Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நஜிப் ரஸாக்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

நஜிப் ரஸாக்

மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு.

முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தார். ஆனால் 1எம்டிபி நிதி முறைகேடு உள்ளிட்ட ஊழல் வழக்குகள் அவரை மீளமுடியாத சிக்கலில் ஆழ்த்தி விட்டன.

 

Banner

யார் இந்த நஜிப்?

  • பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் நஜிப். நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் ரஸாக்கின் மூத்த மகன் ஆவார். மலேசியாவில் ஆக இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றவர். அப்போது அவருக்கு 22 வயது.
  • அந்த முதல் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அன்று முதல் இன்று வரை அந்த பெகான் நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியபோதும், அத்தொகுதி மக்கள் நஜிப்பை கைவிடவில்லை.
  • மலேசியாவின் ஆறாவது பிரதமராக 2009ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நஜிப். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவரது வெற்றிநடை தொடர்ந்தது. எனினும், 2018ஆம் ஆண்டு தேர்தலில் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி தோல்வி அடைந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு அக்கூட்டணி சந்தித்த முதல் தோல்வி அது.
  • அதன் பின்னர் அவர் மீது புதிய அரசாங்கம் ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ததுடன், அதிரடியாக கைது நடவடிக்கையும் மேற்கொண்டது. அதையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் முடிவில், சிறைத்தண்டனை பெற்றுள்ளார் நஜிப் துன் ரஸாக்.
  • மலைக்க வைக்கும் தொகை அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இதனால் அவர் திவாலாகும் நிலைமையும் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் அவரது மனைவி, வளர்ப்பு மகன் ஆகியோரும் வழக்குகளில் சிக்கினர்.
  • இங்கிலாந்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த நஜிப் நாடு திரும்பியதும், மலேசியாவின் மத்திய வங்கியிலும், அரசாங்க நிறுவனத்திலும் பணியாற்றினார்.
  • 1953ஆம் ஆண்டு பிறந்த நஜிப்புக்கு, 1973ஆம் ஆண்டு, தமது 22 வயதிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தனது தந்தை காலமானதை அடுத்து கிடைத்த அந்த வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
  • அதே ஆண்டில் அவர் அன்றைய ஆளும் கட்சியான அம்னோவின் பெகான் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1976ஆம் ஆண்டு அவருக்கு துணை அமைச்சர் பதவி தேடி வந்தது. இதையடுத்து மாநில அரசியலில் கவனம் செலுத்த கட்சித் தலைமையால் பணிக்கப்பட்டார். 1982 முதல் 1986 வரை மலேசியாவின் பகாங் மாநில முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார் நஜிப்.
  • பிறகு தேசிய அரசியலுக்குத் திரும்பிய அவர், 2009ஆம் ஆண்டு வரை தற்காப்பு, கல்வி, கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை எனப் பல்வேறு அமைச்சுகளில் பணியாற்றினார். குறிப்பாக, நிதி அமைச்சராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகுத்துள்ளார்.
  • மலேசிய கல்வி அமைச்சராகப் பதவி வகித்த அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக 2004ஆம் ஆண்டு நாட்டின் துணைப் பிரதமராக உயர்வு கண்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே நாட்டின் பிரதமராகவும் வாய்ப்பும் கைகூடி வந்தது.
 

Banner

விமர்சனத்துக்குள்ளான நடவடிக்கைகள்

அரசு முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியில் (1Malaysia Development Berhad - 1MDB) பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, நஜிப்பின் அரசியல் வாழ்க்கையில் சரிவு ஏற்படத் தொடங்கியது எனலாம்.

அச்சமயம் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விளக்கங்களை அளிக்கத் தவறிய அவர், அதற்கு நேர்மாறாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை மேலும் வலுவாக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

அப்போது அவரது அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்த மொஹைதின் யாசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டு நாளேடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

 

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்

பட மூலாதாரம்,EPA

 

படக்குறிப்பு,

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்

தேசிய பாதுகாப்பு கவுன்சில் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுத்தார் நஜிப்.

இதன் மூலம் பிரதமருக்கு அளப்பரிய அதிகாரங்கள் கிடைக்கும் என்பதால் எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மேலும், தேச நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் நஜிப் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாயின. பல்வேறு மானியங்களைக் குறைத்ததால் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துவிட்டதாகவும் அவை சாடின.

இந்த நிலையில், 1எம்டிபி ஊழல் விவகாரம் காரணமாக மலேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மலேசிய நாணயமான ரிங்கிட் கடும் சரிவைக் கண்டது.

 

Banner

இந்தியர்களுக்கு என்ன செய்தார்?

  • மலேசிய பிரதமர்களிலேயே அங்குள்ள இந்திய சமூகத்துக்கு அதிக நன்மைகளைச் செய்தது நஜிப்தான் என்று ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
  • தமிழ் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு, மலேசிய இந்தியர் உருமாற்ற திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, மெட்ரிகுலேஷன் கல்விக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் இந்திய மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கியது என மலேசிய இந்திய சமுதாயத்துக்கு அவர் பல்வேறு வகையிலும் உதவிக்கரம் நீட்டியதாக அவர்கள் பட்டியலிடுகின்றனர்.
  • ஒவ்வோர் ஆண்டும் பத்து மலை திருத்தலத்தில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச நிகழ்வில் கூடுமானவரை தவறாமல் கலந்துகொள்வார் நஜிப். அவர் பிரதமராக இருந்தபோது, அந்நிகழ்வில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருவதும் வழக்கம்.
  • மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி தமது அமைச்சரவையில் உள்ள இந்திய சகாக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் 'திறந்த இல்ல' உபசரிப்பிலும் நஜிப் தம்பதியர் பங்கேற்பர் என்பதையும் அவரது இந்திய ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ரஜினியின் தீவிர ரசிகர் நஜிப்

  • முன்னாள் பிரதமர் நஜிப் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவர். 'கபாலி' படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது, இருவரும் சந்தித்துப் பேசினர்.
  • 'கபாலி' படத்துக்கு மலேசியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டபோது சென்னைக்கு வருகைதந்த நஜிப், ரஜினியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று சந்தித்தார்.
  • இது ரஜினியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்றாலும், மலேசிய இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நஜிப்பின் அரசியல் தந்திரம் என்ற விமர்சனமும் எழுந்தது.
 

Banner

1எம்டிபி என்ற மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிடமிருந்து சுமார் $10 மில்லியனை சட்டவிரோதமாகப் பெற்றதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப் ரஸாக், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். மலேசிய கூட்டரசு நீதிமன்றம், நஜிப்புக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் ( 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் ($46.84 மில்லியன்) அபராதம்) நிலைநிறுத்தியுள்ளது.

மலேசியாவில் அடுத்த பொதுத்தேர்தல்

இதற்கிடையே நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அம்னோ கட்சி, நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நஜிப் ரஸாக் வழக்கின் தீர்ப்பு தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் முந்தைய நாள் அவர் சார்ந்துள்ள அம்னோவின் முக்கியத் தலைவர்கள் பலர் நடப்பு பிரதமர் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

பிரதமரும் அம்னோ கட்சியைச் சார்ந்தவர்தான். அம்னோ உதவித்தலைவராக உள்ள அவருக்கு, தேர்தலை நடத்தக்கோரி, சொந்த கட்சியினரே அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

 

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்

15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் நடத்தப்பட வேண்டும். எனினும் எதிர்வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சில தரப்புக்கள் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஆனால், தற்போது தேர்தலை நடத்தினால் ஆளும் தரப்புக்கு சாதகமாக இருக்காது என்கிறார் பிரதமர். அவர் சார்ந்துள்ள அம்னோ கட்சித் தலைவர்களோ, அக்டோபர் அல்லது டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

எனினும், மலேசியாவில் நாடாளுமன்றத்தை நினைத்த போதெல்லாம் கலைத்துவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நாளுமன்றத்தைக் கலைப்பதற்கான காரணத்தை அந்நாட்டின் மாமன்னரிடம் பிரதமர் தெரிவிக்க வேண்டும். மாமன்னர் அதை ஏற்கும் பட்சத்தில், அவரது இசைவுடன் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பிரதமர் அறிவிக்கலாம்.

பிரதமர் வேட்பாளர்; கலைந்துபோன 'போஸ்கு' நஜிப்பின் கனவு:

காரணம், கடந்த சில மாதங்களில் மட்டும் மலேசியாவில் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அம்னோ கட்சி பெரும் வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றிநடை 15ஆவது நாடாளுமன்றத் தேர்தலிலும் நீடிக்கும் என அக்கட்சித் தலைமை கருதுகிறது.

இந்த மூன்று மாநிலத் தேர்தல்களிலும் அம்னோ கட்சிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார் நஜிப் ரஸாக். அவர் பிரசாரத்துக்காக சென்ற இடங்களில் எல்லாம் பெரும்கூட்டம் கூடியது. தேர்தலின் முடிவில் கிடைத்த வெற்றிக்கு நஜிப்பின் பிரசாரம் முக்கிய காரணம் என அம்னோ தலைமை தெரிவித்தது.

ஊழல் வழக்குகளில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டால் மீண்டும் பிரதமர் வேட்பாளராக தேர்தல் களம் காண்பதில் நஜிப் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். இதற்கேற்ப அம்னோ கட்சி நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை வேறு எவரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை.

தனது தொண்டர்களால் 'போஸ்கு' (Bossku) என்று பாசத்துடன் குறிப்பிடப்படும் நஜிப், பல்வேறு வகையிலும் நீதிமன்ற விசாரணையைத் தாமதப்படுத்த முயற்சி செய்ததாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். நீதிமன்றமும் இதுதொடர்பாக கண்டிப்பு காட்டியது.

தமக்குத் தண்டனை விதிக்கக் காரணமாக இருந்த எஸ்ஆர்சி SRC நிதி முறைகேடு வழக்கின் விசாரணையை மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க கடைசி நேரம் வரை போராடிப் பார்த்த நஜிப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்

கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மலேசிய உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியதை அடுத்து, அவர் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

தன் தந்தை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப்பின் மகள் Nooryana Najwa, தன் தந்தை போராட்ட குணம் கொண்டவர் என்றும், அவரது அரசியல் பயணம் இத்துடன் முடிந்துவிடாது என்றும் தெரிவித்தார்.

வரலாறு திரும்புமா?

சிறைக்குச் சென்றதால் நஜிப் எதிர்வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட இயலாது. அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி உள்ளது. தவிர, அவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளன. இதனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவருக்கான பாதை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

நடப்பு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் கடந்த காலத்தில், ஒரு வழக்கில் பெற்ற சிறைத்தண்டனை காரணமாக, தேர்தலில் போட்டியிட இயலாத நிலையை எதிர்கொண்டவர்தான். எனினும், மகாதீர் அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில், அவருக்கு மலேசிய மாமன்னர் மன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியது.

அதுபோன்ற ஏதேனும் ஒரு வாய்ப்பு தங்களின் தலைவரான 'போஸ்கு' நஜிப்புக்கு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். அநேகமாக, சிறையில் தன் 'முதல் இரவை' கழித்த முன்னாள் பிரதமர் நஜிப்பும் இவ்வாறு யோசித்திருக்கக்கூடும். https://www.bbc.com/tamil/global-62652947

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.