Jump to content

பூலன் தேவி கொல்லப்பட்ட நாள் ஜூலை 25: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம் - #SpotVisit


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூலன் தேவி கொல்லப்பட்ட நாள் ஜூலை 25: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம் - #SpotVisit

  • சின்கி சின்ஹா,
  • பிபிசி இந்திக்காக
25 நவம்பர் 2020
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,JEAN-LUC MANAUD / GAMMA-RAPHO VIA GETTY IMAGES

அந்த நிலப்பரப்பின் வெறுமை என்பது அந்திப்பொழுதில் சம்பல் நதியின் கரையோரத்தில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் முகத்திலறைந்தாற்போல உறைக்கிறது. ஒரு பாடலைப் போல சுழித்தோடும் சம்பல் நதியினூடே எப்போதோ இறந்துபட்ட ஒரு பெண் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கொள்ளைக்காரியாக அறியப்பட்ட அந்தப் பெண் ஒரு ராபின்ஹுட்டைப் போல மற்றவர்கள் சார்பில் பழிவாங்கியிருக்கிறார், தாகூர்களின் ஆதிக்கத்துக்கு சவால்விட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் அவர். இங்கே, அவர் பிறந்த இந்த கிராமத்தில், இன்னும் அவரின் குழந்தைப் பருவத்தைப் பற்றியும் கொள்ளை வாழ்வு பற்றியும், அவரது பழி தீர்க்கும் படலம் பற்றியும் அவர் கைது செய்யப்பட்டதைப் பற்றியும் பாடல்கள் பாடப்படுகின்றன.

திருமணங்களிலும் பிற விழாக்களிலும் இந்தப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் ஒரு துண்டு நிலத்தில் நின்று கொண்டிருக்கும் பகுதி சம்பல்,

ஒரு பழுப்பு நிற வெட்டவெளி. இங்கே இப்போது கொள்ளைக்காரர்கள் யாரும் இல்லை. தரிசு நிலம் மட்டுமே மீதமிருக்கிறது. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இங்கு நல திட்டங்கள் மூலமாகப் போடப்பட்ட எந்த சாலையாலும் இந்த முரட்டு நிலப்பரப்பை சாதுவாக்க முடியவில்லை.

 
 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC

தூரத்து நதி, எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் ஆற்றல் கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இந்த சபிக்கப்பட்ட நிலத்தில் இருக்கிற எல்லாவற்றையும் ஏற்கனவே அது அரித்துவிட்டது. இதைப் போல ஒரு காட்சியை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இதயமானியில் தெரிகிற வளைந்த இதயத்துடிப்பு வரைபடம் போல இது தோற்றமளிக்கிறது. இது வேறு ஏதோ ஒரு இடமாகத்தான் தெரிகிறது எப்போதும். வரைபடம் உருவாக்குபவர்களையே குழப்புகிற நிலப்பரப்பு இது. ஒவ்வொரு முறையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வரும்போதும் பூலன் தேவியின் கதை உயிர்தெழும்.

ஹாத்ரஸில் ஒரு 19 வயது பெண் தாகூர் சமூக ஆண்களால் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறிப்பிட்டுப் போராட்டக்காரர்கள் எச்சரித்தார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண் பூலன் தேவியைப் போல துப்பாக்கியைத் தூக்கக்கூடும் என்றார்கள்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நீங்கள் நீதி தராவிட்டால் பூலன் தேவியின் வழிமுறையைக் கையிலெடுப்போம்" என்று போராட்டங்களில் குரல்கள் ஒலித்தன. அவ்வப்போது எழுந்த #dalitlivesmatter ஹேஷ்டேகுகளையும் சமூக ஊடகக் கோபங்களையும் தாண்டி, செய்திச் சுழற்சி அடுத்தடுத்த செய்திகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இன்னமும் சிபிஐ அந்தக் குடும்பத்தை விசாரணை செய்துகொண்டிருக்கிறது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை சி.ஆர்.பி.எஃப் காவல் காக்கிறது. சிபிஐ அறிக்கை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. பூலன் தேவி 22 தாகூர் ஆண்களைக் கொன்றதாக சொல்லப்படும் பெஹ்மாயிலிருந்து ஹாத்ரஸ் ஐந்து மணிநேர தொலைவில் இருக்கிறது. தாகூர் சமூக ஆண்களைக் கொல்லவில்லை என்று பூலான் தேவி மறுத்தார்.

நிலப்பரப்பு திடீரென்று மாறுகிறது. உடைந்த வாயில் ஒன்றின்மீது பெஹ்மாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துக்கள் மங்கலாகத் தெரிகின்றன. பாம்பாக வளையும் ஒரு குறுகலான பாதையில் நடந்தால் கிராமத்தை அடையலாம். ஆற்றங்கரையோரமாக தூசிபடிந்தபடி இருக்கிறது அந்த கிராமம். எப்போதும் காற்றில் மிதக்கும் தூசி இருப்பதால் கிராமத்துக் கொள்ளைக்காரர்களாலும் பெருவழிச்சாலைகளில் செல்பவர்களாலும் எளிதில் ஒளிந்து மறைந்துகொள்ள முடிந்தது. இறந்த 20 பேரின் பெயர்கள் தாங்கிய நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது ஒரு சுவர்.

இங்கிருந்துதான் பூலன் தேவி, பெஹ்மாய் கிராமத்தை நோக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. 84 கிராமங்கள் நிறைந்த அந்த இடத்தில் பெரும்பாலும் தாக்கூர் மக்களே வசித்துவந்திருந்தார்கள். பெஹ்மாயும் அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான். பூலன் தேவிக்கு 17 வயது இருக்கும்போது பெஹ்மாயின் தாக்கூர் ஆண்களால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகவும், கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ தப்பித்த அவர், தன் தலைமையில் ஒரு கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 18 வயதான பின்பு பூலன் தேவி 30 தாகூர் ஆண்களை ஆற்றங்கரைக்கு இட்டுச் சென்றதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,GEORGE ALLEN & UNWIN

நாற்பது வருடம் என்பது ஒரு நீண்ட காலம் என்றாலும், பலருக்கும் அந்த பெஹ்மாய் வன்முறை சம்பவம் நினைவிலிருக்கிறது. ஆனால் உலகத்தைப் பொருத்தவரை இது ஒரு பழிதீர்க்கும் நிகழ்வாகவும் நியாயத்தை மீட்டெடுத்த ஒரு நிகழ்வாகவும்தான் இருக்கிறது. உலகைப் பொறுத்தவரை பூலான் தேவி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு தைரியமான இளம்பெண். அவர் இறந்து இருபது வருடங்களாகிறது.

கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் சில ஆண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும் அன்று நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரு உறவினராவது இருக்கிறார். 16 முதல் 55 வயது வரை கொண்ட அந்த 20 ஆண்களுக்கான நினைவுக்கோயிலை சென்று பார்க்குமாறு அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேர் பெஹ்மாயைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ராஜ்பூரைச் சேர்ந்தவர், ஒருவர் சிகந்த்ராவைச் சேர்ந்தவர். சுவர்களின் அவர்களது பெயர்கள் சிகப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நினைவுக்கோயிலில் மணிகள் ஒலிக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய ரத்த ஆற்றை அங்கு இருக்கிற யாரும் மறக்கவில்லை.

இன்னும் அந்த வழக்குக்கான தீர்ப்புக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. இந்த ஜனவரியில் தீர்ப்பு வந்திருக்கவேண்டும். ஆனால் ஒரு காவல் நினைவேடு தொலைந்துவிட்டதால் வழக்கில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த 84 கிராமங்களிலும் தாக்கூர் இனத்தவர் தாக்கூர்களையே மணந்துகொள்கிறார்கள். பெஹ்மாயில் தாக்கூர்களைத் தவிர வேற்று இனங்களைச் சேர்ந்த இரு குடும்பங்கள் மட்டுமே உண்டு - ஒன்று ஒரு பிராமணக் குடும்பம், ஒன்று தலித் குடும்பம்.

நினைவேந்தலில் வைக்கப்பட்டுள்ள பலகை இப்படி அறிவிக்கிறது : "பிப்ரவரி 14, 1981ல், மாலை நான்கு மணிக்கு, கொள்ளைக்காரர்களின் கூட்டம் ஒன்று கீழ்க்கண்ட, ஆயுதம் ஏந்தாத, குற்றமற்ற, மேன்மையான கிராமத்தவர்களைக் கொன்றுவிட்டது"

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பெஹ்மாயில் இருப்பவர்கள் ஊடகங்களிடமிருந்து பரிதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் துக்கமாக இருந்தபோது எழுந்த பூலன் தேவியின் புகழ் அவர்கள் பக்கத்துக் கதையாடலை மறைத்துவிட்டிருந்தது. பூலன் தேவியை ஒரு கொடூரமான கொலைகாரி ஆக அவர்கள் பார்க்கிறார்கள்.

1981ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தின் குளிர் மதியப்பொழுதில் இந்த ஆண்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டபோது கிராமத் தலைவரான ஜெய் வீர் சிங் வீட்டில் இருக்கவில்லை.

"தன் கூட்டத்தினரோடு பூலன் அந்த காடுகளில் அலைந்துகொண்டிருப்பாள். கொள்ளைக்காரனும் பூலன் தேவியின் காதலன் என்று சொல்லப்பட்டவனுமான விக்ரம் மல்லாவைக் கொன்ற ஶ்ரீராமும் லாலாராமும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்கிறார் அவர். "அவர்களது கிராமமான தமன்பூர் 11 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. பிஜேபி ஆட்சியில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அவர்கள் செய்ததற்காக அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கவேண்டும்" என்கிறார்.

இந்த கிராமத்தில் பல பக்கா வீடுகளும் இடிந்த கோட்டைகளும் உண்டு. அடிப்பவர்களின் குரலையும் மீறிய ஒரு குரலாக ஒலிக்கிறது தலைவரின் குரல். "பூலன் தேவிக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை" என்கிறார் அவர். காவல்துறையும் ஊடகங்களும் தயாரித்த கட்டுக்கதை அது என்கிறார்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC

"ஒவ்வொரு விழாவின்போதும் இந்த விதவைகள் அழுகிறார்கள். குழந்தைகள் அழுகிறார்கள். பிப்ரவரி 14 அன்று நாங்கள் நினைவுகூரும் சடங்கு ஒன்றை நடத்துகிறோம்" என்கிறார்.

இந்தியாவில் தேடப்பட்ட நபர்களில் முக்கியமானவராக பூலன் தேவி மாறினார். அவர் தலைக்குப் பத்தாயிரம் டாலர்கள் விலை வைக்கப்பட்டது. அந்த கிராமத்தில் யார் காவல்துறையைச் சேர்ந்தவர் யார் கொள்ளைக்காரர் என்று அடையாளமே கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததாகக் கூறுகிறார் தலைவர். எல்லாரும் காக்கி உடைகள் அணிந்திருந்தார்கள் என்கிறார். அடிக்கடி உணவு உண்ணவும் நீர் அருந்தவும் அவர்கள் கிராமத்துக்கு அருகில் வருவார்கள் என்றும், சட்டத்துக்குப் புறம்பானவர்கள் என்பதால் அவர்கள் தரிசுக்காடுகளில் மறைந்திருந்தார்கள் என்றும் சொல்கிறார்.

வீட்டின் முன்னால் இருக்கிற இரும்புக்கதவில் "வீழ்த்தப்பட்ட வீரமங்கை பூலன் தேவியின் வீடு" என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக பூலன் தேவியால் தொடங்கப்பட்ட ஏகலைவ சேனா அமைப்பினர், வீட்டு வளாகத்துக்குள்ளேயே அவருக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். வீடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதில் தற்போது பூலான் தேவியின் தாயார் மூலா தேவி வசிக்கிறார்.

படிகள் கொண்ட ஒரு பீடத்தின்மேல் அமைக்கப்பட்டுள்ள பூலன் தேவியின் பளிங்குச்சிலையில் சேலை அணிந்து, கை கூப்பியவாறு அவர் காட்சி தருகிறார். இடுப்பிலிருந்து துப்பாக்கி தொங்க, காக்கி பேண்ட் சட்டையுடன், பறக்கிற தலைமுடியை இழுத்துப் பிடிக்குமாறு நெற்றியில் கட்டப்பட்ட சிவப்பு ரிப்பனோடு நாம் பார்த்துப் பழகிய பூலான் தேவிக்கும் இதற்கும் எத்தனையோ தூரம். அவரை ஒரு சாதுவானவராக, காப்பாளராக, கூப்பிய கைகளோடு நிற்கும் ஒரு சேலை அணிந்த பெண்ணாகக் காட்ட விரும்புகிறார்கள் அவர்கள். அதுதான் அவரது அரசியல்வாதி அவதாரம். மீட்டெடுக்கப்பட்ட ஒன்று அது. அவர்கள் அந்த அவதாரத்தோடுதான் வாழ விரும்புகிறார்கள். ஆற்றுக்கு அருகில் பிரதான சாலையிலிருந்து தள்ளி அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலும் மல்லாக்கள்தான் இருக்கிறார்கள், அவர்கள் "வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்ற பிரிவுக்குள் வருபவர்கள்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC

ஆற்றங்கரையை ஒட்டிய கிராமத்தில் அவர் ஒரு தேவதை, தேவி. ஆற்றங்கரைக்கு அப்பால் இருக்கிற கிராமத்தில் அவர் ஒரு கொலையாளி. மொத்தத்தில் அங்கே இரண்டு நினைவுக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது ஆதிக்கம் செலுத்திய தாகூர்களின்மீது அவர் தீர்த்துக்கொண்ட பழியை நினைவுகூர்வதற்காக. மற்றொன்று, படுகொலை நிகழ்வில் அன்று கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தலாக.

அவ்வபோது இரு கிராமங்களிலும் மணிகள் ஒலிக்கின்றன. இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒருவரை ஒருவர் சந்தித்த்தேயில்லை. அவர்கள் விலகியே வாழ்கிறார்கள். இப்போதும், மிர்சாபூரில் பூலன் தேவிக்காக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டபோது அனில் குமார் பூலன் தேவியின் குழுவில் ஒருவர். நிலைமை பெரிதாக மாறவில்லை.

"தாகூர்கள் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்" என்கிறார் அவர். பேண்டிட் க்வீன் பூலான் தேவியைப் பற்றியும் அவரது கைது நிகழ்வைப் பற்றியும் அவர் பாடுகிறார். மல்லா சாதியில் பிறந்தவரான பூலன் தேவியைப் பற்றிய நாட்டார் பாடல்களைத் திருமணங்களின்போது அவர்கள் பாடுகிறார்கள். எல்லா பண்டிகைகளின்போதும் அவரை நினைவிலிருத்துகிறார்கள். குறிப்பாக, அக்டோபர் மாதம் துர்க்காதேவியின் வருகையின்போது அவர் கட்டாயமாக நினைவுகூரப்படுகிறார். தன் பாக்கெட்டில் பூலன் தேவி எப்போதும் ஒரு துர்க்கை உருவத்தை வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சரண் அடைந்ததைப் பற்றிய அறிக்கைக் குறிப்புகளிலும், சரண் அடைந்தபோது அவர் பாக்கெட்டில் இந்த உருவம் இருந்தது சொல்லப்பட்டிருக்கிறது.

அட்லாண்டிக் பத்திரிக்கையில் 1996ல் பூலன் தேவி சரணடைந்ததைப் பற்றிய ஒரு கட்டுரையில் விவரிக்கிறார் மேரி ஆன் வீவர்: "கடுங்குளிரான பிப்ரவரி மாலை. 1983. பழுப்பு நிற கம்பளிப் போர்வையின்மேல் ஒரு பளீர் சிவப்புப் போர்வையையையும் போர்த்திக்கொண்டு வந்தார் பூலன் தேவி. அவர் பின்னாலேயே பன்னிரெண்டு ஆண்கள் வந்தார்கள். அவர் இடுப்பிலிருந்து .315 மௌசர் துப்பாக்கி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அவரது பெல்ட்டில் ஒரு வளைந்த குறுங்கத்தி செருகப்பட்டிருந்தது. அவர் மார்பின் குறுக்கே துப்பாக்கி குண்டுகளாலான தோளணிப்பட்டை ஒன்று. அந்த பன்னிரண்டு ஆண்களையும் மத்தியப் பிரதேசத்தின் சம்பல் நதியை ஒட்டிய தரிசுப்பகுதிகளில் அவர் நடத்திச் சென்றார்".

அவரை ராபின் ஹுட்டைப் போல பாவித்த ஏழை மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. அவர்கள் கொள்ளைக்காரர்களாக இருந்தாலும் ஏழை மக்கள் ஆதரவு தந்தனர். "கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு அவர் பணம் தந்தார். பெண்களுக்குத் திருமணங்களின்போது நகை தருவார்" என்கிறார் அனில். ஒருமாதிரியான இந்த அன்பு இந்த கிராமப்புறங்களில் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது.

பிண்ட் கிராமத்தில் அவர் சரணடைந்தபோது பூலன் தேவி எப்படி இருப்பார் என்பதே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. காவல்துறையிடம் அவரது புகைப்படம் இல்லை. அவராகவே அவரது ஆயுதங்களைக் கீழே வைத்தார். மத்திய பிரதேசத்தின் முதல்வர் அர்ஜுன் சிங்கின் மக்கள் தொடர்பு நிகழ்வு தேசிய சர்வதேச ஊடகங்களால் எழுதப்பட்டது.

ஒரு பெண் தானாகவே வந்து, கூட்டத்தை நோக்கித் திரும்பி, துப்பாக்கியைக் காட்டிவிட்டு அதைக் கீழே வைத்து கைகூப்பி நின்றுகொண்டதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டார்கள். அது பெரும் ஏமாற்றமாகப் பார்க்கப்பட்டது. ஒரு அபாயகரமான, அழகான பெண்ணாக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சாகசப் பிரியையான கொள்ளைக் கூட்டத் தலைவி, கொள்ளைக்காரர்களின் கறுப்பு அழகி, கொள்ளைக்கார அழகி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இப்படி எழுதுகிறார் அப்போதைய இந்தியா டுடேவின் ஒரு பத்திரிக்கையாளர்: "வெறிச்செயல் புரிந்துகொண்டிருக்கிற,மிக சாதாரணமாகத் தோற்றமளிக்கும், மனநிலைகளை மாற்றிக்கொண்டேயிருக்கிற, குழந்தைத்தனமான ஒரு மோசமான முன்கோப உள்ள சிறு பெண்".

வழக்கு நடக்காமலேயே அவர் பதினோரு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். பிப்ரவரி 1994ல் அப்போதைய உத்தர பிரதேச முதல்வரான முலாயம் சிங் யாதவ், அவருக்கு எதிரான எல்லா புகார்களையும் ரத்து செய்யுமாறு மாநில வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டதன்பேரில் பூலன் தேவி விடுதலை செய்யப்பட்டார்.

ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கான ஒரு நியாயமாக அவரது விடுதலை பார்க்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைக்கு எதிராகப் பழிதீர்ப்பவராக இருந்த பூலன் தேவி, சாதி என்ற அமைப்புக்கான ஒரு சவாலாக மாறினார். விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். மீண்டும் 1999 தேர்தலிலும் வெற்றி பெற்றார். 38வது வயதில் புது தில்லியில் அவரது வீட்டுக்கு அருகே கொல்லப்பட்டார்.

தான் இறப்பதற்குள் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்று ஒரு முதிய பெண்மணி காத்துக் கொண்டிருக்கிறார். "நம்பிக்கை இல்லாமல் தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்" என்கிறார் படுகொலையில் கணவனையும் கொழுந்தனையும் மாமனாரையும் இழந்த ஶ்ரீதேவி.

"அப்போது எனக்கு 24 வயது. எனக்கு நான்கு சிறு மகள்கள் இருந்தனர். என்வீட்டு ஆண்களை எங்கே கூட்டிப்போகிறார்கள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. மாலையில் இறந்த உடல்களைப் பார்த்தோம். எங்களுக்கு என்ன நீதி கிடைத்துவிடும்? பூலன் தேவி இறந்துவிட்டார். அந்த நாளைப் பற்றிப் பேசாதீர்கள், தேவையில்லாத நினைவுகள் வருகின்றன.... அவற்றை நாங்கள் மறந்துவிடவில்லைதான், இருந்தாலும்" என்கிறார்.

இது ஒரு பழமையான சிக்கல். ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் தாகூர் ஆண்களால் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்படும் வழக்கில் வெளிவந்த அதே சிக்கல். அந்தப் பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வழக்கின்போது, அது குடும்பத்தினர் செய்த ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவியது.

பட்டியலின பெண்கள் வன்புணரப்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்துகொண்டே இருக்கிறது என்கிறது தேசிய குற்றப் பதிவேடு ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவு. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் பத்து தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைசம்பவங்கள், சிறுமிகளுக்கெதிரான பாலியல் தாக்குதல்களில் உத்தர பிரதேசம் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிஷாத் ஜாதியைச் சேர்ந்தவர் பூலான் தேவி. தாகூர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னமாக அவர் மாறிவிட்டார்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

பட மூலாதாரம்,RAJENDRA CHATURVEDI / BBC

"அது ஒரு இலகுவான வாழ்க்கை அல்ல. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் புரட்சியாளர்கள். பாகீகள் ஒரு கடினமான வாழ்வை வாழ்கிறார்கள். நீதி மறுக்கப்பட்டதால் அவர்கள் புரட்சியாளர்களாக மாறினார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தாகூர்களின் அச்சுறுத்தலால் அவதிப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினார்கள்" என்கிறார் அனில். பூலன் தேவியின் இறப்புக்குப் பின்னால் அந்த கிராமமே சோகத்தில் இருந்ததாக நினைவுகூர்கிறார் அவர்.

ஆனாலும் அந்த கிராமம் துண்டிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஒரு பாலம் வரவேண்டியிருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. பல காலமாக அவர்கள் ஒரு இளங்கலைக் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்க்கொண்டிருக்கிறார்கள். இது பூலான் தேவியின் தொகுதி இல்லை என்றாலும் அவர் இருந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்பார். பூலன் தேவியின் பெயரில் ஒரு அருங்காட்சியகம் அமைப்பதாகவும் கிராமத்தில் பேச்சு நிலவுகிறது. அவரது சீருடைகள், சிவப்பு ரிப்பன், சிவப்புப் போர்வை, காலணிகளை அங்கே வைப்பார்கள். தங்கள் நாட்டார் கதைகளில் அவரது கதையை அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்காகப் பழி தீர்த்தவரை நினைவிலிருத்த அவர்கள் எல்லா முயற்சியும் மேற்கொள்கிறார்கள். கிராமத்து சிறுமிகளுக்குப் பூலன் தேவியின் கதை தெரியும். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதில் அவர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒரு பெண்ணின் கதை காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை நினைத்து அனில் வருந்துகிறார்.

 

பூலான் தேவி: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம்

இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தங்கள் பெண்களை அவர்கள் "சிடியா" (பறவை) என்று அழைக்கிறார்கள். பூலன் தேவியின் சிலை நிறுவப்பட்டபோது அவரது அம்மா "பறவை கூட்டுக்குத் திரும்பிவிட்டது" என்றார். பூலன் தேவிக்கு மூன்று சகோதரிகள். தங்கை ராம்கலி தான் அம்மாவைப் பலகாலம் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் இப்போது இறந்துவிட்டார். ராம்கலியின் மகனும் மருமகளும் அதே கிராமத்திலேயே இன்னும் இருக்கிறார்கள். மூத்த சகோதரி ருக்மணி இப்போது ஒரு அரசியல்வாதி குவாலியரில் வசிக்கிறார். பூலன் தேவியின் அம்மா அதிகம் பேசவில்லை

ஹாத்ரஸில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல், குடும்பத்தினரின் அனுமதியின்றியே எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சாம்பல் இன்னும் அங்கேயே இருக்கிறது. ஜலாவுன் கிராமத்தில், பூலன் தேவியின் மேன்மைகளைப் பாடும் பாடல் இன்னும் இசைக்கப்படுகிறது. இரண்டு கிராமங்களுக்கு இடையேயான தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கடந்துவிடலாம். இடையே நாற்பது வருடங்கள். ஒரு நீதி. ஒரு அநீதி. இறுதியில் எல்லாமே தூரம் தான். நீதியும்கூட. ஒருவருக்கும் இன்னொருவருக்குமிடையே. நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் இடையே. மக்களுக்கும் மக்களுக்கும் இடையே.

https://www.bbc.com/tamil/india-55061863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.