Jump to content

இலக்கிய சிகரம் பேட்டி - பகுதி 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

4E138DD9-2BC8-4496-9405-F3A20FEECED8_1_201_a.jpeg

 

 

2021 டிசம்பரில் இலக்கிய சிகரம் எனும் இதழில் வெளியான பேட்டி இது. நான்கு பகுதிகளாக வெளியிடப் போகிறேன். முதற் பகுதி இங்கே:

 

சொல்வனம், இலக்கிய சிகரம் பேட்டி

- ஆர். அபிலாஷ்

 

  1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா?
  2.  

பதில்: என் அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர் கோயில் அருகிலுள்ள பத்மநாபபுரம் எனும் சிற்றூர்.

அம்மாவுக்கு விளவங்கோடு தாலுகாவில் உள்ள காஞ்சாம்புறத்தில் உள்ள, கடலை ஒட்டிய,

வைக்கலூர் எனும் பகுதி. நான் பள்ளிக் கல்வி பயின்றது தக்கலையில். கல்லூரிக் கல்வியில் இளங்கலையை நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும், முதுகலையை சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்தேன்.

இப்போது பெங்களூரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக உள்ளேன்.

 

இந்த வேலைக்கு எப்படி வந்தேன் என்பது சுவாரஸ்யமான கேள்வி:

எனக்கு தொழில்பூர்வமான வாழ்வில் மிகுதியான ஈடுபாடு காட்டுவதில் நம்பிக்கை இல்லை. அது என் இயல்புக்கு ஏற்றதல்ல. நிறைய பணம், அதிகாரத்தை அடைவதில் எனக்கு ஆர்வம் ஏற்படுவதில்லைமாறாக எழுத்துக்கு இடையூறு இல்லாத வேலை என்பதே என் இலக்காக எப்போதும் இருந்ததுபடிப்பை முடித்த பிறகு கல்லூரி ஆசிரியராக விரும்பினேன். ஆனால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்காலிகமாக ஒரு காப்பி எடிட்டராக வேலை செய்தேன். பின்னர் அவ்வேலை பிடித்துப் போய் ஆசிரியராகும் விருப்பத்தை மறந்து போனேன். அறிவியல் சார்ந்து வாசிக்க அந்த வேலை உதவியது. ஏஸியில் இருந்து கொண்டு கணினியில் வேலை செய்வது, இளைஞர்கள் மத்தியில் இருப்பது, கார்ப்பரேட் கலாச்சாரம் பிடித்திருந்தது. ஆனால் ஒருநாள் என்னுடைய அணியிலுள்ளவர்களுக்கு மொழி சார்ந்த எடிட்டிங் பயிற்சி அளிப்பதற்கு சொன்னார்கள். நான் அதை அவ்வளவு மகிழ்ச்சியுடன் செய்தேன். அதன் பிறகு என்னை மொழிப் பயிற்சியாளனாக்கி வாரம் சில வகுப்புகள் எடுக்க சொன்னார்கள். நான் அதை உள்ளுக்குள் கொண்டாடினேன். அந்த நிறுவனத்தில்

சில மாற்றங்கள் நிகழ்ந்து எங்கள் அணி கலைக்கப்பட்டது. நான் அப்போது தான் பாடம் சொல்லித் தருவது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிற செயலாக உள்ளது, அதனால் இனி ஆசிரியர் வேலைக்கு முயலலாம் என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து கல்லூரி ஒன்றில் வேலையும் பெற்றேன். அது என் வாழ்வின் மிகச்சிறந்த காலகட்டம் எனச் சொல்வேன். ஒரு புத்தம் புதிய மனிதனாக, புத்துயிர்ப்பு பெற்றவனாக உணர்ந்தேன். எழுதுவதற்கு, படிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைத்தது. தினமும் நிறைய மாணவர்கள் மத்தியில் இருப்பது அவ்வளவு உற்சாகத்தை அளித்தது. அந்த காலகட்டத்தில் தான் நான் என்னுடைய முதல் நாவலான கால்களை எழுத ஆரம்பித்தேன். அந்த நாவல் தான் எனக்கு சாகித்ய அகாதெமி யுவ புரஷ்கார் விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் ஆசிரிய வேலையில் ஸ்திரத்தன்மை வேண்டுமெனில் முனைவர் பட்டம் அவசியம்அதற்காக ஆய்வுக்காக வேலையை விட்டு விட்டு பகுதிநேர வேலைகளை (பெரும்பாலும் எடிட்டிங்)

செய்தேன். நான் என் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விட்டு பட்டம் கிடைக்கும் இடைவேளையின் போது ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்துக்கு சென்றேன். என்னை நேர்முகம் செய்தவர்களில் முக்கியமானவர் பின்னாளில் எனக்கு மேலாளராக வந்தவர். அவரை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. (அவரைப் பற்றி பின்னர் ஒரு சிறுகதை எழுதினேன்.) அதனாலே வேறு வேலை வாய்ப்புகளை விட்டு விட்டு அங்கேயே சேர்ந்து

 கொண்டேன். அந்த வேலையும் எனக்கு முக்கியமான திறப்புகளைத் தந்தது. அது புத்தகங்களை எடிட் செய்யும் வேலை. இலக்கிய, தத்துவம், சினிமா கோட்பாட்டு புத்தகங்களை என்னிடம் தந்து விடுவார்கள். (நான் அங்கு எடிட் செய்த கோட்பாட்டு புத்தகம் பின்னாளில் நான் இப்போது பணி செய்யும் பல்கலைக்கழகத்தில் பாடநூலானது.) ஒவ்வொரு நூலையும் ஊன்றி வாசித்து நிறைய பரிந்துரைகள், திருத்தங்களுடன் அனுப்புவேன். பொதுவாக எனக்கு நேர்மறையான எதிர்வினைகள் கிடைக்கும் என்பதால் எனக்கு அங்கு நல்ல பெயர் இருந்தது. அங்கு தான் நான் ஹைடெக்கர் குறித்த ஒரு முக்கியமான நூலைப் படித்தேன். அது பின்னமைப்பியல் பற்றின என் பார்வையை மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் பார்வையையும், இலக்கிய அணுகுமுறையையும் நிச்சயம் மாற்றியது.

அங்கும் நான் மொழிப் பயிற்சியாளனாக கூடுதல் பணி செய்தேன். என் சகோதரி பங்களூரில் இருந்தார். அவர் என்னை அங்கு ஒரு பல்கலையில் வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னார்அவருடைய வற்புறுத்தலின் பெயரில் நான் அதைச் செய்தேன். அங்கிருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்த போது எனக்கு போக மனமில்லை. சென்னையை விட்டுப் போக மனமில்லை. பெரிய சம்பளமும் தேவையில்லை. நான் வேலை பார்த்த இடத்தில் கூட இருந்த அணியில் நல்ல நண்பர்கள் இருந்தார்கள்; அந்த மேலாளர் மீதிருந்த நன்மதிப்பு வேறு. எனக்கு அங்கிருந்து கிளம்பவே பிடிக்கவில்லை. ஆனால் அப்போது பார்த்து அலுவலக நடைமுறைகள் மாறினகடுமையான அழுத்தம், வேலை இலக்கை இரட்டிப்பாக்கினார்கள். சரி முயன்று பார்ப்போமே என நேர்முகத்துக்கு கிளம்பினேன். ஒரு பக்கம் மனத்தில் இந்த வேலை கிடைக்காது என்றும், மறுபக்கம்இப்போதைய வேலையின் அழுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியும், வேறு வேலை அவசியம் என்றும் தோன்றிக் கொண்டிருந்தது. இருகூறாக பிரிந்து தத்தளித்துக் கொண்டிருந்தேன். வேலை கிடைத்ததும் நான் ஒரே சமயம் மிகவும் வருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன் - பெங்களூருக்கு இடம் பெயர வேண்டுமே எனும் நிரந்தர வருத்தம், நேர்முகத்தில் வெற்றி கிடைத்த தற்காலிக மகிழ்ச்சி இன்னொரு பக்கம்அப்போது கூட இன்னொரு வேலை கிடைத்தால் சென்னையிலே கிடைத்தாலே அங்கேயே இருந்து விடலாம் என நினைத்தேன். அந்த மூன்று வாரங்கள் கடுமையாக அதற்கு முயன்றேன். ஆனால் வேலை ஏதும் சென்னையில் அமையவில்லை. அதனால் கசப்புடன் கவலையுடன் பெங்களூருக்குப்

புறப்பட்டேன். அந்த தருணம் என் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடும் என அப்போது எதிர்பார்க்கவில்லை

 

ஒவ்வொரு முறை ஒரு முக்கியமான மாற்றம் என் தொழில்வாழ்வில் நிகழும் போதும் அது என்

தனிப்பட்ட வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும். இந்த முறையும் அப்படியே நடந்தது -

சென்னையில் இருந்து வந்தது என் குடும்பத்துடனான என் உறவை உடைத்தது. குடும்பத்தை இழந்து தனிமையானேன். கடுமையான விரக்திக்கும் துக்கத்துக்கும் ஆளானேன். பிறகு அது என்னை அன்றாடத்தில் ஆர்வமற்றவனாக, கடுமையான எதிர்மறை எண்ணம் கொண்டவனாக்கியது. **** பற்றி நிறைய யோசித்தேன். நேரில் யாராவது லேசாக சீண்டினாலே தன்னை மறந்து கோபம் கொள்ளுகிறவனாக மாறினேன். ஒருநாள் மாலையில் நான் வேலை முடித்து விட்டு வெளியே வந்து ஒரு கடைக்கு சென்று விட்டு வரும் போது என்னுடைய வண்டியை நிறுத்தி இருந்த இடத்தில் அதை மறித்தபடி யாரோ இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்கள். ஒரு சின்ன விசயம் தான் ஆனால் உலகமே என்னை தடை செய்யும் நோக்கில் அங்கு மறித்து நிற்பதாகத் தோன்றியதுசொல்லப் போனால் இதையெல்லாம் யோசிக்கக் கூட அவகாசம் இல்லாமல் என் மனம் செயல்பட்டது. ஒரு ஆவேச அலை என்னை அடித்து சென்றது. அந்த வாகனத்தை என்ன செய்வது என யோசித்து அதன் கண்ணாடியை முஷ்டியால் குத்தி உடைத்தேன். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து தெறிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கூடவே என் முஷ்டியும் கிழிந்து ரத்தம் பெருகிக் கொட்டியது. ஆனால் எனக்கு வலி மட்டும் ஏற்படவில்லை. வீடு செல்லும் வரை வழியெல்லாம் ரத்தம் சிந்தியபடி சென்றேன். அன்றிரவு தான் இது ஒரு பிரச்சனை என நான் உணர்ந்தேன். என் அதிர்ஷ்டம் வண்டியின் சொந்தக்காரர் அப்போது அங்கில்லை. இல்லாவிட்டால் பெரிய சண்டை ஆகியிருக்கும்.

இன்னொரு சந்தர்பத்தில் யாரிடமாவது நேரடியாக முரண் ஏற்பட்டு நான் கையை நீட்டி விட்டால் என்னவாகும்? இதற்கு முன்பு யாரிடமும் வன்முறையை காட்டியதில்லையே என யோசித்தேன். நான் முன்பு என்னைச் சுற்றி நிகழ்பவனவற்றால் சீண்டப்படாமல் சாமநிலையை கடைபிடிக்கிறவனாக இருந்தவன் தானே என நினைவுபடுத்திக் கொண்டேன். இந்த இயல்பு மாற்றம் பற்றி, அதன் உளவியல் பற்றி புத்தகங்கள் சில வாசித்தேன். கோபம், வன்முறை சார்ந்த எண்ணங்களை பிடிவாதமாக மாற்றிக் கொண்டு ஒருவிதமாக மீண்டு வந்தேன். இந்த கொடுமையான காலம் எனக்கு முதிர்ச்சியையும் அளித்தது. கூட இருப்பவர்களின் அன்பு, அக்கறை போன்றவை எவ்வளவு பெரிய இழப்பில் இருந்து மீண்டு வர உதவும் என புரிந்து கொண்டேன். என்னுடைய எழுத்து என்னுடன் எப்போதும் இருந்தது. நமக்கு என நிரந்தர இயல்பு என ஒன்று இல்லை; யாரும் எப்படியும் மாறலாம்பலவீனப்படலாம், அழியலாம், அங்கிருந்து மீண்டும் வரலாம் என தெளிவு வந்தது. நாம் எல்லாரும் ஒரு திரியின் நுனியில் காற்றில் அணைந்து அணைந்து எரிகிற தீபம் தானே என இப்போது அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

 

2. தற்போது நடக்கும் கோவிட் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு

உள்ளாக்கியிருக்கிறது? அன்றாடக் குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறியிருக்கிறதா?

 

பதில்: கோவிட் அமளி துமளிகள் எளிய மக்களை நிர்கதியாக்கி இருக்கிறது. என்னைப் போன்ற நீலக்காலர் ஊழியர்களை அது பெரிதாக பாதிக்கவில்லை. வாசிக்க, எழுத கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.

 Posted Yesterday by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2022/07/1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

3626.jpg.webp

tolstoy1.jpg
 

 

3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது?

4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப்   பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது?

பதில்: கதைகளை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக் கொண்டது எட்டு, ஒன்பது   வயதில் என நினைக்கிறேன். அப்போது நாளிதழ்களின் இணைப்பாக வரும்   குழந்தைகளுக்கான பத்திரிகைகளையும், ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களையுமே படித்தேன். நான் ஊனமுற்றவன் என்பதால் வெளியே சென்று விளையாட அம்மா அனுமதிக்கவில்லை. படிக்க நிறைய நேரம் இருக்கும். ஒரே காமிக்ஸை அலுக்க அலுக்க திரும்பத் திரும்ப படிக்கும் அளவுக்கு. பிறகு எனக்கு நானே கதை சொல்ல ஆரம்பித்தேன். அதாவது தனிமையில் இருந்து எனக்கே நான் சொல்லிக் கொள்வேன். அதை பகற்கனவு என வகைப்படுத்தி விட முடியாது - துவக்கம், பல பிரச்சனைகள், தீர்வுகள், முடிவைக் கொண்ட சாகசக் கதைகள். பள்ளியில் என் நண்பர்களிடம் அக்கதைகளை எழுதிப் படிக்கக் கொடுப்பேன். அப்படித்தான் என் கற்பனை வளர்ந்தது. பிறகு எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது என் அப்பாவின் வங்கிக் கிளையில் ஒரு நூலகம் ஆரம்பித்தார்கள். அங்கு செய்திப் பத்திரிகைகளில் இருந்து வணிக நாவல்கள் வரை வரும். அவற்றை அவர் வீட்டுக்கு கொண்டு வருவார். அப்படித்தான் நான் பரவலாக படிக்க ஆரம்பித்தேன். கல்கி, அகிலன், சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன் எல்லாம் அறிமுகமானார்கள். “பொன்னியின் செல்வனை அப்பா, அக்கா, நான் மூவரும் ஆளுக்கு ஒரு மணிநேரம் என வகுத்துக் கொண்டு படித்தது நினைவுள்ளது. எனக்கு ஏனோ கல்கியை விட அகிலனை அந்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. “சித்தரப் பாவை நாவலை உருகி உருகிப் படித்தேன். வளர்ந்த பிறகு அது எவ்வளவு பொய் எனப் புரிந்து போனாலும் நாவலின் நாயகனான அரவிந்த மீதுள்ள பிரேமை ஒரு போது மறையவில்லை. குறிப்பாக அவன் தோட்டத்தில் கிடக்கும் ஒரு பூவை எடுத்து ரசித்து விட்டு அதைப் பற்றி சிலாகிக்கவோ ஒரு ஓவியம் வரையவோ செய்வோன். நாவலுக்கு முக்கியமில்லாத காட்சி தான். ஆனால் அது ரொம்ப முக்கியமாக எனக்குப் பட்டது. அது தான் அவனுடைய காதல். நாயகி மீதானது அதன் நீட்சி என நினைத்தேன். அகிலனின் மற்றொரு சிறுகதையில் ஒரு நாடோடி எதேச்சையாக ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து பின்னர் அது இறந்து போக அவன் மனம் உடைவதாக வரும். அந்த கதையையும் என்னால் ரொம்ப காலத்துக்கு மறக்க முடியவில்லை. இன்னொரு சிறுகதையில் நாயகன் தன் இஸ்லாமியன் நண்பனின் தங்கையை காதலிப்பான் என நினைக்கிறேன். புர்கா அணிந்த அழகான இஸ்லாமிய பெண். பின்னர் என் பதின்பருவத்தில் அப்படி ஒரு பெண்ணை நானும் காதலித்தேன். என் வாழ்வின் மகத்தான கட்டமாக அது அமைந்தது. இப்படி அகிலன் என் இளமை முழுக்க என்னோடு இருந்திருக்கிறார்.

அதன் பிறகு என்னுலகினுள் பாலகுமாரன் வந்தார். எனக்கு அப்போது சுஜாதாவை விட பாலகுமாரனையே பிடித்திருந்தது. சுஜாதாவின் மொழி நுணுக்கங்கள், பாத்திர அமைப்பின் லாவகம் அப்போது எனக்குள் இறங்கவில்லை. ஆனால் பாலகுமாரனின் அன்னியோன்யமான குரல், பெரிய உலகம், மத்திய வர்க்க வாழ்வு, அதன் லட்சியவாதம், பெண் உளவியல், தன்னை ஏற்றுத் தகவமைக்கும் ஒரு பெண்ணுருவுக்கான ஒரு ஆணின் தவிப்பு, ஆன்மீகம், இளைஞர்களை நோக்கிய போதனை இதெல்லாம் பிடித்திருந்தது. முக்கியமாக பாலுணர்வுக்கென ஒரு கவித்துவத்தை, கம்பீரத்தை, நெகிழ்வை அவர் உருவாக்கினார். மேலும் அவர் சித்தரித்த ஆண்கள் நான் பார்த்த ஆண்களைப் போலில்லை. அவர்கள் சுலபத்தில் உடைந்து போகிறவர்களாக, பெண்களால் தேற்றப்பட வேண்டியவர்களாக இருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது யோசிக்கையில் பாலகுமாரனின் உலகில் பெண்களே இல்லை, முழுக்க பெண்ணுடல்கள் மட்டுமே, பெண்ணாளுமையை அவரது ஆண்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள், ஆணாளுமையை பெண்கள் கொண்டிருந்தார்கள் எனத் தோன்றுகிறது. இந்த உலகம் எனக்கு அப்போது வெகுநெருக்கமாக இருந்தது. அப்போது சாதிக் எனும் ஒரு நண்பர் வாய்த்தார். அவர் என் அக்காவின் கணவரின் நண்பர். தீவிரமான பாலகுமாரன் உபாசகர். இருவருமாக பாலகுமாரனைப் பற்றி சலிக்க சலிக்கப் பேசுவோம்

பதிமூன்று வயதில் எனக்கு பரிசாக பாரதியார் கவிதைகள் நூல் கிடைத்திருந்தது. அதை ஒரு நூறு முறையாவது படித்து மனனம் செய்திருப்பேன். அதன் பிறகு அதே போல வைரமுத்து, மு. மேத்தாவின் கவிதைத்தொகுப்புகள் பரிசாகக் கிடைத்தன. நான் வானம்பாடிகளின் தீவிர விசிறியானேன். வைரமுத்துவின் உருவக மொழி என்னை ஆச்சரியப்படுத்தியது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் வைரமுத்துவை போய் சந்தித்து அவரது உதவியாளனாக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். பிறகு என் பதினைந்து வயதில் எங்கள் ஊரில் ஹாமீம் முஸ்தபா எனும் தோழர் களஞ்சியம் எனும் நூலகம் ஆரம்பித்தார். அங்கு புத்தகங்களின் பெரும் உலகம் எனக்கு அறிமுகமானது. அங்கேயே குடியிருப்பேன். அங்கே எனக்கு கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்கள் அறிமுகமாகி நான் மரபுக் கவிதை எழுதுவது, மரபிலக்கியம்.

வானம்பாடி இலக்கியம் படிப்பது ஆகியவற்றில் இருந்து விடுபட்டு நவீன இலக்கியம், நவீன

சிந்தனைகள், கோட்பாடுகள் நோக்கி சென்றேன். குறிப்பாக சாதிக் எனக்கு பசுவய்யாவின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார், எப்படி பூடகமான சொல்லப்பட்ட விசயங்களை கற்பனையாலும் அறிவாலும் திறந்து படிக்க வேண்டும் எனக் காட்டித் தந்தார். நட. சிவகுமார் அண்ணனுடனான உரையாடல் நவீன கவிதையை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் இருந்து கவிதையை எடுக்கவும், வட்டார வழக்கில் எந்த அலங்காரமும் இன்றி எழுதவும் தூண்டியது. எனக்கு ஒரு முற்றிலும் புதிய உலகை அடைந்ததைப் போலிருந்தது. மெல்ல மெல்ல வைரமுத்துவையும் மு.மேத்தாவையும் அடுத்தடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டு நவீன இலக்கியம் நோக்கி பயணித்தேன். நவீன கவிதைகளை எழுத முயன்றேன். ரொம்ப பிடிவாதமாக அதை அப்போது செய்தேன் என இப்போது தோன்றுகிறது. ஏனென்றால் அப்போது நான் நவீன இலக்கியத்தின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் அதை ஒரு வடிவமாக மட்டுமே பார்த்தேன் எனத் தோன்றுகிறது.

தமிழில் மட்டும் தான் பதினைந்து வயது வரைப் படித்திருந்தேன். ஆங்கிலத்தில் சொந்தமாக எதைப் படித்தாலும் புரியாது. ஒரு நாவலின் ஒரு பக்கத்தை படிக்க எனக்கு பல மணிநேரங்கள் ஆகும். அதன் பிறகு முயற்சி எடுத்து என் ஆங்கில அறிவை விருத்தி செய்து உலக இலக்கியங்களை ஆங்கிலத்தில் நேரடியாக படிக்க

ஆரம்பித்தேன். தற்செயலாக, என் விருப்பத்தையும் மீறி நான் இளங்கலை ஆங்கில இலக்கியப் படிப்பில் சேர்க்கப்பட்டது அதற்கு ஒரு முக்கிய காரணமாகியது.

கல்லூரியில் சேர்ந்தால் தமிழ் இலக்கியமே படிக்க வேண்டும் என பதினைந்து வயதிலேயே முடிவு செய்தேன். என்னுடைய பெரியம்மாவின் மகள் தமிழில் முனைவர் படிப்பு முடித்து ஒரு விரிவுரையாளராக இருந்தார். அவரைக் கண்டு நானும் தமிழ் தமிழ் ஆசிரியராக வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த வயதிலேயே ஆசிரியப்பா, வெண்பா எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். சங்கக் கவிதைகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் வாசித்திருந்தேன். சரி தமிழ் இலக்கியம் படிக்க முழுமையான தகுதி பெற்று விட்டோம் என நினைத்திருந்தால் வீட்டில் நான் பொறியியலே படிக்க வேண்டும் என்றார்கள். அது இல்லாவிட்டால் அறிவியல் பாடம் என்றார்கள். எனக்கு கணிதம் என்றாலே கசக்கும். அதனாலே பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்தேன் (இல்லாவிட்டாலும் அவ்வளவு தான் எடுத்திருப்பேன்.). நியாயமாக நான் அப்பாடங்களில் தோற்றிருக்க வேண்டும். எப்படியோ தேறி விட்டேன். ஆனால் மொழிப்பாடங்களில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். சரி நாம் இலக்கை நெருங்கி விட்டோம் என பெருமிதமாக இருந்தேன். என்னுடைய அம்மாவும் சரி இலக்கியம் என்றால் அதையே படித்துத் தொலை என்று என்னை ஒரு கல்லூரிக்கு அழைத்து சென்றார். அங்கே பார்த்தால் நான் தமிழ்த்துறை அல்லாமல் ஆங்கிலத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். “முடியவே முடியாது என்று முரண்டு பிடித்தால் அம்மா நீ தமிழ் படிப்பதற்கு வீட்டிலேயே கிட என்று சொன்னார்கள். அவருக்கு நான் தமிழ் இலக்கியம் படித்தால் வேலை கிடைக்காமல் போய் விடும் என பயம். இப்படி ஆங்கில இலக்கியம் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முதல் ஒரு மாதம் மனம் உடைந்து, ஈடுபாடின்றி வகுப்பில் வெளியேயே பார்த்தபடி இருந்தேன். பிறகு சனியன், இதில் சேர்ந்தாகிற்று, இதையாவது ஒழுங்காகப் படிப்போம் என ஆர்வம் செலுத்தினேன்

ஒரு விதத்தில் ஆங்கிலப் படிப்பில் சேர்ந்ததே எனக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் பண்ணிக் கொள்ளவும், கோட்பாடுகளை, தத்துவங்களைக் கற்கவும் உதவியது. இன்னொரு பக்கம் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களின் வழியாக எனக்கு தமிழ் நவீன இலக்கியமும் பரிச்சயமாகி வந்தது. தோழர்கள் என் சமூக அரசியல் பார்வையை, இலக்கிய நோக்கை, ஆளுமையை வெகுவாக செதுக்கினார்கள். எங்கள் வீடருகே இருந்த ஜெயமோகனின் பழக்கம், எங்கள் கல்லூரியை ஒட்டி வாழ்ந்த சுந்தர ராமசாமியின் நட்பு என்னை மேலும் செறிவுபடுத்தியது.

 சு.ரா நமது ஆளுமையை மிக நுட்பமாக தன் உரையாடல்கள் வழி செதுக்கக் கூடியவரே அன்றி நமது வாசிப்பை நேரடியாக திசைமாற்ற முயல்பவர் அல்ல. ஒரு மனிதன் தனக்கான பாதையை தானே கண்டறிய வேண்டும் என நம்பியவர் அவர். நான் போய் சுத்த அபத்தமாக பேசிக் கொண்டிருந்தாலும் கவனித்துக் கேட்டு விட்டு இயல்பாகப் புன்னகைத்து கடந்து விடுவார். ஆனால் ஜெயமோகனோ ரோட்டில் போகிற ஒருவரையே கையைப் பிடித்திழுத்த நவீன இலக்கியம் பற்றி மணிக்கணக்காகப் பேசி மனம் திருந்த வைக்கிற பிடிவாதக்காரர். அவரை ஒரு புத்தகக் கடையில் பார்த்து என் அறியாமையால் சண்டை போட்டு விட்டு பிறகு அவரது ரப்பரைப் படித்து விட்டு அவரது நடையிலும் சித்தரிப்புகளிலும் மயங்கி மீண்டும் சந்திக்க சென்றேன். அது ஒரு முக்கியமான சந்திப்பு. ஏனென்றால் அவர் அன்று தல்ஸ்தாய் பற்றி நிறைய பேசினார். அது ஒரு மாலைப் பொழுது. எங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தோம். இல்லை, அவர் பேசிக் கொண்டே இருந்தார், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போனது. அவர் அந்த இருட்டிலும் அதே உணர்வெழுச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த சித்திரம் என் மனதை வெகுவாக பாதித்தது. அது நீண்ட காலம் என் நெஞ்சில் இருந்தது. நான் முதிர்ந்து ஒரு படைப்பாளியானதும் இதே லட்சிய ஆவேசத்துடன் இலக்கியத்தில் இருக்க வேண்டும், நடைமுறைப் பிரச்சனைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்று முடிவெடுத்தேன்

அடுத்த நாளே நான் என் கல்லூரி நூலகத்தில் இருந்து போரும் வாழ்வும் நாவலின் தமிழ் மொழியாக்கத்தை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் தான் என்னை ஒரு வாசகனாக புரட்டிப் போட்டது. பாலகுமாரனில் இருந்து விடுவித்தது. வெகுஜன நாவல்களில் காட்டப்படுவது சுத்த முட்டாள்தனம் என நினைக்க வைத்தது. அப்படி ஒரு அட்டகாசமான உலகம், பிரம்மாண்டம், துல்லியமான உளவியல் சித்தரிப்புகள் அந்நாவலில் இருந்தது. முக்கியமாக அந்நாவல் வாழ்க்கையைப் பற்றி, காலத்தைப் பற்றி நேரடியாகப் பேசியது - அதாவது வரலாற்றின் வழியாக. நான் அதுவரைப் படித்த நாவல்கள் ஒன்று ஒரு தனிமனிதனின் வாழ்வை, வாழ்வின் சவால்களை மிகச்சுருக்கமாக, நெகிழ்வாக, கவித்துவமாக அலசியவை. ஆனால் இங்கு ஒரு எழுத்தாளர் அனாயசமாக நேரடியாக காலத்தைப் பற்றி ஜனங்களின் அகவுலகங்களை முன்வைத்தும், வரலாற்றை புனைவாக சித்தரித்தும் எழுதுகிறார்! என்னால் அந்த வியப்பைக் கடந்து சுலபத்தில் வர முடியவில்லை. அதன் பிறகு சு.ரா, அசோகமித்திரன், தி.ஜா, தஸ்தாவஸ்கி, காப்கா ஆகியோரை அந்நாட்களில் வாசித்த போதும் தல்ஸ்தாய் மீதான பிரமித்து இவர்களைக் குறைவாக மதிப்பிட வைத்தது. என்ன இருந்தாலும் தல்ஸ்தாய் ஒரு அத்தியாத்தில் பேசிப் போகிறவற்றைத் தானே இவர்கள் மொத்த நாவலிலும் பேசுகிறார்கள், அற்ப மானுடனர்கள் என நினைத்தேன். தல்ஸ்தாய்க்கு அடுத்த படியாக மார்க்வெஸ், கோர்த்தஸார், போர்ஹெ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க படைப்பாளிகள் என்னைக் கவர்ந்தார்கள். அவர்களிடம் இதே போல ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தத்துவார்த்தமாக நோக்குகிற போக்கு, பிரம்மாண்டம், மாய எதார்த்தம் இருந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். மேலும் அந்நாட்களில் எனக்கு எதார்த்த நாவல்கள் மீது ஒரு ஒவ்வாமை இருந்தது. . மாதவன், நீல பத்மநாபன், தோப்பில் என யாரையும் பிடிக்கவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒவ்வொரு வகையான நாவலையும் அதன் வடிவத்தையும் நோக்கையும் பொறுத்து வாசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அன்று எனக்கு முக்கியமல்லாதவர்களாகப் பட்டவர்களெல்லாம் இப்போது முக்கியமான எழுத்தாளர்களாகத் தோன்றுகிறார்கள். தல்ஸ்தாய் என் மதிப்பில் பலமடங்கு உயர்ந்து தல்ஸ்தாய் விழுந்து விட்டார். ஆனால் முதன்முதலாக ஒரு இலக்கிய மதிப்பீட்டை உருவாக்க எனக்கு போரும் வாழ்வுமே உதவியது. ஒரே ஒரு எழுத்தாளர் பற்றின மதிப்பீடு மட்டும் நிலைக்கிறது - ஜெயகாந்தன். அவரை என் 17 வயதில் இருந்து இப்போது வரை பலமுறைப் படித்தும் அவர் ஒரு புனைவெழுத்தாளரே அல்ல, அவருக்கு சிறுகதை, நாவல் ஆகிய கலைவடிவங்கள், உலக இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது, ஒரு ஒழுக்க போதகர், பேச்சாளர், முரட்டுத்தனமான கதைசொல்லி என்று தோன்றுகிறது.

அந்நாட்களில் நான் எதை வாசித்தாலும் என் கேள்விகளை தொகுத்து எடுத்துக் கொண்டு ஜெயமோகனைக் காணச் செல்வேன். அனேகமாக தினமும் அவரை சந்தித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய முடிவுகள் தவறென்று அவர் ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டே இருந்தார். ஆவேசமான வாசிப்பில் கவனிக்கத் தவறும் நுட்பமான பகுதிகளை கவனிக்க அவரே அந்நாட்களில் சொல்லித் தந்தார்.

அது மட்டுமல்ல, போகப் போக கல்விப்புலத்தில் ஆங்கில இலக்கிய வாசிப்பும், நடைமுறையில் நவீன இலக்கியமும் என்னுடைய ரொமாண்டிக்கான பார்வையை மாற்றி வேறொரு நுண்ணுணர்வை அளித்தது. என்னுடைய சிந்தனை உணர்ச்சிகரமாக அன்றி விலகி நின்று தர்க்கரீதியாக அணுகுவதாக மாறியது. அதுவே பின்னர் என் புனைவு, அபுனைவிலும் தாக்கம் செலுத்தியது என நினைக்கிறேன். கடந்த ஏழாண்டுகளில் கிடைத்த பின்னமைப்பியல் வாசிப்பு என்னுடைய அந்த விட்டேந்தியான சிந்தனாமுறையின் போதாமையை உணர வைத்தது.

இது தான் என் வாசிப்பின் பயணம்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
9466696C-F886-460D-8D2D-76FC0CE150A7.jpeg
 

 

5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்?
அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா?
பதில்: என் அப்பாவுக்கு திராவிட சிந்தனைகளில் ஆர்வம் இருந்தது. அவர் வாயில் இருந்து ஓராயிரம் முறைகள் பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய புகழ்மொழிகளைக் கேட்டிருப்பேன். ஆனால் சின்ன வயதில் இவர்கள் என்னை ஈர்க்கவில்லை. பதினைந்து வயதில் நான் அறிமுகம் கொண்ட சிறுபத்திரிகை மரபும் திராவிட சிந்தனைகளில் இருந்து விலக்கியே வைத்தது. ஆனால் பின்னாளில் கிடைத்த அனுபவங்கள் பெரியாரியம் எவ்வளவு முக்கியமான சிந்தனைப் பள்ளி, சாதியம், பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு மையம் சாராம்சவாதம், இறைநம்பிக்கை எனப் புரிய வைத்தது. பெரியாரிய வாசிப்பு, பௌத்தம் குறித்த வாசிப்புகளும் சிந்தனையும் இந்த நிலைப்பாட்டை இன்னும் ஆழமாக்கியது. இன்னொரு பக்கம் எனக்கு சோஷலிஸ சிந்தனைகளில் உள்ள நம்பிக்கைக்கும் கலை இலக்கிய பெருமன்ற தொடர்புக்கும் சம்மந்தம் உள்ளது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதாரம் மக்களிடையே ஏற்படுத்தும் பிளவுகள், அநீதியான வாழ்க்கைமுறை, அடிமைத்தனம், சுரண்டல் இதையெல்லாம் காணும் போது மார்க்ஸியத்தில் இருந்தே நமது நெருக்கடிக்கான விடையை காண முடியும் எனும் நம்பிக்கை எனக்கு வலுத்துள்ளது. நவதாராளாவதத்தின் போக்கை உள்வாங்கி அரசின் முழுக்கட்டுப்பாட்டில் மக்களை முதலீட்டாளர்களாக்கி, பங்குதாரார்களாக்கி உற்பத்தியும், தொழில்களும் நடக்கிற ஒரு புதிய சோசலிச முதலீட்டிய அமைப்பு, அரசே முதலீட்டியமாகிற, அதை மக்களே கட்டுப்படுத்துகிற, வரிகளோ வலுவான இறையாண்மையோ இல்லாத நிலை தோன்ற வேண்டும். அதே நேரம் அது இறையாண்மையை முழுமையாக வலியுறுத்தாத ஓரளவுக்கு அனார்க்கிஸத் தன்மை கொண்ட அரசாக உருவாக வேண்டும் என கனவு காண்கிறேன். எல்லா மாற்றங்களும் கனவிலும், கற்பனைகளில் இருந்தும் தானே உருவாகின்றன!
தத்துவத் தளத்தில் தெரிதாவைப் பற்றி படிக்கையில் எதேச்சையாக ஒரு ஆய்வுக்கட்டுரையில் நாகார்ஜுனர்-தெரிதா ஒப்பிட்டை கவனித்தேன். பௌத்தம் என்றால் ஜென் என்ற அளவில் தெரிந்திருந்த எனக்கு மகாயான பௌத்தத்தை சேர்ந்த நாகார்ஜுனரின் “மூலமத்யமகா காரிகா” எனும் நூல் மிகப்பெரிய திறப்பை அளித்தது. சாக்ரடீஸ், ஹைடெக்கர், தெரிதா, லக்கான், டெலூஸ் இவர்களை எல்லாரையும் விட சிறந்த தத்துவஞானி நாகார்ஜுனர் தான் எனும் முடிவுக்கு வந்தேன்.
ஏனென்றால் நாகார்ஜுனர் அடிப்படை எனும் விசயத்தையே தகர்க்கிறார். வாழ்வில் விடுதலை என்றால் என்ன என புரிய வைக்கிறார். இந்த புரிதலை இலக்கியத்துக்குள் எப்படி கொண்டு வருவது, வாழ்க்கையில், நடப்புலகில், சிந்தனைமுறையில் எப்படி பரிசீலித்துப் பார்ப்பது என இப்போது யோசிக்கிறேன்.
6. சிறந்த கட்டுரையாளர்களாக,அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்? தமிழுக்கு மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். வியாசம் என்றால் “ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை” என்கிறது அகராதி. உங்களின் வியாசர்கள் யார் யார்?
7. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் என்ன? எவரின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்?
8. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?
பதில்: எனக்கு சிறந்த நூல் பட்டியலில் நம்பிக்கை இல்லை. “சிறந்த” என ஒன்றுமில்லை,
யாருமில்லை. ஒவ்வொன்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் அந்த இடத்தைப் பெறுகின்றன.
மேலும் வாசிப்பு ஒரு அந்தரங்க நடவடிக்கை. எப்படி உங்கள் காதலியை நான் பரிந்துரைப்பதில்லையோ அப்படியே உங்களுக்கான எழுத்தாளனையும் நான் பரிந்துரைக்கக் கூடாது என நினைக்கிறேன். எனக்கு சுத்தமாகப் பிடிக்காத, நம்பிக்கை இல்லாத எழுத்தாளனை நீங்கள் கொண்டாடினாலும் நான் உங்களை மாற்ற முயல மாட்டேன். எதை வாசிக்கிறோம் என்பதல்ல, எப்படி வாசிக்கிறோம் என்பதே முக்கியம் என்கிறார் தெரிதா. ஒரு சிக்கலற்ற படைப்பைக் கூட ஒருவர் வெகுசுவாரஸ்யத்துடன் படித்து ஒன்றை அவர் அடைய முடியும்.
அந்த ஒன்று என்ன? நமது உளவாதலின் நுட்பத்தை, நமது இன்மை நோக்கிய ஒரு திறப்பை, புத்தக வாசிப்பு சாத்தியமாக்கும். அது எதையும் உருவாக்கித் தருவதில்லை; அதனால் வாசிப்பை மகத்துவப்படுத்த அவசியமில்லை. மாறாக அது நமது இன்மைக்கான வாயிலாக இருக்கிறது. ஆகையால் வாசிப்பே முக்கியம், எதை என்பதல்ல.
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.