அல்லது சங்கத்தின் உள் விவகாரங்களில், நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடாது. கட்சி மற்றும் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட துணைச் சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறையை கொண்டு சிறந்த நிர்வாகத்தை வழங்கும்.

மேலும், கட்சியின் துணைச் சட்டங்களை உருவாக்குதல், திருத்துதல், மாற்றுதல், ரத்து செய்தல் ஆகியவற்றுக்கான அதிகாரம், சந்தேகத்திற்கு இடமின்றி, கட்சியின் பொதுக் குழுவிற்கு உள்ளது. அத்தகைய துணைச் சட்டங்களுடன் இணைக்கப்பட்ட எந்த சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாத நிலையில் பெரும்பான்மை முக்கிய பங்கினர் முடிவெடுக்கும் உள்விவகார செயல்பாட்டில், இந்த நீதிமன்றம் தலையிட முடியாது.

இந்த அம்சங்களின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணங்களை பெறும் வகையிலான வாதங்களை மனுதாரர் முன்வைக்கவில்லை. அதன்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்திக் கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-62118505

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.