Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#இரக்கமற்ற_இரும்பு_மனிதன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சனத் ஜெயசூர்யவின் பிறந்த நாளையொட்டி பல கட்டுரைகளைப் படித்தேன். அதில் ரொம்பவும் பிடித்திருந்தது விகடனின் இந்தக் கட்டுரை. மீண்டுமொரு முறை அந்தக் காலத்துக்கே சென்றதான உணர்வு. வாசித்துப் பாருங்கள் சனத்தின் இரக்கமில்லா தன்மைகளை…
சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது.
மார்ச் 2, 1996... அது ஒரு சனிக்கிழமை. உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிய நான்காவது போட்டி. இதற்கு முன்பான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்திருந்தது. ''இலங்கையை ஜெயிக்கிறதெல்லாம் இந்தியாவுக்கு சப்ப மேட்டர். அவங்கலாம் ஒரு டீமே இல்ல. ஈஸியா ஜெயிச்சுடும்'' என என் பக்கத்துவீட்டு நண்பனின் அப்பா வெள்ளிக்கிழமையே வெற்றியைக் கணித்து, சனிக்கிழமை மதியத்துக்கு பைலட் தியேட்டரில் எல்லோருக்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்துவிட்டார்.
பனி மூட்டத்துக்கு இடையே டெல்லியில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியதாக நினைவு. கென்யாவுக்கு எதிராக சென்சுரி அடித்த சச்சின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 70 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். அதனால் இலங்கைக்கு எதிராக ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சூப்பராக இருக்குமே என எதிர்பார்த்து டிவி முன் உட்கார்ந்த சச்சின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருந்தது. பிரமாதமான இன்னிங்ஸ் ஆடினார் சச்சின். ஒரு ஷாட்கூட மிஸ் டைமிங் ஷாட் கிடையாது. அவரும், அசாருதினும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார்கள்.
சச்சின் சென்சுரி மட்டுமல்ல அப்போதைய அதிகபட்ச ஸ்கோராக 137 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் ரன் அவுட்தான் ஆனாரே தவிர இலங்கையின் பெளலர்கள் யாரும் அவர் விக்கெட்டை எடுக்கவில்லை. இந்தியா 50 ஓவர்களில் 271 ரன் சேர்த்தது. அப்போதைய காலகட்டத்தில் 250 ரன்களுக்கு மேல் அடித்தாலே வெற்றிபெற்றுவிடலாம் என்பதால் இந்தியாவின் வெற்றி ஓரளவுக்கு உறுதியானதுபோல இருந்தது. இடையில் மழைவேறு வந்ததால் இலங்கையின் இன்னிங்ஸ் தொடங்க கொஞ்சம் தாமதமாக, படத்துக்குக் கிளம்பும் வேலைகளில் இறங்கினோம். தியேட்டருக்கு பஸ் பிடிக்க சிலமணித்துளிகள் இருந்தபோது இலங்கையின் இன்னிங்ஸ் ஆரம்பித்தது. சனத் ஜெயசூர்யாவும், விக்கெட் கீப்பர் ரோமேஷ் கலுவித்தரானாவும் ஓப்பனிங் இறங்கினார்கள். மனோஜ் பிரபாகர் பெளலிங். 'இலங்கை வீரர்கள் இப்படியெல்லாமா ஆடுவார்கள்' என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள்.
அப்போதெல்லாம் முதல் ஓவரில் பவுண்டரிகள் அடிப்பது என்பது பேரதிசயம். முதல் ஓவர்களில் எல்லாம் கமன்டேட்டர்கள் பொதுவாக 'வெல் லெஃப்ட்' என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதுவும் முதல் 10 ஓவர்கள் எல்லாம் ஆமை வேகத்தில்தான் நகரும். 10 ஓவரில் 40 ரன் வந்தாலே பெரிய விஷயம்தான். ஆனால், அன்று இலங்கையின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே பவுண்டரிகள் பறந்தன. மனோஜ் பிரபாகரின் முதல் ஓவரில் மட்டும் 11 ரன்கள். அடுத்த ஶ்ரீநாத் ஓவரில் 9 ரன்கள். மூன்றாவது ஓவர் மீண்டும் மனோஜ் பிரபாகர். இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் அடித்தார் ஜெயசூர்யா. 3-வது ஓவரிலேயே இலங்கையின் ஸ்கோர் 42. ஒருபக்கம் ஜெயசூர்யா அடிக்க, இன்னொரு பக்கம் கலுவித்தரனாவும் பவுண்டரிகள் அடித்துக்கொண்டிருந்தார். நான்காவது ஓவரிலேயே 50 ரன்களைத் தொட்டுவிட்டார்கள். பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால், நல்லவேலையாக 5-வது ஓவரில், வெங்கடேஷ் பிரசாத்தின் பெளலிங்கில் கலுவித்தரானா 26 ரன்களில் அவுட் ஆக, நாங்கள் கிளம்பி படத்துக்குப்போனோம். இந்தியா வெற்றிபெற்றதா, இல்லை தோல்வியடைந்ததா எனத் தெரியாது. படம் முடிந்து வெளியே வந்ததும் எதிரில் வந்த பலரிடமும் ''மேட்ச் எனனாச்சு'' எனக்கேட்க, ஒரே ஒரு அண்ணன் மட்டும் தோளில் தட்டி, ''இந்தியா தோத்துடுச்சுப்பா... மேட்ச்லாம் பார்க்குறதைவிட்டுட்டு நல்லா படிங்க'' என அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.
அடுத்தநாள் ஹைலைட்ஸில்தான் ஜெயசூர்யாவின் மிரட்டல் இன்னிங்ஸைப் பார்க்கமுடிந்தது. முதல் 2 ஓவர்களில் ஜெயசூர்யா வெளுத்ததால் அடுத்த ஸ்பெல்லில் வேகப்பந்து வீச்சாளரான மனோஜ் பிரபாகர் ஆஃப் ஸ்பின் எல்லாம் போட்ட விநோதங்கள் நடந்திருக்கின்றன. 2 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் அடித்திருக்கிறார் ஜெயசூர்யா. இந்தியாவுக்கு எதிரான ஜெயசூர்யாவின் முதல் தாக்குதல் அதுதான்... சனத் ஜெயசூர்யா என்கிற பெயர் ஆழ்மனதில் பதிந்தது. மனோஜ் பிரபாகரின் கரியர் அன்றோடு முடிந்தது.
இடது கை பேட்ஸ்மேனான ஜெயசூர்யா இலங்கையின் மாத்தாறை எனும் பகுதியைச் சேர்ந்தவர். கொழும்புவில் இருந்து 160 கிமீட்டர் தூரத்தில் இருக்கும் நகரம் இது. சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமான பயண தூரம். கிரிக்கெட் பயிற்சிகள் எடுப்பதற்காக தினமும் அதிகாலையில் எழுந்து 3-4 மணி நேரம் பயணம் செய்து கொழும்புவில் வந்து பயிற்சிகள் எடுத்துவிட்டு மீண்டும் மாலையில் கிளம்பி நள்ளிரவில் வீடு போய் சேர்வது என ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக மாற வெறியாக உழைத்திருக்கிறார் ஜெயசூர்யா. கொழும்பு அணிக்கான ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டங்கள் 1988-ல் நடந்த முதல் யூத் கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாட அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போனது. பிரையன் லாரா, நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்ட்டன், இன்சமாம் உல் ஹக் என 90'ஸில் மிகப்பெரிய கிரிக்கெட்டர்களாக உருவெடுத்தப் பலரும் கலந்துகொண்ட ஜூனியர் உலகக்கோப்பை தொடர் அது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜெயசூர்யாவுக்கு அவரது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பணஉதவி செய்து பேட், Pad, ஹெல்மெட் என முதல்முறையாக புது கிரிக்கெட் கிட் வாங்கிக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆமாம், முதன்முதலாக ஜெயசூர்யா தன் சைஸுக்கு ஏற்ற Pad, ஹெல்மெட்களை அப்போதுதான் வாங்கியிருக்கிறார். சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது. அந்தப் பழக்கம்தான் சர்வதேச கிரிக்கெட்டாராகி ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்கள் அடித்தப்பிறகும் மாறவில்லை. அதேப்போல் ஒவ்வொரு பவுண்டரியும், சிக்ஸரும் அடித்ததும் பிட்ச்சுக்கு நடுவில் வந்து பேட்டை நான்கைந்து முறை தட்டிவிட்டுப்போவார் ஜெயசூர்யா. பெளலர் பெளலிங் போட ஓடிவந்துகொண்டிருக்கும்போது ஜெயசூர்யாவின் பேட் டப்பு, டப்பு, டப்பு என மூன்று முறை தட்டும் சத்தமே கிலி கிளப்பும்.
விவியன் ரிச்சர்ஸுக்குப்பிறகு அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இல்லை என்ற குறையைத் தீர்த்தவர் சனத் ஜெயசூர்யா. இப்போதைய பேட்டிங் பவர்ப்ளே கான்செப்ட்கள் 90-களில் இல்லை. முதல் 15 ஓவர்களுக்கு அவுட்ஃபீல்டில் மூன்று ஃபீல்டர்கள் மட்டுமே நிற்கமுடியும் என்பது அப்போதைய ஃபீல்டிங் ரெஸ்ட்ரிக்‌ஷன். இதை சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெற ஆரம்பித்த முதல் டீம் இலங்கைதான்.
பின்ச் ஹிட்டிங் எனச் சொல்வார்கள். டாப் ஆர்டரில் விக்கெட்டுகள் சரியும்போது 5வது அல்லது 6-வது டவுனில் வரக்கூடிய பேட்ஸ்மேனை 1 டவுன் அல்லது 2 டவுனில் இறக்கி அதிரடி ஆட்டம் ஆடவைப்பார்கள். அதுதான் பின்ச் ஹிட்டிங் என்பதற்கான அர்த்தமாக 1996 வரை இருந்தது. ஆனால், இலங்கையோ ஓப்பனர்களே பின்ச் ஹிட்டர்கள்தான் என்கிற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது.
1996 உலகக்கோப்பைக்கு முன்புவரை சதங்கள் கூட ஜெயசூர்யா அடித்திருக்கிறார். ஆனால், அதுவரை அவரை பெளலிங் ஆல் ரவுண்டராகத்தான் எல்லோரும் பார்ப்பார்கள். ஐந்தாவது அல்லது 6-வது டவுன் பேட்ஸ்மேனாகத்தான் வருவார். ஆனால், திடீரென இலங்கை கேப்டன் ரணதுங்கா, ஜெயசூர்யாவை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்க ஆரம்பித்தார். ஜெயசூர்யா மட்டுமல்ல கூடவே இன்னொரு பின்ச் ஹிட்டரான விக்கெட் கீப்பர் ரோமேஷ் கலுவித்தரானாவும் இறக்கிவிட்டார். இந்தக் கூட்டணிதான் 1996 உலகக்கோப்பையை இலங்கை கைப்பற்றியதற்கான அடித்தளம். இலங்கையின் எழுச்சிக்கு அடிநாதம்.
ஜெயசூர்யா - கலுவித்தரானாவின் டார்கெட்டே இலங்கையின் ஸ்கோரை முதல் 15 ஓவர்களில் 100 ரன்களுக்கு கொண்டுவந்துவிடவேண்டும் என்பதுதான். 15 ஓவர்களுக்கு ரன்ரேட்டை 6-க்கு மேல் கொண்டுவந்துவிட்டால் அதன்பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்ரேட்டை கொஞ்சம் இறக்கினாலும் 40 ஓவர்களுக்கு மேல் மீண்டும் அதிரடி ஆட்டம் ஆடிக்கொள்ளலாம் என்பது இலங்கையின் பிளான். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்காட்டியவர் ஜெயசூர்யா.
1996 உலகக்கோப்பை முடிந்த அடுத்த இரண்டு வாரங்களிலேயே சிங்கப்பூரில் சிங்கர் கப் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக உலக சாதனைப்படைத்தார் ஜெயசூர்யா. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அமீர் சோஹைல் இலங்கையிடம் பேட்டிங்கைக் கொடுத்தார். வழக்கம்போல, ஜெயசூர்யாவும், கலுவித்தரனாவும் பாகிஸ்தான் பெளலிங்கை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தார்கள். 10 பந்துகளில் 24 ரன்கள் அடித்து கலுவித்தரானா அவுட் ஆனாலும், ஜெயசூர்யாவைத் தடுக்கமுடியவில்லை. இதனால் அமீர் சோஹைல் 8வது ஓவரிலேயே ஆஃப் ஸ்பின்னரான சக்லைன் முஷ்தாக்கை இறக்கினார். இது பெரிதாகப் பயனளிக்காதபோது கேப்டனான தானே களத்தில் இறங்குவது என முடிவெடுத்தார். ஆனால், அவர் வீசிய முதல் ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்களை ஜெயசூர்யா அடித்தும் சோஹைல் அடங்கவில்லை. மீண்டும் பெளலிங் போடவந்தார்.
ஆட்டத்தின் 14வது ஓவர் அது. முதல் பந்தில் நோ பாலில் பவுண்டரி அடிக்க, அடுத்த 4 பந்துகளையும் சிக்ஸராக்கினார் ஜெயசூர்யா. அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள். அதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் காணாத காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. 16-வது ஓவரிலேயே ஜெயசூர்யா சதம் அடித்துவிட்டார். 48 பந்துகளில் சதம். மிகக்குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட முதல் சதம். அதுவரை நியூஸிலாந்துக்கு எதிராக 62 பந்துகளில் அசாருதின் அடித்த சதம்தான் மிகக்குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்டது. 11 பவுண்டரி, 11 சிக்ஸர் என 65 பந்துகளில் 134 ரன்கள் அடித்து அன்று மட்டுமே பல சாதனைகளை உடைத்தார் ஜெயசூர்யா. இந்த இன்னிங்ஸோடு ஜெயசூர்யாவின் வெறி அடங்கவில்லை. மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடியது இலங்கை. பாகிஸ்தான் 215 ரன்கள் அடிக்க, இந்த டார்கெட்டை 20 ஓவர்களிலேயே முடித்துவிடுவாரோ என எண்ணவைத்தது ஜெயசூர்யாவின் ஆட்டம். மீண்டும் உலக சாதனை. இந்த முறை 17 பந்துகளில் 50 ரன்கள். ஆனால், 28 பந்துகளில் ஜெயசூர்யா 76 ரன்கள் அடித்தும் இந்தப் போட்டியில் இலங்கை தோற்றது. இந்தத் தொடருக்குப்பிறகுதான் ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்திருக்கிறார் என்கிற வதந்தி இந்தியா முழுக்கப் பரவத்தொடங்கியது.
இந்தத் தொடர் முடிந்த சில மாதங்கள் கழித்து இலங்கையில் மீண்டும் சிங்கர் கோப்பை நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இலங்கையோடு மோதின. இந்தியாவுக்கு முதல் மேட்ச்சே இலங்கையோடு. சச்சின் டெண்டுல்கர் சென்சுரி அடித்தும் 50 ஓவர்களில் 226 ரன்கள்தான் அடித்தது. இந்த ஸ்கோரை இந்தியா டிஃபெண்ட் செய்யும் என்று எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் 90'ஸ் ரசிகன் டிவி முன்னால் உட்கார்ந்திருப்பான். ஆனால், அவன் பயம் எல்லாம் ஜெயசூர்யா இன்றும் ஏதாவது உலக சாதனைப்படைத்துவிடக்கூடாது என்பதுதான். ஜெயசூர்யா புதிதாக எந்த சாதனையும் படைக்கவில்லையே தவிர வேதனைகள் தொடர்ந்தன. இந்தியாவின் ஸ்கோரை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ஜெயசூர்யாவும், கலுவித்தரானேவும் மட்டுமே முடித்துவிடுவார்களோ என்கிற அளவுக்கு ஆட்டம்போனது. டெண்டுல்கர் வந்துதான் முதல் விக்கெட்டை எடுக்கவேண்டியிருந்தது. அப்போது இலங்கையின் ஸ்கோர் 129. ஒரே விக்கெட்டை மட்டுமே இழந்து 45-வது ஓவரில் மேட்ச்சை முடித்தது இலங்கை.
ஜெயசூர்யா இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் சென்சுரியை அடித்தார். 8 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 128 பந்துகளில் 120 ரன்கள் அடித்திருந்தார் ஜெயசூர்யா.
கேப்டன் சச்சினை துன்புறுத்துவதற்காகவே நடந்த தொடர் 1997 இன்டிபென்டன்ஸ் கோப்பை. இந்திய சுதந்திரத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாட நடந்த இந்தத் தொடரில்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் துயரத்தைப் பரிசளித்தனர் ஜெயசூர்யாவும், அன்வரும். சச்சினின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது அந்த பகலிரவுப் போட்டி. கங்குலி, சச்சின் என இருவருமே முதல் இரண்டு ஓவர்களிலேயே வெளியேறிவிட டிராவிட், அஜய் ஜடேஜா, ராபின் சிங் ஆகியோரின் அரை சதத்தால் எப்போதும்போல இலங்கைக்கு 226 ரன் டார்கெட்டைக் கொடுத்தது இந்தியா. வெங்கடேஷ் பிரசாத்தின் முதல் ஓவரில் 8 ரன்கள்தான் அடித்தார் ஜெயசூர்யா. இந்தியர்கள் மகிழ்ச்சி. இரண்டாவது ஓவரில் கலுவித்தரான டக் அவுட். இந்தியர்கள் மிக்க மகிழ்ச்சி. ஆனால், இரண்டாவது ஓவரோடு மகிழ்ச்சிகள் முடிந்தன.
ஒருபக்கம் இலங்கையின் விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தாலும் இன்னொருபக்கம் ஒரு ஓவருக்கு ஒன்றிரண்டு பவுண்டரிகள் என அடித்துக்கொண்டேயிருந்தார் ஜெயசூர்யா. பந்தைப்போடுவதற்கு முன்பாக டப்பு, டப்பு, டப்பு என ஜெயசூர்யா பேட்டால் பிட்ச்சை தட்டிய சத்தமே ரசிகர்களுக்கு மாரடைப்பை வரவைத்தது. சரியான லைன் அண்ட் லென்த்தில், சரியான பவுன்சில் பந்துவீசினால் எந்தப் பிரச்னையும் இல்லை. அடிக்காமல் அடக்கிவாசிப்பார். ஆனால், ஆஃப் சைடில் பந்து விலகி வந்தாலோ, லெக் சைடில் கொஞ்சம் தள்ளிப்போட்டோலோ, யார்க்கர் போடுகிறேன் என ஃபுல் லென்த்தில் போட்டாலோ பந்து பவுண்டரி லைனுக்குப் பறந்துவிடும். அன்று அவர் அதிரடி ஆட்டம் எல்லாம் ஆடவில்லை. மிகச்சரியாக ஒவ்வொரு ஓவரில் வீசப்படும் லூஸ் பாலுக்காக காத்திருந்து, காத்திருந்து அடித்தார். 85 பந்துகளில் சென்சுரி அடித்தவர் 120 பந்துகளில் 151 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று 42-வது ஓவரிலேயே மேட்ச்சை முடித்துவிட்டார்.
மும்பையோடு சச்சினையும், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை ஜெயசூர்யா. இன்டிபென்டன்ஸ் கோப்பை முடிந்ததுமே இலங்கையில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடப்போனது இந்திய அணி. சச்சினின் கரியரில் இன்பம், துன்பம் என இரண்டுமே அங்கே நடந்தது. கொழும்புவில் முதல் டெஸ்ட். சித்து 111 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 143 ரன்கள், அசாருதினும் சதம் என மூன்று பேர் சதம் அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 537. இரண்டாவது நாளின் மாலையில், இலங்கையை வீழ்த்திவீசிவிடும் முனைப்புடன் டிக்ளேர் செய்தார் சச்சின். ஜெயசூர்யாவும் அட்டப்பட்டுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். இந்திய ஸ்பின்னர் நிக்கில் குல்கர்னிக்கு அதுதான் முதல் போட்டி. முதல் சர்வதேசப்போட்டியின் முதல் பந்திலேயே அட்டப்பட்டுவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார் குல்கர்னி. ஆனால், அதன்பிறகு நடந்தது குல்கர்னிக்கு மட்டுமல்ல, கும்ப்ளே, சவுஹான், குருவில்லா, பிரசாத் என யாருக்குமே வாழ்க்கைக்கும் மறக்காது. அட்டப்பட்டு 26 ரன்களுக்கு அவுட் ஆகிவிட ரோஷன் மஹானமா ஜெயசூர்யாவோடு சேர்ந்தார். அந்த கணத்தில் இருந்தே இந்திய அணியின் கெட்ட நேரம் தொடங்கியது.
இந்த இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த எந்த பிளானும் இந்திய கேப்டன் சச்சினிடமும் இல்லை, பெளலர்களிடமும் இல்லை. மூன்றாவது நாள், நான்காவது நாள் என இரண்டு நாள்கள் முழுக்கவும் விக்கெட்டே விழவில்லை. ஜெயசூர்யா ட்ரிப்பிள் சென்சுரி அடித்தார். ரோஷன் மஹானாமா டபுள் சென்சுரி அடித்தார். இந்தியாவுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 340 ரன்களைப் பதிவு செய்தார் ஜெயசூர்யா. இன்றுவரை இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ரன்கள் இதுதான். மஹானமா 225 ரன்கள் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 576 ரன்கள் அடித்தார். இந்திய பெளலர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஜெயசூர்யாவை நினைத்தாலே கதி கலங்க ஆரம்பித்தது.
அடுத்த டெஸ்ட்டிலும் ஜெயசூர்யா இந்திய பெளலர்களை நிம்மதியாகவிடவில்லை. இலங்கை முதல் இன்னின்ஸில் 332 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சச்சின் 139, கங்குலி 147 ரன்கள் என மொத்தமாக 375 ரன்கள் அடித்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் வேட்டையை ஆரம்பித்தார் ஜெயசூர்யா. இந்தமுறை அதிரடி ஆட்டம். வெங்கடேஷ் பிரசாத்தும், அபய் குருவில்லாவும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள். ஆனால், இவர்களை எந்த அளவுக்கு ஜெயசூர்யா சீரியஸாக எடுத்துக்கொண்டார் என்பதற்கு அவர் இவர்களின் பந்துகளை ஹெல்மெட் இல்லாமல் எதிர்கொண்டதே சாட்சி. 226 பந்துகளில் 199 ரன்கள் அடித்து அவுட் ஆனார் ஜெயசூர்யா. டபுள் சென்சுரி ஜஸ்ட் மிஸ். இந்தத் தொடர் முழுக்கவே இலங்கையின் எண்ணம் இந்தியாவை வீழ்த்தவேண்டும் என்பதல்ல. டார்ச்சர் செய்யவேண்டும் என்பதுதான். இரண்டு டெஸ்ட்களிலுமே அவர்கள் வெற்றிக்காக விளையாடவேயில்லை. துன்புறத்த மட்டுமே செய்தார்கள்.
இதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தியாவுக்கு எதிராக ஜெயசூர்யா பெரிய இன்னிங்ஸ்கள் ஆடாதது கொஞ்சம் ஆறுதல். 1999 உலகக்கோப்பையில் ஜெயசூர்யா ஃபார்மில் இல்லாததால் இலங்கையைப் போட்டு பந்தாடியது இந்தியா. ஆனால், 2000-ல் மீண்டும் இந்தியாவைப் போட்டு புரட்டியெடுத்தார் ஜெயசூர்யா. டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக 340 ரன்கள் என்றால், ஒருநாள் போட்டியில் இந்த 189 ரன் இன்னிங்ஸை எப்போதும் மறக்கமுடியாது. ஷார்ஜாவில் 2000-ம் ஆண்டு அக்டோபரில் இந்தப் போட்டி நடந்தது. இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்தத் தொடரில் விளையாடின. இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின. இலங்கை முதல் பேட்டிங். ஜெயசூர்யாவைத்தவிர இலங்கையின் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரஸல் அர்னால்ட் மட்டுமே 52 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியான டாப் ஸ்கோர் இந்தியா கொடுத்த 22 ரன் எக்ஸ்ட்ராக்கள்தான்.
ஓப்பனிங் இறங்கிய ஜெயசூர்யாவின் அடிகள் அனைத்தும் மரண அடிகளாக விழுந்ததது. முதல்முறையாக ஜெயசூர்யாவின் தாக்குதலை அப்போதுதான் ஜாகீர் கான் சந்தித்தார். வெங்கடேஷ் பிரசாத் தன்னுடைய 7 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்தார். டெண்டுல்கர் மட்டுமே அன்று எக்கனாமிக்கல் பெளலர். டெண்டுல்கரை பாவம் பார்த்துவிட்டாரா, இல்லை ஜெயசூர்யா அடிக்கமுடியாத அளவுக்கு சச்சின் சிறப்பாகப் பந்துவீசினாரா எனத் தெரியவில்லை. 10 ஓவர்களில் வெறும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சச்சின். ஆனால், ஜெயசூர்யாவை ஒன்றுமே செய்யமுடியவில்லை. 161 பந்துகளில் 189 ரன்கள் அடித்து 49-வது ஓவரில்தான் அவுட் ஆனார். அவர் அவுட் ஆகும்போது 11 பந்துகள் மிச்சம் இருந்தன. கங்குலி மட்டும் அன்று அவரது விக்கெட்டை எடுக்கவில்லையென்றால் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் டபுள் சென்சுரி ஜெயசூர்யா வசமாகியிருக்கும்.
ஜெயசூர்யாவின் பேட்டிங்கைவிட அன்று மிகப்பெரிய துன்பியல் சம்பவமும் நடந்தது. இந்தியா 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வரலாற்று சாதனைப்படைத்தது. ராபின் சிங் மட்டுமே டபுள் டிஜிட்டைத் தொட்டவர். டாப் ஸ்கோரரான ராபின் சிங் அடித்தது 11 ரன்கள். கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் சிங் என எல்லோருமே சிங்கிள் டிஜிட்டில் அவுட். அவமானகரமானத் தோல்வியைச் சந்தித்தது இந்தியா.
ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 28 சதங்கள் அடித்திருக்கிறார் ஜெயசூர்யா. அதில் 7 சதங்கள் இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவைதான். கிட்டத்தட்ட 40 வயதை நிறைவு செய்யும் நேரத்திலும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து மிக அதிக வயதில் சதம் அடித்தவர் என்கிற சாதனையும் படைத்தார். பெளலிங்கிலும் பல முக்கியமான விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் ஜெயசூர்யா. இவரது பெளலிஙகில் ஸ்பின் இருக்காது. ஆனால், வேக வேரியேஷன்கள் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்.
இந்தியாவுக்கு எதிராக மட்டுமல்லாமல் உலகின் அத்தனை கிரிக்கெட் அணிகளுக்கு எதிராகவும் அதிரடி இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார் ஜெயசூர்யா. 2006-ல் இங்கிலாந்தின் லீட்ஸில் நடந்த ஒருநாள் போட்டி இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானப் போட்டி. இங்கிலாந்து 50 ஓவர்களில் 321 ரன்கள் அடிக்க, சேஸ் செய்ய ஆரம்பித்தது இலங்கை. உபுல் தரங்காவோடு சேர்ந்து ஆடினார் ஜெயசூர்யா. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் மட்டும் 286 ரன்கள். 1998-ல் இலங்கைக்கு எதிராக சச்சினும் - கங்குலியும் இணைந்து ஓப்பனிங் விக்கெட்டுக்கு 252 ரன்கள் அடித்திருந்ததுதான் அதுவரையிலான சாதனை. ஆனால், இதை ஜெயசூர்யா- தரங்கா ஜோடி முறியடித்தது. தரங்கா 102 பந்துகளில் 109 ரன்கள் அடிக்க, ஜெயசூர்யா 99 பந்துகளில் 152 ரன்கள் அடித்தார். 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்தவர் 72 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அடுத்த 50 ரன்களை வெறும் 23 பந்துகளில் ஜெயசூர்யா அடிக்க, 321 ரன் டார்கெட்டை 38-வது ஓவரிலேயே முடித்துவிட்டது இலங்கை.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் அதகளம் செய்திருக்கிறார் ஜெயசூர்யா. முதல் ஐபிஎல் தொடரான 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்சுரி அடித்திருக்கிறார். சென்னையின் ஸ்கோரான 156 ரன்களை வெறும் 83 பந்துகளில் அடித்து முடித்தது மும்பை. அடித்தவர் ஜெயசூர்யா. 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்தவர், 45 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். ஜெயசூர்யா 114 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து மும்பையை வெற்றிபெறவைத்தார். வாழ்க்கையில் முதல்முறையாக ஜெயசூர்யாவின் இன்னிங்ஸுக்கு அன்று கைதட்டினார் சச்சின். அன்று மட்டும் ஜெயசூர்யா அடித்தது 11 சிக்ஸர்கள். ஜெயசூர்யாவின் இன்னிங்ஸை வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார் தோனி.
ஜெயசூர்யா அளவுக்கு இந்திய ரசிகர்களுக்கு மன அழுத்தம் வரவைத்த பேட்ஸ்மேன் உலகில் யாரும் இல்லை. இந்திய பெளலர்களை அவர் துச்சமென மதித்து, ஹெல்மெட்கூட போடாமல் அடித்து வெளுத்ததுதான் இன்றுவரை ஆறாத ரணமாகவே இருக்கிறது. ஆமா, உண்மையிலேயே பேட்ல ஸ்பிரிங் வெச்சிருந்திருப்பாரோ???

எத்தனை திறைமை சாலியா இருந்தாலும்  இனவாதம் இரத்தத்தில் உறி இரக்கிறது என்பதற்கு கனடாவில் தமிழர்களை நோக்கி நடுவிரலைக் காண்பித்ததெ சாட்சி. இலங்கையை விட தமிழர்களை அதிகம் வெறுக்கும் இந்தியாவுக்கு  இவர் கொடுத்த அடிதான்  தன்பத்திலும்  ஒரு இன்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி புலவர்.

ஜெயசூர்யாவைப் பற்றி நிறைய அறிய முடிந்தது.

4 hours ago, புலவர் said:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.