Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள்

  • அசோக் பாண்டே
  • பிபிசி ஹிந்திக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

1932 இல் பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு கோப்பையுடன் சுல்தான் கான்

பட மூலாதாரம்,UNKNOWN CAMERAMAN OF 1932

 

படக்குறிப்பு,

1932 இல் பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு கோப்பையுடன் சுல்தான் கான்

1890 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்ற பத்தொன்பது வயது இளம் இந்திய வீரர் கோவிந்த் தீனாநாத் மட்காங்கர், தனது ஆட்டத்தால் ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தார்.

அவருக்குள்ளே ஒளிந்திருந்த திறமையை வல்லுநர்கள் கண்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளில் மாட்காங்கர் சதுரங்கத்தை விட்டுவிட்டு இந்திய சிவில் சர்வீஸில் சேர்ந்தார்.

மாட்காங்கர் விளையாடுவதை நிறுத்தாமல் இருந்திருந்தால், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் இந்திய செஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1931-ல், பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அவர் ஓய்வுபெற்றார்.அதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளைஞன் சதுரங்க விளையாட்டின் ஜாம்பவான்களை திகைக்க வைத்துக்கொண்டிருந்தான் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

மாட்காங்கர் மீர் சுல்தான் கானின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தால், ஒருவேளை தான் சதுரங்கத்தை தொடராமல் இருந்ததற்கு வருத்தப்பட்டிருக்க மாட்டார். அந்த நாட்களில் சதுரங்கம் ஒரு ஆடம்பர பொழுதுபோக்காகக் கருதப்பட்டது .சாமானியர்களுக்கு எட்டாத தூரத்தில் இருந்தது.1903 ஆம் ஆண்டு பஞ்சாபின் சர்கோதாவிற்கு அருகிலுள்ள பிர்-ஜமீன்தார்களின் குடும்பத்தில் பிறந்த மிர் சுல்தான் கானின் தந்தை மியான் நிஜாம்தீன் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்.

அவர் தனது ஒன்பது மகன்களுக்கும் சிறு வயதிலிருந்தே சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொடுத்தார். பதினாறு-பதினேழு வயதிற்குள், மீர் சுல்தான் கான் தனது கிராமமான டிவானாவிலிருந்து சர்கோதாவுக்கு தினமும் செல்லத் தொடங்கினார், அங்கு அவர் பிரபுக்களின் அரண்மனைகளில் சதுரங்கம் விளையாடுவார். இருபத்தி ஒன்றாவது வயதில், அவர் தனது மாகாணத்தின் சாம்பியனாக கருதப்பட்டார்.

சுல்தானின் திறமை பற்றிய செய்தி அண்டை மாகாணமான கால்ரா சமஸ்தானத்தின் உரிமையாளர் உமர் ஹயாத் கானின் காதுகளையும் எட்டியது, அவர் சதுரங்கத்தின் தீவிர ரசிகராக இருந்தார்.

 

அப்போதைய கிரேட் பிரிட்டனின் செஸ் சாம்பியனான மிர் சுல்தான் கான் லண்டனில் உள்ள எம்பயர் செஸ் கிளப்பில் ஒரே நேரத்தில் 24 போட்டிகளில் விளையாடுகிறார். இந்த புகைப்படம் 1931 அக்டோபர் 15 ஆம் தேதி எடுக்கப்பட்டது

பட மூலாதாரம்,BETTMANN

 

படக்குறிப்பு,

அப்போதைய கிரேட் பிரிட்டனின் செஸ் சாம்பியனான மிர் சுல்தான் கான் லண்டனில் உள்ள எம்பயர் செஸ் கிளப்பில் ஒரே நேரத்தில் 24 போட்டிகளில் விளையாடுகிறார். இந்த புகைப்படம் 1931 அக்டோபர் 15 ஆம் தேதி எடுக்கப்பட்டது

பஞ்சாபின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒருவரான உமர் ஹயாத் கான் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டு இந்திய மாநில கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டிஷ் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவியில் பணியாற்றிய உமர் ஹயாத் கான், பிரிட்டிஷ் அரசிடமிருந்து சர் பட்டமும் பெற்றார்.

இந்திய பாணி செஸ்

உமர் ஹயாத் கான் சுல்தானிடம் தனது மாகாணத்திற்கு வந்து செஸ் வீரர்களின் குழுவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு ஈடாக அவருக்கு தங்குமிடத்துடன் நல்ல சம்பளமும் வழங்கப்படும் என்று அவர் கூறினார். இந்த வழியில் மீர் சுல்தான் கான் ஒரு அமெச்சூர் வீரராக இருந்து பணக்கார நில உரிமையாளரின் பணியாளாக மாறினார்.

1926 ஆம் ஆண்டு உமர் ஹயாத் கானிடம் வருவதற்கு முன்பு, சுல்தான் இந்திய பாணி சதுரங்கத்தை மட்டுமே விளையாடினார். இப்போது அவர்களுக்கு ஐரோப்பிய பாணி சதுரங்கம் கற்பிக்க ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது, அதை மீர் சுல்தான் கான் எளிதாக வென்றார். அவர் ஒன்பது ஆட்டங்களில் விளையாடி அரை புள்ளியை மட்டுமே இழந்தார்.

உமர் ஹயாத் கான் டெல்லியில் அதிகார வட்டங்களில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அங்கு தான் சந்தித்த செல்வாக்கு மிக்க ஆங்கிலேயர்களிடம் சுல்தான் கானின் திறமையை எடுத்துரைக்க அவர் மறக்கவில்லை. 1929 இல் ஒரு அரசியல் பணி தொடர்பாக உமர் ஹயாத் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். தன்னுடன் அவர் அழைத்துச் சென்ற பணிமுகவர்களின் குழுவில் மீர் சுல்தான் கானும் இருந்தார்.

உமர் ஹயாத் கான் மற்றும் மீர் சுல்தான் கானுக்கும் இடையே உள்ள உறவு பற்றி தெளிவாகத்தெரியவில்லை. மீர் சுல்தான் கானின் குடும்ப உறுப்பினர்கள் இதை எதிர்த்தாலும், கடந்த கால வரலாற்றாசிரியர்கள் இதை முதலாளி- தொழிலாளி உறவு என்றே கூறியுள்ளனர். மீர் கான் மிகவும் கடினமான உழைப்பாளி. அவர் உமர் ஹயாத் கானுடன் இணைந்து பணிபுரிந்தார். எனவே அவரை பணியாள் என்று கூறுவது சரியல்ல என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

மீர் சுல்தான் கான் 1929 ஏப்ரல் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை லண்டனை அடைந்தார். சைமன் கமிஷனுக்காக பின்னர் பிரபலமடைந்த பிரிட்டிஷ் ராஜதந்திரி சர் ஜான் சைமன், உமர் ஹயாத் கானின் நெருங்கிய நண்பராகவும், சுல்தான் கானின் ரசிகராகவும் இருந்தார்.

அடுத்த நாள், அதாவது சனிக்கிழமையன்று, ஜான் சைமன், லண்டன் நேஷனல் லிபரல் கிளப்பில் இருந்த சில உயர்தட்டு மக்கள் முன்னிலையில் சுல்தான் கானை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு கான், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த புருனோ என்ற சாம்பியன் வீரருடன் சில ஆட்டங்களில் விளையாடி சிறப்பான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினார்.

காணொளிக் குறிப்பு,

சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் வந்தது எப்படி?

திடமான தற்காப்பு விளையாட்டு

மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அதே கிளப்பில் ஒரு பிரபல சர்வதேச வீரர் ஒரே நேரத்தில் பல வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சுல்தான் கானுக்கு அவரது பெயர் கூடத்தெரியாது. ஆனாலும் அவருடன் விளையாடும் வாய்ப்பு கானுக்கு கிடைத்தது.

சாம்பியனின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு முன்னால் சுல்தான் திடமான தற்காப்பு ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார். ஆரம்பத்தில் இருந்தே தனது வெற்றியில் நம்பிக்கையுடன் இருந்த சாம்பியன் வீரர் படிப்படியாக சுல்தானின் பிடியில் சிக்கி இறுதியில் தோற்றார்.

1921 முதல் 1929 வரை தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்த கியூபாவின் ஹோஸே ரவுல் காபாப்லாங்கா தான் அந்த சர்வதேச வீரர். காபாப்லாங்காவுடன் விளையாடிய இந்த முறைசாரா போட்டியில், மீர் சுல்தான் கான் தனது விளையாட்டின் மிகப்பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

தலைப்பாகை அணிந்து, உணர்ச்சியற்ற முகத்துடன், நீண்ட நேரம் எந்த அசைவும் செய்யாமல் இருந்த அவர் உள்ளிருந்து எவ்வளவு வலிமையானவர் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய இந்த வலிமையை உமர் ஹயாத்கூட அதுவரை அறிந்திருக்கவில்லை.

யாராலும் முழுவதுமாக முறியடிக்க முடியாத அளவுக்கு அவருடைய பாணி வித்தியாசமாக இருந்தது. அதே ஆண்டின் பிற்பகுதியில், லண்டனில் உள்ள ராம்ஸ்கேட்டில் பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது, இது உலக சாம்பியன்ஷிப்பிற்கு இணையாக கருதப்படுகிறது.

இந்த பெருமைமிகு போட்டியில் சுல்தான் கான் சாம்பியனானார். திடீரென்று உலகமே அவரைத் தெரிந்து கொண்டது. அதன் பிறகு அவருக்கு ஐரோப்பாவின் எல்லா நகரங்களிலும் விளையாட அழைப்பு வந்தது.

 

1932 ஆகஸ்ட் 15 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பின் போது டி எச் டெய்லருக்கு எதிராக சுல்தான் கான் தனது நகர்வைச் சிந்திக்கிறார்.

பட மூலாதாரம்,J. GAIGER

 

படக்குறிப்பு,

1932 ஆகஸ்ட் 15 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பின் போது டி எச் டெய்லருக்கு எதிராக சுல்தான் கான் தனது நகர்வைச் சிந்திக்கிறார்.

இங்கிலாந்து திரும்பினார்

இங்கிலாந்தின் குளிர் அவருக்குப் பிடிக்கவில்லை, அதன் காரணமாக நவம்பர் மாதத்தில் அவர் தாயகம்திரும்பினார், ஆனால் சதுரங்க உலகம் அவரை அடுத்த ஆண்டு மே மாதத்தில் மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்தது.

1930 மற்றும் 1933 க்கு இடையில், மீர் சுல்தான் கான் இரண்டு முறை பிரிட்டிஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் பல போட்டிகளிலும் அவர் பங்கேற்றார். சாவியாலி தார்தாகோவர், சோல்டன்பீஃப், சாலோ ஃப்ளோர், அகீபா ரூபின்ஸ்டைன் மற்றும் ஹோஸே ரவுல் காபாப்லாங்கா உட்பட அவரது காலத்தின் சில சிறந்த வீரர்களை அவர் தோற்கடித்தார். செக்கோஸ்லோவாக்கியா தலைநகர் ப்ராக் நகரில் நடைபெற்ற சர்வதேச அணி போட்டியில், அப்போதைய உலக சாம்பியனான அலெக்ஸாண்ட்ரா அலெக்கைனுடனான அவரது ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த காலகட்டம் சுல்தான் கானின் தொழில் வாழ்க்கையின் உச்சமாக இருந்தது, அவர் தொடர்ந்து உலகின் பத்து பெரிய வீரர்களில் ஒருவராக இருந்தார். இங்கிலாந்தில் உமர் ஹயாத் கானின் பணி,1933 இல் முடிந்தது. அதன் பிறகு அவர் சுல்தான் கான் மற்றும் அவரது மற்ற ஊழியர்களுடன் இந்தியா திரும்பினார்.

நீண்ட கடல் பயணத்திற்குப்பிறகு 1934 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் பம்பாய்க்கு வந்தபோது, மக்கள் அவரைத் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். ஜனவரி 25 அன்று பம்பாயைச் சேர்ந்த முப்பத்தேழு வீரர்களுடன் சேர்ந்து செஸ் விளையாடினார். தன்னை ஒரு சாம்பியனாகக் கருதுவதில் சுல்தான் கான்

அவருக்க்குள் எந்த மருட்சியும் இல்லை. அவர் மிகவும் லேசான மனநிலையில் விளையாடினார். பார்வையாளர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறவும், விளையாடும் போது நகர்வுகளைத் திரும்பப் பெறவும் வீரர்களை அவர் அனுமதித்தார். இருந்தபோதிலும்கூட அவர் 31 ஆட்டங்களில் வெற்றி பெற்றார், ஒன்றை ட்ரா செய்தார் மற்றும் ஐந்தில் தோற்றார்.

இதற்குப் பிறகு சாங்லியில் வசிக்கும் அபாரமான வீரரான விநாயக் காஷிநாத் காடில்கருடன் பத்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மிர் சுல்தான் கான் ஒன்பதில் வெற்றி பெற்றார். ஒன்று ட்ரா ஆனது.

 

1933 ஆகஸ்ட் 1 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், சசெக்ஸின் ஹேஸ்டிங்ஸில் நடந்த பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பின் போது சுல்தான் கான் CHOD அலெக்சாண்டருக்கு எதிராக விளையாடுகிறார்.

பட மூலாதாரம்,DOUGLAS MILLER

 

படக்குறிப்பு,

1933 ஆகஸ்ட் 1 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், சசெக்ஸின் ஹேஸ்டிங்ஸில் நடந்த பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பின் போது சுல்தான் கான் CHOD அலெக்சாண்டருக்கு எதிராக விளையாடுகிறார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம்

தாயகம் திரும்பிய பிறகும் முக்கிய ஐரோப்பியப் போட்டிகளில் விளையாட சில வருடங்கள் அவர் அழைக்கப்பட்டார். ஆனால் பயணச் செலவு மற்றும் தங்குமிட கட்டணங்களுக்கு அவரிடம் பணம் இல்லை.

உமர் ஹயாத் கானும் நிதி உதவி செய்வதை நிறுத்தினார். இதன் மூலம் ஒரு சாம்பியன் வீரரின் சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சர்கோதாவில் உள்ள தனது பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்வதில் கழித்தார்.

தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வந்த அவர் கண்ணுக்குத் தெரியாதவராக மாறியது குறித்து சில செய்தித்தாள்கள் விசித்திரமான ஊகங்களை வெளியிடத்தொடங்கின. இங்கிலாந்தில் இருந்து திரும்பி அவர் தனது கிராமத்தை அடைந்தபோது, ஒரு வயதான ஃபக்கீர் அவரது வீட்டிற்கு வந்து அவருடன் சதுரங்கம் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தினார்.அவரது விருப்பத்திற்கு உடன்பட்ட சுல்தான் கான் அவருடன் விளையாடினார். அந்த விளையாட்டில் முதியவர் வெற்றி பெற்றார்.

முதியவர் மற்றொரு பந்தயம் விளையாடுவதில் உறுதியாக இருந்தார். இதையும் சுல்தான் இழந்தார். இதற்குப் பிறகு, மூன்றாவது ஆட்டத்தில் தான் தோற்றால் தனது வாழ்நாளில் சதுரங்கமே விளையாட மாட்டேன் என்று ஃபக்கீரிடம் அவர் சொன்னார். ஆகவேதான் கடந்த பல ஆண்டுகளாக, சுல்தான் கான் தனது வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டு செஸ் விளையாடவில்லை என்று அந்தக்கதை கூறுகிறது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் மீர் சுல்தான் கான் ஓபரா பாடகராக மாறியிருப்பதாகவும்1950 ஆம் ஆண்டுவாக்கில் ஐரோப்பாவில் ஒரு வதந்தி பரவியது.

மீர் சுல்தான் கான் ஒரு குஜ்ஜர் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஆறு மகள்கள் என்று பதினொரு குழந்தைகள் பிறந்தன. அவர் தனது குடும்பத்துடன் சொந்த கிராமமான சர்கோதாவில் வாழ்ந்தார்.1966 இல் அவர் காலமானார். தனது மூதாதையர் கல்லறைக்கு அருகே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

காணொளிக் குறிப்பு,

புதிய செஸ் விளையாட்டைக் கண்டறிந்து காப்புரிமை பெறும் தையல் கடைக்காரர்

சிப்பாய் நகர்வு

மீர் சுல்தான் கான் சதுரங்கத்தைப் பற்றிய ஒரு பழமொழியை விரும்பினார் - "சதுரங்கம் என்பது ஒரு கடல், அதில் ஒரு ஈயும் தண்ணீர் குடிக்க முடியும், யானையும் குளிக்க முடியும்."

அவர் ஐரோப்பிய பாணி செஸ் விளையாடத் தொடங்கியபோது, நிறைய சிக்கல்களைச் சந்தித்தார். உதாரணமாக, இந்திய பாணியில் யானைக்கும் அரசனுக்கும் காஸ்ட்லிங் கிடையாது. அதேசமயம் இந்திய பாணியில் ராஜா ஒருமுறை குதிரையை இரண்டரை நகர்வுகள் செய்யலாம்.

சிப்பாய் நகர்த்தலில் மிகப்பெரிய சிக்கல் இருந்தது. இந்திய பாணியில் சிப்பாய் ஒரு கட்டம் தாண்டும். ஐரோப்பாவில் இரண்டு கட்டம் தாண்டும். ஆகவே ஆட்டத்தில் துவக்கம் அவருக்கு சிறிது அசெளகர்யமாகவே இருக்கும். ஆனால் அவர் விளையாட்டின் நடுப்பகுதியைக் கட்டுப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருந்தார், இதன் காரணமாக அவர் ஒரு தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரைப் போல விளையாட்டை தனக்குச் சாதகமாக கையாண்டார்.

அவரது வழக்கத்திற்கு மாறான விளையாட்டு பாணி, அவரது தோற்றம் மற்றும் உடைகள் தவிர, விமர்சகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது அவரது கல்வியறிவின்மை. இந்த சாம்பியன் வீரருக்கு எழுதவோ,படிக்கவோ தெரியாது.

எல்லா செஸ் தொழில்நுட்ப புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருந்தன. ஒரு புத்தகத்தைக்கூட படிக்காமல் எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்று விமர்சகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

 

சதுரங்கத்தின் மொழி

'சதுரங்கத்தின் மொழி'

புகழ்பெற்ற செஸ் வீரரும் எழுத்தாளருமான ஆர். என். கோல், சுல்தான் கானை ஒரு மேதை என்று கூறி அவரை பால் மர்பியுடன் ஒப்பிட்டார்.

மர்பி 1857 மற்றும் 1859 க்கு இடையில் மொத்தம் மூன்று ஆண்டுகள் சதுரங்கம் விளையாடினார் மற்றும் விளையாட்டு வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

ஆஸ்திரிய சாம்பியன் ஹான்ஸ் கமோச் 1930 இல் ஹாம்பர்க்கில், சுல்தானுடனான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தார். கமோச் மூன்று முறை ஆட்டத்தை டிரா செய்ய முன்வந்தார். ஆனால் மீர் சுல்தான் மூன்று முறையும் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்தார்.

எரிச்சலடைந்த காமோச், சுல்தானின் மொழிபெயர்ப்பாளரிடம், "உங்களுடைய இந்த சாம்பியன் என்ன மொழி பேசுகிறார்?" என்று கேட்டார். மொழிபெயர்ப்பாளர், "சதுரங்கத்தின் மொழி!" என்றார். கமோச் மூன்று அல்லது நான்கு நகர்வுகளுக்குப் பிறகு தோற்றுப்போனார் என்று சொல்லத் தேவையில்லை.

கியூபாவைச்சேர்ந்த உலக சாம்பியனான ஜோஸ் காபாப்லாங்காவுடன் விளையாடிய ஒரே அதிகாரப்பூர்வ பந்தயம் தொடர்பாகவும் இதேபோன்ற சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.

காபாப்லாங்கா தனது வெற்றி உறுதி என்று உற்சாகமாக இருந்தபோது, சுல்தான் கான் மெதுவாக ஒரு சிப்பாயை மூலையில் இருந்து நகர்த்திவிட்டு தரையைப்பார்த்தார். காபாப்லாங்காவை தோற்கடித்தது மீர் சுல்தான் கானின் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல். அதன் பிறகு அவரது மதிப்பீடு 2550 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த அடிப்படையில், அவர் ஆசியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்று கூறலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலக செஸ் கூட்டமைப்பு அவருக்கு இந்த மரியாதையை வழங்கவில்லை. அதே நேரத்தில் 1950 இல் சுல்தானால் தோற்கடிக்கப்பட்ட ஆகிபா ரூபின்ஸ்டேனுக்கு , மரணத்திற்குப் பின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

பிறப்பிலேயே திறமை

பட மூலாதாரம்,NEW IN CHESS

பிறப்பிலேயே திறமை

கடந்த பல தசாப்தங்களாக, மீர் சுல்தான் கானின் பெயர் சதுரங்க ஆர்வலர்களிடையே பேசப்படும் ஒரு பெயராக உள்ளது. மேலும் அவரது பெயருடன் பல உண்மை பொய் கதைகள் புனையப்பட்டுள்ளன.

அவர் பிறப்பிலேயே உள்ளார்ந்த திறமையுடன் இருந்தவர் என்ற ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். புகைப்படங்களில் சுல்தான் சராசரிக்கும் குறைவான உயரத்துடன், தாடை எலும்புகளுடன், கருமையான நிறத்துடன், கண்களில் குளிர்ச்சியான அமைதியுடன் காணப்படுகிறார்.

அவர் பெரும்பாலும் சூட் மற்றும் டையுடன் தலைபாகை அணிந்திருப்பதைக் காணலாம். அவர் விளையாடும் படங்களில், பண்டிட் மல்லிகார்ஜுன் மன்சூர் போன்ற ஒருமுகப்படுத்தலை நீங்கள் காண்பீர்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக அவரது சமூக அந்தஸ்தின் முரண்பாட்டையும் நம்மால் பார்க்கமுடிகிறது. அதன்படி அவர் ஒரு பிரிட்டிஷ் சார்பு பிரபுவின் ஊழியராக இருந்தார். தான் வென்ற ஒரு கோப்பையைப்போல அவர் மீர் கானை வைத்திருந்தார்.

அமெரிக்க செஸ் வீரரும் விமர்சகருமான ரூபன் ஃபைன் ஒரு மனதை தொடும் சம்பவத்தை விவரித்துள்ளார். 1933 இல் நடந்த ஃபோக்ஸ்டோன் ஒலிம்பியாட்க்குப் பிறகு, உமர் ஹயாத் கான், லண்டனில் உள்ள தனது வீட்டில் இரவு உணவிற்கு ரூபன் ஃபைன் உட்பட அமெரிக்க அணியை அழைத்தார்.

அணி வந்தவுடன், ஹயாத் கான், "எனது வீட்டிற்கு உங்களை வரவேற்கிறேன். நான் இங்குள்ள என் நாய்களுடன் பேசுவது வழக்கம்" என்றார்.

இரவு உணவு மேசையில் முக்கிய இடம் சாம்பியனுக்கு ஒதுக்கப்படும் என்று எல்லா விருந்தினர்களும் நம்பினர். மீர் சுல்தான் எளிய உடையில் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Chess

பட மூலாதாரம்,GETTY IMAGES

'சுல்தான் கான் வால் நட்சத்திரம்'

"ஒரு கிராண்ட்மாஸ்டர் சாம்பியன், யாரை மரியாதை செய்ய நாங்கள் அழைக்கப்பட்டிருந்தோமோ, அவருடைய சமூக அந்தஸ்து காரணமாக அவரே எங்களுக்கு பணியாளராக உணவு பறிமாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று ஃபைன் எழுதினார்.

இன்றும் நம் நாட்டில் மீர் சுல்தான் கானை அறிந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது உண்மைதான். ஆனால் அவர் சதுரங்க வானத்தில் ஒளிரும் நட்சத்திரமாக மின்னினார்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்ய எழுத்தாளர் அனாடோலி மாட்சுகேவிச் ஒரு முக்கியமான புத்தகத்தை எழுதினார் - 'சுல்தான் கான்,எ காமெட்', அவர் விளையாடிய 198 போட்டிகளில், 120 பற்றிய தகவல்களை சேகரித்தார். சுல்தான் கானின் வாழ்க்கையைப் பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.

காணொளிக் குறிப்பு,

பள்ளியில் செஸ் விளையாடுவது படிப்புக்கு எப்படி உதவும்? விஸ்வநாதன் ஆனந்த் விளக்கம்

குடும்பத்தாரின் ஆட்சேபங்கள்

இவற்றில் மிகசமீபத்தில் வெளியான புத்தகம் பிரிட்டிஷ் செஸ் கிராண்ட்மாஸ்டரும் எழுத்தாளருமான டேனியல் கிங்கின் 'சுல்தான் கான் - தி இந்தியன் சர்வெண்ட் ஹூ பிக்கேம் செஸ் சாம்பியன் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்'. 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் உண்மைகள் முன்வைக்கப்பட்ட விதம் குறித்து மீர் சுல்தானின் குடும்ப உறுப்பினர்கள் பல ஆட்சேபங்களை எழுப்பியுள்ளனர்.

அவரது மூத்த மகன் அதர் சுல்தானின் மகள் டாக்டர் அதியாப் சுல்தான், பிரிவினைக்குப் பிறகு அவரது பிரதேசம் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதால், தனது தாத்தா இந்தியர் என்று புத்தகத்தில் விவரிக்கப்பட்டதை எதிர்த்துள்ளார்.அவர் பாகிஸ்தானி என்று அழைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மீர் சுல்தான் கான் ஒரு பணியாள் என்று அழைக்கப்படுவதையும் அவர் எதிர்க்கிறார். மூன்றாவதாக அவர் படிப்பறிவில்லாதவர் என்று விவரிக்கப்பட்டதற்கும் அவர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மீர் சுல்தான் கானின் வாழ்க்கையின் முழுமையான கதை இன்னும் உலகத்தின் கவனத்திற்கு வரவில்லை என்று கூறலாம்.

இன்னும் ஒரு சுவாசியயமான விஷயம் இல்லாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது. சர் உமர் ஹயாத் கானின் வேலையாட்கள் குழுவில் குலாம் ஃபாத்திமா என்ற பெண் தொகுப்பாளரும் இங்கிலாந்து சென்றார். பதினெட்டு வயது பாத்திமாவுக்கும் செஸ் விளையாடத் தெரியும்.

பேரரசர் ஐந்தாம் ஜார்ஜின் மனைவி ராணி மேரிக்கு சதுரங்கம் விளையாட தான் கற்றுக் கொடுத்ததாக பின்னர் அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறினார்.

உமர் ஹயாத் கானின் உத்தரவின் பேரில், 1932 பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் பங்கேற்று ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

இதற்குப் பிறகு மீர் சுல்தான் பாத்திமாவுக்கு சில சிக்கலான சதுரங்க நகர்வுகளைக் கற்றுக் கொடுத்தார். குலாம் பாத்திமா 1933 பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப்பை வென்றார். அதே ஆண்டுக்கான ஆடவர் பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் போட்டியை மீர் சுல்தான் கான் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-62312670

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.