Jump to content

என் கணவர் இப்படித்தான் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்,” - ஐதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“என் கணவர் இப்படித்தான் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்,” - ஐதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார்

  • சுரேகா அப்பூரி
  • பிபிசி தெலுங்கு சேவை
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அடப்பா சிவசங்கர் பாபு

பட மூலாதாரம்,UGC

 

படக்குறிப்பு,

அடப்பா சிவசங்கர் பாபு

"நான் சம்பாதித்த பணம் மட்டுமல்ல, என் உறவினர்களிடம் இருந்தும் பணம் வாங்கிக் கொடுத்தேன். இப்போது அவர் என் பணத்தை திருப்பிக் கொடுப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவருடன் என் உடலையும் நான் பகிர்ந்துக்கொண்டேன். அந்த ஆளுக்கு என்ன நற்பண்பு உள்ளது?

இது வைதேகியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜதராபாத்தை சேர்ந்த அடபா சிவசங்கர் பாபு என்பவரால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதுவரை எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவசங்கர் திருமணம் செய்ததாகக் கூறப்படும் பெண்களில் ஒருவர்.

"என் கணவர் பல பெண்களை திருமணம் செய்துள்ளார் என்று உணர்ந்த நேரத்திலிருந்து, நான் அவரை நீதிக்கு முன் நிறுத்த என்னால் முடிந்த அளவுக்குப் போராடிக் கொண்டிருக்கிறேன்", என்கிறார் வைதேகி.

கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று ஜதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில், இரண்டு பெண்கள் சிவசங்கர் தங்களை மணந்துக்கொண்டதாகவும் இறுதியில் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார்கள்.

"கொண்டாபூரில், நான் குடியிருக்கும் வீட்டில் இருந்து இரண்டு வீதிகள் தள்ளி ஒரு குடும்பத்தை அவர் வைத்தார். 200 மீட்டர் தள்ளி, மற்றொரு குடும்பத்தை அவர் வைத்தார்," என்று வைதேகி கூறுகிறார். அதேபோன்று அவர் தங்களை ஏமாற்றியதாக இன்னும் சில பெண்களும் கூறினார்கள்.

"இதுவரை அவர் 11 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஆனால், எங்களால் 8 பெண்கள் குறித்த விவரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது," என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் கூறினார்.

சிவசங்கர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட ஒரு மாதத்திற்குள் மேலும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்கிறார். இது தெரிய வந்ததும் அவரிடம் விசாரித்த போது புதுமணப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஷூரிட்டி தருவதாக உறுதியளித்தார். இதற்கு முன் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறுகிறார் . சில காலமாக இது அவருடைய வேலையாக இருந்தது. இதைக் குறைந்தபட்சம் இப்போதாவது நிறுத்த வேண்டும்," என்றார் வைதேகி.

சிவசங்கர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

 

ஐதராபாத்

யார் இந்த அடபா சிவசங்கர் பாபு?

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி மண்டலத்தில் உள்ள பெத்தாபுடியை சேர்ந்தவர் அடபா சிவசங்கர் பாபு. தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

"அவர் 2018ஆம் ஆண்டு, மங்களகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அதன் பிறகு அவர் ஐதராபாத் சென்றார். அப்போது முதல், அவர் விவாகரத்தான பெண்கள் மீது கவனம் செலுத்தினார். புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி இணையதளங்களில் தேடுவது அவரது வழக்கம்.

மேல்தட்டு பெண்களை குறிவைத்தும் வேலைக்குச் செல்லும் பெண்களைக் குறிவைத்தும், அவர்களின் கைபேசி எண்களை எடுத்து அவர்களிடம் பேசத் தொடங்கினார். மேலும் அவர்களுடைய பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் பேசினார். அவரது குடும்பத்தைப் பற்றி கேட்டால், அவர் தனது பெற்றோர் இப்போது இல்லை என்றும் விவாகரத்து பெற்றவர் என்றும் அவர்களிடம் கூறுவது வழக்கம். தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகச் சொல்லி, அவர்களை ஒரு குழந்தையைச் சந்திக்க வைப்பது வழக்கம்.

மேலும், அத்தை மற்றும் மாமா வேடத்தில் ஒருவரை நடிக்க வைத்து, அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார். அதன்பிறகு அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக பணம் பறித்து வந்தார். திருமணமாகி ஒன்றரை மாதம் ஆன நிலையில், அந்தப் பெண்ணை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தத் தொடங்குவார். இதற்கிடையில், தான் முன்பு திருமணம் செய்து கொண்ட பெண்கள் சந்தேகப்பட ஆரம்பித்தால், அவர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறுவார்.

பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்ததற்குக் காரணம், புது மனைவி பணம் தருவார் என்ற நம்பிக்கைதான். புது மனைவியிடம் தனக்கு ஏதோ தேவை இருப்பதாகச் சொல்லி, அவரிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதில் ஒரு பகுதியை அவர் மீது சந்தேகப்பட்ட மற்றொரு மனைவிக்குக் கொடுப்பார். புதிய மனைவி அவரிடம் பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கும் போது, அவர் ஒரு புதிய பெண்ணுடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வார். இதுபோல் இன்று வரை 11 பேரை திருமணம் செய்துள்ளார்", என்றார் வைதேகி.

இதுவரை 8 பெண்கள் பற்றிய ஆதாரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.

சில பெண்கள் ஏற்கெனவே ஒருமுறை விவாகரத்து ஆனதால், இந்த விவகாரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வெளியே வந்தால், அது தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற அச்சம் காரணமாக முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார்.

சிவசங்கர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் பெண்களில் வர்ஷினியும் ஒருவர். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

"என்னை 2021ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்தார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைதேகியை திருமணம் செய்தார். எங்கள் திருமணம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. அதே மாதத்தில் அவர் வேறொரு பெண்ணை மணந்தார். இந்தப் பெண் இப்போது கர்ப்பமாக உள்ளார். சிவசங்கரை பற்றி நாங்கள் கூறியும் சிவசங்கருடன் சென்றுவிட்டார்," என்று வர்ஷினி பிபிசியிடம் பேசினார்.

"விவாகரத்துக்குப் பிறகு புது வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் எங்களைப் போன்ற பெண்கள் சிவசங்கரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். உங்களுக்குத் தெரிந்ததைப்போல், எங்களுக்கு நல்ல, வேலைக்குச் செல்லும் கணவர் வேண்டும், எங்கள் பெற்றோர்களுக்கு தங்கள் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் எங்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் போதும், இந்த ஆசைகளை அவர் பயன்படுத்திக் கொண்டார்," என்று வர்ஷினி புலம்புகிறார்.

 

திருமணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண்கள் அவரை எப்படி நம்பினார்கள்?

பெண்களைச் சந்திக்கும் போது, மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகக் கூறுவார்.

"அதன் பிறகு, ஆரம்பக் கட்டம் திருமணத்தை நோக்கி நகரும்போது, அவர் போலி சம்பள சீட்டுகளையும் ஊழியர் அடையாள அட்டைகளையும் உருவாக்குவார். இப்படி அந்த பெண்ணை மட்டுமின்றி அவரது பெற்றோர், உறவினர்களையும் நம்ப வைக்கிறார்," என்கிறார்கள் சிவசங்கர் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறும் பெண்கள்.

"திருமணமான ஒரு மாதத்திலேயே அந்தப் பெண் வேலை செய்வது பிடிக்கவில்லை என்று சொல்லி வேலையை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தத் தொடங்குவார். அந்தப் பெண் வேலை செய்து வெளியுலகம் தெரிந்தால், அவரது திட்டம் அம்பலமாகிவிடுமோ என்ற பயம். தனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தனது நிறுவனம் தன்னை விரைவில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் மெதுவாகக் கதை கட்டுவார். எல்லோரும் அங்கே மகிழ்ச்சியாகக் குடியேறலாம் என்று அவர் அந்தப் பெண்னை நம்ப வைப்பார். அதன்பிறகு, தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும் அதனால், தனது அமெரிக்கப் பயணம் தாமதமாகி வருவதாகவும் கூறுவார். இந்தச் செயல்பாட்டில், நிறுவனம் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டதாகவும் இப்போது தனது அனைத்து ஆவணங்களையும் மீண்டும் பெறுவதற்கு லட்சங்கள் செலவாகும் என்றும் அவர் அவர்களை நம்ப வைப்பார். இது போல் பெண்ணிடம் மட்டும் கடன் வாங்காமல், அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 25-30 லட்சம் பெற்றுள்ளார்," என்றார் வர்ஷினி.

 

ஐதராபாத்

எப்படி சந்தேகம் எழுந்தது?

வர்ஷினியை திருமணம் செய்த பிறகு, தனது நிறுவனம் தன்னை ஒரு ப்ராஜெக்ட் வேலைக்காக அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சிவசங்கர் அவரிடம் கூறினார்.

வர்ஷினியையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லி அவர்களது திருமணத்தைப் பதிவு செய்து வைத்தார். வர்ஷினியின் சகோதரிக்கும் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறினார். விசா நடைமுறைக்கு பணம் தேவை என்று கூறி, அவரிடமும் அவரது பெற்றோரிடமும் கடன் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது அமெரிக்க பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அவரிடம் கூறினார்.

பணத்தைத் திருப்பி செலுத்தாததால், வர்ஷினியின் பெற்றொர்கள் விசாரணை நடத்தினர். பல காரணங்களைக் கூறி அவர்களைத் தவிர்த்துவிட்டார். அவரது நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, வேண்டுமானால் காவல்துறையில் புகார் செய்யலாம் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

வர்ஷினி தனது பெற்றோருடன் சேர்ந்து மேடக் மாவட்டம் ராமசவுத்ராபுரம் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். வைதேகியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார். அவரை தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் வைதேகியை பொய் சொல்லி சமாதானப்படுத்தினார். தன்னை ஏமாற்றியது வர்ஷினி தான் என்று கூறிய அவர், காவல் நிலையத்தில் தனக்கு ஆதரவாக நிற்கும்படி வைதேகியிடம் கேட்டுக் கொண்டார். வர்ஷினிக்கும் அவருடைய பெற்றோருக்கும் திருப்பிச் செலுத்துவது அவருடைய பொறுப்பு என்று வைதேகியிடம் சொல்ல வைத்தார்.

ஆனால், வைதேகியும் மெதுவாக அவரைச் சந்தேகிக்கத் தொடங்கினார்.

"அவர் தினமும் இரவு நேரப் பணி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணிடம் எப்போதும் பேசிக்கொண்டிருப்பார். கேட்டால், அவர் தங்கள் வாடிக்கையாளர் என்று கூறுவார். ரகசியமாக வேறொரு ஃபோனை உபயோகித்து, அந்த ஃபோனை காரில் வைத்துவிட்டு வருவார். உண்மையில், அவர் குளியலறையிலும் ரகசியமாக தொலைபேசியில் பேசுவதை நாங்கள் கவனித்தோம்.

அந்த ஃபோனை பிடுங்கி, எதிர்முனையில் இருக்கும் அந்த பெண்ணிடம் பேசிய போது அவரது மனைவி என்று சொன்னார். இந்த விஷயங்களை அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகு வர்ஷினியிடம் பேசினேன். நாங்கள் இருவரும் கூடுதல் தகவல்களைத் தேடத் தொடங்கியபோது, அவர் பக்கத்து வீதிகளில் மூன்று குடும்பங்களை நடத்தி வருவதைக் கண்டோம். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அவர் பெண்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதை நாங்கள் கண்டுபிடித்தோம். கடந்த காலங்களிலும் அவர் மீது பெண்கள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த விவரங்களைச் சேகரித்தோம்.' என்றார் வைதேகி.

 

ஐதராபாத்

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சிவசங்கருக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் 2 வழக்குகளும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது ஐதராபாத்தில் உள்ள கேபிஎச்பி, ஆர்சி புரம், கச்சிபௌலி, எஸ்ஆர் நகர் காவல் நிலையங்களிலும், அனந்தபுரம் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு சிவசங்கரின் பதில் என்ன?

சிவசங்கர் திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்கள் கூறியதை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தான் தலைமறைவாகவில்லை என்றும் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

"நான் 8-11 பெண்களை திருமணம் செய்து கொண்டேன் என்பது உண்மைக்குப் புறம்பானது. பெண்களின் பெற்றோர்(பல) மற்றும் ஒரு நபர் நிறுவனங்களை நிறுவி மோசடி செய்ய விரும்பினர். அதற்கு நான் உடன்படாததால் அவர்கள் இரண்டு பெண்களைக் கொண்டு என் மீது புகார் செய்தனர். நான் இத்தனை பெண்களைத் திருமணம் செய்து கொண்டேன் என்றால், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவர்களிடம் ரூ.60 லட்சம் வாங்கியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்.

நான் ஒருமுறை தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் கருத்து வேறுபாடு இருப்பதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இன்று வரை, நான் வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்," என்று குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை என்ன கூறுகிறது?

இந்த வழக்கு குறித்து காவல்துறை வாய் திறக்கவில்லை. விசாரணை நடத்துகிறோம் என்று மட்டும் கூறி வருகின்றனர். சிவசங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-62280413

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.