Jump to content

மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலவளவு கிராமத்தில் "25 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை" - கொல்லப்பட்ட முருகேசன் மனைவி

  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

முருகேசனின் மனைவி மணிமேகலை

 

படக்குறிப்பு,

முருகேசனின் மனைவி மணிமேகலை

"ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக எனது கணவர் முருகேசனை கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரை எங்கள் காலனி பகுதிக்கு எந்தவிதமான சலுகையும் செய்து கொடுக்கவில்லை" என்கிறார் படுகொலை செய்யப்பட்ட மேலளவு முருகேசன் மனைவி.

ஆனால், சுடுகாட்டுப் பாதை போன்ற பிரச்சனையில் சிக்கல் இருந்தாலும், எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை என்பதை ஊராட்சித் தலைவர் மறுக்கிறார்.

தமிழ்நாட்டின் சில ஊர்களில் ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததை ஆதிக்க சாதியினர் எதிர்த்துவந்தனர். சில ஊர்களில் தேர்தலே நடத்த முடியாத சூழ்நிலை இருந்துவந்தது. சில ஊர்களில் தேர்தல் முடிந்த உடனே தலைவர்கள் பதவி விலகுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மேலவளவு கிராமத்தில் தேர்தல் மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சாதியை சேர்ந்த முருகேசன் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டை அதிர வைத்தது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு கிராமம். தலித் சாதியை சேர்ந்த முருகேசன் இங்கே ஊராட்சித் தலைவரானதை அந்த ஊரைச் சேர்ந்த மற்றொரு சாதியினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தேர்தலில் போட்டியிடும்போதே முருகேசனை எதிர்த்தனர். அவரைக் கொலை செய்து விடுவதாக மொட்டை கடுதாசி அனுப்பியுள்ளனர். இதை மீறி முருகேசன் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.

ஓடும் பேருந்தில் வெட்டிப் படுகொலை

ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனும் அவரது சாதியைச் சேர்ந்த 5 பேரும் 1997 ஜூன் 29ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி முருகேசனை வெட்டினர். மேலும் ஐந்து பேரையும் பேருந்திலேயே வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரையும், அதேநாளில் படுகொலை செய்தனர்.

 

ஊர் பகுதி பேருந்து

 

படக்குறிப்பு,

ஊர்ப் பகுதி பேருந்து

 

இந்த படுகொலை தொடர்பாக சிறைத் தண்டனை பெற்ற சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகிய 13 பேரும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்குப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

25 ஆண்டு காலமாக காலனி பகுதி புறக்கணிப்பு

இந்த படுகொலை சம்பவம் நடந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் மேலவளவு காலனி பகுதி இன்னும் அடிப்படை வசதிகளில் வளர்ச்சி பெறாமலே தனித்து விடப்பட்டுள்ளது. காலனியில் பெரும்பாலான வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால் இன்னும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கின்றனர்.

 

குடிநீர் இணைப்பு

 

படக்குறிப்பு,

குடிநீர் இணைப்பு

இங்கு அடிகுழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் வராது. சுமார் மூன்று அடி குழிக்குள் இறங்கிதான் தண்ணீர் பிடிக்கிறார்கள். சுடுகாடு செல்லும் பாதை வசதியும் இல்லை. யாராவது இறந்து விட்டால் குடியிருப்புக்கு பகுதிக்குள் செல்ல வேண்டியுள்ளது. மேலும் சுடுகாட்டு பாதையில் கழிவு நீரால் சேரும் சகதியுமாக இருக்கிறது. சாக்கடை, சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வழங்கப்படும் குடிநீர் தெருக்களுக்கு முறையாக வருவதில்லை. காலனி பகுதிக்குள் ஊராட்சித் தூய்மை பணியாளர்கள் வருவதில்லை, காலனிப் பகுதி முழுவதுமே சுகாதாரமற்ற நிலையில்தான் காணப்படுகிறது. புதிதாக நுாலகம், பேருந்து நிறுத்தம், நியாய விலைக் கடை புனரமைப்பது போன்ற எந்த பணிகளும் செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

"அனாதையாய் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறோம்"

"பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக எனது கணவர் முருகேசனை கொன்றுவிட்டார்கள். அன்றிலிருந்து தற்போது வரை எங்கள் காலனிப் பகுதிக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனின் மனைவி மணிமேகலை.

"சாலை, குடிநீர், மயானப் பாதை, சாக்கடை, பேருந்து நிறுத்தம் போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எங்கள் பகுதி இளைஞர்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை மனு கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரிகள் யாரும் செவி சாய்ப்பதாய் தெரியவில்லை.

 

மயானம் செல்லும் பாதை

 

படக்குறிப்பு,

மயானம் செல்லும் பாதை

எனது கணவர் படுகொலை செய்யப்படாமல் உயிரோடு இருந்திருந்தால் தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருந்திருப்போம். என் கணவர் இறந்த பிறகு எனது நான்கு பிள்ளைகளை மிகவும் சிரமப்பட்டு ஆளாக்கி உள்ளேன். பாதிக்கப்பட்ட அவர்களுக்காக அரசு எந்த சலுகையும் செய்யவில்லை. யாரும் உதவ முன் வரவில்லை.

வெட்டி படுகொலை செய்தவர்கள் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நாங்கள் எங்கள் பிள்ளைக்குட்டிகளோடு தற்போது அனாதையாய் மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறோம்," என்றார்.

எதற்காக கழிவறை கட்டிக் கொடுத்தார்கள்?

"பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் கழிவறை வசதி இல்லாமல் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள்," என் பிபிசி தமிழிடம் கூறினார் படுகொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி பச்சையம்மாள்.

 

குழிக்குள் இருந்து தண்ணீர் எடுக்கும் மூதாட்டி

 

படக்குறிப்பு,

குழிக்குள் இருந்து தண்ணீர் எடுக்கும் மூதாட்டி

"அரசு சார்பில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டிக் கொடுத்தார்கள். எதற்காக எந்த கழிவறை கட்டிக் கொடுத்தார்கள் என தெரியவில்லை. அரைகுறையாக கட்டிக் கொடுத்த இந்த கழிவறையை தற்பொழுது யாரும் பயன்படுத்தவில்லை. உறைகுழி கூட எடுக்காமல் கழிவறையை கட்டி பாதிலே விட்டுச் சென்றுள்ளனர். கழிவறை வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகிறார்கள்.

வேலை முடித்துவிட்டு வீடு திரும்பினால், நிம்மதியாய் குளிக்க கூட முடியவில்லை. வீதிக்கு வீதி கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு முறையாக கொடுக்கப்படவில்லை. அதனால் பள்ளத்தில் இருந்து தான் தற்பொழுது குடிநீர் எடுத்துக்கிறோம். வயதானவர்கள் இரவு நேரத்தில் பள்ளத்துக்குள் இறங்கி தண்ணீர் எடுப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. அரசு அதிகாரிகள் எங்கள் காலனியில் முறையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை எங்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும்," என்றார்.

தலித் பகுதிக்கு ஏன் சுடுகாட்டுப் பாதை இல்லை

"சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கடந்த 60 ஆண்டு காலமாக போராடி வருகிறோம், இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் பாதைக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை", என்கிறார் சுப்பிரமணியன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;

 

காலணி குடியிருப்பு பகுதி சுகாதாரமற்ற நிலை குப்பை

"சுடுகாட்டுக்கு பாதை வேண்டி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு அளித்து வருகிறோம். இருந்த போதும் எங்களுக்காக பாதை அமைத்து தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. குடியிருப்பு வழியே பிணத்தை தூக்கி வரும் பொழுது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறோம். மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சேரும் சகதியமாய் கழிவுநீர் நிரம்பி காணப்படுகிறது. வேறு வழியில்லாத காரணத்தினால் பிணத்தை அந்த வழியேதான் கொண்டு செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு உள்ளது. தலித் பகுதிக்கு ஏன் சுடுகாட்டுக்கு பாதை இல்லை? என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பொழுதும் அதிகாரிகள் அது குறித்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்," என்றார்.

அரசின் அடிப்படை சலுகைகள் அனைத்தும் கானல் நீர்

"படுகொலை சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ 25 ஆண்டு காலம் கடந்து விட்டது. இருந்தபோதும் தற்போது வரை எங்கள் காலனி பகுதியில் ஒரு முறை கூட கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை," என்கிறார் முருகேசன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;

"மேலவளவு காலனி மக்களுக்கு அரசின் அடிப்படை சலுகைகள் அனைத்தும் கானல் நீராக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் சாதியில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவராக முருகேசன் வெற்றி பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக ஆதிக்க ஜாதியினர் அரசுப் பேருந்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேரை வெட்டி படுகொலை செய்தனர்.

 

மேலவளவு நினைவு இடம்

இது நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் ஊராட்சியில் காலனியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிப்படை வசதி கேட்டு அரசாங்கத்திடம் மனு கொடுத்தால் அது நிறைவேறுவதற்கு குறைந்தது மூன்று அல்லது ஐந்து வருடங்கள் ஆகிறது. ஊர் பகுதிக்கு கிடைக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் காலனி பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை.

ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஊர் பகுதிக்குள் சென்று ஒவ்வொரு வீடுகளில் இருக்கக்கூடிய குப்பைகளை வாங்குகிறார்கள் ஆனால் காலனி பகுதியில் உள்ள தெருகளுக்கு கூட தூய்மை பணியாளர்கள் வருவது கிடையாது. பேருந்து நிறுத்தம், குடிநீர் வசதி, பசுமை வீடு, மயானப் பாதை, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை. தற்போது வரை சம்பந்தப்பட்ட காலனிப் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள பள்ளி மேலாண்மை குழுவில் காலனி மக்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. காலனி பகுதியைச் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு சுற்றுவட்டாரத்தில் வேலை கொடுப்பதில்லை," என்றார்.

"மேலவளவு காலனி பகுதியில் சுடுகாட்டு பாதை தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியே செல்வதால் அதை கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்கிறார்" மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:

"ஊராட்சி நிதியை 11 சிற்றூர்களின் வளர்ச்சிக்கு பிரித்து செலவு செய்ய வேண்டும். காலனி பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுதான் வருகிறது. பேருந்து நிறுத்தம் தற்பொழுது கட்டப்படுகிறது. ஓரிரு மாதங்களில் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும். குடிநீரைப் பொருத்தவரை நாள் ஒன்றுக்கு ஊராட்சி சார்பாக இரண்டு முறை நீர் வழங்கப்படுகிறது. சுடுகாட்டுப் பாதைக்கான நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தி கொடுத்தால் ஊராட்சி சார்பாக பாதை உடனே போட்டு கொடுக்கப்படும்," என்றார்.

மேலவளவு காலனியில் அடிப்படை வசதிகளின் நிலை என்ன என்பது குறித்து தகவல் தற்போது தான் கிடைக்கப்பெற்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது குறித்து கலந்து ஆலோசித்து அப்பகுதியில் முறையாக ஆய்வு அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தரப்பினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

மேலவளவு காலனியில் என்ன அடிப்படை வசதி இல்லை என்பது குறித்து துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-62240134

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.