Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில்

  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
14 ஆகஸ்ட் 2022
 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

"குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்திருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அகற்றுவதற்கு அரசு முன்வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 925 ஏரிகள் உள்ளன. அவற்றில் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அனைத்து ஏரிகளும் கால்வாய்களின் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக மற்றொரு ஏரிக்குத் தண்ணீர் போகும். அந்த ஏரியும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் செல்லும். அதைத் தொடர்ந்து ஆறுகள், குளங்கள் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டிருந்தன.

 

அந்த வகையில் கீழ் பாலாறு வடிநில கோட்டத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் அடையாறு ஆறுகளில் மட்டும் 21,464 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

1px transparent line

 

1px transparent line

அடையாறில் 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 381 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு 2,122 ஆக உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 528 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுமார் 14,842 ஆக உள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வரக்கூடிய 16 ஏரிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு சுமார் 4,500 ஆக உள்ளது.

அடையாறில் மட்டும் 34 இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக அடையாறு நதி கடந்து செல்லும் நீர்வழிப் பாதையில் மட்டும் 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன.

நான்கு கட்டங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூரில் தொடங்கும் அடையாறு நதி, செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்னை மாவட்டத்தில், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், ஜாஃபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பட்டினப்பாக்கம் வரை சுமார் 42 கி.மீ தூரம் பயணிக்கிறது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை மனிதத் தவறுதலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்குப் பிறகு அடையாறு செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு கட்டங்களாகப் பிரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

நீர்நிலை ஆக்கிரமிப்பு

அந்த வகையில் முதல் கட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் 1019 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதியில் மட்டும் 1060 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இருக்கின்றன.

மூன்றாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கநல்லூர், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் 5320 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நான்காம் கட்ட நடவடிக்கையில் ஆலந்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் 9769 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

மொத்தமாக அடையாறு நதி செல்லும் நீர் வழியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள் நீர்வரத்து பாதைகள் என 17,168 இடங்கள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுப்பணித் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

மதுரவாயில் ஏரியில் 727 ஆக்கிரமிப்புகள்

இதேபோல் கொற்றலை ஆறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட மாதாவரம் ஏரி, புத்தகரம் ஏரி, சடையன் குப்பம் ஏரி, மஞ்சம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, கொளத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரிகளில் மொத்தம் 1252 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக மதுரவாயில் ஏரியில் 727 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் பெற்றுள்ளார்.

துணை போன அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்

இன்று சென்னையில் பெரும்பாலான ஏரிகளைக் காணவில்லை. அவற்றோடு இணைந்திருந்த கால்வாய்களும் காணாமல் போய்விட்டன. சிங்கார சென்னையின் பெரும் வளர்ச்சிக்கும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும் ஏற்ப விவசாய நிலம் முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன்பே காணாமல் போனவை நீர்நிலைகள் தான்," என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன்.

இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஒரு ஏரியின் கரைகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பிறகு தொடர்ச்சியாக நகரத்தின் பெரும்பகுதி நீர்நிலைகளை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு தாராளமாய் அனுமதி வழங்கியது அரசு அதிகாரிகள் தான். எனவே ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இனி வரும் காலங்களில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும்," என்றார்.

 

ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன்

 

படக்குறிப்பு,

"இந்த ஆக்கிரமிப்புகளுக்கு தாராளமாய் அனுமதி வழங்கியது அரசு அதிகாரிகள் தான்" என்கிறார் ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன்

அதோடு, "முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள கொளத்தூர் ஏரியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு இருக்கின்றது என்கின்ற விவரங்களை அதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்கள். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை வெளிப்படையாக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்," என்கிறார் காசிமாயன்.

குடிசைகளைத் தவிர நீர்நிலைகளில் பெரியளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கக்கூடிய பெரிய கட்டடங்களை பாரபட்சம் பார்க்காமல் அரசு அகற்ற முன்வருமா என்று கேள்வியெழுப்புகிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் குடிசைகளால் மட்டுமே பெரும் வெள்ளம் வருவது கிடையாது. நீர்நிலைப் பாதைகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய கட்டடங்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது. ஆறும் கடலும் ஒன்று சேரும் இடத்தில் 4000 ஏக்கருக்கு மேல் அரசு நிறுவனங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருக்கின்றன. இவற்றை அகற்ற அரசு முன்வருமா?" என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், "சென்னையின் நதியோரங்களில் வசித்து வந்த ஏழை மக்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தி செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் குடியமர்த்தினார்கள். அந்த இடங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சார்ந்த இடங்கள். ஒரு நீர்நிலையில் ஆக்கிரமிப்பு எனக் கூறி அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தி மற்றொரு நீர்நிலையில் குடியமர்த்துகிறார்கள். மேலும் வளர்ச்சி என்ற பெயரில் எவ்வளவு ஏரிகளை அரசே திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதை நினைவு கூற வேண்டும். ஏழைகளாக இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். அதுவே அரசாக இருந்தால் ஒன்றும் செய்யக்கூடாது என்கிற நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

 

படக்குறிப்பு,

"நீர்நிலைப் பாதைகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய கட்டடங்களால் தான் வெள்ளம் ஏற்படுகிறது," என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்

வளர்ச்சி என்கின்ற பெயரில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாய் மண் இருந்த இடங்கள் தற்போது கான்க்ரீட் கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மழைத்துளி மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதில்லை. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாய் மாறுகிறது. ஆற்றின் கொள்ளளவு தாண்டி நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சூழ்ந்து விடுகிறது.

இனி வரும் காலங்களில் வெள்ளத்தோடு தான் நம் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது சென்னைக்கு உண்டான பிரச்னை மட்டுமல்லாது ஏரிகள் எங்கெல்லாம் வளர்ச்சி என்கிற பெயரில் மூடப்படுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பிரச்னை இருக்கிறது," என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது வில்லங்கம் பார்க்கவேண்டும்

"நல்ல வீட்டுமனையைத் தேர்வுசெய்ய கீழ்கண்டவற்றை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்," என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் வெற்றிவேல்.

  • மனையின் மூலப்பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசித்து, வீட்டுமனைக்கான பத்திரம் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக இடத்தின் மீது குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வீட்டுமனையின் உரிமையாளர் சட்டப்படி சரியான நபர்தானா என்பதை எப்போதும் உறுதிசெய்ய வேண்டும். பவர் மட்டும் உள்ளவர் என்றால் அந்தப் பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகுமா என்பதை வழக்குரைஞர் மூலம் சரிபார்க்க வேண்டும்.
 

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு

  • நேரடியாக சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலரையே தொடர்புகொண்டு வீட்டுமனை இருக்கும் நிலத்தின் தன்மை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வீட்டுமனைக்கு பட்டா கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
  • அரசு இணையதளங்கள் வாயிலாக வீட்டுமனைக்கு சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அப்ரூவல் உள்ளதாக என உறுதிப்படுத்தலாம். அதில், காட்டப்பட்டுள்ள திட்டப்படி வீட்டுமனை அமைந்துள்ளதா, சர்வே எண் சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை பலமுறை தொடர்புகொண்டும் பதில் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை பகுதிவாரியாகப் பிரித்து அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விரைவில் நீர் நிலைகளில் இருக்கக்கூடிய அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62539340

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.